விமர்சனங்கள் உட்பட அனைத்து எழுத்துக்களும் அரசியல் சார்ந்ததே

– ஆக்காட்டி இதழ் 12 – யூலை –செப் 2016 தொண்ணுாறுகளில் பாரிஸில்   ‘அம்மா’, ‘எக்ஸில்’ இதழ்களில் கலகக்குரலாக ஒலித்தவர் சேனன். அவ்விதழ்களில் விளிம்புநிலை உரையாடல்கள் தனித்துவமான சிறுகதைகள் மற்றும் கவிதைகளையும் எழுதியவர். ‘அம்மா’வில்  கதைகளையும்  மொழிபெயர்த்துள்ளார்.   இவரின் சிறுகதைகள் மையம் சிதைக்கப்பட்டவையாகவும், கட்டமைக்கப்பட்ட திருவுருக்களைக் கவிழ்ப்பதாகவும் இருப்பவை. அதிக விவரணைகளற்ற நேரடியான மொழியில் கதைசொல்லும்  அக்கதைகள் சொல் முறையினாற் தனித்துவமானவை. வழமையான தொடக்கம் – நடு – முடிவு என்ற தமிழ்க் கதைகளின் சட்டகங்களிற்குள் அடங்கிவிட முடியாதவை. இந்தக் கதை சொல்லல் முறையிலிருந்து விலகித் துண்டுபிரசுரத்திற்கு அணுக்கமான மொழியில் அண்மையில் இவர் எழுதிய ‘லண்டன்கார்’ நாவல் இலங்கைச் சூழலில் அதிகம் கவனிப்பிற்குள்ளாகியது. லண்டன் கலவரமும் அதன் விளிம்புநிலை பங்காளர்களான உதிரிப்பாட்டாளிகள், புலம்பெயர்ந்த கருப்பர்கள், தற்பாலின விருப்பாளர்கள் என்பவர்கள் பற்றிப் பொதுமனநிலை கவனத்திற் கொள்ளாத கதையாடல்களை ‘லண்டன்காரர்’ நாவலிற் கவனப்படுத்தியிருக்கிறார்.  தற்போது பிரித்தானியாவில் சோசலிஸ்ட் கட்சியின் உறுப்பினராகத் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள் ,பேரணிகள், கருத்தரங்குகள் மற்றும்  உரையாடல்கள் எனத் தீவிரமாக தொழிலாளர்களது உரிமைக்காக செயற்பட்டு வருகிறார். ஆயினும், இலக்கியமே தனக்கு உவப்பான அடையாளமெனத் தொடர்ந்தும் சிறுபத்திரிகைகள், இணையத்தளங்களில் எழுதிக் கொண்டிருக்கிறார். ஆங்கிலத்தில் அரசியற் கட்டுரைகளை எழுதும் சேனன்  HISTORY OF RESISTANCE என்ற இலங்கை அரசியல் வரலாறு தொடர்பான நுாலையும் எழுதியுள்ளார்.‘கொலை மறைக்கும் அரசியல்’ , ‘இனத்துவேசத்தின் எழுச்சி’  ஆகிய கட்டுரைத்தொகுப்புகளையும் ‘லண்டன்காரர் ’  என்ற நாவலையும் தமிழில் தந்திருக்கிறார்.  இவரைப் பாரீஸ் நகரில் கடந்த மார்ச் மாத மாலைப்பொழுதொன்றில் சந்தித்தோம். அவருடனான உரையாடல்கள் எதையும்  தயக்கமின்றிக் கேள்விகேட்கவும் எது பற்றியும் பேசவும் நமக்கான இடத்தைத் தந்தது. அதன் தொடர்ச்சியாக ஆக்காட்டி குழுவினர்  மின்னஞ்சல் வழியாகவும் தொலைபேசி ஊடாகவும்  இந்நீள் உரையாடலைத் தொகுத்தோம்.   1.நாங்கள் இதிலிருந்தே ஆரம்பிக்கலாம் என்றிருக்கின்றோம். நீங்கள் ஏன் ஒரு நாவல் எழுதக்கூடாது? இந்தக் கேள்வியைத்தான் நானும் கனகாலமாகக் கேட்டுக்கொண்டு திரிகிறேன். நாவல் என்றால் என்ன? என்பது பற்றிக் குழம்பிக்கொண்டிருக்கும்...