சத்தியசீலனின் அனுபவம்

1
படுகொலைகளுக்கும் யுத்தக்குற்றங்களுக்கும் காரணமான இலங்கை அரசுக்கு மாணவர்கள் மத்தியில் இருந்து எதிர்ப்புகள் எழுந்துகொண்டிருக்கிறது. கடந்த முப்பது வருடகாலத்துக்கும் மேலாக நிகழ்ந்த ஆயுதப்போராட்டத்தை கோரமான முறையில் முடிவுக்கு கொண்டுவந்தது இவ்வரசு. இந்நிலையில் மீண்டும் ஆயுதப் போராட்டம் தொடங்கப்படக்கூடாது என்பதை காரணம்காட்டி பலர் மகிந்த அரசுக்கு வக்காளத்து வாங்குகிறார்கள் – நன்றி சொல்கிறார்கள். எமக்கெல்லாம் காந்தியம் புகட்டவும் ஒரு குழுக் கிழம்பியுள்ளது. ஆயுதப்போராட்டம் எழுவது எமது கைகளில் இல்லை – அரசு வளர்க்கும் புறக் காரணிகளைப் பொறுத்து பல்வேறு வன்முறை எதிர்வினைகள் தூண்டுவிக்கப்படுகிறது என்பதை சுருக்கமாக நாம் பல இடங்களிற் சுட்டிக்காட்டியிருக்கிறோம். மீண்டும் மாணவர்கள் வன்முறைக்குள் இறங்காமல் அரசியற் போராட்டத்துக்குள் இயங்குவதானால் தெளிவான அரசியற் போராட்டம் முன்வைக்கப்படவேண்டும் – புறநிலை மாற்றங்கள் நிகழ வேண்டும் – உரிமைகள் வழங்கப்படவேண்டும் -ஒடுக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க வேண்டும். இந்தக் கருத்து சாதாரன கருத்தாக இருந்தாலும் அதிகாரம்சார் சக்திகள் இதை மூடிமறைத்து அடிபணிய வைக்கும் வாழ்கைமுறையைத் தமது சொந்த நலன்களுக்காக எமக்கு போதிக்கின்றன. இதனால் ஈழத்தில் ஆயதப் போராட்டம் தொடங்குவதற்கு காரணமாக இருந்த வரலாற்றுக் கட்டம் பற்றிய அறிதலும் உரையாடலுக்கு எடுத்துவரவேண்டியிருக்கிறது.

ஈழத்தில் ஆயுதப்போராட்ட வரலாற்றின் தொடக்கத்துடன் அடையாளப்படுத்தப்படும் பெயர்களில் முக்கியமானவர் சிவக்குமார். சிவக்குமாருடன் இனைந்து வேலை செய்தது மட்டுமின்றி அக்கால கட்டத்து பல்வேறு இளையோர் – மாணவர் நடவடிக்கைகளை முன்னெடுத்தவர் சத்தியசீலன். அவருடனான நேர்காணலை கீழே தொகுத்துத் தருகிறோம். இந்த நேர்காணல் ஆயுதப்போராட்டத்துக்கு வித்திட்ட தமிழ்மாணவர் பேரவையின் தோற்றத்தையும் மறைவையும் மட்டும்பேசுகிறது.

2
1969களிலும் 70களிலும் தமிழ் மாணவர்கள் இடத்தில் கடும் சிங்கள எதிர்ப்பு வளர ஆரம்பித்திருந்தது. லக்சல சலுசல போன்ற பல சிங்களச் சொற்களை அறிமுகப்டுத்தத்தொடங்கியிருந்தது அரசு. கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் பல அரச காரியாலயங்களிலும் சிங்களச் சொற்களை அறிமுகப்படுத்தத் தொடங்கியிருந்தது. அதேசமயம் வெட்டுப்புள்ளி அடிப்படையிலான தரப்படுத்தலும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனடிப்படையில்; உயர்தரப் பரீட்சையில் சிங்கள மாணவர்கள் 229 புள்ளிகளுடன் பல்கலைக் கழகம் செல்லும் வாய்ப்பு வழங்கப்பட்டது. தமிழ் மாணவர்கள் 250 புள்ளிகள் எடுக்கவேண்டியிருந்தது. இவையனைத்தும் பல மாணவர்களைக் கோபத்துக்குள்ளாக்கியிருந்தது.

இத்தருனத்தில் ஈழத் தமிழ் இளைஞர் இயக்கம் என்ற அமைப்பில் இயங்கிவந்த சிவக்குமாருடன் சத்தியசீலன் சேர்ந்துகொண்டார். பின்னால் திலகர் என்று அறியப்பட்ட சேயோன், வில்வராஜா, இலங்கை மன்னன் போன்றவர்கள் இவ்வமைப்பில் இயங்கி வந்தனர். குறிப்பாக சென் பற்றிக்ஸ் பாடசாலை மாணவர்கள் முதன் முதலில் சிங்களமயமாக்கலுக்கு எதிரான தமது எதிர்ப்பைச் செய்தனர். முத்தவெளியில் இருந்து கச்சேரி வரையும் ஊர்வலமாக சென்று எதிர்ப்பைப் பதிந்தனர். தனது வீட்டுக்கு அருகாமையில் வசித்து வந்த சிவக்குமாரின் தொடர்பால் மட்டுமின்றி அன்று நடந்துகொண்டிருந்த மாற்றங்களால் அரசியல் மயப்பட்டுக்கொண்டிருந்த சத்தியசீலன் பேரவைக்காக தனது வேலைகளைத் துவங்கினார். ஏற்கனவே தமிழ் இளைஞன் என்ற பெயரில் இளைஞர் ஒண்றியம் நடத்திய பத்திரிகைக்கு அவர் பொறுப்பாயிருந்தார். அந்தப் பத்திரிகை உயர்தரப் பரீட்சைக்கு தேவையான கட்;டுரைகள் பலதை வெளியிட்டது. ஆசிரியர்களால் எழுதப்பட்ட அந்தக் கட்டுரைகள் வசதியற்ற மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பத்திரிகையின் செல்வாக்கு அதிகரித்து வந்த தருனத்தில் சத்தியசீலன் அரசியற் தலையங்கங்களையும் அப் பத்திரிகையில் எழுதினார். 1970ம் ஆண்டு மார்ச் மாதம் தேர்தல் சமயத்தில் வந்த இதழில் ‘தளபதிகளுக்கும் தனிப்பெரும் தலைவர்களுக்கும் பாடம் படிப்பிக்கவேண்டும்” என்று எழுதினார். தனிப்பெரும் தலைவர் என்றழைக்கப்பட்ட ஜி.ஜி. பொன்னம்பலத்துக்கும் தளபதி என்றழைக்கப்பட்ட அமிர்தலிங்கத்துக்கும் நேரடித் தாக்குதலாக இருந்தது அது.
இத்தருணத்தில் மானவர்களின் கோபத்தை எவ்வாறு முன்வைப்பது என்று சிந்தித்த இளைஞர் இயக்கத்தினர் பாடசாலைகளைப் பகிஸ்கரித்து ஊர்வலம் ஒன்றை நடத்த வேண்டும் என்ற முடிவை எடுத்தனர். 1970களில் இதற்கான ஆயத்தங்களைச் சிவக்குமார், முத்துக்குமாரசாமி, தவராஜா, அரியரட்னம் ஆகியோருடன் சேர்ந்து செய்ய ஆரம்பித்தார் சத்தியசீலன். எல்லா மாணவர்கள் தலைவர்களையும் அழைத்து இதற்கான ஆயத்தக் கூட்டங்கள் இரண்டு யாழ்ப்பாணம் மலயன் கபேயில் நடத்தப்பட்டது. மாணவர்கள் திரண்டு பகிரங்க ஊர்வலத்தை நடத்தி எதிர்ப்பைப் பதிவது என்று முடிவெடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்குள் எந்த அரசியற் கட்சிகளும் பங்கெடுக்கக்கூடாது என்ற முடிவையும் மாணவர்கள் எடுத்தன்ர். தழிரசுக் கட்சி தெற்கில் மிக மோசமான வலதுசாரிய ஜக்கிய தேசியக் கட்சியுடன் போட்டிருந்த கூட்டும் மாணவர்கள் மத்தியில் தமிழரசுக் கட்சி பற்றி மிகப்பெரும் எரிச்சலை ஏற்படுத்தியிருந்தது. ஏற்கனவே நடந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் தோழ்வியில் முடிந்தன என்பதையும் பேசி பேசிச் சனத்தைப் பேய்க்காட்டுகிறார்கள் என்ற வெறுப்பும் மாணவர் மத்தியில் வளர்ந்திருந்தது. தமிழரசுக் கட்சியால் ஒன்றும் செய்யமுடியாது என்ற புரிதல் இருந்தது. அவர்கள் ஆசிரியப் பணி செய்பவர்கள் மாற்றங்களைப் பெற்றுக்கொள்ளுவதற்கான கட்சியாக – சில சில அரசுச் சலுகைகளை மட்டும் பெற்றுக்கொள்ளும் கட்சியாக – மாறிப்போய்விட்டதை இளைஞர்கள் அறிந்திருந்தனர். இதனால் புதிய ஒரு மாற்றைக் கட்ட வேண்டும் என்ற எண்ணம் மாணவர்களுக்குத் தோண்றியிருந்ததது. இளைஞர் பேரவையைச் சேர்ந்தவர்களும் சத்தியசீலனும் வன்முறை –நேரடி அரசியல் நோக்கி கவரப்பட்டனர். வல்வெட்டித்துறை, மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம் என்று பல பாடசலைகள் – இளையோர் அரங்குகளுக்குச் சென்று பரப்புரை செய்து வந்த சத்தியசீலனுக்கு அங்கெல்லாம் மாணவர்கள் தம்மைப்போன்ற தேடலுடன் இருப்பது தெரியவந்தது.

தெற்கு அரசுக்கு ஒரு படிப்பினை குடுக்கவேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்த சிவக்குமார் யாழ்பானத்துக்கு வந்திருந்த உதவி அமைச்சர் சோமவீர சந்திரசிறீ மேல் ஒரு தாக்குதலைச் செய்தார். யாழ் பாடசாலையொன்றில் விஞ்ஞானபீடத்தை திறந்து வைக்க வந்த அவரின் கார் சிவக்குமாரால் குண்டுவைத்து தகர்க்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட சிவக்குமார் மூண்று மாதம் சிறைவைக்கப்பட்டார். அவர் சிறையில் இருந்து வெளியில் வந்த கையுடன் பகிரங்க ஊர்வலப் பிரச்சார நடவடிக்கைகளில் இணைந்துகொண்டார்.
தமது நடவடிக்கையின் தொடக்கமாக அவர்கள் ஊர்வலத்தை தமிழ் மாணவர் பேரவை என்ற பெயரில் 1970ம் ஆண்டு நவம்பர் 23ம் திகதி ஒரு பேரனியை நடத்தினர். கொக்குவில் இந்துக் கல்லூரியில் இருந்து ஆரம்பித்த இந்தப் பேரனி யாழ் முத்தைவெளி வரை நிகழ்ந்தது. இப்பேரனியில் பத்தாயிரத்துக்கும் மேலான மாணவர்கள் பங்குபற்றினர். பாகுபாடு காட்டாதே என்பது அவர்களின் முக்கிய கோரிக்கையாக இருந்தது. நாம் சிறுபான்மையினர் என்பதால்தான் இந்த பாகுபாடா? வகுப்புவாதத்தைத் தூண்டுவதுதான் அரசின் நோக்கமா? சிங்களமாணவருக்கு 229 புள்ளி தமிழ் மாணவர்களுக்கு 250 என்ன நியாயம் போன்ற கோசங்களை மானவர்கள் முன்வைத்தனர். கல்வி அமைச்சசர் ராஜினாமா செய்யவேண்டும் என்பதும் அவர்கள் கோரிக்கையாக இருந்தது.

ஊர்வலம் வந்துகொண்டிருந்த பொழுது அதைத் திசை திருப்பும் நடவடிக்கைளைய இடதுசாரிக் கட்சி என்று சொல்லப்படும் கம்யூனிஸ்ட் கட்சியின் பீக்கிங் பிரிவு செய்தது. அவர்களுடய காரியாலயம் வின்சர் தியட்டருக்கும் ராசா தியட்டருக்கும் இடையில் இருந்தது. மே தினங்களில் மட்டும் பதாகைகளுடன் காட்சி தந்து பின்பு கானாமற்போகும் அவர்கள் அன்று தமது காரியாலத்தில் இருந்து பாதாகைகளோடு வந்து ஊர்வலத்தில் நுளைந்தனர். நாங்கள் இந்த ஊர்வலத்தை ஆக்கிரோசமாகச் செய்யவேனும் என்றனர். பொலிசுக்கு அடிக்கோனும் என்றனர். அப்பதான் நோக்கம் நிறைவேறும் என்றனர். அவ்வாறு நிகழ்ந்தால் பல்வேறு மானவர்கள் கைது செய்யப்பட்டு நிலமை மோசமாகிவிடும் என்பதால் இதைத் தலைமைதாங்கி நடத்தியவர்களுள் ஒருவரான சத்தியசீலன் அவர்களது நடவடிக்கையைக் கடுமையாக எதிர்த்தார். அவர்கள் மிரட்டப்படபின் ஊர்வலத்தில் இருந்து விலத்திக்கொண்டணர். பீக்கிங் கம்யூனிஸ்ட் கட்சிக்கு முற்போக்கு வாதிகள் என்ற பெயர் இருந்தாலும் அவர்களின் அதிரடித் தனத்துக்கு ஆதரவிருக்கவில்லை. அவர்கள் மாணவர்கள் செய்யவேண்டும என எதிர்பார்த்தது நிகழவில்லை.

இதேபோல் ஊர்வலத்தின் இறுதியில் நிகழ்ந்த மேடைப்பேச்சிலும் சத்தியசீலன் அழுத்தங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. மாணவர் தலைவர்களை மட்டும் பேச வரிசைப்படுத்தி விட்டுக்கொண்டிருந்த அவரை மேடைக்குப் பின்னால் நின்ற தமிழரசுக் கட்சியினரும் சுயாட்சிக் கழகத்தினரும் தமது ஆதரவுச் சக்திகளை கொண்டு அழுத்தம் கொடுத்தனர். அமிர்தலிங்கமும், வி. நவரத்தினமும் பேச வேண்டும் என்று மேடைக்கு பின் நின்றபடி வழங்கிய அழுத்தத்தை மறுத்து மாணவர்கள் மட்டும் பேச அனுமதிக்கப்பட்டனர். எந்த அரசியற் கட்சிகளையும் பேச விடுவதில்லை என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர்.

ஊர்வலத்தை நடத்தியதே அரசியல் நோக்கம்தான் என்று சொல்லும் சத்தியசீலன் அவர்கள்மேல் நம்பிக்கை இல்லாதபடியாற்தான் அவர்களைப் புறக்கணித்ததாகச் சொல்கிறார். அவர்களில் இருந்து மாறுபட்ட புதிய வழியைத் தோற்றுவிக்கும் நோக்கு தமக்கிருந்ததாகச் சொல்கிறார். தமிழ் அரசியற் கட்சிகளில் இருந்த வெறுப்புக் காரனமாக இக்கட்சிகளில் இருந்த பல மாணவர்கள் பேரவையில் வந்து இனைந்துகொண்டனர். அதனால் பேரவையைத் தமக்குச் சாதகமாகப் பாவிக்க தவித்தனர் தமிழ் அரசியல் வாதிகள்.

இதைத்தொடர்ந்து வன்முறை சார் வழிமுறைகளை முன்னெடுக்கும் நோக்கு வளர ஆரம்பித்திருந்தது. பின்பு தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெரும் ஆயுதபலமுள்ள இயக்கத்தைக் கட்டி எழுப்பிய அதன் தலைவரான பிரபாகரனும் தமிழ் மாணவர் பேரவையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. மொலட்டோவ் கொக்டைல் என்று பின்பு அறியப்பட்ட பெற்றோல் குண்டுகள் செய்வதில் இருந்து துப்பாக்கியைப் பெறுதல் – ஆயுதம் வாங்குதல் என்று நடவடிக்கைகள் விரிவடையத் தொடங்கியது. 1971ம் ஆண்டு சத்தியசீலனும் சிவக்குமாரும் சேர்ந்து அல்பிரட் துரையப்பாவின் காருக்கு குண்டுவைத்தார்கள். சிவக்குமார் அன்றிரவே கைது செய்யப்பட்டுவிட்டார். தலைமறைவாகிப்போன சத்தியசீலனைப் பொலிசார் தேடிவந்தார்கள். 73ல்தான் சத்தியசீலன் கைது செய்யப்பட்டார்.

இத்தருனங்களில் மானவர் பேரவை எந்த அரசியற் கட்சிகளிலும் சேரவில்லை. எல்லா அரசியற் கட்சிகளுக்கும் எதிர்ப்பிருந்தது. 1972ம் ஆண்டு குடியரசு யாப்பை அமுல்படுத்திய சுதந்திரக் கட்சி அலுவலகங்களுக்கு குண்டு எறிதல் துப்பாக்கிப் பிரயோகம் செய்தல் என்று நடவடிக்கைகள் வளரத் தொடங்கியிருந்தது. இக்காலகட்டத்தில் அரசியலில் இளையோர் பங்கு தீவிரமடைந்ததது. அமிர்தலிங்கம் முதலான தமிழ் தலைவர்களுடன் இளையோர் தர்க்கம் புரிதல் என்று முரன்கள் வளர்ச்சியடைந்தது. இளையோர் சொல்லும் செயற்பாட்டை ஒத்துக்கொள்ளும் நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டார்கள். இதனாற்தான் அவர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை கையில் எடுத்தார்கள். இத்தருனத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர்களை விடுதலை செய்யக் கோரிய கோரிக்கையும் போராட்ட நடவடிக்கைகளும் வலுப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்துதான் தமிழரசுக் கட்சித் தலைவர் செல்வநாயகம் அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு வடக்குக்கு வந்தார். இளையோர் அவருக்கு அமோக வரவேற்பைக் கொடுத்தனர்.

தமிழரசுக் கட்சியின் இந்த நடவடிக்கை இளையோரை அவர்களுடன் நெருக்கமாக்கியது. இதைத் தொடர்ந்து நடந்த தேர்தல் மற்றும் வட்டுக்கோட்டைத் தீர்மானம் முதலியவற்றில் இளைஞர்கள் முக்கிய பங்கு வகித்தனர். சோசலிச தமிழ் ஈழத்தை உருவாக்க வேண்டும் என்ற அவர்களது கோரிக்கையை தமிழரசுக் கட்சி இவ்வாறுதான் ஏற்றுக்கொள்ள வைக்கப்பட்டது. சத்தியசீலன் உட்பட பல இளைஞர்களுக்கு கம்யூனிச கட்சியின் பீக்கிங் பிரிவில் ஈடுபாடு இல்லாத போதும் அவர்களிடம் திட்டவட்டான இடது சாரியச் சரிவிருந்தது. பல்கலைக் கழகத்தில் தனக்கிருந்த வாசிப்பினால் இது ஏற்பட்டதென்கிறார் சத்தியசீலன். ஆனால் அக்காலத்து இடது சாரிய கட்சிகள் இந்த இளைஞர்களை உள்வாங்கும் சரியான முறை அரசியலைச் செய்யவில்லை – முன்னோக்கை வைக்கவில்லை. இடது சாரி கட்சிகள் மாணவர்கள் மத்தியில் வேலை செய்யவில்லை. மாணவர்களுக்கென்று அவர்கள் தனி அமைப்பை முன்வைக்கவில்லை. மாணவர்களின் அரசியல் தரத்தை உயர்த்தும் உரையாடலைச் செய்யவில்லை. அதே சமயம் மாணவர்கள் மத்தியிலும் சரியான தெளிவிருக்கவில்லை என்கிறார் சத்தியசீலன். அவர்களிடம் சிங்கள எதிர்ப்பிருந்த அளவுக்கு சரியான அரசியல் ஞானம் இருக்கவில்லை என்கிறார். இருப்பினும் தமிழரசுக் கட்சி – பின்பு தமிழர் விடுதலைக் கூட்டனி – மாணவர்களின் கோரிக்ரைககளை ஏமாற்றியது -மேலும் அரசியற் கட்சிகளிலும் அரசியலிலும் அவர்களுக்கிருந்த நம்பிக்கையை உடைத்தெறிந்தது. வட்டுக்கோட்டைத் தீர்மானம் நடந்த ஒரு வருடத்திற்குள்ளேயே தேர்தலின்போது வாக்குறுதிகளைக் கைவிடத்தொடங்கி விட்டது தமிழர் விடுதலைக் கூட்டணி.
சத்தியசீலன் 1973 ஆண்டு கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து மாணவர் பேரவை கலைக்கப்பட்டது. அதன் பிறகு பேரவையில் இருந்த மானவர்கள் இளைஞர் பேரவை என்று பெயர் மாற்றி இயங்கினர். ஆனால் அதுவும் விரைவில் உடைந்து ஒரு பகுதியினர் தழிரசுக் கட்சியில் இனைந்து கொண்டனர். இன்னொரு பகுதியினர் ஆயுதப் போராட்டத்தில் குதித்தனர்.

3.
நீதியற்ற அரச நடவடிக்கைகள் – தெளிவான அரசியல் மாற்றில்லாத வெற்றிடம் – இது பற்றிய இளையோர் கோபம் – இளையோர் மத்தியில் இருக்கும் அரசியற் தெளிவின்மை என்று பல்வெறு காரணிகள் இளைஞர்களை ஆயுதப் போராட்டம் நோக்கித் தள்ளுகிறது இவை மேற்கண்ட செவ்வியில் இடையோடுவதை நாம் அவதானிக்கலாம். இதைத் தவிர்ப்பதானால் புதிய அரசியல் மாற்று ஒன்று உருவாக்கப்படவேண்டும். அரசியல் உரையாடல் வலுப்படவேண்டும். கோரிக்கைகள், திட்டமிடல்கள் பற்றிய திறந்த சனநாயக முறை உரையாடல் வலுப்படவேண்டும்.

நன்றி தீராநதி -மே 2013

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *