தேர்தல் களம் : கேள்வி பதில்

Interview by thesamnet

திருகோணமலையில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தேர்தலைப் பகிஸ்கரிக்குமாறு கோருகின்றனர். சில கீபோட் புரட்சியாளர்களும் தேர்தலைப் பகிஸ்கரிக்கக் கோருகின்றனர். மக்களுக்கு நியாயமான தெரிவும் இருப்பதாகத் தெரியவில்லை. பாராளுமன்ற அரசியலால் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு இல்லை என்ற பலமான வாதமும் உள்ளது. ஏன் 2015 பாராளுமன்றத் தேர்தலை பகிஸ்கரிக்கக் கூடாது?

பகிஸ்கரிப்பு என்ற கருத்து எமக்களிக்கப்படும் தேர்வுகளின் பற்றாக்குறையில் இருந்து எழுகிறது. தமது நலன்களைச் சரியாக பிரதிநிதித்துவம் செய்ய யாரும் இல்லை என வடக்கு கிழக்கில் வாழும் பலர் ஆதங்கப்படுவதும் இக்கோரிக்கையை நோக்கி அவர்களை நகர்த்தியுள்ளது. இலங்கைப் பாராளுமன்றத்தில் உறுப்பினராகுவதற்கு போட்டியிடும் பலர் தாம் பாராளுமன்றத்துக்கு போவதால் என்ன சாதிக்க விரும்புகின்றனர் என்பதை தெளிவாக முன்வைப்பதில்லை.

திருமண வீட்டுக்கு அடிக்கும் பத்திரிகையில் போடுவது போல் தமது குடும்ப பாரம்பரியம், படிப்பு, பட்டம் என்பது பற்றி வெறும் தற்புகழ்சிகளைத் தாங்கியவையாக இருக்கின்றன சில தேர்தல் துண்டுப்பிரசுரங்கள்.
வெளிநாட்டுச் சக்திகளைக் கொண்டு வந்து விடுவோம். அல்லது, இந்தியா வந்து காப்பாத்தும் போன்ற வித்தை காட்டுதல்கள் தாண்டிய அரசியல் உரையாடல் இல்லை. இலங்கைப் பாராளுமன்றத்துக்குள் நுழைந்து என்ன செய்யப் போகிறார்கள் என்று அவர்கள் சொல்வதுமில்லை. அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாகி எதையாவது சாதித்து விடுவார்கள் என்ற நம்பிக்கையும் மக்களிடம் இல்லை. இந்நிலையில் பாராளுமன்ற அரசியல் மற்றும் தேர்தல் நடவடிக்கைகள் மேல் மக்களுக்கு நம்பிக்கை குன்றுவது இயற்கையே. இதன்பாற்பட்ட வெறுப்பாகவே தேர்தலில் பங்கு பற்றுதல் குறைவதும் பகிஸ்கரிப்பு கோரிக்கை பலப்படுவதும் அதிகரிக்கிறது.

மக்களின் இந்த மனநிலையைப் புரிந்துகொள்ளும் அதேசமயம் இந்த மனநிலை அரசியல் செயலூக்கமற்ற நிலையில் இருந்தும் உருவாகிறது என்பதையும் அவதானிக்க வேண்டும். அதாவது மக்கள் அரசியலில் தாம் நேரடிப் பங்களிப்பு செய்ய தயங்குவதன் வெளிப்பாடாகவும் இது இருக்கிறது. மக்கள் அரசியலில் நேரடியாகப் பங்களிக்க வேண்டும் என நாம் வாதிட்டு வருகிறோம். பகிஸ்கரிப்பு தீர்வல்ல. அரசியற் போலிகள் அதிகாரத்தை சுவைக்க விட்டுவிட்டு சிந்திக்கும் மக்கள் ஒதுக்கப்பட்டுவிடும் ஆபத்தும் இதன் பின்னால் இருக்கிறது. ஒதுங்குதலுக்குப் பதிலாக மக்கள் தமது குரலை அரசியலில் காத்திரமாக பதிய முன்வரவேண்டும். இருக்கும் அரசியலும், அரசியல் வாதிகளும் சரியில்லையானால் இன்னுமொரு மாற்று அரசியல் நடவடிக்கையை முன்னெடுக்க மக்கள் முன் வரவேண்டும்.

மக்களின் ஜனநாயக நடவடிக்கைகளையும் அவர்தம் உரிமைகளுக்கான போராட்ட நடவடிக்கைகளையும் பிரதிநிதித்துவம் செய்யும் ஒருவர் பாராளுமன்றம் செல்ல வேண்டும். பாராளுமன்றத்துக்குள் எதிர்ப்பை கட்ட முயற்சிக்காதவர் எவ்வாறு அதற்கு வெளியிலான எதிர்ப்பாளர்களிடம் வாக்கு கேட்க முடியும். அதிருப்தியாளர்கள் ஒதுங்கிப் போகக்கூடாது. மாறாக தங்களின் குரலை அழுத்தம் திருத்தமாக பதியும் அரசியலை நோக்கி நகரவேண்டும். இந்த அடிப்படையிலேயே பகிஸ்கரிப்பு சரியான நடவடிக்கையல்ல என்கிறோம்.

அடிப்படையில் மக்களை நேசிக்கின்ற தலைவர்கள், கட்சிகளைக் காட்டிலும் அம்மக்களை ஏமாற்றுகின்றவர்கள் மீண்டும் மீண்டும் அம்மக்களாலேயே தங்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்படுவதற்கு என்ன காரணம்?

இது நியாயமான கேள்வி. இந்த நிலவரத்தை நாம் உலகெங்கும் பார்க்க கூடியதாக இருக்கிறது. இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. மக்கள் மத்தியில் சுதந்திரமான காத்திரமான அரசியல் உரையாடல் அனுமதிக்கப்படாமையும் இதற்கு ஒரு காரணம்.

ஏதோ ஒரு விதத்தில் தமக்கு உதவக்கூடும் என்ற அரைகுறை நம்பிக்கையில்தான் மக்கள் வாக்குகளை வழங்குகின்றனர். சில அரசியல்வாதிகளின் முழுமையான ஏமாற்றுக் குணங்கள் மற்றும் பிற்போக்குத்தனமான போக்கிரி அரசியல் பற்றி மக்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படுவதில்லை. ஊடகங்களை நடத்துபவர்கள் தமது சொந்த நலன்கள் சார்ந்து அந்தந்த ஊடகங்களை நடத்துகின்றனர். அதன்படி முழுத் தகவல்களும் மக்கள் மத்தியில் சென்றடைவதற்கு தடையாக அவர்களும் இருக்கிறார்கள். மக்கள் நலன்சார்ந்து இயங்குகின்ற கட்சிகள், அரசியல்வாதிகள், பெரும் ஊடகங்களுக்கும் வியாபாரங்களுக்கும் எதிராக நின்றுதான் மக்கள் நலன்களை முன்னெடுக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில் மக்கள் நலன்களும் கார்பரேட் மற்றும் அதிகாரத்தின் நலன்களும் நேரெதிரானவை.

ஆக, மக்கள் சார்ந்து நிற்பவர்கள் மக்களிடம் சென்றடைவதில் ஏராளமான பிரச்சினைகள் இருக்கின்றன. அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் அனைத்து வித சக்திகளையும் எதிர்த்தும் பல பொய்ப் பிரச்சாரங்களை எதிர்த்தும் இது நிகழ வேண்டியிருக்கிறது. இதனாற்தான் அத்தகைய சிறந்த அரசியல்வாதிகள் இறந்த பிறகு வரலாற்றில் முக்கியத்துவமாகிறார்களே தவிர அவர்களின் சமகாலத்தில் அவர்களுக்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை. உதாரணத்துக்கு சிறிதுங்க ஜெயசூரிய போன்ற வேட்பாளரை எடுத்துக்கொள்ளுங்கள். சோசலிச கட்சி சார்பாக யாழ்ப்பாணத்தில் போட்டியிடும் இந்த சிங்கள இனத்தைச் சார்ந்த ஒரு போட்டியாளர் மட்டும்தான் தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமை பற்றியும் பல்வேறு சனநாயக உரிமைகள் பற்றியும் தெட்டத் தெளிவாக அச்சமின்றி முன்வைத்து வருகிறார். ஆனால் இவரை யாரும் கண்டு கொள்வதில்லை.

அவர் வெல்லப் போவதில்லை அதனால் அவரைப் பற்றி பேசி என்ன பயன் என்ற பேச்சு ஒரு பக்கம் – அவர் வென்று விட்டால் தாம் மக்களை விற்கும் வியாபாரங்கள் முடிவுக்கு வந்துவிடும் என்ற பயம் ஒரு பக்கம் – என அவரைப் புறக்கணிக்க ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன இவர்களுக்கு. யார் வைக்கும் கொள்கை சரி, யார் வைக்கும் கோரிக்கைகள் மக்கள் நலன் சார்ந்தவை, யார் வைக்கும் கொள்கைகள் சமூகத்தை முன்னேற்றும் என்ற அறிவார்ந்த உரையாடல் மக்கள் மத்தியில் மூலைக்கு மூலை நடக்கும் வரை இந்த நிலை தொடரத்தான் போகிறது.

பல பத்து வேட்பாளர்களிடையே தங்களை சரியாகப் பிரதிநிதித்துவம் செய்யக் கூடிய ஒருவரை மக்கள் எப்படி அடையாளம் காண முடியும். உணர்வின் அடிப்படையிலா? அறிவின் அடிப்படையிலா இந்த முடிவை எடுப்பது?

உணர்வும் அறிவும் முற்றுமுழுதாக தனிப்பட்ட விசயங்கள் அல்ல. உணர்வு முற்றுமுழுதாக அறிவு மழுங்கிய செயற்பாடு என்று பார்ப்பது தவறு. ஆனால், உங்கள் கேள்வி எந்த அரசியல் உள்ளடக்கமும் இன்றி இயங்குபவர்கள் பற்றி இருக்கிறது என நினைக்கிறேன். ஆழ்ந்த உள்ளடக்கமின்றி வெற்று உணர்ச்சிப் பேச்சுக்களை மட்டும் பேசி மக்களை உசுப்பேத்திவிட்டு வாக்குக் கேட்கும் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். இதே அரசியல்வாதிகள்தான் தேர்தலில் வென்ற கையுடன் மக்களின் உணர்வை மதிக்காது தமது சொந்த லாபம் சார்ந்து இயங்க ஆரம்பித்து விடுகிறார்கள். நுணுக்கமாக பார்த்தால் இவர்கள்தான் உணர்வு மங்கிய மந்தமானவர்களாக இருக்கிறார்கள். மக்களின் உணர்வை மதிப்பவர்கள் எமாற்ற முதல் கொஞ்சமாவது யோசிக்கக்கூடும்.

மக்கள் தாம் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பதை அவரின் அழகு- ஆளுமை- குடும்பம் -பாரம்பரியம் – படிப்பை வைத்து தீர்மானிக்கக் கூடாது. மாறாக அவர்கள் முன்வைக்கும் கொள்கைகள் – கோரிக்கைகள் என்ன என்பதை அவர்கள் அலசி ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். சமூகம் சார் கொள்கைகளை முன்வைக்கிறார்களா- அதை நிறைவேற்றும் ஆழமும் திடமும் அவர்களிடம் இருக்கிறதா – அவ்வாறு மக்கள் சார் கொள்கைகளுக்காக போராடிய வரலாறு அவர்களுக்கு உண்டா – அவர்கள் வென்ற தருணத்தில் எத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுத்தார்கள் போன்ற கேள்விகளை கேட்டு அதன் அடிப்படையில் மக்கள் தமது முடிவுகளை எடுக்க வேண்டும். பதிலாக லொட்டறி எடுப்பதுபோல் போனால் போகுது ஒருக்கா போட்டுப் பார்ப்பம் என்ற பாணியில் வாக்கு போடக்கூடாது. லொட்டறி விழாவிட்டால் கொஞ்சப் பணம்தான் போகும். தவறான அரசியல்வாதிக்கு ஆதரவளித்தால் வாழ்க்கையையே பறிபோய்விடும். ஈழத்து யுத்த வரலாற்றில் தமிழ் பேசும் மக்கள் இந்தப் பாடத்தை திறம்படக் கற்றிருக்கிறார்கள். அந்தப் பாடங்களை உபயோகித்து அவர்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

(சேனன்: தொழிலாளர் சர்வதேசத்துக்கான கமிட்டியின் தெற்காசிய ஆய்வாளர். பிரித்தானிய சோசலிச கட்சியின் நீண்டகால உறுப்பினர், தமிழ் சொலிடாரிற்றி அமைப்பின் முக்கிய உறுப்பினர். இரு கட்டுரைப் புத்தகங்களை தமிழிலும் ஒரு வரலாற்றுப் புத்தகத்தை ஆங்கிலத்திலும் எழுதியிருக்கிறார்.)

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *