வியாபாரிகளின் காலம்-2

 

யுத்தத்திற்கு முன் யுத்தத்திற்குப் பின்

2009 மே மாதத்தில் கொடூரமாக நடத்தி முடிக்கப்பட்ட யுத்தத்தைச் சும்மா ‘யுத்தம்’ என்று சொல்லி விட்டுவிட முடியாது. கொலைவெறி அரசால் நடத்தி முடிக்கப்பட்ட மாபெரும் படுகொலைச் சம்பவமது. யுத்தத்தின் இறுதிக் காலப் பகுதியில் முள்ளி வாய்க்கால் பிரதேசத்தில் இராணுவம் 30 000க்கும் மேற்பட்ட மக்களை வேட்டையாடிக் கொன்று தள்ளியதென்பது இன்று பலரும் அறிந்த உண்மை.

சற்று நினைத்துப்பாருங்கள், கொஞ்சம் சிந்தித்து பாருங்கள், குஞ்சு குருமான்கள் உட்பட ஒரு குறுகிய இடத்திற்குள் சுத்தி வளைச்சுக் சுட்டுத்தள்ளிச்-செல்லடிச்சுச் சுடுகாடாக்கப்பட்ட சம்பவத்தை நினைவிற் சுமந்து கொண்டு எப்படி இந்தப் படுகொலைகளுக்கு வக்காலத்து வாங்க முடியும்? மிஞ்சிய மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட சனங்களையும் இராணுவப் பாதுகாப்பின் கீழ் முட்கம்பி வேலிக்குள் அடைத்து வைத்துப் பட்டினி போட்ட இந்த அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் எப்படி இருக்கமுடியும்?

மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட சனங்களென்றால், இலங்கையில் வாழும் தமிழ்ச் சனத்தொகையின் பெரும்பான்மை மக்கள் என்பதை அவதானிக்க. முகாம்களிலிருந்து இருந்து தப்பி வந்தவர்களுடன் உரையாடிய அனுபவத்தின்படி இந்த முகாம்கள் ஒருவகைச் ‘சித்திரவதை’ முகாம்கள் என்பதை அறியக் கூடியதாக உள்ளது. 15 000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பற்றிச் சரணடைந்த போராளிகள் பற்றி இன்று வரை ஒரு மூச்சுப்பேச்சில்லை. இதை எதிர்க்காமல் எப்படி நீங்கள் ‘முற்போக்கு’ முகமூடி போடமுடியும்?

இருப்பினும் பலர் – இலக்கியம், முற்போக்கு, மாற்று என்றெல்லாம் பந்தாவிட்டவர்கள் – இந்த அகோர யுத்தத்தின்போது ‘கம்’மென்றிருந்தனர். இந்தமாதிரியான வக்கிரபுத்தி மனிதர்களுடன் பழக நேர்ந்ததையிட்டு நமக்கு மனசு சலித்துப் போனது.

யுத்தத்துக்கு முன்- யுத்தத்துக்கு பின் என்று பிரித்து வைத்து பேச வேண்டிய தேவை இன்றுள்ளது. யுத்தத்துக்கு முன் இலங்கையில் குறிப்பாக இரண்டு அதிகார மையங்கள் பற்றி நாம் பேசவேண்டியிருந்தது. ஒன்று சிங்களப் பேரினவாத அரசு. மற்றையது மக்களின் விடுதலைக்காகப் போராடுகிறோம் என்ற பெயரில் அதிகாரத்தைக் கட்டமைத்த விடுதலைப் புலிகள் இயக்கம்.

புலிகளால் பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சார நடவடிக்கைகள் பெரும்பான்மை மக்கள் மத்தியில் எடுபடாவிட்டாலும் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய தேவை இருந்தது. அடக்குமுறையை, வன்முறையை பகிரங்கப்படுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை வென்றெடுக்கவும் , இனிமேலும் அத்தகைய வன்முறை கட்டவிழ்வதுக்கு எதிராகச் செயற்படவும் பெரும்பான்மைத் தேசியவாதப் பிரச்சாரங்களுக்கு எதிராக நாம் போராடவேண்டியிருந்தது. ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் இதுவும் ஒரு முக்கிய போராட்டமாக இன்றும் இருக்கிறது.

இந்த எதிர்ப்பைப் ‘புலி எதிர்ப்பாக’ மட்டும் குறிக்கி பார்த்தவர்கள் பலர் பலகாலமாக இலங்கை அரசுடன் இணைந்து வேலை செய்து வருவது பலரும் அறிந்ததே. ஆனால் , ஒருசிலர் முற்போக்கு முகத்தோடு தாம் அனைத்து அதிகாரங்களையும் எதிர்ப்பதன் பகுதியாக புலிகளின் அராஜகங்களையும் எதிர்க்கிறோம் என்று சொல்லி வலம் வந்தனர். யுத்ததின் பின் இவர்களதும் பல சந்தர்ப்பவாதிகளினதும் முற்போக்கு முகத்திரை கிழியத் தொடங்கியுள்ளது.

‘புலிகள் மக்களை விட்டிருந்தால் இந்த அழிவு நிகழ்ந்திருக்காது. அவர்கள் மக்களை தடுத்து வைத்ததால் தானே இத்தனை சாவுகள் ஏற்பட்டன” என்று அரசின் இயலாமையை எண்ணிப் பச்சதாபப்படுகிறார்கள். பாலஸ்தீனத் ‘தீவிரவாதிகள்’ பயணிகள் விமானமொன்றைக் கடத்திப் பேரம்பேச முற்படும்போது அமெரிக்க அல்லது இஸ்ரேலிய அரசு பயணிகளோடு சேர்த்து விமானத்தை வெடி வைத்துத் தகர்த்தால் நாம் இந்த அடக்குமுறை அரசுகளில் பச்சதாபப் படுவோமா?

தவிர புலிகள்தான் மக்களின் சாவுக்குக் காரணம் என்று வாதிக்கும் இவர்களின் மொக்குத் தனத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. புலிகளின் இராணுவ உத்திகள் அனைவருக்கும் தெரிந்தவொன்று. இந்திய இராணுவத்துக்கு எதிரான யுத்தம் முதற்கொண்டு பல்வேறு யுத்தங்களில் புலிகள் மக்களையும் பொது இடங்களையும் கேடயமாகப் பயன்படுத்தியது நாமறிந்ததே. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அவர்களுக்காகப் பேச முன்வந்தவர்கள் பலரை துரோகிகள் என்று விலத்தியது, கொன்றது பற்றித் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகிறோம். இந்தப் பொது அறிவு இல்லாமலா இலங்கை அரசு யுத்தத்தில் இறங்கியது? புலிகள் தம்மைப் பாதுகாக்க எவ்விதத்திலும் முயற்சிப்பார்கள் என்பது இராணுவத்துக்குத் தெரியாததா? உங்கள் வங்கிறோத்து வாதங்களைப் பாதுகாக்க இராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்தும் அளவுக்கு வந்து விட்டீர்கள்.

இது தவிர புலிகள் மக்களை சுற்றி வளைத்துக் கொன்று கொண்டிருந்ததாக யாரும் தெரிவிக்கவில்லை. புலிகள் மக்கள் வெளியேறிச் செல்வதைத் தடுத்திருந்ததும் அதையும் மீறித் தப்பிக்க முயன்ற பலர் புலிகளால் சுடப்பட்டதும் இன்று நிரூபணமாகியிருக்கிறது. இந்தக் கொலைகள் உட்பட எந்த கொலைகளையும் மறைத்தோ புதைத்தோ கதைக்கும் பழக்கம் நமக்கில்லை. அதனால், திரும்பத் திரும்பச் சொல்ல வருவது என்னவென்றால் அதிகாரத்தின் மையங்கள் எப்படித்தான் மாறினாலும் நாம் தொடர்ந்து அந்த மையங்களுக்கு எதிராக எமது எதிர்ப்புகளையும் நகர்த்திக்கொண்டே இருப்போம் என்பதையே.

புலிகளின் இராணுவ உத்தி இராணுவத்துக்குத் தெரியாததல்ல. அதே போல் புலிகள் இயக்கத்துக்குள் பாதி வாழ்க்கை வாழ்ந்து பெரும் தாக்குதல்களை இராணுவத்துக்கு எதிராக முன்னெடுத்த கருணாவுக்கோ அவர் போல் இலங்கை அரசுக்கு ஆலோசனை வழங்குபவர்களுக்கோ இதெல்லாம் தெரியாததல்ல. இது இப்படியிருக்க இலங்கை அரசு எடுத்த முடிவென்ன? புலிகளையும் மக்களையும் ஒட்டுமொத்தமாகப் போட்டுத்தள்ளும் முடிவான நோக்குடன்தான் இந்த இனவெறி அரசு யுத்த முன்னெடுப்புச் செய்தது என்பது தெளிவானது.

இவ்வாறு அரசு செயற்பட்டிருக்காவிட்டால் ‘பாசிசப் புலிகளுக்கு’ எதிரான யுத்தத்தை எப்படி முடிவுக்கு கொண்டுவந்திருக்க முடியும? என்ற கொலை வெறி கலந்த கேள்வியும் எழுப்பப்படுகிறது. மேற்கண்ட கேள்வியுடன் யாராவது வந்தால் -அதைச் சகிக்காமல் அவர்தம் மூஞ்சியில் நீங்கள் ஒரு குத்து விட்டால் அதை என்னால் புரிந்துகொள்ள முடியும்! அது எப்படி இனிக்கிறது என்பதை அவர்கள் தெரிந்து கொள்ளட்டும்!! புலிகளைப் பாசிசப் புலிகள் என்று வரையறுப்பது தவறு. அதுபற்றி இங்கு பேசும் நோக்கமில்லை. ஆனால் புலிகளை ஒழிக்க மக்கள் செத்தது தவிர்க்க முடியாதது என்ற கொலைவெறிக் கதை பேசிக்கொண்டு வந்தபின் வாங்கிக் கட்டிக் கொள்ளாமல் தப்பலாம் என எண்ணாதீர்கள்.

முடிவென்ன? முடிவென்ன ? என்று ‘முடிவுக்காக’ அல்லோலகலப்படும் ஆத்துமாக்களுக்கு நாம் சுட்டிக்காட்ட விரும்பும் அடிப்படை விடயம் இதுதான். இலங்கைப் பிரச்சினைக்கு யுத்தம் முடிவல்ல. எந்தப் பிரச்சினைக்கும் யுத்தம் முடிவல்ல. அனைத்துக்கட்சி குழு – பேச்சுவார்த்தை என்று இலங்கை அரசு பேய்க்காட்டிக் கொண்டிருந்த போது சிலர் புலிகளை அதில் சேர்க்ககூடாது என்று தலைகீழாய் நின்றதை நாம் மறந்து விடவில்லை. தீர்வு என்பது போட்டுத் தள்ளுவது என்று கருதும் நீங்கள் எப்படி அரசியல் கதைக்க முடியும்? உங்களுக்கும் மக்களுக்கும் – ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

அவர் இவர் என்று சொல்லாமல் பேரை போட்டு எழுதப்பா. படிக்க சுவாரஸ்யமாயிருக்கும் என்று வம்பு (சு)வாசிக்கும் அன்பர் ஒருவர் கேட்டிருந்தார். இதோ உங்களுக்காக முதல் எறியும் பெயர் – கொன்ஸ்ரன்ரைன்!

அன்பர் ,நல்லவர் , வல்லவர் என்ற கதைகளோடு நீவிர் பாய முதல் நாம் பறைவது கேட்டுப் பாய என்று கேட்டுக் கொள்வோம். யுத்தத்துக்கு முன்பு நட்போடு தான் பேசினார். தாம் காட்டிய நட்பில் தற்போதும் குறைச்சலில்லையென்று அவர் நினைக்கலாம். நமக்கேன் இந்த அரசியற் கோதாரியென்று நாலு பெக்கடிச்சுப் படுத்தெழும்புவர்களுக்கு அது சரியாகவும் படலாம். இன்னும் சூடாறாத கொலைக்களத்தில் ஏறி நின்று வாழ்க மகிந்த பாடப் பார்த்திருப்போமா? அன்பர் தொடர்ந்து எழுதிக் கிழித்துக் கொண்டுதானிருக்கிறார். அவரது வழுவல் தனத்துக்கு உதாரணமாக ‘ஆய்போங்… யாழ்ப்பாணம் உங்களை வரவேற்கிறது’ என்ற தலைப்பில் அவர் எழுதிய ஒரு சில வரிகளை மட்டும் எடுத்துக் காட்டுவோம்.

‘இராணுவமும் பொலிசாரும் தங்களின்பாடு’ என்று நிலமை சகசத்துக்குத் திரும்புகிறது என்ற தொனியை ஏற்படுத்துமவர் தொடர்ந்தும் அதே தொனியில் எழுதுகிறார் ‘நான் 2150 ரூபாய் கட்டி டக்ளஸ்சின் பஸ்சிலும் சென்றேன். மறுதடவை 800 ரூபாயோடு ஒரு சிறிய ‘தட்டி வான்’ ஒன்றிலும் சென்றேன். இராணுவத்தின் கெடுபிடி ஒன்றிலும் இருக்கவில்லை.’ சில வசனங்களின் பின் பின்வருமாறு எழுதுகிறார்.

‘சகலரும் பஸ்சிலிருந்து இறக்கப்பட்டு உடல்கள் முழுமையாக சோதிக்கப்படுகிறது. ஆண்களுக்கும் பெண்களுக்குமான தனித்தனியான அறைகளில் ஒவ்வொருவராக தனித்தனியாக உடற் பரிசோதனை செய்யப்படுகிறது. அவயவங்கள்கூட கைகளால் அமத்திப் பார்க்கப் படுகின்றது’

வழமைபோல் தான் ‘கொசிப்படிக்கும்’ பாணியில் அவர் இதைத் தனது விவரணத்துக்குள் நசுக்குகிறார். கையோடு எமக்கு ஆறுதல் தருவதற்காக மீண்டும் இராணுவத்தின் திறமையை வலியுறுத்துகிறார்! ‘கடமையில் இருந்த இராணுவத்தினர் மிகவும் பொறுப்புடனும் மரியாதையுடனும் தமது கடமையைப் புரிந்தனர்’ என்று புளங்காகிதம் கொள்கிறார்.

கொன்சின் எழுத்தில் அரசியற் பிழை பிடிப்பதோ அல்லது அவரது எழுத்துக்களில் மிதக்கும் மேலாதிக்க மனோபாவம் பற்றி வரிசைப்படுத்துவதோ ஒருவருக்கும் சிரமமான காரியமில்லை. இருப்பினும் மேற்கண்ட மேற்கோளை நாம் உபயோகிப்பதற்கு காராணம் அதே பாணியில் கொன்ஸ் வேலை செய்யும் பலரையும் அம்பலப்படுத்தவே.

ஓட்டுமொத்த இலங்கையும் இலங்கை அரசின் சொத்து. ஆகையால் அவர்கள் செய்யும் அராஜகத்தில் சிலவற்றை மக்கள் பொறுத்துத்தான் போக வேண்டும் என்ற தொனி மேற்கண்ட மேற்கோளில் ஒலிப்பதைக் கவனிக்க. ‘நடந்தது நடந்து போச்சு இனி அழுதென்னத்தச் செய்யிறது? ஆகவேண்டியதப் பார்ப்பம்” என்று செத்தவீட்டில் கதைக்கும் தொனி தெரிவதை அவதானிக்க. சில குறை நிலை இருக்கத்தான் செய்யும் என்று இவர்கள் முன்வைக்கும் சகஜம் பற்றிக் கவனிக்க.

நாங்கள் இன்னும் செத்தவீடு கொண்டாடவில்லை. யார் யார் செத்தார்கள்? என்ற பட்டியல் கூட இன்னும் தெரியாது. அதுக்குள் நிலமையை ஏற்றுக்கொள்ளச் சொல்லும் உங்களுக்கு நல்ல தெனாவட்டுத்தான். இலங்கை வாழ் ஒடுக்கப்படும் மக்களுக்கு உங்கள் கதை எடுபடலாம். உங்கள் நண்பர் டக்ளஸ் துப்பாக்கி – கருணா துப்பாக்கி என்று இன்னும் எத்தனையோ துப்பாக்கிகளால் சாவுகளுக்காக வாழ்வதாகப் பழக்கப்படுத்தி கொண்டிருக்கும் பாவப்பட்ட உயிர்களிடம் உங்கள் படங்கள் எடுபடலாம். பாவம் அவர்கள். உங்களை எதிர்க்க மக்களுக்குத் தென்பில்லை? இது வியாபாரிகளின் காலம் ராசா. பறந்து பறந்து திரியுங்கள். முதலீடு செய்யுங்கள். இடைக்கிடை எயிட் செய்யுங்கள். உங்களை ஏனென்று கேட்க யாருள்ளார் என்ற நினைப்பு. ஆனால் உங்களுக்குத் தெனாவெட்டேறிய அதே குளிர் நாட்டில் தான் நாமும் சனநாயக மயிர் பிடுங்குகிறோம். நாம் உந்த அளப்புகளுக்கு எடுபடுவோம் என்று எற்பனும் கனவு கண்டு விடாதீர்கள். இலங்கையில் ஒடுக்கப்படும் மக்கள் போராடப் பலப்படுவதற்கான முயற்சிகளைச் செய்யும் அதே வேளை உங்கள் ‘பகிடி’ அரசியலை அம்பலப்படுத்திக் கொண்டு தான் இருப்போம்.

எல்லாம் சகஜம் வாருங்கள் போய் வியாபாரம் செய்ய என்று இவர்கள் மனித உரிமையைக் கூவிக் கூவி விற்பதை வழுவல் கதைகளுக்குள் புதைத்துத் தப்பக் கனவு காணாதீர்கள். இதற்குள் பாதிக்கப்பட்ட சனத்துக்கு உதவி என்ற லிட்டில் எயிட் புலுடாக்கள் வேறு. இந்த ‘எயிட்’ வியாபாரத்தை இன்னுமொரு இடத்தில் பார்ப்போம். இவர்களின் கரிசனையைப் பார்த்து நாம் கண்ணீர் மல்க நன்றி சொல்வோம் என்ற எதிர்பார்ப்பு வேறு இவர்களுக்கு இருக்கு என்பதையறிய எமக்குச் சிரிப்புப் பொத்துக் கொண்டு வருகிறது. பழைய மில்க்வைற் சவக்காரத்தின் ‘எயிட் ஸ்பொன்சர்’ காலம் வடக்கு கிழக்குக்கு திரும்புவதில் நாம் பூரிப்புக் கொள்ளப்போகிறோமா? புலிகள் போய் வியாபாரத்தைத் தொடங்க முன்னர் தாம் போய்ச் சில மூலைகளை மடக்கிப் போடவேண்டும் என்பதுதான் இவர்தம் ஆதங்கம்.

புலிகள் இல்லாத இடைவெளியில் வியாபாரம் பெருக்கப் பாய்ஞ்சு பாய்ஞ்சு பலர் இலங்கை பறக்கிறார்கள். ‘விசிட்’டுக்குப் போய் வந்தவர்களும் ‘எல்லாம் சூப்பர்” என்கிறார்கள். இவர்கள் மறைக்கும் உண்மை என்ன? வரலாறு காணாத வறுமைக்குள் தள்ளப்பட்ட வடக்கு-கிழக்கு பகுதிகளில் அரசு , சீன செலவில் ஒரு ரோட்டுப் போட்டால் யாழப்பாணத்துக்கும் நெல்லியடிக்கும் ‘மெற்றோ’ (சுரங்க ரயில்) தொடங்கிவிட்டதுபோல் இங்கு வந்து கதை பேசுகிறார்கள். மூலதனமிடுவதன் மூலம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது தான் இனி ஒரே ஒரு வழி என்று ‘அரசியற் தீர்வுகள்’ வைக்கிறார்கள். இந்த அரசியற் போக்கைப் பற்றியும் சில கவனங்களை நாம் ஏற்படுத்த வேண்டியுள்ளது.

தொடரும்…

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *