இனத்துவேசத்தின் எழுச்சி

கடந்த நவம்பர் 2005ல் மகிந்த ராஜபக்ச தேர்தலில் வென்ற கையோடு இலங்கை இனத்துவேசம் புதிய கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. வென்ற கையோடயே இன வெறியர்களுக்கு அரச பதவிகளையும் மந்திரி பதவிகளையும் ராஜபக்ச அள்ளிக் கொடுக்க தொடங்கியிருந்தது அனைவரும் அறிந்ததே. இதுவரைகாலமும் ஆட்சிக்கு வந்த ‘கொழும்பு’ ஜனாதிபதிகள் போலன்றி ராஜபக்ச தெற்கை சேர்ந்தவர். ‘தூய புத்தமத சிங்களவர்’ என்று வர்னிக்கப்பட்டவர். அத்தோடு சண்டிக்கட்டுடன் வயலுகளுக்குள் நடந்து திரிந்து படங்கள் எடுத்து சாதாரன சிங்கள மக்களில் ஒருவராக காட்டப்பட்டவர். தனது பழய இடதுசாரி உறவுகளை சுட்டிக்காட்டி ஜே.வி.பி வாசுதேவ நாணயக்கார முதலான பாயத்தயாராக இருந்த பூனைகளை மதிலில் இருந்து தன் பக்கம் இறக்கியவர்.

பல தில்லுமுல்லுகள் செய்து ஜே.வி.பி உதவியுடன் கடந்த நவம்பர் 2005 தேர்தலில் பெரும்பான்மையான தொழிற்சங்கங்களை தனக்கு ஆதரவழிக்க வைத்தவர். இந்த தூய புத்த சிங்களவருடன் கூட்டுசேர்ந்து நாட்டை சீர்குலைப்பதில் ஜே.வி.பி யும் பின்நிற்கவில்லை. தேர்தல் நடவடிக்கைகளுக்காக இலங்கை திரும்பும் முன்பு ஜே.வி.பி. யின் தலைமை சோமவன்ச அமரசிங்க வழங்கிய பேட்டியில் எதிரியையும் கௌரவித்த துட்டகைமுனுவை பாராட்டி பின் ஜே.வி.பி புனிதமான புத்த சமய முறைப்படி நடக்கும் அரசமைப்பை உருவாக்கவே விரும்புகிறது என்றார். ‘தச ராஜ தர்ம’ என்ற புத்த முறைப்படியே தமது கொள்கைகள் வகுக்கப்படுவதாக கூறினார். அத்தோடு வெளிநாட்டு மூலதனத்துக்கு நாம் எதிரியல்ல என்று அறிவித்துக் கொண்ட அவர்கள் ஏகாதிபத்தியம் பற்றி புத்த – மார்க்சிய சொல்லாடல்களை பாவித்து மக்களை குளப்பினர். இருப்பினும் அப்பொழுது அவர்களின் முக்கிய குறிக்கோள் றணில் விக்கிரமசிங்க புலிகளுடன் ஏற்படுத்த தொடங்கியிருந்த பேச்சுவார்த்தையை உடைப்பதாகவே இருந்தது.

புலிகள் பிரிவினை வாதிகள் என்றும் அதனால் அவர்களை அங்கீகரித்த எந்த நடவடிக்கையும் செய்யக்கூடாது என்றும் அமைதி பேச்சுவார்த்தையை நிறுத்தியே ஆகவேண்டும் என்றும் கடுமையான பிரச்சாரத்தை தொடங்கினார்கள் ஜே.வி.பி யினர். விமல் வீரவன்ச ராஜபக்ச சார்பில் பிரச்சாரத்துக்கு தலைமை தாங்கி இனத்துவேசத்தை கட்டவிழ்த்தார். இதற்கு கடும் போட்டியாக அதி தூய புத்தமத ‘ஜாதிக ஹெல உறுமய’ போன்ற கடும் இனத்துவேச கட்சிகள் தமது வெறுப்பு அரசியலை முன்னின்று செய்தன. தூய சிங்கள – புத்தத்தை முதன்மைபடுத்தி தேர்தல் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன.

நாம் தேசபக்தர்கள் என்று அறிவித்துக்கொண்ட ஜே.வி.பியினர் மார்க்சிய சொல்லாடல்களை பாவித்து பல பழய தொழிற்சங்க வாதிகளை மடக்கி பிடித்தனர். சிங்கள இனத்துவேச அரசை அமைக்கவே ராஜபக்ச முன்னிற்கிறார் என்று திட்டவட்டமாக தெரிந்தும் அதற்கெதிரான தமிழ் மக்களின் குரலை புலிகள் முடக்கினர். தமிழ் மக்கள் வாக்களிப்பதை தடை செய்து மீண்டும் பெரிய அரசியல் தவறிழைத்தனர். யார் அரசமைத்தாலும் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு செல்ல ஒருபக்கச் சார்பெடுப்பது பிழைச்சுப்போம் என்று புலிகள் பிழையான கணக்கு போட்டனர். தமிழ் மக்கள் குரலை மட்டுப்படுத்தியது ராஜபக்ச வுக்கு தேர்தல் வெற்றியை இலகுவாக்கியது.

வென்ற கையுடன் துவேசிகளையும் புத்த மத வெறியர்களையும் வாரி அணைத்து இலங்கையின் வரலாறு காணாத புத்தமத – இனவெறி அரசை உருவாக்கினார் ராஜபக்ச. அதோடு ஜே.வி.பி மற்றும் ஜே.எச்.யு வின் விளையாட்டுக்கள் கேட்பாரற்று கட்டவிழ்த்து விடப்பட்டது.
ஜம்பது வீதத்திற்கும் கொஞ்சம் அதிகமான வாக்குகளை மட்டும் பெற்று அரும்பொட்டில் வெற்றி பெற்ற ராஜபக்சவுக்கு பெரும்பான்மை சிங்கள மக்களை இனவெறியர்களாக காண்பித்து தனது ‘சிங்கள-புத்த’ மேலாதிக்க ஒடுக்குமுறைக்கு அனைவரும் ஆதரவு என்று காட்டவேண்டிய கட்டாயம் இருந்தது. இதற்கான அரசியலை மிக நுட்பமாக அற்புதமான ஆற்றலுடன் தொடர்ந்து செய்துவருகிறார் ராஜபக்ச. அந்த கெட்டித்தனத்தின் பலன்களை வெகு விரைவிலேயே அவர் அனுபவிக்க தொடங்கிவிட்டார்.

2005ல் 5 யு.என்.பி உறுப்பினர்களும் பின்பு 2007 ம் ஆண்டு தையில் 19 யு.என்.பி மற்றும் 6 முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களும் ராஜபக்ச பக்கம் தாவி அவருக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இடத்தை வழங்கியது நமக்கு தெரிந்ததே.

கடந்த ஆண்டு உலகின் அதிகூடிய மந்திரிகள் கொண்ட மந்திரிசபை என்று வர்ணிக்கப்படும் ராஜபக்சவின் மந்திரி சபையின் 54 உறுப்பினர்களுக்கு இருக்க இடம் இல்லாத காரணத்தால் மந்திரி சபை கூட்டப்படாமல் தள்ளிப் போடப்பட்டது. 4 லட்சம் மக்களுக்கு ஒரு மந்திரி என்ற கணக்கில் இருக்கும் மந்திரிசபை ராஜபக்ச குடும்பத்தின் கையில் சிக்கிக்கிடக்கிறது. இரண்டு சகோதரர்கள் மந்திரியாகின வேகமும்இ மச்சினி மாமன் கீமன்-கிட்ட சொந்தம் – தூர சொந்தம் எண்டு ராஜபக்ச குடும்ப பட்டாளமே அரசாட்சி செய்யுது. சகோதர பாசத்தையும் சிங்கள தேசியத்தையும் பிணைந்து அரசாட்சி செய்யும் மகிந்தவின் மனதில் உள்நாட்டு பிரச்சினையை தீர்க்கும் எண்ணம் எழும் என்று எதிர்பார்பார் ஏமாறுவர்!

யுத்தம் – குண்டு வெடிப்பு – உள்நாட்டு பிரச்சினை என்று இடைக்கிடை வடக்கு கிழக்கு பற்றி நாம் கேள்விப்படுகிறோமே அன்றி அரசாங்க பிரச்சாரங்களிளோ அரசுசார் ஆவணங்களிலோ புள்ளி விபரங்களிலோ இப்பிடி ஒரு பிரதேசம் இலங்கைக்குள் இருப்பதாக கண்டு பிடிப்பது கடினமாகவே இருக்கிறது. இப்பிரதேசம் இலங்கை பொருளாதாரத்துடன் இனைந்திருப்பதாக தெரியவில்லை. ராஜபக்ச சண்டிக்கட்டுடன் வயல்வெளிகளில் நின்று எடுத்த படங்களும், குழந்தை பிள்ளைகளை தழுவி எடுத்த படங்களும் கட்டவுட்டுகளாகவும் லேக் கவுஸ் பிரச்சாரங்களாகவும் யுத்தத்தில் இருந்து பல நூறு மைல் தாண்டிய கனவுகளாக பரப்பப்படுகிறது.

லிப்ரன் சேர்கசில் இருக்கும் அவரது பிரமாண்டமான கட்டவுட்டில் ‘Next Only to Dutta Gemunu’ என்று புகழப்படுகிறது. துட்டகைமுனுவை விட அதிகூடிய மாயஜாலங்கள் செய்யும் மன்னரும் அவர்தம் மதிப்புக்குரிய சுகோதரர்களும், கடற்படையில் சேர்ந்து பெருமை சேர்க்கும் மகனும் என்று விரியும் அவரது அகில இலங்கை கொள்கை பரப்பலை கண்டு யாரும் வியக்காதிருக்க முடியுமோ?

இவ்வருட ஆரம்பத்தில் முழு மூச்சாக யுத்தத்தை நோக்கி நகர்ந்த அரசு – யுத்தத்திற்கு போவதற்கான காரணங்கள் தேடித்திரிந்த அதே தருணம் – ஜே.வி.பி உக்கிரமான புலி எதிர்ப்பு செய்து வந்ததும், புலி எதிர்ப்பு என்ற பெயரில் ஒட்டுமொத்த தமிழர்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிராக கத்திக்கொண்டு திரிந்ததும் அனைவரும் அறிந்ததே. இந்த ஜே.வி.பி யின் உள்நோக்கை ஆதரிக்கும் வகையில் கடந்த ஆண்டு மே முதலாம் திகதி – தொழிலாளர் தினத்தில் வடக்கு கிழக்கு பிரிவினை அறிமுகப்படுத்தப்பட்டது. டக்ளஸ் உட்பட பெரும்பான்மையானவர்களால் எதிர்க்கப்பட்ட இம்முயற்சிக்கு பின்னால் முக்கிய சக்தியாக ஜே.வி.பி இயங்கியது. இதே மே தினத்தில் லண்டன் ஊர்வலத்தில் பங்கு பற்றிய ஜே.வி.பி யினர். இரஸ்யாவும் சைனாவும் தொழிலாளர் நாடுகள்இ நாம் அவற்றுக்கு முற்று முழதான ஆதரவு வழங்க வேண்டும். இந்தியாவின் நட்பைபெற வேண்டும் என்று மிக மிக மோசமான – ஒரு சொட்டுக்கும் அரசியல் தெளிவற்ற துண்டு பிரசுரங்களை விநியோகித்தது இந்த மே தின ஊர்வலத்தில் பங்குபற்றியவர்களுக்கு தெரியும். இலங்கையில் இவர்கள் விடும் கதை வேறு.

1987ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக நடந்த உலகமகா சதியை முறியடிக்கும் முகமாக செயற்படும் பாணியில் இந்தியாவை ஏகாதிபத்தியத்தின் உச்சமாக்கி 1987 ஒப்பந்தத்தை மிகப்பெரும் சதியாக்கி ஜே.வி.பி புலம்பிய புலம்பலுக்கு மகிந்த எடுபட்ட அளவுக்கு யாரும் எடுபடவில்லை.

அரசாங்கத்தை காத்துக்கொள்ள – மீண்டும் யுத்தத்திற்கு செல்ல புலியை குற்றம் சாட்டும் சூழ்நிலையை உருவாக்க – ஜே.வி.பி யின் உதவி ஜனாதிபதிக்கு அத்தியாவசியமாக இருந்தபடியால் அவர் ஜே.வி.பி யின் தேசியவாத ஆட்டத்திற்கு இழுபட்டார்.

கிழக்கு மக்களின் மேலிருக்கும் எந்த கரிசனையாலும் வட – கிழக்கு பிரிக்கப்படவில்லை. இப்பிரிவினையில் கிழக்கு மக்களுக்கு எந்த லாபமும் ஏற்படவில்லை. ஏற்படபோவதுமில்லை. புலிகளை தனிமைப்படுத்தி முடக்குவது இலகுபட்டிருக்கிறது என்ற காரணத்தை தவிர வேறு எந்த பொருளாதார லாபமும் இல்லை. கடந்த பட்ஜட்டில் பல மில்லியன் ரூபாய் செலவிலான வடக்குக்கு அதிவேக கார் ஓடும் ரோட்டுபோடும் திட்டமொன்று போடப்பட்டிருந்தது! அது கிழக்கை வெட்டிக்கொண்டு ஓடுதே தவிர, அதில் கிழக்குக்கு ஒரு பங்குமில்லை. இருக்கிற ஏ9 ஜ திறந்துவிடக் காணம் அதில என்ன அதிவேக ரோட்டுத் திட்டம் என்று உணர்ச்சிவசப்பட வேன்டாம். வடக்குக்கு போடும் திட்ட காசு முழுக்க கடைசியில் குண்டுகளாயும், தோட்டாக்களாயும் இராணுவ தளபாடங்களாயும் தான் (கள்ள பாங்கு கணக்குகளிள் சேருவது போக மிஞ்சுபவை) வடக்குக்கு போய் சேரும் என்பது யாவரும் அறிந்ததே. இதனால்தான் கிழக்கை விட வடக்குக்கு திட்டங்கள் போடுவது சுலபமானது.

2008ல் நாம் யுத்தத்தை முடிப்போம் என்று சரத் பொன் சேகர அறிக்கை விடுவதும், முப்பது வருசமாத்தான் யுத்தம் நடக்குது இந்த அரசாங்கமும் அதை தொடர்வதில் என்ன பிழை என்று பசில் ராஜபக்ச மிக விஞஙான பூர்வமாக கேட்பதும் சாத்தியமாகியிருக்கும். இத்தருணத்தில் மக்கள் படும் துன்பம் பற்றி யார் கதைத்தாலும் இவர்கள் கவனத்திற்கு வரப்போவதில்லை. இவர்கள் மண்டைக்குள் இப்போதைக்கு அப்பிரச்சினை புகாது. அமெரிக்காவில் செல்வச் செழிப்பான வீடுகளும், இலங்கை எங்கும் சொத்துக்களும் என்று பூரித்திருக்கும் ராஜபக்ச குடும்பத்துக்கு நாட்டுப் பிரச்சினை எப்படி விளங்கப்போகுது. கடந்த பட்ஜட்டின் படி இலங்கையின் 75 வீத சொத்து இக்குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது என்கிறது ஒரு செய்திக் குறிப்பு. பல்வேறு வழியில் இவர்கள் பணக்காரர்களாகிக் கொண்டிருக்கிறார்கள்.

வடக்கில் வெளிநாட்டு காசில வாழுது சனம் என்று சிலர் சிலாகிப்பர். அது அகதிகள் இரத்தம் பிளிஞ்சு தாமாக அனுப்பும் காசு. தெற்கிலயும் ஆட்சியாளர் வெளிநாட்டு காசிலான் வாழுகினம். அது அகதிகளையும் வறியவர்களையும் பிளிஞ்சு உறுஞ்சிய காசு. அரசம் சரி புலியும் சரி ‘சர்வதேச சமூகம்’-‘சர்வதேச சமூகம்’ என்று கத்துவதெல்லாம் இந்த உறிஞ்சுபவர்களை சுட்டியே. உறிஞ்சப்படுபவர்களை இவர்கள் கணக்கிலெடுப்பதில்லை. இந்த ‘சர்வதேச சமூகம்’ கொடுக்கிற காசுக்காக இவர்கள் எதையும் செய்ய தயாராயிருக்கிறார்கள். அரைவாசிக்காசு இவர்கள் சொந்த காசாவதால் இவ்வகை அயலுறவு கொள்கையில் இவர்களுக்கு கோடி லாபம்! ஏழை மக்களின் ‘பரம்பரை’ எதிரியான யு.என்.பி இலங்கைக்கு சமாதானம் கொண்டுவர எடுத்த முயற்சியின் ரகசியம் இதுதான். பல்வேறு நாடுகள் பண உதவியை காட்டி அமைதிக்கு போகும்படி அலுப்பு கொடுப்பதின் காரணம் வியாபார நோக்கமே அன்றி அதற்கு பின்னால் மனித நேயமில்லை.

சர்வதேச நாடுகள் நெருக்கடி ஏற்படுத்துவது உண்மைதான் என்று பகிரங்கமாக அறிவித்துக் கொண்ட மகிந்த எல்லா கட்சிகளையும் கூட்டி ஒரு தீர்வு கொண்டுவரப் போவதாக அறிவித்தார். மகா கெட்டிக்காரத்தனமாக அந்த பொறுப்பு திசவிதாரனவிடம் கொடுக்கப்பட்டது.

மகிந்தவின் மந்திரிசபையில் இருக்கும் எல்.எஸ்.எஸ்.பி யின் தலைவர் திசவிதாரண, இப்படியான ஒரு இக்கட்டான வரலாற்று கட்டத்தில் இலகுவான பாதையை கண்டு பிடித்தார்!! மகிந்தவின் இனவாத அரசை ஒரு தீர்வை நோக்கி தள்ள முடியும் என அவர் நம்பினார்.
நாம் ஒன்றுகூடி வடக்கு கிழக்குக்கு பொதுவாக ஒரு தீர்வை வைப்பதன் மூலம் புலிகள் தனிமைப்படுவார்கள். அதன் மூலம் வட – கிழக்கு மக்களின் நம்பிக்கையை தெற்கு அரசுக்கு வென்றெடுக்கலாம் என்று 2007 மே 10ல் அவர் அறிவித்தார். ஒத்துளைக்க மறுத்த யு.என்.பி யுடனும்இ நான் சொல்லிறத செய் என்று நின்ற அரசுடனும் திசவிதாரண இழுபறிப்பட்டுக்கொண்டிருந்த வேளைஇ இந்த இழுபறிக்கு ஆப்பு வைக்கும் முயற்சியில் இறங்கியது ஜே.வி.பி.

87ம் ஆண்டு ஒப்பந்தத்திற்கும், இந்தியாவுக்கும் எதிராக உக்கிரமான கலையாடிக் கொண்டிருந்த ஜே.வி.பி அமைதி பேச்சுவார்த்தையை உடைத்து ஏ.பி.ஆர்.சி யை கலைக்கும்படி அரசை தூண்டியது. இந்த ஆண்டு ஆரம்பத்தில் அமைதிப் பேச்சுவார்த்தையில் இருந்து தானாக விலகிக்கொண்ட அரசு, முழுநேர யுத்தத்தில் மும்முரமாக இறங்கியுள்ளது. இதை தொடர்ந்து 87ம் ஆண்டு ஒப்பந்தத்தை அமுலுக்கு கொண்டுவருவதாக – முக்கியமாக 13ம் சரத்தை வடக்கில் அமுலுக்கு கொண்டுவர முயற்சிப்பதாக ஒரு பாவனை அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது. மகிந்த வடக்கின் பொறுப்பை டக்ளசிடம் விடப்போறேர் போலிருக்கு என்ற நியாயமான சந்தேகத்தை இது பலருக்கும் ஏற்படுத்தியிருக்கிறதே அன்றி இது தீர்வுக்கான நகர்வாக எதிர்கொள்ளப்படவில்லை.

திசவிதாரண இடைக்கிடை எழுச்சிமிக்க பேச்சுக்களைவ வளங்க முடியுமே தவிர ராஜபக்ச குடும்பத்துக்கு எதிராக ஒரு கல்லைகூட அவரால் நகர்த்த முடியாது. அதேபோல் 87ம் ஆண்டுக்கு எதிராக கலையாடும் ஜே.வி.பி யும் ஜே.எச்.சு வும் சும்மா பார்த்துக் கொண்டிருக்க போவதில்லை. போதாக்குறைக்கு யுத்தம் மூலம் ஒரு தீர்வை கொண்டுவருவது தான் சாத்தியம் என்று ராஜபக்ச குடும்பம் தெட்டத்தெளிவாக அறிவித்து வருகிறது.

யுத்தம் மூலம் தீர்வு சாத்தியமா?
புலிகளை காட்டுக்குள் முடக்கி செயலிழக்க செய்வதன் மூலம் தெற்கின் ஆட்சியை நிறுவி… என்று தீர்வுக்கதை தொடர முடியுமா? இது வெறும் பம்மாத்து மட்டுமே. புலிகளை அழித்து இலங்கை பிரச்சினைக்கு ஒரு தீர்வை கொண்டுவர முடியும் என்பது மிக மிக முட்டாள் தனமான கருத்து. புலிகள் ஒரு புரட்சிகர சக்தியல்ல என்பதை நன்கு அறிந்துகொண்டே நாமிதை சொல்கிறோம். புலிப் பொடி பொட்டைகளை கொன்று குவித்து அந்த பிணக்குவியலின் மேல் ஜனநாயக தமிழர் பிரதேசத்தை கட்டி எழுப்புவோம் என்ற ஜே.வி.பி வாதத்திற்கு எடுபடுபவர்கள் மக்கள் சார்ந்து சிந்திப்பவர்கள் அல்ல. ‘புலி எதிர்ப்புக்காக’ எத்தனை உயிரையும் கொடுக்க தயாராக இருக்கும் அராஜகம் அது. அதேபோல் புலிகளை அரசின் பக்கம் வென்றெடுக்க முடியும் என்று சிலர் புலம்புவதும், அல்லது காலப்போக்கில் மக்கள் ஆதரவின்றி புலிகள் மங்கிப் போவார்கள் என்பதும் விசர்க்கதைகள்.

இவை அனைத்தும் உண்மையான மூடிமறைத்துவிட்டு இந்தச் சோத்துக்குள்ள பூசனிக்காய் இல்லை என்று புழுகும் வாதங்கள்.
புலிகள் தொங்கிக் கொண்டிருப்பது தமிழ் மக்களின் அடிப்படை உரிமை பிரச்சினை. தமிழ் மக்களின் இப்பிரச்சினையை எந்த அரசாங்கமும் தாமாக தீர்த்து வைக்கப்போவதில்லை. புலிகளும் தனித்து போராடி தீர்வை கொண்டுவரும் சக்தியற்றவர்கள். யுத்தம் மூலமாக எச்சார்பும் வெற்றிபெறப்போவதில்லை.

உடனடி தேவையாக இருப்பது யுத்த நிறுத்தம். உடனடியாக யுத்தம் நிறுத்தப்பட்டு பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட வேண்டும். புலிகள் இதில் பங்குபற்றுகிறார்களோ இல்லையோ உடனடியாக யுத்தம் நிறுத்தப்பட வேண்டும்.

‘பேச்சுவார்த்தை’ என்பதை இலகுபடுத்திய அர்த்தத்தில் இங்கு நாம் பாவிக்கவில்லை. அதற்கு இலகுபடுத்திய அர்த்தம் இலங்கையில் கிடையாது. புலிகளும் அரசும் பேசி சிங்கள, முஸ்லிம், தமிழ், மலையக மக்களை காப்பாற்றி விடுவார்கள் என்று நாம் கூறவில்லை. மாறாக பேச்சுவார்த்தையின் மூலம் ஒரு அரசியல் தீர்வை நோக்கி நகர்வதானது ஒடுக்கப்படும் மக்களுக்கு தம் குரலை ஓங்க வாய்ப்பேற்படுத்தும் என்றே குறிப்பிடுகிறோம். வடக்காயினும், கிழக்காயினும், மலையகமாயினும், முஸ்லிம்களாயினும் தம்தம் உரிமைகளை அவரவர்களே தீர்மானிக்க வேண்டும். மேலிருந்து திணிக்கப்படும் எந்த தீர்மானமும் அவர்கள் நலனை முன் வைத்ததாக இருக்கப் போவதில்லை.

அவரவர் உரிமைகளை அவரவரே தீர்மானிப்பதற்கு வழியேற்படுத்துவது எவ்வாறு? யுத்த மும்முரத்தில் இருக்கும் புலிகளோ அரசோ இதற்கான நகர்வை மேற்கொள்ளப் போவதில்லை. இதை தெரிந்துகொண்டும் இவர்களின் ஆட்டங்களுக்கு இழுபறிப்படாமல் மக்கள் உரிமைகளை சுவாசிக்கும் அமைதிக்கு முதலில் நாம் போராட வேண்டியுள்ளது.

உலகின் மோசமான வறுமை நாடாகவும், மனித உரிமை மீறும் நாடாகவும், பொருளாதாரம் சீரழிந்த நாடாகவும், மாறிவரும் இலங்கையை மக்கள் வாழக்கூடிய இடமாக மாற்றக் கூடிய சக்தி மக்களிடம் மட்டுமே உண்டு. இதை கருத்தில் கொண்டே நாம் நகர வேண்டும். பல்வேறுவிதமான உரிமை போராட்டங்களும்இ சாதிய ஒடுக்குமுறைகளும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் கொண்ட சமுதாயத்திற்கு ஒரு கணத்தில் தீர்வு வந்துவிடப் போவதில்லை. மக்கள் தம் உரிமைக்கு அணிதிரளும் வாய்பை கொடுங்கள் மிகுதியை, தமக்கு என்ன தேவை என்பதை அவர்கள் தீர்மானிப்பர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *