இரத்த வேட்டையும், இரத்தப் பொட்டும் – 1983 கறுப்பு யூலை நினைவாக

1983 நடந்த ‘இன’ கலவரத்தை சிங்கள தமிழ் மக்களிடையே நடந்த ‘இனக்கலவரமாக’ சித்தரித்தல் நிறுத்தப்பட வேண்டும். நடந்தது ஒரு இனக்கலவரமல்ல. திட்டமிடப்பட்டு அரசால் தூண்டி விடப்பட்ட காடையர்கள் தெற்கில் வாழ்ந்த தமிழ்பேசும் மக்களின் மேல் நிகழ்த்திய வன்முறையை இனக்கலவரம் என்றுசொல்லி இலங்கையின் நீண்டகால சிங்கள தமிழ் இன உறவை கொச்சைப்படுத்துவது பிழை. ஆயிக்கணக்கான மலையக தமிழரின் குடியுரிமை பறிக்கப்பட்டபோதும் சரி – வடக்கு கிழக்கு தமிழர்களின் உரிமைகள் தாக்கப்பட்டபோதும் சரி தெற்கில் ஏராளமான சிங்கள மக்கள் தமிழர் பக்கம் நின்றுள்ளார்கள். தமிழ் தலைமகள் தமிழர் உரிமைகளை கைவிட்ட தருனங்களிற்கூட அவர்கள் தமிழர்களுக்காக குரல் கொடுத்துள்ளார்கள். 83 படுகொலை பற்றிய முழு விசாரணை நடத்தப்பட்டு, ஒட்டுமொத்த சிங்கள மக்கள் மேலும் பொறுப்பை போட்டு தப்பும் எமது பொல்லாத தலைமைகளின் போக்கிரித்தனத்தை வெளிக்கொண்டு வரவேண்டும்.

பின்னனி

1970ம் ஆண்டு இலங்கை வரலாற்றை மாற்றிய முக்கியமான ஆண்டு. இந்த ஆண்டு நடந்த தேர்தலில் வறிய மக்களையும் தொழிலாளர்களையும் கைவிட்டுவிட்ட இடதுசாரி தலைவர்களின் உதவுயுடன் சிறீமாவோ பண்டாரநாயகாவின் சிறிலங்கா சுதந்திர கட்சி பெரும் வெற்றிசூடியது. இந்த தேர்தலில் லங்கா சமசமாஜகட்சி ஏறத்தாள ஜந்து லட்சம் வாக்குகளை பெற்று வரலாறுபடைத்து சிறிமாவோடு அரசேறியது. இனத்துவேசத்தையும் தேசியவாதத்தையும் பயன்படுத்தி வேகமாக வளர்ச்சி கண்டுவந்த ஜக்கிய தேசிய கட்சியை எதிர்கொள்கிறோம் என்று போக்குகாட்டி தமது கொள்கை கோதாரிகளை தூக்கி எறிந்துபோட்டு இனவாதத்தின் மடியில் விழுந்தனர் சில இடதுசாரி தலைவர்கள். இலங்கை அரசியிற் கட்சிகளில் மிக முற்போக்கான கொள்கைகள் கொண்டதாக இருந்த லங்கா சமசமாஜ கட்சியின் மேல் அரை மில்லியன் மக்கள் தங்கள் உடன்பாட்டை காட்டியிருந்தும் அவர்களால் சிறிலங்கா சுதந்திரக்கட்சியை எதிர்கொண்டு தம் கொள்கைகளை முன்னெடுத்து செல்ல முடியவில்லை.
சூரியமல் இயக்கத்தின் தூனாக இடதுசரி இயக்கத்தை கட்டிஎழுப்ப உதவிய – சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக குரல்கொடுத்த என் எம் பெரேரா போன்றோர் ஒத்தக்காலில் நின்று சிறிமாவோடு சேர்ந்ததை தொடர்ந்து 1964ல் சமசமாஜ கட்சி உடைந்து இடதுசாரிகளின் பலம் குறைய தொடங்கியது. சிறிமா அரசின் நிதி அமைச்சரான என் எம் விரைவில் புரட்சியை மறந்து போனார். 1977ம் ஆண்டு தேர்தலின் பிறகு அவர்தம் – எஞ்சியிருந்த சொற்ப இடதுசாரியமும் இறந்து போனது. நாட்டின் பெயரை சோசலிச ரிப்பப்ளிக் ஒப் சிறிலங்கா என்று மாத்தி காலனித்துவ தொடர்பை முடிவுக்கு கொண்டு வந்ததோடு தங்கள் கடமை முடிந்ததுபோல் நடந்துகொண்ட இந்த தலைமைகளில் நம்பிக்கையற்ற இளைஞர்கள் ஜே.வி.பி நோக்கி படையெடுத்தனர். கியூபாப் புரட்சியும் கொரில்லா முறையும் இடதுசாரிகள் மத்தியில் பெருமையாக பேசப்பட்டு வந்த காலகட்டத்தில் இடதுசாரி தலைமைகளால் கைவிடப்பட்ட இளைஞர்கள் ஜே.வி.பி யில் நம்பிக்கை கொண்டதும் அவ்வியக்கம் வேகமாக வளர்ந்ததும் ஆச்சரியமானதல்ல. மார்க்சிய சொல்லாடலை பயன்படுத்திய ஜே.வி.பி பெரும்தேசிய கதையாடலில் ஊறிக்கிடந்ததை சுட்டிக்காட்டி போராட துடித்த இலங்கை தொழிலாளர் வர்கத்தை வெற்றி நோக்கி வழிநடத்த பழய சமசமாஜிகளால் முடியவில்லை.

‘சிங்கள’ இன – தேசிய பிளவை பயன்படுத்தி வலதுசாரிகள் ஒருபக்கம் வளர – மறுபக்கம் இடதுசாரியத்துக்கு ஸ்டாலினிய தேசியம் பூசியது ஜே.வி.பி. 1971ல் அவசரப்பட்டு நடத்தப்பட்ட ஜே.வி.பி யின் கிளர்ச்சி 15,000க்கும் மேற்பட்ட இளசுகளின் உயிரை குடித்தது. முதல் முறையாக இலங்கை பாதுகாப்புபடை மக்களுக்கெதிராக பெரியளவில் பல்வேறு முறைகளில் பயன்படுத்தப்பட்டது. சிறிமாவின் இந்த கொலைகார நடவடிக்கைகளுக்கு அவருடன் கூடியிருந்த சமசமாஜிகள் எல்லாவிதத்திலும் உதவினர். என் எம் ஒரு முற்போக்கு அரசை இவர்கள் முறியடிக்க நினைப்பது மிக்பெரிய தவறு என்று தன்னால் முடிந்தளவு ஜே.வி.பிக்கு எதிராக கத்தினாரே தவிர இந்த கிளர்ச்சியின் பின்னால் இருந்த புறக்காரணிகளையோ தொழிலாளர்களின் அதிருப்தியையோ கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.

இராணுவ பலத்தால் மக்களை கட்டப்படுத்தலாம் என்ற நம்பிக்கையை ஆழும் வர்கத்துக்கு கொடுத்த சம்பவம் இது. சிங்கள இன-தேசிய அடையாளத்துடன் ஊறிய ஜே.வி.பியில் அதே போக்கை வளர்த்துக் கொண்டிருந்த ஜக்கிய தேசிய கட்சி இரக்கப்பட்டதும் பின்னால் ஆட்சிக்கு வந்த பிறகு அவர்களை விடுதலை செய்ததும் ஆச்சரியமான விசயமல்ல. இக்கால சிறிமா அரசின் கெடுபிடிகளால்தான் இலங்கை மக்கள் இடதுசாரிகள் மேலான தமது நம்பிக்கையை முற்றாக இழந்தார்கள். அடிமேல் அடிவாங்கி தொழிலாளர் வர்க்கத்தின் பலம் நலியும் சந்தர்ப்பத்தை பாவித்து வலதுசாரிகள் தமது செல்வாக்கை வளர்க்க பிரிவினையை மேலும் தூண்டினர். வர்க்க உணர்வும் – வர்க்க நடவடிக்கைகளும் நலிய இனத்துவேசமும் பிரிவினை வாதமும் வளர்ச்சி கண்டது.

இதை தொடர்ந்து 72ம் ஆண்டு அரசு கொண்டுவந்த யாப்பு மாற்றத்துக்கு எதிராக தமிழ் மக்கள் மத்தியில் பரந்த எதிர்ப்பு கிளம்பியது. 71ல் வங்காளதேசம் சுதந்திரமடைந்ததும் அதற்கு இந்தியா உதிவியதும் ஊக்கமளித்த நிலையில் தமிழர் தலைமைகள் கூட்டாட்சி கோரிக்கையில் இருந்து தனிநாட்டு கோரிக்கைக்கு தாவிக்கொண்டிருந்தன. தமிழரசுக் கட்சியின் தலைவர் செல்வநாயகம் தனது பாராளுமன்ற பதவியை 72ல் இராஜினாமா செய்துவிட்டு யாழ்ப்பாணம் வந்தபோது இளைஞர்கள் இரத்தப் பொட்டு வைக்க பலத்த வரவேற்பு வழங்கப்பட்டு தமிழ் தேசியவாதம் சூடுபிடிக்க தொடங்கியது. இதே ஆண்டுதான் புலிகள் அமைப்பும் உருவாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. உடனடியாக வங்கதேச சேக் முஜிபர் ரகுமானின் ஆறு புள்ளி கோரிக்கை போல் ஒரு ஆறு புள்ளி கோரிக்கை வைக்கப்பட்டது. பல்வேறு சாக்கு போக்குகளை சொல்லி பின்போடப்பட்ட இடைத்தேர்தல் 1975ல் நிகழ்த்தப்பட்ட போது வரலாறுகாணத அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றியீட்டினார் செல்வநாயகம். இந்த இடைதேர்தலை தமிழர் தனி நாடு பற்றியும் புதிய யாப்பு முறை பற்றியும் கூறும் தீர்ப்பாக பார்க்க வேண்டும் என்று இராஜினாமா செய்தபோது சொன்னதற்கேற்ப பெரும்பான்மை வாக்காளர்கள் தமது எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். தமிழ்நாட்டு உறவு பலப்பட்டு இந்தியாவுடன் நெருக்கமாகிகொண்டிருந்த தமிழ் தலைமைகள் வேகமாக தனிநாட்டு கோரிக்கை நோக்கி நகர்ந்து வட்டுக்கோட்டை தீர்மானத்தையும் நிறைவேற்றின. இதே ஆண்டு – 1975 – ஜந்து வருசத்தில் வைக்கப்பட வேண்டிய பொது தேர்தலை அரசு வைக்கவில்லை என்று ஜே.ஆர் தனது பதிவியை இராஜினாமா செய்தததையும் இங்கே சுட்டிக்காட்ட வேண்டும். இதே பேர்வழிதான் பின்பு தனது அதிகாரத்தை தக்கவைப்பதற்காக குறுக்குவழிகளை நாடினார்.

தெற்கில் இருந்த அரசியற் சக்திகளுக்குள் ஒரளவாயினும் தெளிவான பார்வையும் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கமும் கொண்டிருந்தது சமசமாஜிகள் மட்டுமே இருப்பினும் இவர்களை தமது கட்டுப்பாட்டில் வைக்க சுதந்திர கட்சி தொடர்ந்து தமிழருக்கு எதிரான தில்லுமுல்லுகளை செய்து இவர்களை முரணில் நிறுத்தினர். அவற்றை நேரடியாக எதிர்க்க தவறிய சமசமாஜிகள் சாக்கு போக்கு சொல்லினர். உதாரணமாக மொழிப் பிரச்சினையை சொல்லலாம். ‘புதிய யாப்பில் மிகவும் முற்போக்கான பகுதி மொழி பற்றிய பகுதியே. 55லிருந்து இலங்கை அரசியலை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த பேய் ஒரு வசனத்தில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது’ என்று என் எம் பெரேரா இந்த யாப்பு தமிழையும் அரசு மொழியாக்கியதை பற்றி பெருமையாக குறிப்பிட்டார். உண்மையில் அரச கருமங்களில் சிங்கள மொழிக்கு வழங்கப்பட்ட தகுதி தமிழுக்கு வழங்கப்படவில்லை. தமிழில் இருக்கும் ஆவணங்கள் சிங்களத்தில் மொழிபெயர்த்த பின்பே பாவிக்கப்பட வேண்டியிருந்தது. தமிழ் அரச மொழியாக்கப்பட்டாலும் ஆட்சிமொழியாக சிங்களமே இருந்தது. மொழிப் பிரச்சினை உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் என் எம் அதை சரியானபடி கையாண்டதாக சொல்ல முடியாது.

அதே போல் வடக்கு கிழக்கு இளைஞர்கள் மத்தியில் தோண்றிக் கொண்டிருந்த எதிர்ப்பை சாதிக்கெதிரான போராட்டமாக குறுக்கிப் பார்த்ததும் அவர்கள் விட்ட பிழைகளில் ஒன்று. இலங்கை தமிழர் மத்தியில் உருவாகிய அக்கால தலைமைகள் ஆதிக்க சாதியாக இருந்தமையும் அவர்கள் நிலச் சொந்தக்காரர்களாக ஆதிக்க வர்க்க பிரதிநிதிகளாக இருந்தமையையும் சமசமாஜிகள் மிகச் சரியானபடி புரிந்து வைத்திருந்தனர். ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் தமது போராட்டத்தை முன்னெடுக்கும் போது இந்த தமிழ் தலைமைகள் ஒரங்கட்டப்படுவர் என்ற கணிப்பு சரியானதே. இருப்பினும் சிங்கள பேரினவாதத்தின் உபத்திரவத்தால் வேகமாக வளர்ந்த தமிழ் தேசியம் பற்றியும் தேசியவாதம் மற்றய வேறுபாடுகளை பலவந்தமாக புறந்தள்ளி முதன்மைப்பட்டு கொண்டிருந்ததையும் சரியானபடி கவனிக்க இவர்கள் தவறிவிட்டனர். அது மட்டுமின்றி ஒடுக்கப்பட்ட மக்களை நோக்கி வேலை செய்வதற்கு பதிலாக தமிழ் தலைமைகளின் செல்வாக்கின் பாற்பட்டு இயங்க வேண்டிய நிர்கதியும் அவர்களுக்கு ஏற்பட்டது.

தெற்கில் இருந்தது போல் – என் எம் போல்- பலத்த ஆழுமையான அரசியல் தெளிவுள்ள இடது சாரி தலைமைகள் தமிழர் மத்தியில் உருவாகவில்லை. தேசிய வாதமும் ஆதிக்க சாதியமும் சேர்ந்து அதற்குரிய சந்தர்ப்பத்தை தடுத்தன. என் எம் மற்றும் கொல்வின் ஆர் டி செல்வா உற்பட தெற்கின் ஆழுமைகள் கூட நிலப்பிரபுத்துவ பின்னனியில் இருந்து வந்தாலும் அவர்கள் இங்கிலாந்தில் படித்த காலத்தில் அவர்களுக்கு கிட்டிய உலகப் பார்வை – ஆழமையான சழூக அறிவு தமிழ் தலைமைகளுக்கு வாய்க்கவில்லை. பெரும்பான்மை சழூக சிங்கள கல்விமான்களுக்கும் சிறுபான்மை சழூக தமிழ் கல்விமான்களுக்கும் இருந்த சழூக தொடர்பாடல் முறை வித்தியாசமும் இதற்கொரு காரனம். சமசமாஜிகளின் செல்வாக்கு தமிழர் மத்தியில் பெரிதும் வளராததும் சமசமாஜ கட்சியில் தமிழ்மொழி பேசிய ஆழுமைகள் இல்லாதிருந்ததும் மிகப்பெரிய குறைபாடே.

மாவோயிச – ஸ்டாலினிய போக்குகளுக்கு தமிழரிடையே ஏற்படுத்த கூடியதாக இருந்த செல்வாக்கு ஏன் சமசமாஜிகளுக்கு இருக்கவில்லை என்ற பிரச்சினையை இங்கு பேச இடம்போதாது. தமிழர் அரசியலில் இருந்த ஆதிக்க மனோபாவமும் சாதியம் பற்றிய இக்கட்சிகளின் பார்வையும் இதற்கு ஒரு காரனம் என்பதை மட்டும் இங்கு குறிப்பிடுவோம். இந்த நிலையிலும் தமிழர் உரிமைகளுக்காக தெற்கு அரசில் பலத்த குரல் எழுப்பிக் கொண்டிருந்தது சமசமாஜிகள் மட்டுமே. 70பதுகளுக்கு முந்திய சமசமாஜ வரலாறை பார்ப்பவர்களுக்கு தமிழ் தலைமைகளை விட இவர்கள் சரியானபடி தமிழர் உரிமைகளுக்கு குரல் கொடுத்திருந்து தெரியும். சமசமாஜிகள் பக்கம் பெரும்பான்மை தமிழர் திரளாமல் இருந்ததற்கு ஆதிக்க சாதியமும் ஒரு காரனம். தமிழர் மத்தியில் வர்க்கத்தையும் மீறிய ஒடுக்கு கருவியாக இருந்த சாதியம் வர்க்க ஒன்றுபடுதலை வெட்டியது உண்மையே.

தெற்கில் நடந்த அரசியல் தமிழர் தலைமைகளுக்கு தெரிந்திருக்கவில்லை – அல்லது அவர்கள் இதை கவனிக்க தவறிவிட்டனர் – அதனால்தான் சமசமாஜிகளை உள்வாங்கி ஆதரித்து தமது உரிமை கோரிக்கை பலப்படுவது தவிர்க்கப்பட்டுவிட்டது என்று வாதாடுவது பிழை. தமிழ் தலைமைகளுக்கு இது நன்றாக தெரிந்திருந்தாலும் அவர்கள் தமது சாதிய வர்க்க நலனை முதன்மைபடுத்தி இடதுசாரிகளை புறக்கனித்தது ஆச்சரியமானதல்ல. தமிருக்காக குரல்கொடுத்தலை கொள்கையாக – முக்கிய வரலாக கொண்டிருந்த சமசமாஜிகளை முடக்க தமிழர்மேலான தாக்குதல் பயன்படும் என்பதை சிறிமாவோவும் பின்பு ஜக்கிய தேசிய கட்சியினரும் சரியானபடி புரிந்திருந்தனர். சுதந்திர கட்சி சமசமாஜிகளை வெளியேற்ற தமிழருக்கெதிரான வழிமுறைகளை கையாண்டது மட்டுமின்றி பல்வேறு வித ஆக்கினைகளை வழங்கியும் அவர்கள் விடாப்பிடியாக வெயியேற மறுத்துவிட்டனர். வேறுவழியின்றி 1975ல் அவர்களை தாமாக வெளியேற்றிய பெரிய தவறை சிறிமாவோ அரசு செய்தது. இதன் பிரதிபலனை 79 -80களில் ஜே.ஆர் அரசு அவர்மேல் நடத்திய விசாரணையில் அவர் சந்திக்க வேண்டி ஏற்பட்டது. சிறிமாவோவுக்கு எதிராக கடுமையாக வாதாடிய கொல்வின் ஆர் டி சில்வா அவர் தேர்தலில் பங்குபற்ற ஏழாண்டு தடையை வாங்கி கொடுத்தார்!!

ஆடசிக்கு வருமுன் ‘சத்தியாகிரக’ போக்கென்ற பானியில் ஜே.ஆர் பல ஊர்வலங்களை இன்த்துவேச அடிப்படையில் நிகழ்த்தி அரசுக்கு தலையிடி கொடுத்து கொண்டிருந்தார்.
செல்வா பண்டா ஒப்பந்தத்துக்கு எதிராக ஜே.ஆர் ஜெயவர்த்தனே கண்டி வரையும் ஊர்வலத்தை ஒழுங்கு பண்ணியதும் இந்த ஒப்பந்தத்துக்கு எதிராக என் உயிரை கொடுக்ககூட தயாராக இருக்கிறேன் என்று டட்லி சேனநாயகா வீரம் பேசியதும் நாமறிந்ததே. அதேபோல் 64ல் இருந்து சமசமாஜி தலைமகளுடன் கூட்டுவைத்த சுதந்திர கட்சி டட்லி செல்வா ஒப்பந்தம் கிழத்தெறியப்பட வேண்டும் என்று பிரச்சாரம் செய்ததும் தெரிந்ததே. (பன்டா செல்வா ஒப்பந்தம் 1956 யூலையிலும் டட்லி செல்வா ஒப்பந்தம் மார்ச் 1965இலும் கைச்சாத்திடப்பட்டது) 1958ம் ஆண்டு ஜக்கிய தேசிய கட்சியினர் – குறிப்பாக இனத்துவேசி ஜே.ஆர் ஒரு முக்கியமான பாடத்தை படித்துகொண்டு விட்டார். ஜக்கியதேசிய கட்சி தேசியவாத்தை முன்னெடுத்து பெரும்பான்மை சிங்களவரின் ஆதரவுடன் ஆட்சிக்கு வர முடியும் – அதாவது இலங்கையில் அரசமைக்க தமிழர் ஆதரவு தேவையில்லை என்ற அடிப்படையில் தமிழர்களுக்கு எதிராக துவேசம் தூண்டப்படுவதானது இரு வகையில் அவர்களுக்கு லாபகரமானதாக இருந்தது. ஒன்று இடதுசாரிகளின் பலத்தை முடிவுக்கு கொண்டுவர இது உதவியது. அடுத்து இது ஜ.தே.கட்சிக்கு மக்களை திரட்டும் இலகு உத்தியை வளங்கியது.

வெளிப்படையாக இனத்துவேசம் பேசுவதன் பலனை அன்றே அனுபவித்தவர் ஜே.ஆர். சிங்கள புத்த சிறிலங்காவை தமிழரிடம் விற்க வேண்டாம் என்று வெறித்தனமான கோசத்துடன் கண்டியில் புத்தரின் பல்லிருப்பதாக சொல்லப்படும் ஆலயத்துக்கு சென்ற அவர் (பலத்த எதிர்ப்பின் பின் அவர் ஒழுங்கு செய்திருந்த ஊர்வலம் தடை செய்யப்பட்டதால் நான்கு நாட்களின் பின்பே அவரால் அங்கு செல்ல முடிந்தது.) தமிழர்களுக்கு இலங்கையை விற்பதற்கு எதிராக கடைசிவரையும் போராடப் போவதாக வெளிப்படையாக உறுதிபூண்டவர்.

அத்தருனத்தில் அவர் பேசிய பொறுக்கித்தனமான மிக மொக்குத்தனமான இனத்துவேசத்துக்கு சிங்கள மக்கள் மத்தியில் பலத்த எதிர்பிருந்தது. கோயிலுக்குள்ளே அவர் வணக்கத்துடன் உறுதியெடுத்துக் கொண்டிருந்த தருனம் வெளியே சிங்கள மக்கள் தமது எதிர்ப்பு கோசங்களை கத்திக் கொண்டிருந்தனர். அக்கால ஊடகங்கங்கள் புத்திஜீவிகள் காறித்துப்பியிருக்க வேண்டும். மாறாக ஜே.ஆரின் புகழ் திடீரென விரிய அவை காரணமாகின. பிக்குகளின் ஆக்கினைக்கு அடிபணிந்த பண்டா ஒப்பந்தத்தை ரத்து செய்ததை தொடர்ந்து திட்டமிட்ட முறையில் தமிழருக்கு எதிரான வன்முறை – பிரச்சாரம் தூண்டிவிடப்பட்டது. அரசாட்சி செய்பவர்கள் மத தலைவர்கள் – பிக்குகள் பல புத்திஜீவிகள் சில ஊடகங்கள் என்று அதிகார மையங்கள் அனைத்தும் ஒருமித்த குரலில் ‘தமிழருக்கு எதிராக நிற்பதில் பிழையில்லை’ என்று துவேசம் பேசிய காலகட்டத்தில் சாதாரன மக்கள் இனத்துவேச கதையாடலுக்கு எடுபட தொடங்கியிருந்தனர். இதை பயன்படுத்தி 1958லேயே தனது பெயரை நிiநாட்டிக்கொண்டார் ஜே.ஆர்

மிகத் திறமையாக இனத்துவேசத்தை வளர்த்தெடுத்த வலதுசாரிகளுக்கு உதவியாக 70ம் ஆண்டு தேர்தலை தொடர்ந்து இடதுசாரிகள் சுக்கலானார்கள். ஜே.ஆர் தலைமையில் 77ம் ஆண்டு மிகப்பெரிய தேர்தல் வெற்றியடைந்த ஜ.தே.க இனத்துவேசத்தை இலங்கை வரலாற்றில் நிரந்தரமாக்கியது. ஆட்சிக்கு வந்த ஆறு ஆண்டுக்குள் தமிழர் ரத்தம் தெற்கெங்கும் ஓடவைத்த பெருமையில் பெரும்பகுதி ஜே.ஆர் ஜ சாரும். இலங்கையின் மிகத்துவேசமான மனிதன் என்று முத்திரை குத்தி இவர்விட்ட தவறுகள் முன்னுக்கு கொண்டு வரப்பட வேண்டும். இந்த கேவலமான இலங்கை ஜனாதிபதியின் கீழ்த்தரமான வரலாற்றை சரியானபடி சிறுவர் பாடத்திட்டத்தில் சேர்த்து இப்படியான போக்கிரித்தனம் எதிர்காலத்தில் நிகழ்வது தடுக்கப்பட வேண்டும்.

1983 – கறுப்பு யூலை –
1983 நடந்த ‘இன’ கலவரத்தை சிங்கள தமிழ் மக்களிடையே நடந்த ‘இனக்கலவரமாக’ சித்தரித்தல் நிறுத்தப்பட வேண்டும். நடந்தது ஒரு இனக்கலவரமல்ல. திட்டமிடப்பட்டு அரசால் தூண்டி விடப்பட்ட காடையர்கள் தெற்கில் வாழ்ந்த தமிழ்பேசும் மக்களின் மேல் நிகழ்த்திய வன்முறையை இனக்கலவரம் என்று சொல்லி இலங்கையின் நீண்டகால சிங்கள தமிழ் இன உறவை கொச்சைப்படுத்துவது பிழை. ஆயிக்கணக்கான மலையக தமிழரின் குடியுரிமை பறிக்கப்பட்டபோதும் சரி – வடக்கு கிழக்கு தமிழர்களின் உரிமைகள் தாக்கப்பட்டபோதும் சரி தெற்கில் ஏராளமான சிங்கள மக்கள் தமிழர் பக்கம் நின்றுள்ளார்கள். தமிழ் தலைமகள் தமிழர் உரிமைகளை கைவிட்ட தருனங்களிற்கூட அவர்கள் தமிழர்களுக்காக குரல் கொடுத்துள்ளார்கள். 83 படுகொலை பற்றிய முழு விசாரணை நடத்தப்பட்டு ஒட்டுமொத்த சிங்கள மக்கள் மேலும் பொறுப்பை போட்டு தப்பும் எமது பொல்லாத தலைமைகளின் போக்கிரித்தனத்தை வெளிக்கொண்டு வரவேண்டும்.

77ம் ஆண்டு தேர்தலில் பெரும்பான்மை தமிழர் தமது வாக்குகளை தமிழர் விடுதலை கூட்டனிக்கு அள்ளிப்போட ஜ.தே.க சிங்கள மக்களின் பெரும்பான்மை வாக்குகளுடன் ஆட்சிக்கு வந்தது. சிங்கள அரசுகளில் முற்றிலும் நம்பிக்கை இழந்திருந்த பெரும்பான்மை தமிழர் தமது எதிர்ப்புகுரலை தெட்டத்தெளிவாக பதிவு செய்திருந்தனர். தமிழர்களின் வாக்குகளின்றி ஆட்சிக்கு வந்தவுடனே ஜே.ஆர் இனத்துவேசத்தில் இறங்கினார். தேர்தல் கலவரத்தில் 300க்கும் மேற்பட்ட தமிழர் கொல்லப்பட்டிருந்தும் அது பற்றி எந்த அக்கறையுமின்றி மிக ஆக்கிரோசமாக பாராளுமன்றத்தில் அமிர்தலிங்கத்தின் கேள்விக்கு பதிலளித்தார்.

‘இப்போது வன்முறையில்லை ஆனால் தேவை வரும்போது வன்முறையை பாவிப்போம் என்று நீங்கள் சொல்லும்போது மற்ற இலங்கையர் என்ன செய்வார்கள் என்று எண்ணுகிறீர்கள்? உங்களுக்கு யுத்தம் வேண்டுமானால் யுத்தம் தருவோம். அமைதி வேண்டுமானால் அமைதி தருவோம். என்றுதான் சொல்வார்கள். இதை நான் சொல்லவில்லை இலங்கை மக்கள் சொல்கிறார்கள்.’ என்று ஜே.ஆர் எரிந்து விழுந்ததை தமிழ் ஊடகங்களும் கூட்டனியும் உடனேயே பிரபலப்படுத்தின. ஜே.ஆர் போருக்கு தயார் என்று அறிவித்தன. ஜே.ஆர் இலங்கை மக்கள் என்று சொன்னது தமிழரை சேர்த்தல்ல. அதேபோல் அவர் சிங்கள மக்களுக்காகவும் கதைக்கவில்லை. அவர் தனது துவேச கருத்தை மக்களின் கருத்தாக கக்குவதை வளக்கமாக கொண்டிருந்தவர் என்பதை சுட்டிக்காட்டி அவர் இராஜினாமா செய்ய வேண்டும் என்று யாரும் கேட்கவில்லை.

அவர் ஆடின கூத்துகள் சாதனைகளாக சிறுவர்களுக்கு பாடத்திட்டங்களில் போதிக்கப்படுவது மிக கேவலமான விசயம். இவரது சாதனைகளிற் மிகமோசமான ஒன்று சர்வாதிகார ஜனாதிபதிமுறையை அறிமுகப்படுத்தி தன்னை முதல் ஜனாதிபதியாக்கி கொண்டது. 79ல் பயங்கரவாதத்தை தவிர்க்கும் சட்டம் என்றொரு மிகமோசமான சட்டத்தை அமுலுக்கு கொண்டுவந்தார். சிறிமா தேர்தலில் பங்குபற்றுவதை தடைசெய்து தனக்கு கட்டற்ற அதிகாரங்களை தருவித்துக்கொண்டது மட்டுமின்றி 82ல் குறுக்குவழியில் தனது அரசின்மேலான தனது கட்டுப்பாட்டை நீட்டினார். ஏகாதிபத்திய சுரண்டலுக்கு சந்தையை திறந்துவிட்டதன் மூலம் தனது மனிதஉரிமை மீறும் செயல்களை மேற்கு அரசுகள் கண்டுகொள்ளாதிருக்கும்படி ஆக்கிக்கொண்டார். இலங்கை பொருளாதார வளர்;சியில் இவரது கொள்கைகள் முக்கிய பங்களித்ததாக ஒரு மொக்குத்தனமான கருத்தும் உலாவி வருகிறது. திறந்த பொருளாதார கொள்கையும் இவர்தொடக்கி வைத்த யுத்தமுமாக சேர்த்து இலங்கையை இன்று உலகின் முக்கிய வறியநாடாக மாற்றியுள்ளது. 77க்கு பிறகு 200 வீதமாக அதிகரித்த அரச செலவுகளை தாக்காட்ட பெரும்பான்மை பணம்’ வெளிநாடுகளில் கடனாக பெறப்பட்டது. பணவீக்கம் அதிகரித்து 82க்குள் இலங்கை ரூபாய் தனது பெறுமதியின் ழூண்றில் ஒரு வீதத்தை இழந்தது. வருமான வரி அதிகரிக்கப்பட்டது. 82க்குபிறகு பொதுசேவை துறைக்கு ஒதுக்கப்பட் பணம் 77ம் ஆண்டிற்கு முந்திய தொகையில் இருந்து 10வீதம் குறைந்ததாக இருந்தது. 82 தேர்தலை ஒட்டி வரி குறைப்புக்காக மேலும் வெளிநாட்டு கடன் வாங்கப்பட்டது. கடனில் ஓடும் மூன்றாம் உலக நாடுகளில் ஒன்றாக இலங்கை மாறிக்கொண்டிருந்தது மக்களுக்கு யாராலும் தெளிவாக தெரிவிக்கப்படவில்லை. விலைவாசி 9 வீதத்துக்கும் மேலாக அதிகரித்தும் (82ல் 38வீதமாக அதிகரித்தது!) இறக்குமதி செய்யப்பட்ட பண்டங்களின் அபரிதத்தால் சிறிமா காலத்து பாணுக்கு வரிசையில் நிற்கும் தேவை ஏற்படவில்லை. குறிப்பிட்ட மத்தியதர மற்றும் முதலாளி வர்க்க வளர்ச்சியும் – அந்த வர்க்கங்களில் இருந்து வந்தவர்கள் ஊடகங்கள் அதிகாரங்களை கைப்பற்றியிருந்தமையும் காரணமாக நாடு கடனில் ஓடினாலும் முன்னேறுவது போன்ற மயக்கம் ஏற்படுத்தப்பட்டது.

தனது சொத்துக்களை பெருக்கி கொண்டிருந்த ஜே.ஆருக்கு ஒரு கவலையும் இருக்கவில்லை. ‘நான் எடுக்கும் அரசியல் தீர்வுகள் சரியோ பிழையோ என்பது பொருட்டல்ல. என்னுடய நடைமுறை பற்றி எனக்கு எந்த வெக்கமுமில்லை…’ என்றும் தான் முன்பு குத்துச்சண்டை செய்ததைபோல் கணக்கு பாத்து இயங்குவதாகவும் 81ல் நியூ இன்டர்நசனலுக்கு வழங்கிய பேட்டியில் பினாத்தியிருந்தார் ஜே.ஆர். தனது போக்கிரிதனங்களை சமூக சேவையாகவும் தேசியநலனாகவும் காட்ட தொடர்ந்து தமிழருக்கு எதிரான போக்கை கடைப்பிடித்து வந்தார். கறுப்பு யூலைக்கு முதலே தெற்கில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து தமிழர்கள் மேலான தாக்குதல் நிகழ்ந்துந்தது. உலகின் சில மனிதஉரிமை நிறுவனங்கள் இவற்றை பற்றி அரசக்கு எழுதிய பிறகும்கூட எதுவும் நடக்காததுபோல் பாவனைசெய்துகொண்டது வலதுசாரி அரசு.

திருநெல்வேலியில் யூலை 23ல் புலிகள் ஆமி டிரக் ஒன்றை தாக்கி அதில் வந்த 13 இராணுவத்தினரையும் கொன்ற செய்தி நாடெங்கும் பரவமுதலே 50க்கும் மேற்பட்ட தமிழர்களின் உயிரை எழுந்தமானமாக சூறையாடியிருந்தது இலங்கை இராணுவம். இத்தருணம் பற்றி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிறிசேனா குறே எழுதியிருந்த சுயசரிதையில் வரும் பகுதி பல ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டு பிரபலமான ஒரு விடயம். இறந்த 13 இராணுவத்தினரும் கொழும்பை சேர்ந்தவர்கள் இல்லை என்று சொல்லி அவர்களை கொழும்பு கொண்டுவர தேவையில்லை எனவும் தேசிய மரியாதையுடன் அவர்தம் இறுதிசடங்கை நிகழ்த்துவதானது இருக்கும் பதட்ட சூழ்நிலையை மேலும் அதிகரிக்கும் என தானும் அந்நாள் பிரதம மந்திரி பிரேமதாசாவும் வாதாடியதாக அவர் எழுதியுள்ளார். உடல்கள் எரிக்கப்பட இருந்த இடத்தில் பெரும் ஓப்பாரி வைக்க என திட்டமிடப்பட்ட அனுப்பப்பட்ட குழு ஒன்று மரணச்சடங்கு நிகழும் இடத்தில் காத்திருந்ததையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தருணும் பிரேமதாசாவுடன் கட்சி தலைமைக்கு போட்டிபோட்ட சிறில் மாத்தியு திட்டமிட்ட முறையில் காடையர் குழுவொன்றை தயார் நிலையில் வைத்திருந்தமையையும் அவர்கள் தமிழர் வாழும் இடங்களை கோடிட்ட வாக்காளர் பட்டியலை வைத்திருந்தமை பற்றியும் இந்தியா டுடே செய்தி வெளியிட்டிருந்து. வன்முறைகளில் ஈடுபட்ட பலரை ஜ.தே.க க்கு வேலை செய்தவர்களாக பலர் அடையாளம் கண்டு சொல்லியிருந்தனர். அத்தருணம் உல்லாசபயண நோக்கிலும் பல்வேறு காரணங்களுக்காகவும் தங்கியிருந்த மேற்கத்தேயர் பலர் தமது நேரடி அனுபங்களை பதிந்துள்ளனர். இந்த படுகொலை நடவடிக்கையில் பாதிக்கப்பட்டு தப்பிய பலர் தமது அனுபங்களை பதிந்துள்ளனர். இவைகளை தொகுப்பவர்களுக்கு இந்த தாக்குதல் எவ்வளவு தூரம் திட்டமிடப்பட்டு நிகழ்த்தப்பட்டிருக்கிறுது என்று தெரியும்.

இத்தருணத்தில் அங்கு தங்கியிருந்த நமது நண்பர் கிறிஸ் நியூபியின் தாயாரை சந்திக்கும் வாய்ப்பு இரண்டு வருடங்களுக்கு முன்பு எனக்கு கிடைத்தது. தமது கணவர் இறந்த சோகத்துடன் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு அரசியல் நிகழ்வில் கலந்துகொண்ட அவர் தனது கணவரின் நினைவுக்காக இலங்கை பற்றிய உரையாடலில் கலந்துகொள்ள வந்திருப்பதாக தெரிவித்தார். நாங்கள் எமது தமிழ் நண்பர்களை காப்பாற்ற செயற்பட்டபோது எமது சிங்கள நண்பர்கள் எமக்கு உதவினர் என்று நிதானமாக பேச தொடங்கிய அவர். இருபது வருடங்களுக்கு பிறகும் வடு ஆறவில்லை – வரும் அழுகையை தடுக்க முடியவில்லை என்று உணர்ச்சி பொங்கி தான் கண்டவற்றை விபரித்ததார். தமிழர்களின் விலாசம் தேடி வந்த காடையர் பற்றி தெளிவாக சொன்னார் அவர். நாங்கள் இலங்கை பிரசைகளாகதான் வாழந்தோம் – இலங்கையர்களாக எமது வாழ்நாளை கழிக்க இருந்த நாம் எமது தமிழ் நண்பர்களுக்கு நடந்த கொடுமை தாங்க முடியாமற்தான் இங்கிலாந்து திரும்பிவந்தோம். அதன்பிறகு இலங்கை திரும்பவில்லை என்று அழுதபடி கூறினார் அவர். அவர் கண்ட கோரங்கள் அவரது நினைவில் இன்றும் அழியாதிருப்பதை உணர முடிந்தது.

11 ய+லை 83ல் டெய்லி டெலிகிரபுக்கு வழங்கிய பேட்டியில் ஜே.ஆர் வெளிக்காட்டிய மனநிலை பின் நடந்த சம்பவங்களை புரிந்துகொள்ள உதவும்.

‘தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி எனக்கு கவலையில்லை… தற்போது நாம் அவர்களகளுடய கருதi;த பற்றியோ உயிர் பற்றியோ அக்கறை எடுக்க முடியாது…நாம் எவ்வளவு தூரம் வடக்கில் தமிழருக்கு அழுத்தம் கொடுக்கிறோமோ அவ்வளவுக்கு இங்கு சிங்கள மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்… உண்மையில் நான் தமிழரை பட்டினிபோட்டால் சிங்கள மக்கள் சந்தோசப்படுவார்கள்.’

ஒரு நாட்டின் ஜனாதிபதி தனது பிரசைகளை பற்றி கதைத்த கதை இது. தமிழ் மக்களுக்கு மேல் வெறுப்பை வாரிக்கொட்டியது மட்டுமின்றி தமிழரை கொன்றால் சிங்களவர் சந்தோசப்படுவர் என்று ஒட்டுமொத்த சிங்கள மக்களையும் மிகவும் கீழான முறையில் கேவலப்படுத்தியிருந்தார் அவர். இதற்கு சில நாட்களின் பிறகு தெற்கில் இரத்த ஆறு ஓடியது.

வெலிக்கடையில் 53 கைதிகள் கோரமாக கொல்லப்பட்டனர். 3000 – 15000 க்கும் மேற்பட்ட தமிழர் படுகொலை செய்யப்பட்டனர். இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உடைக்கப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் வேலை தளங்கள் தாக்கப்பட்டன. ஏராளமான கடைகள் உடைக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான மில்லியன் ரூபாய் பெறுமதியான நஸ்டம் ஏற்படுத்தப்பட்டது. ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வேலையிழந்தார்கள். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக்கப்பட்டார்கள். வெறியாடிய காடையருக்கு மதுபானமும் பயனிக்க அரச வாகனங்களும் வழங்கப்பட்டதை பல செய்தி நிறுவனங்கள் வெளிக்கொண்டு வந்துள்ளன. இக்காடையர் திங்கட்கிழமை துவங்கிய கூத்தில் வறிய பல சிங்கள மக்களும் அடுத்த அடுத்த நாட்களில் இணைந்து கொண்டதும் சொத்துக்களை சூறையாடியதும் பதியப்பட்டுள்ளது.

கொழும்பெங்கும் படுகொலை நடந்து கொண்டிருந்த பொழுது ‘சிங்கள மக்களுக்கு தேசிய அளவில் மரியாதை கொடுக்க வேண்டியதை உணரும் தருணம் தற்போது வந்துள்ளது’ என்று சொல்லிவிட்டு விசேட பாதுகாப்பு காவலருடன் தனது ஜனாதிபதி மாளிகைக்கு ஒய்வெடுக்கப் போய்விட்டார் ஜே.ஆர். 24 மணிநேரத்தின் பின் -பெரும்பான்மை தாக்குதல்கள் நிகழ்ந்து முடிந்த பின்தான ஊரடங்கு சட்டம் கொண்டுவரப்பட்டது. அதுவும் தமிழர் தப்பி ஒடுவதை தடுக்க பாவிக்கப்பட்டதே அன்றி இராணுவத்தினதோ அல்லது காடையரதே தாக்குதல்களை கட்டுப்படுத்தவில்லை. நான்கு நாட்களாக மௌனத்தில் – ஓய்வில் இருந்த மேன்மைதகு ஜனாதிபதி அவர்கள் மௌனம் மீட்டு வழங்கிய பேச்சு இலங்கை வரலாற்றில் மிக மிக கேவலமான ஒரு தருணமாக இன்றும் இருக்கிறது.

‘இது சிங்கள காடையரால் அல்ல சிங்கள மக்களால் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்’ என்று கொலையை நியாயப்படுத்திய அவர் ‘சிங்கள மக்களுக்கு மரியாதை தர வேண்டிய தருணம் தற்போது வந்துள்ளது’ என்று அறிவித்து கொண்டார். அதே தருணம் அதே தொலைகாடசி சேiயில் அத்துலக் முதலி கலவரத்தின் காரணமாக சிங்கள மக்கள் உணவு வாங்க வரிசையில் நிற்க வேண்டியிருப்பதையிட்டு அழுதார்! தீவிரவாதிகளின் செயலாள் சிங்கள மக்கள் கோபப்பட்டு விட்டார்கள் என்று வாதாடிய ஜே.ஆர். இனத்துவேச கருத்துக்களை கக்கினார். மேலும் வன்முறையை தூண்டும் முகமாக புலிகள் கொழும்புக்குள் ஊடுருவி விட்டார்கள் என்ற வதந்தி அடுத்தநாள் பரப்பப்பட்டது.

இராணுவத்தின் மேற்பார்வையில் திட்டமிட்ட முறையில் இத்தாக்குதல் நிகழ்த்தப்பட்டது என்பதை அன்றே ஊடகங்கள் வெளிப்படுத்தியிருந்தன. அரச தரப்பிற்கூட பலர் இதை வெளிப்படையாக சொல்லியிருந்தனர். தகவற்துறை அமைச்சராக இருந்த…. யூலை 25ல் கார்டியனுக்கு வழங்கிய பேட்டியில் இது திட்டமிடப்பட்டு – ஒரு குழுவால் நிகழ்த்தப்பட்ட செயல் என்பதை ஒத்துக் கொண்டிருந்தார். இந்த செயலை செய்தவர்கள் திட்டமிட்ட முறையில் தாக்குதல்களை செய்தததையும் அவர்கள் கடைகளுக்கு தீவைத்த போதும் களவெடுப்பதில் மினக்கெடாது அடுத்த தாக்குமிடத்துக்கு நகர்ந்ததையும் பின்னால் எடுபட்டு வந்தவர்கள்தான் களவுகளில் ஈடுபட்டதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்தியா இங்கிலாந்து என்று வெளிநாடுகள் எங்கும் ஊடகங்களில் இலங்கை அரசின் பங்கு வெளிக்காட்டப்பட்டிருந்தது. மனித உரிமைவாதிகள் அமைப்புகள் உலகெங்கும் படுகொலையை கண்டித்தன. இருப்பினும் அரசுக்கு வழங்கப்பட்ட அழுத்தம் விசாரிப்புக்கான கோரிக்கை மட்டுப்படுத்தப்பட்டளவிலேயே இருந்தது. சிறிமாவோ காலத்தில் இவ்வாறு நடந்திருந்தால் இடதுசாரி அரசின் கோரத்தனம் என்று உலகின் கண்டனம் மேலும் கடுமையாக இருந்திருக்க வாய்ப்புண்டு. பல துறைகளை அரசமயப்படுத்தியது மாத்திரமின்றி பொருளாதார சமூக மேம்பாட்டு நடவடிக்கைகள் சிறிமாவோ காலத்தில் கூடுதலாக நடந்தது என்பதை மறுக்க முடியாது. ஜே.ஆர் வந்த பிறகு எல்லாம் தலைகீழாக கவிழ்க்கப்பட்டு இன்று பட்டினியால் மக்கள் சாகும் கட்டத்தில் வந்து நிற்கிறது நாடு.

சுருக்கம் கருதி ஜே.ஆரை மையமாக வைத்து சிங்கள – பௌத்த இனத்துவேச அரசை பற்றியும் 83 படுகொலை பற்றியும் இங்கு வைக்கப்பட்டுள்ள குறிப்புகள் மிக சொற்பமானவை. இதற்கு பின்னால் இருந்த உலக வர்த்தக அபிலாசைகள் – பிரந்திய அக்கறைகள் – வலதுசாரிய பலத்தின அல்லது வளர்ச்சியை இலகுபடுத்திய சமூக பின்னனி – உலக வர்க்க உணர்வுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் என்று இங்கு அலசப்படாத பல காரணிகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இது பற்றி முடிந்தவர்கள் எழுதவேண்டும்.

தற்போது ஜே.ஆர் அரசுக்கு எந்தவிதத்திலும் குறையாத – பார்க்கப்போனால் இன்னும் கோரமான – இனத்துவேச அரசு ஆட்சியில் இருக்கிறது. இன்னுமொரு 83 கறுப்பு யூலை நடந்தால் ஆச்சரியப்பட முடியாதபடி கெடுபிடிகள் நடக்கின்றது. 1974ல் பாராளுமன்றத்தில் பேசும்போது ‘இன்ற அரசு சிறிமா அவரது பிள்ளைகள் மருமக்கள் என்று குடும்ப அரசாக மட்டுமிருக்கிறது’ என்று ஜே.ஆர் அன்று சொன்னதுபோல் தற்போதய அரசு மகிந்த மற்றும் மகிந்தவின் சொந்தங்’கள்’ என்று குடும்ப அரசாக இருக்கிறது. இத்தருணத்தில் சிங்கள – தமிழ் மக்களின் ஒருமித்த போராட்டத்தை முன்னெடுப்பது இந்த இனத்துவேசத்தை வெட்டிச்செல்ல அத்தியாவசியமாக இருக்கிறது. இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை வர்க்க உணர்வு அடிப்படையில் ஒண்றினைப்பதுதான் இலங்கையை விடுதலை பாதையில் நகர்த்திச்செல்ல ஒரே வழி.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *