அ.மார்க்ஸின் ‘ஆரியக் கூத்து’ – நூல் விமர்சனம்:

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடிகள் பற்றிய கண்டறியாத கதையாடல்களின் மிதப்பால் எம் தலை கனக்கிறது. ஜெர்மனிய பாசிசம் இந்துத்துவப் பாசிசம் சிங்கள இனத்துவேசம் என்று கண்ணை மூடிக்கொண்டு ஆதிக்கம் தம் நலிந்த தர்க்கம் கொண்டு எம் தலைகளில் இடிக்கிறது. இந்த வரிசையில் திராவிட தேசியமும் இணைக்கப்பட வேண்டியதே. திராவிடம் என்ற கட்டுக்கதையை காவிக் கொண்டு இன்று தமிழ் நாட்டில் லட்சாதிபதிகளாயும் கோடீஸ்வரர்களாயும் லாபம் ஈட்டிக் கொண்டிருக்கும் தமிழ் கூட்டங்கள் மேற்கூறிய ஒடுக்குமுறை வரிசைக்கு ஒன்றும் பின்தங்கியவை அல்ல.

திராவிட தேசியமும் திராவிட இனத்துவமும் ஏழை/விளிம்பு மக்களுக்கு ஒரு சதத்திற்கும் உதவாது என்பதை அழுத்தம் திருத்தமாக கூறும் அதே தருணத்தில் இன்று இந்தியாவில் மிகமிக முக்கியமாக ஓரங்கட்டப்பட வேண்டியிருப்பது அளவுக்கதிகமாக நடந்துகொண்டிருக்கும் ஆரியக்கூத்து என்பதை நாம் வலியுறுத்த வேண்டியுள்ளது. பச்சைப் பொய்யும் புரட்டும் சுரண்டலும் கொண்டு ஏற்கனவே ஒடுங்கி நாடி வதங்கிப் போயிருக்கும் பெரும்பாலான ஏழைத் தலித்துக்களின் தலைவிதியை தங்கள் கைகளில் வைத்து உருட்டி விளையாட இவர்கள் இன்னமும் திட்டம் தீட்டுகிறார்கள்.

பிராமணியத்தின் கொடுமை இன்றைக்கு நேற்று உருவானதல்ல என்று எமக்குத் தெரியும். ஆனால் இந்துத்துவ சக்திகள் வெளிநாட்டு ஆதரவுடன் வெளிப்படையாக செய்யும் அட்டூழியம் கொஞ்ச நஞ்சமல்ல. இதை ஒத்தூத சில பிராமணர் இல்லாத ஆதிக்க சக்திகளும் இன்று வெளிப்படையாக கிளம்பியிருப்பது கவனிக்கப்பட வேண்டியது. யாழ்ப்பாணத்து வசதிபடைத்த வெள்ளாளரும் வெளிநாட்டு முதலாளிகளும் இன்று கண் சிமிட்டிக் கொண்டு சிரித்துக் கொண்டு இந்தியா வருகிறார்கள். அடிக்கிற கொள்ளையில் அஞ்சோ பத்தோ தந்தால் போதும் நானும் ஆடுவேன் ஆரியக் கூத்தென்று இவர்களும் கூட்டுச் சேர்ந்துள்ளார்கள். பசுத்தோல் போர்த்தி தலித் இறைச்சி உண்ட காலம் போய் இன்றைக்கு வெளிப்படையாகவே ஒடுக்கப்பட்ட ஏழை மக்களுக்கு எதிராக இவர்கள் இயங்குகிறார்கள். இதற்கு தலித்துகள் மத்தியில் இருந்து கிளம்பியிருக்கும் எதிர்ப்பும் ஒரு காரணம்.

தமிழ் நாட்டில் இன்று பிராமணியத்துக்கு எதிராக கிளம்பியிருக்கும் போராட்ட இயக்கத்தின் வெக்கையில் வெந்த இந்த பிராமண நஞ்சுகள் எந்தவித கூச்சமும் இன்றி வெளிச்சத்தில் வைத்து விசத்தை துப்புகிறார்கள். இந்த குறை மனிதர்களை இன்று சிரமமின்றி அடையாளம் காண முடிகிறது.

இந்த ஆரியக்கூத்துக்கு தத்துவார்த்த சமூக விஞ்ஞான பொருளாதார முற்போக்குத்தனங்கள் என்று எதுவுமில்லை. இருப்பினும் சில கத்துக்குட்டி முனைவர்கள் பேராசிரியர்கள் பொறுக்கிகள் என்று மூக்கைப் பொத்தினால் வாயைத் திறக்கத் தெரியாதவர்கள் எல்லாம் கதையாடல்களில் இறங்கியுள்ளது மிகக்கேவலம். இவர்களுக்கு செம்மை அடி கொடுப்பது சுலபமான விடயம். அ.மார்க்ஸ் சிரமப்படாமல் அந்தப்பக்கம் பார்த்து ஒரு சவுக்கை வீசியிருக்கிறார். இன்றைக்கு இருக்கும் இக்கட்டான சூழ்நிலையில் இவர்கள் மேல் தொடர் தாக்குதல் செய்வது அவர்களின் குழந்தைப்பிள்ளைக் கருத்துக்களைத் தவிடு பொடியாக்குவது கட்டாய தேவையாக உள்ளது. ஆரியக்கூத்துப் போல் ஆயிரம் புத்தகம் வரவேண்டியுள்ளது.

பிராமணியத்திற்கு எதிரான அடிதடிகளுக்கு அ.மார்க்ஸ் புதியவரல்ல. பெரியாருக்கு பின்பு மழுங்கடிக்கப்பட்டுக் கொண்டிருந்த தலித் போராட்டத்துக்கு இன்று தமிழ்நாட்டில் மீண்டும் உயிர் கொடுக்க முன்னணியில் நிற்பவர்களில் அவர் ஒருவர். அ.மார்க்ஸ் எப்படி தன் கருத்துக்களை வைக்கிறார் என்பது பற்றி பல்வேறு விதமான துவேசங்கள் குட்டிக் கதைகள் நடமாடி வருகின்றது. இதற்குள் எழும்பும் சில நியாயமான கேள்விகளில் ஆங்கிலப் புத்தகங்களைப் படித்துவிட்டு சுருக்கி ஒரு கட்டுரை எழுதிவிடுகிறார் என்பதும் ஒன்று. இன்றிருக்கும் சூழலில் எப்படி எழுதினால் தான் என்ன? இருப்பினும் ஆரியக் கூத்தை எதிர்ப்புத் தெரிவித்த ஆங்கிலக் கட்டுரை ஆசிரியர்களுக்கு அர்ப்பணித்தது மட்டுமன்றி ஆதாரபுர்வமான தகவல்களுடன் மிகவும் கவனமாக எழுதியுள்ளார் அ.மார்க்ஸ்.

எம்மைப் பொறுத்தவரையில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பது தான் எமக்கு முக்கியம். ஆதிக்க சக்திகளுக்கு எதிராக ஒடுக்கும் வர்க்கத்துக்கு எதிராக யார் எப்படிப்பட்ட வித்தைகளைப் பாவித்தாலும் எமக்கு கவலையில்லை. முடிந்தால் நீங்களும் எழுதுங்கள் எங்களுடன் சேர்ந்து. சுரண்டலுக்கு எதிராக கிளம்புங்கள். பாராட்டி தலையில் வைத்து கொண்டாடுவோம். உமக்கு மத்தியில் பெரும்பான்மையான மக்கள் பட்டினியாலும் அநாவசிய அடக்குமுறையாலும் செத்து அழிந்துகொண்டிருக்கும் பொழுது நாற்காலி வாதம் பேசிக்கொண்டிருக்க நமக்கு நேரமில்லை.

ஆதிக்க வர்க்கம் கட்டமைக்கும் பிரமைகளை உடைப்பதற்கு அ.மார்க்ஸ் செய்யும் எழுத்தோ நடையோ நடனமோ உதவியாக இருக்கும் பொழுது அதற்கு கண்மூடி ஆதரவு கொடுக்கும் உங்கள் பார்வையில் முட்டாள் ஆக இருக்கவே நாம் விரும்புகின்றோம். அந்தச்சூட்டில் அ.மார்க்ஸ் வெளியிட்டிருக்கும் புத்தகம் மிக முக்கியமான புத்தகம் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் என்று கூறுகிறோம். ஆரிய புத்தியில்லா ஜீவிகளின் திருகுதாளங்கள் சிந்துவெளி நாகரீகத்தைச் சூறையாட அவர்கள் படும்பாடுகள் முதற்கொண்டு இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் நடக்கும் பிராமணியச் சூழ்ச்சிகள் பல்வேறு தகவல்களை சுருக்கி சுவைபடத் தந்துள்ளார் அ.மார்க்ஸ். இதை படிக்க விரும்புபவர்கள் பின்வரும் விலாசத்தில் எதிர்வெளியீட்டை தொடர்பு கொள்ளலாம்.

எதிர்வெளியீடு, 305, காவல் நிலையம் சாலை, பொள்ளாச்சி 642 001, இந்தியா
தொலைபேசி (04259) 226012 மின்னஞ்சல் : ethirveliyedu@sify.comethirveliyedu@sify.com
இங்கிலாந்தில் பெற்றுக்கொள்ள : சேனன் : Tp+ senan@hotmail.comsenan@hotmail.com

இந்தியாவுக்கு வெளியே அதிகளவு இந்தியர்கள் வாழும் இடமான இங்கிலாந்திலும் இதைப் படிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இங்கும் இடம்பெயர்ந்த பிராமணியம் ஆதிக்கத்தை நிறுத்தவில்லை. பிராமண கிளப்புகள் ஹரேகிருஷ்ணா கோஷ்டிகள் பல்வேறு வகை சாமியார்கள் சுத்த சைவ சாப்பாட்டுக் கடைகள் என்று பிராமணிய மேலாண்மையை இந்தியக் கலாச்சாரமாக இங்கு கட்டியெழுப்பியுள்ளார்கள். இங்கிலாந்து ஆதிக்க ஆளும் வர்க்கம் எதுவித எதிர்ப்பும் இன்றி இந்துத்துவ மேலாண்மை கட்டமைப்பை ஏற்றுக் கொள்வதோடு மட்டுமின்றி அதை ஊக்குவித்தும் வருகிறது. இங்கு பாடசாலைகளில் மதம் பற்றிய புத்தகங்களில் இந்துமதம் பற்றி கற்பிக்கப்படுவதெல்லாம் மேலாதிக்க தன்மை உள்ளனவாகவே உள்ளது.

இங்கிலாந்து இளவரசன் (21ம் நூற்றாண்டிலும் இப்படி எழுத கை கூசுகின்றது) சார்லஸ் மற்றும் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று ஆளும் வர்க்கம் மாலை அணிந்து இந்துக் கோயில்களில் இடைக்கிடை வலம் வருவதன் மூலம் இங்கிலாந்து வாழ் இந்திய மக்களை வழிக்கு கொண்டு வந்து விட முடியும் என்று நம்புகின்றனர். அதற்கேற்றாற் போல் இங்கிருக்கும் இந்துக் கோயில்களின் தொகை கொஞ்சநஞ்சமல்ல. இங்கு கோயில் வியாபாரம் லாபமீட்டும் ஒரு பெரிய வியாபாரமாக வளர்ந்து வருகின்றது. கோயில் தொடங்கும் போது அதை ஒரு வியாபாரமாக பதிவுசெய்து பின் அதை லாபகரமானதாக முன்னேற்றி அறாவிலைக்கு விற்பது சகஜமாக நடக்கிறது. எல்லாக் கோயில்களும் பிராமணர்களாலும் ஆதிக்க வெள்ளாளர்களாலுமே நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. இதில் வரும் லாபத்திற்காக அடிபடும் உயர்சாதி தமிழர்களின் அட்டகாசம் அதிகரித்துக் கொண்டே போகின்றது. லண்டனில் சில கோயில்களில் ஐயர்மார் பெண்களுடன் விடும் சேட்டைகள் எல்லோருக்கும் தெரிந்ததே.

பல வருடங்களுக்கு முன்பு நான் நங்கநல்லூரில் இருந்த போது அருகில் இருந்த ஒரு கோயில் ஐயருக்கும் எனக்கும் அடிக்கடி பிரச்சனை வரும். என்னை அவர் காணும் போதெல்லாம் கோயிலுக்கு வரும்படி கட்டாயப்படுத்துவதும் கதைக்கும் போது அவர் கூறும் முட்டாள் வாதங்களும் தான் எனக்கும் அவருக்கும் பிரச்சனை வருவதற்கு காரணம். அவர் தன் மனைவியை அடித்து துன்புறுத்துவதாகவும் அயல் வீடுகளில் உள்ள பெண்களுடன் அவர் சேட்டைகள் விடுவதாகவும் கேள்விப்பட்டு நாம் அவருடன் கதைப்பதையே நிறுத்திவிட்டோம். பின்னர் இதே ஐயர் எப்படியோ ஒரு வழியாக லண்டன் வந்து சேர்ந்து முருகன் கோயிலில் பூசை செய்கிறார் என்று கேள்விப்பட்டதும் எமக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவர் இங்கும் கோயிலில் ஐயராக இருந்து கொண்டு தனது லீலைகளை தொடர்ந்திருக்கிறார். இறுதியில் முறையாக ஒரு பெண்ணிடம் மாட்டிய இவர் கற்பழிக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு இன்று கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றார். இவர் ஒரு உதாரணம் மட்டுமே. இது போல் கம்பி எண்ண வேண்டியவர்கள் நிறைய பேர் இன்னும் வெளியில் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.

அர்ச்சகர்களின் பாடு இப்படியிருக்க இங்கு இலங்கைத் தமிழர்கள் மத்தியில் புசையில் ஈடுபடாத ஒரு ஐயரும் உலாவி வருகிறார். பத்மநாப ஐயர் என்ற இந்த ஐயர் இலக்கியத்துக்கான சர்வதேச பரிசு ஒன்றை கனடாவில் பெற்றவர். ஆனால் இவரது நீண்ட கால இலக்கிய வரலாற்றில் இவர் ஒரு இலக்கியமும் படைத்ததில்லை. இலக்கியம் எதுவும் படைக்காமல் இலக்கியவாதியாக உலாவும் ஒரே ஒரு நபர் இவர் தான். இவர் மேல் அன்பும் பண்பும் கொண்டு பல்வேறு முன்னணி அரசியல் நிர்வாகிகள் ஆளுமைகள் அவர் பற்றி கண்ணியமான கருத்துக்களை வைக்கின்றனர். எமக்கு காதல் சார்ந்து சிந்தித்தல் வராது என்றபடியால் இவர்மேல் கடும் விமர்சனம் வைக்கும் துணிவு உண்டு. இவர் ஐயர் என்ற பெயரை பாவிப்பது பற்றி ஏற்கனவே பல தடவை நாம் விமர்சித்துள்ளோம். லண்டனில் நடந்த பல கூட்டங்களில் பங்குபெற்று உரையாடும்படி பல தடவைகள் கேட்டிருந்தோம். அவர் மறுத்துவிட்டார். புலிக்கு மிஞ்சி வேறு எந்த விலங்கினத்திலும் நம்பிக்கை அற்ற இந்த சைவக்காரரின் உட்கிடப்பு கடந்த இலக்கியச் சந்திப்பு நடந்த போது கொஞ்சம் வெளிவந்தது.

இலக்கியச் சந்திப்பு நடத்தியவர்கள் அதற்காக சிலரை இலங்கையில் இருந்து அழைக்க முடிவு செய்திருந்தார்கள். அதில் ஒருவர் பௌசர். இதை அறிந்த ஐயர் மனித உரிமைகளை மீறிய பௌசரை அழைக்கக் கூடாது என்று கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார். அதற்காக நிதர்சனத்தில் வாசித்த சில செய்திகளை காரணங்களாக சுட்டிக் காட்டினார். ஆனால் அவர் எதிர்ப்புக்குப் பின்னால் இருந்தது முஸ்லீம் எதிர்ப்புணர்வு என்பது பலரும் அறிந்ததே. முஸ்லீம் எதிர்ப்புணர்வு என்ற புயல் கிளம்பியவுடன் இவரது படம் ஒன்றை தமிழர் தகவல் வெளியிட்டு பிரபலப்படுத்தியது. அதில் அவர் படுத்துக் கொண்டு இஸ்லாம் புத்தகம் வாசித்துக் கொண்டிருக்கிறார்.

புத்தகத்தில் இஸ்லாம் என்று எழுதியிருப்பது படத்தில் தெளிவாகத் தெரிந்தது. ஆக்கப்புர்வமான அறிவுள்ள புத்தகங்களை படிக்க மறுப்பவர் ஐயர் என்பது அவர் நண்பர்களுக்குத் தெரியும். அண்மையில் இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் குறிப்பிடத்தக்க இதழான தேசத்தை தான் இனிமேல் படிக்கமாட்டேன் என்று தன் நண்பர்களுக்கு அறிவித்திருக்கிறார். இந்தியப் பார்ப்பனருடனும் (காலச்சுவடு etc) இலங்கை இலக்கிய அரசியல் ஆதிக்க சக்திகளுடனும் நல்ல உறவைப் பேணும் இவரை நாமும் தடுத்தாற் கொள்வோம்.

இவர்கள் எல்லாம் இலங்கை இந்தியா மட்டுமின்றி அவர்கள் வாழும் இங்கிலாந்திலும் நடக்கும் ஒடுக்குமுறை அட்டூழியங்கள் பற்றி அக்கறையற்றவர்கள். இங்கு ஆசிய ஏழைகள் படும் துன்பம் பற்றி துளியும் அறிவற்றவர்கள். இங்கு தலித்தியத்திற்கான தேவை இல்லை என்றும் வாதாடுகிறவர்கள்.

இவ்விடத்தில் எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வேண்டியுள்ளது. சரேய் பல்கலைக்கழகத்தில் நடந்த ஆசிய மாணவர்களின் ஒன்றுகூடல் ஒன்றில் எனக்கொரு வடக்கிந்திய மாணவர் அறிமுகமானார். அவரை பல்வேறு தடவைகள் இதுபோன்ற கூட்டங்களில் சந்தித்த நான் ஒரு தடவை அவரின் குடும்பம் பற்றி விசாரித்தேன். அவர் ஒரு தலித் ஆக இருந்தமையினால் நான் கேட்காமலேயே பேச்சு தலித்துக்கள் பற்றி தாவியது. இங்கிலாந்திலே பிறந்து வளர்ந்த அவர் தான் முதன் முதலாக இந்தியா சென்ற போது தனக்கேற்பட்ட அவமானம் திரும்பிவந்த பின்பு தான் புதிதாக அவதானிக்கத் தொடங்கிய ஒடுக்குமுறைகள் எல்லாம் சொல்லி அழுதார். மிகவும் இளவயதிலேயே அவர் மேல் அநாவசியமாக திணிக்கத் தொடங்கி இருந்த அதிகாரம் வளரவளர இன்னும் எப்படி எல்லாம் அவரை வாட்டப் போகிறது என்று எண்ணி நானும் வாயடைத்துப் போனேன். ஐயர்மாரால் இவருக்கு ஆறுதல் சொல்ல முடியுமா?

இங்கிலாந்து மேலாதிக்க கலாச்சாரத்துக்கு இந்துத்துவ மேலாதிக்கம் கேட்காமல் கிடைத்த வரம். எந்தவித எதிர்ப்புச் சக்தியுமற்ற பிராமணத்துவம் ஒடுக்கப்படுபவர்களுக்காக கதைத்து அவர்களுக்கு பிரச்சனை உண்டாக்கப் போவதில்லை என்பது அவர்களுக்குத் தெரியும். தகுதியற்ற பல பிராமணர்கள் இந்த சமரச பண்பு காரணத்தால் மட்டுமே பல்வேறு தலைமைப் பொறுப்புக்களில் இருக்கிறார்கள்.

இந்தியர்கள் சார்ந்த ஊடக உரையாடல்களுக்கு இவர்களை அழைப்பது இவர்களிடம் கொள்கை நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை பெறுவது மூலமாக இங்கிலாந்து பொதுக்கலாச்சாரத்துக்குள் உயர்த்தப்பட்ட இந்த உயர் சாதியினரை வைத்துக் கொண்டு முழு ஆசிய குறிப்பாக இந்திய சமுதாயத்தையுமே கட்டி ஆழலாம் என்று ஆதிக்க வர்க்கம் கனவு காணுகிறது. ஹிந்து கவுன்சில் UK (Hindu council UK) என்னும் அமைப்பில் இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து பிராமணர்களையும் இந்த சமரச ஆதிக்க ஒன்றுபடலுக்கு உதாரணமாக காட்டலாம்.

இலண்டன் குண்டுவெடிப்பிற்கு பிறகு தீவிரவாதத்துக்கு எதிரான என்ற பாசாங்கில் இங்கிலாந்து அரசு பல அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது. சமீபத்தில் தீவிரவாதத்துக்கு எதிரான நடைமுறைகள் பற்றிய விவாதம் ஒன்றை ஒழுங்கு செய்திருந்த இங்கிலாந்து காவல்துறை தலைமையகம் எல்லா மதத் தலைவர்களையும் பேச அழைத்திருந்தது. (இங்கிலாந்து வாழ் ஆசிய ஆப்பிரிக்க சிறுபான்மையினரை கட்டுப் பாட்டில் வைத்திருக்க ஆதிக்க சக்திகள் படும்பாடும் அவர்கள் உபயோகிக்கும் உத்திகள் பற்றியும் இன்னுமொரு கதையில் விபரமாக பார்ப்போம்)

சுராஜ் சேகல் (Suraj Sehgal) ‘தீவிரவாதம் பற்றிய இந்துத்துவ கருத்துக்கள்’ என்ற கருத்தில் பேசிய இவர் 9.11 (நியுயோர்க் குண்டுவெடிப்பு) 7.11 (லண்டன் குண்டுவெடிப்பு) போன்ற தீவிரவாத நடவடிக்கைகளை நிறுத்தி அந்த நடவடிக்கைகளுக்கு எதிராக காவல்துறைக்கு உதவுவது இங்கிலாந்து வாழ் முஸ்லீம் மக்களின் கடமை என்றார் (!!). இவர் கூறியவற்றில் சிலவற்றை இணையத்தில் இருக்கும் அவரது வாக்குமூலத்தின் படி கீழே தருகிறோம்.

1. தீவிரவாதத்தை ஆதரிக்கும் மதம் மதமல்ல அது வெறும் கருத்து மட்டுமே.

2. தீவிரவாதம் முஸ்லீம்கள் சார்ந்த பிரச்சனை. ஒரு ஈயைக் கூட கொல்ல மறுக்கும் இந்து மதத்திற்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

3. ஏஷியன் என்ற சொல்லை பொதுப்படையான சொல்லாக பயன்படுத்த வேண்டாம். ஏனென்றால் ஏஷியன் என்ற சொல் தீவிரவாதத்தால் பாதிக்கப்படும் இந்துக்களையும் சேர்த்த
சொல்லாக இருக்கிறது.

4. இந்த நாட்டுக்கு தங்களை மேம்படுத்த வந்தவர்கள் இந்த நாட்டின் பொருளாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் படி நடந்தால் அவர்கள் இங்கு வாழ அனுமதிக்கப்படக் கூடாது.

5. இங்கு Criminalகளுக்கான உரிமை பாதிப்படைந்த victim ஐ விட அதிகமாக இருக்கிறது. இதை அவர்கள் தவறாக பயன்படுத்துகிறார்கள்.

6. ஒருவரை ஒருவர் கொன்று தள்ளும் மற்ற மதங்களைப் போலன்றி இந்து மதத்தில் நாம் ஒருவரை ஒருவர் மதித்து நடக்கின்றோம்.

பாபர் மசூதி இடித்த கதை தலித்துக்களை சூறையாடும் கதை சமீபத்தில் குஜராத் நிலநடுக்கத்துக்காக சேகரிக்கப்பட்ட பணத்தை பறித்த கதை போன்று எத்தனை நடந்திருக்கின்றன. இவையெல்லாவற்றையும் மறந்துவிட்டார்களா?

இந்த கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்த இன்னொருவர் Taric Ramadan. இவரது ஏகாதிபத்திய உறவும் வர்க்க உணர்வு என்ற எடுப்புச் சாய்ப்பும் பற்றி விபரிக்க இங்கு இடமில்லை. இருப்பினும் முஸ்லீம்களுக்காக சத்தம் போடுபவர்களில் இவரும் ஒருவர். இவர் அங்கிருந்தவர்களை கிண்டல் செய்து முஸ்லீம்கள் தீவிரவாதத்தை நிறுத்த இந்துக்கள் ஏன் உதவக்கூடாது? என்று கேட்டுவிட்டு கூட்டத்தை விட்டுச் சென்றுவிட்டார்.

இவைகளை நீங்கள் இணையத்தில் பார்க்க வேண்டும் என்றால் Hindu Council UK இணையத்தை பார்க்கவும். அண்மையில் நிகழும் இந்துத்துவ மேலாண்மை செய்யும் முஸ்லீம் எதிர்ப்புகளையும் ஜாதிய ஒடுக்குமுறைகளையும் எழுத ஆரம்பித்தால் எழுதிக் கொண்டே போகலாம். காவல்துறை இவர்களை அழைத்து உரையாடியது அவர்களின் நடைமுறை உத்திகளை வகுப்பதற்காகவே. இவர்களிடம் ஆலோசனை பெறும் காவல்துறையில் நம்பிக்கை அற்று கல் எறியும் தொழிலாளர்களுக்கு நாம் ஆதரவு கொடுக்க வேண்டும்.

மேலே வந்த குறிப்பு 3ல் வரும் ஏஷியன் என்ற சொல்லிற்கான பிராமண எதிர்ப்பு நல்ல நகைச்சுவையான விடயம். நாங்கள் பாகிஸ்தானிகள் பங்களாதேசிகள் போன்று இல்லை. எங்களுக்கு முதலிடம் தாருங்கள் என்று ஆதிக்க வர்க்கத்திடம் கையேந்தும் விடயம் இது. ஆனால் இங்கிலாந்து இனத்துவேச ஆதிக்கத்துக்கு எல்லா ஆசியர்களும் ஒரே நிறம் தான் என்று இவர்களுக்குப் புரிவதில்லை. தாடி வைத்த பஞ்சாபி சிங்குகளைப் பார்த்து பின்லாடன் என்று கூறும் இனத்துவேசிகளுக்கும் இவர்களுக்கும் வித்தியாசமில்லை.

இந்த பிராமணர் கேட்பதெல்லாம் ஆதிக்கம் தான். தான் கூட வெள்ளை என்று என்னதான் சொன்னாலும் இனத்துவேசத்தின் கண்ணில் இவர்களும் ஆசியத்தூசு தான் என்பது இவர்களுக்குப் புரிவதில்லை. கருத்தளவில் தங்களை வெள்ளையர்களாக மாற்றும் அவாவில் இவர்கள் இங்கிலாந்து இனத்துவேசிகளின் அளவுக்கு கீழ்த்தரமான கருத்துடையவர்களாக உருவாகியிருக்கிறார்கள். மற்ற இனத் தொழிலாளர்கள் (கறுப்பின வெள்ளையின) இவர்கள் மேல் வெறுப்பும் அருவருப்பும் கொண்டுள்ளதற்கு காரணமும் இது தான்.

ஆரியக் குறியீடான சுவாஸ்திக அடையாளம் இந்தியாவிலும் சரி ஜெர்மனியிலும் சரி ஒரு அடக்குமுறையின் அடையாளமாக காலம் காலமாக இருந்து வருகின்றது. இந்த அடையாளத்தின் உபயோகத்தை ஐரோப்பாவில் தடைசெய்ய ஜெர்மனி அண்மையில் முயற்சித்தது. இதற்கு இங்கு வாழும் பிராமணர்களிடம் இருந்து பெரும் எதிர்ப்பு கிளம்பியது. ஹிந்து கவுன்சிலின் ஒரு கதை சொன்னார். உங்களுடைய குழந்தை விளையாடப்போன இடத்தில் யாரோ சேறடித்து விட்டார்கள் என்பதற்காக அக்குழந்தை வீட்டுக்குத் திரும்பி வந்ததும் யாரோ உனக்குச் சேறடித்திருக்கிறார்கள் நீ வேண்டாம் போ என்று விரட்டி விடுவீர்களா? அவனை (கவனிக்க ஆண்பால்) குளிப்பாட்டி வீட்டுக்குள் எடுப்பீர்கள் தானே. அதே போல் தான் ஜெர்மனியர்கள் (கவனிக்க இக்கதை ஜெர்மனியர்களுக்கு சொல்லப்படுகிறது) சுவாஸ்திகாவின் உண்மையான முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள வேண்டும். இது என் அறிவிப்பல்ல. மனித குலத்தின் மேம்பாட்டை ஊக்குவிப்பது.

இதைத்தான் 70 வருடங்களுக்கு முன்பு கிட்லர் சொன்னான் என்று நீங்கள் கூறலாம். ஆனால் அது இவர்களுக்கு விளங்காது. இப்படிப்பட்டவர்கள் மேல் சேறடிக்காமல் என்ன செய்வது. இந்தியாவில் பிராமணர் வாழும் இடங்களுக்கு போனால் சிலர் இந்த அடக்கு முறை அடையாளத்தை தங்கள் வீட்டின் வெளிச்சுவரில் பெரிதாக பொறித்து உள்ளதைப் பார்க்கலாம். இந்த வீட்டில் மனித குலத்தை மேம்படுத்துபவர்கள் வாழ்கிறார்கள் என்ற அறிவிப்பல்ல அது. அது ஒரு பிராமண வீடு என்ற அறிவிப்பே அது. இப்படிப்பட்ட வீடுகளுக்கு சேறடித்து இந்தியாவிலும் இந்த அடையாளப் பாவனைக்கு முடிவு கட்ட வேண்டி இருக்கும் பொழுது ஐரோப்பாவில் விட்டு வைப்போம் என்று இவர்கள் கனவு காண்கிறார்கள்.

மனித மேம்பாடும் மனித உரிமை பற்றிய அக்கறையும் பார்ப்பணியத்துக்கு தேவைக்கேற்றபடி பாவிக்க உதவும் உத்திகள் மட்டுமே. இதற்கான பலத்த எதிர்ப்பை நாம் கண் மூடிச் செய்வோம். பார்ப்பனிய எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது எமது போராட்டத்தின் பகுதிகள் மட்டுமே. ஒடுக்குமுறைகள் எந்த வடிவத்தில் வந்தாலும் எதிர்க்கவே நாம் இருக்கிறோம். இதனால் தமிழ் தேசியத்தில் திராவிட இனத்துவத்தில் குளிர்காய நினைக்கும் கனவான்கள் பார்ப்பனர் அல்லாத உயர்சாதியினர் (முக்கியமாக இலங்கை வெள்ளாளர்கள்) ஆகியோரின் நிம்மதியையும் நாம் குலைப்போம் என்பதையும் நினைவுட்டுகிறோம். கல் தோன்றி மண் தோன்றா என்று தொடங்கி நீங்கள் இடிக்கும் உலையை கனகாலத்துக்கு வேகவிட மாட்டோம். கண்மூடி எழுதிக்கிழிக்கும் தமிழ் நாட்டின் இன்னுமொரு முனைவர் கு. அரசேந்திரன் விட்ட ‘கல்’ என்ற நூலை ஒரு தமிழ் திராவிட மொக்குத்தனத்தின் உதாரணமாக சொல்லலாம். இவரின் மாமனார் ஈழவேந்தன் இலங்கையில் செய்யும் அநியாயங்களையும் அவரது மூதாதையர் செய்த கொடுமைகளையும் சொல்ல மீண்டும் நாம் வருவோம்.

ஆரியக்கூத்து

வெளியீடு : எதிர்வெளியீடு, டிசம்பர் 2006
விலை 60 இந்திய ரூபாய்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *