க.வாசுதேவனின் பிரஞ்சுப்புரட்சி

உலக வரலாற்றின் முக்கிய காலகட்டங்களில் ஒன்று பிரஞ்சுப் புரட்சிக் காலகட்டம். இக்காலகட்டம் பற்றிய வரலாற்று நிகழ்வுகளைத் தொகுத்திருக்கும் வாசுதேவனின் புத்தகம் ‘பிரஞ்சுப் புரட்சி” முக்கிய ஆவணம். இது போன்ற பல புத்தகங்கள் தமிழில் வரவேண்டும். வாசுதேவனின் கடின உழைப்பில் வெளிவந்திருக்கும் இப்புத்தகம் முக்கியமானதும் அனைவரும் படித்துப் பயனடைய வேண்டியதுமான ஒரு புத்தகம்.

ஆனால் வரலாறு படித்துப் பழக்கமில்லாத வாசகர்களை இப்புத்தகம் கவர முடியுமா எனத் தெரியவில்லை. பல்வேறு மாற்றங்கள் திருத்தங்களுடன் அடுத்த பதிப்பு வருகிறது என வாசுதேவன் கூறியிருந்தார். மேலதிக விளக்கங்களை இணைப்பதின் மூலம் இப்புத்தகத்தினை வாசிப்போர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும்.

மொழிபெயர்ப்பின்போது ஏற்படும் சில சிக்கல்கள் காரணமாக பல்வேறு வசனங்கள் தடுமாறியிருப்பதும் பல சொற்கள் அநாவசியமாக புரிதற் சிக்கலை ஏற்படுத்துவதையும் அவதானிக்கலாம். இருப்பினும் பிரஞ்சு மொழியில் வாசித்து நேரடியாக தமிழுக்கு இவ்வரலாற்றைக் கொண்டுவந்த முதல் முயற்சியிது. பிரஞ்சுப்புரட்சி வரலாற்றுக்கால பல சொற்கள் சரியான உச்சரிப்புடன் மொழிபெயர்க்கப்பட்டிருப்பது வரவேற்கத் தக்கது. மூன்றாம் எஸ்டேட்டை மூன்றாம் தேசம் என வாசுதேவன் மொழிபெயர்த்திருப்பது எவ்வளவுதூரம் சரியெனத் தெரியவில்லை. தவிர வெவ;வேறு சபைகளின் பெயர்கள் குழப்பமான முறையில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதாகவே தோன்றுகிறது.

இருப்பினும் வரலாற்று மாணவர்களுக்கு அவசியமான புத்தகமிது. தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் நூலகங்களும் பல்கலைக்கழகங்களும் இப்புத்தகத்தை வாங்கிக்கொள்ள வேண்டும். ஏனெனில் இக்கால வரலாற்றுக்குள் தமிழ் மூலம் நுழைய முனையும் மாணவர்களுக்கு இது ஒரு நல்ல ஆரம்பப் புத்தகம்.

இருப்பினும் பிரஞ்சுப் புரட்சியின் நுணுக்கங்களை ஆய்வு செய்ய முனையும் மாணவர்களுக்கு இப்புத்தகம் போதாது. இது மட்டுமின்றி பல்வேறு தவறான புரிதல்களையும் இப்புத்தகம் ஏற்படுத்தும் அபாயமுள்ளது. பிரஞ்சுப் புரட்சி வரலாறு பற்றி பல்வேறு வகை ஆய்வுகள் வெளிவந்துள்ளன – நூற்றுக்கணக்கான நூல்கள் வெளிவந்துள்ளன. இவ்வரலாற்றைப் பல்வேறு முறையில் அணுகும் துறைகள் பற்றியும் வாசுதேவன் குறிப்பிட்டிருப்பது பயனுள்ளது. இருப்பினும் வலது இடது என்ற இரு போக்குகளின் பார்வைகளை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் எனப் பல்வேறு மோசமான அதிதீவிர வலதுசாரிய வரலாற்றாசிரியர்கள் நம்மை ஆக்கினைப்படுத்துவதற்கு பின்னாலும் ஒரு அரசியல் உள்ளது. அவர்களின் எழுத்துகள் ஏராளமான திரிபுகளைக் கொண்ட நிலையிலும் நாம் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என வற்புறுத்தி வலதுசாரியத்தின் நம்பகத்தன்மையை அவர்கள் அதிகரிக்கத் துடிக்கிறார்கள். பாடசாலைகளில் டார்வினைப் படிப்பித்தால் கிரியேசனிசமும் படிப்பிக்க வேண்டும் என் வற்புறுத்தும் அமெரிக்க வலதுசாரிகளின் வாதம் போன்றது இது.

இந்தவகைப் பார்வையை உள்வாங்கி வெற்றுத் தகவல்கள் மூலம் வரலாற்றைச் சொல்லிச் செல்ல நினைப்பது புத்தகத்தின் முக்கிய குறைபாடு. வரலாற்றுப் போக்குகள் மற்றும் அக்காலத்தில் இயங்கிக்கொண்டிருந்த சமூக அசைவுகள் பற்றிய எந்தக் கவனமும் செலுத்தப்படவில்லை. உதாரணமாக புரட்சிக்கான நெருக்கடி ஆரம்பித்தது பற்றி வாசுதேவன் ஆரம்பிக்கும் முறையைச் சொல்லலாம். ‘மக்களுக்கு நல;லன செய்ய வேண்டும் என்ற எண்ணமெல்லாம் கொண்டிருந்தபோதும் அதை நடைமுறைப்படுத்துமளவிற்கு போதியளவு துணிவும் திறமையும் அற்றவராகவே காணப்பட்டார் மன்னர்” (பக் 37) என ஆரம்பிப்பது பின்பு அவர் வர்ணிக்கும் சம்பவங்களுக்கு முரண்நிலையில் இருப்பதை அவதானிக்கலாம்.
இதேபோல் பல சம்பவங்கள் சரியான சமூக அசைவு விளக்கமின்றி ஒரு தொங்கிய நிலையில் வர்ணிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக வரலாற்றுத் திருப்புமுனை (பக் 299) என்ற அத்தியாயத்தைக் குறிப்பிடலாம். ஆகஸ்ட் 10 என்ற திகதியைத் தவிர இந்தவரலாற்றுத் திருப்புமுனை பற்றி ஒரு விசயத்தையம் இந்த சிறிய அத்தியாயத்தில் படிக்க முடியாது. சான் குய்லோத்துகளின் எழுச்சி பற்றியும் அதன் பின்னணிகள் பற்றியும் மேலதிக விபரங்கள் சேர்க்கப்படாமல் இந்த முக்கிய திருப்புமுனையையோ அல்லது பிரஞ்சுப்புரட்சி பற்றியோ முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது.

இத்திருப்புமுனையைத் தொடர்ந்து நிகழ்ந்த செப்டம்பர் படுகொலைகளின் பின்னணியும் சரியாக எடுத்துக் காட்டப்படவில்லை. இக்கொலைகள் எழுந்தமானதாகவன்றி எதிர்ப்புரட்சிக்கெதிரான யுத்தமுறையாக முன்னெடுக்கப்பட்டது. இக்கொலைகளில் ஈடுபட்டவர்கள் பின்பு தாம் குற்றம்சாட்டப்பட்டதை ஆச்சரியத்துடன் பார்த்ததாக வாசுதேவன் எழுதுவது (பக் 304) எமக்கு ஆச்சரியத்தை தருகிறது. பிற்கால வரலாற்றில் நிறுவனமயப்பட்டவர்கள் தமது எதிரிகளை வேட்டையாடியதற்கும் சான் குய்லோத்துகள் எதிர்ப்புரட்சிக்காரர்களை வேட்டையாடியதற்கும் ஏராளமான வேறுபாடுகள் உண்டு. இவை பற்றி மேலதிக விபரங்கள் இணைக்கப்பட்டுத் தெளிவு ஏற்படுத்தப்படவேண்டும். புரட்சியின் உயிர்நாடியாக இயங்கிய சான் குய்லோத்துகள் பற்றி மேலதிக விபரங்கள் இணைக்கப்படவேண்டும்.

வரலாற்று போக்குகளினை அவதானித்த நோக்கில் இப்புத்தகம் எழுதப்படவில்லை. மேற்சொன்ன குறைபாடுகள் இப்புத்தகத்தில் இருப்பதற்கு முக்கிய காரணம் அதுதான். இக்குறைபாடுகள் நிவர்த்திசெய்யப்பட்டு திருத்தப்படின் இப்புத்தகம் ஒரு முக்கிய வரலாற்றுப் பதிவாக தொடர்ந்து பல தலைமுறைகள் படிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *