வடக்கத்தையார் பற்றிய வயிற்றின் கீழ் குத்து

சிக்கலான ஒரு கால கட்டத்தில் இதை எழுத வேண்டியிருப்பதையிட்டு வருந்துகிறேன். இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. தேவை ஏற்படின் அதைப் பின்பு சுட்டுவோம்.
—-
“ஈழத்தமிழ் எழுத்தாளர் மத்தியில் வன்முறை அதிகமப்பா. உங்கள் பக்கம் தலை வைச்சுப் படுக்க மனமில்லை” என அடிக்கடி யமுனா ராஜேந்திரன் அழுவதன் ஆழமான புரிதல் லண்டன் வரும்வரையும் எனக்கு வாலாயப்படவில்லை. பல்வேறு தளங்களில் நொருக்கப்பட்டிருக்கிறார் Yamuna. நான் சொல்லும் நொருக்குதல் வெறும் வார்த்தைச் சாடல்கள் மட்டுமில்லை. அடித்து இரத்தம் வர வைத்திருக்கிறார்கள். இது போன்ற பல்வேறு உடல் மற்றும் மன உழைச்சல்களுக்கு உட்பட்ட போதும்கூட இன்றும் தொடர்ந்து ஈழத்து இலக்கியம் மற்றும் அரசியல் பற்றி அதிகம் எழுதிக்கொண்டிருக்கும் ஓரே ஒரு எழுத்தாளர் யமுனா மட்டும்தான். அவரது மனநிலையின் தடுமாற்றங்களை அவர் எழுத்துக்களிற் பார்க்கலாம். நீண்ட காலத்திற்குப் பிறகே எனக்கு இந்தப் புள்ளியைப் புரிந்துகொள்ள முடிந்தது. இதைப் புரிந்து கொண்டபின் அவரது எழுத்துக்களை நான் பார்க்கும் விதத்தில் மாற்றம் ஏற்பட்டு விட்டது.

யமுனா எழுதியவை அனைத்தும் எனக்கு உடன்பாடே என நான் இங்கு வாதிட வரவில்லை. அவரது எழுத்துக்கள் மேல் காரசாரமான விமர்சனங்களை முன்பும் தற்போதும் வைத்து வருகிறேன். அவரது கடந்த புத்தக வெளியீட்டின் போது நீண்ட விமர்சனத்தை வைத்திருக்கிறேன். இருப்பினும் யமுனா சொல்லவரும் பல்வேறு கருத்துக்கள் மற்றும் சில அரசியற் பார்வைகளை சும்மா தட்டிக் கழித்துவிட்டுச் செல்ல முடியாது. தவிர அவரது சில அரசியல் நிலைப்பாட்டின்மேல் எனக்கு மதிப்புமுண்டு.
இலங்கையில் நடந்த கொடிய யுதத்ததை கோரப் படுகொலையை எந்த நிபந்தனைகளும் இன்றி எதிர்த்தவர் அவர். மக்களை விட்டுப்போட்டு அவர்கள் சண்டையைத் தொடரட்டும் என்று நிபந்தனையிட்டவர்களை கடுமையாக எதிர்த்தவர் அவர். அரைகுறை யுத்த எதிர்ப்பை இதுதான் புனித யுத்த எதிர்ப்பு என நிறுவ முயன்றவர் அல்ல அவர். காந்தியைப் புகழவில்லை- புத்தரைத் தலையில் தூக்கி வைக்கவில்லை. அவ்வாறு செய்தவர்கள் செய்தது போன்ற குறுக்கு வழி ஆதரவை இலங்கை அரச படுகொலைகளுக்கு அவர் வழங்கவும் இல்லை. அவர்களைப் போல் “மார்க்சியர்” எனச் சொல்லிக்கொண்டு இடதுசாரிகள் மேல் காறித்துப்பவில்லை. யமுனாவின் இடதுசாரியக் கருத்துக்கள் மேல் எனக்கு விரிவான விமர்சனமுண்டு. ஆனால் அவர் மார்க்சியர் எனச் சொல்லி முற்போக்கு முத்திரையைத் தேடிக்கொண்டு இடதுசாரிகள் மேல் எள்ளல்களையும் ஏளனங்களையும் தூவிக்கொண்டிருக்கவில்லை.

இந்த மாதிரியான அடிப்படையில் இருந்துதான் அவர்மேல் சிலர் வைக்கும்- வெறுப்பை முன்னிலைப் படுத்திய – தாக்குதலை நாம் அணுக வேண்டியிருக்கிறது. லண்டனில் ஒரு கூட்டத்தில் அவர்மேலும் மற்றும் சில அப்பாவி இலக்கிய வாதிகள் மேலும் தாக்குதலைச் செய்ய சிலர் தயாராகியபோது அவர்களுக்கு முன்னால் நின்ற ஞாபகம் கன காலத்துக்குப் பிறகு மீண்டுள்ளது. என்னைத் தாக்கிய பிறகு மற்றவர்கள் மேல் தாக்கட்டும் – நடப்பது பார்க்கலாம் என்ற முறட்டுத் துணிவுடன் நின்ற நிலையை மீள நினைத்துக்டிகொள்கிறேன். எனக்குப் பதில் சொல்லி விட்டு யமுனாவிடம் செல்லவும்.

ஈழத்தில் கோரப் படுகொலை நடந்துகொண்டிருந்த காலப் பகுதியில் நடந்த விவாதங்களையொட்டி “கொலை மறைக்கும் அரசியல்” என்ற ஒரு புத்தகத்தை எழுதியிருந்தேன். இது ஒரு இரகசியமான விடயமில்லை. இதை தமிழ்நாட்டில் நன்கு அறியப்பட்ட உயிர்மை வெளியிட்டிருந்தது. இப்புத்தகத்தை நானே சோபாவுக்கு கையளித்திருக்கிறேன். அவருடய மற்றும் 0அ.மார்க்சுடய பல்வேறு அரசியற் கருத்துக்கள் மேல் நிதானமான விமர்சனத்தை வைத்திருக்கிறேன். மார்க்ஸ் எழுதிய நேபாளம் என்ற புத்தகம் குப்பபையில் போட வேண்டிய அளவுக்கு இன்று நிலமை மாறி விட்டது. அவரிடமிருந்து “சொறி பிழையா கணிச்சுப் போட்டன்” என்ற ஒரு வார்த்தை இன்று வரை வரவில்லை. அவர்கள் விட்ட ஈழம் புத்தகத்தில் எழுதப்பட்ட கருத்துக்களுக்கான விமர்சனங்களுக்கு இன்று வரை ஒரு மூச்சில்லை. புத்தகத்தைப் படிச்ச கையுடன் முகப் புத்தகத்தில் என்னை முற்றாகத் தடை செய்த சோபா அதன்பிறகு ஒரு சிறு குறிப்பை எழுதியிருந்தார். அதை நன்பர்கள் சொல்லித் தெரிந்து கொண்டேன். முகப்புத்தக நட்புப் பட்டியலில் இல்லாத போதும் தன்னை விமர்சிக்கிறார் யமுனா என சோபா சொல்வது ஆச்சரியத்தை தருவதாக இருக்கிறது. கண்ணாடிப் பொட்டிக்குள் இருந்து கல் எறிகிறார்.

யாராவது முறைப்படி அரசியல் உரையாடலுக்கு அழைத்தாள் “எல்லாவற்றுக்கும் பதில் சொல்லி விட்டோம்” என நழுவிக்கொள்வது. அல்லது ஏதாவது கிண்டல் கேலி செய்து தட்டிக் கழிப்பது அல்லது கண்டும் கானாமல் விட்டு விடுவது – இது தான் சோபா விமர்சனத்தை எதிர்கொள்ளும் விதமாக இருந்து வருகிறது. அரசியல் மற்றும் தத்துவார்த்த கேள்விகளை கணக்கில் எடுப்பதில்லை.

யமுனா ஈழத்து அகதி எனக் கள்ளக் கதை கதைச்சு லண்டனில் வதிவிடம் பெற்றதாக மிகக் கேவலமான விமர்சனத்தை முன்பு சோபா வைத்திருந்தார். அதையே மீண்டும் சொல்லியிருப்பது மிக அதிர்ச்சியைத் தருகிறது. ஈழத்தில் இருந்து வருபவர்கள் எல்லாம் அகதிகள் அல்ல – வெறும் பொருளாதாரக் காரணத்துக்காக வருகிறார்கள் என்ற அர்த்தத்தில் முன்பு ஒரு முறை கலா மோகன் பிரெஞ்சுப் பத்திரிகை லு மொந்துக்கு கொடுத்த பேட்டியைப் போன்ற கேவலமான கதையிது. சோபா சக்தி ஓபராவுக்கு வழங்கிய தனது அகதி கோரிக்கையை வெளியிடட்டும் – சிரி பிழைகளை அதன் பிறகு கதைக்கலாம். அகதிகளை கையாளும் பெரும்பான்மை மேற்கத்தேய அரசுகளின் உள்நாட்டு அமைச்சுக்கள் பச்சைத் துவேசம் கொண்டவை என்பது தெரியதோ? ஈழத்தைச் சேர்ந்த ஒரு போராளியுடன் காதல் உறவு இருந்த காலத்தில் யமுனா எதை சொன்னார் என்பதில் உங்களுக்கென்ன அக்கறை? வடக்கத்தையான் ஒருத்தன் ஈழ அகதி அந்தஸ்தை பாவிச்சுப் போட்டான் என்ற கொச்சைத்தனமான விமர்சனம் இது. தமிழகத்தில் ஈழத்துக்காக தியாகம் செய்த – செய்துகொண்டிருக்கும் ஆயிரக்கணக்கானவர்களை கொச்சைப் படுத்தும் கதையிது.
அடுத்தவன் மேல் இவ்வாறு தனிப்பட்ட தாக்குதல்கள் செய்வதை நிறுத்துங்கள். அரசியற் கேள்விகளுக்கு ஆக்க பூர்வமான முறையில் பதில் சொல்லப் பழகுங்கள். தெரியவில்லை என்றால் தெரியவில்லை எனச் சொல்லுங்கள். தவறை தவறென்று ஒத்துக்கொள்ளுங்கள். ஒருவரும் வானத்தில் இருந்து குதிப்பதில்லை. ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள இன்னும் எவ்வளவோ இருக்கின்றன.

உங்களை நோக்கி கேட்கப்பட்ட எத்தனையோ கேள்விகள் இன்னும் காத்தில் தொங்கிக்கொண்டு நிற்கின்றது. பதில் சொல்லப் பாருங்கள். அப்படியில்லை சண்டிக் கட்டுத்தான் எண்டால் – முதலில் இன்னுமொரு தீவானுக்கு அடிச்சுப் போட்டுப் பிறகு வடக்கத்தையானில கைவைக்கலாமா என்டு பாருங்கள்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *