மாணவர்கள் கொலைக்கு இலங்கை அரசே பொறுப்பு

 

வடக்கு கிழக்கைக் குலுக்கியிருக்கும் இரு மாணவர்களான கஜன், சுலக்க்ஷன் ஆகியோரின் இறப்பின் பின்னியங்கும் அரசியலை நாம் சரியாக விளங்கிக் கொள்ளுதல் அவசியம்.

அவர்கள் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளை பொலிசார் நிறுத்தச் சொல்ல அவர்கள் நிறுத்தாமற் சென்றதால் பொலிசார் சுட்டனர். இது ஒரு வழமையான பொலிஸ் விவகாரம். நிறுத்தச் சொன்ன பொழுது அவர்கள் வாகனத்தை நிறுத்தியிருக்க வேண்டும். ஏன் அவர்கள் சட்டத்தை மதிக்காமல் வாகனத்தை ஓட்டிச் சென்றனர்? எனச் சிலர் இச்சம்பவத்தைச் சுருக்கிப் பார்க்க முற்படுகின்றனர்.

உண்மையில் என்ன நடந்தது என்பதற்கு அப்பால் இது கொலையை நியாயப்படுத்தும் கதை என்பதை அவதானிக்க வேண்டும். அவர்கள் நிறுத்தாமற் சென்றால் அவர்களை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்யும் உரிமையைப் பொலிசாருக்கு வழங்கியது யார்? நிறுத்தாமல் வண்டி ஓட்டிச் செல்வது மரண தண்டனைக்குரிய குற்றமா? வடக்கில் இயங்கும் இராணுவம் மற்றும் பொலிசார் அளவுக்கதிகமான அதிகாரத்தை உணர்வதற்கு பின் இருக்கும் அரசியலை நாம் கவனத்திற்குக் கொண்டு வரவேண்டும்.

இந்த இளைஞர்கள் மாவீரர் நாள் கொண்டாடினார்கள் அல்லது ஆயுதம் தாங்கிய வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் அதனால்தான் சுடப்பட்டார்கள் என இலங்கை அரசும் தெற்குச் சிங்கள இனவாதிகளும் பேச விரும்புவர். சில குறுந் தேசியத் தமிழர்களும் விளக்கமில்லாமல் இக்கதை பேசலாம். இத்தகைய பொய்ப் பிரச்சாரங்கள் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டும்.

தீவிர வாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட மாணவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையாக இந்தச் சம்பவம் திரிக்கப்படுவதையும் இலங்கை அரசிற்கு ஆதரவு நோக்கில் நடத்தப்படுவதையும் நாம் திட்டவட்டமாக எதிர்க்க வேண்டும். அரசியலில் ஈடுபடாத மாணவர்கள் கூட எத்தகைய அரச வன்முறையை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது என்ற பெரிய உண்மையைப் புதைக்கும் நடவடிக்கை இது. இலங்கை அரசும் அதிகார சக்திகளும் இக்கொலைக்குப் பொறுப்புக் கூற வேண்டும்.

இந்தியா எவ்வாறு காஷ்மீரைத் தனது இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து அங்கு நடக்கும் அரசியலைக் கட்டுப்படுத்துகிறதோ அதேபோல் இலங்கையில் வடக்கு-கிழக்கைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதுதான் இலங்கை அரசின் நோக்கம். அடக்க முடியாத தேசிய அபிலாசைகள் எந்த விதத்திலும் வெளிப்பட்டு விடக்கூடாது. அது அரசியல் மயப்பட்டு விடக்கூடாது என்பதில் மிக்க அக்கறையுடன் அவர்கள் இயங்குகிறார்கள். மீண்டும் மாணவர்கள் அரசியல் நடவடிக்கை நோக்கி நகரக்கூடாது என்றும் அவர்கள் தமிழ்த் தேசிய விடுதலை அரசியலைத் தம் கைகளில் எடுக்க கூடாது என்றும் கடுமையான வேலைகளைச் செய்து வருகிறது இலங்கை அரசு.

பொது மக்கள் வன்முறை விரும்பிகள் அல்லர். அவர்கள் வன்முறை நோக்கியோ அல்லது இலங்கை அரசுக்கு எதிரான நடவடிக்கை நோக்கியோ திரும்பக் கூடாது என நியாயமான அக்கறை உள்ளவர்கள் செய்ய வேண்டிய இலகுவான காரியமொன்று உண்டு. அனைத்துச் சனநாயக உரிமைகளையும் வழங்குங்கள். நொறுக்கப்பட்ட பிரதேசத்தை மீளக் கட்டியெழுப்ப மேலதிக முதலீடுகளைச் செய்யுங்கள். மக்களின் தேசிய அபிலாசைகளை நிறைவேற்றும் திசையில் பயணியுங்கள். இதைச் செய்வீர்களானால் மக்களிடம் எதிர்ப்புக் குறையலாம்.

ஆனால் இதற்கு மாறாகத்தானே நிலவரம் இருக்கிறது. வட மாகாணம் இலங்கையிலேயே வறிய மாகாணங்களில் ஒன்றாக முடக்கப்படுகிறது. நில உரிமை, பேச்சுரிமை உட்பட அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகிறது. காணாமற் போனோர் மற்றும் சிறையில் இருப்போர் விபரங்கள் மக்களுக்கு இன்றுவரை கொடுக்கப்படவில்லை. அரசியற் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை. கட்டாயங்கள் மூலமும் பயமுறுத்தல் மூலமும்தான் இந்த மக்களை நீங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயற்சிக்கிறீர்கள். இந்நிலையில் மக்களிடம் இருந்து எவ்வாறு எதிர்ப்பு வராமல் இருக்க முடியும்?

மேற் சொன்ன முரண் நிலையை அவதானித்தல் அவசியம். உரிமைகளை வழங்காமல் எதிர்ப்பைக் குறைக்க முடியாது. எதிர்ப்பு எவ்வாறெல்லாம் வெளிப்படும் என வரையறை போட முடியாது. பொலிசார் சொல்வதைக் கேட்க மறுப்பதாகவும் அது வெளிப்படலாம். மக்கள் தமக்குத் தெரிந்த முறையில் ஏதோ ஒரு வகையில் எதிர்ப்பு நடவடிக்கைகளைச் செய்து கொண்டுதான் இருப்பர். இது திட்டமிட்டு நடத்தப்படும் என்ற அவசியமில்லை. கலாச்சார மொழி ரீதியான தேசிய ஒடுக்குதல் எதிர்ப்புக் கலாச்சாரத்தைத் தூண்டத்தான் செய்யும். தம்மை அறியாமலே மக்கள் மத்தியில் இத்தகைய எதிர்ப்புகள் வெளிப்படும். சிங்களத்தில் எழுதிய பலகையை ஒரு முதியவர் மதுபோதையில் கழட்டி எடுத்துக் கொண்டு வீட்டுக்கு சென்று விடும் சிறு செயலும் இத்தகைய எதிர் கலாச்சார வளர்ச்சியே. இராணுவத்தை நோக்கி இளைஞர் கூடிக் கல்லெறிதலும் அத்தகையதே. ஒடுக்கு முறைகளைக் கட்டிக் காத்துக்கொண்டு இத்தகைய கலாச்சாரம் வளரக் கூடாது எனப் பேசுவதில் அர்த்தமில்லை.

மக்கள் மத்தியில் இருக்கும் எதிர்ப்பு என்பது அமைப்பு மயப்பட வேண்டும் என நாம் விரும்புகிறோம். ஏனெனில் அத்தகைய அமைப்பு மயப்பட்ட எதிர்ப்பைக் காட்டாமல் எமது உரிமைகளை நாம் வென்றெடுத்துவிட முடியாது. சிறு சிறு வன்முறைச் செயற்பாடுகள் அல்லது தீவிரவாதம் என அரசால் வரையறுக்கப்படக் கூடிய செயற்பாடுகள் எதிர்மறை விளைவையே ஏற்படுத்தும். அதாவது இந்தக் காரணங்களைக் காட்டி அரசு தனது அதிகாரத்தை மேலும் பலப்படுத்தவும் மேலதிகக் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தவும் இது வழி கோலும். அதனால்தான் எழுந்தமானமான செயற்பாடுகளைச் செய்ய வேண்டாம் என நாம் கோருகின்றோம். ஆனால் நாம் எதிர்ப்பைக் குவியப்படுத்த வேண்டும். எதிர்ப்புக் கலாச்சாரத்திற்கு என ஒரு அரசியல் மையம் வேண்டும். அதற்கென ஒரு அரசியற் தளம், அரசியல் அமைப்பு வேண்டும். இதை நோக்கி நாம் நகர வேண்டும். இதைக் காட்டாமல் சமூக எதிர்ப்புக் குவிய வழியில்லை. அந்நிலையில் எதிர்ப்புகள் எங்கு எங்கு, என்ன என்ன முறையில் கசியும் என்று சொல்ல முடியாது. அது தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். சில கட்டங்களில் பெரிதாக வெடித்தும் கிளம்பும்.

எழுக தமிழ் கூட்டத்திலும் இதன் பண்புகளையே நாம் அவதானிக்க முடிகிறது. இந்நிகழ்வு தமிழ்த் தேசியத்தைத் தூண்ட முயல்வோரின் சதி என்பது போல் சில புத்தி ஜீவிகள் புலம்புவது நகைப்புக்கிடமானது. வட மாகாண சபை தேர்தலின் போது கூட்டமைப்பை நோக்கித் திரண்ட மக்களின் நடவடிக்கையின் போதும் இதே பண்பைத்தான் நாம் பார்த்தோம். அப்போது இவர்கள் ஏன் கதைக்கவில்லை? ஏனெனில் அது மக்கள் திரண்டு அதிகாரத்தை இணக்கவாதிகள் கையில் தருவதாக இருந்தது. இது இந்தப் புத்தி ஜீவிகளுக்கு இனிப்பான விசயம். ஆனால் எழுக தமிழ் கூட்டில் அதிகாரத்தை மக்களுக்கு மாற்றும் பண்பிருந்தது. மக்கள் திரட்சி சில கோரிக்கைகளை பலப்படுத்தும் பண்பை அவர்கள் பார்த்தனர். இது தான் அவர்களுக்கு பயத்தைக் கொடுக்கிறது. இதனாற்தான் இத்தகய பயம்தரும் மக்கள் நடவடிக்கைகள் அவசியம் என்று நாம் பேசுகிறோம். மக்கள் அரசியல் மயப்பட வேண்டும். தாம் அதிகாரத்தை அடைய வேண்டும் என்ற அவா மக்கள் மத்தியில் ஓங்க வேண்டும். முற்போக்கான கோரிக்கைகள் நோக்கிய மக்களின் திரட்சி அக்கோரிக்கைகளுக்கு மிகுந்த பலத்தைக் கூட்டும்.

மக்களின் நடவடிக்கைகளை முடக்கும், திசை திருப்பும் நடவடிக்கைகளுக்குள் மற்றும் பிரச்சாரத்துக்குள் நாம் விழுந்து விடாமல் இருப்பதும் அவசியம். மாணவர் பேரணி இணக்க அரசியல் வாதிகளிடம் மகஜர் வழங்குவதோடு முடிந்து விடக் கூடாது. கடையடைப்பு நடவடிக்கைகள் அரசை நோக்கிய திட்டவட்டமான கோரிக்கைகளுடன் நிகழ வேண்டும்.

செய்ய வேண்டும் என்ற கடமைப்பாடு நிறைந்த சடங்காக இது நிகழ்ந்து முடிந்து விடக் கூடாது. ஏற்கனவே இந்தக் கொலைக்கான காரணத்தை தனி நபர்களை நோக்கித் திருப்பும் சில பிரச்சாரங்கள் நிகழ்வதையும் நாம் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. முழுப் பொறுப்பையும் இலங்கை அரசு எடுப்பதற்கு எதிராக இது திசை மாற்றும் நடவடிக்கை. இலங்கை அரசே இக்கொலைகளுக்கு முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

இந்த அடிப்படைப் புரிதல் அற்ற தமிழ் அமைப்புகள் என்ன செய்கின்றன? பெட்டி வாங்கித் தருகிறோம். காசு தருகிறோம் என அரசு சார்பில் சொல்கிறார்கள் என குடும்பத்தார் முறையிடுகின்றனர். எவ்வித சூடு-சொரணையும் இல்லாமல் பட்டும் படாமல் விசாரித்துக் கொண்டு தங்கள் வழமையான வேலையைப் பார்க்கிறார்கள் கூட்டமைப்புத் தலைவர்கள். அரசின் அதிகாரப் போக்கை கேள்வி கேட்க முடியாத எதிர் கட்சிப் பதவி உங்களுக்கு எதற்கு? உயிரைப் பேரம் பேசும் இந்த அதிகாரிகளைக் கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டி கேட்கப்பட்டதா ? பல தளங்களில் பல்வேறு அடக்கு முறைகள் பற்றிய மந்த நிலைப் புரிதல் உடையவர்கள். தற்போதைய கூட்டமைப்புத் தலைவர்கள் நீண்ட காலமாக அவர்கள் அரசுடனான சமநிலையை ஏற்றுப் பழகியவர்கள். எதிர்ப்பை இவர்கள் புரிந்து கொள்வது கடினம். எல்லா விசயங்களும் வாக்கு வங்கியாக இவர்களுக்கு குறுகித் தெரிகிறது. அனைத்தையும் வாக்கு எடுக்கும் அரசியல் நோக்கி நகர்த்துவதில் இவர்கள் குறியாக இருப்பர். கொலைகளையும் அந்த வகையிலேயே இவர்கள் அரசியல் மயப்படுத்த முயற்சிப்பர்.

ஆனால் இதற்காக ஒட்டுமொத்த அரசியல் நீக்கத்தை கோருவது மிகத் தவறு. இணக்க அரசியல் மட்டும்தான் ஒரே ஒரு அரசியல் என அவர்கள் நிறுவுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுவது அவசியம். அதற்காக அரசியல் நீக்கம் தேவையில்லை. கொலைக்கு எதிர்ப்பு என்பதும் அரசியலே. அரசியல் உரையாடல், எதிர்ப்புக் கலாச்சாரம் வளர்வது பற்றிய புரிதல் போன்ற சமூகம் பற்றிய கூர்மையான அவதானங்கள் நோக்கி நாம் நகர வேண்டும். அரசியல் விவதங்களுக்கு நாம் தயார்படுத்த வேண்டும். நீக்கம், தடை என்பவற்றால் மட்டும் அரசியல் ஓட்டத்தை எமக்குத் தேவையான திசைகளில் கட்டி நிமிர்த்தி விட முடியாது.

இக்கொலைகள் தற்செயலானவைகள் அல்ல. மாறாக மக்கள் மேல் தொடரும் வன்முறையின் அங்கத்தை வெளிக்காட்டும் நடவடிக்கை. இந்தப் புள்ளிகளைப் பேசுவது இனி வரும் கொலைகளைத் தடுக்கும் எதிர்ப்பைக் காட்ட உதவும். சம்பந்தப்பட்ட பொலிசார் சிறு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாலோ அல்லது அது போன்ற பாசாங்கு நடவடிக்கைகளாலோ மட்டும் தீர்த்து விட முடியாத பிரச்சினை இது என்பதை நாம் விளக்க வேண்டும். வெறுமனே கொலைகளைக் கண்டித்து விட்டு நாம் அமைதிப் பட்டு விட முடியாது. இவையும் அரசியற் கொலைகளே. அரசியல் நீக்கி எவ்விதத்திலும் இக்கொலைகளை விளக்க முடியாது. சட்டம் மீறிய செயற்பாட்டுக்குக் கிடைத்த தண்டனையாக இக்கொலைகள் சுருக்கப்படுவதை இக்கொலைகளின் பின்னிருக்கும் அரசியலை விளக்காமல் எதிர்க்க முடியாது. மக்களுக்கானதாக இல்லாத எல்லாச் சட்டங்களும் விதிகளும் உடைக்கப்பட வேண்டியவையே. வன்முறைகளையும் அதிகாரத்தையும் மக்கள் மேல் திணித்து நடப்பதை நியாயப்படுத்த முடியாது. இதுவும் தொடரும் யுத்ததின் பகுதிகளே.

யுத்தம் என்பது அரசியல் நடவடிக்கையின் நீட்சியே. அரசியல் நலன்களை நிலை நாட்டவே யுத்தம் மக்கள் மேல் திணிக்கப்படுகிறது. யுத்தத்தால் எப்பிரச்சினைகளும் தீர்க்கப்படுவதில்லை. எந்த ஒரு பிரச்சினைக்கும் யுத்தம் தீர்வல்ல.

2009ல் நடத்தப்பட்ட கோரக் கொலைகள் தமிழ் பேசும் மக்களின் எந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்துள்ளது? இணக்க அரசியல், நல்லாட்சி எனச் சொல்லிக் கொண்டு அதிகாரத்தைத் தமக்குள் பகிர்ந்துகொள்ளும் ஒரு சிறு குழுதான் இந்த யுத்தத்தால் பயன்பட்டிருக்கிறது. இதே யுத்தம் இன்று அரசியலில் தொடர்கிறது. இதே யுத்தம் இன்று அரச அதிகாரமாக இயங்கி வருகிறது. அரசியல் ரீதியாக தமது அதிகாரத்தை நிலை நாட்டும் வரை அவர்கள் இராணுவத்தை ஏவி விடாமல் இருப்பர். அது முடியாத பொழுது மீண்டும் இராணுவம் மக்களைச் சூறையாட ஏவி விடப்படும். இராணுவம் வெளியேற்றப்படவேண்டும்! என்ற கோரிக்கை பலப்பட வேண்டும். அனைத்துச் சனநாயக கோரிக்கைகளும் பலப்பட வேண்டும். எமது எதிர்ப்பு அரசியல் அமைப்பு மயப்பட வேண்டும்.

இந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Senan அவர்களால் வழங்கப்பட்டு 25 Oct 2016 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் தமிழ்வின் செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Senan என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *