வியாபாரிகளின் காலம்-1

 

 

விசர்த்தனமான கிறுக்கல்களில் ஈடுபடச் சொட்டு நேரமும் இல்லை என்றிருக்க முற்பட்டால் நண்பர்கள் விடுகிறபாடாயில்லை. ‘சுயவிமர்சனம் செய்’ என்று பாரிசில் இருந்து சிலர் கொக்கரிக்கின்றனர். ‘உமது பழைய வரலாறு எமக்குத் தெரியும் ’ என்று சிலர் இங்கிலாந்தில் மர்மக்கதைகள் பேசித் திரிகின்றனர். அமெரிக்கக் கண்டத்திலிருந்தும் கூட அற்புதமான தாக்குதல்கள் வருகின்றன! ஒரு சர்வதேசத் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது உச்சி குளிர வைக்கிறது! நமது இருப்புக்கும் செயலுக்கும் அர்த்தம் கூடுவதில் சந்தோசமே. போதாக்குறைக்கு ஆர்ஆரோ செய்த ஆக்கினைகளுக்கும் என்னிடம் வந்து விளக்கம் கேட்கிறார்கள்.

தமிழ் ஒருங்கமைப்பில் உம் பங்கென்ன என்ற நியாயமான கேள்விகளும் உண்டு. ஆனால், அதற்குள் எப்படி ஜரோப்பியப் பாராளுமன்றம் வரை போய்ப் பேசமுடிந்தது? என்று சந்தேகக் கேள்வி வேறு.

பிரித்தானியத் தமிழப் பேரவை நண்பர் நடுச்சாமத்தில் தொலைபேசியடித்து நீர் அரசாங்கத்தின் ஆள் என்று பலருக்குச் சந்தேகம் என்று நீண்ட விவாதம் செய்கிறார். ‘நீங்கள் தேசம் நெற்றின் ஆசிரியராக இருந்தபடியால் அரச ஆதரவு’ என்றும் துப்பறிய முயல்கிறார்கள். ‘தேசம் நெற் ‘ தொட்டு ‘எதிர்’ இணையத்தளம் வரை சந்திரன் ராஜா தொடர்ந்து பல ‘இடதுசாரிய’ தொடர்பு கேள்விகளைப் பின்னூட்டமிடுகிறார். ‘எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்’ என்று முதல்மரியாதை படத்தில் விரலை தூக்கித் திரியும் கதாபாத்திரம் போல் பலர் விடாது ‘உண்மைக்காக’ அலைகின்றனர். தமிழ் ஒருங்கமைப்பு வேலை சூப்பர் என்று சொல்லித் திரிந்த இளங்கோ, தற்போது கட்சி சார்பு பற்றி நியாயமான கேள்விகளைத் தொடுக்கிறார். புலிகள் உளவுத்துறையில் உங்கள் பங்கென்ன என்றும் கொங்கொங்கில் இருந்து தொலைபேசியில் கேள்விகள் வருகிறது. இதற்குள் உண்ணாவிரதமிருந்த பரமேஸ்வரனுக்குக் கிடைச்ச காசில் உங்கள் பங்கென்ன என்ற விசர்க் கேள்விகளும் கேட்கப்படுகின்றன. ‘காசு தருவியா?’ என்ற கேள்வியை மட்டும் கேட்டுத் திரிந்த அம்மா தற்போது அதுவும் கூடக் கேட்கமுடியாத நிலைக்கு வந்திருக்கிறது நம்நிலை. இதற்குள் நம்மை நோக்கி வரும் காசு பற்றிய கேள்விகள் மிகவும் ஆச்சரியமானதாக இருக்கிறது.

இலக்கியத்தை , அரசியலை தனி மனித உறவுகளுக்கூடாக மட்டுமே பார்த்துப் பழக்கப்பட்ட எமது ‘தமிழ் உணர்வு’ உந்தும் கேள்விகளிவை. எல்லாருக்கும் சேர்த்துப் பொதுவான விளக்கத்தைக் கெதியென்று எழுதுகிறேன் என்பதைப் பதிலாகச் சொல்லி வந்ததால் இதை எழுதுகிறேன். இருப்பினும் பதில் கிடைத்துவிட்டதாக நண்பர்கள் குதூகலிப்பர் – தமது கருத்துகளை மாற்றுவர் என்ற எந்த நப்பாசையும் நமக்கில்லை. பதில்களை எதிர்பார்த்துக் கேள்வி கேட்காத ‘தமிழ்ப் பழக்கம்’ பக்கென்று மாறுமா என்ன?

2.‘தமிழ்’ அடையாளம் பற்றி

நாடு – மொழி அடையாளங்களை வைத்து நாம் எம்மை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. குறிப்பாக அடையாளங்களுக்கிடையிலான மோதல் இருக்கும் நிலையில் இவை பல சிக்கல்களை ஏற்படுத்தவல்லன. நான் ஆங்கிலேயன் என்று ஐரிஸ்காரரிடம் பெருமிதம் கொள்ள முடியாது. ஆங்கிலேய ஆளும் வர்க்கம் அயர்லாந்தில் செய்த அடக்குமுறை வரலாறு ஆங்கிலேயன் என்ற அடையாளத்தை வெறுப்பாகப் பார்க்க வைக்கிறது. ஒரு குறிப்பிட்ட அடையாளத்தை முன் வைத்து ஒடுக்குதல் நடக்கும் போது அந்த அடையாளம் சார் குழு மக்கள் எதிர்ப்பாகத் தமது அடையாளத்தைத் தூக்கிப் பிடிப்பது தவிர்க்க முடியாததாகிறது.

இலங்கையைப் பொறுத்த வரையில் ‘சிங்களம்’ என்ற அடையாளம் பேரினவாத ஒடுக்குதலுடனும், ‘தமிழ்’ என்ற அடையாளம் ஒடுக்கப்படுவதுடனும் நீண்டகாலமாகச் சம்மந்தப்பட்டு வருவதால் தமிழ் என்ற அடையாளத்தை ஒடுக்கப்படுபவர்கள் தூக்கிப் பிடிப்பது நிகழ்கிறது. தமிழ் என்ற அடையாளம் ஒடுக்கப்படுவதுடன் மட்டும் சம்மந்தப்பட்டிருந்தால் இது பற்றி வேறு கேள்விகள் எழச் சாத்தியமில்லை. மாறாக, அது ஒருவகை ஒடுக்கும் அடையாளமாகவும் வடிவெடுத்துள்ளது. இலங்கைத் தமிழ் பேசும் முஸ்லிம்கள் தங்களைத் தமிழர் என்று அடையாளப்படுத்திக் கொள்ள முடியாத வகையில் ‘தமிழர்’ என்ற அடையாளத்தின் ஒடுக்குமுறை அவர்கள் மேல் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. தமிழர் என்ற அடையாளத்தின் பெயரில் தலித்துகள், சமபால் உறவாளர்கள் உட்படப் பல்வேறு விளிம்புநிலை மக்கள் மேல் வன்முறை கட்டவிழ்வதும் எவ்விதத்திலும் பெருமைப்படும் விடயமில்லை. தமிழர் என்ற அடையாளத்தைக் காட்டி இந்தியா, மலேசியா முதலான நாடுகளில் அதிகாரத்துடன் கூட்டுச் சேர்ந்து அக்கிரமம் செய்யும் நடவடிக்கைகள் மேலும் இந்த அடையாளத்தை அதிகாரம் நோக்கி சரித்துள்ளது. தமிழர் என்ற அடையாளம் ஒடுக்கப்படுவோர் மட்டும் சார்ந்த அடையாளமாக இருப்பின் அந்த அடையாளத்தை முஸ்லிம்கள் மட்டுமல்ல பல்வேறு ஒடுக்கப்படும் விளிம்பு மக்கள் தாமும் எடுத்து கொள்வதில் சிரமமிருந்திருக்காது.

இங்கிலாந்தில் இனவெறிக்கெதிராகப் போராடிய ஆசியர்களும் பல்வேறு சிறுபான்மையினத்தவர்களும் தங்களைக் ‘கறுப்பர்களாக’ அடையாளப்படுத்திக் கொண்ட வரலாறு உண்டு. இன மற்றும் நிறத் துவேசத்துக்கு எதிராக ஒன்றுபட அவர்கள் கறுப்பர்கள் என்ற அடையாளத்தின் பின்னால் திரள்வது அவசியமானதாயிற்று. அதே போன்று ஒடுக்கப்படுவோரை ஒன்றிணைக்கும் அடையாளமாகத் தமிழர் என்ற அடையாளத்தைக் கருத முடியாது. இதனால் தான் ஒடுக்கப்படும் மக்களுக்காகப் பேசுபவர்கள் தமிழர் என்ற அடையாளத்துடன் சம்மந்தப்பட தயங்குகிறார்கள். அதற்காக அவர்கள் இன்னுமொரு அடக்கும் அடையாளத்தைத் தேர்ந்து கொள்ளவும் முடியாது. ஆதனால் தான், நாம் அடையாளமற்றவர்களாக எம்மைக் காட்டிக் கொள்ள வேண்டியுள்ளது.

பேசும் மொழி தமிழ் -பிறந்தது இலங்கை என்று பல்வேறு அடையாளங்களை விரித்துக் கொண்டே செல்லலாம். அதில் எமக்கு எந்தப் பிரயோசனமும் இல்லை. ஒடுக்கப்படுவோரின் விளிம்பு அடையாளங்களைத் தவிர வேறு எந்த அடையாளங்களையும் நாம் எடுத்துக்கொள்ள முடியாது.

3. யுத்தத்துக்கு முன் யுத்தத்துக்கு பின்

தொடரும்……

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *