மரண மௌனத்தில்

இனியும் சூல் கொள் 2002 – சேனன்

மானுடன் சிந்தனையை உயர்த்திப் பிடித்து வானத்தை மறைத்துக் கொள்கின்றான். நேற்று பிறந்த குஞ்சுக்காக்கைகள் மட்டும் அவற்றை ஊடுருவிச் செல்கின்றன. தீயைக் குடித்தவர்களும் நூர்ந்து போனார்கள். வான் எல்லைகள் மட்டும் நரைப்பதில்லை. மரணத்தை காதலித்து நூர்வதில்லை. மரணம்! வாழ்நிலை சுரந்த வடிவற்ற சன்னதம். கூடுவிட்டு விலகிப் போய் ஓர் வேம்பி நிழலில் செத்திருந்து இளைப்பாற ஏவாத வாழ்க்கை. என்னுள் பிளக்காத செந்நீரை எண்ணி வதைக்கின்ற சிந்தனைகள்.

இமைக்காது கண்கள் நிலைத்திருக்க ஏக்கம்.
எண்ணி எண்ணி கணத்துக்குள் வானுயரும் வெறுப்பு. எகிறிக் குதித்து விண்தொட்டு ஒட்டுமொத்த உலகை அளந்து ஆங்காங்கே புல்மேய்ந்து சேமிக்காது சற்றுப் பனையோரம் பதுங்கி விக்கி குடல் விழுங்கிச் சிந்தைந்து என்னைக் காற்றுக்குள் தூவி மேலும் கனாக்களை கொண்டு வந்து போதையூட்டி ஒழுங்கு ஒழுங்கு என்று கட்டமைப்பைப் போதித்து என் கட்டுக்குள் வைக்க, விரிந்த வழியெங்கும் ஈட்டிகள் விழுந்தது.முயற்சித்த வாழ்க்கை ஒரு கணம் ஒன்றுமில்லாது நின்று பின் பிதற்றலோடு ஆரம்பித்த பின்தான் மரணம் மகத்துவமானது.

மரணம்!
அதுதான் என் ஆன்மீகம். உடலொட்டா செயற்கை உறவுகளை விட்ட சுத்த நிர்வாண சுகத்தை போதிக்கும் மதம். நின்றுகொண்டே படுக்கவும், இருந்துகொண்டே பறக்கவும் கல்வி ஞான பழைய மூளையை பாதித்து அழைத்து ஒவ்வோர் அணுக்களின் அசைவைக் கண்டு ரசிக்கவும், மொழியற்ற மற்றும் பேதைக் கவிதைச் சொல்லற்ற சொர்க்கம்.
பிறந்தெழுந்து உயிர்ப்புடைய புறத்தை கண்ணுக்கு தெரிந்த கைகளுக்கெல்லாம் பரிசளித்து வற்றிப்போய் ஒருநாள் நின்று மரணித்து மௌனமாகிப் போனோம். அறியாமை என் வீடென்றோதி என் ஞானச் சிறையுடைத்து பயன்பெற்ற நண்பர்களே, என் நாசி தொலைத்துவிட்டது முனகல்.
சிரிப்பு என் நெஞ்ச வேர் அறியாச் சாதகமாய்ப் போச்சு பாசப்பிறப்பறுந்து போச்சு.

பட்டும் படாமலும் என் மேல் தொடாமலும் என்னை உறிஞ்சிய உற்றார் நீர்.

சிவப்பான நம் பூமிக்கு மாலை சூட்டி கல்லறை என்று பொறித்து சுடலை வாழ்ந்தோம்.

சுற்றீ வர வீடுகள். வீடுகளில் மரணித்த மனிதர்கள். வந்து கதை பேசி உறவாடி என் உயிர்ப்பை பரிகசிக்கும் விடாக்கண்டர்கள். நான் ஒருபோது கூடிக்குதித்தேன் கும்மாளமிட்டு உயிர்ப்பைத் தெறித்து இப்போது அவர்களோடில்லை.
இந்த மரண மௌனத்தில் எந்தப் புதிய சங்கற்பங்களாயினும் எனக்கு சோகத்தையே தெரிவு செய்கின்றன. மறுதலித்து நான் மரணத்தை தெரிவு செய்கின்றேன். நான் மீண்டும் ஒரு யுத்தத்திற்குள்- போயிருந்துகொண்டு பழையதைக் கண்ணிமைக்காமல் பார்த்தபடி சிறை செய்கிறேன். வருபவர்கள் வந்து எனை உற்று கவனிக்க குனிந்தபடி நானும் புலன்களை திறந்து அவர்களை நிதானிக்கிறேன். அவர்களுக்கு மௌனம் கொடுத்து. என் சுவர்களை அளந்து தண்டு தளபாடங்கள் அளந்து நிலம் நோக்கி கால்களிற் பாயும் கண்களுடன் பலரும் வந்து வந்து ஒருவரை பிரதிபலித்தனர். நான் போகப் போகிறேன் எல்லோரும் எனக்கு முன்னால் நின்று பற்கள் காட்டினர். சுற்றிவர எங்கும்மண், ஊரார் பிதற்றுவர் மண்டைக்குள். அவர்கள் கதைகளிற் கவனமெடுக்க முடியாது. “தோன்றிற் புகழோடு தோன்றுக” என்று இடைக்கிடை வந்து அம்மா காதில் ஓதிப் போவா. எதை எதை இணைக்குமென்று தெரியாது மரணம் என்ன செய்யும்? உயிர்விழுங்கி விம்மியவன் இவன் என் காதல் மரணமே தேகத்தை ஆற்று.

@@@@@@@@@@@@@@@@@@

அளவாக அழுது நாளைக்கும் அழ சேமிக்கும் கஸ்தூரி ஒருநாள் என் கரத்தை இதயத்தில் அழுத்தி கண்களை குறுக்கி தன்னை நட்பிக்கச் சொன்னாள். அடிவயிறு கலங்க கைகளை உருவிக் கொண்டேன். நான் மரணித்து புரிய கபாலம் சிதறிப் போய் கஸ்தூரி கைகளால் தலைவைத்தால், துடிப்பை ரசித்துவிட்டு, நாளைக்கு வரவென்று வந்துவிட்டேன். சொச்சத்தை அவள் வெறுமனே சிந்தினாள்.

என் நேற்றுவரை வரலாறு களங்கமின்மை என்றும் சமூக அங்கத்துவம் இன்னும் வாய்களில் விழுந்து கேள்விகள் ஆகாததும் அவளது பழைய பதிவுகள்தான். இன்றைய தருணத்தில் அவளுக்கு வேறு கனவுகள் இருக்கலாம் என நான் வார்த்தைகளை எதிர்ப்பார்த்தேன். வாக்கியங்கள் அவளுக்கு சொற்களை இணைத்துப் பிறந்தன. இந்தப் பேதமை இன்றோடு சரி. மூக்கில் உயிர் வந்து முட்டும் ஒரு நாள் வரைக்கும் வேண்டாம்.
அவள் அனைத்திற்கும் அருகதையானவள் அவள் வாழ்ந்தால்தான் அகிலத்திருப்தி.
ஆனால் என்ன நோக நோக பெற்றெடுத்த அவளை ஊரில் ஒரு உதிர சடுத்திக்கு மணமுடித்துக் கொன்றார்கள்.

@@@@@@@@@@@@@@

வெளிக்குள் நேரம் விதைப்பது தொடரும், மார்புக்குள் உக்கி உருகிவிட்ட எலும்புக்கள் மேலும் வெளிக்கு தெரியாத இன்று பசித்திருக்க வேண்டும்.
@@@@@

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *