ஜரோப்பிய ஒண்றியம்- ஒரு இடதுசாரியப் பார்வை-பாகம் 2

ஜ. ஓ. – திறந்த எல்லை – சனநாயகம் பற்றி
1
மேற்கத்தேய நாடுகள் மத்தியில் நிலவும் திறந்த போக்குவரத்து வசதிகள் ஜரோப்பிய ஒண்றியத்தால் உருவாக்கப்பட்ட ஒரு நடவடிக்கை அல்ல. உதாரனமாக பிரான்சுக்கும் ஜேர்மனிக்கும் இடையில் இறுக்கமான எல்லைக் காவல் என்றைக்கும் இருந்ததில்லை. ஏனெனில் முழுமையாக எல்லையைக் கட்டுப்படுத்துவது என்பது முடியாத காரியமாகவும் இருந்தது. கடலாற் சூழப்பட்ட இங்கிலாந்திற்கூட முழுமையான எல்லைக் காவல் சாத்தியமாயிருக்கவில்லை. ஆனால் போக்குவரத்துப் பாதைகளிற் தடைகள் போடப்பட்டிருந்தன. பொருளாதராப் பலம் குறைந்த நாடுகளில் இருந்து வருபவர்களைக் கட்டுப்படுத்த இந்தக் காவல் அரன்கள் உபயோகிக்கப்பட்டன. பெரும் முதலாளிகளுக்காக போடப் பட்ட தடைகள் அல்ல இவை. குறிப்பாக வேலை வாய்புக்காக இடம்பெயரும் தொழிலாளர்களைக் கட்டுப்படுத்துவதே இதன் முக்கிய பணிகளில் ஒன்றாக இருந்தது. முதலாளிகளுக்கு திறந்த எல்லையும் – தொழிலாளர்களுக்கு தடுப்பு எல்லைகளும் என்ற நிழைலயே இருந்தது.

ஜரோப்பிய ஒண்றியத்தின் புதிய நடவடிக்கையாக முழு ஒண்றிய உறுப்பினர்கள் மத்தியில் எல்லைப் பரிசோதனை நிலையங்கள் திறந்துவிடப்பட்டது. இருப்பினும் இதனாற் பயனடைந்த தொழிலாளர்களும் பயனிகளும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மிகக் குறைந்த வீதத்தினரே. “எல்லைகள் திறக்கப்பட்டதால்தான் ஏராளமான புலம்பெயர்தல் நிகழ்கிறது – அதனாற்தான் ஏராளமான வேற்றுநாட்டார் வருகிறார்கள்” – என்ற அதி தீவிர வலது சாரிகளினதும் -துவேசிகளினதும் கூற்று வெறுப்பு பரப்புப் பிரச்சாரமே தவிர அதில் உண்மையில்லை. மேற்கத்தேய அனைத்து நாடுகளிலும் குறிப்பிடத்தக்க அளவு வெளிநாட்டு வேலையாட்கள் அனுமதிக்கப்பட்டே வந்திருக்கிறார்கள். அல்ஜீரியா மொறொக்கோ முதலான நாடுகளில் இருந்து வலிய வருவித்த தொழிலாளர்கள்தான் பிரெஞ்சு மெற்றோ மற்றும் வீதிகள் கட்டிடங்களைக் கட்டி எழுப்பினர். ஜமெய்க்காவில் விளம்பரம் செய்து தொழிலாளர்களை அள்ளிக் கொண்டுவந்துதான் இங்கிலாந்தில் பெரும் பாலங்கள் கட்டப்பட்டது. இன்றுகூட கிழக்காசிய நாடுகளில் விளம்பரம் செய்து நேர்சுகளை அள்ளிக்கொண்டுவரும் செயற்பாடு நிகழ்கிறது. வைத்தியசாலைகள் முதற்கொண்டு பல்வேறு சேவை நிலையங்களின் அடிமட்ட வேலையாட்கள் மற்றம் குறைந்த திறன் வேலையாட்களில் பெரும்பான்மையானோர் வெளிநாட்டவர்களாகவே இருக்கிறார்கள். வெளிநாட்டு தொழிலாளர் வருவது முழுமையாக முடக்கப்பட்டால் பொருளாதாரம் படுத்துவிடும் என்பது இந்த அரசுகளுக்கும் முதலாளிகளுக்கும் நன்றாகவே தெரியும். இது ஒன்றும் ஒழித்து மறைத்து நிகழும் செயல் அல்ல. ஆனால் இந்த தொழிலாளர் வருகைத் தொகையை எவ்வாறு கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பதுதான் அரசியல் வாதிகள் மத்தியி;ல பந்தாடப்படும் கதையாடல்களில் முக்கியமாக இருக்கிறது.

அனைத்து வலதுசாரிய அரசியல்வாதிகளும் வெளிநாட்டார் வருகையை எதிர்ப்பதாக மக்கள் முன் பாவனை செய்கின்றனர். அதன்மூலம் தாம் உள்நாட்டு மக்களின் நலன்களைக் காப்பதாக தங்களை நிறுவ முயற்சிக்கின்றனர். இதை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் துவேசிகள் வெளிநாட்டார் மேலும் ஆசிய ஆபிரிக்கர் மேலும் வெறுப்புப் பரப்பி துவேசத்தை தூண்டும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளர்களுக்கு வழங்கும் ஊதியத்தைக் குறைந்தளவில் வைத்திருப்பதற்காகவும் – தேவையான அளவு தொழலாளர்கள் சந்தையில் இருக்கவேண்டும் என்பதற்காகவும் வெளிநாட்டு வேலையாட்களை அனுமதிக்கவேண்டியிருக்கும் அதே வேளை அவர்களின் வருகையைக் கட்டுப்படுத்துவதும் அவசியமாக இருக்கிறது. இந்தக் கட்டுப்பாடுகள் தொழலாளர்களின் கையில் இல்லை. எல்லைக் கட்டுப்பாடுகள் விதிகளைத் தீர்மானிப்பதும் அதைக் கட்டுப்படுத்துவதும் முதலாளித்துவத்தின் நலனின் அடிப்படையிலேயே நிகழ்கிறது. எல்லைக் காவல் நீக்கப்பட்டதும் இந்த அடிப்படையிலேயே.

இவ்வாறு எல்லைக் காவல் தளர்த்தப்படுவதாக பிரச்சாரிப்பவர்கள் தாம் வெளிநாட்டார்களுக்கு எதிராக புதிதாக அறிமுகப்படுத்தும் சட்டதிட்டங்களைப் பற்றி பேசுவதில்லை. வெளிநாட்டாருக்கு எனத் தனிப்பட்ட குறைந்த ஊதியம் – அவர்கள் சேவைகளை பெற்றுக்கொள்ள பணம் செலுத்ததுல் முதலான சட்டங்களை இயற்ற ஜேர்மனி முயற்சித்து வருகிறது. ஜரோப்பியத் தொழிலாளர்களின் குடும்பங்கள் அரச உதவிப் பணம் பெறமுடியாது புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரோன் நாட்கணக்காக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதையும் ஊடகங்கள் அதுபற்றி நாட்கணக்கில் பிரச்சாரம் செய்துகொண்டிருந்ததையும் அறிவீர்கள். இத்தனைக்கும் 20 000க்கும் குறைந்த தொழிலாளர்களே அத்தகய உதவித் தொகைக்கு தகுதியானவர்களாக இருக்கிறார்கள் எனச் சொல்கிறது அரச கணிப்பீடு. தவிர பில்லியன் கணக்கான பணம் வெளிநாட்டு வேலையாட்களின் வரியாகத் திரட்டப்படுகிறது. அதே சமயம் கூகுல், அமெசோன் ஆகிய பெரும் நிறுவணங்கள் பில்லியன் கணக்கான வரியைச் செலுத்தாமல் தப்பிப் போக விடப்படுகிறது. இத்தகய மோசமான பொருளாதார நடைமுறைக்குள்தான் நாம் வாழ்கிறோம்.

வெளிநாட்டு மற்றும் ஆசிய ஆபிரிக்கத் தொழிலாளர்கள் மேல் துவேசத்தைப் திருப்புவதால் தமது போலியான –கேவலமான கொருளாதார கொள்கைகளை மறைத்து விட முயற்சிக்கின்றனர் வலதுசாரிகள். வெளிநாட்டாரைப் பொது எதிரியாக்கி மக்களை தங்களோடு இணைக்க முயற்சிக்கின்றனர். இது தவிர எல்லைகளை முழுமையாக மூடும் நோக்கு எந்தத் தேசிய அரசுக்கும் கிடையாது. அதேபோல் கட்டற்ற எல்லைத் திறப்பு நோக்கும் அவர்களுக்கு கிடையாது. வறுமையும் பாரிய ஏற்றத்தாழ்வும் நிறைந்த இந்த உலகில் அதற்கான சாத்தியம் இல்லை. உலகளவில் திட்டமிட்ட பொருளாதார முறை அறிமுகமாகும்போது மட்டுமே அத்தகய கட்டற்ற எல்லைத் திறப்பு சாத்தியப்படும். முதலாளித்துவத்தின் திறந்த எல்லை என்பது அவர்களின் நலன்களுக்காக என்றைக்கும் எந்த நிமிடமும் மூடப்படலாம். எமது முகங்களில் கதவு எப்போது அடித்துச் சாத்தப்படும் என்பது எமக்குத் தெரியாது. ஏனெனில் கதவைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் எம்மிடம் இல்லை. அது வலது சாரிகள் கையிலிருக்கிறது- அதற்கூடாக துவேசத்தன்மை கொண்டதாக இருக்கிறது. அதனாற்தான் முதலாளித்துவத்தின் அடிப்படையில் திறந்த எல்லை பற்றி பேசுவது அர்த்தமற்றது என்கிறார்களன் சோசலிஸ்டுகள். அந்தக் கனவு நிலைப்பாட்டை சில இடதுசாரிகளும் முன்வைக்கிறார்கள். இமிக்கிரேசன் பூதத்தைக் காட்டி துவேசம் கிளப்பும் யுகிப் (பிரித்தானிய சுதந்திரக் கட்சி) போன்ற மோசமான தீவிர வலதுசாரியக் கட்சிகளின் தொல்லை தாங்க முடியாமல் சிலர் அதற்கு நேரெதிர் நிலையில் நிற்க விரும்புகிறார்கள். இந்த விருப்பு அவர்களை திறிந்த எல்லை கோசத்தை வைக்கத் தூண்டுகிறது. இது புரிந்துகொள்ளக் கூடியதே. பொருளாதராத்தின் பலமான நாடுகளை நோக்கி வேலை வாய்ப்புக்காக மக்கள் நகர்வதை தடுத்து நிறுத்த முடியாது. அதே சமயம் அவ்வாறு சில மேற்கு நாடுகள் நோக்கி வரும் அனைத்து தொழிலாளர்களையும் உள்வாங்கும் நோக்கோ அடிப்படையோ எந்த அரசுக்கும் கிடையாது. அவ்வாறு உள்வாங்கினாலும்கூட அவர்களுக்கு உள்நாட்டுத் தொழிலாளர்களுக்குரிய அனைத்து வசதிகளையும் வழங்கும் சாத்தியமில்லை. அனைவரையும் உள்வாங்கும் அளவுக்கு சேவைகளை வழங்கும் முதலீடு செய்யப்படப்போவதில்லை.

இந்த பொது அறிவு உள்நாட்டு வறிய தொழிலாளர்களின் மனங்களில் கிலி ஏற்படுத்துகிறது. வெளிநாட்டார் வந்தால் தமது வேலைகள் பறிபோய்விடும் என்ற உள்ளுணர்வு அவர்களுக்கு ஏற்படுகிறது. சேவைகள் இறுகி தமது சலுகைகள் பறிபோய்விடும் என்ற பயம் எழுகிறது. வீட்டு விலை – வாடகை – மற்றும் வீடடுப் பண ஒதுக்கீடு –முதலிய அனைத்தும் அழுத்தத்துக்கு உள்ளாகும் என்ற எண்ணம் மேலோங்குகிறது. இதோடு இணைத்துப் பொருளாதார நெருக்கடி அவர்கள் மேல் பாரமாக இறக்கிவிடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே சேவைகளை வெட்டி மேலதிக நெருக்கடிகளை உருவாக்கும் செயல்களைத்தான் அரசு செய்து வருகிறது. நாம் ஒன்றாக இணைந்து மிச்சம்பிடித்து பொருளாதாரத்தை தூக்கவேண்டும் என்ற கதைபேசி மக்களின் தலையில் மிளகாய் அரைக்கும் வேலையைத்தான் அரசு செய்து வருகிறது. வங்கிகளையும் வீழும் பெரும் வியாபாரங்களையும் காக்க அவர்கள் பில்லியன் கணக்கான மக்களின் வரிப்பணத்தை செலவு செய்யும் அதே வேளை – மக்கள் சேவைகளுக்காக ஒரு பவுன்சு செலவு செய்யத் தயாராக இல்லை. இந்தக் கேவலமான நி;லையில்தான் துவேசிகள் மக்களுக்குள் வெறுப்பைக் கக்குகிறார்கள். வேளிநாட்டார் உங்கள் சேவைகளைச் சூறையாடுகிறார்கள் எனவும் உங்கள் வேலையைப் பறிக்க வருகிறார்கள் எனவும் வசை பாடுகிறார்கள். இதனால் மக்கள் மத்தியில் – தொழிலாளர்கள் மத்தியில் பிளவு ஏற்படுத்தப்படுகிறது. உள்நாட்டுத் தொழிலாளர்கள் வெளிநாட்டார் வருகையைச் சந்தேகத்தோடுதான் பார்க்கிறார்கள். உண்மைப் புள்ளி விபரங்கள் பற்றி யாருமே பேசுவதில்லை. பெனிபிட்டில் இருக்கும் சிறுபான்மையினரை ஊடகங்களில் அணிவகுப்பு செய்து கீழ்மைப்படுத்தி வெறுப்பு மேலும் தூண்ட உதவுபவையாக இயங்குகின்றன அனைத்து வலது சாரிய ஊடகங்களும். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தெருவில் நின்று போராடியதைப் பற்றி ஒரு சிறு செய்திக்குறிப்புக்கூட இவர்கள் போடுவதில்லை. மில்லியன் கணக்கான பிரெஞ்சுத் தொழிலாளர்கள் இன்று தெருவில் நின்று போராடி வரும் செய்தி முழுமையாக இருட்டடிப்புச் செய்யப்பட்டிருக்கிறது. யாருக்கும் இந்த விபரங்கள் தெரியப்படுத்தப்படுவதில்லை. ஆனால் துவேசிகள் பத்துப்பேர் வால்தம்ஸ்டோவில் ஊர்வலம் போனால் அன்று முழுக்க ஊடகங்கள் அது பற்றிப் பேசி அவர்களுக்கு பெரும் பிரச்சார சந்தர்ப்பத்தை வழங்குகின்றன. சில ஆயிரம் பேரை மட்டும் கொண்டிருந்த யுகிப் முதலான தீவிர வலதுசாரிய அமைப்புக்களை வளர்த்து விட்டதும் இந்த வலதுசாரிய ஊடகங்கள்தான். இதே சமயம் ஆயிரக்கணக்கானோர் பங்குபற்றும் டஸ்க் முதலான இடதுசாரிய தேர்தல் அமைப்புக்கள் பற்றிய முழு இருட்டடிப்பை அவர்கள் செய்கின்றனர்.

இந்நிலையில் துவேசத்தை எதிர்க்க இடதுசாரிகள் வலுசாரிகளுடன் இணைவது முற்றிலும் தவறானது. துவேசத்துக்கு எதிரான மேடைகளில் வலதுசாரிய லேபர் கட்சி எம்பிக்கள் மற்றும் கன்சவேட்டிவ் கட்சி எம்பிக்களை ஏற்றுவதன் முலம் என்ன சாதிக்க முடியும். இவர்கள்தான் துவேசம் தூண்டப்படுவதற்கு காரனமான சேவை மறுப்பு வெட்டுதல் கொட்டதல்களைச் செய்து வருகிறார்கள். இவர்களுக்கு துவேச எதிர்ப்புச் சான்றிதழ்களை இலகுவாக வழங்கும் செயற்பாட்டை நாம் செய்ய முடியாது. அதேபோல்தான் திறந்த எல்லை என்ற வலைக்குள் விழுந்து உள்நாட்டு தொழிலார்களைப் பிரித்துப் பேச முடியாது. வெளிநாட்டாருக்கும் உள்நாட்டுத் தொழிலாளர்களின் அதே உரிமை- ஊதிய தொகை உட்பட – வழங்கப்பட வேண்டும் என்ற விடாப்பிடியான கோரிக்கை இவர்களின் முகத்திரைகரைகளைக் கிழிக்கும். அதுதான் உள்நாட்டு வேலையாட்களுக்கு அரசின் நடவடிக்கைகளையும் – உண்மையான உள்நோக்கையும் தெளிவுபடுத்தும். அதே சமயம் இது வெளிநாட்ட வேலையாட்களுக்கு உள்நாட்டாரின் நிலையையும் தெளிவுபடுத்தும். எமது பொது எதிரி வலதுசாரிய அரசும் முதலாளித்துவமும் என்ற தெளிவு பிறக்க வேண்டும். தொழிலாளர் மத்தியில் போட்டியை அதிகரித்து ஊதியத்தை குறைந்தளவில் வைத்துப் பராமரிக்கும் முதலாளித்துவத்தின் முகத்திரை கிளிக்கப்படவேண்டும்.

பெல்ஜியம் மற்றும் பிhன்சில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தபோது எவ்வாறு கேட்டுக்கேள்வி இன்றி எல்லைகள் அடித்து மூடப்பட்டன என்பதை அறிவேம். பிரான்சில் கலையில் இருக்கும் கொடிய அகதிகள் முகாமில் ஆயிரக்கணக்கான அகதிகள் வாடி வதங்கி வருகிறார்கள் அவர்களைக் கேட்டுப்பாருங்கள் ஜரோப்பிய எல்லை கட்டுப்பாடுகள் பற்றி –நிறையச் சொல்வார்கள். சமீபத்தில் தமிழ் சொலிடாறிற்றி அமைப்பைச் சேர்ந்தவர்கள் அந்த அகதிகளுக்கு உதவச் சென்றபோது அங்கு போய் சேர முடியாமல் பிரெஞ்சு அரசால் தடை செய்யப்பட்டார்கள். யாரின் கட்டுப்பாட்டில் இருப்பதற்கு யார் ஆதரவு தர வேண்டும் என்ற கேள்விகளை உரத்து சிந்திக்கவேண்டும் நாம்.

2

முழுமையான சனநாயகம் நிறைந்த நாடு என உலகில் எந்த நாட்டையுமே குறிப்பிட முடியாது. முதலாளித்தவத்தின் தோற்றத்தின்போது இருந்த சனநாயக உரிமைகளிற் பலகூடப் பறிக்கப்பட்ட நிலையிலேயே மேற்குலக நாடுகளின் சனநாயக நிலவரம் இருக்கிறது. ஒவ்வொரு நாடுகளும் ஒவ்வொருவகை முறையில் சனநாயகத்தைக் கட்டுப்படுத்தி வருகின்றன. சிலநாடுகளில் இருக்கும் நல்ல உரிமைகள் சில நாடுகளிற் கிடையாது. நோர்வே, சுவீடன் போன்ற நாடுகளில் இருக்கும் பல்வேறு உரிமைகள் இங்கிலாந்து முதலான நாடுகளில் இருக்கும் பென்களுக்கும் தொழிலாளர்களுக்கம் கிடையாது. அதே சமயம் சுவீடனும் அங்கிருக்கும் மக்களின் உரிமைகளை மட்டுப்படுத்தவும் சேவைகளைக் குறைக்கவும் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. அதற்கெதிரான போராட்டங்கள் நடந்து வருகின்றன.

ஜரோப்பிய ஒண்றியம் மேற்கு நாடுகளில் பொதுமைப்படுத்தப்பட்ட உரிமைகள் பலதை உள்வாங்கிய மனித உரிமைச் சட்டத்தை முன்வைக்கிறது. இது சில நாடுகளின் சட்டங்களை விட முற்போக்கானதாகவும் – சில நாடுகளின் சட்டங்களை விட பிற்போக்கானதாகவும் இருக்கிறது. தொழிலாளர் நலன் என்பது – அவர்களின் உரிமைகளுடன் பின்னிப் பிணைந்த விசயம். அவர்களின் உரிமைகள் எந்த முலாளித்து அரசாலும் விட்டுக்கொடுக்கப்படுவதில்லை. மாறாக இது போராட்டத்தால் நிர்மானிக்கப்படுகிறது. இந்த இரு வர்க்கங்கங்களுக்கும் இடையில் தொடரும் முரன்போர் –மற்றும் யார் பலம் பெறுகிறார்கள் என்பதைப் பொறுத்து இந்த உரிமைகள் கிடைப்பது தீர்மானிக்கப்படுகிறது. இதில் நிரந்தரம் என்று எதுவும் இல்லை. இன்று கிடைக்கும் உரிமைகள் நாளை பறிக்கப்பட்டுவிடும். இன்றில்லாத உரிமைகள் போராட்டம் பலப்படுவது மூலம் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் வழங்கப்படக்கூடிய உரிமைகளைப் பொதுமைப்படுத்தி முடக்கும் செயலையே ஒண்றியம் செய்கிறது. இவர்களைத் தாண்டி உரிமைக் கேரிக்கை தேசிய எல்லைக்குள் எழுந்தாலும் அதை முறியடிக்கும் அதிகாரம் இவர்களிடம் உண்டு. மனித உரிமைச் சட்டத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவருவேன் எனச் சபதமிட்டுத் திரிந்த டேவிட் கமரோன் போன்றவர்கள்தான் ஒண்றியத்தை ஆதரிக்கிறார்கள்.

மனித உரிமையின் உச்சக்கட்டமாக ஒண்றியத்தை பார்ப்பதுபோன்ற வெட்கக்கேடு வேறெதுவும் கிடையாது. இத்தாலியில் சர்வாதிகார முறையில் தமது ஏஜென்டை வைத்து அம்மக்கள் மேல் அதிகாரத்தை திணித்ததும் – கிரேக்கத்தில் எவ்வாறு கொடிய முறையில் அடக்குமுறையை ஒண்றியம் செய்கிறது என்பதும் ஒரு சில சமீபத்திய உதாரனங்கள் மட்டுமே. ஜரோப்பிய மனித உரிமைக் கமிசனுக்கு பொறுப்பாக இருந்தவரை சந்திக்கும் வாய்ப்பு ஒரு முறை கிட்டியிருந்தது. இலங்கையில் மனித உரிமை மீறப்படுவது என்பது என்ன இரகசியமா? மனித உரிமைதான் உங்களுக்கு முக்கியமென்றால் நீங்கள் சொல்லக்கூடிய – செய்யக்கூடிய விசயங்கள் இலகுவானவை என்பதைச் சுட்டிக் காட்டியிருந்தேன். மக்களின் நலன் மட்டும் முதன்மையாக நினைக்கும் நாம் உரிமை மீறலைக் கண்டிக்கவும் – அதற்கெதிரான நடவடிக்கை எடுக்கவும் தயங்கப்போவதில்லை. மனித உரிமையைத் தூக்கிப் பிடிப்பதாக வெடி கிளப்பும் ஒண்றியத்தால் ஏன் முடியாது? உங்களுக்கு எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என அவர் நேரிடையாக கூறினார். பல்வேறு விசயங்களை தாம் கவணத்தில் எடுக்க வேண்டியிருக்கிறது என்ற விசயம் செல்லப்பட்டது. (வியாபார நலன்கள் என்று சொல்லாவிட்hலும் – அதன் அடிப்படையையே அவர் குறியிட்டு பேசினார்). இலங்கைக்கான ஜி.எஸ்.பி சலுகை பற்றிய விவாதத்தின் போது இலங்கை அரசுக்கெதிராக நான் ஜரோப்பியப் பாராளுமன்றத்தில் பேச அனுமதிக்கப்பட்டேன். நான் பேசுவதுக்கு முன்பு – இது ஒன்றும் வழமையான நடவடிக்கை அல்ல என்றும் இவ்வாறு நாம் விவாதம் அனுமதிப்பதில்லை என்றும், பல்வேறு கதைகளை பிரசிடன் விளங்கப்படுத்திய பிறகே பேச அனுமதி வழங்கப்பட்டது. இலங்கை அரசின் பக்கம் மட்டும் பேச்சை கேட்க முடியாது. தமிழ் பேசும் மக்களின் பக்கமும் கேட்கப்படவேண்டும் என்ற இடதுசாரிய – சோசலிச கட்சி உறுப்பினர்களின் விடாப்பிடியால்தான் அந்தச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. அதற்கு முதலும் அதற்குப் பிறகும் இத்தகய சந்தர்பம் வழங்கப்படவில்லை. இலங்கை அரச பிரதிநிதிகள் தொடர்ந்து குரல் எழுப்பிக்கொண்டிருப்பதை பாராளுமன்றம் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது. இலங்கை அரசின் பக்கம் முக்கியமாக வாதிட்டவர்கள் முழப்பேரும் வலது சாரிகள் – பெரும்பாலும் பிரித்தானிய உறுப்பினர்கள் – பிரித்தானிய வர்த்தக பிரதிநிதிகளும் அவர்களுக்குச் சார்பாக வந்திருந்து வாதாடினர். இதுதான் பாரலளுமன்றத்தின் உண்மை நிலவரம்.

ஜரோப்பியப் பாராளுமன்றம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டிருப்பதால் சில எதிர்புகளை அங்கு மக்கள் பதிய முடிகிறது. எல்லா பாராளுமன்றத்திலும் இது சாத்தியமே. இதனால் இடதுசாரிகளும் இந்த தேர்தலில் நிற்கிறார்கள். பாராளுமன்றத்துக்குள் இருக்கும் இடதுசாரிகளின் நடவடிக்கை பற்றி புள்ளி விபரங்களை பார்த்தால் தெரியும் அவர்கள் படும்பாடு. பெரும்பான்மையான அமர்வுகளில் அவர்கள்தான் பங்கு பற்றுகிறார்கள். பெரும்பான்மையான நடவடிக்கைகளை எதிர்பதிலேயே அவர்கள் நாட்கள் கழிகிறது. மாறாக வலதுசாரிகள் அமர்வுகளிற் பங்குபற்றுவது குறைவாகவே இருக்கிறது. ஆனால் கொள்கைகள் அனைத்தையும் அவர்களே தீர்மானிக்கிறார்கள். இந்த பாராளுமன்றம் சனநாயகத்தை முடக்கும் பல்வேறு செயற்பாடுகளை அறிமுகப்படுத்திய வரலாறு கொண்டது. இங்கிலாந்தின் உலோகத் தொழிற்சாலை மூடப்படடும் மிரட்டலை டாட்;h செய்தபோது அந்த தொழிற்சாலையைத் தேசியமயப்படுத்தும் கோரிக்கை தொழிலாளர்கள் மத்தியில் எழுந்தது. அழுத்தம் காரனமாக தேசிய அரசு அதை ஏற்றுக்கொள்ள நேர்ந்தாலும் ஜரோப்பிய பாராளுமன்றம் அதை மறுக்கும். அவர்களின் சட்டப்படி இவ்வகை தேசியமயமாக்கல் சாத்தியமில்லை.

உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படும் நிலை இருப்பதால் இந்தப் பாரளுமன்றத்தை இடதுசாரிகள் கைப்பற்றி நிலவரத்தை மாற்ற முடியாதா என்ற கேள்வி எழலாம். போராட்ட நிலவரங்கள் இந்தப் பாராளுமன்றத்துக்குள் இருக்கும் இடதுசாரிகளை ஏற்கனவே பலப்படுத்தியிருக்கிறது. இருப்பினும் இந்த பாராளுமன்றத்தின் அதகாராமும் குறுகிய எல்லைகளைக் கொண்டது. இந்த பாராளுமன்றத்தின்மேல் ஜரோப்பிய கமிசன் என்ற ஒரு தேர்ந்தெடுக்கப்படாத அமைப்பு குந்தியிருக்கிறது. பாராளுமன்றத்தின் முடிவுகளைக் குப்பையில் போடுவது முதற்கொண்டு பல்வேறு அதிகாரங்கள் அவர்களுக்கு உண்டு;. அந்தக் கமிசனை முழுமையாக ஆழுமை செய்வது ஜேர்மனிய அரசு. ஆக மொத்தத்தில் அவர்களை மீறிப் பாராளுமன்றம் ஒன்றும் செய்துவிட முடியாது. தேர்தல் – தெரிவு என்பவை வெறும் போலிக் கூத்தே. ஜேர்மனிய முதலாலித்துவ வர்க்கம் தமது இருப்பு குலையும் நிலை வரும் என்று தெரிந்தால் பாராளுமன்றத்தைக் கலைக்கவும் தயங்காது. இதுதான் அவர்கள் சொல்லும் சனநாயகத்தின் எல்லைகள்.

இப்படியிருக்க சில இடதுசாரிகள் ஏன் இந்தப் பாராளுமன்றத்துக்கு ஆதரவாக இருக்கிறார்கள் எனக் கேட்கலாம். இவர்கள் இடதுசாரிகளாக இருப்பினும் பாராளுமன்ற நடவடிக்கைக்குள்ளால் பல்வேறு சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த முடியும் என நம்புகிறார்கள். இவர்கள் முழுமையான முதலாலித்துவ எதிர்ப்பு நிலையில் இருந்து அரசியலை முன்னெடுக்கும் சோசலிஸ்டுகள் அல்ல. மாறாக சீர்திருத்தவாத இடதுசாரிகள். வலதுசாரி கேவலங்களுடன் ஒப்பிடும்பொழுது இவர்கள் நியாயமான குறிக்கோள்களைக் கொண்டவர்கள். இருப்பினும் இவர்கள் போராhட்டத்தின் அடிப்படையில் இயங்குபவர்கள் அல்ல. இவர்கள் மத்தியில் கூட அண்மைக் காலமாக மாற்றங்கள் ஏற்படத் தொடங்கி விட்டது. கிரேக்கத்து கம்யுனிச கட்சி, சிறிசா முதலான முக்கிய அமைப்புக்கள் ஜரோப்பிய ஒண்றியத்துக்கு எதிரான நிலைப்பாடு நோக்கி நகரத் தொட்ங்கியிருக்கின்றன. ஜேர்மனிய டி லிங்க என்ற இடதுசாரிய கட்சிக்குள் இருக்கும் வலதுசாரிய போக்குகள் மட்டும் தொடர்ந்து பாராளுமன்றத்தை கட்டிப்பிடித்து அழுதுகொண்டிருக்கின்றன. அக்கட்சிக்குள்கூட இடதுசாரிகள் மத்தியில் திட்டவட்டமான ஒண்றிய எதிர்ப்பு எழுந்துள்ளது. சோசலிஸ்டான லூசி ரெட்லர் அக்கட்சியின் தலைமை உறுப்பினர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஒரு இடதுசாரிய அரசு ஜரோப்பாவில் உருவாகுமாயின் அதன் முதல் எதிரி ஜரோப்பிய ஒண்றியமாயிருக்கம். அப்படி ஒரு அரசு உருவாகுவதைத் தடுப்பதற்கான அனைத்தையும் அவர்கள் செய்வர். கிரேக்கத்து தேசிய இறையான்மையை துண்டு துண்டாக உடைத்துக்கொண்டிருப்பது இந்த ஒண்றியம்தான். ஜேர்மணிய வங்கிகள்தான் கிரேக்க அழிவில் இருந்து லாபமீட்டிக்கொண்டிருக்கின்றன. கீரேக்கம் தமது கட்டுப்பாட்டுக்கு அடிபணியாவிட்டால் அவர்களை வெளியேற்றி பொருளாதார தண்டனைகள் வழங்க இருப்பதாக ஒண்றியம் மிரட்டிய வரலாறு சமீபத்திய வரலாறே. இது தவிர ஜரோப்பிய நாணயம் – ஈரோ – என்றுமில்லரா அளவு நிரந்தரத் தன்மையற்றதாக இருக்கிறது. ஈரோ எப்போதும் உடையலாம் என்ற நிலைதான் இருக்கிறது. இந்நிலையில் பல்வேறு சட்டதிட்டங்கள் மாற்றப்பட்டு வருகிறது. ஒண்றியத்துக்குள் இருக்கும் பலமான நாடுகளுக்கு அதிகாரம் அதிகரிக்கும் நடவடிக்கையும் – உள்ளே ஒரு மேற்கு நாட்டு குழு உருவாகுவதும் நிகழ்ந்துள்ளது. ஜரோபப்பிய வங்கி – இராணுவம் -இரகசிய சேவை என தமது பாதுகாப்பு பற்றியும் அவர்கள் பேசுகிறார்கள. இது எல்லாம் யாரைக் கேட்டு நிகழ்கிறது. மக்கள் இதில் தங்கள் கருத்தைப் பதிய முடியுமா? இந்த லட்சனத்தில் சனநாயகம் பற்றி;ப் பேச இவர்களுக்கு என்ன அருகதையிருக்கு?

தேசிய அரசுகளையோ தேசியவாதத்தையே எவ்விதத்திலும் கேள்வி கேட்கும் அமைப்பல்ல ஒண்றியம். மாறாக தேசியவாதத்துக்கு ஆதரவாகவும் அதை வளர்ப்பதாயும் இயங்கிவரும் அமைப்பு இது. இவர்கள் பேசும் சர்வதேசம் என்பது அரசுகளின் சுரண்டலுக்கான இணைவாக இருக்கிறது. உண்மையில் கட்டப்படடிவேண்டியது மக்களுக்கிடையிலான இணைப்பு. கலாச்சாரம் தொடங்கி பொருளாதாரம் ஈறாக ஒண்றினைந்த வாழ்நிலை – பகிர்வு எற்படுதலே நியாயமான சர்வதேசியமாக இருக்கும். மக்கள் தாமாக ஒருவரை ஒருவர் வெறுப்பவர்கள் அல்ல. அவர்கள் வாழும் பொருளாதார –சமூக கட்டுமானமே அந்த உடைவுகள் ஒற்றுமைகளைத் தீர்மானிக்கிறது. ஆக சமூக உறவுமுறை மாறாமல் தேசிய எல்லைகள் உடைக்கப்பட முடியாது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *