ஐரோப்பிய ஒன்றியம் ஒரு இடதுசாரியப் பார்வை!-பாகம் 3

பிரித்தானியாவில் ஐரோப்பிய ஒன்றியம் பற்றிக் கடந்த நாட்களாக நடந்துவரும் விவாதங்களைப் பார்ப்பவர்களுக்கு ஒரு விஷயம் மட்டும் தெட்டத் தெளிவாக விளங்கியிருக்கும்.

“பொய். பொய். பொய். பொய் தவிர வேறில்லை” என்ற மந்திரம்தான் ஓதப்பட்டுக்கொண்டே இருக்கிறது. “இரண்டு பக்கமும் நிறையப் பொய்கள் இருக்கின்றன ” என்று சுட்டித்தான் பி.பி.சி ஊடகவியலாளர்கள் கூட கேள்வி கேட்கிறார்கள்.

உண்மை அறியும் இடம் எனத் தனிப்பட்ட இணையப் பக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது பி.பி.சி. வலதுசாரியக் கட்சிகளின் பிரச்சார வாய்கள் தமது இஷ்டத்துக்கு சொல்வதை எல்லாம் “பக்ட்” என புலம்புவதால் இந்த நிலை.

ஊடகவியலாளர்களும் இதில் விதிவிலக்கல்ல. நடுநிலை ஊடகவியல் என்ற ஒன்றும் இல்லை என்ற உண்மையை அவர்கள் இத்தருணம் மீண்டும் நிரூபித்திருக்கின்றனர்.

பி.பி.சி முதலிய ஊடகங்களில் இந்த பொது வாக்கெடுப்பு பற்றிய செய்தி வெளியிடும் பலர் ஏற்கனவே பல்வேறு ஒன்றிய செயற்பாடுகளில் இருந்தவர்களாக இருக்கிறார்கள். நடுநிலை என்ற பெயரில் நிக் ரோபின்சன் போன்றோர் பச்சையான பிரச்சாரத்தை முன்வைக்கின்றனர்.

ஆளும் கட்சியில் இருந்து சில குடும்பங்கள் ஈறாக பிளவை ஏற்படுத்தி நிற்கிறது இந்த பொது வாக்கெடுப்பு. ஒன்றியத்தில் இருந்து பிரிவு அதில் இணைவு என்ற இருமைக்குள் சுழன்று குழம்பிக்கொண்டிருப்போர் அதிகம்.

சோஷலிச கட்சியைத் தவிர இவ்விடயத்தில் அனைத்துக் கட்சிகளும் உடைந்து நிற்கின்றன. கட்சிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவுகிறது.

தன்னை அடுத்த கட்சித் தலைவராகவும், அடுத்த பிரதமராகவும் பாவித்துக்கொள்ளும் கன்சவேட்டிவ் கட்சி (பழமைவாதக் கட்சி) போரிஸ் ஜோன்சன் தன்னை முன்னிலைப்படுத்துவதற்காக மட்டும்தான் பிரிவு பக்கம் நிற்கிறார் என்பதை அனைத்து பத்திரிகைகளும் எழுதுகின்றன.

தன்னை லேபர் கட்சியில் (தொழிலாளர் கட்சி) முக்கிய தலைமை உறுப்பினாராக ஆக்கும் நோக்கில் மட்டும்தான் லண்டன் மேயர் சிடிக் கான் தனது வாதங்களை வைத்து வருகிறார் எனவும் சொல்லப்படுகிறது.

பிரித்தானியாவில் சேவைகளை உடைத்தெறிவதற்காக கடும் வேலைகள் செய்துகொண்டிருந்த மைக்கல் கோவ் போன்றவர்கள் ஒன்றியம் ஏழை மக்களுக்கு எதிரானது என்று ஏதோ தான் தொழிலாளர் பக்கம் நிற்பதாக பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்.

இதுவரை தாங்கள் தொழிலாளர் பக்கம் நிற்பதாக பாவனை செய்துவந்த ரியு.சி பொதுச் செயலாளரான பிரான்சிஸ்-ஓ-கீரீடி முதலாளிகளின் பக்கம் நின்று ஒரு சாத்துச் சாத்துகிறார்.

advertisement
இதுவரை காலமும் ஒன்றியத்தை எதிர்த்து வந்த ஜெரமி கோர்பின் தனது பாராளுமன்ற லேபர் கட்சியின் அழுத்தத்துக்கு அடிபணிந்து ஒன்றியத்துக்காக பேசுகிறார்.

மிக மோசமான தீவிர வலது சாரியக் கட்சிகளும், துவேசிகளும் பிரிந்துபோக வேண்டும் எனக் கடும் பிரச்சாரம் செய்து பிரிவுக் குழுவினரின் தலைமையை பிடிக்க கடும் பாடுபடுகின்றனர். அதன்மூலம் தமது துவேசத்தை அவர்கள் கக்குகின்றனர்.

இதற்கு அதிகளவு விளம்பரம் கொடுத்து மறைமுகமாக இணைவுக் குழுமேல் தாக்குதலை பல ஊடகங்கள் செய்கின்றன. அதே சமயம் நாட்டில் இருக்கும் மிகப் பெரும்பான்மை சோஷலிச பிரிவுக்காக வாதிடுகின்றனர்.

சோசலிச கட்சி செய்யும் இடதுசாரிய பிரச்சாரங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டு பிரிவின் எல்லாவித முற்போக்கு தேவைகளும் மூடி மறைக்கப்படுகிறது. இத்தகைய நிலவரங்கள்தான் ஏராளமானவர்களுக்கு குழப்பங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

சோஷலிஸ்டுகளாக தம்மைத் தாமே அழைத்துக்கொள்ளும் ஒவன் ஜோன்ஸ், போல் மேசன் ஆகிய புகழ்பெற்ற ஊடகவியலாளர்கள் தற்போது இணைவுக்கு வாதிடுகின்றனர்.

முன்பு ஒன்றியத்துக்கு எதிராக வாதிட்டு வந்த இவர்கள் கன்சவேட்டிவ் கட்சி, யுகிப் கட்சி ஆகிய கட்சிகளின் வலதுசாரியத்துக்கு எதிர்வினையாக ஒன்றியத்தை ஆதரிப்பதாகச் சொல்கின்றனர்.

பிரிவு, இணைவு என்பது எதிர்வினை அரசியல் அல்ல. எது சரியான அரசியல் நிலைப்பாடு? எது தொழிலாளர் சார்ந்த முற்போக்கு நிலைப்பாடு? என்ற தொலைநோக்குடன் இயங்கும் அடிப்படையே இவர்களிடம் இல்லை.

ஏனெனில் இவர்களும் தனிப்பட்ட முறையில் ஊடகத்துறையில் தமது இருத்தலைப் பேணுவதை முதன்மை நோக்காக கொண்டு இயங்குபவர்களாக இருக்கிறார்கள்.

இதனால்தான் தனிப்பட்ட முறையில் தங்களை “முற்போக்கு” எனக் கூறிக்கொள்ளும் பலர் பல்டி அடித்து நிற்கின்றனர்.

இங்கிலாந்து வாழ் தமிழ் பேசும் மக்கள் மத்தியிலும் குழப்பத்துக்கு குறைவில்லை. வழமைபோலவே வலதுசாரிய கட்சியின் நிலைப்பாட்டை முன்தள்ளுவதில் தமது கடமையை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது பிரித்தானியத் தமிழர் பேரவை.

கன்சவேட்டிவ் தலைவர் இணைந்திருக்கச் சொல்கிறார் என் ஆதரரித்து செய்தி பரப்புகின்றார்கள் அவர்கள்.

இங்கிலாந்து இவ்வாறு பொங்கி கொண்டிருக்க வேறு எங்கோ ஒரு உலகத்தில் வாழ்ந்துகொண்டு இது எதுவும் நடக்காததுபோல் “தமிழில் பூஜை” பற்றி எழுதிக்கொண்டிருக்கிறது மற்றைய அமைப்புக்கள்.

இலங்கையில் இருந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இணைவுக்காக தனது அறிக்கையை விட்டு பி.ரி.எப் போடு இணைந்து கொள்ளத் தவறவில்லை.

தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இயங்கும் முற்போக்கு அமைப்பான தமிழ் சொலிடாறிற்றி அமைப்பு மட்டும் இது பற்றிய உரையாடல்கள், எழுத்துக்களை தொடர்ந்து செய்துவருகிறது.

ஓன்றியத்தை எதிர்ப்பதற்கான முற்போக்கு வாதத்தை அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர். நாமறிந்த வரையில் தமிழ் பேசும் மக்கள் மத்தியிலும் இது பற்றி பிளவுபட்ட கருத்தே நிலவுகிறது.

வீசா வந்து, வீடு வாங்கி, தங்கள் கால்களை ஊன்றிய சிலர் இனிமேல் மேலதிக தமிழர்களோ வேறு வெளிநாட்டாரோ வருவதை விரும்பவில்லை.

ஆகையால் அவர்கள் பிரிவை ஆதரிக்கின்றனர். துவேசிகளின் கொடிய பிரச்சாரங்களைப் பார்த்த சிலர் உணர்ச்சி வசப்பட்டு இணைவை ஆதரிக்கின்றனர். விசா இல்லாதவர்கள் விசாவுக்காக முயற்சித்து வருபவர்கள் பலர் ஒன்றியத்துக்கு ஆதரவாக வாதிடுகின்றனர்.

ஐரோப்பிய நீதிமன்றத்திலாவது விசா பெறாலம் என்ற நம்பிக்கையும் இதன் பின்னால் இருக்கிறது. இது தவறான புரிதலால் எழும் பிரச்சினை.

மிக மிகச் சொற்பமானவர்களுக்கு ஒன்றியத்தின் மூலம் அனுமதி கிடைத்தது என்பது அவர்களின் உரிமை சார்ந்த நிலைப்பாட்டால் அல்ல. மாறாக அடுத்த கட்ட நீதிமன்ற வாதாடலுக்கான வாய்ப்பு கிட்டுவதுதான் இதில் முக்கியமானதாக இருக்கிறது.

இது வேறு விதங்களில் பிரித்தானிய நீதிமன்றங்களுக்குள்ளால் அடைய முடியும். இருப்பினும் பிரித்தானியா உட்பட பல்வேறு மேற்கு நாடுகளின் இமிக்கிரேசன் மற்றும் அகதி சார்ந்த கொள்கைகள் சட்டங்கள் துவேசம் தோய்ந்ததாகவே இருக்கிறது.

இதற்கு ஒன்றியமும் விதி விலக்கல்ல. இத்தகைய குழப்பங்களுக்கு முக்கிய காரணம் பொது வாக்கெடுப்பு ஒற்றைக் கேள்வியாகவும் இருமைப் பதிலாகவும் நிகழ்த்தப்படுவதே. மக்கள் ஆம் அல்லது இல்லை என்ற இரண்டில் ஒன்றையே தேர்ந்தெடுக்க பணிக்கப்பட்டிருக்கின்றனர்.

இதனால் பல்வேறு முரண்களும், வெவ்வேறு கொள்கைகளும் ஆம் அல்லது இல்லை நோக்கிக் குவிக்கப்படுகிறன.

இனத்துவேசத்தைப் பேசும் ராஜபக்சவை அமெரிக்க எதிர்ப்பு செய்வதற்கும் ஒரு இடதுசாரியை அமெரிக்க எதிர்ப்பு செய்வதற்கும் காரணங்கள் முற்றிலும் வேறானவை.

அவை எதிர் எதிர் திசையில் இருக்கும் காரணங்கள். ஆனால் ஆம், இல்லை என்ற சுருக்கம் இவர்கள் ஒரு பக்கம் இருப்பதுபோன்ற மாயையைத் தோற்றுவிக்கும்.

சிக்கலான விசயங்களை சுருக்கும் பொழுது அதன் முழு அர்த்தங்கள் மழுங்கடிக்கப்பட்டுவிடும். சுருக்கிய அறிவு என்றைக்கும் முழு அறிதல் அல்ல.

இடதுசாரிகள் முற்போக்கு காரணங்களுக்காகவும், தொழிலாளர் மற்றும் ஒடுக்கப்படும் மக்களின் நலன்களுக்காகவும் ஒன்றியத்தின் அதிகாரத்தை எதிர்க்கிறார்கள்.

ஒன்றியத்தையும் உடைத்து உண்மையான ஐரோப்பிய தொழிலாளர் ஒன்றியத்தை உருவாக்கும் திட்டமிடலின் பகுதியாக அவர்கள் இதைச் செய்கிறார்கள்.

அவர்கள் சர்வதேச சொலிடாறிற்றி அடிப்படையில் இதைச் செய்கிறார்கள். அதே சமயம் பிற்போக்கு வலதுசாரிய தேசியவாத அடிப்படையில் இயங்குபவர்களும் பிரித்தானியா முதல் என வாதிடும் துவேசிகளும்கூட ஒன்றியத்தை எதிர்க்கிறார்கள்.

இவர்கள் கடும் பிற்போக்கு வாத அடிப்படையில் இருந்தும் குறுகிய நோக்கத்தின் அடிப்படையில் இருந்தும் வெளிநாட்டு வேலையாட்கள் மேல் வெறுப்புப் பரப்பும் நிலையில் இருந்தும் தமது வாதத்தை வைக்கிறார்கள்.

பிரிவு என்ற ஒற்றைச் சொல்லில் இந்த எதிர் எதிர் திசையில் இயங்குபவர்கள் ஒன்றுபட்டு நிற்பது போன்ற பாவனை தோன்றுகிறது. இது போலி மாயை மட்டுமே. பொது வாக்கெடுப்பு முறையின் போதாமையை இது சுட்டி நிற்கிறது.

சோஷலிஸ்ட் கட்சி ஈவிரக்கமற்ற முறையில் எவ்வித ஒழிப்பு, மறைப்புமின்றி தொழிலாளர் நலன்பக்கம் உறுதியாக நிற்கிறது. அதனால் அக்கட்சிக்குள் தொழிலாளர் நலன் சார்ந்து முடிவெடுப்பது பற்றிய குழப்பம் எதுவுமில்லை.

ஆனால் தொழிலாளர் கட்சிக்கும் இடம் வலம் என்ற உடைவு உண்டு. இந்த உடைவு மற்றைய அனைத்து கட்சிகள் – அமைப்புக்கள் எல்லாவற்றுக்குள்ளும் உண்டு.

பல்வேறு வர்க்கங்களை இணைப்பதான போக்கை அவர்கள் முன்வைக்கிறார்கள். தாங்கள் இடமும் இல்லை வலமும் இல்லை நடு என்று சொல்கிறார்கள்.

தொழிலாளர் நலன்களை முன்னெடுக்கவென தனிப்பட்ட பெரும் கட்சிகள் எதுவும் இல்லாத நிலையில் இருக்கும் கட்சிகளில் எது ஓரளவாவது முற்போக்காக இருக்கிறதோ அதன் பக்கம் சரிவோம் என பல தொழிலாளர்கள் இக்கட்சியில் இணைகிறார்கள்.

டோனி பிளேயரின் நடவடிக்கையால் வெளியேறிய சில தொழிலாளர்கள் ஜெரமி கோபினின் தலைமைக்கு பிறகு கட்சிக்கு திரும்பியிருப்பதையும் பார்க்கலாம்.

இருப்பினும் ஜெரமி கோர்பினையும் தாண்டி இக்கட்சியை நம்ப பெரும்பான்மையான தொழிலாளர் தயங்குவதற்கு காரணம் அதிகாரம் தொடர்ந்தும் வலதுசாரிகளிடம் இருப்பதே.

இவ்வாறு கட்சிக்குள் இருக்கும் முரண்தான் பல்வேறு வகைப் பிளவுகளாக வெடிக்கிறது. அதன் பகுதிகளைத்தான் நாம் இந்த பொது வாக்கெடுப்பு அரசியலிலும் பார்க்க கூடியதாக இருக்கிறது.

கன்சவேட்டிவ் பழமைவாத கட்சி என்றைக்குமே ஒடுக்கப்பட்டோர் பக்கம் நின்றதில்லை. அவர்கள் வெளிப்படையாக பெரும் வியாபாரங்களையும் – பெரும் லாபத்தையும் ஆதரிக்கும் மரபு முதலாளித்துவ கட்சி.

அதற்குள் தலைமைக்கான போட்டியும், பழைய இடதுசாரிய ஆதரவாளர்களின் நெருக்கடிகளும் பிளவுகளை உண்டுபண்ணி நிற்கிறது. இதை மறைக்க அவர்கள் துவேசக் கருத்துக்களைத் தூண்டி விடுகின்றனர்.

லண்டண் மேயரை நோக்கிக் கூட அவர்கள் துவேசக் கருத்துக்களைப் பரப்பியது அண்மைய வரலாறு. ஆக மொத்தத்தில் நியாயமான கொள்கை ரீதியான விவாதம் நடத்தப்படவில்லை.

மாறாக ஒன்றிரண்டு புள்ளிகளையே திருப்பித் திருப்பி கதைத்து மக்களை அலுக்கடிக்கும் வேலையே நடக்கிறது. தமது தமது சொந்த நலன்களை முன்னெடுக்க கண்டபாட்டுக்கு பொய்கள் சொல்லப்படுகிறது.

ஒட்டுமொத்த அதிகார சக்திகளின் கேவலமான அரசியற்போக்கை இது வெளிப்படுத்தி இருக்கிறது. தமக்குள் முரணான கட்சிகள் ஒன்றாக நின்று வாதிடும் காட்சி பிரச்சாரிக்கப்படுவதால் மேலதிக குழப்பங்கள் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

உண்மையில் இவர்களிற் பெரும்பாலானோர் முழுமையான முரண்நிலையில் இருப்பவர்கள் அல்ல. உதாரணமாக, இணைவுக்கு வாதிடும் முக்கிய தொழிற்சங்க உறுப்பினர்கள் முன்பு டோனி பிளேயர் லேபர் கட்சியின் நடவடிக்கைகளின்போது அமைதியாக இருந்து பார்த்துக்கொண்டிருந்தவர்களே.

தொழிற் சங்க உரிமைகளை முடக்கும் கன்சவேட்டிவ் அரசின் சட்ட மாற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தயங்குபவர்கள்.

நியாயமான விவாதங்கள் – விஞ்ஞானபூர்வ ஆணுகுமுறை எதுவுமின்றி வெறும் வெற்று தர்க்கங்களால் மட்டுமே கொண்டு செல்லப்படுகிறது இவ்விவாதம்.

அனைத்து வித கருத்துக்களுக்கும் இடமுண்டு என்பது போன்ற பாவனை செய்யப்பட்ட போதும் இவ்விவாதம் எவ்வாறு சிறு புள்ளிகள் நோக்கி – குறிப்பாக இமிக்கிரேசன் நோக்கி மட்டும் குவிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுகிறது என்பதை உன்னிப்பாக அவதானிப்பவர்கள் பார்க்கலாம்.

ஒடுக்கப்படும் மக்களின் குரல், தொழிலாளர்களின் குரல் முழுமையாக இருட்டடிப்புச் செய்யப்பட்ட நிலையிலேயே இருக்கிறது.

தொழிலாளர்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு காட்சியளிப்பவர்கள் தொழிலாளர்களுடன் உறவுகள் உள்ளவர்களாகவோ – அல்லது சமரசமற்ற முறையில் அவர்கள் நலன்களை முன்னெடுப்பவர்களாகவோ இல்லை.

இந்த உண்மை மறுக்கப்பட முடியாதது. இந்த அர்த்தத்தில் இங்கிலாந்துப் பெரும்பான்மை வர்க்கத்தின் குரல் வழமைபோல் இருட்டடிப்பு செய்த நிலையிலேயே இந்த “பெரு விவாதம்” நிகழ்கிறது.

இதே சமயம் “மக்கள் நலன் விரும்பிகள்” என்று தம்மை அடையாளப்படுத்த விரும்பும் ஒரு குழுவும் தாம் இணைப்புக்கு ஆதரவு என்று சொல்லிக்கொள்கிறார்கள்.

எல்லாரும் சேர்ந்திருக்க வேண்டும் – ஒற்றுமை முக்கியம் – பல் காலாச்சாரத்துக்காக ஒன்றுபடவேண்டும் – ஒன்று கூடின் உண்டு வாழ்வு- என்பது போன்ற பொது அறிவுக் கதைகளைச் சொல்லி அவர்கள் இணைவுக்கு ஆதரவாக இருப்பதாகச் சொல்கிறார்கள்.

மேலோட்டமாக பார்க்கும் பொழுது இவர்கள் நல்லெண்ணத்துடன் இக்கருத்துக்களை வைப்பது போன்றுதான் தோன்றும். அவர்களின் நல்லெண்ணத்தில் பிழையில்லை.

ஆனால் இவர்கள் தமது கருத்துக்கு பின்னால் இருக்கும் அர்த்தம் பற்றி வழமை போலவே எச்சிந்தனையுமின்றி வைக்கிறார்கள் என்பதை நாம் அவதானிக்க வேண்டும்.

இதற்கு முக்கியமான காரணமாக இருப்பது இவர்களின் தனிமைப்பட்ட இருப்பே. இவர்கள் இங்கிலாந்தில் நடக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களோடு தங்களை இணைத்துக்கொண்டவர்கள் இல்லை.

தவிர ஒடுக்கப்படும் மக்களின் உரிமைகள் பற்றி பேசும் – அதற்காக சமரசமின்றி போராடும் அமைப்புக்களுடன் தொடர்புகள் அற்றவர்களாகவோ – அல்லது அத்தகைய அமைப்புக்களை தள்ளி நின்று எள்ளி நகையாடுபவர்களாகவோதான் இருக்கிறார்கள்.

இந்தப் பிரிதல் நிலையில் நின்று கொண்டு இணைப்பு பற்றி இவர்கள் பேசுவது வேடிக்கையானது. நீங்கள் முதலில் தொழிலாளர்களுடனும் அவர்தம் கலாச்சாரத்துடனும் இணைய முயலுங்கள் பிறகு பேசுவோம் உண்மையான இணைப்புப் பற்றி என்பதே இவர்களுக்கு நாம் சொல்லக்கூடியது.

தவிர ஒன்றியம் பற்றிய அறிதல் உணர்ச்சி வசப்பட்ட முறையிலோ அல்லது தர்க்க ரீதியான வாதாட்டங்கள் மூலமோ மட்டும் ஏற்படுத்திக்கொள்ள முடியாது.

சமூகம் பற்றிய நாம் வாழும் சமூக பொருளாதார முறை பற்றிய, முதலாளித்துவ உறவு முறை அதன் பண்புகள் பற்றிய, அறிதலின் அடிப்படையில் இருந்தே அந்த அறிதல் எழ முடியும்.

இது தவிர சிறுபான்மையர் மனநிலை என்பது எக்காலத்திலும் முற்போக்கான மனநிலையாகவே இருக்கும் என்ற ஒற்றைப் பார்வையும் தவறு.

பொதுவாக இங்கிலாந்து வாழ் சிறுபான்மையினர் குறிப்பாக ஆசிய, ஆபிரிக்கர்கள் பெரும்பாலும் தொழிலாளர் கட்சிக்கு ஆதரவு, ஒன்றியத்துக்கு ஆதரவு நிலைப்பாடு கொண்டவர்கள் என்றே பல கருத்துக் கணிப்பீடுகள் சொல்கின்றன.

டோனி பிளேயர் லேபர் கட்சியை மிக வலதுசாரியக் கட்சியாக மாற்றியதைத் தொடர்ந்து சிறுபான்மையர் வாக்களிக்கும் வீதம் விழ்ந்ந்து விட்டது.

இதனால் சிறுபான்மையர் மத்தியில் நிலவும் கூரிய மாற்றங்கள் பற்றிய சரியான வாக்கெடுப்புகள் இல்லை. ஒன்றியம் பற்றிய நிலைப்பாட்டிலும் சிறுபான்மையர் மத்தியில் பாரிய மாற்றம் இருப்பதாக தெரிகிறது.

இதற்கு முக்கிய காரணம் “பாதுகாப்பு” உணர்வே. வெளிநாட்டவர்களின் வருகை கூடினால் வேலை வாய்ப்புக்கள், வீட்டு வசதி முதலியவை பாதிக்கப்படும்.

அவ்வாறு பாதிக்கப்படின் அதன் மூலம் முதலில் பாதிக்கப்படுவது சிறுபான்மையினரே என்ற மனநிலையால் இந்த பாதுகாப்பு உணர்வு மேலெழுகிறது.

இந்த பாதுகாப்பு உணர்வு தவறான நிலைக்கும் அவர்களை நகர்த்துகிறது. வருபவர்களை தடுப்பதால் மட்டும் அவர்கள் தங்கள் உரிமைகளைக் காத்துக்கொள்ள முடியாது.

மாறாக இங்கிலாந்து அரசு மேலதிக முதலீட்டைச் செய்யவேண்டும் என்று கேட்கவேண்டும். சேவைகள் வெட்டப்படுவதற்கு எதிராக களத்தில் இறங்கிச் செயற்படவேண்டும்.

அந்தச் செயற்பாடுகள் தான் உண்மையில் வாழ்க்கைத் தர பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தும். இந்த உண்மை உரத்துப் பேசப்படவேண்டும்.

இந்த அர்த்தத்தில் சேவைகளில் முதலீட்டுக்கு எதிராக இருப்பது இங்கிலாந்து அரசு, ஜரோப்பிய ஒன்றியம் ஆகியவை.

இவை கடுமையாக எதிர்க்கப்பட வேண்டும். மக்கள் ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கு வாக்களிப்பாராயின் அது ஒருவகை அரசியல் நெருக்கடியை தற்போதய ஆளும் கட்சிக்கு ஏற்படுத்தும் என நாம் எதிர்பார்க்கலாம்.

தற்போதைய வலது சாரிய அரசு முறியடிக்கப்பட்டு சேவைகளை வெட்டுவதை நிறுத்தி மக்கள் நலன்சார் மேலதிக முதலீட்டைச் செய்யும் அரசியல் அதிகாரத்தை பிடிக்கவேண்டும்.

இது சாத்தியப்படுவதாயின் எத்தகைய திட்டமிடல்களை நாம் முன்னெடுக்க வேண்டும் என்பதை தாம் முற்போக்கு என்று சொல்பவர்கள் சிந்திக்க வேண்டும்.

தம்மனசாட்சியைத் தொட்டு சுயநலமின்றி அவர்கள் சிந்திக்க வேண்டும். இதற்காக சுரண்டப்படும் மக்களின் நலன்களை முதன்மைப்படுத்துவதற்காக, எல்லாவகை அரசியல் ஆயுதங்களையும் பாவிக்க தயங்காத அமைப்பு மயப்படுதல் என்பது அத்தியாவசியமான ஒன்று.

அந்த அடிப்படையில் நின்று பார்த்தால் உலகு இன்னுமொரு விதமாகத் தெரியும். அந்த வெளிச்சத்தில் ஐரோப்பிய ஒன்றியம் எவ்வளவு பிற்போக்கான அதிகார அமைப்பு என்பது தெரியும். எதிர்த்து வாக்களிப்போம்.

thanks Tamilwin – http://m.tamilwin.com/articles/01/108624

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *