மார்க்சிய சிந்தனை மரபு

பௌதீக விஞ்ஞானத்துக்கு நிகராக சமூக விஞ்ஞானத்தை நிறுத்த முடியாது என கருதுவது தவறு. ஆனால் இரண்டிலும் அறிதல் முறை வேறுபடுகிறது. புறநிலை யதார்த்தம் கேள்விக்கு இடமற்ற முறையில் விஞ்ஞானத்தில் முதன்மைப் பட்டு நிற்கிறது. சமூகம் சார்ந்த கோட்பாடுகளில் இந்தப் போக்கு இல்லை என்பதை முதன் முதலில் அவதானித்தவர் கார்ல் மார்க்ஸ்.

சமூகம் பற்றிய அறிதல் எல்லா துறைகளிலும் பார்க்க மிகவும் கடினமானதாகவும் இலகுவில் நிரூபிக்க முடியாததாகவும் இருக்கிறது. இயற்கையின் புறநிலை இயக்கத்தை முதன்மைப்படுத்திய பார்வை  – அந்த விளக்கத்தை விளங்கவும் நிரூபிக்கவும் வரலாறை உபகரணமாக பயன்படுத்தல் என்ற இரண்டையும் இணைத்து வெற்றுக் கோட்பாட்டு முறை அறிதலை முடித்து வைத்தவர் மார்க்ஸ்.

இந்த நிலைப்பாட்டின் மேல் நேரடியான தாக்குதலை கடுமையாக வைத்தவர்களில் முதன்மையானவராக இருக்கும் கார்ல் பொப்பர் எல்லா கோட்பாடுகளுக்கும் வரலாற்றில் ஆதாரம் காட்ட முடியும் அது ஒரு தகுதி அல்ல என்பார். எது நடந்தாலும் அது மார்க்சியத்தை நிருபித்துள்ளது என வாதிட முடியும் – அது தவறு என்பார். ஆனால் பொப்பர்  முன் வைத்த பரிசோதிக்கும் முறை இன்று உடைந்து சுக்கலாகி போய் விட்டது. மார்க்சியம் நூறு ஆண்படுகளுக்கு மேலாக கடுமையான எதிர் கோட்பாடுகளை சந்தித்து வந்த பொழுதும் தப்பித்து வந்திருக்கிறது – அதை எதிர்த்த கோட்பாடுகள் இன்று மியுசியத்தில் வைக்க வேண்டிய நிலையில் இருக்கின்றன.

ஒரு கோட்பாடு எவ்வாறு விஞ்ஞானமாக இருக்க முடியும் என்பதற்கான பதில் அதன் வரலாற்றுத் தப்பித்தலில் – வரலாற்று நகர்தல்களை விளக்க மற்றும் புரிந்து கொள்ள அது பாவிக்கபப்டும் விதத்தில் இருக்கிறது என நாம் சுருக்கிச் சொல்ல முடியும்.

மார்க்சியம் தன்னை கேள்விக்கு அப்பாற்பட்ட மனித குல தத்துவமாக தன்னை ஒருபோதும் நிறுத்தியது கிடையாது. இயற்கை விதிகள் தன்னை நிறுவிக் கொள்ளுதல் பற்றி மார்ஸ் பல இடங்களில் சுட்டிக் காட்டி இருப்பதை நீங்கள் பார்க்கலாம். முதலாளித்தவப் பொருளாதார கட்டமைப்பின் அடிப்படை இயங்கு விதிகள் பலத்தைச் சுட்டிக் காடுவதே மார்க்சியம். அனைத்து கேள்விகளுக்கும் விடை இருக்கு என்றோ அல்லது மற்ற விஞ்ஞான துறைகளுக்கு எதிர் நிலையில் நிற்பது என்றோ பேசுவது அல்ல மார்க்சியம். அதே சமயம் முதலாளித்துவ கல்வி பீடங்கள் காலத்துக்கு காலம் பரப்பும் போலி கோட்பாடுகளுக்கு எதிர் நிலையில் நிற்பது மார்க்சியத்தின் இயல்பாகிறது. இந்த விவாதங்களில் மார்க்சியத்தை காத்தல் என்பது மனித குல சமூகம் சார் விஞ்ஞான அறிதல் முறையை காத்தலாக இருக்கிறது.

தொழிற் புரட்சி – அல்லது முதலாளித்துவ புரட்சி சமூகம் ஒழுங்கமைக்கப்படும் விதத்தை புரட்டி போட்டு விட்டதை அறிவோம். இதே தருணத்தில் முன்பிருந்த அறிதல் முறையும் காலாவதியாகிப் போனது. அப்போதைய மாற்றங்களை விளங்கிக் கொள்ள அக்காலத்தில் கோட்பாட்டு உலகின் தன்னிகரில்லா தலைமைத்துவத்தை வைத்திருந்த கெகலின் பின் அறிவுசார் விசாரணைகள் திரண்டன. மார்க்ஸ் உட்பட அறிதலை நகர்த்த உந்தியோர் அவர் மாணவர் ஆனார்கள்.

ஆனால் பழைய கோட்பாட்டு முறை – கருத்துச் சிறையில் இருந்து எமது புரிதல்களை விடுதலை செய்து விஞ்ஞானத்தை நோக்கி நகர்த்தாமல் சமகால சமூக உறவுகளை விளக்குவது சாத்தியமில்லை என்ற நிலை உருவாகிவிட்டது. இது கார்ல் மார்க்ஸ் என்ற தனிமனிதனின் மூளையில் திடீரென உதித்த கருத்து உற்பத்தி அல்ல. புதிய உறவுமுறைகளை விளக்க முயன்ற எவராவது ஒருவர் இந்த சிந்தனை நோக்கி நகர்வது தவிர்க்க முடியாமல் இருந்தது. கிரேக்கத்து அறிஸ்\டோட்டல் எவ்வாறு தான் வாழ்ந்த கால எல்லைக்கு உட்பட்டு மனித அறிதலின் எல்லைகளை தொட முயன்றாரோ அதே வேலையை முதலாளித்துவ சமூகத்தில் செய்தவர் மார்க்ஸ்.

சமூக விஞ்ஞான அடிப்படை அல்லது இயற்கை இயங்கும் விதிகளை நோக்கி நகர்தல் என்பது இலகுவானதல்ல. கெகல் முன் வைத்தவைகளை அவர்தம் கருத்து முதன் நிலையோடு ஏற்றுக் கொண்டு சிலாவிக் சிசேக் முதலானவர்கள் இன்றும் இயங்கி வருகிறார்கள். கெகல் காலத்திலேயே அந்தக் குறைபாட்டில் இருந்து விடுபட முயன்ற பயர்பாக் போன்றவர்கள் கூட பொருள்முதல்வாத பார்வையை சமூகத்துக்கு அப்பாற்பட்ட பொருட்களை அனுகுவதோடு மட்டும் நிறுத்திக் கொண்டனர். இயற்கையில் இருக்கும் ஏனைய பொருட்கள் – மற்றும் இயக்கத்தில் இருந்து மனிதரை தானாக பிரிப்பது இயற்கைக்கு அப்பால் ஆன ஒன்றாக மனிதரை நிறுத்துகிறது. மனித சிந்தனை – அவர் தம் உறவுகள் முதற்கொண்டு அனைத்துமே இயற்கையின் புறநிலை இயக்கத்தில் இருந்து பார்க்க வேண்டும் – அதனால் மட்டுமே சமூக இயங்கு விதிகளை அறிதல் நோக்கி நகரமுடியும் – என கூறி கருத்து முதன் நிலையில் இருந்து மனித சிந்தனையை முற்றாக விடுதலை செய்தவர் மார்க்ஸ்.

ஆனால் சமூக விஞ்ஞான முறைக்கான அடிபாடு அத்தோடு ஓய்ந்து விடவில்லை. அது ஒரு காலத்திலும் ஓயப் போவதுமில்லை. கற்பனை முறை வழிமுறைகளில் இருந்து விடுபட்டு சமூக உறவுகளை புறநிலையில் பார்க்கும் எங்கெல்ஸ் முதலானவர்களோடு சேர்ந்து கொண்ட அதே வேளை இந்த அறிதல் முறையில் இருந்து விலத்தி மீண்டும் மனித சிந்தனையை வேற்று கோட்பாட்டுக்குள் முடக்க எத்தனித்த பலரோடு மார்க்ஸ் மோத வேண்டி ஏற்பட்டது. ஆனால் விரைவில் இது மார்க்ஸ் மட்டும் செய்ய வேண்டி இருக்கவில்லை. எங்கல்ஸ் முதற்கொண்டு ஓர் பெரும் கூட்டமே திரள ஆரம்பித்து விட்டது. போல் லபார்க், லாரா லபார்க் ஆகியோரை நாம் மறந்து விடக் கூடாது. மார்க்சின் எழுத்துக்களை உதவியாக வைத்து இவர்கள் இயங்க முற்பட்ட பொழுது வெறுமே மார்க்சியர் என சொல்வது போதுமானதாக இருக்கவில்லை. தம்மை மார்க்சியர் என மார்க்ஸ் காலத்தில் சொல்லிக் கொண்டவர்கள் எல்லோரும் சரியான நிலைப்பாட்டில் இருந்தார்கள் என சொல்லி விட முடியாது. இதனால்தான் நான் ஒரு மார்க்சியர் அல்ல என மார்க்சே ஒருமுறை கூற வேண்டி இருந்தது என்பதை பதிவு செய்திருப்பார் எங்கல்ஸ். சோசலிஸ்டுகள் என்ற பெயரில் கற்பனா வாத கனவை விற்க முயன்றவர்களுடன் ஆரம்பத்தில் இருந்தே பல்வேறு மோதல்கள் நிகழ வேண்டியதாயிற்று. இதனால்தான் விஞ்ஞான சோசலிசம் என விஞ்ஞான முறையை பாதுகாக்கும் போராட்டத்தை செய்ய வேண்டி இருந்தது.  டூரிங்குக்கு மறுப்பு முதற்கொண்டு பல்வேறு எழுத்துக்கள் இத்தகைய மோதல்களின் விளைவுகளே.

மார்க்ஸ் எங்கெல்ஸ் முதற்கொண்டு பலரது எழுத்துக்களில் பெரும்பாலானவை விவாத முறையில் இருப்பதும் அவர்தம் சமகால சிந்தனையாளர்களின் போதமைகளை உடைத்து நொறுக்குவதாக இருப்பதையும் பார்க்கலாம். மார்க்சியம் தனித்து நிற்கும் வேற்று கோட்பாடு அல்ல. மார்க்ஸ் எழுதிய மூலதனம் கூட அவரது சமகால அறிஞர்கள் முன் வைத்த கருத்து நிலைகளை கடுமையாக தாக்கும் வாதாட்டங்களை உள்ளடக்கி இருப்பதை அவதானிக்கக வேண்டும். மார்க்சியர் – சோசலிஸ்டுகள் – கம்யுனிஸ்டுகள் – இடது சாரிகள் என தங்களைத் தாங்களே சொல்லிக் கொள்பவர்கள் எல்லோருமே சமூக விஞ்ஞானிகளோ அல்லது மார்க்சியரோ அல்ல. அடையாளப் படுத்தல் மட்டும் அறிதல் ஆகி விட முடியாது. இது எல்லா துறைக்கும் பொருந்தும். எல்லா பௌதீக விஞ்ஞானிகளும் சரியான விளக்கத்தைதான் முன் வைப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது.

மிகச் சிறந்த மார்க்சிய அறிஞரான ரோசா லக்சம்பேர்க் முதலானவர்களுடன் கூட கடுமையான விவாதங்களை லெனின் முதலானவர்கள் செய்ய வேண்டி இருந்தது. அரசின் உதிர்வு பற்றிய நிலைப்பாட்டில் அனார்கிஸ்டுகளோடு உடன்பட்ட போதும் அவர்களின் போதாமைக்கு எதிராக கடுமையான விவாதங்களை செய்ய வேண்டி இருந்தது. புருதோன் தொட்டு கவுட்ஸ்கி வரை பெரும் அறிஞர்களை மியுசியத்துக்கு அனுப்பித்தான் மார்ச்கியம் தன்னை நிறுவி வந்துள்ளது.

மார்க்சில் இருந்து லெனின் என நாம் ஒரு தொடரை பேசுகிறோம் என்றால் – அது வெறும் தனிநபர் வழிபாடு அர்த்தத்தில் அல்ல. மாறாக விஞ்ஞான முறையை காத்தல் என்ற அடிபாட்டில் எழுந்த – விவாதத்தை வென்ற தொடரை பற்றி நாம் பேசுகிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இவர்களும் சில தவறான கருத்துக்களை முன் வைத்தவர்கள் தான். தவறுகளுக்கு அப்பாற்பட்ட மனிதர் என யாரும் கிடையாது. ஆனால் அடிப்படை சமூக விஞ்ஞான புரிதலில் ஆழ்ந்த அறிவை பாதுகாத்தவர்கள் இவர்கள். அது கை நழுவி காணாமல் போகாமல் இருக்க இவர்கள் ஏற்படுத்திய தரிசனங்கள் உதவின. உண்மையில் சரியான அறிதல் முறை தனிப்பட்ட ஒருவர் சம்மந்தப் பட்ட விசயம் கிடையாது. இயற்கை சார் – சமூகம் சார் செயற்பாடு இது. அந்த அர்த்ததில் அறிதல் கை நழுவிப் போவதன் சாத்தியம் இயற்கைக்கு எதிரானதாக இருக்கிறது. யாரோ ஒரு தனி நபர் ஊடாக (அல்லது பலர் ஊடாக) இயற்கை சார் உச்சக் கட்ட அறிதல் பாதுகாக்கப் பட்டுக் கொண்டும் முன் தள்ளப் பட்டுக் கொண்டும்தான் இருக்கும். அவர்களின் வரலாற்று பாத்திரம் அவ்வாறே நிர்ணயிக்கப் படுகிறது. தவிர இது அந்த தனி நபர்கள் சார்ந்த விசயமில்லை. லெனின் ஏப்ரல் அறிக்கை எழுத முதல் தான் கொண்டிறித்த சில தவறான நிலைப்பாட்டின் பின் இழுபட்டு சென்று இருப்பின் அவரது வரலாற்று பங்களிப்பு வேறாக இருந்திக்கும். அத்தருனத்தில் லெனினை எதிர்த்து ஏப்ரல் அறிக்கையை வேறு ஒருவர் எழுதி புரட்சி திரட்டல் நோக்கி நகர்ந்திருந்தால் வரலாற்றில் அந்த தனி நபர் முதன்மைப் பட்டு இருக்க கூடும். தனி நபர்களை மட்டும் பேசி – தனி நபர் முதன்மை வாதம் செய்வோர் மார்க்சியர் அல்ல. அதே சமயம் இதே அறிக்கையை ஏற்றுக் கொள்ள மறுத்து எதிர் நிலையில் நின்ற ஸ்டாலின் போன்றவர்களின் வரலாற்று பாத்திரத்தையும் புறம் தள்ளி நாம் பேச முடியாது. எமது விவாதம் – அடிபாடு விஞ்ஞான முதன்மை கொண்டது. தனி நபர் முதன்மை கொண்டதல்ல.

இருப்பினும் விவாதம் மற்றும் நிறுவல் மூலம் அறிதல் ஏற்றுக் கொள்ளும் முறை சமூக விஞ்ஞானத்தில் மட்டும் ஏன் சாத்தியப் படவில்லை ? என கேட்கலாம்.

நான் ஒரு ஐன்ஸ்ட்டீனிஸ்ட் – அல்லது நியூட்டனிஸ்ட் என சொல்லி இரண்டையும் சமமாக பௌதீக துறையில் நிறுத்த முயன்றால் அது சிரிப்புக் கிடமானதாக இருக்கும். ஆனால் சமூக விஞ்ஞான துறையில் மட்டும் பல்வேறு இடங்களில் அவை ஒவ்வொன்றும் தாம் தான் சரி என காட்ட முயல்கின்றன. இதை வைத்துக் கொண்டு சமூக விஞ்ஞானம் என்ற ஒன்றே சாத்தியம் இல்லை என பேசுவாரும் உள்ளனர். அது அறிவுக்கு எதிரான பேச்சு. எந்த ஒரு துறையிலும் முழு அறிதல் சாத்தியமில்லை. அனைத்தும் அறிந்த நிலை பற்றி முனிகள்தான் பேசுவர்- மார்க்சியர் பேசமாட்டார்.

ஆனால் அறிதலை நோக்கி நகர்தல் எல்லா துறைகளில் சாத்தியமே. சமூக விஞ்ஞானம் என்பது மற்றைய விஞ்ஞான முறைகளில் இருந்து வேறு பட்ட ஒன்றுதான். ஆனால் மற்ற விஞ்ஞான முறைகளை விட சமூக விஞ்ஞானம் முக்கியமான ஒரு புள்ளியில் மாறி நிற்கிறது. இது சமூகம் ஒழுங்கமையும் முறை பற்றி பேசுகிறது. அதனால் அதிகாரம் – அந்த அதிகாரத்துக்கு உட்படுவோர் என்ற அனைத்துடனும் பின்னி பிணைகிறது. அதனால் சமூக விஞ்ஞானம் என்பது சமூக இயக்கத்தில் இருந்து தனியே பிரித்துப் பார்க்க முடியாததாக இருக்கிறது. அரசியல் நீக்கம் செய்ய முடியாத துறை இது. சமூகத்தில் இருக்கும் அதிகாரம் – மற்றும் அனைத்து ஏற்றதாழ்வுகளும் தாண்டிய ஒன்று அல்ல சமூக விஞ்ஞானம். சமூக விஞ்ஞானம் நிறுவப்பட முடியாத ஒன்றாக இருப்பதற்கு இதுவும் காரணம். அரசியற் காரணம். மதத்தை ஏற்றுக் கொண்ட – அல்லது அதற்கு நிகரான எந்த மடத்தனத்தையும் ஏற்றுக் கொண்ட அரசுகளை நீங்கள் சுட்டலாம். ஆனால் சமூக விஞ்ஞானத்தை ஏற்றுக்கொண்டு அதை உள்வாங்கி நடைமுறையில் இருக்கும் அரசை நீங்கள் காட்ட முடியாது. புரட்சிக்கு பிறகான சோவியத் ரஷ்யா தொடங்கி சில உதாரணங்களை காட்ட முயலலாம். அதுவும் தவறே. சோவியத் அதிகாரம் அத்தகைய நிலைக்கு நகர முதலே குழப்பங்கள் ஆரம்பித்து விட்டது. மார்க்சியத்தின் பலத்தில் நடந்த புரட்சி ஏன் வெற்றி பெறவில்லை? சோவியத் சீன வரலாறை மார்க்சியத்தின் மாபெரும் தோல்விகளாக காட்ட முற்படுவோர் உண்டு. அவர்கள் வரலாறு தெரியாதவர்கள். ரஷ்ய, சீன புரட்சிகள் உலக வரலாற்றில் நடந்த மிகப்பெரும் மகத்தான நிகழ்வுகள் என நாம் சொல்வதற்கு காரணமுண்டு. இந்த இரண்டு புரட்சியும் எவ்வாறு உலகை – உலக உறவுமுறைகளை – மனித வள உபயோகத்தை – உரிமைகளை புரட்டி போட்டு விட்டது என்பதை வரலாற்றை புறத்தில் வைத்து ஆய்வோர் அறிவர். இருப்பினும் அந்த நிகழ்வுகளின் தொடர்ச்சியாக சமூக விஞ்ஞானம் வெற்றி பெறவில்லை. மார்க்சியம் வெற்றி பெறவில்லை. மார்க்சியம் என்பது தனித்து இயங்கும் ஒரு கருத்து நிலை அல்ல என்று சொன்னோம். அறிவு பூர்வமான ஒரு சமூகம் உருவாகாத – ஒரு புதிய சமூக கட்டமைப்பு முதன்மைப்படாத ஒரு கட்டத்தில் மீண்டும் மார்க்சியம் பின் தள்ளப் படுகிறது. அங்கு உருவான அதிகாரம் சார் கறாரான பார்வைகளை சமூக விஞ்ஞானம் என்றும் – மார்சியம் எனவும் சொல்ல வேண்டி ஏற்படுகிறது. இந்த இடத்தில் மீண்டும் சரியான சமூக விஞ்ஞான அறிதலை பாதுகாக்கும் யுத்ததை செய்ய வேண்டி ஏற்படுகிறது. ட்ரொட்ஸ்கி முதற்கொண்டு இடது சாரிய எதிர்ப்பை கட்டிய பலர் இதற்காக உயிரைக் கொடுத்து போராட வேண்டி ஏற்படுகிறது. பூமி சூரியனை சுற்றுகிறது என சொன்னதற்காக கலிலியோவைக் கொன்ற கதைதான் இது.

 

மார்க்சிய விஞ்ஞான முறையை முதன்மை படுத்துவோர் – என்ற அடிப்படையில்தான் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் என சொல்லிக் கொள்கிறோமே அன்றி – இது வேறு ட்ரொட்ஸ்கி என்ற தனிபரைச் சுற்றிக் கட்டப் படும் குரு பீடம் அல்ல.

இவ்வாறு பேசுவது யார் சரி – எது சரி ? என்ற கேள்விகளை உடனடியாக எழுப்புவது உண்டு. குறிப்பாக மார்க்சியர் என சொல்லிக் கொள்வோர் மத்தியில் இது பெரும் தொடர் யுத்தம்தான். இது அதிகாரம் சார் விசயமாக இருப்பதையும் தயவு செய்து நீங்கள் அவதானிக்க வேண்டும். அதை கவனிக்காமல் இது பற்றிய புரிதலை நாம் அடைய முடியாது.

 

அதிகாரம் சார் – உத்தியோக பூர்வ – அல்லது முதலாளித்துவ சிந்தனையாளர்களை எதிர்கொள்வது மார்சியருக்கு ஒரு காலத்திலும் பிரச்சினையாக இருந்ததில்லை. தமது அதிகார இருத்தலை தக்கவைக்க  பரப்பப்படும் அவர்தம் பிரச்சார நெடியை மோப்பம் பிடிப்பது எல்லாருக்கும் இலகு. இதனால்தான் மார்க்சியத்தை உள்வாங்கித் தாக்கும் பாணியை முதலாளித்துவ கல்வி பீடங்கள் வளர்க்கத் தொடங்கின.  மார்க்சியத்தை கையில் எடுக்காமல் மார்க்சியத்துடன் மோதுவது சாத்தியமில்லை என்பதை வரலாறு காட்டி நிற்கிறது.

கடந்த நூறு ஆண்டு காலப் பகுதியில் எழுந்த கோட்பாட்டு எழுச்சிகள் என சொல்லப் படுபவற்றை தயவு செய்து வரிசைப் படுத்திப் பார்க்கவும். எகசிஸ்டன்சியத்தில் இருந்து – அமைப்பியல் –பின் அமைப்பியல் – பின் நவீனத்துவம் – பின் பின் நவீனத்துவம் ஈறாக மார்க்சிய கருத்துக்க்களை களவு கொள்ளாத ஒரு கோட்பாட்டைக் காட்டுங்கள் பார்க்கலாம். பலர் நேர்மை அற்று பேசுவதை உதாரணமாக காட்டி விடாதீர்கள். எல்லா காலத்திலும் மார்க்சியத்துக்கு எதிரான புலம்பல்களை முதலாளித்துவ கல்விப் பீடங்கள் உருவாக்கி கொண்டுதான் இருக்கின்றன. இதை உருப்படியாக செய்ய வேண்டும் என்றால் மார்க்சியத்தை களவு கொண்டுதான் ஆக வேண்டி இருக்கிறது. அவ்வாறல்லாத கோட்பாடு மிக வேகமாக மறைந்து விடும். மார்க்சியத்தை இணைத்து பிசைந்தது கொஞ்ச காலமாக நின்று பிடிக்கும்.

 

இவை முற்றிலும் பயனற்றவை – அறிதலை ஒரு சொட்டும் நகர்த்தாதவை என நாம் சொல்லவில்லை. பெருபாலும் பழையனதான் புதிய பாத்திரத்தில் தரப்படுகின்றன என்றாலும் இவைக்கும் ஒரு பயன்பாடு உண்டு. பிரக்ஞை குறைந்த மாணவர் மத்தியில் ஒரு கல கலப்பை உண்டு பண்ணி – அவர்களை அறிவித்துறையில் வைத்திருக்க இது உதவலாம். அதை விட முக்கியமாக முதலாளித்துவ அதிகாரம் மீறி போகாத வரம்புக்குள் வைத்திருப்பது இதன் தலையாய நோக்கமாக இருக்கிறது.

இங்குதான் மார்க்ஸ் மிகப் பெரும் பிரச்சினைக்கு உரியவர் ஆகிறார்.

 

மார்க்சை உள்வாங்குவது ஒன்றும் பிரச்சினை இல்லை – மார்க்சியத்தை ஏற்றுக் கொள்வதும் பிரச்சினை இல்லை. ஆனால் அவர் எடுத்த முடிவுகள் தான் அதிகாரத்துக்கு பெரும் பிரச்சினை. முதலாளித்துவ கட்டமைப்பை அதை ஒரு சொட்டு இருத்தலையும் விடாது உடைத்தல் என்ற வரலாறு முடிவை நோக்கி நகர்பவர்கள் அதன் அதிகாரத்துக்கும் – அதனால் கிடைக்கும் நலன்களுக்கும் வெளியில் நிற்க வேண்டி ஏற்படுகிறது. இந்த புறம் தள்ளுதலை எல்லோராலும் எதிர் கொள்ள முடிவதில்லை. புத்தி ஜீவிகள் என தம்மை காட்டிக் கொள்ள விரும்புவோர் குப்பைகளை காவுவதை செய்வார் – ஆனால் முதலாளித்துவ அதிகாரத்துக்கு எதிராக ஒரு கல் கூட எடுத்து எறிய மாட்டார்கள்.

இது அதிகாரம் சார் பிரச்சினை மட்டும் இல்லை. அமைப்பு சார் பிரச்சினையாகவும் வெடிக்கிறது. மார்க்சியக் கட்சி கட்டுகிறோம் என சொல்லிக் கொள்வோர் கூட நேரடியாக சோசலிசத்துக்கு வாதிட்டு – முதலாளித்துவத்துக்கு எதிர் நிலையில் தம்மை நிறுத்திக் கொள்வோர் குறைவு. அவர்கள் மார்க்சியத்தை உள்வாங்கி முன் வைக்கும் முன்னோக்கு மற்றும் திட்டமிடல்களில் இது பிரதி பலிக்கிறது.

 

இன்று இந்தியா எதிர் கொண்டுள்ள கோர கொடுமைக்கு மத்தியில் குறைந்த பட்சம் இரண்டு கோரிக்கைகளையாவது இந்த கட்சிகள் ஏற்றுக் கொண்டு செயற்பட முடியாதா என நாம் கேட்கிறோம். அனைவருக்குமான இலவச சுகாதார சேவை – கடன்களை ரத்து செய்தல். இவை முதலாளித்துவ கட்டமைப்புக்குள் வெல்லக் கூடிய கோரிக்கைகள்தான். எந்தக் கட்சி இதற்கான போராட்டத்தை முன் வைக்க தயார். வறிய விவசாயிகளும் தொழிலாளர்களும் தாம் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாது என்ற போராட்டத்தை முன்னெடுக்க யார் தயார்.

நாம் இங்கு பேசுவது அறிவின் அதிகாரத்தை நிலை நாட்டும் பேச்சல்ல. நாம் பிடித்த முயலுக்கு மூன்றுகால் என்ற பேச்சும் அல்ல. மார்க்சியத்துக்கு வெளியில் அறிதல்கள் இல்லை என்ற பேச்சும் அல்ல. ஒற்றைப் பார்வை அல்ல. தோழர்கள் பல்கலைக் கழகங்கள் உங்கள் மேல் திணிக்கும் குப்பைக்களை நோக்கி திட்டமிடல் சார் கேள்விகளை கேளுங்கள். மாற்றத்தை தர சக்தியற்ற கோட்பாட்டின் பயன் என்ன? சாதி ஒழிப்பு என்றால் என்ன திட்டமிடல்கள் என கேள்வி கேளுங்கள்? உடனடி சலுகைகளை வெல்லுவதுடன் எல்லா அடக்கு முறைகளையும் இல்லாதொழிப்பது எவ்வாறு என்ற கேள்வியை இணைத்துப் பாருங்கள்.   சாதி ஒழிந்த சமூக கட்டமைப்பு எவ்வாறு இருக்கும் என விளக்க சொல்லுங்கள். மறு உற்பத்தி பற்றி மார்க்ஸ் பேசியதே இல்லை என்பது போல் அவரிடம் கடன் வாங்கி மார்க்சியத்தை அடிக்கும் தற்கால சில குப்பைகளிடம் மாற்றத்தை கொண்டு வரும் திட்டம் என்ன இருக்கிறது என தேடித் பாருங்கள். வீட்டு வேலை நிறுத்தம் செய்ய அவர்கள் தயாரா ? சொல்வோர் செய்வாரா? அது எப்படி இருக்கும் என கற்பனை செய்து சிரித்து ஒதுங்காதீர்கள். இந்தக் குறைபாடுகளை கடுமையாக எதிர்த்து நில்லுங்கள். மார்க்சியத்தை ஆழமாக கற்றலும் – இயங்குதலும் அதற்கான மன உறுதியை உங்களுக்கு வழங்கும். இயக்கமற்ற முறையில் மார்க்சியத்தை விளங்கி கொள்ள முடியாது. முன்னோக்கு – செயற்திட்டம் என நாம் பேசுவது மார்க்சியத்தை பயன்பாட்டு தளத்தில் கொண்டு வரும் செயல். அங்குதான் நீங்கள் சரி பிழை பார்க்க முடியும். இயங்கு தளத்தில் செல்லுபடியாகாத அனைத்து அசையா கோட்பாடுகளையும் தூக்கி வீசுங்கள். அது வரலாற்றில் நிகழும். அதற்காக காத்திராதீர்கள். வரலாற்றைப் பின் தொடராதீர்கள். மாறாக முன் நகர்த்துங்கள்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *