தெற்காசிய நிலவரங்கள் -முன்னோக்குப் புள்ளிகள்

  1. இந்த ஆண்டில் தெற்காசிய வளர்ச்சி கனவுக் கதை முடிவுக்கு வந்து விட்டது. உலகப் பொருளாதார நெருக்கடியால் தொடரும் பொருட்களுக்கான கிராக்கிப் பற்றாக் குறை – முதலீட்டின் போதாக்குறை ஆகிய காரணங்களும் தெற்காசிய வளர்ச்சி வீழ்ச்சிக்குக் காரணம். அதே சமயம் முதலாளித்துவ ஊழல் – குறிப்பாக இந்தியாவில் அதிகரித்த ஊழல் நிலவரம் மற்றும் இந்திய அரசு முன்னெடுத்த மூர்க்கத்தனமான கொள்கைகள் ஆகியனவும் இதற்குக் காரணம். இந்திய வளர்ச்சி 6% வீதமாகக் குறைந்து விட்டதாக சில தரவுகள் காட்டினாலும் உண்மை வளர்ச்சி 4 வீதம் – அல்லது அதிலும் குறைந்த நிலையிலேயே இருப்பதாகக் கருதப்படுகிறது. ஏனைய தெற்காசிய நாடுகளின் பொருளாதாரங்களும் 5 வீதத்திலும் குறைவாக வீழ்ச்சி அடைந்து வருவதைக் காணக் கூடியதாக இருக்கிறது.
  2. உலகளாவிய பொருளாதாரத் தேக்கம் தேசிய அரசுகளிலும் –அந்த அரச அதிகாரங்களைக் கைப்பற்றி வைத்திருக்கும் வலது சாரிய கட்சிகளின் போக்குகள் மற்றும் செல்வாக்கில் பெரும் மாற்றங்களை உருவாக்கி வருவதையும் நாம் பார்க்கலாம். முதலாளித்துவ சக்திகள் தேசிய எல்லைகளுக்குள் முடங்கும் பண்பு அதிகரித்துள்ளது. பிராந்திய உறவுகளைப் பலப்படுத்தும் செயல்கள் வலுப்படுவதும் பார்க்க கூடியதாக இருக்கிறது.
  3. தெற்காசியாவில் பிராந்திய வியாபார உறவு முதன்மைப் படுத்த நிகழும் முனைப்பை பார்க்க கூடியதாக இருக்கிறது. இந்தியா – பாகிஸ்தான் மற்றும், இந்தியா – இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையில் சமீபத்தில் தனிபட்ட பொருளாதார ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. தெற்காசிய பிராந்திய உறவுக்கான அமைப்பு (SAARC- சார்க்) –என்ற தெற்காசிய அமைப்பை மேலும் புனருத்தாரணம் செய்யும் முயற்சியும் முதன்மைப் படலாம்.
  4. சார்க் அமைப்பு இதுவரையும் ஒரு செயலற்ற அமைப்பாகவே இருந்து வந்திருக்கிறது. தெற்காசிய பிராந்திய அரசுகளின் உறவு மிகப் பலவீனமாக இருந்து வருவது இதற்கு முதற் காரணம். பிராந்திய வியாபாரம் 6 வீதத்திலும் குறைந்ததாக இருக்கிறது. இரு முக்கிய நாடுகளான இந்தியா பாகிஸ்தான் உறவுப் பலவீனம் காரணத்தால் இந்த நாடுகளுக்கிடையிலான பொருளாதார உறவு 5 வீதத்தைக் கூட தாண்டியதில்லை. பிராந்திய பொருளாதார உறவு 65 வீதமாக இருக்கும் ஐரோப்பிய பிராந்தியம் அல்லது கிழக்கு ஆசியப் பிராந்தியம் போன்று இல்லாது, பிராந்திய உறவில் மிகப் பலவீனமாக இருக்கும் பிராந்தியம் தெற்காசியா. உலகில் முதன்மை வளர்ச்சி கண்டு வரும் நாடுகளாக வர்ணிக்கப் படும் சீன – இந்தியா ஆகிய இரு பெரும் நாடுகள் பக்கத்துப் பக்கத்து நாடுகளாக இருந்தும் அவர்களுக்கிடையில் அதி குறைந்த தொடர்பே இருந்து வருகிறது. அவர் தம் முக்கிய பொருளாதார உறவு பிராந்தியமாக ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க பிராந்தியங்களே இருந்து வருகிறது.

 

  1. மூலதனம் பிராந்திய உறவை நோக்கி தள்ளப்படுதல் – ஒரு பகுதி முதலாளிகள் தமது லாபத்தைப் பாதுகாக்க தேசிய எல்லைக்குள் முடங்குதல் – ஆகிய நிலைப்பாட்டுக்கு எதிர் நிலையில் நிற்கிறது பிராந்திய உறவுமுறை – மற்றும் மூலதன வளர்ச்சிப் போக்கு.

 

இந்த முரண் நிலை இப்பிராந்தியத்தில் பல்வேறு சமூகச் சிக்கல்களைக் கூர்மைப்படுத்தி உள்ளது. தற்போது வரையறுக்கப்பட்டிருக்கும் நாட்டு எல்லைகள் தாண்டிய தேசிய இனக்குழுக்கள் நிறைந்த பிராந்தியம் இது. பல்வேறு தேசிய இன மக்கள் தெற்காசிய தேசிய அரசுகளுக்கு தொடர்ந்து சவாலாக இருந்து வரும் வரலாற்றை அறிவோம்.

 

தேசிய அரசுகளைப் பலப்படுத்தும் அடிப்படையில் நிகழக் கூடிய பிராந்திய மீள் ஒழுங்கமைவு அமைதி முறையில் நிகழப் போவதில்லை. புதிய சிவில் யுத்தங்கள் – தேசிய விடுதலை உணர்வுகளும் அதற்கான போராட்டங்களும் அதிகரிப்பு – மற்றும் எதிர்ப்பு சக்திகளின் படுகொலைகள் நிகழ்தல் என்ற அடிப்படையிலேயே இந்த பிராந்திய மீள் ஒழுங்கமைவு நிகழ முடியும். உடைந்த நிலையில் இருக்கும் உறவுகள் எவ்வாறு தெற்காசிய பூகோள அரசியலில் நெருப்பூற்றும் ஆயுதமாக பாவிக்கப்பட்டு வருகிறது என்பதையும் நாம் பார்க்க கூடியதாக இருக்கிறது.

 

  1. பாகிஸ்தானுக்கு எதிர் நிலையில் இருக்கும் இந்தியா அந்த நாட்டைத் தவிர்த்து சார்க் உறவை கட்ட முயலலாம். தமது நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தானைத் தூக்கப் போவதாக மிரட்டி இருக்கிறது அமெரிக்கா. இந்திய அரசின் நலன் அமெரிக்கா – ஜப்பான் – அவுஸ்திரேலியா – வியட்நாம் ஆகிய வட்டத்தை சுற்றியே இயங்குகிறது. நீண்ட காலமாக இந்தியாவுக்கும் இரஷ்யவுக்கும் இருந்த இராணுவ உடன்படிக்கைகளும் தளர்ந்து வருகிறது. பல பில்லியன் டாலர் பெறுமதியான இராணுவ உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொள்வதற்கு இந்தியப் பிரதமர் இஸ்ரேலுக்கு செல்ல இருப்பது வரல்லாற்றில் முதற் தடவையாக நிகழ்வதைப் பார்க்கக் கூடியதாக இருக்கிறது.

 

  1. ஆனால் இத்தகைய பிராந்திய மீளசைவுகள் பெரும் பொருளாதார வளர்ச்சியைத் தானாக ஏற்படுத்தித் தரும் என அவர்கள் கனவு காண்பது நிகழப் போவதில்லை. தற்போது இருக்கும் வளர்ச்சிக் கூட கடன் அடிப்படையிலான வளர்ச்சியாகவே இருக்கிறது. உலகப் பொருளாதரத்தில் மீண்டும் ஒரு தொய்வு ஏற்படுமாயின் அது இந்தக் கடன் நெருக்கடியைக் கூர்மைப் படுத்தி மேலதிக வீழ்ச்சியை ஏற்படுத்தும் வாய்ப்புண்டு. தவிர உலக பண்டக் கிராக்கிக் குறைவு மாறும் வரை பொருளாதார வளர்ச்சி சாத்தியமில்லை. இந்நிலையில் மூலதனப் பாதுகாப்புக்காக இவர்கள் எடுக்கும் அதிரடி கொள்கை நடவடிக்கைகள் ஆயிரக்கணக்கான மக்களுக்கு கடும் பாதிப்புகளை உருவாக்கும் சாத்தியம்தான் உண்டு.
  2. வீழ்ச்சியில் இருந்து தப்புவதற்காக பெரும் கட்டுமான நடவடிக்கைகளைச் சில நாடுகள் முன்னெடுக்குகின்றன. $90 பில்லியன் டொலர் செலவில் மும்பைக்கும் டெல்லிக்கும் வியாபார பாதை அமைக்கும் திடத்தை(Delhi-Mumbai Trade Corridor (DMIC)) இந்தியா அறிமுகப்படுத்தி உள்ளது. பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இத்தகைய பெரும் திட்டம் எவ்வாறு சாத்தியம் என்ற கேள்வி உண்டு. அதற்கும் அப்பால் இது எவ்வளவு தூரம் இயற்கை வளங்களை பாதிக்கும் – மக்களின் நிலங்களை அபகரிக்கும் –என்பது மிகப் பெரிய கேள்வி. எதிர்ப்புகளை செய்யும் மக்களின் அழிவின் மூலமே இந்த திட்டங்கள் நிமிர வாய்ப்புண்டு.

 

சீனா – பாகிஸ்தான் பொருளாதார இடைவழி (CPEC – China Pakistan economic corridor) திட்டம் பிராந்திய மீள் நிர்மாணத்தில் மிகப் பெரும் பங்காற்றிக் கொண்டிருப்பதையும் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. $4 ட்ரில்லியன் செலவில் மனித வரலாறு காணாத மிகப் பெரும் திட்டத்தில் ஈடு பட்டு வருகிறது சீனா. நில வழி ஊடாக மத்திய கிழக்கு மற்றும் வட அமெரிக்க – ஆபிரிக்க வளங்களை அடையும் ஒற்றை வழிமுறை இது என்பதால் இந்த திட்டமிடலுக்கு சீனா அதி கூடிய கவனத்தைக் குவித்து வருவதை கானலாம். சமீபத்தில் நடந்த சீன ஆளும் கம்யுனிச கட்சி மாநாட்டில் இந்த திட்ட மிடல் கட்சி திட்டத்தின் முதன்மை திட்டங்களில் ஒன்றாக அறிமுகப் படுத்தப் பட்டிருக்கிறது.

  1. ஆசியப் பிராந்தியத்தில் சீனாவின் வளர்ச்சிக்கு எதிரான முக்கிய எதிர்ப்பு மையமாக இந்தியா கருதப் படுவதால் இந்த நாட்டு அரசியல் மேற்குலக அரசுகளுக்கு முக்கியமாகி வருகிறது. பர்மா மற்றும் பிலிப்பின்ஸ் போன்ற நாடுகள் போல் சீன வலையில் விழுந்து விடாமல் இலங்கை தடுக்கப் பட்டதற்கு இந்தியா முக்கிய காரணமாகக் கருதப் படுகிறது. இந்தச் சீன – இந்திய பிரதி யுத்தம் உலகின் முக்கியமான நெருக்கடி நிறைந்த பிரதி யுத்தமாக இருக்கிறது. ஒபாமா அறிமுகப் படுத்திய பசுபிக் ஒப்பந்த திட்டத்தை டொனல்ட் டிரம் அரசு கைவிட்ட போதும், அவர்களின் கடற்படை பசுபிக் பிராந்தியத்தில் தொடர்ந்து அதிகரித்து வருவதை நாம் அவதானிக்கலாம். அவர்களின் நடவடிக்கைகள் இந்தப் பிராந்தியத்தில் பல மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  2. பாகிஸ்தானில் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பதை நேரடியாக தடுக்கும் வல்லமை இந்தியாவுக்கு இல்லை. அவர்கள் தமது பழைய மறைமுக நடவடிக்கைகளை தொடர்ந்து முடுக்கி வருவதை பார்க்கலாம். பாகிஸ்தான், காஷ்மீர் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்குள் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக இயங்கும் சக்திகளை ஆதரித்து நெருக்கடிகளை உருவாக்கும் திட்டமிடல்களை முன்னெடுத்து வருகிறது இந்தியா.

இதே சமயம் பாகிஸ்தான் இராணுவம் சீன நலனுக்கு நெருக்கமாகி வருவதையும் நாம் பார்க்கலாம். கராச்சி, பலுசிஸ்தான் பகுதிகளில் சீனாவின் முதலீட்டைப் பாதுகாக்கும் முக்கிய நடவடிக்கையை செய்து வருகிறது பாகிஸ்தான் இராணுவம்.

  1. சீன முதலீட்டை பாதுகாக்கும் நோக்கில் சிந்து பிரதேசத்தில் பாகிஸ்தான் இராணுவம் முன்னெடுத்துவரும் அடக்குமுறை அனைவரும் அறிந்ததே. கராச்சியின் மறைவிடங்களில் இருக்கும் மத அடிப்படை வாதிகள் நொறுக்கப்பட்டு கட்டுப்படுத்தப் படுவதால் படு பயங்கர நிலை இருந்த கராச்சி இன்று அமைதியாக இருக்கும் ஒரு பக்க விளைவு உண்டு. இருப்பினும் சிந்து பிரதேசத்தில் இருக்கும் மனித உரிமை வாதிகள் மற்றும் செயற்பாட்டாளர்களும் இதனால் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இடது சாரியப் பத்திரிகைகள் தடை செய்யப்பட்டுள்ளன. சீபெக் (CPEC) பற்றி யாராவது விமர்சித்தால் கைது செய்யப்படும் அபாயம் நிலவி வருகிறது. சிந்து தேசிய விடுதலை இயக்க தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தகைய ஒடுக்கு முறையால் சிந்து தேசிய வாதிகள் தவறான நிலைபாட்டுக்கு தாவுவதையும் பார்க்கக் கூடியாதாக இருக்கிறது. டொனல்ட் டிரம் பாகிஸ்தானுக்கு எதிராக இருப்பதால் அவருக்கு நாம் ஆதரவு வழங்க வேண்டும் என தவறான தர்க்கம் செய்வோரும் உள்ளனர்.

 

  1. இதே போல் பலுசிஸ்தான் ஊடாக செல்லும் பாதை அமைக்கும் திட்டமும் அங்கு கடும் பிரச்சனைகளை ஏற்படுத்தி உள்ளது. பலுஷ் மக்களின் தேசிய விடுதலைக் கோரிக்கையை இந்தியா, ஈரான், மற்றும் பாகிஸ்தானிய அரசுகள் தமக்கு ஏற்றபடி பயன்படுத்தி வருகின்றன. அங்கு பலுஷ் மக்களின் விடுதலைக்கு ஆதரவாக இயங்குவதாக படம் காட்டும் பல வலது சாரிய இயக்கங்களும் இந்த பிராந்திய அரசியலுக்குள் சிக்கி மோசமான நிலப்பாட்டில் இயங்குகின்றன. மிர் சுலைமான் அகமட்சை என்ற முக்கிய வலது சாரிய தலைவர் ஒருவர் இந்தியப் பிரதமர் மோடி தமது நண்பர் என அறிவித்துக் கொண்டதை அறிவோம். அதே சமயம் மோடியும் இந்த வருட சுதந்திர தினப் பேச்சின் போது பலுஷ் மக்களுக்கு நன்றி சொல்லியதை பார்த்தோம். இந்திய வெளிவிவகார அமைச்சர் ‘பலுசிஸ்தான் உலகிலேயே அதிகூடிய அடக்குமுறை நிகழும் பிரதேசம்’ என அறிக்கை விட்டு அழுது வடிந்ததை பார்த்தோம்.

 

இவ்வாறு முதலைக் கண்ணீர் விடும் இவர்கள் இந்தியாவிலும் கொடுமைக்குள்ளாகும் தேசிய இனங்கள் இருப்பதை ஏற்றுக் கொள்வதில்லை. காஷ்மீரில் இந்த வருடம் மட்டும் நூறுக்கும் மேற்பட்டவர்கள் இந்திய இராணுவத்தால் கொல்லப் பட்டிருக்கிறார்கள். 15 000 க்கும் மேற்பட்ட மக்கள் காயப் பட்டிருகிறார்கள்.

  1. பலுஸ், சிந்தி, காஷ்மிரி ஆகிய தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையை – அவர்களின் பிரிந்து போகும் உரிமையை நாம் ஆதரிக்க வேண்டும். பிராந்திய அரசியலின் வலையில் விழுந்து கிடக்கும் வலது சாரிய அரசியற் தலைமைகளின் மேலான எதிர்ப்பும் அந்த மக்களின் உரிமைக் கோரிக்கையை வலுப்படுத்த அவசியமானது. மக்களின் தனிப்பட்ட போராட்ட அமைப்புக்கள் வலுப்பட வேண்டும். வலது சாரியத் தலைமைகளின் நடவடிக்கைகள் மக்களின் விடுதலைக்கு எதிராக நிற்பவை. இந்திய அரசின் கைப்பாவைகளாக இயங்குபவர்கள் சமீபத்தில் சீன சீபெக் (CPEC) பாதையில் வேலை செய்யும் பஞ்சாபி தொழிலாளர்களை தாக்கி கொலை செய்ததை அறிவோம். இது பஞ்சாபியர்களை மையமாக வைத்து இயங்கும் பாகிஸ்தான் அரசைப் பலப்படுத்தும் காரியத்தைச் செய்ய மட்டுமே உதவும். இதுக்கு மாற்றாக சரியான திட்டமிடல் நோக்கியும் – சரியான தனிபட்ட அமைப்பு கட்டுதல் நோக்கியும் மக்கள் நகர வேண்டும்.
  2. பாகிஸ்தான் அரசு இந்த பிராந்தியத்தில் இருக்கும் மிகப் பலவீனமான – நிலையற்ற அரசு. பாகிஸ்தானை ஒரு நாடாக கட்டுப்பாட்டில் வைத்திருப்பது இராணுவம் தான். இராணுவம் சமூகத்தில் பலம் வாய்ந்த சக்தியாக இயங்குவதற்கு இதுவும் காரணம். பாகிஸ்தான் வரலாற்றில் தனது ஆட்சிக் காலத்தை முறைப்படி முடிக்கும் இரண்டாவது அரசு தற்போதைய அரசு. இருப்பினும் சமூகத்தில் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள் என்பதை சமீபத்தில் பாகிஸ்தான் அரசு நிறுவிக் காட்டி இருந்ததையும் பார்த்தோம். ஊழல் குற்றச் சட்டை முன் வைத்து முன்னாள் பிரதமர் நவாஸ் செரிப் பதவி பறிக்கப்பட்டதை பார்த்தோம். ஊழல்தான் காரணம் என்றால் பாகிஸ்தானில் ஒரு கட்சியும் – ஒரு அரசியல் வாதியும் இயங்க முடியாது. இராணுவம் இதை சாக்காக வைத்து தனது செல்வாக்கை நிறுவிய செயலே இது. இராணுவத்தின் செல்வாக்கு இல்லை என்றால் பாகிஸ்தானில் யாரும் அரசாட்சியில் இருக்க முடியாது என நிறுவுவதே அவர்கள் நோக்கம். இராணுவத்தின் ஒரு பகுதியினருடன் ஒரு உடன்பாட்டுக்கு வந்து மீண்டும் நவாஷ் செரிப் ஆட்சிக்கு வரும் வாய்ப்புண்டு. நாட்டுக்குள் மின்சார வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து – மற்றும் சில நிவாரண நடவடிக்கைகளை அறிமுகப் படுத்தியதால் நவாஷ் செரிப்புக்கு தொடர்ந்தும் ஆதரவு இருந்து வருகிறது. இருப்பினும் மக்களுக்கு இந்தக் கட்சி – அல்லது மக்கள் கட்சி – அல்லது இம்ரான் கானின் பி.டி.ஐ ஆகிய எந்தக் கட்சிகளிலும் நம்பிக்கை இல்லை. அனைத்து கட்சிகளும் அதன் தலைவர்களும் ஊழலில் ஊறிக் கிடப்பது மக்களுக்குத் தெரியும். சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட சமத்துவக் கட்சி என்ற கட்சி இதற்கு மாற்றான கோரிக்கைகளை வைப்பதால் அதில் ஆயிரக் கணக்கான இளையோர் இணைவதைப் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. இத்தகைய அமைப்புக்கள் சமரசமின்றி பலப்படுவதன் மூலம் மக்கள் கோரிக்கை பலப்படுவது சாத்தியம்.

 

  1. அத்தகைய அமைப்புக்கள் சரியான மக்கள் கோரிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். கல்வி, வைத்திய சேவைகள் இலவசமாக வழங்கப் பட வேண்டும் என்பது மட்டுமின்றி மக்களின் ஊதியம், வீட்டு வசதி சார்ந்த கோரிக்கைகளும் பலப்பட வேண்டும். அடிப்படைச் சேவைகள் தனியார் மயமாக்கப்படுத்தல் எதிர்க்கப்பட வேண்டும். சேவைகள் அரச மயமாதல் மட்டுமின்றி அவை மக்களின் சனநாயக கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும் என்ற பிரஞ்சை வலுப்பட வேண்டும்.
  2. இது தவிர ‘கடனைத் திருப்பி வழங்காதே’ என்ற மக்களின் கோரிக்கை பாகிஸ்தான் மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் வலுப்படும் சாத்தியம் உள்ளது. தற்போதைய சிறு வளர்ச்சி நிலை கூட பெரும்பாலும் கடன் அடிப்படையில் நிகழும் வளர்ச்சியாகவே இருக்கிறது. உலகப் பொருளாதார வளர்ச்சியில் மீண்டும் ஒரு தொய்வு ஏற்படுமாயின் இந்த நாடுகளின் கடன் குமிழிகள் வெடிக்கும் சாத்தியம் உள்ளது. இப்போதே ஜி.டி.பி (GDP) யில் பெரும் பகுதி கடனாக இருக்கும் நிலையில் இந்தக் குமிழ் வெடிப்பு மிகப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும். அதற்கு முன்பே வருவாயில் பெரும் பகுதி வட்டிக்காக செலவு செய்யப் படுவது மக்கள் மத்தியில் இது சார்ந்த கோரிக்கைகள் வலுப்படும் சாத்தியத்தை அதிகரித்துள்ளது.

 

  1. இந்தியாவிலும் கடன் அடிப்படை வளர்ச்சியைத்தான் நாம் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. மோடி எதிர்பார்த்த அளவு வெளிநாட்டு மூலதனம் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டவில்லை. கடந்த பொதுத் தேர்தலின் பொது மோடி முன் வைத்த முக்கிய உறுதி மொழி வேலை வாய்ப்பை அதிகரித்தல் என்பதே. வருடத்துக்கு பல மில்லியன் வேலைகளை உருவாக்கப் போவதாக பி.ஜே.பி கட்சியினர் தேர்தல் சமயத்தில் அடித்துப் பேசினர். ஆனால் மோடி பிரதமரானதில் இருந்து வேலை வாய்ப்பு தொடர்ந்து குறைந்து கொண்டே செல்வதைப் பார்க்கக் கூடியதாக இருக்கிறது.

 

  1. மோடி அரசு தமது ‘சாகசத்’ தன்மையில் அதி கூடிய நம்பிக்கை வைத்து எப்படியாவது மக்களை ஏமாற்றி தமது அரசியல் செல்வாக்கை நிலைநாட்டி வைத்திருக்க அதிரடி பொருளாதாரக் கொள்கைகளை முன்னெடுப்பதையும் பார்க்கிறோம்.

 

  1. சமீபத்தில் மோடி அரசு இரண்டு முக்கிய தவறுகளைச் செய்திருப்பதை பார்த்தோம். கறுப்பு பணத்தை இல்லாமல் செய்கின்றேன் என்ற பாணியில் பண நீக்கம் செய்தது. பொருட்களுக்கான பொது வரியை அறிமுகப் படுத்தியது (ஜி.எஸ்.ரி/GST) ஆகிய இரண்டு செயல்களும் பொருளாதரதில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வீழ்ச்சி நோக்கி விரையப் படுத்தி இருப்பதைப் பார்க்கிறோம். ஒரு இரவில் சந்தையில் இருந்த 86% வீத காசோலைகளை செல்லாக் காசாக ஆகியதன் மூலம் இந்தியத் தொழிலாளர்கள் மற்றும் சிறு முதலாளிகள் ஆகியோரிடம் இருந்து கோடிக் கணக்கான பணம் பறிக்கப்பட்டு விட்டது. வங்கிகளில் இருந்து காசைப் பெறுவதற்கு வரிசையில் நின்று கலவரம் உருவாக்கி மக்கள் இறந்தது மட்டுமின்றி பல்வேறு பாதிப்புகளை இது உருவாக்கியதைப் பார்த்தோம். இதேபோல் ஜி.எஸ்.ரி அறிமுகம் பண வீக்கத்தை உருவாக்கி பண்டங்களின் விலையை திடீரென அதிகரித்துள்ளது.
  2. காசின்றி அந்தரம் –காசு இருந்தாலும் பண்டங்கள் வாங்க முடியாத அந்தரம் ஆகிய காரணங்கள் மக்களை போராட்டம் நோக்கித் தள்ளும் என்ற பயம் அதிகார சக்திகளுக்கு உண்டு. இதனால் சில அத்தியாவசியப் பண்டங்களின் விலையைக் கட்டுப்படுத்தும் கட்டாயத்துக்கு அவர்கள் தள்ளப் பட்டுள்ளார்கள். எரிபொருள் விலையைப் பொது வரியில் இருந்து விலக்கி வைத்திருப்பதாக அரசு அறிவித்தது இதனால் தான். இருப்பினும் இதுவரை மோடி பக்கம் இருந்த சிறு முதலாளிகளின் ஆதரவு முறிய இந்த நடவடிக்கைகள் முக்கிய காரணமாக இருக்கிறது. மோடிக்கு ஆதரவு அளித்து வந்த முதலாளிகளில் ஒரு பகுதியினர் கூட விலத்திக் கொள்ள இந்த நடவடிக்கைகள் காரணமாக இருக்கிறது.

 

  1. குஜராத்தைப் போல் இந்திய ‘வளர்ச்சி’ என்ற கதையாடல் வெறும் கேலிக் கதையான நிலையில் மோடியின் செல்வாக்குச் சரியத் தொடங்கி உள்ளது. கடந்த மூன்று வருட காலமாக அவர்களுக்கிருந்த செல்வாக்குச் சரியத் தொடங்கி உள்ளது. சமீபத்தில் கூட மத்திய பிரதேசத்தில் அவர்கள் கட்சி வெற்றி ஈட்டியிருந்ததை அறிவோம். முன்பு எப்போதும் இல்லாத அளவு செல்வாக்கை பி.ஜே.பி சமீபத்தில் பெற்றிருந்தது தெரிந்ததே. முன்பு ஆட்சிக்கு வரத் தடுமாறிக் கொண்டிருந்த இக்கட்சி இந்திய அரசியலில் நிரந்தர இடம் பிடித்துவிட முழு முயற்சி செய்து வருகிறது.

 

 

  1. ‘இலட்சியங்களிலும் இலட்ச்சனையிலும் அடிப்படை மாற்றங்கள்’ கொண்டு வருவதன் மூலம் தமது செல்வாக்கை நிறுவ இருப்பதாக கட்சியின் தலைவர் ராம் மாதவ் தெரிவிக்கிறார். இந்தியாவை ‘இந்து’ நாடாக நிறுவிக் கட்டுவதன் மூலம் தமது தொடர் செல்வாக்கை தக்க வைக்க முடியும் என்பது அவர்கள் கனவு. ‘அரசு, குடும்பம், சாதி, குரு, விழா’ ஆகியன அடிப்படைகளைப் பலப்படுத்தி இதை சாதிக்க இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். இந்த அடிப்படையில் மக்கள் மத்தியில் சச்சரவுகள் கலவரங்களை உருவாக்கி அதன் மூலம் தமது செல்வாக்கை பெருக்குவது அவர்கள் திட்டமிடல்களாக இருக்கிறது. கட்சிக்கு சொற்ப ஆதரவும் இல்லாத தமிழ் நாடு போன்ற மாநிலங்களில் கூட இத்தகைய திட்டமிடல்களை அவர்களின் சகோதர இயக்கமும் – ஒருவகை பாசிச தன்மை உள்ள இயக்கமுமான ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புக்கள் முன்னெடுத்து வருகின்றன.
  2. இந்த நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் பெரும் பிளவுகளை உருவாக்கும் விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது . இவர்களின் புதிய இந்தியாவைக் கண்டு பிடிக்கும் பிற்போக்கு மதவாத நடவடிக்கைகளால் பல படு கொலைகளும் கலவரங்களும் நிகழ்த்து வருகின்றன. சாதிய அடிப்படையில் நிகழும் வன்முறை, பெண்கள் மீதான வன்முறை, ஊடக வியலாளர்கள் மேலான வன்முறை, முஸ்லிம் மக்கள் மேலான வன்முறை என பல தளங்களில் வன்முறை அதிகரிக்க இவர்கள் கொள்கைகள் உதவி உள்ளன.

 

  1. இருப்பினும் இவர்களின் இந்துத்துவ தேசியத்துக்கு பலத்த எதிர்ப்பு உருவாகி வருவதையும் நாம் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. குறிப்பாக தேசிய கோரிக்கைகள் பலப்பட்டிருக்கும் மாநிலங்களில் மோடி எதிர்ப்பு பலப்பட்டு வருவதைப் பார்க்கலாம். தேசிய இனங்களின் எதிரி – முஸ்லிம்களின் எதிரி – ஒடுக்கப்படும் சாதி மக்களின் எதிரி – பெண்களின் எதிரி என மோடி பல எதிரிகளை திரட்டி உள்ளதன் பலனை இப்போதுதான் அவர்கள் அனுபவிக்கத் தொடங்கி உள்ளார்கள். இந்த அர்த்தத்தில் இந்த ஆண்டு மோடியின் வீழ்ச்சியின் தொடக்கத்தை பதிவதாக இருக்கிறது.

 

 

  1. இருப்பினும் மோடி தொடர்ந்து பலமாக இருப்பதாக காட்டிக் கொள்வதற்கு ஒரு காரணம் எதிர் கட்சிகளின் பலவீனம் என்பதையும் அவதானிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத அளவு பலவீனமான கட்சியாக இருக்கிறது. ஊழல்களில் ஊறிக் கிடக்கும் தலைவர்களை கொண்ட இக்கட்சி இன்று வெறும் நாலு மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் இருக்கிறது.

 

  1. காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஊக்குவிக்கப்படும் ராகுல் காந்தி ஒரு கோமாளி ஆகவே இளையோரால் பார்க்கப் படுகிறார். அவரது அரசியல் குடும்பப் பரம்பரையில் இவர் அளவுக்கு நடைமுறை நிலவரம் தெரியாத – அரசியல் நுட்பம் தெரியாத யாரும் இருந்ததில்லை எனக் கூறும் அளவுக்கு இருக்கிறது அவரது கோமாளித்தன நடவடிக்கைகள். இவரது தலைமையில் கட்சி பழைய புகழுக்கு நிமிர்வது சாத்தியமில்லை.

 

 

  1. நேரு காலத்திலும் அதற்குப் பின்னும் இருந்த ‘பிரபல’ அரசியல் வாதிகளுக்கு ஒரு வித கண்மூடித்தனமான ஆதரவு குறிப்பிடத்தக்க மக்கள் மத்தியில் இருந்தது. அதை அடைவதற்காக அவர்கள் பல பொபுலிச கருத்துக்களைப் பேசினார்கள் – செயற்பாடுகள் சிலதை முன் எடுத்தனர். இதனால் தொடர்ந்து ஆதரவைப் பாதுகாக்கும் வல்லமை அவர்களுக்கு இருந்தது. அந்தக் காலம் முடிவுக்கு வந்து விட்டது. அத்தகைய தலைமைகள் இன்று எங்கும் கிடையாது. பழைய முறை கண்மூடித்தன ஆதரவைத் தக்க வைக்கும் வல்லமை தற்போது உருவாகும் எந்த வலது சாரிய தலைமைகளுக்கும் இல்லை.

 

  1. இந்த வெற்றிடத்தில் பல ‘பிரபலங்கள்’ அரசியல் செல்வாக்கை அடையும் போக்கு உருவாகி வருவதைப் பார்க்கிறோம். பொபுலிச வாக்குறுதிகள் வழங்கும் பிரபலங்கள், ஊழல் இன்றி உருப்படியான சில காரியங்களையாவது செய்வர் என இளையோர் எதிர்பார்ப்பது இவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்க காரணமாயுள்ளது.

 

 

  1. உண்மையில் இந்த இடைவெளியை இடது சாரிகள் எனச் சொல்லிக் கொள்பவர்களால் நிரப்பி இருக்க முடியும். இந்திய மார்க்சியக் கட்சிகளின் தலைமைகள் தொழிலாளர்களைத் திரட்டுவதற்கு பதிலாக அவர்கள் திரட்சியில் பயம் கொள்பவர்களாகவே இருக்கிறார்கள். தேசிய விடுதலை உணர்வுகள் வளரும் இக்காலக் கட்டத்தில் இந்திய ஸ்டாலினிச கட்சிகள் இது பற்றி மோசமான நிலைப்பாடு கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஸ்டாலினிச கட்சிகள் தம்மை மார்க்சிச கட்சி என அழைத்துக் கொண்ட போதும் மார்க்சியத்தை விட இந்திய தேசபக்தியே அவர்களுக்கு முதன்மையாக இருக்கிறது. இதனால் தேசிய இனங்கள் இக்கட்சிகளை எதிரியாகப் பார்க்கும் நிலை உள்ளது.

 

  1. இது மட்டுமின்றி தொழிலாளர் நடவடிக்கைகளை இவர்கள் முன்னெடுப்பதிலும் பின் தங்கிய நிலையிலேயே இருக்கிறார்கள். கடந்த பொது வேலை நிறுத்தத்தில் 150 மில்லியன் தொழிலாளர்கள் பங்கு பற்றியதை அறிவோம். இருப்பினும் இந்த வேலை நிறுத்தத்தை ஒரு சடங்காக மட்டுமே அவர்கள் பாவித்து வந்திருக்கிறார்கள். ஆனால் சமீபத்தில் தொழிலாளர் மத்தியில் போராட்டக் குணாம்சம் வளரத் தொடங்கி இருப்பதைப் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. குறிப்பாக வங்கித் தொழிலாளர் மத்தியில் போராட்ட உணர்வு வளர்ச்சி அடைந்துள்ளது. இருப்பினும் இந்த ஸ்டாலினிச கட்சிகள் அவர்களுடன் இணைந்த போராட்டத்தை முன்னெடுக்கத் தயங்குகின்றன. மோடி பண நீக்கம் செய்த பொழுது அதற்கு எதிரான வேலை நிறுத்தம் முதலிய நடவடிக்கைகளை எடுத்து அதை நாடு முழுக்க பரப்பும் உணர்வு மேலோங்கி இருந்த நிலையிலும் இந்த தொழிலாளர்களை ஒருங்கிணைக்கும் ஸ்டாலினிசக் கட்சிகள் – அவர்தம் தொழிற்சங்க தலைமைகள் போராட்டத்தை முன்னெடுக்கத் தயங்கின.

 

 

  1. தொழிலாளர் மத்தியில் போராட்ட உணர்வு வளர வளர போராட்டத்தில் இருந்து தூரத் தூர விலத்தும் இந்திய கம்யுனிசக் கட்சிகளின் குணாம்சம் அக்கட்சிகள் எத்தகய கட்சிகள் என்பதை காட்டுவதாக இருக்கிறது. இவர்கள் பெயரளவில் மட்டுமே மார்க்சியக் கட்சிகள். உண்மையில் முதலாளித்துவ அரசை எதிர்க்கும் நோக்கோ திட்டமிடல்களோ இவர்களிடம் இல்லை. தேர்தல் வெற்றி நோக்கே இவர்களின் முக்கிய குறிக்கோளாக இருக்கிறது. அதற்காக மிகவும் ஊழல் நிறைந்த முதலாளித்துவ கட்சிகளுடன் கூட்டுப் போடவும் அவர்கள் தயாராக இருக்கிறார்கள்.

 

  1. மோடி அரசை விளக்கமற்ற முறையில் பாசிச அரசு என வரையறுத்து அதை எதிர்ப்பதற்காக காங்கிரசுடன் கூட்டு அவசியம் என பேசி வருகிறது இந்திய கம்யுனிசக் கட்சி. இந்தியக் கம்யுனிச கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமையின் ஒரு பகுதியும் இந்த விவாதத்தையே செய்து வருகிறது. ஐரோப்பாவில் கிட்லர் காலத்தில் ஸ்டாலின் ரூஸ்வெல்ட் உடன் ஏற்படுத்திய கூட்டைக் குறிப்பிட்டு தமது நடவடிக்கைகளை சரி என வாதிடுகின்றனர் த.பாண்டியன் போன்றவர்கள். இந்திய அரசு பாசிச அரசு அல்ல என்பதை ஏற்றுக் கொள்ளும் இந்திய கமுனிசக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) சில தலைமைகள் வெற்றுக் கூடான காங்கிரசுடன் கூட்டு வைப்பதை எதிர்த்து வருகின்றனர். இது இக்கட்சியை உடைக்கும் சக்தி வாய்ந்த விவாதமாக உள்ளது. சி.பி.ஐ (எம்) மீண்டும் காங்கிரசுடன் கூட்டு வைக்குமானால் இந்தக் கட்சியில் இருக்கும் ஏராளாமான இளையோர் விலத்தக் கூடும். போராட்டக் குணாம்சமுள்ள தொழிலாளர்கள் – தொழிற்சங்கத் தலைவர்கள் இவர்களுடன் முறிவு ஏற்படுத்தும் நிலையும் முதிர்ந்து வருவதைப் பார்க்கலாம்.
  2. வறிய மக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், மற்றும் இளையோர் தம் நலனைப் பிரதி பலிக்கும் அரசியல் அமைப்பு இன்றிக் கைவிடப் பட்டுள்ளார்கள். கடந்த காலத்தில் போராட்டம் சார்ந்த பெரிய தொய்வு இருந்தது. தற்போது கூட போராட்டக் கருத்து சார்ந்த தெளிவான பார்வைகள் மக்கள் மத்தியில் உருவாகி வருகிறது எனச் சொல்வது கடினமே. இதனால் தான் பழைய அரசியல் அமைப்பு தொடர்ந்து நிலை கொண்டிருக்கிறது. தற்போது நிலவும் குழப்ப நிலவரம்தான் பொபுலிசப் பிரச்சாரங்கள் மற்றும் – அதைச் செய்யும் பிரபலங்களை முக்கியப்படுத்தி இருக்கிறது. இருப்பினும் ஒரு சிறுபான்மை இதைத் தாண்டி தெளிவான போராட்ட சிந்தனை மற்றும் நடவடிக்கை நோக்கி நகர்வதையும் நாம் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. இந்தப் போக்கு பலப்படுவதே தெற்காசிய மக்களின் விடிவுக்கு வழி பிறக்க உதவும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *