படைப்புகளை அளக்க முடியாது

2016 ஏப்ரல் 2ம் திகதி லண்டனில் நிகழ்ந்த புத்தக வெளியீட்டு கூட்டத்தில் அப்பால் ஒரு நிலம் புத்தக விமர்சனத்தில் பேசியதன் அச்சுவடிவம் -ஆக்காட்டி இதழ்
– சேனன்

இருப்பினும் அளவுகோல் காவித்திரியும் அடாவடித்தனங்கள் தொடர்ந்து நிகழ்வதுதான். அத்தனை அளவுகோல்களுக்குப் பின்னும் அரசியல் இருக்கிறது என்பதையும் நாம் அவதானிக்க வேண்டும். நல்லது கெட்டது, அழகு, அழகற்றது என்ற அனைத்துக் கூற்றுகளும் பிளவுகளும் அரசியலின் அடிப்படையில் இருந்தே பிறக்கிறது.
ஈழத்து இலக்கியத்திற்கும் தமிழகத்து மற்றும் மலேசிய இலக்கியத்திற்கும் இருக்கும் வேறுபாடுகளும் அரசியற்பாற்பட்டதே. பெரும்பான்மைத் தமிழகத்து இலக்கியங்கள் வியாபார எழுத்துகள் என்றும், வெறும் குப்பைகள் என்றும் நாம் கூறும்பொழுது அந்தக் கூற்றுக்குப் பின்னால் சுட்டப்படுவது அந்த இலக்கியங்கள் பிரதி செய்யும் பிற்போக்கு விழுமியங்களையே. அதை நோக்கிய அழுத்தமான கேள்வியைத்தான் நாம் முன்வைக்கிறோம்.

பெரும்பான்மை வியாபாரத் தமிழ்ச் சினிமா மிக மோசமான பிற்போக்குத்தனமான அரசியலை -விழுமியங்களை வைக்கிறது என்பது இன்று பலராலும் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய கருத்தாக வந்து கொண்டிருக்கிறது. அதற்கு அடிமையாக இருப்பவர்களும் – அதன் அழகியலில் கிறங்கித் திளைப்பவர்களும்கூட அதை ஏற்றுக்கொள்கிறார்கள். இதே பிற்போக்குத்தனத்தைத்தான் பல இலக்கியவாதிகளும் இலக்கியங்களும் செய்கின்றன. தமிழகத்தில் பல முன்னணி எழுத்தாளர்கள் மிக மோசமான சமூக எதிர்ப்பின் அடிப்படையில் நின்றுகொண்டுதான் எழுதுகிறார்கள். முதலாளித்துவத்தை அண்ணாந்து பார்த்துப் பூரிப்பதும், அதன் அலகுகளைக் கொண்டாடுவதும்கூட அழகியல்தான். ஆனால் அது எங்கும் மலிந்து கொட்டிக் கிடக்கிறது. எமக்கு அலுத்துப்போய்விட்டது. அதே போல்தான் பார்ப்பன-இந்துத்துவ அதிகாரத்தின் இறுக்குப்பிடியில் இருந்து இன்னும் தமிழ் இலக்கியம் விடுதலை அடையவில்லை.

தமிழக இலக்கியத்தின் தத்துவார்த்தக் கலாசாரப் பரப்பை இந்துத்துவத்தின் பழைய விழுமியங்கள்தான் இன்றும் தீர்மானிப்பதாக இருப்பதற்குக் காரணம் என்ன? “தமிழ் இந்திய இலக்கியத்துக்கு மகாபாரதம் அடிப்படையாக இருக்கிறது” என்ற போக்கிரித்தனமான கருத்தைத் தமிழகத்து முன்னணி எழுத்தாளர் பகிரங்கமாக வைத்திருக்கிறார். அந்தப் பழைய காப்பியக் கலாசாரத்தின் விழுமியங்களைத் தொங்கிப் பிடித்துக்கொண்டு இவர்கள் சுயஇன்பம் கண்டுகொள்கிறார்கள். திரும்பத் திரும்ப அந்தப் பழைய திரவங்களையே புதிய பேழைகளிற் தருகிறார்கள். இன்று தமிழகத்தில் பரவலாகக் கொண்டாடப்படும் பல புத்தகங்கள் இத்தகைய பாரம்பரிய வரலாற்றின் உணர்வுகளைத் தூண்டி அதன்மூலம் தம்மை மீள்பதிவு செய்பவையாகவே இருக்கின்றன. தவிர புதிய ஆக்கங்களாக அவை இல்லை. இதையும் மீறி உடைப்புகளை ஏற்படுத்த முயற்சி செய்பவர்கள் முடக்கப்படுகிறார்கள். இமயம் போன்றவர்கள் போராட்டத்தின் மூலம்தான் தங்களைத் தக்க வைத்துக்கொள்ளும் நிலமையிருக்கும் இலக்கியச் சமகாலத்தில்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

எல்லா எழுத்தாளர்களும் பிரக்ஞையுடன் இதை எதிர்கொள்ள வேண்டும். ஈழம்- தமிழகம் என்று பிரித்துப் பேசுவது அரசியல் சார்ந்து பிரித்துப் பேசுதலே தவிர நிலம்சார்ந்த பிரிவினையைத் தூண்டும் நோக்கத்தில் பேசுவதல்ல. நிலப்படி பிரிவின்படி பார்த்தால் தமிழகத்து எழுத்தாளர்கள் ஈழத்து எழுத்தாளர்களாயும் இருக்கிறார்கள். மேற்சொன்ன கருத்துகள் தமிழகத்தில் இருக்கும் பல எழுத்தாளர்களுக்கு உவப்பானதே. இந்த அதிகாரங்களுக்கு எதிராகத் தமிழகத்தில் ஒரு போர் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. அந்தப்பக்கத்து தமிழகத்தில் நின்றே நாம் பேசுகிறோம். ஆனால் அது மெயின்ஸ்றீமில்லை.

இக்கருத்துகள் முழுமையும் புதியவை அல்ல. ஆனால் ஈழக்கலையுடன் இதைப் பிரித்து எதிர்கொள்வதும் தற்போது ஆளுமை செய்யும் அழகியலை உடைப்பதும் புதிதாகச் செய்யப்பட வேண்டியவையாக இருக்கின்றன. தமிழகத்துக்கும் ஈழத்துக்கும் தொப்புள்கொடி இந்துத்துவ மேலாதிக்கம் என்றால் அதை அறுக்கக் கடமைப்பட்டுள்ளோம். நாம் தொடுபட்டு நிற்க விரும்பும் தளம் அதற்கு நேரெதிரானது. நாம் இணைய வேண்டிய புள்ளிகள் வேறு.

இதைச் சொன்னவுடன் முழுமையாக ஈழத்து எழுத்துகளை ஏற்றுக்கொள்கிறோம் என அர்த்தப்படுத்திவிடக்கூடாது. ஈழத்தில் வேறுபட்ட அதிகாரச் சூழல் இயங்கி வருகிறது. ஈழத்து எழுத்தாளர்கள் என்ற பதத்தின் மூலம் நாம் கிழக்கு, மலையகம் மற்றும் தெற்கில் வாழும் தமிழ் எழுத்தாளர்களை இணைத்தே குறிப்பிடுகிறோம். ஆனால் அரசியல்-இலக்கிய நிஜம் வித்தியாசமானதாக இருக்கிறது. ஈழத்து அதிகாரத்தில் முழு லாபங்களும் வடக்கு மேலாதிக்கத்துக்கே போய்ச் சேர்கிறது. தமிழகத்தில் இருந்து பிரிந்து பேசும்போது இந்த ஆபத்தையும் கவனத்தில் எடுத்தே பேசவேண்டியிருக்கிறது.

இருப்பினும் எஸ்.பொ முதற்கொண்டு கொண்டாடப்படும் பெரும்பான்மை ஈழத்து எழுத்தாளர்கள் பல்வேறு அதிகாரங்களுக்கு முரண்நிலையில் நிற்பவர்கள். வரலாற்று ஓட்டத்தின் திசையைப் பிரதி செய்ய முயற்சிப்பவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் மத்தியில் தமிழகத்து இலக்கியம் சார் கடுமையான வாசிப்பு இருந்தும் -இந்துத்துவ கலாசாரப் பின்னடைவுகளின் ஆழமான பாதிப்புகள் இருந்தும் – ஈழத்து இலக்கியம் நிற்கும் திசை வேறு. பெரும்பாலும் அது வரலாற்று நீரோட்டத்தோடு நிற்கிறது. இலங்கைப் போராட்ட வரலாறு – அதனால் அங்கு ஏற்பட்ட வெற்றிகள் மாற்றங்கள் மற்றும் பின்னடைவுகள் – என்பதே இதற்கு முக்கிய காரணங்கள். இங்கு குறிப்பிடுவது ஆயுதப் போராட்டத்தை மட்டுமல்ல. இலங்கை நீண்ட போராட்ட வரலாறுடைய தீவு. முன்பு சொன்னதுபோல் தமிழகத்து விசை பல ஈழத்து எழுத்தாளர்களையும் இழுத்துச் சென்றிருக்கிறது. தமிழகத்தில் இருந்து வருவதான பாவனையில் பல புத்தகங்கள் வந்திருக்கின்றன. இன்றும் தமிழகத்துக் கவனத்தை ஈர்க்க என எழுதிக் குவித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். தமது இயல்புகளை அவர்கள் அதற்காக மாற்றிக்கொண்டு வருகிறார்கள். கலாசாரஆதிக்கம் இதை இலகு படுத்தி வைத்திருக்கிறது. (இதுதான் தமிழகத்துக்கும் ஈழத்துக்கும் தொப்புள் கொடி என்றால் அதை அறு என்கிறோம் நாம்)

இதை மீறிய இலக்கற்ற காரியமொன்றைச் செய்ய ஈழத்து எழுத்தாளர்கள் தொடர்ந்து முயற்சித்து வந்திருக்கிறார்கள். இதுதான் இங்கு முக்கிய புள்ளி. தனது சமகாலத்து வரலாற்று நீரோட்டத்தைப் பிரதி செய்யாதவர் கலைஞரல்ல என நீனா சிமோனில் இருந்து அருந்ததி ராய் வரை பல கலைஞர்கள் பேசியிருக்கிறார்கள். அந்தப் பேச்சுக்குப் பின்னால் இருக்கும் அரசியல் வேட்கையை நாம் சுட்டிக் காட்டுவது அவசியம். ஈழத்தில் வெளிவரத் துடிப்பதும் அதுதான். அது கலைஞர்களைச் சமூகமயப்படுத்தும் அரசியல் சார்ந்தது. தனது சமகால சமூகத்தின் பிரதியாக அந்த நீரோட்டத்தின் முனைப்பில் நின்று கொண்டு கலைஞனாக இருப்பது ஒரு அரசியற் செயற்பாடாகவும் இருக்கிறது. இங்குதான் பழைய பாரதப் பண்பாடுகளும், டால்ஸ்டாயிச உத்திகளும் உடைந்து நொருங்குகின்ற தேவை எழுகிறது. இந்த முக்கிய புள்ளியை நாம் விளங்கிக் கொள்வது மிக மிக அவசியம்.

யதார்த்தவாத கலைஞனின் எழுச்சி நிகழ்ந்த பொழுது அது எக்காலத்துக்குமான அழகியலாக முன் எழவில்லை. மாறாக அது முதலாளித்துவத் தோன்றலின் பின் எழுந்த காலாசார அழகியலின் பிரதிபலிப்பாக எழுந்தது. அது அதன் சமகாலத்தில் நீரோட்டத்தின் முனையில் நின்றது. அந்த யதார்த்தவாத முறைக்கு இன்றும் தேவைகள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அந்தப் பழைய விழுமியங்களும் உத்திகளும் இன்று சிதிலங்களாகிக் கொண்டே இருக்கின்றன. வரலாற்றைப் பின்னோக்கி இழுக்கும் சக்திகளின் புகலிடங்களாக இருத்தலைப் பாதுகாக்கின்றன.

புதிய யதார்த்தத்தை நாம் கண்டு பிடிக்க வேண்டியிருக்கிறது. புதிய உத்திகள் தேவைப் படுகின்றன. இன்றைய காலத்தின் முன்னணி அலைவரிசையை வைப்பதற்குப் பழைய பாடங்கள் என்று எந்தப் பாடங்களும் உதாரணங்களாக இல்லை. நாம் எந்த முதுகில் நின்றும் அதைச் செய்ய முடியாதுள்ளது. இங்குதான் அத்தகைய எழுத்தாளன் அந்தரத்துக்குள்ளாகிறான். டானியலின் இலக்கிய விடாய் அழகியல் பார்வை நா. பார்த்தசாரதிக்கு எவ்விதத்திலும் குறைந்ததல்ல. ஆனால் “பஞ்சமர்” ஏன் கைவிடப்பட்டது? தனது சமகாலத்து முன்னணிச் சிந்தனைகளை முகர்ந்த பிறகு அக் கலைஞர் சாதிய ஒடுக்குதலை எழுத முயற்சிக்கின்றனர். பழமை அக்கலைஞர் தன்னை முடக்கிக்கொண்டார் என்கிறது. ஏன் என்போல் எழுதவில்லை என வியக்கிறது. அப்பாற்பட்ட மொழியில் டானியல் கதை சொல்வது எப்படி? இன்றுகூட இந்த நாவலை அழகியல் அற்றது என்றும் சாதிய ஒடுக்குமுறை பற்றி பேசுவதால் மட்டுமே கவனத்தைப் பெற்றது என்றும் பேசுவார் உள்ளர். இந்த நாவல் கவனத்தைப் பெறவில்லை என்பதே உண்மை. இந்நாவல் பெயரை வாயில் புகுத்துவதற்கு எத்தனை போராட்டங்களை செய்யவேண்டியிருந்தது. எஸ்.பொ என்ற மாபெரும் ஆளுமையைத் தெரிந்துகொள்ள எவ்வளவு காலம் எடுத்தது. இவர்களுக்காக டானியல் அந்த நாவலை எழுதவில்லை. அவர்களுக்கு அதன் அழகியல் விளங்கப்போதுமில்லை. கரித்துண்டு கதை விளிம்பு மனிதர்களின் கதை நோக்கி நகரும் பாவனை செய்தபோதும் அந்த மனிதர்களுக்காக எழுதப்படவில்லை. அதை டானியல் செய்யவில்லை.

டானியல் எதிர்கொண்ட அதே சிக்கலைத்தான் பின்பு கோவிந்தன் மற்றும் செழியன் போன்றோரும் எதிர்கொண்டனர். அவர்கள் எழுத இருந்தவைகளுக்கு பாலபாடங்கள் இருக்கவில்லை. புதியதோர் உலகம் எல்லா ஈழத்து எழுத்தாளர்களாலும் படிக்கப்பட்ட ஒரு புத்தகம் எனச் சொல்லலாம். ஓரு காலத்தில் புலம்பெயர் எழுத்தாளர்கள் பலர் அந்தப் புத்தகத்தை திருப்பி திருப்பி படித்துக்கொண்டு திரிந்தனர். புதியதோர் உலகம் படிச்சனியா? முதல் அதைப்படி. என்ற தெனாவட்டுக் கதைகள் உலாவி வந்தன. ஏராளமான புலம்பெயர் சிறுகதைகள் புதியதோர் உலகம் பாணியைப் பின்பற்றி எழுதப்பட்டன என்று சொல்வது மிகையில்லை. ஆனால் இந்த வரலாற்றைத் தள்ளி வைத்துவிட்டுத் தமிழுக்கு அதிகார மையத்துக் கண்களாற் பார்ப்போமானால் அங்கு நாம் அழகியல் வெறுமையை அனுபவிப்போம். பூச்சியம் என்று சொல்லிப் புதைத்துவிடுவோம். நான் படித்த அந்த நாவற் பிரதியில் ஏராளமான எழுத்துப் பிழை உட்பட வசனப் பிழைகளும் இருந்ததாக ஞாபகம். ஆனால் அப்புத்தகத்தின் வரலாற்றுக் கட்டம் – அப்புத்தகம் நின்ற திசை அதை அழுத்தி அழுத்திப் பதிந்துவிட்டது. அந்த நாவலின் கரு தான் அதன் இருத்தலுக்குத் தேவையை உருவாக்கியது. “வானத்தைப் பிளந்த கதை!”யிலும் நீங்கள் பாரம்பரிய அழகியலைத் தேடுவது கடினம். சிறுவர்களுக்காக என்று தனிப்பட்ட கதைகள் எழுதும் புரட்சி நிகழ்ந்தது போன்ற புரட்சி அது.

3

குணா கவியழகன் இன்று எதிர்கொண்டு நிற்கும் பிரச்சினையும் மேற்சொன்ன வரலாற்றின் தொடர்ச்சியாக இருப்பதே இந்தப் பழைய கதைகளை இழுக்க வேண்டியிருந்ததற்கான காரணம். குணா கவியழகன் மற்றும் பல ஈழத்து எழுத்தாளர்கள் இன்று எழுதிக்கொண்டிருக்கும் தளங்கள் புதிய அழகியலை – புதிய யதார்த்தத்தை – புதிய வாசித்தலைக் கோரி நிற்கின்றன. இதற்காக அவர்களுக்கு வரலாற்று உதாரணங்கள் கிடையாது. பாலபாடங்கள் உருவாக்கும் தொழில் இது. தாம் கற்ற தமிழ்ப் பாட அடிப்படைகளை மட்டும் அடிப்படையாக கொண்டு புதிய ஓட்டங்களை இவர்கள் அணுகுகிறார்கள். புழைய அழகியல் இந்த மனநிலைக்குள் புகமுடியாமற் திணறுகிறது. வரலாற்று ஓட்டம் இவர்களைப் பதிகிறது. இவர்களுக்கு தம் எழுத்தின் மீதான தன்னம்பிக்கை இங்கிருந்துதான் பிறக்கிறது.

இவற்றை வாசிக்கவும் புரியவும் புதிய பழக்கங்கங்களை நாம் பழகிக்கொள்ள வேண்டும். வரலாற்று ஓட்டத்தின் எப்பக்கத்தில் நின்று வாசிக்கிறோம் என்று யோசிக்கவேண்டும். குணா கவியழகன் எழுதுபவை ஒருவகை வரலாற்று நாவல்களே. அவரது நஞ்சுண்ட காடு அண்மையில் வந்த முக்கிய புத்தகங்களில் ஒன்று என்று சொல்லும்பொழுது அக்கூற்று அழகியல் குறித்ததாக இல்லை. மாறாக அரசியலைக் குறித்ததாக இருக்கிறது. அந்த நாவலில் இருந்து அவரது புதிய நாவல் அப்பால் ஒரு நிலம் அழகியல் ரீதியாக வளர்ச்சியுற்றதாக இருக்கிறது. இருப்பினும் இது முந்தியதை விட தொய்வாக இருக்கிறது எனப் பலர் சொல்கிறார்கள். குறிப்பாக ஈழத்து ஏழுத்தாளர்கள் சொல்கிறார்கள். இந்தக் கருத்து தமிழகத்து அதிகாரத்துக்கு உவப்பாக இருக்காது என எதிர்பார்க்கலாம். இது மேற்சொன்ன கோவிந்தன் பாணி. ஒருவித வாசிப்பு பரம்பரையாக மாறிக்கொண்டிருப்பதை குறித்து நிற்கிறது எனலாம். அந்தக் கோவிந்தனை ஓடி ஓடிக் கொண்டாடிய வாய்கள் பல இன்று குணாவின் அழகியலைக் கேள்வி கேட்கின்றன. இது வியப்பான ஒன்றல்ல. இவ்வாறுதான் ஈழத்தமிழ் வட்டாரத்தில் இலக்கிய அதிகாரம் இயங்குகிறது. இது பிரக்ஞையுடன் அவதானிக்கப்படவேண்டும். அளவுகோல் எப்போதும் அரசியல்தான்.

போர் எதிர்ப்பின் வித்தியாசமான பார்வை (பக் 110) – இராணுவம், மக்கள், புலிகள் ஆகியோருக்கிடையிலிருந்த சிக்கலான உறவு (பக் 49) – போராட்ட காலத்து தனிப்பட்ட குடும்ப உறவு முறைகள் (பக் 146, 153, 154, 159) – மற்றும் யுத்தகாலத்தை “பயங்கரவாதியின்” பக்கம் இருந்து பார்க்கும் அனுபவம் (பக் 121) என பல்வேறு தனிப்பட்ட வாசிப்புக்களைக் கோரி நிற்கிறது இந்நாவல். குணா கவியழகனின் கதைப்பரப்பு புதியது. உலகளாவிய பார்வையுடையதாக இருக்கிறது. ஈழத்துப் பரப்பு உலகத்து நுகர்தலுக்கு வைக்கப்படுகிறது. அப்பால் ஒரு நிலத்தில் வரும் வீரன் பாத்திரம் தனது கதையை நக்கலுக்குள்ளால் சொல்லுவதைப் படிப்பவர்கள் பல்வேறு காரணங்களுக்காக திணறலாம். அது வெறும் பேச்சு வசனமாக விரிகிறது என பழைய அதிகார அழகியலுக்கான வேட்கை துளைக்க சிலர் அருவருப்புப்டலாம். அதே நேரம் அந்த வீரனின் கதைப்பரப்பு சில முளைகளைத் தைத்துப் பதற வைக்கும். அனுபவ வாசிப்பையும் வியப்பையும் கோரி நிற்கிறது அந்தச் சாதாரண வசனங்கள். அவற்றை வெறுத்தாலும் மறக்காமல் இருக்கச் சொல்கிறது. அந்த நினைத்தலுடன் ஒரு வரலாறு பதிவாகிறது.அங்குதான் அந்த நாவலின் இருத்தல் கேள்விக்கிடமற்றதாகிறது.
இந்த நாவல் அனுபவத்துக்கு பதில் தாருங்கள் இலக்கிய ஜாம்பவான்களே! இந்த உரைக்கு உங்கள் விளக்கத்தை முடிந்தால் தந்து பாருங்கள். அதன் பிறகு உங்கள்மேல் காறித்துப்புவதைக் குறைத்துக்கொள்கிறோம். இவ்வாறு கோபத்துடன் இக்கருத்தை வைப்பதற்கு பின்னால் எம்மேல் செலுத்தப்படும் அதிகாரத்துக்கு மேலான சமரசமற்ற எதிர்ப்பு இருப்பதை புரிந்து கொள்ளுங்கள். அது எங்கிருந்து எழுகிறது என்பதற்கு ஒரு உதாரணம் தர முடியும்.

“அற்புதமான அழகியலுடன்” ஒரு எழுத்தாளர் எழுதிய கதாபாத்திரம் ஒன்று பின்வருமாறு பேசுகிறது. எழுத்தாளர்களின் பெயரைப்போடாமல் எழுதுவது எமக்கு பழக்கமான ஒன்றல்ல. ஆனால் குறிப்பிட்ட இந்த எழுத்தாளர் ஒளித்து நின்று குத்துவதையே புழக்கத்தில் வைத்திருப்பதால் அவரது பெயரைப் போடாமல் எழுதுவதையே அவ்வப்போது நாம் விரும்பிச் செய்கிறோம். இதோ அவரது அற்புத வசனங்களில் ஒன்று.

“குண்டடி பட்டபோது நான் நர்சிங்கூடத் தெரியாத இயக்கப்பெண்ளால்தான் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டேன். இங்கே ஒருவேளை ஒரு நல்ல டாக்டர் முள்ளை எடுப்பதுபோல அதை எடுத்துவிடக்கூடும்”

இந்த ஒரு வசனத்துக்குப் பின்னால் இருக்கும் இந்துத்துவ – இந்திய – பார்ப்பனிய– முதலாளித்துவ வெறிதான் இந்த எழுத்தாளரின் அற்புத அழகியல்.
இதோ குணா கவியழகன் அப்பால் ஒரு நிலத்தில் எழுதும் சாதாரண வசனங்கள். கீழ்வரும் வசனங்களை மேற்சொன்ன மேற்கோளுக்கு எதிர்நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன என்பதையும் இங்கு குறிப்பிடுவோம்.

“எனக்கு அதுவும் முடியேல. அக்கம் பக்கமெல்லாம் ஓடிப்பார்த்தன். எங்கட ஆக்கள் யாரும் இல்லை. ஆமியையும் காணேல்ல. மனசில ஒரு வெறி வந்திது. எப்படி வந்திது என்று தெரியா. வந்து அவன்ர தொங்கிக்கொண்டிருந்த காலைப் பிய்ச்சன். அவன் கத்தினான். தசைகள் நரம்புகள் எலும்புகள் எண்டு வாழைப் பொத்தியை நிலத்தில் அடிச்சு சிதைச்சமாதிரி இருந்தது அந்தக் கால். குண்ணை மூடி மற்றப்பக்கம் பார்த்த மாதிரி அதைப் பிய்ச்சன். எங்கட தோல் கூட எவ்வளவு பலம் எண்டு அப்பதான் தெரிஞ்சுது. முடியேல. அவன் கத்துறான் குளறுறான். ‘வேண்டாமடா … வேண்டாமடா’ என்று கத்தினான். நான் அதைக் கேளாமல் பிய்ச்சு காலை எடுத்துத் தள்ளி வைச்சன்…”
இந்தச் சொற்கள் நோகாமல் முள் எடுக்கவில்லை. மாறாக நிஜத்துக்கும் நிழலுக்குமான வித்தியாசத்தை சுட்டி நிற்கிறது. அழகியல் பற்றிய கேள்வியை பிய்ந்த காலின் வலியின் மூலம் உங்கள் முன் நிறுத்த விரும்புகிறேன். சொற்களின் எழுத்துக்கூட்டல்கூட எப்படி உச்சரிப்பில் இருந்து பிறக்கின்றன என்பதையும் கூர்ந்து கவனிக்கவும். இங்கு கதைப் பரப்பிற் நினைவில் இருந்து வடிவமும் அழகியலும் பிறக்கிறது. பழைய வரலாற்றுச் சுமையைத் தூக்கித்திரியும் மூளைகள் இதன்மேல் அதிகாரம் செலுத்த வருவது என்ன நியாயம்? சூரியக் கதிர் என்று பெயரிட்டு வந்த போர் ஒற்றைப் பொழுதில் யாழ்ப்பாணத்தை இருட்டாக்கி விட்டது என எழுதுகிறார் குணா. அழகியலை முதன்பை்படுத்தத் தேடியா இந்த வசனம் வாலாயப்பட்டது? மாறாக இது பிறக்க நடந்த பிரசவம் வேறு. அதன் வலிகள் வேறு. நாம் புரிந்துகொள்வதும் வேறாக இருக்கவேண்டியிருக்கிறது

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *