கொலைமறைக்கும் மிதவாத அரசியலுக்கு தொட்டுக்க பெரியார்

ராகவன் ராஜரஞ்சன்

தமிழ்நாட்டில் இயங்கி வரும் May17 Movement ஐ சார்ந்த தோழர்கள் ‘பெரியாரும் பிரபாகரனும்’ என்ற தலைப்பில் Twitter space இல் ஒரு கூட்டத்தை ஒழுங்குபடுத்தி இருந்தனர். இந்த கூட்டத்தின் முக்கிய நோக்கம் பெரியார் மற்றும் பிரபாகரன் முன்வைத்த ‘போராட்ட அரசியல்’ பற்றியது. போராட்ட அரசியலை தேர்தல் நடைமுறைக்குள் முடக்குவதன் ஆபத்தைப் பற்றி தோழர்கள் பேசினர். இந்தக் கருத்துக்கு எதிராக திமுக ஆதரவாளர் டான் அசோக் கிளர்ச்சி அடைந்து பேசினார். தான் பெரிய அறிவாளி என்றும் May17 Movement தோழர்களுக்கு அறிவில்லை என்றும் பேசினார்.

அவரின் அறிவீனக் கதைகளை புரிந்து கொள்ளாத அவரது மடமை ரசிகர் வட்டம் குதூகலப்பட்டது. அது மட்டுமின்றி புலிகளின் குகைக்குள் சென்று அடிபோட்டு மீண்ட ‘வீராதிவீர’  டான் அசோக்குக்கு பாராட்டு விழாவும் நடத்த முடிவு செய்தனர்! விழாவுக்கு அவர்கள் வைத்த தலைப்பு- ‘Tight slap at point blank range – டான் அசோக் சம்பவம்’. பாராட்டுவிழா நடத்த இருந்த பிளட்போம் கிளப்ஹவுஸ் இது ஒரு வன்முறை தலைப்பு என அதை நீக்கி விட்டது. பிறகு இதை மொழிபெயர்த்து தமிழில் போட்டு (டான் அசோக் சம்பவம்- நெருக்கத்தில் விழுந்த இறுக்கமான அறை) ஒரு பாராட்டுவிழா (15/06/2021) கிளப்ஹவுசில் நடந்தது. கூட்டத்தில் தங்களுக்குள் தாங்களே புளுகிக் கொண்டனர். இவர்கள் ‘அரக்கர்கள்’ என்ற பெயரிலும் – திராவிடம் 2.0 என்ற பெயரிலும் திமுக ஆதரவு பிரச்சாரம் செய்து வருபவர்கள். இணைய கமெண்டுகளில் வாழ்நாளை கழிப்பவர்கள். தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலினின் வால்கள்.

இலட்சக்கணக்கான மக்கள் 2009 யுத்த கால கட்டத்தில் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு இலங்கை அரசோ, அல்லது இந்தியா உட்பட அதன் கூட்டாளிகளோ முக்கிய காரனமில்லை என அக்கூட்டத்தில் பலரும் விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தனர்.அந்த படுகொலைகளுக்கு விடுதலை புலிகளும் பிரபாகரன் அவர்களும்தான் காரணமாம். அதற்கு ஈழப் புலி எதிர்ப்பாளர் மற்றும் அரச ஆதரவாளர் சிலரை ஆதாரமாக கொண்டு அலம்பிக்கொண்டு இருந்தார்கள். ஷோபாசக்தி போன்ற அரைகுறைகள் முன்வைத்த வாதங்கள் இந்த வலது சாரிய போராட்ட அலம்பல்களுக்கு நாற்றாகத் துணை போகிறது.

இந்த கும்பல்கள் அண்மைகாலமாக இந்த அவதூறுகளை தொடர்சசியாக சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள். இவை புதியவை அல்ல. 2009 இல் போரை நிறுத்தவேண்டும் என நாங்கள் போராடிக் கொண்டிருந்த போது இவர்கள் மற்றும் ஷோபாசக்தி உட்பட புலிஎதிர்ப்பு கும்பல் முன்வைத்த வாதம் தான் இது. இதை கொலை மறைக்கும் அரசியல் எனும் புத்தகதில் தோழர் சேனன் அவர்கள் தனது அனுபவங்களுடன் பதிவு செய்து இருக்கின்றார். அதற்கு இன்றுவரை சம்பந்தப்பட்டவர்கள் மறுப்போ பதிலோ செய்யவில்லை. திமுக மீண்டும் ஆட்சியை பிடித்தபின் தமது பிற்போக்குத்தனம், வலது சாரியம், மிதவாதம் ஆகியவற்றறை மறைக்க இந்த வாதத்தை மீண்டும் எடுத்திருகிறார்கள்.

இந்த அரட்டையில் கருத்துச் சொன்ன ஒருவர் கலைஞர் ஆயுதபோராட்டத்தில் நம்பிக்கை இல்லாதவர் அதனால்தான் அரசியல் குழுவாக இருந்த TELO அமைப்புக்கு தனது ஆதரவை வழங்கினார் என பொன்மொழி ஒன்றைப் புலம்பினார். அதன் பின் புலிகள் “ஈழத்தில் இருந்த அரசியல் குழுக்களை எல்லாம் கொலை செய்த பின்னர் வேறு வழி இல்லாமல்தான் ஈழதமிழர்கள் புலிகளுக்கு ஆதரவு அளிக்கவேண்டி இருந்தது” எனக்கூறினார். பின்பு புலிகள் போதைபொருள்கள் கடத்தினார்கள், மக்களை மனிதகேடயமாகப் பாவித்தார்கள் என்றெல்லாம் பேசினார்கள்.  போரை இவர்கள் நிறுத்தாமல் ஆமியை நோக்கிச் சுட்டால் அவன் என்ன சும்மாவா இருப்பான் என்று கேட்டார்கள். இது போன்ற அறிவின் உச்சக்கட்ட பொன்மொழிகள் பேசப்பட்டது. பெரியார் வெற்றி பெற்ற போராட்டத்தை நடத்தியவர் – பிரபாகரன் மிகப்பெரும் தோல்வி பெற்ற போராட்டத்தை நடத்தியவர் எனவும் கூறினர். போராட்டம் பற்றிய இவர்களின் அறிவின் உச்சம் கண்டு எமக்கு புல்லரிக்கிறது. இந்த லட்சணத்தில் இவர்கள் சீமானுக்கு அறிவில்லை என விமர்சிக்கிறார்கள்! சீமான் முன்வைப்பதிலும் விட மிக கீழ்த்தரமான அரசியலை வக்காலத்து வாங்குபவர்கள் இவர்கள்.

டான் அசோக் ஒரு ‘சுத்தமான முட்டாள்’. அடுத்தவர்களை முட்டாள் என்றும் – மடையர் என்றும் புலம்பித் திரியும் இவர் தான்தான் தமிழ்நாட்டின் பெரிய முட்டாள் எனத் தொடர்ந்து நிறுவி வருகிறார். எல்லாப் போராட்ட சக்திகளையும் குறிவைத்து தாக்கி திமுக ஆதரவு திரட்டும் இவர்- தனது அறிவைக் காட்டி நிதானமாக ஒரு கட்டுரை –ஒரே ஒரு கட்டுரை – எழுதட்டும் பார்க்கலாம். இன்றுவரை அப்படி ஒன்றை நாம் பார்த்தது இல்லை. பொது விவாதத்திற்கு நாம் தயார். திமுக ஆதரவு மூலம் நலன் அடையத் துடிக்கும் வால்கள் மத்தியில் பெரிய விலாசம் காட்டுவதை விட்டுவிட்டு அறிவுபூர்வ விவாதத்திற்கு இவர் வருவாரா? வரமாட்டார். நாறிவிடும் என்பதை நன்கறிவார்.

இவர்கள் ஈழப் போராட்டம் பற்றி எந்தவித அடிப்படை அறிவும் இல்லாதவர்கள். அதை அறியவேண்டும் என்ற எந்த அக்கறையும் இல்லாதவர்கள். இவர்களின் கதையாடல்கள் எல்லாம் தம்மை முன்னிலைபடுத்தவும் , தாம் சார் அதிகார நலன்களை முன்னிலை படுத்துவதற்காகவுமே நடந்தேறுகிறது. பெரியாரியம் முற்போக்கு எல்லாம் வெறும் பம்மாத்து. பெரியார் முன்வைத்த போராட்டம் பற்றி ஒரு சொட்டு அறிவும் இவர்களிடம் இல்லை. இவர்களுடன் சமூக வலைதளங்களில் சம்பல் அடிப்பது வீண். ஈழபோராட்டம் தொடர்பாக கருத்துக்களை அல்லது விமர்சனங்களை ஆதார பூர்வமாக கட்டுரைகள் அல்லது புத்தமாக முன்வையுங்கள். நாங்கள் அதற்கு எமது கருத்தை ஆதாரபூர்வமாக கட்டுரையாகவோ புத்தகமாகவோ முன்வைக்கின்றோம். உங்கள் அலட்டல்களை – மடமை கமெண்டுகளை பொருட்படுத்த முடியாது. அதை பொருட்படுத்தாது ஆக்கபூர்வ உரையாடல் – அரசியல் நோக்கி நகரும்படி செயற்பாட்டாளர்களை நாம் கேட்டுக்கொள்கிறோம்.

ஹிந்துராம், ராதாகிருஷ்ணன், இந்திய பார்ப்பணிய அதிகார வர்க்கம் உளறி உமிழ்ந்த வாந்தியைதான் நீங்கள் உண்டு மீள்வாந்தி எடுக்கின்றீர்கள்.

படுகொலை காலத்தில் உடலின் அனைத்து வாயில்களையும் பொத்திக்கொண்டு எங்கோ சுருண்டு கிடந்தவர்கள் இவர்கள். இவர்களின் மறைமுக கொலை ஆதரவு நிலையை நியாயப்படுத்த ஈழ புலி எதிர்ப்பு ‘கொசிப்படிப்போரின்’ வாதங்கள் இவர்களுக்கு உதவி வருகிறது. ஷோபாசக்தி போன்ற மிதவாத – மக்கள் விரோத நபர்களின் கன்றாவிகள் இவர்களுக்கு உதவுகிறது. இத்தகைய மிதவாத – அடிப்படையில் ஒடுக்கப்படுவோருக்கு எதிரான நிலைப்பாட்டை வளர்ப்பதுதான் இவர்கள் வாதங்களின் சாராம்சம்

Leave a Reply

Your email address will not be published.