சாத்திரம் பார்ப்பதற்கு மறுப்பு

1

நாவலுக்கான சிறப்பு இதழாக வந்த முந்திய ஜீவநதி இதழில், ‘சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்கள்’ நாவல் பற்றி யதார்த்தன் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். இந்தக் கட்டுரை எனது கையில் கிடைத்த உடனேயே யதார்த்தனைத் தொடர்பு கொண்டு அதில் இருக்கும் தவறை சுட்டிக் காட்டினேன். இதழ் வெளிவரமுதல் கட்டுரை எவ்வாறு எனக்கு கிடைத்தது என்ற ஒற்றை கவனம் தவிர தனது தவறை திருத்த வேண்டும் என்றோ – அல்லது அதுபற்றி உரையாடவோ யதார்த்தன் விரும்பவில்லை. அவருக்கு அவகாசம் இருந்தும்- சுட்டிக் காட்டிய பின்பும் தனது தவறை அவர் திருத்தவில்லை. பதிலாக அவர் இப்படி ஒரு விளக்கம் தந்தார்

திருட்டு என்று சொல்லவில்லை என்றால் அதை வேறு சொற்களாலோ ஆலாபனைகளாலோ எழுதலாமா? தவிர நான் அவதானித்தவரை ஷொபா  உங்களுடைய பிரதியைப் பார்த்திருக்கிறார் , திருடி இருக்கிறார் என்ற வகையறா போஸ்டுகளுக்கு லைக் செய்து கொண்டும் அவற்றை அங்கீகரித்துக்கொண்டும் இருந்தீர்கள். நீங்கள் பொது வெளியிலேயே நான் செய்தது அவதூறு என்றோ பொய் என்றோ எழுதுங்கள் பிரச்சினையில்லை.’

அதாவது முகநூலில் நான் எதற்கு ‘லைக்’ போடுகிறேன் என்ற அடிப்படையில் தான் ஊகித்து எழுதி இருக்கிறேன் என்பதை தானே ஏற்றுக் கொண்டுள்ளார். வெட்கமின்றி இப்படி ஒரு விளக்கத்தை அவர் தந்தது எண்ணி அழுவதா சிரிப்பதா எனத் தெரியவில்லை. ‘கவிக்குயில் கல்பனா ரசிகர் மன்றத்திற்கும்’ நான் ஒரு ‘லைக்’ போட்டிருக்கிறேன். அரசியல் ரீதியாக உடன்படும் – உடன்பாடாத பல்வேறு பகிடிகள் – காமெண்டுகளுக்கு ‘லைக்’ போட்டு இருக்கிறேன். அதைவைத்து நான் என்ன ‘சொல்ல வருகிறேன்- அலல்து சொல்லி உள்ளேன் எனக் கண்டுபிடித்து விடுவீர்களா?  எத்தனையோ அரசியல் உடன்பாடு உள்ள பதிவுகளுக்கு ஒரு ‘லைக்’கும்  போடாமல் இருந்திருக்கிறேன். ‘லைக்’ போடவில்லை என்பதால் அதில் எனக்கு உடன்பாடில்லை என்ற முடிவுக்கு வந்து விடுவீர்களா?

யதார்த்தன் பின்வருமாறு எழுதி இருக்கிறார்.

இது திருடப்பட்டது என்பதான விவாதங்களை சேனனும் அங்கீகரித்திருந்ததையே பொதுவெளியில் காணக்கிடைத்து. இப்பிரதியை வாசித்த பிறகு இதை மிகவும் மலினமான ஒரு விற்கும் உத்தியாகவே காண்கின்றேன்.’

முகநூல் ‘லைக்’ வைத்து எவ்வாறு இந்த முடிவுக்கு வந்தார்? இது கண்மூடிச் சாத்திரம் பார்த்தல்  – விமர்சனமல்ல.

சரி இந்தப் புண்ணாக்கு ‘லைக்’ வைத்து ‘தத்துவார்த்த – அரசியல்’ முடிவுகளுக்கு வர முடியும் என்றே வைத்துக்கொள்வோம். அதற்கு கூட ஆதாரம் காட்ட வேண்டும் . நான் எங்கு எங்கு ‘லைக்’ போட்டு இருக்கிறேன் –அது எவ்வாறு எனது கருத்தை தெரியப்படுத்துகிறது என்ற ‘விஞ்ஞான விளக்கத்தை’ அவர் முன்வைத்து இருக்கவேண்டும். மடத்தனமான சமூகவலைத்தள அலட்டல்களைபோல் அலட்டிக் கொண்டு அதை ‘விமர்சனம் – விளக்கம் –தத்துவம்’ என்றெல்லாம் எண்ணக்கூடாது. அது உங்களை நீங்களே ஏமாற்றும் நடவடிக்கை. இதுபோன்ற ‘விதண்டாவாத’  -‘தமிழ் பாரம்பரிய’ நடவடிக்கைகளில் இருந்து வெளியில் வரவேண்டும் யதார்த்தன் என்பது எனது உண்மையான அவா? இருப்பினும் பலர் எவ்வளவு தூரம் மாறத் தயாராக இருக்கிறார்கள் என்பது பற்றிய எனது நம்பிக்கை குறைந்துகொண்டே செல்கிறது.

வெளியாகிய அவதூறை மறுத்து ஒரு கட்டுரையை உடனேயே இதழ் ஆசியருக்கு நான் அனுப்பி இருந்தேன். கட்டுரை தற்போது வந்துள்ள ஜீவநதி இதழில் வெளியாகி இருக்கிறது. தாமதமாகிய போதும், வெளியிட்டமைக்கு நன்றி.  இருட்டடிப்பு நடவடிக்கைகள் நிறைந்த சிறு பத்திரிகை உலகில் அவ்வாரின்றி இதை வெளியிட்ட ஜீவநதி ஆசிரியர் பரணிக்கு நன்றிகள்.

 

2

ஜீவநதி இதழின் பிரதம ஆசிரியர் மற்றும் அதில் கட்டுரை எழுதி இருக்கும் யதார்த்தன் அவர்களுக்கும், நீங்கள் கீழ்வரும் பதிலை உங்கள் இதழில் பதிவிட வேண்டும் அல்லது உங்கள் வாசகர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

 

 

‘சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்கள்’ என்ற எனது நாவல் எதிர் கொண்டிருக்கும் கடுமையான விமர்சனங்கள் அளவு சமகால இலக்கிய உலகில் எந்த நாவலும் எதிர் கொண்டிருக்கவில்லை என நினைக்கிறேன். பலர் தமக்கு தமக்கு தெரிந்தளவு எழுதிப் பேசி தாக்கி வருகிறார்கள். அது பொருட்டல்ல. பாராட்டுக்கள் பெறுவதற்கு எழுதுவது எமது நோக்கமாக ஒருபோதும் இருந்ததில்லை. அது மட்டுமின்றி சம கால நாவல்களைக் காரசாரமாக விமர்சிக்க வேண்டும் எனப் பேசியும் விமர்சித்தும் வந்திருக்கிறேன். இதனால் இந்த நாவல் பற்றி – அதன் இலக்கியத் தரம் பற்றி முன்வைக்கப் படும் அடிபாடுகள் எழுதப்படவேன்டியவையே. உண்மையில் வடிவம், கதைப்பொருள், ஆக்கம் பற்றி மேலும் மேலும் ஆழமான உரையாடல் வேண்டும். இதை நீங்கள் செய்யலாம். ஆனால் பொய் எழுத முடியாது. கண்டபாட்டுக்கு அவதூறு செய்யமுடியாது.

நான் திருட்டுக் குற்றச் சாட்டு வைப்பதாகவும் – அதுவும் வியாபார நோக்கிற்காக முன் வைப்பதாகவும் நீங்கள் எழுதி உள்ளீர்கள். அதுவும் என்னைத் தெரிந்ததாக சொல்லிக் கொள்ளும் யதார்த்தன் இவ்வாறு எழுதி இருப்பது மன வேதனையைத் தருகிறது. ஷோபாசக்தி தன்னைப் பெரிய ‘கணவானாக’ கற்பனை செய்து கொண்டு செய்யும் கீழ்த்தரமான அதே அவதூறை யதார்தணும் செய்திருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது.

ஒரு விசயத்தை எழுத முதல் அது பற்றி ஏற்கனவே நடந்த உரையாடல் – பதிவுகள் பார்த்து எழுத முடியாதா? ஒருவர் மேல் குற்றச் சாட்டு வைக்க முதல் அவர் என்ன சொல்லி இருக்கிறார் என ஒரு சொட்டுக் கவனம் எடுக்கக் கூடாதா? நான் எங்கு எப்பொழுது ‘திருட்டு’ குற்றச் சாட்டு வைத்து இருக்கிறேன்? இப்போது மட்டுமல்ல – இதுவரை காலமும் எம்முறையில் வியாபார நோக்கிற்காக இலக்கியம் செய்து இருக்கிறேன்?

திருட்டு என்ற சொல் பொருத்தமற்றது என மறுத்து நான் எழுதி இருக்கிறேன், இது தவிர அகழ் இணைய இதழுக்கு வழங்கிய செவ்வியில் நான் என்ன சொல்கிறேன் என்பதை விரிவாக விளக்கியிருக்கிறேன் (இலக்கியம் என்பது தான்தோன்றித்தனமாக வருவதில்லை– அகழ் https://akazhonline.com/?p=2786)).

இது பற்றி ஷோபாசக்தியுடன் நேரடியான உரையாடலிலும் தெளிவு படுத்தி இருக்கிறேன். படிப்பதற்கு வசதியாக நேர வரிசைப்படுத்திக் கூட எனது வலைத்தளைத்தில் இது பற்றிப் பதிவு செய்து உள்ளேன் (திரள் விமர்சனக் கூட்டச் சர்ச்சைப் பின்னணி http://senan.co.uk/?p=404). தயவு செய்து படிக்கவும்.

 

இது ஒன்றைக்கூட நீங்கள் பார்க்கவில்லையா?

 

ஷோபாசக்தி மிக மட்டகரமாக விவாதம் செய்பவர். அத்தகைய விவாத முறை தமிழ் இலக்கியத்தில் வேரூன்றி விடக்கூடாது. சமீபத்தில் சக எழுத்தாளர் அனோஜன் மேல் நடந்த கூட்டுத் தாக்குதல் நல்ல உதாரணம். இதற்கு விரிவாக அனோஜன் எழுதிய பதிலுக்கு அவர்கள் பதில் என்ன சொன்னார்கள்?( மாற்றிப் பேசுதலும் மறைமுக சாதியமும்! – அனோஜன் பாலகிருஷ்ணன் (annogenonline.com)) தாம் கொக்கரித்து சிரிக்கிறோம் என்றார்கள் – கூடிச் சிரித்து மழுப்பி மறைந்து நிற்கிறார்கள். செய்த அவதூறு பற்றி கேட்பார் இல்லை – அது பற்றி குற்ற உணர்வு ஒரு சொட்டும் இல்லை. இதுதான் சமகால விஷம்கலந்த உரையாடல் சூழ்நிலை. இதைத் தவிர்த்து நீங்கள் இந்த நாவல் விமர்சனத்தை பார்ப்பது தவறு என்றே கருதுகிறேன்.

இரண்டு நாவலும் வெளிவரட்டும் அதை வைத்துப் படிப்பவர் முடிவு எடுக்கட்டும் எனச் சொன்ன நான் வியாபாரியா – விழுந்து குதித்து பொய் பேசி அடிபாட்டை ஆரம்பித்து வைத்த ஷோபாசக்தி வியாபாரியா? ஷோபாசக்தியின் ‘வியாபார’ விளையாட்டு உத்திகள் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். திரள் குழுமத்தின் இந்தநாவல் விமர்சனத்துக்கு வந்த சாருநிவேதிதா எப்படி பேசி இருக்கிறார் எனப் பார்க்கலாம் ( ஒளிப்பதிவு உண்டு). இந்த நாவல் விமர்சனத்துக்கு இரண்டொரு நாள் முன்பு -நீண்ட நாட்களில் பின்  – ஷோபசக்தியுடன் உரையாடியது பற்றி அவர் பதிவு செய்து இருக்கிறார். இவ்வாறுதான் சீரழிந்து கிடக்கிறது இலக்கிய உலகு. இதை விளங்கிக் கொள்வது தமிழ் இலக்கிய சூழலை மாற்ற மிக அவசியம்.

 

இரண்டு நாவல்களையும் படித்து ஒரு முடிவுக்கு வந்து யதார்த்தன் தனது கருத்தைப் பதிவு செய்வது வரவேற்கத்தக்கது. அதுபோல் கவிஞர் ரியாஸ் குரானா தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார் (பார்க்க – ஷோபாசக்திக்கும் சேனனுக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் “ஐடியாத் திருட்டு” குறித்த சிறு அலசல்-கட்டுரை-றியாஸ் குரானா https://naduweb.com/?p=15991&fbclid=IwAR2-YRDksYyR91OiqMyDoB3At_uVtZt-ksVDUjALVfdNox3SXmP7jYtITyg). என்னை யாரென்றே தெரியாத தமிழ்நாட்டு எழுத்தாளர் வே ராமசாமி எழுதியதில் இருந்துதான் சர்ச்சை ஆரம்பித்தது என்பதைக் கவனிக்க. தவிர நேரடியாகப் பார்த்த பேசிய விபரங்களை திரு வாசன் அவர்கள் பதிவு செய்துள்ளார் (ஷோபா சக்தியின் ‘இச்சா’ நாவல் இலக்கிய மோசடியா? ஒரு சாட்சியின் வாக்குமூலம் https://tamil.indianexpress.com/literature/writer-shoba-sakthi-ichcha-novel-controversy-writer-senan-217746/௦)

யார் யார் என்ன குற்றச் சாட்டுகள் வைக்கிறார்கள என்ன உரையாடல் நடக்கிறது என எதுவும் தெரியாது யதார்த்தன் எழுதி இருக்கிறார் – அல்லது இவை அனைத்தையும் புறம் தள்ளி வைத்து விட்டு ஷோபாசக்தியைப் பின்பற்றி எழுதி இருக்கிறார். இந்த விவாதம் தொடங்க முதலே பல்வேறு அடிபாடுகள் மிக கேவலமாக நடந்து முடிந்து விட்டன. எழுத்தாளர் சயந்தன் போன்றவர்களுக்கு மேலும் பல்வேறு நெருக்கடிகள் உருவாகி இருந்தன. அந்த அடிபாட்டில் சம்மந்தப் படாது இருந்த போதும் வலிய இழுத்து என் மேலும் அவதூறுகள் பரப்பப்பட்டது.  கொரோனா காலத்து இலக்கிய அடிபாடுகள் எனத் தனிப் புத்தகமே போடக்கூடிய அளவு அடிபாடுகள் நடந்தன – நடந்துகொண்டு இருக்கின்றன.  அணி பிரிந்து நடக்கும் இந்த அடிபாட்டின் பக்க விளைவு இந்த நாவல் விமர்சனங்களிலும் பார்க்க கூடியதாக இருக்கிறது. இவற்றை நீங்கள் முழுமையாகப் பார்க்க வேண்டும்.

சிறுமைத்தனமான எழுத்தில் இறங்கவேண்டாம். சிந்தித்துச் செயற்படுங்கள் – எழுதுங்கள் என யதார்த்தன் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் குறிப்பிடத் தக்கதாக கருதும் லண்டகாரர் நாவலையே ஒரு தோல்வியடைந்த நாவல் என நான் சொல்லி இருக்கிறேன். நீங்கள் எது வேண்டுமானாலும் எழுதுங்கள். இந்த நாவல் தோல்வி என்பதை அது வெளிவர முதலே நண்பர்களுடன் பேசி இருக்கிறேன். இப்போதும் சொல்கிறேன். தமிழ் இலக்கியச் சூழலில் ஒரு நல்ல நாவலும் வெளிவரவில்லை என கவிஞர் கிரிஷாந்த் முன்வைக்கும் கருத்துடன் உடன்பாடே. இந்த நாவலுடன் என் எழுத்து முடிந்து விட்டது என நான் நினைக்கவில்லை – நீங்களும் நினைக்க மாட்டீர்கள் என நான் நம்புகிறேன். ஒரு நாவலில் எல்லாம் சொல்லி விட முடியும் – அந்த நாவல் எடுத்துக் கொண்ட பொருள் பற்றி அந்த நாவலுக்கு வெளியில் மேலதிக கருத்துக்கள் இல்லை – போன்ற குழந்தைப் பிள்ளைத் தனமான கருத்துக்களை சொல்லி வருவது எனது பழக்கமாக ஒருபோதும் இருந்ததில்லை.

சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்கள் நாவல் பற்றி இரு விடயங்களை நான் விட்டுக் கொடுக்க தயாராக இல்லை. ஓன்று வடிவம் – மற்றது அரசியல். இவை பற்றிய சில கருத்துக்களையும் இங்கு பதிவு செய்துவிட விரும்புகிறேன்.

பல்வேறு நல்ல விமர்சனங்கள் செய்திருக்கும்- இலக்கிய உலகு பற்றி நீண்டகால அனுபவம் உள்ள உமா அவர்கள் இந்த நாவலில் வரும் பள்ளமான நிலம் பற்றிய வர்ணனை பற்றி கேள்வி எழுப்பி இருந்தார்.

மொண்டித்தரை என்ற அந்த ஊர் இதுவரை காலமும் அவளுக்கு வெறுப்பையும் கசப்பையும் தவிர எதையும் வழங்கியதில்லை

என்ற வசனத்துடன் ஆரம்பிகிறது அப்பகுதி. எனது பழைய சிறுகதைகளை படித்தவர்கள் இந்த ஊர்ப் பெயரை நான் முன்பும் பாவித்து இருப்பதை அறிவர். அவளுக்கு இந்த ஊர் பற்றி தனிமைப்படுத்தி விட்ட உணர்வு ஏற்படுவது – வீட்டில் பேசப்படாதவைகளை எவ்வாறு இந்த ஊர் பெரிதாக பேசுகிறது – என எழுதி கொண்டுவரும் பந்தியில் பின்வரும் வசனமும் இணைகிறது

மேட்டில் இருந்தவர்கள்  மேட்டுக்குடி எனவும் பள்ளத்தில் இருந்தவர்கள் பள்ளர் எனவும் பிரிந்து பிரிந்து இருந்த ஊருக்குள் அவளால் புக முடியவில்லை.

இதன் சகஜத்தின் அதிர்ச்சி பற்றி அடுத்த வசனம் பேசுகிறது. இதில் என்ன பிரச்சினை என்பதை இன்றுவரை விமர்சிப்பவர்கள் விளக்கவில்லை. ‘மேடும் பள்ளமும்’ என்ற தலைப்பில் நீர்வை பொன்னையனின் சிறுகதை தொகுப்பு ஓன்று வெளிவந்து இருப்பதை அறிவீர்கள் என நினைக்றேன். ‘மேட்டு நிலம் சிரித்துக் கொண்டிருந்தது’ –

வரம்பின் எதிர்புறத்தில் உள்ள பள்ள நிலம் நோக்கி திரும்பினான் கணபதி. அவன் உள்ளத்திலே ஏக்கம் படம் எடுத்தது

என அதில் எழுதி இருப்பார் (நிறைய உண்டு – இது ஒரு உதாரணம் மட்டுமே). முத்தன் பள்ளம் என்ற அண்டனூர் சுரா எழுதிய நாவலையும் படிக்கவும். ஒடுக்கப்படும் சாதி மக்களின் நிலையைச் சுட்ட இதை டானியலும் எழுதி இருப்பார். யுத்த சமயத்திலும் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டு இருந்த மக்களின் வலி அதிகம் என்பதை சுட்ட இதையும் பின்பு –முகாம்களில் இருந்த நிலை பற்றியும் எழுதி இருப்பது தவறா? சாதி பற்றியும் எழுத வேண்டும் என்பதற்காக எழுதி சேர்த்து இருப்பதாக இன்னுமொரு ‘அறிவின் கொழுந்து’ விமர்சித்து இருந்தது. அது போன்றதல்ல உமாவின் கேள்வி என்றே நினைகிறேன்.

இது தவிர அல்லி பிறப்பு பற்றி ஒரு புனைவுப் பகுதி உண்டு. அதிலிருக்கும் சில சொற்களும் ‘அரசியற் பிரச்சினை’ என திரள் விமர்சனக் கூட்டத்தில் பேசப்பட்டது. முட்டையில் மயிர் புடுங்குவது போல் – அங்கு புனிதக் கருவறை பற்றி பேசி விட்டேன் சீலை பற்றி பேசி விட்டேன் –போன்ற விமர்சனங்களும் செய்யப் படுகிறது.

இந்தச் சொல்லாடல்களை ‘தெரியாமல்’ பாவித்து இருக்கிறேன் என நீங்கள் நம்பினால் அது உங்கள் பிரச்சினை. திரும்பவும் சொல்கிறேன் –தெரிந்துதான் பாவித்து உள்ளேன்.

திரும்ப படியுங்கள் – அதன் பாவிப்பு முறை எதைச் சுட்டுகிறது என சிந்தித்துப் பாருங்கள். அதை தெரிந்து கொள்ள முடியாது என்பதற்காக நாவல் எழுதிய எழுத்தாளனின் கருத்து வெளிபாடு என கற்பனை செய்வது தவறு.

சுதந்திரப் பறவை என்ற சொல்லாடல் ஈழ யுத்த அரசியற் கால கட்டத்தில் எதைக் குறிக்கிறது என்பதைக் கூடப் புரிந்து கொள்ள முடியாதவர்கள் அரசியற் பாடம் எடுக்கலாம் என நினைப்பது நகைப்பிற்குரியது.

உங்கள் மேலோட்டமான பார்வை – புரிதல்ககளை என்மேல் திணிக்காதீர்கள். அல்லி ராணி வரலாறு – அல்லி ராணிக் கூத்து – மாகாபாரத கிளைக்கதைகள் – பேச்சு வழக்கில் இருக்கும் புனைவுகள் – என்பன பற்றி எந்த அறிதலுமே இல்லாது சில வசனங்களைப் புரிந்து கொள்ள முடியாதுதான். ஈழ யுத்த வரலாறு பற்றிய முன்னறிவு இந்த நாவலை படிக்கச் சிறிதளவாவது தேவை என்பதை இதனால்தான் சொல்லி வருகிறேன்.

சாத்தான், பேய்கள், பிசாசுகள், மறுபிறப்பு என்று எல்லாம்கூட எழுதி இருக்கிறேன். அதைவைத்து ‘சேனனின் மதவதாம்’ என கட்டுரை போட்டாலும் போடுவீர்கள் போல?

வடிவம் – அதற்கு தேர்வு செய்யப்படும் மொழி – அதன் வரலாற்றுத் தொடர்பு இவை பற்றி எலாம் சிந்தித்துத்தான் நீங்கள் நாவல் படிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கல்கி தொடங்கி சாண்டியல்வன் வரை இருகிறார்கள். அத்தகைய வரலாற்று நாவல்களை ரசித்துப் படியுங்கள். ‘பாரத ராசாவும் ஈழத்து ராணியும் மோதின கதை என்பர்’ என்ற தலைப்பில் இருக்கும் பகுதி அத்தகையதல்ல. இது பல்வேறு புனைவுகளின் படிமங்களை ஒருவகை கிண்டலுடனும் – இந்திய இந்துத்துவ ராணுவம் மேலான எதிர்ப்புடனும் அணுகுகிறது. தமிழகம் மற்றும் ஈழம் எங்கும் உலாவி வரும் பல்வேறு வகை அல்லிராணிக் கிளைக் கதைகளின் ஒரு வடிவம் இது. இந்த கிளைக் கதைகள் மகாபாரதத்தின் முதன்மை கதைப் போக்கை உடைக்கிறது. தெற்கின் தாய்வழி மரபை தூக்கி நிறுத்துகிறது. இது பற்றி ஆய்வுகள் செய்தவர்கள் அதை அறிவர். அதன் தொடர்ச்சியாக எழுதிய – இந்திய இராணுவம் ஏன் இலங்கை சென்றது என்ற அதிகாரம் சார் கதைகளை மறுக்கும் கிளைக் கதை படிமமாக எழுதப்பட்ட பகுதி இது.

நீங்கள் சொல்லும் சில ஆழமற்ற கருத்துக்கள் இந்த மரபின் பின் நிற்கும் பல்வேறு சமூகங்கள் மேல் வைக்கப்படும் விமர்சனம் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.

முன்னறிதல் இன்றி விளங்குவது சிரமம் என்பதற்காக சில விசர் விமர்சனங்களையும் அதை வைத்து – நிஜத்தில் எனது அரசியல் பற்றி எழுதுவதும் மிகக் கேவலம். நான் கதை எழுதிய பக்கங்களை விட அரசியற் கட்டுரைகள் எழுதிய பக்கங்கள் அதிகம். ஏற்கனவே பல புத்தகங்கள் வெளிவந்துள்ளன. வாருங்கள் உரையாடுவோம். உங்கள் அரசியல் நுணுக்கங்களை அங்கு காட்டுங்கள். எனது அரியல் நிலைபாடு ‘மேலோட்டமானது’ என எனது அரசியற் கட்டுரைகளை வைத்து செயற்பாடுகளை வைத்து முடிவெடுப்பதுதானே சரி? உங்கள் போதாமைகளை என்னில் புதைப்பது எப்படி சரியாகும்?

நான் எழுதிய ஒவ்வொரு கதா பத்திரமும் அச்சொட்டான என் சுயத்தின் பிரதியே என்ற பார்வையில் விமர்சிபீர்கள் என்றால் தயவு செய்து இலக்கியம் பற்றி எழுதுவதை விட்டு விடுங்கள்.

அவ்வளவு மட்டகர பார்வையால் இலக்கியத்துக்கு எந்த உதவியுமில்லை. ஒருவரின் பெயரை போட்டு எழுதுவது ‘அசிங்கம்’ எனச் சொல்லும் விளக்கமற்ற கதைகளை விமர்சனமாக எடுத்துக் கொள்ள முடியாது. ‘படைப்புக்கு வெளியே சென்று எழுதியவனின் மேல் அவதூறு செய்வது தவறு’ என தனக்கு மேல் வரும் விமர்சனங்களை தாக்கும் ஷோபாசக்திதான் தனிநபர் தாக்குதல்களை செய்கிறார் – வளர்த்து வருகிறார். இந்த இரட்டை முகம் யதார்த்தனுக்கு இல்லை – இனியும் வேண்டாம்.

வடிவம் பற்றய – பல்வேறு ஜோன்றா பற்றிய – ஆழமான உரையாடல் நடப்பது தமிழ் இலக்கிய உலகிற்குத் தேவை. வெறும் மேற்போக்கான வாசிப்பு அனுபவம் உரையோடிக் கிடக்கும் தமிழ் இலக்கிய வாசிப்புப் பரப்பில் ‘புதுமை’ எழுத்து என்பது இல்லாது போய்க்கொண்டிருப்பது ஆச்சரியமான விடயம் இல்லை. நான் பல பரிசோதனை முயற்சிகளைச் செய்கிறேன். நேர்கோட்டில் எழுதும் நோக்கம் ஒருபோதும் இருந்ததில்லை. வெவ்வேறு வடிவங்கள் பற்றித்தான் எனது ஆவல். ஜேம்ஸ் ஜோய்ஸ் எழுத்துக்களில் கவர்ச்சி உண்டு எனச் சொல்லி இருக்கிறேன். இது தவிர நான்தான் தமிழ் இலக்கிய உலகில் நவீனத்துவத்தின் தந்தை என்பதுபோல் எங்கு பேசி இருக்கிறேன்? தமிழ் இல்லக்கிய உலகில் நன்கறியப்பட்டஷோபாசக்தி மேற்கோள் குறிக்குள் போட்டு நான் சொன்னதாக பின்வருமாறு ஒரு பச்சைப் பொய்யை எழுதி இருக்கிறார்.

 

நான் புதிய வடிவத்தை தமிழ் இலக்கியத்துக்கு அளிக்கிறேன். ஒரேவகையான யதார்த்தவாத எழுத்துமுறையில் சோம்பிக் கிடக்கும் தமிழ் இலக்கியத்தை புதிய வடிவச் சோதனையால் நெம்பிவிடுகிறேன்” (28-feb – 2021 முகப் புத்தக பதிவு.

இதை நான் எங்கு எப்ப சொல்லி இருக்கிறேன். ஆதாரம் வழங்க வேண்டிய எந்த பொறுப்பும் அவருக்கு இல்லை. ஆனால் இவ்வாறு ஒரு படு பொய் எழுதி பின்பு அதை வைத்து என்னை கேவலமாக அவரால் தாக்க முடிகிறது. இலக்கிய உலகு அதை ஆவெண்டு பார்த்துக் கிடக்கிறது. இலக்கியக் கோட்பாடு – நவீன இலக்கியம் என்பன பற்றி இதுவரை ஒரு கட்டுரை கூட ஷோபசக்தி எழுதியது கிடையாது.

ஒரு நல்ல கட்டுரை அதைச் செய்யும். வாசிப்பவர்களின் மன நிம்மதியைக் குலைப்பதுதான் நல்ல எழுத்து என்றொரு இலக்கியக் கோட்பாடு கூட உண்டு

என போகிற போக்கில் அவர் ஒருமுறை எழுதி இருப்பார். ஐயா அது என்ன கோட்பாடு? எங்கு எழுதப் பட்டிருக்கு எனச் சுட்டிக் காட்டுங்கள் என கோரியதற்கு இன்றுவரை பதில் இல்லை. சட்டியில் இருந்தால்தானே அகைப்பையில் வருவதற்கு.

மேற்சொன்ன அவதூறின் பின் தனது ‘நவீன இலக்கிய’ அறிதலை பின்வருமார் எழுதிக் காட்டி உள்ளார் ஷோபசக்தி.

 

இந்த வடிவச் சோதனை, புது எழுத்து, இருப்பியல்வாதம், அமைப்பியல்வாதம், பின்நவீனத்துவம் என்றெல்லாம் தமிழ் இலக்கியம் பாய்ச்சல் காட்டி சில பத்தாண்டுகளாகின்றன. எந்த இந்திய மொழியிலும் நடைபெறாத அளவிற்கு, தமிழிலேயே இத்தகைய முயற்சிகள் நிகழ்ந்திருக்கின்றன என்றே நான் நம்புகிறேன். இன்றிலிருந்து சரியாக அறுபது வருடங்களுக்கு முன்பு வெளியாகிய எஸ்.பொவின் தீநாவலிலேயே இத்தகைய புது எழுத்தும் வடிவச் சோதனையும் நிகழ்ந்தேறின. அதைத் தொடர்ந்து எத்தனை எத்தனையோ படைப்பாளிகள் யதார்த்தவாத கதை சொல்லலை மீறிப் புதிய வடிவங்களைச் சாதித்தார்கள். தமிழவன், சாரு நிவேதிதா, கோணங்கி, இராகவன், பிரேம் ரமேஷ், சுரேஷ்குமார இந்திரஜித், யுவன் சந்திரசேகர், எஸ்.ராமகிருஷ்ணன்என்றொரு பெரும் வரிசையேயுள்ளது. எம்.ஜி.சுரேஷ் கியூபிஸ நாவலையே எழுதிக்காட்டினார். பேராசிரியர் ச. ராஜநாயகம் எல்லாம் வேற லெவல்! அவரின் சாமிக்கண்ணு எனச் சில மனிதர்களின் கதைகள்என்ற புது வடிவ நாவலைப் படித்தெல்லாம் தமிழன் நாண்டுகொண்டு சாகாமல் நட்டுக்கொண்டுதான் நிற்கிறான் என்பதே எம் பெருமைமிகு வரலாறு. நிலவரம் இப்படியிருக்கும் போது நானே புதிய வடிவத்தைக் கொண்டு வந்திருக்கும் மெசியாஎன்ற கோதாவில் அருமை நண்பர் சேனன் கொந்தளிப்பது வரலாற்று வழுவே.”

இவ்வளவுதான் அவரது ‘நவீன இலக்கியம்’ பற்றிய அறிதல். எவ்வளவு குறுகி நிற்கிறது இது என்பதை உலகில் நடக்கும் நவீன இலக்கிய நடைமுறைகள் பற்றி அறிந்தவர்கள் அறிவர்.

இதுவரை தமிழில் யாரும் புதுமையாக எழுதவில்லை – பரிசோதனை முயற்சி செய்யவில்ல என எங்காவது சொல்லி இருக்கிறேனா ? எழுதி இருக்கிறேனா? அவற்றின் போதாமை பற்றி பேசி வருகிறேன். சம கால முதுகு சொறியும் இலக்கிய உலகில் இது அரிதாகி வருவது பற்றி பேசி வருகிறேன். ஆனால் உதாரணம் எனச் சொல்லி ஷோபாசக்தி தந்திருக்கும் ‘லிஸ்ட்’ அவரது தமிழ் இலக்கிய அறிதலின் போதாமையைத்தான் காட்டி நிற்கிறது. தஞ்சை பிரகாஸ் தொடங்கி கோணங்கி வரை விடுபட்டவைகளை இணைத்து புதிய விளக்கம் ஒன்றை யாராவது எழுதுங்கள். அது கிடக்க இந்த எழுத்துக்கள் பற்றி ஷோபசக்தி என்ன எழுதி இருக்கிறார் ? அடிப்படை நேர்மை அற்ற முறையில் என்னைத் தாக்குவதற்காக பொய்யும் பிரட்டும் செய்யும் இவர் ஒருமுறை என்னிடமும் அ.மார்க்சிடமும் இருப்பியல்வாதம், அமைப்பியல்வாதம், பின்நவீனத்துவம் எல்லாம் கற்றுக் கொண்டதாக எழுதி இருக்கிறார். மறந்து விட்டார் போலும். அதை அப்போது படித்த போது ஆச்சரியமாக இருந்தது. அவருக்கு கோட்பாடு பற்றி அவ்வளவு படிப்பு ஆர்வம் இருந்து இருந்தால் இன்னும் கொஞ்சம் கூடச் சொல்லிக் கொடுத்து இருக்க முடியும். அடிப்படை நேர்மை அற்ற முறையில் வாய்க்கு வந்தபடி அலட்டுவது வம்பு பேசுவது எல்லாம் விமர்சனம் என நாம் ஏற்றுக் கொள்ள வேண்டுமா? ஷோபாசக்தி இந்த எழுத்துக்களை ஒருபோதும் சிலாகித்து பேசியதோ எழுதியதோ இல்லை. அதைச் செய்ய வேண்டும் என நாம் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் அத்தகைய ஜோன்றா அவருக்குப் பிடிப்பதில்லை – அவர் வாசிப்பதும் இல்லை – அது அவர் உரிமை. ஆனால் என்னைத் தாக்குவதற்கு இவற்றைக் காவிக் கொண்டு வருகிறார் அவர். இது எத்தகைய நேர்மை?

தமிழ் இலக்கியம் சார் பார்வையே இவ்வளவு போதாமை என்றால் – மற்ற மொழி இலக்கியங்கள் பற்றி எப்படிப் புரிய வைப்பது. ஜேம்ஸ் ஜோய்சின் உளிசிஸ் பற்றி உரையாடுவோம் வாருங்கள் என இவர்களை அழைக்க முடியுமா?

உங்கள் வசதிக்காகப் பொய் பேசுவது. அந்த அடிப்படையில் உங்களுக்கு வசதியான கருத்துக்களை திணிப்பது. வலிந்து வாதிடுவது மூலம் அதை நிறுவ முயல்வது. பின்பு அதற்கு அப்பால் உண்மை இல்லை என வால்கலை வைத்து நிறுவ முயல்வது – அணி திரண்டு அடிபடுவது. இதுதான் சம கால இலக்கிய வெளி நமக்கு வழங்கும் வழிமுறையா? இந்த உலகில் இருந்து விலத்தி இருக்கவே விரும்புகிறேன்.

என்னை இத்தகைய தமிழ் ‘இலக்கிய உலகில்’ ஒருவராக பொருட்படுத்த வேண்டாம். ஆனால் எனது எழுத்தை யாராலும் நிறுத்தி விட முடியாது.

யாரவது ‘ஏமாளி பதிப்பகம்’ தனது பணத்தை இழந்து என்னைப் பதிப்பிக்க கிடைக்கும் வாய்ப்பு ஏற்படின் ஏதாவது ‘இலக்கியம்’ வெளியிடுவேன். அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்காத பொழுது எழுதியவைகளை கையெழுத்துப் பிரதிகளாக நண்பர்கள் படிக்கட்டும். ஆனால் சும்மா கிடப்பவனை இழுத்து வைத்து அவதூறு செய்வீர் ஆயின் அதை கடுமையாக எதிர்த்தும்தான் எனது எழுத்து தொடரும்.

 

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published.