தமிழ் எழுத்து பற்றிய குறிப்புகள்
1
ஈழத்தில் தமிழ் கற்றலுக்கும் தமிழ் நாட்டில் தமிழ் கற்றலுக்கும் உள்ள வித்தியாசம் கவனத்துக்குரியது. சில புதிய தமிழ் போன்ட்ஸ் ஏன் குழப்பமாக வடிவமைக்கப் பட்டிருகின்றன என்பது தெளிவாக்க இந்த புரிதல் உதவலாம்.
உயிரும் உடலும் புணரும் 246 எழுத்துக்கள் + அகேனம் உட்பட 247 எழுத்துக்கள் தமிழ் அரிச்சுவடி. இதில் 42 எழுத்துக்களுக்கு தனி அர்த்தமும் உண்டு.
இவைதான் ஈழத்தில் முதன்மை. வட எழுத்துக்கள் முதன்மை படுத்தப்படுவதில்லை. பல பாடசாலைகளில் அவை சொல்லிக் கொடுக்கப்படுவதில்லை. ஆனால் தமிழ்நாட்டில் வட எழுத்துக்கள் அதிக புழக்கத்தில் இருக்கிறது. ஐந்து வட மெய்கள் (உண்மையில் ஆறு மெய்கள் – ஆனால் ஒன்றை யாரும் பாவிப்பதில்லை) இணைந்து மேலும் 65 எழுத்துக்கள் புழக்கத்தில் இருக்கின்றன. ‘ஸ்ரீ’ சேர்த்தால் தமிழகத்தில் 313 எழுத்துக்கள் புழக்கத்தில் இருகின்றன.
இது பல்வேறு மறைமுக விளைவுகளுக்கு காரணமாக இருக்கிறது. உதாரணமாக ‘ஐ’ என்ற எழுத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ‘ஜ’ என்ற எழுத்து பாவிக்க வேண்டிய தேவை இல்லை. சில போன்ட்ஸ்களுக்கு எங்கு ‘ஐ’ இருக்கு என்று கண்டு பிடிக்க முடியாது. இதனால் என் போன்றவர்கள் ‘ஜ’ வை ‘ஐ’ க்கு பதிலாக பயன்படுத்தி டைப் செய்வதில் தவறை கவணிப்பதில்லை! தமிழகத்தில் ‘ய’ பயன்பாடு சில இடங்களில் இல்லாமைக்கும் இது காரணம்.
பாமினி போன்ட்ஸ் வட மொழியை முதன்மைப் படுத்தவில்லை. மாறாக உனிகோட் போன்ட்ஸ் வட சொல் சரளமாக பாவிக்க வழி ஏற்படுத்தியிருக்கிறது. ஈழத்து எழுத்தாளர்களுக்கும் தமிழகத்து எழுத்தாளர்களுக்கும் இடையில் நடக்கும் போன்ட்ஸ் யுத்தத்துக்குப் பின் இந்த அரசியலும் உண்டு. கவனிக்க.
2
தமிழில் f என்ற உச்சரிப்பை எழுத எழுத்தில்லை. அதிகம் உபயோகிக்காத அகேனத்தை (ஃ) இதற்கு பாவிக்கவேண்டும். ஃபிஸ் அன்ட் சிப்ஸ் என்ற உணவை மீனும் கிழங்குப் பொரியலும் என மொழிபெயர்த்து எழுத முடியாது என தோழர் வேலு சரியானபடி சுட்டிக்காட்டினார். கிழங்குப் பொரியளுக்காக காத்துக்கிடக்கிறான் என இலக்கியமயப்படுத்தி தப்பிக்கொண்டு விடலாம். ஆனால் தமிழ் அல்லாத பாத்திரத்தை உருவாக்கும்போது பல சிக்கல்கள் எழுகிறது. எஃ என்ற எழுத்து அதிகம் பாவிக்கப்படும் ஆங்கிலத்தின் செல்வாக்கில் இருந்து கொண்டு அந்த எழுத்து இல்லாமல் இயங்குவது கடினம். அதனால் அகேனத்தின் உச்சரிப்பு மாற்றிப் பாவிக்கும் தேவையுள்ளது.
இன்று பலர் இந்த மாற்றத்தை உள்வாங்கி எழுதத் தொடங்கியிருக்கிறார்கள். யார் தொடக்கி வைச்சது எனத் தெரியவில்லை. இற்றைக்கு 15 வருடங்களுக்கு முன் இவ்வாறு எழுதிய ஞாபகமுண்டு – மீண்டும் ஆரம்பிக்க வேண்டும்.