திருவிளையாடல் தருமி மற்றும் பிலால் முகம்மது ‘விவாத’ டெக்னிக்குகள்

இக்கட்டுரை நண்பர் வளர்மதியால் 2010ல் எழுதப்பட்டது (நவம்பர் 12, 2010 — Valarmathi). இலக்கியம் என சொல்லிக் கொண்டு சிலர் செய்யும் அடாவடி விவாதங்கள் – மோசமான விவாத முறைகள் பற்றி பல சரியான புள்ளிகளை இந்தக் கட்டுரை சுட்டிக் காட்டுகிறது. அந்த விதத்தில் இது ஒரு முக்கிய பதிவு. இந்த போக்கு இன்றும் தொடர்கிறது என்பதை சுட்ட இங்கு இதை மீள் பதிவு செய்கிறேன்.

-சேனன்

 

 

விவாதம் செய்வதில் பல வகை உண்டு. அதில் ஆர். எஸ். எஸ் காரர்களுக்கு ஒரு தனித்த சாமர்த்தியம் உண்டு. நீங்கள் ஏதாவது கேள்வி எழுப்பினால் அதற்கு பதிலே சொல்ல மாட்டார்கள். எதிர் கேள்வி எழுப்புவார்கள்.

அந்த எதிர் கேள்வி எப்படி இருக்கும்?

ஒரு பொதுவுடைமை இயக்கத்தைச் சேர்ந்தவரோடு விவாதிக்கும்போது, “தோழர், உங்கள் கட்சியின் இந்தத் தலைவர் இந்த சாதியைச் சேர்ந்தவர். இன்னொருவரும் அதே சாதி. இப்படி உங்கள் கட்சியில் முக்கியமானவர்கள் எல்லோரும் இந்தக் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்களே, ஏன் தோழர்?” என்று ஆரம்பிப்பார்கள். அதாகப்பட்டது, அவர் சார்ந்திருக்கும் பொதுவுடைமை இயக்கத்தில் சாதிப் பற்று தலைவிரித்து ஆடுகிறது என்று சூசகமாக விஷமேற்றி விடுவார்கள்.

தமிழ் தேசியவாதிகளோடு விவாதிக்கும்போது, “உங்கள் கட்சியில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் அந்தத் தலைவர் ஒரு தெலுங்கர். அது தெரியுமா தம்பி உனக்கு? அந்தப் பொறுப்பில் இருக்கிறாரே, அவர் யார் தெரியுமா தம்பி, ஒரு கன்னடியர். இன்னொருவர் மலையாளி. இதுவெல்லாம் தெரியாமல், நீ இப்படி உயிரைக் கொடுத்து உழைத்துக் கொண்டிருக்கிறாயே, பாவம்,” என்று ஆரம்பிப்பார்கள்.

இஸ்லாமியர்களுக்கு ஆதரவான அரசியலைப் பேசும்போதோ அல்லது இந்துத்துவத்தை விமர்சித்துப் பேசும்போதோ என்ன நடக்கும் என்பது இணைய வாசகர்களுக்கு மிக நன்றாக பரிச்சயம் இருக்கும் என்று நம்புகிறேன். பிலால் முகம்மது, பீர் முகம்மது, ஷேக் அப்துல்லா என்று பலவிதமான இஸ்லாமியப் பெயர்களில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பின்னூட்டங்கள் சரமாரியாக வரத்தொடங்கும்.

இப்போதைக்கு அதற்கு “பிலால் முகம்மது டெக்னிக்” என்று பெயர் சூட்டி வைப்போம்.

ஆர். எஸ். எஸ். காரர்களின் இந்த விவாத டெக்னிக்குகளின் சாரம் என்னவென்றால், எதிர் தரப்பினரை ஆத்திரமூட்டி அவர்களை நிதானம் இழக்கச் செய்வது. நிதானம் இழந்தவர்கள், தமது கருத்தியல் நிலைகளில் ஊன்றி நிற்காமல், மேற்கண்ட தனிப்பட்ட குற்றச்சாட்டுகளை ஆவேசமாக மறுத்துப் பேசத் தொடங்குவார்கள். இவர்கள் கழுதையாகக் கத்திக் கொண்டிருப்பார்கள். ஆர். எஸ். எஸ். காரர் நிதானமாக ரசித்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார். ‘விவாதம்’ முடிந்த பின்னும் மேற்சொன்ன தரப்பினருக்கு சந்தேகம் பற்றிக் கொண்டிருக்கும். இயக்க அலுவலகத்திற்குச் சென்று மூத்த தோழர்களிடம் சந்தேகம் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

இந்த அனுபவம் பலருக்கு வாய்த்திருக்கலாம். எனக்கும் வாய்த்திருக்கிறது.

இதையொத்த இன்னொரு அலாதி வகையான விவாதமும் உண்டு. அது “திருவிளையாடல் தருமி” விவாத முறை. “எனக்கு கேள்வி கேட்கத்தான் தெரியும்” என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டு அடுத்தவரைப் பார்த்து கேள்விகளை அடுக்கிக் கொண்டே போவது (இருப்பது? இல்லாதது? கடிப்பது? கடிக்காதது? படுப்பது? படுக்காதது? நிற்பது? நிற்காதது? நடப்பது? நடக்காதது? இப்படியாக). இந்த “திருவிளையாடல் தருமி” ஸ்டைல் விவாத முறையில் கைதேர்ந்தவர்தாம் நம் ஷோபா சக்தி.

எதிர் தரப்பினர் எழுப்பும் கேள்விகளில் உள்ள நுட்பமான புள்ளிகளைக் கவனமாகத் தவிர்த்துவிட்டு, சரமாரியாகக் கேள்விக் கணைகளைத் தொடுத்து அவர்களைத் திணற அடித்து, சோர்வடைந்து ஒதுங்கிக் கொள்ள வைக்கும் “திருவிளையாடல் தருமி” ஸ்டைலில் அவர் அரங்கேற்றியிருக்கும் ‘விவாதங்கள்’ அலாதியானவை. இதிலும் அவருக்கு ஆதர்சமாக இருப்பவர் திருவாளர் அ. மார்க்ஸ் அவர்களேதாம். அவர் எழுதிக் கொடுத்த நோட்சுகளை உருப்போட்டு (அதாவது, மண்டபத்திலே எழுதிக் கொடுத்ததை வைத்துக் கொண்டு, “கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி! அட அடா! என்ன கவிதை என்ன கவிதை! புரிஞ்சிக்க மாட்டேங்குறேங்களே!” என்று புலம்புவது) அவற்றை ‘க்ரவுண்ட் லெவலுக்கு’ கீழே கொண்டுவந்து, இவர் ஆட்களை அடித்து ஆடும் ஆட்டம், எட்ட நின்று வேடிக்கை பார்க்க சுவாரசியம்தான்.

இவரது இந்த ‘தருமி’ ஸ்டைல் விவாத முறைக்கும் ஆர். எஸ். எஸ் காரர்களின் விவாதமுறைக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால், விவாதங்களின் மையப் புள்ளியாக கருத்தமைவுகள் இருக்காது; தனிப்பட்ட நபர்கள் அடித்துத் துவம்சம் செய்யப்படுவார்கள். எத்தகைய தீவிரமான அரசியல் கோட்பாட்டு பிரச்சினையும் தனிப்பட்ட நபர்களுக்கிடையிலான தகராறுகளாக உருமாற்றப்பட்டுவிடும். இதிலும் இவருக்கு வழிகாட்டி திருவாளர் அ. மார்க்ஸ் அவர்களே என்றால், வாசிப்பவர்கள் சலித்துவிடக்கூடாது என்பதற்காக சில எடுத்துக்காட்டுகளைத் தருகிறேன்.

ஒரு 15 ஆண்டுகளுக்கு முன்னர், பாவலேறு பெருஞ்சித்திரனாரின் அரசியல் நோக்கை விமர்சித்து கட்டுரை ஒன்றை எழுதினார் அ. மார்க்ஸ். அதில் போகிற போக்கில், பெருஞ்சித்திரனார் மீது “வெள்ளார்களின் கோவணம்” என்று ஒரு கத்திக் குத்து. அவ்வளவுதான். மொத்தப் பிரச்சினையும் அரசியல் கேள்வியில் இருந்து  “பெருஞ்சித்திரனாரை எப்படி அப்படிச் சொல்லலாம்” என்பதாக சரிந்தது. இறுதிவரை அ. மார்க்ஸ் இந்தச் சாடல் குறித்து எதிர் கேள்வியை எழுப்பியவர்களை சட்டை செய்யவும் இல்லை. (அந்த வசையைத் தவிர்த்துவிட்டு, அவர் சொல்லும் விஷயத்தைப் பாருங்கள் என்று நண்பர்களோடு வாதம் செய்து பட்டபாடு இன்னும் நினைவில் இருக்கிறது).

இப்படி பேசிக்கொண்டிருக்கும்போதே இடுப்பிலே கத்தியைச் சொருகும் பழக்கம்தான் இப்போது யமுனா ராஜேந்திரனுக்கு பதில் எழுத ஆரம்பிக்கும்போதே “முட்டாள்” என்று ‘வாழ்த்துப்பா’ பாடித் தொடங்கும் அளவிற்கு ‘முன்னேற்றம்’ கண்டிருக்கிறது. தமிழ்த் தேசியவாதிகள் கேள்விகளை முரட்டுத்தனமாக வைத்தால், “என்னைக் கொலை செய்வதாக மிரட்டுகிறார்கள்” என்று கூசாமல் பொய் சொல்லவும் வைக்கிறது.

ஒட்டுமொத்த விளைவு என்னவாக மாறுகிறது?

விவாதம் அறிவுப்பூர்வமான தளத்தில் இருந்து உணர்ச்சிப்பூர்வமான தளத்திற்கும் தொடர்ந்து வசைகளின் தளத்திற்கு நகர்ந்துவிடும். எதிர்த் தரப்பினர் தமது நிதானத்தில் இருந்து தவறி கோபத்தோடு எதிர்வினை ஆற்றத் தொடங்கும்போது, அதையே சாதகமாக எடுத்துக்கொண்டு “அவதூறு செய்கிறார்கள்” என்று ‘அடுத்த கட்டத்துக்கு’ விவாதத்தை நகர்த்திச் சென்றுவிடுவார்கள், அ. மார்க்சும் அவரது குறுங்குழுவினரும்.

அ. மார்க்சின் இந்த விவாத முறைமையைக் கற்றுக் கரைத்துக் குடித்து, தனக்கே உரிய பாணியில் அதைக் கையாள்வதில் வெற்றியும் பெற்றவர் ஷோபா சக்தி என்றால் அது மிகையாகிவிடாது. அனைத்து அரசியல் பிரச்சினைகளையும் தனிப்பட்ட தகராறுகளாக மாற்றிவிட்டு, முக்கியமான அரசியல் கேள்விகளைத் தவிர்ப்பது, திசைதிருப்புவதற்கு ஷோபா சக்தி கையாளும் விவாத முறைமையின் சில ‘டெக்னிக்’குகள் சுவாரசியமானவை.

முதல் டெக்னிக், “அவதூறுகளுக்கு” பதில் சொல்வது என்று பிரச்சினையைத் தொடங்குவது. அசோக் யோகன், யமுனா ராஜேந்திரன், தமிழ்நதி, பா. ஜெயப்பிரகாசம், “தேசம் நெற்” ஜெயபாலன் என்று தனிநபர்களைச் சுற்றியே இவரது விவாதங்கள் அமைந்திருக்கும். கோட்பாட்டு விவாதங்கள் ஒன்றிலாகிலும் இவரது பங்களிப்பு ஒன்றையாகிலும் மருந்துக்கூடக் காணவியலாது. அரசியல் என்றானால், கண்மூடித்தனமான விடுதலைப் புலி எதிர்ப்பு முன்வந்து நிற்கும்.

ஷோபா சக்தியின் விவாதக் களங்கள் அவருடைய பாணியிலேயே சொல்வதென்றால், “100 சதவீதம் புலி எதிர்ப்பு, 200 சதவீதம் தனிப்பட்ட நபர்களுடனான குழாயடிச் சண்டைகள்”.

இரண்டாவது டெக்னிக், ஷோபா சக்தியின் கட்டுரைகளில் பரவலாகக் காணக் கிடைப்பது. “உஸ்ஸ்!!! எபா! விளக்கம் சொல்லிச் சொல்லி எங்களுக்கு அலுத்துப் போச்சுங்க!” என்பது.

அதாவது, எதிர் தரப்பாளர் என்ன சொன்னாலும் புரிந்து கொள்ளாத மடையர்கள் என்பதாக குறிப்பால் உணர்த்துவது.

மூன்றாவது முக்கிய விவாத டெக்னிக் தன்னை நோக்கி எழுப்பப்படும் கேள்விகளுக்கு ஒரு சிலவற்றுக்கு மட்டும் ‘இறங்கி அடிப்பது’.

எப்படியென்றால், தனக்கு வசதியான soft targets களை தேர்வு செய்துகொள்வது. சீமான் போன்ற அரசியல் சிக்கல்கள் அறியாதவர்கள், யமுனா ராஜேந்திரன் போன்று சில விஷயங்களில் தவறாக எழுதியவர்கள், பா. ஜெயப்பிரகாசம் – ரயாகரன் போன்ற மரபான மார்க்சியர்கள் என்று கவனமாக தேர்வு செய்துகொள்வது.
அவர்கள் கேட்கும் சரியான கேள்விகளை கவனமாகத் தவிர்த்துவிட்டு, அதற்குப் பதிலாக, அவர்கள் முன்னர் செய்த தவறுகளை அப்போதைய விவாதத்தில் இழுத்து வைத்து அடிப்பது. “இவ்வளவு அபத்தமாக பேசிய ஆள் நீ, உனக்கு என்ன தெரியும்” என்று கேள்வி எழுப்புவது. “ஏற்கனவே எங்களோடு சச்சரவு. அந்தப் பகையால்தான் இப்போதும் கேள்வி கேட்கிறாய்” என்று வாசகர்களுடைய கவனத்தை சிதற அடிப்பது.

இதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டு, ஈழம் தொடர்பாக யமுனா ராஜேந்திரன் எழுதிய சமீபக் கட்டுரைகளுக்குக் கிடைத்த புறக்கணிப்பு. இனரீதியிலான ஒற்றுமையில் கவனம் குவித்த விடுதலைப் புலிகள் அந்தக் காரணத்தினாலேயே சாதியைப் பற்றிப்  பேசுவதைத் தவிர்த்து வந்ததை யமுனா ராஜேந்திரன் சுட்டிக் காட்டினார். பொதுவெளியில் சாதியைப் பற்றிய உரையாடல்களை அந்தக் காரணத்தை முன்னிட்டே அவர்கள் தடை செய்தனர் என்பதையும் குறிப்பிட்டார்.

இவை தமிழ்த் தேசியர்கள் வழமையாக வைக்கும் வாதங்கள் என்று சொல்லிப் புறக்கணித்து விட இயலாது. காரணம், இதையெல்லாம் மீறி, ஈழத்தில் தலித் சமூகத்தினராக இருக்கும், வண்ணார்கள் மற்றும் சவரத் தொழிலாளர்கள் ஆகிய இரு சாதியினருக்கு மட்டும் தம் மீதான தீண்டாமையில் இருந்து விடுபடும் முகமாக சங்கம் அமைத்துச் செயல்பட அனுமதித்திருந்தனர் விடுதலைப் புலிகள் என்ற முக்கிய செய்தியை “சாதியின்மையா சாதி மறைப்பா?” என்ற நூலில் இருந்து எடுத்துக்காட்டி குறிப்பிட்டும் இருந்தார். (டச்சு ஆட்சிக் காலத்தில் இருந்து யாழ்ப்பாணத்தில் சைவ வெள்ளாளர்களின் ஆதிக்கத்தை நிலை நிறுத்திய “தேச வழமைச் சட்டம்” என்ற சட்டத் தொகுப்பு, அரசியல் சட்ட ரீதியாக இனி செல்லுபடியாகாது என்று தீர்மானகரமாக அறிவித்து நடைமுறைப்படுத்த முனைந்தவர்கள் விடுதலைப் புலிகள் என்ற இன்னொரு முக்கிய புள்ளியும் இருக்கிறது).

அந்த மொத்த விவாதத்திலும், விடுதலைப் புலிகள் சாதிய ஒழிப்பைக் கவனத்தில் கொள்ளவில்லை, தலித் விடுதலைக்கு எதிராகவே இருந்தனர் என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து வைத்துக் கொண்டிருந்த ஷோபா சக்தியாலும் அவரது நண்பர்களாலும் மிகக் கவனமாகப் புறக்கணிக்கப்பட்ட முக்கிய புள்ளி இது.

அதாவது, அவர்களுடைய வாதங்கள் அடிப்படையிலேயே தவறானவை என்பதைக் காட்டும் சான்றுகளையோ வாதங்களையோ சட்டை செய்யாமல் புறக்கணித்துவிட்டு தாம் சொல்வதையே கிளிப்பிள்ளை போல திரும்பத் திரும்ப சொல்லும் டெக்னிக்.

நான்காவது டெக்னிக், தீவிரமான அரசியல் கேள்விகள் பல முனைகளில் இருந்தும் எழத்தொடங்கும்போது சட்டென்று ஒருவிதமான ‘மரண’ அமைதியைக் கைக்கொள்வார். கொஞ்ச நாட்கள் அமைதியாக இருந்து, எதிர் தரப்பில் யாராவது மாட்டுவார்களா என்று காத்திருப்பார். அந்த சந்தர்ப்பம் வந்த உடனேயே மீண்டும் களத்தில் இறங்கி அடிக்கத் தொடங்கிவிடுவார்.

அதற்கொரு சிறந்த எடுத்துக்காட்டு, சமீபமாக ஈழத்து இளம் படைப்பாளியும் கவிஞருமான தீபச்செல்வனை இவர் எடுத்த நேர்காணல். விடுதலைப் புலிகளைத் தொடர்ந்து ஆதரித்து வந்தவரான தீபச்செல்வன், தன் தனிப்பட்ட இழப்புகளின் பாற்பட்டு அவர்களை விமர்சிக்கும் தொனியில் சில கவிதைகளை எழுதி வந்ததைக் கவனித்ததும், சரியான சந்தர்ப்பமென்று முந்திரிக் கொட்டையாக போய் நின்று  எடுத்த நேர்காணல் லும்பினியில் சந்தி சிரித்து நிற்கிறது.

ஒரு இலக்கிய – அரசியல் – அறிவுப்புலம் சார்ந்த நேர்காணல் என்பது நேர்காணல் செய்யப்படுபவரின் எழுத்தாளுமை அல்லது அவர்களது அரசியல் பின்புல உருவாக்கம், பங்களிப்புகள் என்பவற்றை வெளிக்கொண்டு வருவதாக இருக்க வேண்டும். நேர்காணல் செய்பவருக்கும் செய்யப்படுபவருக்கும் அந்த நிகழ்வின் போது சரிசமமான உறவு என்பது இருக்கவியலாது. நேர்காணல் என்ற வடிவத்தில் இருக்கும் அதிகாரப் படிநிலை வரிசை, நேர்காணல் செய்யப்படுபவரின் ஆளுமையை ஏற்றுக் கொண்டதாகவே இருக்கும் – இருக்கவும் வேண்டும். அதாவது, அவருடைய ஆளுமையின் ‘அதிகாரத்தை’ ஏற்றுக் கொண்டே நேர்காணல் என்பது செய்யப்பட வேண்டும். இது அவ்வடிவத்திற்கே உரிய ஏற்றுக்கொள்ளப்பட்ட அறம்.

இலக்கிய – அரசியல் – அறிவுப் புலம் தாண்டி இதழியலில் செய்யப்படும் நேர்காணல்களிலும் கூட இந்த அடிப்படை அறம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றே. ஆனால், இதழியலைப் பொருத்த வரையில், ஒரு பெரும் அரசியல் நிகழ்வில் நடக்கும் தவறுகளைக் குறித்து எடுக்கப்படும் நேர்காணல்களில் இந்த நியதியை மீறுவதே நியதி.

இலக்கிய – அரசியல் – அறிவுப் புலத்தில் நேர்காணல் செய்யும்போது இந்த அடிப்படை உறவை மீறக்கூடாது என்பதே நியதி.

இவையெல்லாம், நேர்காணல் என்ற வடிவம் குறித்த பாலபாடங்கள்.

இந்த அடிப்படை அறத்தைப் பற்றிய அடிப்படைத் தார்மீக உணர்தல்கூட இன்றி  தீபச்செல்வனை ஷோபா சக்தி எடுத்திருக்கும் நேர்காணல் பல் இளிப்பதைக் காணமுடியும். தீபச்செல்வனின் வாயிலிருந்து விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஒரு வார்த்தையையாவது பிடுங்கிவிட வேண்டும் என்பதற்காக, கேள்விகளைச் சுழற்றிச் சுழற்றி அவர் வீசியிருந்தது வாசித்த எவரது கவனத்திலும் இருந்தும் தப்ப முடியாது.

ஆனால், ஷோபா சக்திக்கு இந்த அடிப்படை அறமெல்லாம் ஒரு பொருட்டா என்ன? இப்போது, அவர் “நான் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தீபச்செல்வனைக்கூட நேர்காணல் செய்திருக்கிறேனே” என்று கூசாமல் பேசித்திரியவும் செய்கிறார்.

இறுதியாக, எதிர் தரப்பினர் மீது வைக்கும் குற்றச்சாட்டு (விமர்சனம் அல்ல குற்றச்சாட்டு) தனக்கும் தன் தரப்பினருக்கும்கூட பொருந்திவிடும்போது, அது குறித்து அப்பட்டமான கள்ள மௌனம் சாதிப்பது.

முகநூலில் கடந்த வாரத்தில் “கூலிக்கு மாரடிக்கிறாய்” என்று தன் எதிர் தரப்பாரைப் பார்த்து இவர் வைத்த குற்றச்சாட்டில் இது குரூரமாக வெளிப்பட்டது. எதிர் தரப்பாரைப் பார்த்து இந்தக் கேள்வியை எழுப்பிய ஷோபா சக்திக்கு, கடந்த 80 ஆண்டுகளாக தமிழ் வெகுஜனக் கலாச்சாரத்தை பார்ப்பனப் பண்பாட்டின் நீர்த்துப்போன வடிவமாகக் கட்டமைத்த ஒரு பெரும் வணிகப் பத்திரிகையில் பணிபுரியும் தன் சகாக்களுக்கும் பொருந்தும் என்பது மறந்துவிடும். எந்த விமர்சன நியாயங்களும் அப்போது ஷோபா சக்திக்கு தெரியவே தெரியாது. “அமைப்பாக்கத்தின் அரசியல்”, “நுண் அரசியல்” என்று வானத்துக்கு மேலே ஏறி நின்று பேசிய பேச்செல்லாம் ஒரு நொடியில் காணாமல் போய்விடும்.

இந்த டெக்னிக்குகளின் மொத்தச் சாரம் என்ன?

1)   ஆத்திரமூட்டல் – இது ஆர். எஸ். எஸ் காரர்களின் அடிப்படை உத்தி.

2)   அரசியல் கேள்விகளை தனிப்பட்ட தகராறுகளாக எப்போதும் திரிப்பது.

3)   ஊருக்கு ஒரு நியாயம், தனக்கொரு நியாயம்.

இவை அனைத்தையும் தாக்குப் பிடித்து ஒருவர் அவரோடு தொடர்ந்து விவாதம் செய்துகொண்டிருக்கும்போது, அவருடைய அல்லது அவருடைய சகாக்களுடைய தவறுகளைக் கையும் களவுமாகப் பிடித்துவிட்டால் அதற்கு ஷோபா சக்தி வைத்திருக்கும் கடைசி ஆயுதம், சடாரென்று காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுவிட்டு அதைக் கடந்து சென்றுவிடுவது.

“கூலிக்கு மாரடித்தல்” என்ற மாபெரும் விவாதத்திலும் இந்தக் காலில் விழுகிற டெக்னிக்கை மிக சாமர்த்தியமாகக் கையாண்டார் ஷோபா சக்தி. ஷோபா சக்தியின் இந்தக் குரூரமான சாடல், தலித் மக்களின் வாழ்வை அவமானப்படுத்தும் சொற்பிரயோகம் என்று சுட்டிக்காட்டப்பட்டதும், தனக்கு அது குறித்து தெரியாது என்று மன்னிப்பு கேட்டுவிட்டு சாதாரணமாகக் கடந்து சென்றுவிட முயன்றார். 15 வருடங்களாக தலித் அரசியல் பேசிவருபவன் என்று சுயதம்பட்டம் அடித்துக்கொள்பவர், தலித் மக்களை இழிவுபடுத்தும் சொற்பிரயோகத்தை இத்தனை சர்வசாதாரணமாக கடந்து செல்வது எப்படி என்ற கேள்வி அடுத்து எழுந்தது.

அதற்கும் கூசாமல் பதில் வந்தது ஷோபா சக்தியிடம் இருந்து. கூகிள் “ஸெர்ச்” செய்து அப்பிரயோகத்தை யார் யாரெல்லாம் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று ஒரு பட்டியலைக் கொடுத்தார். பெரியார் தொடங்கி, ம. க. இ. க., ஆதவன் தீட்சண்யா வரை எங்கேயெல்லாம் அந்த சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று ‘ஆதாரத்தோடு’ நிரூபித்தார். இவர்கள் எல்லாம் சாதித் திமிரோடுதான் இந்தச் சொல்லைப் பயன்படுத்தினார்களா என்று ஒரு எதிர் கேள்வியைத் தொடுத்தார். “சாதியக் கறை படிந்தது நம் மொழி” என்று ஒரு ஆராய்ச்சி முடிவை எடுத்துக் காட்டினார். “என்னைக் ‘கொர்னர்’ செய்யவே இந்தத் தவற்றை துருப்புச் சீட்டாக பயன்படுத்துகிறார்கள்” என்று தன் மீதான விமர்சனத்தைக் குற்றச்சாட்டாகத் திருப்பியும் விட்டார்.

(ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக இங்கே இன்னொரு நிகழ்வையும் குறிப்பிட விரும்புகிறேன். லீனா மணிமேகலையின் கவிதைகளைக் காட்டமாக விமர்சித்து வினவு தளத்தில் வந்த கட்டுரைகளுக்கு “உன் கேள்விக்கு காவாலித்தனம் என்று பெயர் வை!” என்றெல்லாம் வீராவேசமாக பதில் கட்டுரை வீசினார் ஷோபா சக்தி. ஆனால், லீனா மணிமேகலையின் கவிதைகளை மிகநுட்பமாக விமர்சித்து பெருந்தேவியும் ஜமாலனும் இணைந்து எழுதிய கட்டுரைக்கு இன்று வரை கனத்த மௌனத்தைத் தவிர ஒரு எதிர்வினையும் கிடையாது. அதே சமயம், பெருந்தேவி “ஈஷிக் கொண்டு போனாய்” (உரசிக்கொண்டு) என்று பார்ப்பனர்களிடையே புழங்கிவரும் சொற்பிரயோகத்தைக் கையாண்டதை சரியான சந்தர்ப்பமாக எடுத்துக் கொண்டு லும்பினியில் அவரை பாப்பாத்தி என்று “மொத்து மொத்தும்” சந்தர்ப்பத்தை மட்டும் விட்டுவிடவில்லை இவரது சகாக்கள். இவர்களுக்கு – ஷோபா சக்திக்கும் அவரது சகாக்களுக்கும் – தலித் அரசியல் என்பது சரியான சந்தர்ப்பங்களில் மற்றவர்களை அடிக்கப் பயன்படும் ஒரு மந்திரக் கோல் என்ற அளவில் பயன்படுவத்துவதற்காக மட்டுமேதானா என்ற கேள்வியையும் எழுப்பிப் பார்க்க வேண்டியிருக்கிறது).

எந்த ஒரு அரசியல் கேள்வியையும் தனிப்பட்ட குற்றச்சாட்டாகத் திருப்பிவிடும் ஷோபா சக்தியின் சாமர்த்தியத்தை வியக்காமல் என்ன செய்வது!

அவரால் எப்படி அது முடிகிறது என்ற கேள்வியை எழுப்பிப் பார்க்காமலும் இருக்க முடியவில்லை.

ஏற்கனவே ஷோபா சக்தி மீது வைத்த விமர்சனங்களையும் சேர்த்து கொஞ்சம் அசைபோட்டுப் பார்த்ததில் தோன்றியது இது: rebel/heretic complex.

தன்னை ஒரு கலகக்காரனாக தானே வரித்துக் கொண்ட ஒரு சுயபிம்பத்திற்கு   முட்டுக் கொடுக்க இயலாமல் போகும் நெருக்கடியான நிலைமைகள் எழும்போது, கலகக்காரச் சிலுவையை சுமப்பவர்களுக்கு (பரமபிதாவே!) அதைக் கீழே போட்டுவிடும் தார்மீகத் துணிச்சல் எழாமல் போகும்போது, அவர்களுக்கு முன்னே விரியத் தொடங்குவது ஒரேயொரு தட்டையான உலகம் மட்டுமே. அது சபிக்கப்பட்ட உலகம். பாவப்பட்ட உலகம்.

அந்தச் சபிக்கப்பட்ட – பாவப்பட்ட உலகம் அக்கலகக்காரன் கண் முன்னே விரியத் தொடங்கும்போது, தன் மீது வீசப்படும் அத்தனை கேள்விக் கணைகளையும் அவன்  துச்சமாக உதாசீனம் செய்யத் தொடங்குகிறான். அச்சபிக்கப்பட்ட உலகின் பாவப்பட்ட ஆன்மாக்களின் மீதே அக்கேள்விக் கணைகளைத் திருப்பிவிடத் தொடங்கிவிடுகிறான். (எமை இரட்சியுங்கள் கர்த்தாவே!)

எந்தக் கேள்வியையும், எழுப்பிய தரப்பினர் மீதே தனிப்பட்ட குற்றச்சாட்டுகளாகத் திருப்பிவிடும் சாமர்த்தியம் ஷோபா சக்திக்கு வாய்த்திருப்பது இந்த rebel complex தரும் இத்தகைய குருட்டு ‘மனவலிமை’யில் இருந்து எழுவதே.

தலித் அரசியலையும் சிறுபான்மையினர் உரிமைகளையும் பிற ஒடுக்கப்பட்டோர் விடுதலை முயற்சிகளையும் பிரதிநிதித்துவ – அடையாள அரசியல் நோக்கில் இருந்து மட்டுமே அவராலும் அவரைப் போன்ற rebel/heretic complex கொண்ட நபர்களாலும் கிரகித்துக் கொள்ள இயலும். அதிலிருந்து வெளியே வரவும் இயலாது. ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் பிரதிநிதிகளாக தம்மைத் தாமே வரித்துக் கொண்டு செயல்படுவதும் அதிரடி ஸ்டேட்மெண்டுகள் விடுவதும் இவர்களுக்கு ஒருபோதும் ஒரு பிரச்சினையாகவே இருக்காது. இவர்கள் மீது காத்திரமான விமர்சனங்கள் எழும்போது அவற்றை எதிர்கொள்ள இவர்களுக்கு இருக்கும் ஒரே ஆயுதம் அவதூறு என்ற சொல் அல்லது கள்ளத்தனமான கனத்த மௌனம் மட்டுமே.

இந்த rebel/heretic complex தரும் சுயதிருப்தியும் சுயமோகமும் மெதுமெதுவாக போலித்தனத்தையே இயல்பானதாகக் கொள்ளும் நிலைக்கும், தம்மோடு உடன்படாத எவர் மீதும் என்ன வசையையும் வைக்கலாம் என்ற துணிச்சலுக்கும் இட்டுச் செல்வது. வறட்டு இடதுசாரி அரசியல் பேசினாலும் ஆர். எஸ். எஸ் காரர்களின் நடைமுறைகளையும் தயங்காமல் கைக்கொள்ளும் மனச்சமாதானத்தையும் தருவது.

ஆனால், இவர்களிடம் அமைந்திருப்பது போலித்தனமே என்பதை அவர்கள் செவிமடுத்தாலும் இல்லையென்றாலும் ஏதாவது ஒரு கட்டத்தில் சொல்லித் தொலைக்கத்தான் வேண்டியிருக்கிறது.

ஷோபா சக்திக்கு புரிகிற மாதிரி, ஒரு இலக்கியப் பிரதியில் இருந்து சொல்வதே நியாயமாக இருக்கும்.

அகன்ற வெளி” என்ற கருப்பு இலக்கியத் தொகுப்பில் இருந்து எடுத்த ஒரு குறுநாவலில் இருந்து ஒரு பகுதியைக் காட்டுவது நலம்:

“கிழக்கிற்குத் திரும்புவதற்கு முன்னால் பாலோடு நகரைச் சுற்றி வந்துகொண்டு இருந்தேன். இது குழந்தை பிறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னால், கோடையின் இறுதியில். அவனுக்கு ஏதோ கடமைப்பட்டிருப்பதாக ஒரு உணர்வு இன்னும் இருந்தது. அது ஞாயிற்றுக்கிழமை. அன்று காலை பால் ஒரு க்வேக்கர் கூட்டத்தில் கலந்துகொண்டு வந்திருந்தான். திருப்தியாகத் தெரிந்தான். மதியம் முழுக்க நடந்துகொண்டிருந்தோம். நீண்ட நிழற்சாலைகள், கடற்கரையை ஒட்டியிருந்த சாலை, பூங்காவுக்குள் வெட்டிச்சென்ற அகன்ற சாலைகள் என்று இலக்கில்லாமல் மௌனமாக நடந்துகொண்டிருந்தோம்.  மனிதர்கள் மங்கலான, உருவற்ற பேய்களால் ஆட்டுவிக்கப்பட்டவர்கள் போல, சுரத்திழந்திருந்தது போலத் திரிந்தார்கள். என் கண்களுக்கு கருப்பர்கள் மட்டுமே தட்டுப்பட்டார்கள். கோல்டன் கேட் பார்க்கில், நல்ல குடி போதையிலோ கஞ்சாவிலோ இருந்த ஒரு கருப்பன், குழந்தையை ஒரு சிறிய வண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு நடந்து போன ஒரு பெண்மணியைப் நோக்கி விசித்திரமான சைகைகள் செய்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். அந்த இளம் தாயின் மனதில் ஆடிய நினைவுகளைக் கிண்டல் செய்வதில் குறியாக இருப்பது போலத் தெரிந்தான். நான் நின்று பாலுக்கு அவனைக் காட்டினேன். “Nigger என்றால் என்ன அர்த்தம் என்று கேட்டாயே, இதோ பார்த்துக்கொள்.” பான்ஹாண்டிலில் சாதாரணமாக உடையணிந்திருந்த வெள்ளையர்களுக்கு மத்தியில், அதிகப் பகட்டான உடைகள் அணிந்து முப்பத்தியிரண்டு பற்களும் தெரியச் சிரித்துக்கொண்டிருந்த ஒரு கருப்பனை நின்று கவனித்தோம். போவோர் வருவோருக்கெல்லாம், “என்னைப் பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரியும். என்னிடம் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை என்பதை நான் அறிவேன் என்பது உங்களுக்குத் தெரியும் என்பதும் எனக்குத் தெரியும்,” என்று தம்பட்டமடிப்பது போல இருந்தது அந்தச் சிரிப்பு. அவனைப் பார்த்து தலையசைத்துவிட்டு பாலிடம் சொன்னேன், “பால் இவனும் ஒரு nigger.” பால் இப்போது இன்னும் நிம்மதியாகத் தெரிந்தான். லிங்கன் வே – யில் பேருந்து நிறுத்தத்தை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தபோது பம்பர்களில் நிறைய ஸ்டிக்கர்கள் ஒட்டியிருந்த கார் ஒன்று கடந்து போனபோது, பால் அதைச் சுட்டிக் காட்டினான். மோட்டார் லூப்ரிக்கண்ட் விளம்பரம் இயேசு கிறிஸ்துவின் இரண்டாவது வருகை, இன்னும் பல அற்ப உலக விஷயங்கள் என்று ஏதேதோ ஒட்டியிருந்தது. பின்பக்க பம்பர் மத்தியில், கருப்பு எழுத்துக்களில் ஒரு வெள்ளை ஸ்டிக்கர் இப்படி அறிவித்தது. “Nigger – ஆக இருப்பதற்கு பெருமைப்படு.”

பால் சிரித்தான். அதை ஏதோ ஒரு நுட்பமான கிண்டலாக அவன் நினைத்திருக்க வேண்டும்.

ஆனால், பூங்காவிலிருந்து ஒரு நாலைந்து தெருக்கள் தள்ளி வந்துகொண்டு இருந்தபோது பளபளப்பான ஒரு சிகப்பு கியர் சைக்கிளில் கனமான தாடி வைத்திருந்த ஒரு வெள்ளை இளைஞனை நோக்கித் தலையசைத்தேன். அவன் முகம் பல நாட்களாகக் கழுவாமல் சிவந்திருந்தது தெரிந்தது. அவனுடைய கருப்பு பேண்டும் சட்டையும் தூரத்திலிருந்து பார்த்தபோதே அழுக்காகத் தெரிந்தன. பேன்கள் ஊர்வதுகூடத் தெரிந்தது. வண்டியை மிதித்துக்கொண்டு அவன் போனபோது, டயரை உரித்து செய்திருந்த செருப்புகளிலிருந்து முரட்டுப் பாதங்கள் துருத்திக்கொண்டு இருந்தன. எதிலிருந்தோ மீண்டு வந்தவனைப் போன்ற ஒரு தன்னுணர்வு அவன் முகத்தில் தெரிந்தது. சிவந்த முகத்தின் கோடுகளில் குழப்பமான அராஜகம் பளிச்செனத் தெரிய, அந்த மதிய நெரிசலில் எல்லா சிரமங்களுக்கு மத்தியிலும் சர்வசாதாரணமாக நீந்திச் சென்றான். தெருவின் கோடியில் அவன் திரும்பியபோது, நான் பாலிடம் சொன்னேன். “இவன் ஒரு மோசமான போலி. பகுதிநேர nigger வேஷம் போட்டிருக்கிறான்.”

பால் சிரிக்கவில்லை. அவன் புரிந்துகொள்ளவில்லை.”

இக்குறுநாவலில் வரும் கதைசொல்லி கதையின் நாயகன் பால் மீது வைக்கும் மேலுள்ள விமர்சனம் அப்படியே ஷோபா சக்திக்கு பொருந்தும்.

பிரதிநிதித்துவ – அடையாள அரசியலில் சிக்கிக் கொண்டு, தலித் பிரதிநிதியாகவே தன்னை வரித்துக் கொண்டுள்ள காரணத்திலேதான் “ஷோபா சக்தி பகுதிநேர தலித் வேஷம் போட்டிருப்பவர். அந்தப் பாத்திரத்திற்குப் பொருந்திவராத ஒரு மோசமான போலி.”

பின் குறிப்பு அல்லது டெய்ல் பீஸ்:

Rebel/Heretic complex ற்குக் கொடுக்கும் கவனம் சில சில்லறைச் சில்லுண்டித்தனங்களுக்கு அவசியமில்லை என்பதால் இந்த வால் பகுதி அவசியமாயிற்று. சில்லுண்டித்தனம் என்பதையும் மீறி அவை பச்சை அயோக்கியத்தனம் என்ற வகைக்குள் வருபவையும் கூட.

“பிலால் முகம்மது டெக்னிக்”கையே குறிப்பிடுகிறேன்.

புனைப் பெயர்கள் பலருக்கு பல காரணங்களால் அவசியம் என்பதை யாரும் மறுத்திவிடப் போவதில்லை. என்னைப் பொருத்த அளவில் “வளர்மதி” என்ற பெயரிலேயே கிட்டத்தட்ட 15 வருடங்களாக எழுதி வருகிறேன். ஒரு நான்கு மாதங்களுக்கு முன்பாக, ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த காரணத்தினால், வேறு ஒரு புனைப்பெயரில் எழுதவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாக நேர்ந்தது. அந்த நிர்ப்பந்தம் விலகியதும் (அதாவது வேலை போனதும்) முகநூலில் அக்கட்டுரையை அப்பெயரில் எழுதியது நானே என்பதை வலியச் சென்று ஒப்புக்கொள்ளவும் தயங்கவில்லை. அந்தக் கட்டுரை நடராசன் என்ற பெயரில் இங்கே கீற்றுவில் எழுதியதே. சந்தர்ப்பம் வாய்க்கும்போது வெளிப்படுத்தும் எண்ணமும் இருந்தது.

அதில் எழுப்பியிருந்த பிரதான கேள்விக்கு இன்றுவரை மௌனமே பதிலாக இருந்து வருகிறது. ஆனால், இப்போது 5 நாட்களாக லும்பினியில் அதே பெயரில் ஒரு கட்டுரை தொங்கிக் கொண்டிருப்பதை பலரும் கவனித்திருக்கலாம். அதுவும் நான் கீற்றுவில் எழுதிய “அ. மார்க்ஸ் பிராண்டு பின்நவீனத்துவ அரசியல்” என்ற கட்டுரையில் இருந்து ஒரு வரியை மட்டும் உருவி எடுத்து அதன் மீதான விமர்சனம் என்பதாக எழுதப்பட்டிருக்கிறது.

என்னைப் ‘பகிடி’ செய்வதாக நினைத்துக் கொண்டு நான் கைக்கொண்ட புனைப்பெயரிலேயே எழுதும் இழிவான காரியத்தை லும்பினியில் செய்திருப்பது யார்? அதற்கு ஷோபா சக்தி உடந்தையாக இருப்பது எந்தவிதமான தார்மீக நியாயத்தில் அடங்கும்? அடிப்படை இதழியல் அறவியலை மீறும் இத்தகைய காரியத்தைச் செய்யத் துணியும் நபர்கள்தாமா லும்பினியை இயக்குவது?

இவை முதல் கேள்விகள்.

அடுத்தது, அதே நபர், முகநூலிலும் “லும்பினி” என்ற பெயரில் பல இடங்களில் கருத்துக்களை பின்னூட்டங்களாக இடுவது. இதுவும் அடிப்படை இதழியல் அறவியலை மீறும் காரியம். இதற்கும் ஷோபா சக்தியின் அரவணைப்பு.

முகநூல், ட்விட்டர் போன்ற social network தளங்களில் பல இதழ்கள் தம்மைப் பதிவு செய்துகொள்வது வாசகர்களை நேரடியாகவும் விரிவாகவும் சென்றடைய வேண்டும் என்ற காரணத்திற்காகவே. இத்தளங்களில் பதிவு செய்துள்ள எந்த இதழும் தனிநபர்களின் பக்கங்களுக்குச் சென்று பின்னூட்டங்கள் இடுவதில்லை. இது ஒரு ஏற்றுக் கொள்ளப்பட்ட இதழியல் அறம். ஒரு நிறுவனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அடையாளத்தில் சென்று தனிப்பட்ட கருத்துக்களை பின்னூட்டமாக இடக்கூடாது என்பதே அந்த ஏற்றுக்கொள்ளப்பட்ட அறம்.

இதை மீறுவது கலகம் ஆகாது. கீழ்மைத்தனம் என்றே பெயர் பெறும்.

இறுதியாக, கீற்றுவை இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலை கொண்ட தமிழ்த் தேசியவாதிகளுக்குச் சார்பான இதழ் என்று முத்திரை குத்தும் முயற்சியோடு ஒரு கட்டுரை லும்பினியில் வந்தது. லக்கி லுக்/பிலால் முகம்மது என்று அக்கட்டுரையில் ஒப்பமிட்டு இருந்தது.

எழுத்து நடையிலும் எழுதத் தேர்வு செய்துகொண்ட விஷயத்திலும் இருந்தே, இந்த “பிலால் முகம்மது”வும் மேற்குறித்த அதே நபர்தான் என்பது தெளிவாகத் தெரிகிறது. கீற்று இஸ்லாமியர்களுக்கு எதிரான இதழ் என்று ஒரு இஸ்லாமியப் பெயரில் எழுதினால் எடுபடும் என்று சிந்திக்கும் மூளை எந்த வகையான மூளை?

கீற்று இதழை தமது எதிரியாக வரித்துக் கொண்டு அதை அடிப்பதற்காக இத்தனை கீழ்த்தரமான செயலில் இறங்குவது என்ன தார்மீக நியாயத்தில் அடங்கும்?

ஒரு ஆர். எஸ். எஸ் காரனின் செயல்பாட்டிற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?

இவற்றை வாசகர்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.

 

திருவிளையாடல் தருமி மற்றும் பிலால் முகம்மது ‘விவாத’ டெக்னிக்குகள்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *