பசுக்கு கயோட்டியும் நிகோனி பாவும்
கவட்டுக்குள்ள கைய வைச்சுக் கொண்டு ஆ , ஊ என்று கத்தும் ‘இசை’ கேட்டுப் புளித்து, இசையின் பக்கம் ‘மூக்கு’வைச்சுப் படுக்க மனமற்றுக் கிடப்பதே பழக்கம்.
இருப்பினும், இடைக்கிடை நினா சிமோன், பசுக்கு கயோட்டி முதலானவர்கள் வந்து ஆட்டிப் படைத்துப் போவார்கள். பசுக்கு கயோட்டி இங்கிலாந்து வந்து இசை தெறித்துச் சென்ற ஒவ்வொரு முறையும் நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்புக் கிட்டியது.
இசை பற்றி நமக்கொரு ஞானமும் இல்லை. இருந்தாலும் இம்முறையும் நமக்குக் கிடைத்த ரிவுயூ டிக்கட்டை விரையம் செய்யக் கொஞ்சமும் மனமிசையவில்லை. எவ்வளவு தான் ரசிகனாக இருந்தாலும் காசு கொடுத்துப் போகும் அளவுக்கு நம்மிடம் எங்கு வசதி?
வழமை போல் எதுவித ஏமாற்றமும் இல்லை. லேட்டஸ்ட் டிசைனர் உடுப்பில் நெளிவெடுக்கும் பாடகர்கள் இல்லை. பாடகர்களுக்குப் பின்னின்று உள்ளாடைகளுக்கு விளம்பரம் செய்யும் ஐம்பது நாட்டியக்காரர்கள் – அங்கும் இங்கும் சுழரும் லைட்டுகள் , கமராக்கள் என்ற எந்த ஆர்ப்பாட்டமுமின்றித் தவண்டையடிச்சுத் தாங்களே சவுண்ட் சரி பிழை பார்த்து , இயல்பான இசையை இறக்கினர் கலைஞர்கள்.
இயல்பான இசை என்றதும் ஏதோ ‘மெல்லிசை’ என்று எண்ணிவிடாதீர்கள். மேடை அதிரும் ஒலிகளவை. சின்னக் கையசைவுகளுக்குள்ளால் இத்தனை ஒலிகள் வருகுது என்று நம்பமுடியவில்லை. ஒரு சின்ன மரக்கட்டையை வைத்துத் தட்டித் தட்டிக் கண்ட கண்ட சத்தமெல்லாம் எழுப்பினர். மேற்கு ஆபிரிக்க பாரம்பரிய இசைக்கருவியான நிகோனி என்ற கருவி ஒரு வகைப் பம்பாரா கருவி. மாலியைச் சேர்ந்த பசுக்கு கயோட்டி இசைக் குழுவின் கடின உழைப்பில் ‘ நிகோனி ‘அற்புத இசை பொழிந்தது.
கடின உழைப்பென்றால் வேர்வை சொட்டும் உழைப்பு. பாடகி தனது அற்புதக் குரலை வெளியில் பரப்பிப் பரப்பிக் கூடவே ஓடியோடி உடுக்கையடிப்பவருக்கு வேர்வை துடைத்து விடவேண்டியிருந்தது. இறுதியில் அக்கலைஞர் அடித்த உடுக்கைக்கு ஒட்டுமொத்தப் பார்வையாளர்களும் எழும்பி நின்று துள்ளித் துள்ளிக் கலையாடினார்கள்.
Line-up :
Bassekou Kouyate – Lead Ngoni, Ngoni Ba
Amy Sacko – Lead and backing vocals
Fousseyni Kouyate – Bass Ngoni
Alou Coulibaly – Calebasse
Moussa Bah – Ngoni Ba
Oumar Kouyate – Ngoni
Moussa Sissoko – Percussion