‘ஜெயமோகன் வம்பன்’ –ஷோபாசக்தியின் ‘கடுமையான’ விமர்சனம்.

சமீபத்தில் நடந்த எழுத்தாளர் மு. தளையசிங்கம் பற்றிய கூட்டத்தில், எழுத்தளார் அனோஜன் அவர்கள் வழங்கிய உரையில் எழுத்தாளர் டொமினிக் ஜீவா பற்றி குறிப்பிட்ட ஒரு கருத்து பல சர்ச்சைகளை உருவாக்கி உள்ளது. பெரும் சர்ச்சைக்குரிய முற்றிலும் புதிய ஒரு கருத்தை அனோஜன் முன்வைத்ததால் உருவான உரையாடல் அல்ல இது. அல்லது ஜீவா மேல் இருக்கும் கரிசனையால் உருவான உரையாடலும் அல்ல இது.

மு தளையசிங்கம் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக நடந்த ஒரு போராட்டத்தில் அடிவாங்கியதன் தொடர்ச்சியாக இறந்து போனார் எனச் சொல்லப் படுகிறது. ஆனால் இந்த விசயம் அக்காலத்தில் வெளிவந்து கொண்டிருந்த இலக்கியப் பத்திரிகையான மல்லிகையில் ஏன் வரவில்லை என்பது அனோஜனின் கேள்வி. அதன் ஆசிரியரும் எழுத்தாளருமான டொமினிக் ஜீவாவுக்கு கைலாசபதி மேல் இருந்த பயம் காரணமாக இது நடத்திருக்கலாம் என்ற ஊகத்தையும் அனோஜன் முன் வைத்திருந்தார்.

இந்த ஊகம் தனக்கு எவ்வாறு வந்தது என்பதையும் அனோஜன் உடனேயே விளக்கி இருக்க வேண்டும். ஜீவா மற்றும்  மு. த. காலத்து இலக்கிய முறுகல் நிலை பற்றி இந்த நிகழ்வில் கலந்து கொண்ட மற்றைய ஆளுமைகள் (தேவகாந்தன் போன்றோர்) பலருக்கும் தெரியும். ஆனால் புதிய வாசகர்கள் எல்லோரும் இது பற்றித் தெரிந்து இருப்பார்கள் எனச் சொல்லி விட முடியாது. தவிர ஜெயமோகன் பதிவு செய்ததில் இருந்தே இந்த ஊகம் உருவானது என்பதையும் அனோஜன் அப்பவே சுட்டி இருக்கலாம். இது பற்றி சர்ச்சை எழுந்த பின்பு அனோஜன் பதிவு செய்துள்ளார்.

இதை வைத்து அனோஜன் வம்பு பேசுகிறான் எனவும், அவதூறு எனவும், குய்யோ மெய்யோ எனச் சர்ச்சையைக் கிளப்பியது ஷோபாசக்திதான். இது மட்டுமின்றி அனோஜன் ஒடுக்கப்படும் மக்களின் எதிரி என்பது போன்ற கட்டமைப்புச் செய்யும் தனிமனித தாக்குதலும் இணையத்தில் நடந்தது. அறிவார்ந்து இயங்குவது ஒரு பிராமணியச் செயற்பாடு என அனோஜன் கருதுவதாக (அந்த பொருட்பட) ராகவன் என அறியப்படும் ராஜேஸ்குமார் எழுதி இருந்தார். இது அனோஜனுக்கு மேல் வைக்கப்பட்ட மிக மோசமான – கீழ்த்தரமான வசவு.

இந்தக் கருத்தோடு தனக்கு உடன்பாடில்லை எனவும் -தான் அவ்வாறு சொல்லவில்லை எனவும் அனோஜன் பதிவு செய்திருந்தார். ‘யாரையுமே கதைக்க விடுகிறீர்கள் இல்லையே. நீங்கள் பிராமணரா’ என விடாது பேசிக் கொண்டிருந்த கல்வியாளர் முரளியிடம்  தான் நையாண்டியாக கேட்டதாக அவர் சொல்லி இருந்தார். கூட்டம் முடிந்து மது அருந்த கூடிய நண்பர்கள் மத்தியில் பல வருடங்களுக்கு முன்பு நடந்த உரையாடல் இது என்பது தெரிய வருகிறது.

இந்த உரையாடலை தற்போது பேசி அனோஜன் ஜீவா பற்றி சொன்னதுடன் இணைப்பது எதனால்? உண்மையில் அனோஜன் மேலான போர் தொடுப்புக்கு காரணம் ஜீவா மேலான கரிசனை அல்ல. அனோஜன் மேல் தொடரும் காழ்ப்புனர்ச்சியின் தொடர்ச்சியே அது. அவரை சிறுவன் – முட்டாள் – வளரவில்லை எனப் பல்வேறு முறையில் சிறுமைப்படுத்தும் முயற்சிகள் முன்பும் நடந்துள்ளன.

ஆனால் ஒடுக்கப்படும் மக்களின் பக்கம் என்ற நிலைப்பாட்டை எவ்வாறு ஷோபாசக்தி போன்றவர்கள் தங்கள் சுய விளம்பரத்துக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதற்கு இந்தச் சம்பவம் நல்ல உதாரணம். தமது சொந்த விருப்பு வெறுப்பு சார்ந்து தமக்கு எதிர் கருத்து சொல்பவர்களை எவ்வாறு ‘பிற்போக்கு’ எனவும் ஒடுக்கபடுவபர்களின் எதிரி எனவும்  கட்டமைக்க முயல்கிறார்கள் பாருங்கள். இறந்த ஜீவாவை இவர்கள் தமது வியாபாரத்துக்குப் பயன்படுத்திக் கொள்வது அநியாயம்.

இந்தக் கருத்து ஜெயமோகன் சொன்னது என அனோஜன் சுட்டிக் காட்டிய பிறகும் அவர்கள் ஜெயமோகன் பற்றி அமைதியாக இருந்தார்கள். ஷோபாசக்தியிடம் நேரடிக் கேள்வி என நாம் ஒரு குறிப்பை எழுதித்தான் அந்த கள்ள மௌனத்தைக் கலைக்க வேண்டி இருந்தது. ஜீவா பற்றி ஜெயமோகன் 2002ல் பேசிய விஷயம் இது (பார்க்க பின் இணைப்பு). இதே பாணியில் ஜெயமோகன் இதன் பிறகும் பல தடவை பேசி இருக்கிறார்.

இதன் பிறகு ஜெமொகனையும் வம்பன் என்பதாக அடிக்காமல் அடித்து ஒரு கட்டுரை போட்டு இருக்கிறார் ஷோபாசக்தி. ஷோபாசக்தி போதையில் எழுதுகிறாரோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கு என எழுதிய நட்சத்திரன் செவிந்தியனுக்கு எதிராக ‘கிளர்ந்து’ எழுந்த ஜெயமோகன் அதே ஷோபாசக்தி தன்னை ‘வம்பன்’ எனத் தாக்குவதை எவ்வாறு பார்க்கிறார்? ஏன் அமைதி காக்கிறார்?

ஜீவா மேல் ஜெயமோகன் செய்த தாக்குதல் தனக்கு தெரியாது என தற்போது ஷோபாசக்தி எழுதி இருப்பதை பார்க்க மிக ஆச்சரியமாக இருந்தது. ஈழத்து முன்னணி எழுத்தாளர்கள் பற்றி ஜெயமோகன் எத்தகைய பார்வைகளை முன் வைத்து வந்திருக்கிறார் என்பது தமிழ் இலக்கிய உலகில் நன்கறியப்பட்ட ஒன்றே.

ஜெயமோகன் முன் வைக்கும் இந்த  ஊகம் வெறும் ‘வம்பு’ பேச்சு என தள்ளி வைத்து விட்டுப் போய் விட முடியாது. இது திட்டமிட்டு தொடர்ந்து சொல்லப்ப்பட்டு வரும் ஒரு விசயம் என்பதையும் இதன் பின் இருக்கும் அரசியலையும் தனது வசதிக்காக மறந்து – அல்லது வழமைபோல் மறைத்து ‘வம்பும் வரலாறும்’ என்ற கட்டுரையை எழுதி இருக்கிறார் ஷோபாசக்தி.

அவரது உத்தியை பாருங்கள். ஜீவா மேல் பழிச்சொல் பேசுகிறார் என அனோஜனை தாக்கினார். பின்பு நாம் சுட்டிக்காட்டி கேட்கும் வரை ஜெயமோகன் பற்றி கள்ள மௌனமாக சாதித்தார். பின்பு நொந்தும் நோகாமலும் ஒரு கட்டுரை எழுதினார். அந்தக் கட்டுரையில் எவ்வாறு ஜீவா தளையசிங்கம் எழுத்துக்களை மல்லிகையில் வெளியிட்டார் என உதாரணங்களைத் தருகிறார். பிறகு மீண்டும் ‘உரையாடல்’ வம்பு பேச்சு என ஜெயமோகனை பெயர் போடாது தடவி, மீண்டும் அனோஜனை மட்டும் தாக்கி முடிகிறது கட்டுரை. இதன் பிறகு அனோஜன் சொன்னதாக சொன்ன பல வருடங்களுக்கு முந்திய ஒரு கதை பரவ விடப் படுகிறது.

தளையசிங்கத்தின் எழுத்துக்களை ஜீவா புறக்கணித்தார் என அனோஜன் எங்கு சொல்லி இருக்கிறார்? தளையசிங்கம் மல்லிகையில் எழுதியதைக் காட்டி ஏன் மடைமாற்றுகிறீர்கள்? ஜீவா முதற்கொண்டு பல்வேறு எழுத்தாளர்கள் பற்றி மிகத் தவறான கருத்துக்களை பரப்பி வந்தவரும் – தொடர்ந்து செய்து வருபவருமான ஜெயமோகன் மேல் இவரால் கடுமையான போரைத் தொடர முடியவில்லை? ஒடுக்கும் சாதியின் பிம்பமாக அனோஜனைக் கட்டமைக்க முயல்வது எதனால்?

ஊகத்தின் அடிப்படை இன்றி எந்த விமர்சனங்களும் கிடையாது. உண்மையில் ராஜேஸ்குமாரோ – ஷோபாசக்தியோ இந்த எழுத்தாளர்கள் எழுதிய எதையும் படித்திருக்க மாட்டார்கள் என்ற ‘ஊகத்தை’ நாம் வந்தடைய வேண்டி இருக்கிறது. எவ்வாறு எஸ் பொன்னுத்துரை திட்டமிட்டு புறக்கணிக்கப் பட்டார் என்பதை மு தலையசிங்கம் எழுதி இருக்கிறார். கைலாசபதி ‘ஊகத்தின்’ அடிப்படையில் பல தமிழ் நாட்டு எழுத்தாளர்கள் – மற்றும் விமர்சகர்கள் பற்றி எழுதி இருக்கிறார். கா நா சு சென்னைக்கு முதன் முதலாக வந்த பொழுது அவருக்கு காசுப்பிரச்சினை இல்லமால் இருந்தமை அவரது கருத்து உருவாக்கத்தில் செல்வாக்கு செலுத்தியது என கைலாசபதி எழுதி இருப்பார். இதற்கு ஆதாரம் கேட்க முடியுமா? தான் எழுதிய கட்டுரையில் இருந்து எஸ் பொன்னுத்துரை, செ கணேசலிங்கம், வ அ இராசரத்தி ஆகிய பெயர்களை வெட்டி எடுத்து விட்டு வெளியிடப்பட்டது பற்றி ஜேசுராசா சமீபத்தில் பதிவு செய்துள்ளார். அதைக் கேட்டபோது ‘நீங்கள் இளம் பிள்ளைகள்.. உங்களுக்கு இது விளங்காது’ என ஜீவா தட்டிக் கழித்து விட்டதாக பதிவு செய்துக்ளார். ‘எஸ் பொ, வ அ இருவரும் முற்போக்கு எதிர் அணியினர். கணேசலிங்கன் தனித்து நின்றபடி (ஜீவா உட்பட) பலரையும் விமர்சித்து வந்தவர். இவை ஜீவாவுக்கு ஒவ்வாமையாக இருந்திருக்கும். இறைவரித் திணைக்கள ஊழியர்கள் தமிழ் விழாவைச் சிறப்பாக நடத்தினர்; அவர்கள் கொழும்பு வர்த்தகர்கள், பலருடனும் தொடர்பில் உள்ளவர்கள். அத்தகையவர்களால் பயன்கள் பெறலாம் என்ற கணிப்பீடு  ஜீவாவுக்கு இருந்திருக்கும். எனவே அவர்களுக்கு சங்கடம் ஏற்படுவதை தவிர்க்க நாடக கட்டுரைப் பகுதிகளை வெட்டி இருப்பார். பிற்காலத்தில் கம்பன் கழகத்துடன் ஜீவாவுக்கு உள்ள நெருங்கிய தொடர்பையும் இந்தக் கோணத்தில் புரிந்து கொள்ளல்லாம்!’ என ஜேசுராச விளக்கம் சொல்லி இருக்கிறார்.

ஜீவா சொந்த நலனுக்காக தணிக்கை செய்பவர் – வர்த்தகர்களிடம் பயன் பெற சமரசம் செய்தவர் போன்ற பல்வேறு ஊகங்களை ஜேசுராசா முன்வைத்து இருக்கிறார். இது முதற் தடவை அல்ல. எஸ் பொ மற்றும் ஜீவா பற்றி இவ்வாறு பல்வேறு பேச்சுக்கள் முன்பும் பேசப் பட்டு இருக்கிறது. மூன்று அணியாக நின்று மோதிய தீவிர மோதல் இதற்கு பின்னணியாக இருக்கிறது. இந்த ஊகங்களை எவ்வாறு வகைப் படுத்துவது? வம்பன் பொய்யன் என ஜேசுராஜா மேல் பாய்வாரா ஷோபாசக்தி?

இந்த வரலாறு பற்றி ஒரு சொட்டும் தெரியாது பேசுகிறது மிதவாத ஷோபாசக்தி அணி! தமிழ் இலக்கியமும் அணி பிரிந்த அடிபாடும், நிலவும் வானும்போல் இணைபிரியா ஒன்றாக தொடர்ந்து வருகிறது. மணிக்கொடி காலத்தில் இருந்து தொடரும் கதை இது. இந்த வரலாறை விட்டு ‘புனிதப் படுத்தல்’ செய்வது அறிவார்ந்த உரையாடல் அல்ல. அதுவும் அணிசார் சுயலக் கதைகள்தான்.

முற்போக்கு இலக்கிய வட்டம் உருவாகிய காலத்தில் கைலாசபதி எத்தகைய பெரும் ஆளுமையாக உருவெடுத்தார் என்பதையும் அதனால் வளர்க்கப் பட்ட – புறக்கணிக்கப்பட்ட எழுத்தாளர்கள் பட்டியல் பற்றியும் பலர் எழுதி இருக்கிறார்கள்- பல்வேறு பதிவுகள் உண்டு. கைலாசபதி –(முற்போக்கு) –  எஸ் பொ (நற்போக்கு) வட்டங்களை ஒரு நடுப்போக்கில் நின்று தாகுவதற்காக எழுதப் பட்டதுதான் மு த வின் ஏழாண்டு கால இலக்கிய வளார்ச்சி என்ற கட்டுரைகள் (இது பற்றி அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்). அவர் எழுதிய ‘விமர்சன வக்கிரகங்களையும்’ படிக்கவும். இக்கால பகுதியல் கைலாசபதி எழுதிய காரசாரமான கட்டுரைகளைப் படிக்கவும். எஸ் பொ பல பெயர்களில்  எழுதிய அவதூறுகளையும் படிக்கவும். அக்கால கட்டத்தில் நடந்த அடிபாடுகள் – கூட்டங்களில் இவை நேரடி அடிபாடுகளாகக்கூட வெடித்தமை பதிவாகி இருக்கிறது. தற்போது நடக்கும் அடிபாடுகளை பார்ப்பவர்கள் இது ஒன்றும் ‘புதினமில்லை’ என்பதை விளங்கிக் கொள்வர். தற்போது அனோஜன் மேல் நிகழும் தாக்குதலைத் தொடர்ந்து கொண்டிருக்கும் அடிபாடுகளில் இருந்து பிரித்துப் பார்ப்பது மடமை. அதே போல்தான் அக்கால அடிபாட்டு வரலாற்றில் இருந்து பிரித்து உங்கள் வசதிக்காக புனிதப் படுத்தலை செய்யாதீர்கள்.

கைலாசபதியுடன் பகைத்துக் கொள்ள விரும்பாது மௌனித்து இருந்து இருக்கிறார்கள் பலர். எஸ் பொ இது பற்றி எழுதி இருக்கிறார். இது பயம், பக்தி, அன்பு என்ற எந்த எமோசன் அடிப்படையில் நடந்தது என்பதைச் சும்மா ஊகித்து விட முடியாது. அக்காலத்து அடிபாடுகளுடன் இணைத்துத்தான் அதை நாம் பார்க்க வேண்டும். அப்படிப் பார்ப்பவர்கள் இந்தப் பேச்சில் ஒரு உண்மை இருப்பதாக எடுத்துக் கொள்ள முடியும். ஆனால் ஜெயமோகன் செய்யும் திட்டமிட்ட பரப்புரை அல்ல அனோஜன் செய்வது. இருப்பினும் இவர்களுக்கு அனோஜன் தான் பெரும் வில்லன். ஜெயமோகன் புகழில் குளிர்காயத் தவிக்கும் மனம் அவர் மேலான தாக்குதலை தவிர்க்கிறது என இதனால்தான் நாம் சுட்டிக் காட்ட வேண்டி இருக்கிறது.

‘சமூக அரசியற் செயற்பாட்டாளர்’ என்ற பட்டத்துடன் ராகவன் எழுதிய கட்டுரை ‘சாதிய இயல்பாக்கத்தை விரிவாக பேசி இருப்பதாக’ ஒரு விளம்பரம் செய்திருந்தார் ஷோபாசக்தி. இலக்கிய வரலாறு – கோட்பாடு பற்றி இது வரை உருப்படியான ஒரு கட்டுரை கூட எழுதியதில்லை ஷோபாசக்தி. தத்துவார்த்த விவாதம் பற்றி சொல்லத் தேவை இல்லை. அவர் விளங்கிக் கொண்ட ‘விரிவான’ பேச்சு வெறும் புஷ்வாண சுருக்க புலம்பல்  மட்டுமே. உண்மையில் இந்தக் கட்டுரையில் caste- privilege பற்றி எந்தப் புரிதலும் முன்வைக்கப் படவில்லை. சும்மா சொற்கள் எடுத்தெறியப் பட்டுள்ளன. அவ்வளவே. இது பற்றி மார்க்சியர் என்ன சொல்கிறார்கள் என்ற எந்த அநியாயமும் தெரியாது ஷோபாசக்திக்கு. இவன் யார் எனக்காக கதைப்பதாக பாவனை செய்வது எனக் கல்லறையில் இருந்து கைலாசபதி எழும்பி ஓடி வரும் சாத்தியம் உண்டு.

சாதியம் எல்லாத்திலும் இருக்கிறது என்ற எல்லாருக்கும் தெரிந்த ஒன்றை இந்த ‘விரிவான’ கட்டுரை சொல்கிறது. caste- privilege என்பதை ‘ஆதிக்க சாதியினர் தங்களை பிறப்பால் உயர்வாக கருதவதால் ஏற்படுவது’ என சொல்கிறது கட்டுரை. கல்வியாளர் முரளியிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு எழுதி இருக்கலாம். ஒருவரின் பிறப்பால் வரும் தகுதி சார்ந்து அவர் இயல்பாகவே அடையும் லாபங்கள் என சொல்வார்களே – அது என்ன? Privilege-theory எனப்படும் இத்தகைய வாதம் என்ன சொல்கிறது என்பதையே இவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அப்படியிருக்க இது பற்றி மார்க்சியர் முன் வைக்கும் விமர்சனங்களை இவர்கள் எப்படி புரிந்து கொள்ளப் போகிறார்கள்?

மேற்சொன்ன ஒரு வசனத்தின் பிறகு கட்டுரை வேறு எங்கோ தாவுகிறது. எவ்வாறு ஆதிக்க சாதிகள் நிலை நிறுத்திய நடைமுறைகள் இயல்பாக்கம் அடைந்து விட்டன எனச் சொல்லப் போகிறேன் எனத் தொடங்கி ஒன்றும் சொல்லாமல் நகர்கிறது. மறைமுகமாகவும் சாதியம் இயங்குவது பற்றி எழுதாதவர்கள் யாரவது இருக்கிறார்களா? தெரியவில்லை. எல்லாரும் அறிந்த ஒன்றுதான் இது. இந்தச் சிறு ‘பாவனைக்குப்’ பிறகு கட்டுரை தனது முக்கிய புள்ளிக்கு நகர்கிறது. அதாவது சாதி இயல்பாக்கத்தை விளக்க உதாரணம் ஒன்றைத் தருகிறாராம். இப்போது உங்களுக்கு புரிந்து இருக்கும். அங்குதான் மு த வும் அனோஜனும் வருகிறார்கள்.

மு தவின் எழுத்தும் அனோஜனின் கிண்டலும் ஆதிக்க சாதி இயல்பாக்கத்தின் இன்னொரு வடிவம் என்கிறது கட்டுரை (அனோஜன் தான் சொல்லவில்லை எனச் சொல்லும் வசனத்தைச் சுட்டி). இந்தக் கிண்டல் பிரயோகத்தை அவர் தவறாக கருதாதற்கு காரணம் அவருள் இயல்பாக்கம் அடைந்திருக்கும் ஆதிக்க சாதியம் என நிறுவுவது ராகவனின் நோக்கமாக இருக்கிறது. உண்மையில் இந்த மோசமான வாதம் சாதிய ஒடுக்குமுறை மற்றும் – பல்வேறு பிரச்சினைகள் பற்றிய முன்னனுமானத்துடன் வைக்கப் படுகிறது என்பது கொஞ்சம் கூட இவர்கள் கவனத்துக்கு வரவில்லை. அதனால் தாம் வைக்கும் வாதத்தின் பலிகடாவாக அவர்களே ஆகிப் போகிறார்கள். இவ்வாறு சாதியை உங்கள் ‘வாத’ நலனுக்காக பாவித்து உங்களின் உட்கிடக்கும் சுய நலனைத்தான் நீங்கள் வெளிக்காட்டி இருக்கிறீர்கள்.

பிறகு இப்படி ஒரு திரிபு-தீர்ப்பு சொல்லப்படுகிறது. ‘கைலாசபதி ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர் என்பதால் அவரிடம் தலித் சமூகத்தச் சேர்ந்த டொமினிக் ஜீவா அஞ்சியிருந்தார் எனக் கருதுவது சாதிய இயல்பக்கத்தின் விரிவே’! இதுவே டொமினிக் ஜீவா ஆதிக்க சாதியாக இருந்தால் அவர் ‘நட்பு காரணமாக’ என சொல்லி இருப்பாராம் (ஆதிக்கசாதி இயல்பாக்கம் அடைந்த) அனோஜன். இது என்ன வகை ஊகம் ? இது போன்ற மடத்தனமான வாதத்தை ‘செயற்பாட்டுத்’ தளம் பற்றி ஒரு மண்ணும் தெரியாத ராகவன் போன்ற ‘செயற்பாட்டாளர்கள்’ மத்தியில்தான் பார்க்க முடியும். இதைவிட மோசமாக அனோஜன் சொல்வதில் லாஜிக் இல்லை என்றெல்லாம் ‘விரிவாக்கம்’ அடைகிறது கட்டுரை. இவ்வளவையும் சொல்லி விட்டு, தான் அனோஜனை ‘சாதிப் பற்றாளர்’ என்று நிருபிக்கும் நோக்கில் எழுதவில்லை என்ற குசும்பல் வேறு.

கைலாசபதி (முற்போக்கு) சார்ந்து இயங்கிய புறக்கணிப்பு பற்றி எஸ் பொ சொன்னவற்றை எவ்வாறு பார்ப்பது? அவற்றை நட்பு ரீதியான விமர்சனங்களாக பார்ப்பதா? அல்லது ஆதிக்க சாதியம் எஸ் போவில் இயல்பாக்கம் அடைந்து கிடந்தது எனப் பார்ப்பதா? உண்மையில் இது போன்ற மடத்தனமான விதண்டா வாதங்கள் எல்லாம் கணக்கில் எடுத்து பேச வேண்டி இருப்பதைப்பற்றி கவலைப்பட மட்டுமே முடிகிறது. இந்த கட்டுரையை caste- privilege பற்றி விரிவாக பேசும் கட்டுரை என விளம்பரம் செய்வது எத்தகைய பொறுக்கித்தனம் எனப் பாருங்கள். அனோஜன் மேல் இவர்கள் செய்யும் வன்முறை இது. அனோஜன் மறுத்தும் விடாது தொடர்கிறது தாக்குதல். கல்வியாளரும் ராகவனின் நண்பருமான முரளியும் ஒரு குறிப்பை எழுதி இருந்தார். அதில் ராகவன் சொல்வதுதான் நடந்தது என எழுதி இருக்கிறார். ஐரோப்பா கண்டத்திலும் சாதியம் தொடர்கிறது என்பதற்கு இதுவோர் உதாரணம் என்கிறார். தன்னுடைய சாதி என்ன என மறைமுகமாக கேட்டதாகவே தனக்கு தோன்றியதாக அவர் குறிப்பிடுகிறார். பிராமணரா என்ற கேள்வி மறைமுகமான கேள்வி அல்ல. இப்போது தரும் விளக்கத்தை அந்த தருணம் அனோஜன் சொல்லவில்லை எனக் கூறும் முரளி அப்போது என்ன விளக்கத்தை அனோஜன் சொன்னார் எனச் சொல்லவில்லை. அப்போதே மறுத்துப் பேசியதாக சொல்கிறார் அனோஜன். அனோஜனின் நண்பர்கள் யாராவது அங்கு இருந்து அவர் சொன்னதுதான் சரி என ஒரு குறிப்பு எழுதி இருப்பின் என்ன செய்வது? அனோஜன் மறுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது இருக்கலாம். சரி. இந்த தண்ணிப் பார்ட்டியில் நடந்த கிண்டல் கதையை வைத்து அவரை ஆதிக்க சாதிமானாக கட்டமைப்பது வன்முறை அல்லவா? இதை ஏன் உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை?

ஷோபாசக்தியின் மொழி மற்றும் நடைமுறையில் இருக்கும் வன்முறை பற்றி வரும் குற்றச் சாட்டுகள் புதியவை அல்ல (இரண்டு உதாரணத்தை பின் இணைப்பாகத் தந்துள்ளேன்). இந்தக் குற்றச் சாட்டுகள் பற்றி பல கேள்விகள் உண்டு. ஆனால் தன்னை ஒரு ‘புனிதமாக’ கட்டமைக்க முயலும் ஷோபாசக்தியின் பின்னணியையும் நாம் தெரிந்த கொள்ள வேண்டும். சில விசயங்களை நீங்கள் நுணுக்கமாக அவதானிக்கா விட்டால் உங்கள் தலையில் சம்பல் அரைத்து -காதில் பூ வைத்து அழகு பார்த்து சென்று விடுவார் அவர்.

பின் இணைப்புக்கள்

மு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் – இரண்டாம் பகுதி

 

“தோழர்கள்” ஷோபா சக்தியும் லீனாவும் : தீபக்

 

அவதூறுகளுக்குப் பெயர் கருத்துச் சுதந்திரமல்ல : கேணல் கிட்டு . (ஆசிரியர் குழு: இனியொரு)

 

http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/13335-2011-03-03-12-41-27

 

https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/21793–high-engar-

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *