யாரிந்த ட்ரொட்ஸ்கி? -76வது ஆண்டு நினைவு நாள்
கடந்த பல வாரங்களாக இங்கிலாந்து ஊடகங்களில் திரும்பத் திரும்பப் பேசப்பட்டுவரும் பெயர் – ட்ரொட்ஸ்கி. அனைத்து ஊடகங்களும் ட்ரொட்ஸ்கி பற்றி ட்ரொட்ஸ்கிஸ்டுகள் பற்றி எழுதித் தள்ளிக்கொண்டிருப்பதைப் பார்த்தோம். தொழிலாளர் கட்சியின் எதிர்க்கட்சி தலைவரான nஐரமி கோர்பினை “ட்ரொட்” என்றும் – அவர் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் ஊடுருவலை அனுமதிக்கிறார் என்றும் பல்வேறு குற்றச் சாட்டுகள் ஊடகங்களில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருந்ததைப் பார்த்திருப்பீர்கள். யாரிந்த ட்ரொட்ஸ்கி ? இந்தப் பெயருக்கேன் வலதுசாரிகள் பயப்பிடுகிறார்கள்?
இன்று ட்ரொட்;ஸ்கி கொல்லப்பட்டு சரியாக 76வது ஆண்டு நினைவு நாள். 1940ம் ஆண்டு 21ம் திகதி ஆகஸ்டில் ட்ரொட்ஸ்கி கொலை செய்யப்பட்டார். 20ம் திகதி ரமோன் மேர்கடர் என்ற கே.ஐp.பிஉளவாளியால் மண்டையில் குத்தப்பட்ட ட்ரொட்ஸ்கி 21ம் திகதி மரணமடைந்தார்.
இரஷ்யப் புரட்சி என்ற வரலாற்றுத் திருப்புமுனை நிகழ்ந்து நூறு ஆண்டுகள் நிறைவாகப் போகிறது. இந்த வரலாற்று மாற்றத்தில் முக்கிய பங்கு வகித்தவர் லியோன் ட்ரொட்ஸ்கி. புரட்சிகர மாற்றத்துக்காகச் சிறு வயதில் இருந்தே பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த ட்ரொட்ஸ்கி 1905ம் ஆண்டு இரஷ்யாவில் நடந்த புரட்சியின் போது சோவியத்துக்களின் தலைவராகச் செயற்பட்டவர். இதன் பின்பு பல்வேறு பத்திரிகைகளுக்கு ஆசிரியராக இருந்தார். சோசலிச மாற்றைக் கட்டுவதற்கான பல செயற்பாடுகள்-மாநாடுகளில் பங்கு பற்றினார். 1917 பெப்ரவரி மாதம் இரஷ்யாவில் நடந்த புரட்சிக்குப் பிறகு நாடு திரும்பிய ட்ரொட்ஸ்கி அந்தப் புரட்சி வெல்வதற்கான பல்வேறு நடவடிக்கைகள் செயற்திட்டங்களை முன்னெடுத்தார்.
லெனினின் ஏப்ரல் அறிக்கை வெளியாகிப் பொல்சுவிக் கட்சியின் திசை புரட்சியை வென்றெடுக்கும் திட்டமிடலுக்கு மாறியதுடன் லெனினுடனும் பொல்சுவிக் கட்சியுடனும் நெருக்கமாக வேலை செய்த ட்ரொட்ஸ்கி பின்பு பொல்சுவிக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரானார். அக்டோபர் புரட்சிக்குத் தலைமை தாங்கினார். புரட்சிக்குப் பிறகு உருவான தொழிலாளர் அரசை நோக்கி 21 முதலாளித்துவ நாடுகள் படை எடுத்துச் சென்றன. இரஷ்யாவுக்குள் இருந்த முதலாளித்துவ ஆதரவு சக்திகளும் ஒன்று திரண்டு அரசை எதிர்த்தன. இதற்கெதிராகச் செம்படை இராணுவத்தைக் கட்டி எழுப்பிப் புரட்சியைக் காப்பதற்கான நடவடிக்கைகளை அவர் செய்தார். செம்படைத் தலைவராக யுத்த நிறுத்த நடவடிக்கைகள் மற்றும் அமைதிக்கான முயற்சிகள் பலதையும் அவர் செய்தார். எமது யுத்தம் உங்களுக்கெதிரானதல்ல என அவர் தலைமையில் எழுதிய துண்டுப் பிரசுரங்கள் எதிரணி இராணுவத்தினர் மத்தியில் விநியோகிக்கப்பட்டு அவர்களையும் புரட்சியின் பக்கம் இழுத்து யுத்த நிறுத்தம் செய்யும் திட்டமிடலை அறிமுகப்படுத்தியவர் ட்ரொட்ஸ்கி. இந்தத் திட்டமிடலால்தான் 21 படைகளும் தோற்கடிக்கப்பட்டன. விடாப்பிடி யுத்த எதிர்ப்புக் கொள்கைகளுக்காக பெயர் பெற்றவர்கள் ட்ரொட்ஸ்கியும் லெனினும்.
இதன்பின் லெனினின் மறைவைத் தொடர்ந்து ஸ்டாலின் தலைமையில் பலப்பட்ட சர்வாதிகார கட்டுப்பாடுகளை அவர் கடுமையாக எதிர்த்தார். ஒரு நாட்டில் சோசலிஸம் போன்ற தவறான போக்குகளை உள்வாங்கி உள்நோக்கித் திரண்ட அதிகாரம் ஸ்டாலினின் தலைமையில் எதிர்ப்பாளர்களை வேட்டையாடத் தொடங்கியது. இது பல்வேறு புரட்சிகரக் குரல்களை முடக்கியது. பழைய பொல்சுவிக் கொள்கைகளுக்கு எதிராகவும் – தவறான பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராகவும் – மோசமான வெளிவிவகாரக் கொள்கைகளுக்கு எதிராகவும் கடுமையான, துணிந்த போராட்டத்தை முன்னெடுத்தார் ட்ரொட்ஸ்கி. உள்நோக்கித் தனிமைப்பட்டு பலப்பட்ட ஸ்டாலினியம் பல புரட்சிகர சக்திகளின் உயிர்களைப் பறித்தது. புரட்சியின் போது மத்திய குழுவில் இருந்த பெரும்பான்மை புரட்சிகரவாதிகள் கொலை செய்யப்பட்டனர். ஸ்டாலினை எதிர்த்தவர்கள் கொலை செய்யப்பட்டனர் அல்லது நாடு கடத்தப்பட்டனர். ஸ்டாலினின் அதிகாரம் விவாதத்துக்கு அப்பாற்பட்டதாக சோவியத் அதிகாரம் சர்வாதிகாரத் தன்மையுடயதாக மாறத் தொடங்கியது. இத்தருணத்தில் இடதுசாரிய எதிர்ப்பை முறைப்படி கட்டிய ட்ரொட்ஸ்கி ஸ்டாலினுக்கு எதிர்ப்பைத் திரட்டத் தொடங்கினார். இதற்குள் இரகசிய உளவுத்துறை முதற்கொண்டு பல கொலைவெறி அமைப்புகளை இரகசியமாக உருவாக்கிவிட்ட ஸ்டாலினியக் கொலைகள் அதிகரிக்கத் தொடங்கின. இரஷ்யாவுக்குள்ளும் சர்வதேச அளவிலும் நன்கறியப்பட்ட ட்ரொட்ஸ்கியின் தலைமையில் திரண்ட எதிர்ப்பு மேலும் பலப்படாமல் இருக்க இவர்கள்மேல் துரோகப் பட்டம் கட்டப்பட்டு வேட்டையாடுதல் அவிழ்த்து விடப்பட்டது. ட்ரொட்ஸ்கி நாடு கடத்தப்பட்டார்.
தப்பியோடிப்போய் மெக்சிக்கோவில் மறைந்திருந்த ட்ரொட்ஸ்கி சும்மாயிருக்கவில்லை. அங்கிருந்தபடியே ஸ்டாலினியத்துக்கு எதிர்ப்பும் – புரட்சியைக் காப்பதற்கான திட்டமிடல்களும் அவரால் முடுக்கி விடப்பட்டன. ட்ரொட்ஸ்கியின் தலமையில் பல்வேறு நாடுகளில் புதிய அமைப்புகள் உருவாகத் தொடங்கின. ஸ்டாலினியத்தை நுணுக்கமாக விளக்கி அதன் பலத்தைத் தத்துவார்த்த ரீதியாக உடைத்தார் ட்ரொட்ஸ்கி. இதன் பலனாகச் சோவியத் உளவுத் துறை அவரைக் குறிவைத்தது. அவரைக் கொலை செய்யும் பல முயற்சிகள் தடைப்பட்ட நிலையில் ஸ்பானிய கம்யுனிஸ்டும் கே.ஐp.பி உளவாளியுமான ரமோன் மேர்கடர் அவரை பனிக்கட்டி கொத்தும் கோடரியால் தலையில் குத்திக் கொன்றார்.
குத்துவாங்கிய ட்ரொட்ஸ்கி உடனடியாகச் சுதாரித்துத் தற்காப்புச் செய்து கொண்டிருக்கும் பொழுது கைது செய்யப்பட்ட இந்த இரஷ்ய உளவாளி விசாரணையின் போது தான் கொலை செய்த விபரத்தை விளக்கமாக சொல்லியிருக்கிறார். ஸ்டாலின் ட்ரொட்ஸ்கியின் கொலையைக் பகிரங்கமாகக் கொண்டாடத் தயங்கவில்லை. கொலை செய்யப்பட்ட கையுடன் ரமோனின் தாயாருக்கு லெனின் பதக்கம் விருது வழங்கப்பட்டது. இருபது வருடத்துக்குப் பிறகு மெக்சிக்கோவில் இருந்து விடுவிக்கப்பட்டு இரஷ்யா சென்ற ரமனோவுக்கும் அதே விருது வழங்கப்பட்டது. அது மட்டுமின்றி சோவியத்தின் அதி உயர் விருதான சோவியத் யூனியனின் கதாநாயகன் விருதும் வழங்கப்பட்டது.
ட்ரொட்ஸ்கி புரட்சிகரச் செயற்பாடுகளுக்காக மட்டுமின்றி மார்க்சியம் சார் தத்துவார்த்த பங்களிப்புக்காகவும் அறியப்பட்டவர். நிரந்தரப் புரட்சித் தத்தவம் முதற்கொண்டு இயங்கியல் வரலாறு ஆகியவற்றுக்கு அவர் வழங்கிய பங்களிப்பு இன்றும் தனித்தவமான முதன்மை மார்க்சியப் பங்களிப்புகளாகக் கருதப்படுகிறது. சாகும் வரையும் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தவர் ட்ரொட்ஸ்கி. இவர் எழுதிய ஏராளமான எழுத்துகளைப் படித்து முடிக்க வாழ்நாள் போதாது என்று சொல்லுமளவுக்கு இவரது எழுத்துகள் குவிந்து கிடக்கின்றன.
ட்ரொட்ஸ்கிக்கு எதிர்ப்பு
ஸ்டாலினுக்கு ஆதரவாக இயங்கிய கம்பியுனிசக் கட்சிகள் ட்ரொட்ஸ்கி பற்றி ஏராளமான வதந்திகளைப் பரப்பி ஸ்டாலினின் நடவடிக்கைகளை மறைத்து வந்திருக்கின்றன. கட்சி உறுப்பினர்கள் கேள்வி கேட்க முடியாதவாறு கம்பியுனிசக் கட்சிகள் சனநாயகமற்ற முறையில் கட்டப்பட்டது மட்டுமின்றி கட்சி நிலைப்பாடு என்று குறுகிய நிலைப்பாட்டுக்குள் உறுப்பினர்களை முடக்கக்p கட்டுப்படுத்தி வந்திருக்கின்றனர். இந்நிலைப்பாடு இன்று மாறத் தொடங்கியுள்ளது. சனநாயகமற்ற கம்பியுனிசக் கட்சிகள் உடைந்து நொருங்குவதும் – ஏனைய கட்சிகள் தங்கள் நடைமுறைகளை மாற்றிக்கொள்ளத் தொடங்கியிருப்பதும் வரவேற்கத்தக்கதே.
ஒரு சில நவ காலனித்துவ நாடுகளைத் தவிர கம்பியுனிசக் கட்சிகளின் மக்கள் ஆதரவு இன்று பெரும்பாலும் குறைந்து விட்டது. இருப்பினும் இக்கட்சிகள் தாம் பரப்பிய வதந்திகளை இன்னும் பின்வாங்கவில்லை. தமது வேலைத் திட்டங்களை மீள் விசாரணை செய்யவில்லை. இந்தியாவின் இருபெரும் கம்பியுனிசக் கட்சிகள் தேர்தல் வெற்றிகளுக்காக மட்டும் தமது கொள்கைகள் நடைமுறைகளை மாற்றிக்கொள்கிறார்களே தவிர புரட்சிகரத் திட்டமிடல் பற்றிய கொள்கை மாற்றங்கள் பற்றி விவாதங்களை அவர்கள் செய்யவில்லை. ட்ரொட்ஸ்கி என்ற பெயர் ஒரு துரோகியின் பெயராகவே இன்றுகூட அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. கேள்வி கேட்கும் கட்சி உறுப்பினர்கள் ட்ரொட்ஸ்கிஸ்ட் எனச் சொல்லித் துரத்தப்படும் நிலைமைதான் நிலவி வருகிறது.
இலங்கையில் கம்பியுனிசக் கட்சி எந்தக் காலத்திலும் பலமான கட்சியாக இருந்ததில்லை. இந்தியாவில் இருக்கும் அளவுக்கு அங்கு முழுக்க முழுக்க வரலாற்று மறுப்புப் போக்குகள் இருந்தது குறைவு. இருப்பினும் பழையகாலத்துப் பழக்கம் இன்னும் தொங்கிக்கொண்டுதான் இருக்கிறது. “பெண் காரியதரிசியின் காதலனால் கொல்லப்பட்டார்” என்று அவரது கொலை காதல் விவகாரத்தால் நடந்தது என்றும் பொய்பரப்புரை ஒண்றுண்டு. இதை இலங்கை மாவோயிஸ்டான சண்முகதாசனும் எழுதியிருக்கிறார். இது முற்றிலும் பொய்யான விசயம் என்பதும் -இத்தகைய வதந்தியால் ரமோனால் பாவிக்கப்பட்ட பெண் கடுமையான தொல்லைகளுக்கு உள்ளானார் என்பது ஒரு பக்கம். மறுபக்கம் காதல் விவகாரத்தில் கொலை செய்யப்படுவது ஏதோ சரி என்பதுபோன்ற பெண்களுக்கு எதிரான போக்கும் இதில் உள்ளடங்குவதை அவர்கள் கவனிப்பதில்லை. இதற்கு முன்பு ட்ரொட்ஸ்கி மேல் கொலைத் தாக்குதல்கள் நடத்தியது யார்? அதுவும் காதல் விவகாரங்களா? மிக கேவலமான சிறுமைத்தனமான பேச்சு அது. ட்ரொட்ஸ்கிக்கும் அந்தப் பெண்ணுக்கும் எந்தக் காதல் தொடர்புகளும் இருக்கவில்லை. ஆனால் அப்படி இருந்தால்தான் என்ன? அதனால் அந்தக் கொலை நியாயப்பட்டு விடுமா? ட்ரொட்ஸ்கி காதல் செய்தவர்தான். ஓவியர் பிரிடோ காலோவுக்கும் அவருக்கும் இடையில் இரகசியக் காதல் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. பிரிடோ காலோ ட்ரொட்ஸ்கியைக் காதலித்தது குற்றமா? இரஷ்யப் புரட்சியை நடத்திய முக்கிய மார்க்சிஸ்ட் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டதற்குக் குறைந்தபட்சக் கண்டனம் கூட ஏன் வழங்க முடியாது? இவை பற்றியெல்லாம் சிந்திப்பதானால் அவர்கள் ஸ்டாலினிஸ்டாகவோ மாவோயிஸ்டாகவோ இருக்கமுடியாது. கிடைத்தபடி கதை எழுதிவிட்டுத் தங்கள் சிறு பேழைக்குள் பதுங்கிவிடுவதுதான் அவர்கள் பழக்கம்.
இது மட்டுமின்றி ட்ரொட்ஸ்கி ஒரு யூதர் என அவர்மேல் இனத் துவேசங்களும் வீசப்பட்டிருக்கிறது. அவர் யூதர் அதனால் அவர் காட்டிக்கொடுப்பவர் என்றும் – முதலாளித்துவத்தின் ஏஜென்ட் என்றும் கறை பூசப்பட்டிருக்கிறார்.
ஆனால் இன்று அதிகாரம் தூற்றுவது இந்தக் காரணங்களுக்காக அல்ல. இன்று அதிகாரம் மீண்டும் ட்ரொட்ஸ்கியை இழுத்துத் திட்டுவதற்குக் காரணம் ட்ரொட்ஸ்கியின் தத்துவ நிலைப்பாடை முதன்மைப்படுத்தி இயங்கும் அமைப்புகளின் செயற்பாடே. முன்பு சுரங்கத் தொழிலாளரின் மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்துப் பழைமைவாதக் கட்சிக்குக் கடுமையான எதிர்ப்பைக் கட்டியவர்கள் ட்ரொட்ஸ்கிஸ்டுகளான மிலிட்டன் என்ற அமைப்பினர். இவர்கள் முன்னெடுத்த போராட்டம்தான் மிகவும் வெறுக்கப்பட்ட மார்கிரட் தச்சரை அரசதிகாரத்தில் இருந்து வீழ்த்தியது இது தவிர லிவர்பூல் நகரத்துக் கவுன்சிலை கைப்பற்றிய மிலிட்டன் அமைப்பினர் ஏராளமான மக்கள் சார் கொள்கைகளை நிறைவேற்றியிருக்கிறார்கள். வீடில்லாதோருக்கு வீடு கட்டுதல் முதற்கொண்டு வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்துதல் ஈறாக இவர்கள் அரச பணத்தை மக்கள் சேவைகளுக்காக ஒதுக்கியிருக்கிறார்கள். இவர்களின் இந்த நடவடிக்கையால் தமது சுயநலத் தேவைகள் பாதிக்கப்பட்ட வலதுசாரிகள் இவர்களுக்கு எதிராகக் கடுமையான யுத்தத்தை தொழிலாளர் கட்சிக்குள் செய்து இவர்களைக் கட்சியை விட்டு வெளியேற்றினார்கள்.
இன்று சோசலிஸக் கட்சி என்றழைக்கப்படும் இந்த மிலிட்டன் அமைப்பு தற்போது nஐரமி கோர்பினின் கொள்கைகளுக்கு வெளிப்படையான ஆதரவை வழங்கி வருகிறது. இதனால் மீண்டும் இந்த மிலிட்டன் அமைப்பினரின் கை ஓங்கிவிடும் என்ற பயத்தில் இவர்களுக்கெதிரான கடும் பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. சோசலிஸக் கட்சியைத் தாக்குவது மூலம் இவர்கள் nஐரமி கோர்பினைத் தாக்கி அவரது செல்வாக்கைக் குறைக்க முற்படுகின்றனர். ஆனால் அவர்கள் தாங்கள் எதிர்பார்த்த பலனை இந்தப் பிரச்சாரத்தால் அடையவில்லை.
வலதுசாரிகள் சோசலிஸ்டுகளைத் தாக்கியதானது யாரிந்த சோசலிஸ்டுகள்;? என்ற கேள்வியை இளையோர் மத்தியில் கிளப்பிவிட்டுள்ளது. யாரிந்த ட்ரொட்ஸ்கி என மீண்டும் ட்ரொட்ஸ்கி எல்லாத் தளங்களிலும் பேசப்படுகிறார். இளையோர் பழைய மிலிட்டன் வரலாற்றைக் கிண்டி எடுத்துப் படிக்கின்றனர். லிவர்பூலில் நடந்த விசயங்களைச் சமூக வலைத்தளங்களில் படிக்கின்றனர். இதைப் படிப்பவர்களுக்கு சோசலிஸ்டுகளின் நடவடிக்கையில் என்ன பிழை? என்ற கேள்வி தானாக எழுகிறது. வசதியற்றோருக்கு வீடு கட்டிக் கொடுத்தல் பிழையா? வேலை வாய்ப்பை ஏற்படுத்தல் பிழையா? ஊதிய உயர்வு செய்தல் பிழையா? இந்தக் கேள்வி முரண்கள் அவர்களை வர்க்க முரண்சார்ந்த புரிதல் நோக்கியும் – வலதுசாரிகளின் கேவலமான பிரச்சாரங்களின் பொய்மை பற்றிய புரிதல் நோக்கியும் அவர்களை நகர்த்துகிறது.
இதனால் மேலும் மேலும் கோர்பினுக்கு ஆதரவு சேர்ந்துகொண்டிருக்கிறது. இது மட்டுமின்றி சோசலிஸ கட்சியில் சேரும் இளையோர் தொகையும் அதிகரித்திருக்கிறது. 76 வருடங்களுக்கு முன்பு முதலாளித்துவத்துக்கு எதிராகப் போராடி சனநாயகத்துக்காகப் போராடிச் செத்த ட்ரொட்ஸ்கி சரியான முறையில்தான் நினைவுகூரப்பட்டுள்ளார்.