படுகொலைக்கெதிரான எதிர்ப்பறிக்கை -மீனா கந்தசாமியின் – நாடோடிகளின் கடவுள்.
தமிழகத்தில் பல ஆண்டுகளுக்கு முன் கீழ்வெண்மணியில் நிகழ்ந்த படுகொலைச் சம்பவம் ஒட்டுமொத்த மனித குலமும் வெட்கப்படவேண்டிய ஒரு நிகழ்வு. இப்படுகொலையின் கேவலத்தை ஒரு புத்தகம் இன்று உலகெங்கும் பகிரங்கப்படுத்தியுள்ளது. கொலைகள் கோரங்களைப் பற்றி எழுதுவது சமுகம் சார்ந்து சிந்திக்கும் எழுத்தாளர்களுக்கு இலகுவான காரியமில்லை. கதையாகச் சொல்வதா – வரலாறாகப் பதிவதா – அறிக்கையாக்குவதா என்று எழும் ஆயிரத்தெட்டு கேள்விகளுக்கு பதிலாக வெளிவந்திருக்கிறது “ஜிப்ஸி கோடஸ்” (நாடோடிகளின் கடவுள்) என்ற மீனா கந்தசாமியின் புத்தகம்.
“நடுநிலை” என்ற விசர்க் கதைகளை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு ஒடுக்கப்படுவோர் பக்கம் அழுத்தம் திருத்தமாக தன் குரலைப் பதிபவர் மீனா கந்தசாமி. அவரது எழுத்துக்கள் பக்கச் சார்பு கொண்டது- ஒடுக்கப்படுவோர் பக்கம் ஒட்டி நிற்பது. இது பலருக்கும் தெரிந்ததே. ஆனால் இந்தப் புதிய புத்தகம் அவரது எழுத்தை மேலும் ஒரு படி உயர்த்தியிருக்கிறது. இப்புத்தகம் கீழ்வெண்மணி படுகொலைக்கெதிரான எதிர்ப்பறிக்கை என்று சொல்வது மிகையில்லை.
புத்தகம் வெளிவந்த கையுடனேயே சூட்டோடு சூடாக இப்புத்தகத்தை படித்து முடித்திவிட்டபோதும் இப்புத்தத்தை பற்றி என்ன எழுதவது என்பது இன்றுவரை சாத்தியப்படவில்லை. கோரங்களைப் பற்றி புத்தகம் எழுத முடியாது என்ற அவலத்தில் இருந்தும் – அத்தகைய எழுத்தின் மேலான – அதை எழுதும் எழுத்தாளர் மீதான – வாசிப்போர் –மற்றும் ஏற்றுக்கொள்ளும் சமூகம் மேலான கடும் விமர்சனத்துடன் ஆரம்பிக்கிறது புத்தகம். முதல் பக்கத்தில் இருந்தே வாசிப்போர் மூஞ்சியில் குத்து விழுகிறது. படுகொலையைப் பற்றி படிப்பது உணக்கு இலகுவாக இருக்கப்போவதில்லை என்பதை வாசிப்போர் முகத்தில் எறிகின்றன வசனங்கள். இந்த அடிபாடு புத்தகத்தின் கடைசி வசனம் வரை தொடர்கிறது. கார சாரமான விமர்சனங்களுக்கூடாக நகரும் புத்தகத்தின் பக்கங்கள் நகர நகர படுகொலை பற்றிய கோரங்கள் மெதுவாக எம்மில் படர்கின்றது – கோபங்கள் எங்கள் நரம்புகளிலும் இறங்குகிறது.
இது வெறும் கதைப் புத்தகமல்ல. வெறும் நாவல் என்று சொல்லிவிட்டுப் போய்விட முடியாது. உள்ளே நீங்கள் கட்சி அறிக்கையைத் தேடிப்பிடிக்கலாம் ஆனால் கதையைத் தொட முடியாது. இப்புத்தகத்தைப் படித்தபோது இது எப்படி கவணம் பெறப்போகிறது என்ற ஒரு ஏக்கம் பிறந்தது உண்மையே. இதே எழுத்துப் பாணியில் இப்புத்தகம் தமிழில் வெளிவந்திருந்தால் கவணத்தை பெற்றிருக்குமோ தெரியவில்லை. ஏனெனில் மீனாவின் எழுத்துப் பாணி முற்றிலும் புதியது. நடை மட்டுமல்ல ஒட்டுமொத்த முறையே வித்தியாசமானது. ஆதிகால “யதார்த்த” முறைப் பாணியையே இன்றுவரை கட்டி அழுதுகொண்டிருக்கும் தமிழ் இலக்கிய உலகில் இத்தகைய “எதிர்” புத்தகங்களை புரிந்து வரவேற்கும் பக்குவம் இன்னும் உருவாகவில்லை என்றே சொல்ல வேண்டும். அரசியல் இலக்கியம் பற்றிப் பேசப்படுவது குறைவு. சமரசத்துக்குட்பட்ட இலக்கியங்களே தமிழில் மலிந்து போய்க் கிடக்கின்றன. ஆங்காங்கு எழும் புதிய முயற்சிகளும் கண்டுகொள்ளப் படாமல் முடக்கப்படுகின்றன. ஒரு ஜோர்ஜ் ஓர்வல் தமிழில் கவணம் பெறுவது கடினமே. ஆனால் மீனாவின் நல்ல காலம் அவர் தமிழில் எழுதுவதில்லை. அவர் ஆங்கிலத்தில் எழுதுவதால் தப்பிவிட்டார். இப்புத்தகத்துக்கு ஆங்கில உலகில் மிகப்பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இங்கிலாந்தில் வெளிவரும் முன்னனிப் பத்திரிகைகள் பல இப்புத்தகத்தை புகழ்ந்து எழுதித் தள்ளியுள்ளன.
இப்புத்தகம் பற்றி ஒரு வார்த்தையில் அல்லது ஒரு பந்தியில் குறுக்கி இது தான் அப்புத்தகம் என – அல்லது இதுதான் அக்கதை எனச் சொல்லி விட முடியாது. அத்தகைய பெரும் பரப்பை உள்வாங்கியுள்ளது இப்புத்தகம். அப்புத்தகத்தை வாங்கி நீங்களாக படித்து அறிந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
மீனாவின் எழுத்து நடை அழகியல் நிறைந்தது. மென்மையுடன் மிதக்கும் வசனங்களை வாலாயப்படுத்துபவர் அவர். அவர் அளவுக்கு தமிழ் கவித்துவத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் ஆற்றல் வேறு யாரிடமும் கிடையாது. அவரது கவித்துவ ஊற்று பலரும் அறிந்ததே. ஆனால் இந்த அறிதலுடன் இப்புத்தகத்தை கையில் எடுத்து ‘பழய’ மீனாவைத் தேடாதீர்கள். இது வித்தியாசமான புத்தகம். தன்னைச் சிறைப்படுத்துவதற்கு எதிராகவும் மீனா பல செருகல்களைச் செய்துள்ளார். இப்புத்தகத்தை எழுதியவரே அதன் முதன்மை விமர்சராக இருக்கிறார். இந்த லட்சனத்தில் இப்புத்தகத்துக்கு விமர்சனம் எழுதுவது எப்படி ?
விமர்சனம் என்பது “குறைபாடுகள்” நிறைய சுட்டுவதாக இருப்பது வழமை. வெளிவரும் புத்தகங்கள் பல காரசாரமாக விமர்சிக்கப்படவேண்டியவையாகவே இருக்கின்றன. இப்புத்தகம் இதிலிருந்து விதிவிலக்கானது. இதற்குள் இருக்கும் அரசியல் பற்றி உரையாடல் நிகழவேண்டும் மீனா கந்தசாமி தான் உலகளவில் ஒரு முக்கிய எழுத்தாளர் என்பதை இப்புத்தகம் மூலம் பதிந்துள்ளார்.
(தீராநதிக்காக பல மாதங்கள் முன் எழுதியது)