நிறவெறி எதிர்ப்பு – செயற்கலைக் காட்சி
1
மரபு முறைகளுக்கு மாற்றான கலை காட்சிப்படுத்தல்களைச் செய்வதை நோக்கமாக கொண்டு இயங்கும் Institute of Contemporary Artsல் தற்போது பாபிலோனில் யுத்தம் (War Inna Babylon) என்ற ‘கண்காட்சி’ நிகழ்ந்து வருகிறது. செப்டம்பர் 26ம் திகதி வரையும் இந்தக் ‘கண்காட்சியை’ நீங்கள் பார்வையிடலாம் – உரையாடல்களில் கலந்துகொள்ளல்லாம். தவற விடாது பார்க்க வேண்டிய முக்கிய நிகழ்வு இது.
இங்கே நீங்கள் டிக்கட் பெற்றுக்கொள்ள முடியும் – https://www.ica.art/exhibitions/war-inna-babylon
2
‘கண்காட்சி’ என்று ICA விளம்பரம் செய்தபோதும் அந்தச் சொல் இந்த நிகழ்வுக்குப் பொருத்தமில்லை. அங்கு அத்தகைய எந்தப் புனிதங்களும் இல்லை. விபரங்கள் – பின்வரலாறு தெரியாது ஒரு சுற்றுச் சுற்றி வந்தால் யாருக்கும் ஒரு மண்ணும் விளங்கப் போவதில்லை. ‘கறுப்பர்கள் மேலான துவேசம்’ பற்றிய சில விபரங்கள் என்ற சுருக்கமான என்னத்துக்கு வந்துவிடக்கூடும். தீவிர அரசியற் கலை பிரதிகள் எதிகொள்ளும் பிரச்சினைக்களில் ஒன்றுதான் அத்தகைய ‘சிறுமைப்படுத்தல்’. அரசியல் மற்றும் வரலாற்றுப் பெரும் வெளியை புறந்தள்ளி உட்சுருங்கிய தனிமனிதராக கலைகளை அணுகும் போதாமையின் விளைவு அது. இந்த நிகழ்வுக்கு செல்வோர் பின் வரலாறு – அரசியற் பிரச்சினைகளை அறிந்து செல்வது அவசியம். இல்லை என்றால் ‘நீங்கள் என்ன சுற்றுலாப் பயனியா’ என காப்பாட்சியாளரிடம் நீங்கள் திட்டுவாங்க வேண்டி வரலாம். குறைந்த பட்சம் மார்க் டக்கன் பெயரையாவது தெரிந்துகொள்ளுங்கள்.
லண்டனில் வறுமைப் பிரதேசங்களில் ஒன்றான டோட்டனத்தில் எண்பதுகளிளும் அதன் பிறகும் நடந்த ‘கலவரங்கள்’ வெறும் படங்களாலும் விபரனங்களாலும் மட்டும் காட்சிப்படுத்திவிட முடியாது. இந்த நிகழ்வின் இணைக் காப்பாட்சியாளராக இருக்கும் Stafford Scott (ஸ்டபோர்ட் ஸ்கொட்) என்பதுகளில் உருவான புரோட்வாட்ட பாம் பாதுகாப்பு அமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவர். அந்த போராட்டத்தின் ‘தீவிர பகுதியாக’ தன்னை வர்ணிக்கும் அவர் இன்றும் தனது போராட்டத்தைத் தீவிரமாக தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறார். அந்த இயங்குதளத்தை இந்த நிகழ்வில் நீங்கள் பார்க்க முடியும்.
இங்கிலாந்து பொலிசாரை காரசாரமாக விமர்சிக்கும் இதுபோன்ற வேறு ‘கண்காட்சியை’ நீங்கள் இதுவரை பார்த்திருக்க முடியாது. மார்க் டக்கன் பொலிசாரால் படுகொலை செய்யப்பட்டு – அதை தொடர்ந்து லண்டன் கலவரம் நடந்து -பத்து ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. அந்தக் கொலை சார்ந்து இன்று வரை ‘நியாயம்- நீதி’ கிட்டவில்லை. மாக் டக்கன் குடும்பத்துக்கு பணம் வழங்கி அவர்கள் வாயை அடைக்க முற்படிருக்கலாம் – ஆனால் நாம் விடமாட்டோம் எனச் சொல்கிறார் ஸ்கொட். தடய கட்டமைப்பு (Forensic Architecture) செய்யும் குழு இது பற்றி மிக நுட்பமான தகவல்களைத் தொகுத்துள்ளது. இங்கிலாந்து பொலிசாரையும் நீதிமன்றத்தையும் தாக்கும் இந்தத் தடயக் கட்டமைப்பு நிகழ்வின் முதன்மைக் காட்சியாக இருக்கிறது.
நீங்கள் இந்த நிகழ்வுக்குச் சென்றால் ஸ்கொட் வழங்கும் ‘சுற்றிப் பார்ப்பதில்’ பங்கு கொள்ளுங்கள். ஓரளவாவது வரலாற்றுப் பின்னணியை விளங்கிக் கொள்ள அது உதவும். இங்கிலாந்தில் துவேசம் எவ்வாறு புரையோடிக் கிடக்கிறது – துவேசத்துக்கும் அரச நிறுவனங்களுக்கும் இருக்கும் தொடர்பு – எதிர்ப்புப் போராட்டம் எனப் பரந்த தளத்தில் விரியும் அவரது உரைகளையும் கேளுங்கள். காட்சிக்கு இருப்பவை மிக சொற்பமான படங்களும் –விளக்கங்களுமே. ஆனால் ஸ்கொட் செய்யும் சுற்று முடிய இரண்டரை மணித்தியாலம் எடுக்கும். அந்த நேரச் செலவு முற்றிலும் பிரியோசனமானது. உரையாடல்களையும் இணைத்துக் கொண்டால் ஆறு மணித்தியாலத்துக்கு மேல் எடுக்கும்!
எதுவும் நேரத்துக்கு ஆரம்பிக்கும் வாய்ப்பும் இல்லை! வாசலில் டிக்கட் பார்ப்பவர் கூட என்ன செய்வது எனத்தெரியாது – யாரிடம் டிக்கட் கேட்பது எனத்தெரியாது குழம்பி நிற்கும் நிகழ்வு இது. ஒவ்வொரு நாளும் வெவ்வேறு உரையாடல்களைப் பார்க்க முடியும். இதனால் இந்த நிகழ்வில் பல தடவை பங்கேற்றுவிட்டார் நண்பர் ஒருவர். நான் சென்ற பொழுது பி பி சி யில் வந்த ஒரு டாக்குமென்ரியைப் பார்வையாளருக்கு காட்ட வேண்டும் எனத் திடீரென ஒரு முடிவு எடுக்கப்பட்டது. பிரதியுரிமை இல்லாமையினால் அதைக் காட்ட முடியாது என நிர்வாகம் குழம்ப அதையும் மீறி சில பகுதிகள் காட்டப்பட்டது. அது மட்டுமே 45 நிமிடங்களை தாண்டி விட்டது. அந்தக் காட்சியின் போது டாகுமென்றியில் இருந்த பல்வேறு ‘அரசுசார்’ கொமென்டரிகளுக்கு ஒரு மூலையில் இருந்து எக்காலம் கொட்டி சிரித்து எதிர்வினை செய்துகொண்டிருந்தனர் Winston Silcott, Mark Braithwaite ஆகியோர். பொலீசாரைக் கொலை செய்தார்கள் என குற்றம்சாட்டப்பட்டு சிறையிடப்பட்ட டொட்டனம் மூவரில் இருவர் இவர்கள். அவர்கள் நேரடியாக தமது அனுபவங்களைப் பகிர்ந்தது பிபிசி யின் கேவலத்தை மிகச் சிறப்பாக அம்பலப்படுத்தியது. அவர்களுடைய அனுபவங்கள் உங்கள் நெஞ்சை துளைக்க கூடியவை. ஒட்டுமொத்த உலகமே தனக்கு எதிராக நின்ற பொழுது தான் எவ்வாறு தைரியமாக இருக்க வேண்டி இருந்தது என்பதை Winston Silcott விளக்கிய பொழுது பார்வையாளர் ஒருவர் கேட்டார்: ‘தாங்கள் தற்போது நலமா?’ என. அந்த மிகச் சாதாரனமான கேள்வி அந்த அனுபவ நிழலில் அனைவரது தொண்டைகளையும் அடைத்து கண்களில் நீர் முட்ட வைக்க போதுமானதாக இருந்தது. ‘என்னை உடைத்து விட்டார்கள்’ என்பதையும் அந்த உயிர் கனத்த பொழுதில் அவர் பதிவிட்டார்.
இத்தகைய சமகால அநீதியைக் காட்சிப்படுத்தும் வேறு எந்த நிகழ்வையும் ICA போன்ற பெரும் தளங்களில் நான் இதுவரை பார்த்ததில்லை. புரட்சிர இடதுசாரிகளின் மேடைகளில் மட்டும்தான் அதற்கான சந்தர்ப்பங்கள் இருந்து வந்திருக்கிறது. இந்த நிகழ்வின் அரசியலோடு ஒட்டுமொத்த உடன்பாடு சாத்தியமில்லாத போதும் – அதன் வீரியத்தை ஒருசொட்டும் குறைத்துக் காட்டிவிட முடியாது. டோட்டனத்தின் தற்போதைய ‘கறுப்பு பாராளுமன்ற உறுப்பினராக’ இருக்கும் டேவிட் லாமியின் வலதுசாரியமும் இங்கு வறட்டி வறட்டி எடுக்கப்பட்டது. ஆழும் கட்சியான டோரி கட்சி புரட்டி எடுக்கப்பட்டது. ‘கறுப்பர்களின்’ போராட்டம் – நிறவெறிக்கு எதிரான போராட்டம் , எவ்வாறு அரசுக்கு எதிராக – டோரிகளுக்கு எதிராக இருக்கிறது – அது எவ்வாறு இடதுசாரியம் நோக்கிச் சரிய வேண்டி இருக்கிறது – என்பதை இந்த நிகழ்வில் கலந்துகொள்பவர்கள் புரிந்துகொள்ளமுடியும். டோட்டனம் செயற்பாடாலர்களை உள்வாங்க பதவிகள் – விருதுகள் என பல வேலைககளை அரசு செய்து வருகிறது. அவ்வாறு உள்வாங்கப்பட்ட ஒருவர் நிகழ்வில் கலந்து கொள்ள மறுத்து விட்டார். காட்சிப்படுத்தப் பட்டிருந்த அவர் சார் ஒரு படத்தை பார்வையாளர்கள் முன் களட்டி நிலத்தில் எறிந்து உடைத்தார் ஸ்கொட். தற்போது பொலீசார் முன்னெடுத்துவரும் ஆவணப்படுத்தல் மற்றும் வேவு பார்த்தல் எவ்வாறு நிறவெறி கொண்டதாக இருக்கிறது என்பது சிறப்பகாக காட்சிப்படுத்தப்படும் நிகழ்வு இது.
மிகப் பழைய கலைக்கொள்கை – கலை முறைமை மரபுக்குள் நின்று உழல்வதை இந்த நிகழ்வு உடைத்து எறிந்துள்ளது. எமது யதார்த்தம் எது – அது எவ்வாறு ஆதிக்க பார்வையில் இருந்து மாறுபடுகிறது – அதன் உண்மை எவ்வாறு கலையாகிறது என்பதை இந்தக் காட்சிப்படுத்தல் சிறப்பாக எடுத்துக் காட்டுகிறது. அரசியற் கலை என்ன என்பதை அறிவதாயின் சென்று பாருங்கள்.இது கலையே இல்லை –இதை ஏன் ICA யில் வைத்திருக்கிறார்கள் என்ற புரளியும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. எது கலை என்பதை யார் தீர்மானிப்பது என அவர்களை நோக்கி நாம் கேட்கவேண்டி இருக்கிறது. ‘புரட்சிகர’ கலைஞர்களாக – பாவனை செய்யும் பல மிதவாத மடமைகள் இந்த நிகழ்வை பார்ததாவது திருந்த வேண்டும்.
3
குறிப்பு: இந்த நிகழவைப் பார்க்க இலவச டிக்கட் தந்துதவிய ICAக்கு நன்றி. நான் எழுதிய லண்டன்காரர் குறுநாவலில் வரும் பகுதிகள் பல டோட்டனம் புரோட்வாட்ட பாம் வீடுகளையும் இடத்தையும் ஒட்டியதே. இது தவிர டேவிட் லாமி மற்றும் பலரது கீழ்மைகளும் அந்த குறுங்கதையில் பதிவாகி உள்ளது. இந்த நிகழ்வை பார்த்தவர்கள் அந்த நாவலை வேறு மாதிரி புரிந்து கொள்ள வாய்ப்புண்டு.
லண்டன் கலவரம் பற்றிய இந்தக் கட்டுரையையும் படிக்கவும்.:
What caused the London riots?