மதம் பற்றிய புதுக் கதைகள்
-நன்றி :எதிர் இதழ் – மற்றும் -கீற்று பிப்ரவரி 2008
அண்மையில் வெளியான Richard Dawkins -ன் The God Delusion – கடவுள் என்ற மாயம் – புத்தகத்தை முன்வைத்து மதம் பற்றி கதைத்தல்.
ஊறுருப்பட்ட அடையாளங்களின் உலகளாவிய உரையாடல் பெருமளவு நடக்கும் காலகட்டமிது. இந்த தருனத்தில் மதம் பற்றி பேசும்பொழுது எம் பார்வையை குறிப்பிட்ட சில அடையாளங்களுக்குள் குறுக்கிக்கொண்டால் கருத்தியல் ரீதியான பிழைகள் ஏற்பட வாய்ப்புண்டு. அதேசமயம் சில தனித்துவமான கலாச்சாரங்களும், அடையாளங்களும் ஏற்படுத்தும் வன்முறைகளையும் அதன் பண்புகளையும் உலகளவில் பொதுமைப்படுத்தி பார்க்கமுடியாது.
இதன் காரணமாக நாம் இங்கு எந்த ஒரு மையப்புள்ளியையும் சார்ந்து இயங்காமல் எமது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள முயன்றுள்ளோம். அதனால் மதம் என்று சொல்லி வைக்கும் கருத்தை இந்துத்துவம் இஸ்லாம் என்று வலிந்து கணிப்பதோ அல்லது இந்துத்துவம் இஸ்லாம் பற்றி வைக்கும் கருத்துக்களை மதம் சார்ந்து புரிந்து கொள்வதோ தவறான புரிதலுக்கே இட்டுச் செல்லும்.
உலகளவில் பலமாக கட்டமைக்கப்பட்ட ஒரு அடையாளமாக இருக்கிறது மதம். ஏறத்தாழ ஆறு பில்லியன் உலக சனத்தொகையில் ஐந்து பில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் ஏதோ ஒரு வழியில் தம்மை மதத்துடன் அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். அதாவது உலக சனத்தொகையின் மிகப் பெரும்பான்மையான மக்கள் ஏதோ ஒரு வகையில் தம்மை மதத்துடன் அடையாளப்படுத்துகிறார்கள்.
மதம் சார்ந்த – மதம் பற்றி கோடிக்கணக்கான புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. எல்லா மதங்களும் வளர்ச்சியடைந்து கொண்டிருப்பதாகவே தகவல்கள் சொல்கின்றன. அமெரிக்க மேற்குலக கிறித்தவ வலதுசாரிகளுக்கும் இஸ்லாமிய வலதுசாரிகளுக்கும் இடையிலான மோதல் உலகளவில் மும்முரமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்தப் பின்னணியில் மதம் பற்றிய பார்வையை ஒரு சிறு கட்டுரைக்குள் அடக்கிவிட முடியாது. இருப்பினும் டாக்கின்சின் புத்தகத்தை முன்வைத்து சில கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்வோம்.
பல்கலைக்கழகங்களில் ‘சமூக விஞ்ஞானம்’ என்ற போர்வையில் புகட்டப்படும் கருத்துக்களும் தனித்தியங்கும் ‘சமூக விஞ்ஞானிகளாக’ தம்மைத் தாமே அறிவித்துக் கொண்டவர்களின் கருத்துக்களும் ‘விஞ்ஞானம்’ என்ற போர்வையிட்டு கேள்விக்கு அப்பாலாகி தத்துவார்த்த சந்தேகங்களில் இருந்து தப்ப முயற்சிக்கின்றன. மேற்சொன்னவகை விஞ்ஞானங்களுக்குப் பின்னால் பல்வேறுவகை அரசியல் நோக்கங்கள் இயங்குகின்றன.
இவற்றில் முக்கியமாக கவணத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியவர் ரிச்சர்ட் டாக்கின்ஸ் (Richard Dawkins). ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக பேராசிரியரான இவர் (Chair for the Public Understanding of Science ) உலகின் தலையாய புத்தி ஜீவிகளில் ஒருவராக கருதப்படுகிறார். உயிரியல் பரிணாமவியலாளரான ரிச்சர்ட் டாக்கின்ஸ் மீம் (meme) என்ற புதிய கருத்தை உருவாக்கி மீமட்டிக்ஸ் (memetics) என்ற புதிய துறை உருவாக காரணமானவர்.
இவரது மதம் பற்றிய கருத்துக்கள் உலகப் புகழ் பெற்றவை. அண்மையில் இவர் ‘கடவுள் என்ற மாயம்’ (The God Delusion) என்ற புத்தகத்தை வெளியிட்டு மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். இப்புத்தகத்தின் முன்னுரையில் மத நம்பிக்கையை அடித்து நொறுக்கப் போவதாக குறிப்பிட்டிருந்தார். இப்புத்தகத்தை படிக்கும் மதசார்பானவர்கள் படித்து முடித்தபின் கடவுள் எதிர்ப்பாளராக மாறுவார்கள் என்று தம்பட்டம் அடித்திருந்தார்! விஞ்ஞானத்தின் மேலான அவரது ‘நம்பிக்கை’ அப்படி.
அனைத்து விஞ்ஞான பூர்வ ஆய்வுகளுக்கும் வரலாறு உண்டு. டார்வின் பரிணாமவியலை அறிமுகப்படுத்திய பின்பு வரலாற்றுக்கு ஒரு புதிய அர்த்தம் பிறந்தது. தமது சமகால ஆய்வுகளை வேகமாக உள்வாங்கிய பொருள் முதல்வாதிகள் வரலாற்று பொருள் முதல்வாதம் என்ற விஞ்ஞான முறையை முன் வைத்தார்கள். ஸ்டாலினியத்திற்கெதிரான பனியுத்தத்தின் பெயரில் மேற்குலக சிந்தனையாளர்கள் இம்முறையை ஒதுக்கி ஓரங்கட்டினர். உலகெங்கும் ஸ்டாலினிஸ்டுகள் மார்க்சியத்தின் பெயரில் இயங்கியலுக்கும் வரலாற்றுப் பொருள் முதல் வாதத்திற்கும் உலைவைத்து இதற்கு உதவியது. இயங்கியல் சார்ந்து உருவான புரிதல்களை உள்ளெடுத்து-சிலசமயம் களவெடுத்து பல்வேறு மேற்குலக அறிஞர்கள் புகழ்பெற்றனர். (இதுபற்றிய விரிவான ஆய்வை இன்னுமொரு இடத்தில் பார்ப்போம்).
இதன் காரணமாக பலரும் வரலாறு, பரிணாமம் என்ற கருத்துக்களை வெற்றிகரமாக குழப்பினர். வரலாறு பரிணாமாகவும், பரிணாமம் வரலாறாகவும்? தவறாக புரியப்பட்டு பல்வேறு விஞ்ஞான முறைகள் எழுந்தன. பரினாம வளர்ச்சியின் அடுத்த கட்டத்திற்கும் வரலாற்றின் அடுத்த கட்டத்திற்கும் வித்தியாசமில்லை என்று இவர்கள் ஆய்வுகள் கூறின. டாக்கின்சும் இவவகை சிந்தனையாளர்களில் ஒருவர். இருப்பினும் டாக்கின்ஸ் இவ்வகை சிந்தனையாளர்களில் தனித்துவமானவர். முக்கியமாக கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியவர்.
தனித்துவமான திறமையான அறிஞர் என்ற காரணத்துக்காக அன்றி – அவருடைய ஜனரஞ்சக எழுத்து வன்மைக்காக மட்டுமன்றி – தான் வைக்கும் கருத்தை மற்றயவர்கள் போல் பூசி மெழுகாமல் மதத்தின் தலைவர்களுக்கும் அதன் உபகரணங்களுக்கும் இரக்கமின்றி அடிபோடுவது மட்டுமின்றி – மதத்துக்கெதிரான தொடர் பிரச்சார நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுவதற்காக நாம் டாக்கின்சை பாராட்டித்தான் ஆகவேண்டும். இவரது இந்த நடவடிக்கை பலம் வாய்ந்த மத நிறுவனங்களுக்கும் ‘நிறுவப்பட்ட புத்தி ஜீவிகளுக்கும்’ எதிராக அவரை நிறுத்தியுள்ளது. இந்த மாதிரி சிக்கலான முரண்பாட்டை தவிர்ப்பதற்காக இப்படிப்பட்ட பல்கலைக்கழக புத்தி ஜீவிகள் தம் சக புத்தி ஜீவிகளுடன் சமரசத்துக்கு வந்து நேரடித் தாக்குதலை தவிர்ப்பர். கருத்து ரீதியில் தத்துவார்த்த ரீதியில் தமது வேறுபட்ட கருத்துக்களை கஷ்டமான வசனங்களுக்குள் புதைப்பர். டாக்கின்ஸ் இவர்களில் இருந்து மாறுபட்டவராக தமது சக பயணிகள் என்ற சமரசத்தில் இறங்காமல் இவர்களை பெயர் ஊரோடு “பேர்சனலாக” விளாசித் தள்ளுவது மதிக்கப்பட வேண்டியதே.
ஆதிக்க சக்திகளுக்கு எதிராக டாக்கின்ஸ் இயங்குகிறார் என்று நாம் கூறுவதாக தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள். இவரது ஆதிக்க சக்திகளுடனான சமரசம் சமூகம் பற்றிய தெளிவான புரிதலின்மையால்- இவரது தத்துவார்த்த குறைபாட்டில் இருந்து பிறக்கிறது. இது அவரது சமூக பொருளாதார அந்தஸ்துக்கு உதவுவதாக இருப்பதும் – இந்த அந்தஸ்து அவரது கருத்துருவாக்கத்தை கடுமையாக பாதிப்பதும் நிச்சயமாக கவனத்தில் எடுக்கப்படவேண்டியதே. மத நிறுவனங்களின் மேலான அவரது தாக்குதலை வரவேற்று அவரது “விஞ்ஞான” முறை என்ற போர்வையில் சுற்றித்தரப்படும் மதம் பற்றிய அணுகுமுறையைப் பார்ப்போம்.
மதமும் மீமியலும்
மீம், மற்றும் மீமியல் பற்றிய முழு விளக்கத்தையும் இங்கு குறுக்கித்தர முடியாது. இருப்பினும் மதத்தை டாக்கின்ஸ் அணுகும் முறையை தெரிந்து கொள்ள வேண்டுமானால் சில மீமியலின் அடிப்படைகளை தெரிந்தே ஆகவேண்டும். மீம் (meme) என்றால் கலாச்சார பரப்பல் அலகு. (Unit of Cultural Transmission) இங்கு அலகு என்று குறிப்பிடுவது எந்த கருத்தாக்கமாகவும் இருக்கலாம். குறிப்பிட்ட சிந்தனை முறை, கலாச்சாரம், பல்வேறு நம்பிக்கைகள் என்று மீம் அலகுகள் உலக கலாச்சார வெளியில் எதுவாகவும் இருக்கலாம்.
இந்த அலகு எவ்வாறு மனிதர்களுக்கிடையில் பரிமாற்றம் அடைகிறது அதாவது எவ்வாறு பிரதி (Replication) செய்கிறது, பரவுகிறது, பரிணாமமடைகிறது என்ற முறைகளை மீமியல் ஆய்வு செய்கிறது. எவ்வாறு மீம் பரிணாமம் அடைகிறது என்ற கேள்வி எழுந்தவுடன், பரிணாமத்தை விளக்கும் இனமரபியில் உத்திகள் உடனடியாக தருவிக்கப்படுகின்றன. வல்லது வாழும் போன்ற டார்வீனிய முறைகளையே மீமியல் பரிணாமத்திற்கும் உபயோகப்படுத்துகின்றனர்.
பரிணாமம் பல்வேறு வகைப்படும். மரபணு (Gene) அடிப்படையிலான பரிணாமம் ஒருவகை பரிணாமம் மட்டுமே. அதன்படி மனித கலாச்சார வளர்ச்சி முறைகளை விளக்க முடியாது என்று கூறும் டாக்கின்ஸ் அவற்றை விளக்க புதியவகை பரிணாம முறையாக மீம் அடிப்படையிலான பரினாம முறையை அறிமுகப்படுத்தினார். சில மீம்கள் மிக வேகமாகவும் நீண்ட காலத்துக்கும் பரவக்கூடியன. சில தோன்றி வெகு விரைவில் மடிந்து போகின்றன. தன்னைத்தானே வேகமாக பிரதி செய்யும் மீம் வெற்றியடைந்த மீம்மாக நிலைபெறுகிறது. ஒரு மீம் தன்னை மீண்டும் பிரதி செய்யும் தன்மை பல்வேறு காரணிகளில் தங்கியிருக்கிறது என்று கூறும் டாக்கின்ஸ் சில முக்கியமான காரணங்களாக பின்வருவனவற்றை முன்வைக்கிறார்.
வெற்றியடையும் மீம்கள் நேரடிக் கவணத்தை ஈர்ப்பனவாக இருக்கின்றன அல்லது தம்போன்ற மற்றய மீம்கள் மத்தியில் (ஏற்கனவே அதிகளவு பிரதிசெய்யும் மற்றய மீம்கள் மத்தியில்) சென்று இவை மேலும் அதிகமாக பெருகுகின்றன. இதன் மூலம் தமக்குள் உதவிசெய்யும் மீம்கள் மேலும் அதிகமான பிரதிகளை உருவாக்குகின்றன. இவ்வாறு கலாச்சாரத்தை ஆட்டிப்படைக்கும் ஆழமையான மீம்கள் உருவாகின்றன. இதேபோல்தான் மதக் கருத்துக்கள் பெருகி முதன்மைப்பட்டன. வெவ்வேறுபட்ட மதக்கருத்துக்கள் ஏற்கனவே உருவாகியிருக்கும் பல்வேறுபட்ட மீம்தொகைகளுடன் (Memeplexes) ஒத்ததாக அல்லது தொடர்புள்ளதுபோல் தோன்றுவதால் பிரதியாக்கம் அதிகளவில் நடக்கிறது.
உதாரணமாக ‘நீ உன் மரணத்தில் இருந்து தப்புவாய்’, ‘கடவுளின் மேலான நம்பிக்கை புனிதமானது’ போன்ற மதம்சார் மீம்கள் மீம்தொகையில் இலகுவான பிரதியாக்கத்தில் ஈடுபடக் கூடியனவாக வெற்றிபெறக்கூடியனவாக இருக்கின்றன. மீம் தொடர்பாடலில் திளைக்கும் வல்லமை பல மீம்களுக்கு உண்டு என்றாலும் சில மீம்கள் மற்றய மீம்களின் மத்தியில் மட்டுமே திளைக்கும் பிரதிசெய்யும். அதன்மூலம் அவை ஒரு மாற்று மீம் தொடர்பாடலை உருவாக்குகின்றன.
இதன்படி கத்தோலிக்க மதமும், இஸ்லாமும் மற்றைய மதங்களும் தனி நபர்களால் உருவாக்கப்பட்டவையல்ல. மாறாக மாற்று மீம் தொடர்பாடலாக அதிக பிரதியாக்கங்கள் அடைகின்றன. அதனால் இஸ்லாம் மத மீம்மும் கத்தோலிக்க மத மீம்மும் தொடர்பாடலில் தோல்வியுறும். அதாவது மாற்று மீம் தொகைகள் ஒனறுக்குள் ஒன்று வளர முடியாது. மதத்தோற்றத்தின் ஆரம்பகாலத்தில் மதம் சார்ந்த தனித்த மீம்கள் அவற்றின் சர்வதேச கவனிப்பால்-ஈர்ப்பால் மட்டுமே பிரதியாக்கம் பெற்றன. அதாவது இந்த மீம்கள் பொது ஈர்ப்பு (Universal appeal) கொண்டவையாக இருப்பதால் மீம் பிரதியாக்கம் பெற்றன.
நாளடைவில் எவ்வாறு மதம் அமைப்பு மயப்பட்டு இயங்கத் தொடங்கியது என்பதை மீம் தொடர்பாடலின் மூலம் விளங்கப்படுத்த முடியும் என்ற குறிப்பிடும் டாக்கின்ஸ் இதற்கு உதவியாக பாதிரிகளினதும், மதவாதிகளினதும் திரிபுபடுத்தும் வேலைகள் உதவியாக இருக்கின்றன என்பதை மறந்துவிடக்கூடாது என்று குறிப்பிடுகிறார். இவ்வகையில் மதம் ஒருவகை Intelligent Design என்று நகையாடும் அவர் மீமியல் தெரிவு (Memetic Selection) மதத்தின் வளர்ச்சியை தெளிவாக விளக்கும் என்று உறுதியாக கூறுகிறார்.
மீமியலின் பற்றாக்குறை
மதம் ஒரு கருத்தாக உருவாகிப் பரவவில்லை. கருத்துக்களும் நடவடிக்கைகளும் என்று அணுகுவது மிகவும் பிழையானது. மனித வாழ்க்கை வரலாறு உயிரியல் மட்டும் சார்ந்த ஒரு தனித்தியங்கி அல்ல. மாறாக அது பல்வேறு வகை புறவய காரணிகளின் பாதிப்புள்ளாகிய மனிதர்களுக்கிடையிலான மனித குழுக்களக்கிடையிலான உரையாடல். மீம்களின் ஒரு குறிப்பிட்ட கருத்து பொருள் பரவுவதன் மூலம் இவை நிர்ணயிக்கப்படுவதில்லை. மாறாக தேவை, குறிப்பாக அத்தியாவசியத் தேவைகளின் மூலமும் அதை நிவர்த்தி செய்து கொள்வதற்காக பல்வேறு புறக் காரணிகளுடன் நேரடி உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதன் மூலமும்தான் இவை தீர்மானிக்கப்படுகின்றன.
மதத்தின் தேவை பற்றி மீமியலின் மூலம் சிந்திப்பது சாத்தியமற்றது. மதத்தின் தோற்றம் பற்றி டாக்கின்ஸ் வைக்கும் கருத்து குழந்தைப்பிள்ளைத் தனமாக இருக்கிறது. முன்பொருநாள் பொது ஈர்ப்பு கொண்ட ஒரு கருத்து எழுந்தது. பின்பு அந்த ஈர்ப்பின் காரணமாக அது பற்றிப் பரந்தது என்று கதை எழுதுவது விஞ்ஞான முறை அல்ல. இன்று பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள் முன்வைக்கும் கல்விமுறையும் இவற்றுக்கு பின்னால் இயங்கும் ஆதிக்க அரசியல் பின்னணிகளுமே இப்படியான விதண்டாவாதங்களை விஞ்ஞான மயப்படுத்த காரணமாயிருக்கின்றன.
இன்றைய உலகப் பிரச்சினைகளுக்கான காரணங்கள் என்ன? சமுதாய ஏற்றத் தாழ்வுக்கான காரணங்கள் என்ன? அவற்றை எவ்வாறு தீர்த்துவைக்க முடியும்? ஏன் முட்டாள்தனமாக மதத்தின் பெயரில் ஒடுக்குமுறைகளும் சுரண்டலும் நடக்கிறது? போன்ற புறக்காரணிகள் சம்மந்தப்பட்ட கேள்விகளுக்கு டாக்கின்ஸிடமோ மீமியல்வாதிகளிடமோ தெளிவான விளக்கம் இல்லை. தகவல் பரிமாற்றம் தகவல் பரிணாமம் என்ற குறிப்பிட்ட துறையை இவர்கள் கலாச்சாரத்திற்கு பன்முகப்படுத்தி வாசிக்க முயல்வது பெரும் தோல்வியையே தழுவுகிறது.
உதாரணமாக அயர்லாந்தில் காலம் காலமாக முரண்பட்டு நிற்கும் கத்தோலிக்க புரட்டஸ்டான்ட் மக்களின் அமைதிக்கு டாக்கின்ஸ் முன்வைக்கும் தீர்வு கேலிக்கிடமானது. கலப்புப் பாடசாலைகளை உருவாக்கினால் ஒரு சந்ததிக்குள் எல்லாம் மறக்கப்பட்டு அமைதி வந்துவிடும் என்று கருதுகிறார் அவர். சமூகப் பிரச்சினைகளை எவ்வாறு அவர் மேலோட்டமாக பார்க்கிறார் என்பதைகாட்ட இது ஒரு நல்ல உதாரணம்.
பொஸ்னியாவில் நடந்த சேர்பிய அரசின் ஆதிக்க சக்திகளின் இன அழிப்பு நடவடிக்கை இன அழிப்பல்ல. அது மதம் சார்ந்த மத அழிப்பு என்று கருதும் டாக்கின்ஸ் இன்று ஈராக்கில் சியா, சென்னி மதங்களுக்கிடையிலான யுத்தமும், மதச்சுத்திகரிப்பு நடவடிக்கையே என்று இலகுபடுத்துகிறார்.
பல மதத்தைச் சேர்ந்த ஈராக் மக்கள் ஒரே பாடசாலையில் படித்ததும், அங்கு தொடர்ந்து மதக் கலப்பு திருமணங்கள் நடந்ததும் பற்றி டாக்கின்ஸ் கவனத்திற்கு கொடுக்கவில்லை. அயர்லாந்தில் வேலை செய்யக்கூடிய உத்தி ஈராக்கில் பலமிழந்தது ஏன் என்று விளங்கவில்லை. இந்தப் பிரச்சினைகளுக்கு பின்னால் இருக்கும் அரசியலை ஒழித்து வைக்கவே டாக்கின்ஸின் மதம்சார் அணுகுமுறை உதவுகிறது. ஐரோப்பிய மையவாதம் பற்றி பல இடங்களில் விளாசும் டாக்கின்ஸ் இஸ்லாம் என்று வந்தவுடன் தானும் ஐரோப்பிய மைய வாதத்திற்கு தாவுகிறார். கடந்த வருடம் (2006 மார்ச்) Jyllands-Postan என்ற டென்மார்க் பத்திரிகை முகமது பற்றிய 12 கேலிச் சித்திரங்களை வெளியிட்டது. இது உலகளவில் முஸ்லிம்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை உண்டுபண்ணியது.
இதை எவ்வாறு சில வலதுசாரி இமாம்கள் ‘வெறுப்பை’ தூண்ட மேலும் பயன்படுத்தினார்கள் என்று சரியானபடி சுட்டிக்காட்டும் டாக்கின்ஸ் டென்மார்க் அரசு இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற முஸ்லிம் மக்கள் கோரிக்கையை கேலிப்படுத்தி நிராகரிக்கிறார். எதற்காக மன்னிப்பு கேட்கவேண்டும்? அரசா இந்த காட்டூன்களை வரைந்தது அல்லது வெளியிட்டது? டென்மார்க் மக்கள் பத்திரிக்கை சுதந்திரம் உள்ள நாட்டில் வாழ்கிறார்கள். இது இஸ்லாமிய நாடுகளில் இருப்பவர்களுக்கு புரிவது கடினமாகத்தான் இருக்கும் என்று ஒரு போடு போடுகிறார். இந்த கேலிச்சித்திரங்களை வெளியிட்ட பத்திரிகை அரசின் பத்திரிகை என்பது மட்டுமல்ல இதற்கு எதிர்ப்பு மேற்கத்திய நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் மத்தியிலேயே முதலில் எழுந்தது என்பதும் டாக்கின்சுக்கு நன்றாகத் தெரியும். அப்படியிருந்தும் டென்மார்க் அரசை வாஞ்சையுடன் ஆதரிப்பதற்கு பின்னால் இருக்கும் அரசியல் என்ன என்று எமக்கு தெரியும். இதற்கு ‘மத எதிர்ப்பு’ என்ற போர்வை போதாது. இதற்கு பின்னால் இருக்கும் ஐரோப்பிய மையவாதமும் இன மையவாதமும் வெளிச்சமாக தெரிகிறது.
இந்தியாவை ஒரு மதச்சார்பற்ற நாடாக மாற்ற முன்னின்றதற்காக காந்தியையும், நேருவையும் பாராட்டி எழுதும் டாக்கின்ஸ் இந்தியா, பாகிஸ்தான் உடைவையோ, அந்த உடைவில் ஓடிய இரத்த வெள்ளத்தையோ அல்லது இன்று மதத்தின் பெயரில் நடக்கும் கொடூரத்தையோ, வர்ணாசிரமம் வளர்த்த அரசையோ விமர்சிக்கத் தவறுகிறார். அவரது மேலோட்டமான பார்வைக்கும் எழுந்தமானமாக வைக்கும் கருத்துக்களுக்கும் இவை நல்ல உதாரணங்கள். அவர் தானே முன்னுரையில் கூறுவதுபோல் கிறிஸ்தவம் தாண்டி மற்றய மதங்கள் பற்றிய ஆழமான அறிவு அவருக்கில்லை. (அவரை உலகின் மிகப் பெறும் புத்தி ஜீவியில் ஒருவராக நிறுத்தி வைத்திருக்கிறது பல மேற்கத்திய கணிப்பீடுகள் என்பதை இங்கு கவனிக்கவும்)
இஸ்லாமிய நாடுகளில் வாழும் மக்களிற்கு பத்திரிகை சுதந்திரம் பற்றி தெரிந்திருக்காது என்று தெரிவிக்கும் அவர் தெனாவெட்டுக்கு காரணம் அறிவு போதாக்குறை மட்டுமல்ல. இன்றய காலகட்டத்தில் – முஸ்லிம்களுக்கு மேலான மோசமான வலதுசாரி தாக்குதல் நடந்து கொண்டிருக்கும் இன்றய காலகட்டத்தில்- இவர் எந்த அரசியலின் பின்னால் நிற்கிறார் என்பதை இவை எமக்கு தெரிவிக்கின்றன. ஏன் முஸ்லிம்கள்மேல் தாக்குதல் நிகழ்கிறது என்றோ, எண்ணை வியாபாரிகளின் போட்டி பற்றியோ டாக்கின்ஸ் அதிகம் பேசமாட்டார். மதத்திற்கெதிராக தன்னை காட்டிக் கொண்டாலும் இந்த மதத்தை கருவியாக பாவிக்கும் அதிகாரத்திற்கு எதிராக தன்னை நிறுத்திக்கொள்ள அவர் தயாரில்லை.
இன்றைக்கு இயங்கிக் கொன்டிருக்கும் புத்திஜீவிகளின் பண்பே இதுதான். சமகாலத்து புத்திஜீவிகள் டாக்கின்சை விட கேவலமான முறையில் ஆதிக்க சக்திகளுக்கு அடிபணிந்து கிடக்கிறார்கள் என்பது எமக்கு தெரியும். டாக்கின்ஸ்மேல் நாம் வைக்கும் விமர்சனம் மற்ற வலதுசாரி புத்திஜீவிகளை காப்பாற்ற அல்ல. அல்லது மேரிமிட்சிலி (Mary Midgley) போல் மதத்தை காப்பாற்றும் நோக்கமும் நமக்கில்லை. கலாச்சாரம் பற்றியும் மொழிபற்றியும் டாக்கின்ஸ் வைக்கும் வாதங்கள் குறுகிய பார்வைக்கு இட்டுச்செல்லும் சாத்தியகூறு இருப்பினும் அவை முழமையாக மறுக்கப்பட கூடியவை அல்ல. அவற்றை முழமையாக தவிர்த்து மேரிமிட்சிலி போன்றவர்கள் வைக்கும் வாதங்கள் டாக்கின்சை விளங்காததாகவே தொணிக்கின்றன.
மொழியும் கலாச்சாரமும் சிறு அலகுகளாக பிரிக்கப்பட கூடியவை அல்ல. அவை ஒரு தொடர் ஒழுங்கு(continum) என்று டாக்கின்ஸ் மேல் சாடுகிறார் மேரி. டாக்கின்ஸ் மீம்மை ஒரு வழிமுறையாக அறிமுகப்படுத்துகிறார் அன்றி அதை ஒரு சிறு அலகு என்று குறுக்கவில்லை. கலாச்சாரம் போன்றவை சுருக்கி அறியப்பட முடியாதவை (Irreducible Complexity – IC) என்ற கருத்து பிழையானது எனக் கூறும் டாக்கின்ஸ் அறிதலின் சாத்தியத்தின்மேல் இது நம்பிக்கையின்மையை உருவாக்குவதை சுட்டிக்காட்டுகிறார். இயற்கையை விளங்கிக்கொள்வதற்கு எம்மிடம் இருக்கும் ஒரே சாதனம் விஞ்ஞானமே எனும் டாக்கின்சை எதிர்த்து மதத்துக்கான தேவையை வலியுறுத்துகிறார் மேரி. விஞ்ஞானத்திற்கும் அப்பாலான புரிதல் சாத்தியம் என்கிறார் அவர்.
மனித வளர்ச்சி முறையை விளங்கிக் கொள்வதற்கான விஞ்ஞான முறைகளின் போதாக்குறையால் பல்வேறுபட்ட பிழையான முடிவுகளுக்கு பலர் தாவுவதும். ‘மரபணு’ சார்ந்த புரிதலை மட்டும் முதன்மைபடுத்துவதும் தவறான நடவடிக்கைகள் என்று டாக்கின்ஸ் சுட்டிக்காட்டுவதை இங்கே கவனிக்க வேண்டும். மனித வளர்ச்சியின் பண்புகள் மிக சிக்கலானவை என்ற காரணத்திற்காக அவை மனிதரின் புரிதலுக்கு அப்பாற்பட்டவை அல்ல. டாக்கின்சால் சில வெளிச்சங்களை ஏற்படுத்த முடியுமானால் அது வரவேற்கப்பட வேண்டியதே. மேரியின் விஞ்ஞானத்திற்கப்பாலான புரிதலை விட இது முற்போக்கானதே.
கர்ல் பொப்பர் (Karl Popper) எது விஞ்ஞானம் என்ற கேள்வியை பிரபலப்படுத்திய பின் சமூகவியல் ஆய்வுகளுக்கு ‘விஞ்ஞானம்’ என்ற அடையாளத்தை தருவிக்க பலரும் வலிந்து பவுதீகமுறை விஞ்ஞான உத்திகளை சமூகவியலுக்கு தருவித்து புகுத்த முயலுவதாக கருதும் மேரி டாக்கின்ஸின் மீமியல் அதற்கு உதவுவதாக கூறுகிறார். இவர்கள் தமது தர்க்கங்களை பொளதீகவியல் தர்க்கங்களுக்கு ஒத்ததாக மாற்றியமைத்து விஞ்ஞானம் என்ற மாயத்தோற்றத்தை உண்டு பண்ண நினைப்பது தேவையற்றது என்று பொதுவான சரியான கருத்தை வைத்து சமூகவியலுக்குள் பண்மைத்துவத்துக்காக போராடுவதாக அடையாளப்படும் மேரி அதன் பகுதியாக பொப்பரை ஏற்று டாக்கின்ஸ்க்கு அடிபோட பார்க்கிறார். உண்மையை பொய்யோடு பிணைந்து ‘கலப்படமான உண்மை’ என்ற புனித புதிய கட்டுமானத்தை உருவாக்குவதாக அவரது கதை விரிகிறது.
கார்ல் பொப்பர் விஞ்ஞானம் பற்றியோ விஞ்ஞான முறை பற்றியோ எதுவிதமான ‘பவுதீக விஞ்ஞான பூர்வ’ நிறுவல்களையும் ஏற்படுத்தவில்லை. மார்க்சியம் விஞ்ஞான பூர்வமானதென்ற அனுகுமுறைக்கு எதிராக கிளம்பிய பல வாதங்கள் ஒழுங்குகளுக்குள் தலையாய குரல் பொப்பரது.
பவுதீக முறை அணுகுமுறை அல்லது ‘உண்மையான’ விஞ்ஞான முறை என்று மேரி கருதுவது எதை? நிறுவப்படக்கூடியது, பரிசோதனையின் மூலம் அறியப்படக்கூடியது, பாவனைக்கு உட்படக்கூடியது என்ற அடிப்படைகளில் வகுக்கப்படக்கூடியதுதான் விஞ்ஞானமாயின் பல புதிய ‘விஞ்ஞான’ கண்டுபிடிப்புகளை ஒதுக்கித்தள்ள வேண்டியதுதான். ஏன் ஜன்ஸ்டைன் கண்டுபிடிப்புக்கள் பலவற்றை கூட இந்த முறையில் ஒதுக்க முடியும். அதற்கான பல முயற்சிகள் முன்பு நடந்ததும் நாமறிவோம். FBI தலைமை அதன் அரக்க தலைவர் எட்கார் கூவர் – ஜன்ஸ்டைனின் சார்பியலையே மறுத்து நிறுவ பல முன்னனி விஞஞானிகளை தூண்டியதும் அதை தலைமேல் கொண்டு பல வலதுசாரி முண்ணனி விஞ்ஞானிகள் முக்கி முக்கி நேரம் விரயம் செய்ததும் இன்று அனைவரும் அறிந்ததே. ஜன்ஸ்டைன் சோசலிஸ்ட் என்ற ஒரே காரணத்தால் ஜன்ஸ்டைனுக்கு இக்கதி என்றால் மார்க்ஸை முடக்க இவர்கள் என்ன பாடுபடுவார்கள் என்பதை ஊகித்து கொள்ளுங்கள்.
டாக்கின்சுக்கு எதிரான புத்திஜீவிகளில் தெளிவான கருத்துக்களை வைப்பவராக குறிப்பிடத்தக்க சிந்தனையாளராக ஸ்டிபன் ரோசை குறிப்பிடலாம். தன்னை ஒரு மார்க்சியராக ரோஸ் கருதுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது. விஞ்ஞானிகள் அரசியல் கலாச்சார தாக்கத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்று கூறும் ஸ்டிபன் ரோஸ் வலதுசாரி அரசியல் நோக்கின் சிதறல்களாக டாக்கின்ஸ் போன்றவர்களின் தத்துவங்கள் பாவனை பெறுகின்றன என்ற அழுத்தமான கருத்தை வைக்கிறார்.
மனித இயல்பை அறிதலுக்கான சரியான அணுகுமுறை இயங்கியலிடம் மட்டுமே இருப்பதாக அடித்துக்கூறும் ரோஸ் டார்வினிய அடிப்படை வாதத்தை மறுக்கிறார். மரபணுவுக்கும் இயற்கைக்குமான தொடர்பாடலால் மட்டும் உயிரின் தோற்றமும் வளர்ச்சியும் தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக இயற்கையின் மத்தியில் உயிரின் செயற்பாடு இயக்கம் அதன் நடவடிக்கைகளை தீர்மானிக்கிறது. அதன்மூலம் உயிரியும் இயற்கையும் மாற்றத்திற்குள்ளாகிறது என்று விளக்குகிறார் அவர்.
ரோஸின் விஞ்ஞானம் பற்றிய பார்வை டாக்கின்ஸினதும் மேரியினதும் பார்வையில் இருந்து மாறுபட்டது. ரோஸ் போலி விஞ்ஞானங்களை விஞ்ஞானம் என்ற பெயரில் நடக்கும் திருகுதாளங்களை விமர்சிக்க, மேரியோ விஞ்ஞானத்திற்கு அப்பாலான புரிதலின் சாத்தியத்தின் அடிப்படையில் விஞ்ஞான முறைகளை கேழ்வி கேட்கிறார். டாக்கின்ஸ் கறாறான விஞ்ஞானத்தை முன்வைக்கிறார். அறிவுள்ள யாருக்கும் கடவுள் நம்பிக்கை இருக்காது என்ற Menza Magazine – ன் ஆய்வுகளை சுட்டிக்காட்டுகிறார் டாக்கின்ஸ்.
1927ம் ஆண்டில் இருந்து நிகழ்த்தப்பட்ட 43 கணிப்பீடுகளின்படி ஒருவருடைய அறிவு எவ்வளவுக்கு அதிகமாக இருக்கிறதோ (IQ) அவ்வளவுக்கு மத நம்பிக்கை குறைவாக இருக்கும் என்று சுட்டிக்காட்டி உலகின் முக்கால்வாசி மக்களை ஒதுக்கித்தள்ளும் டாக்கின்ஸை சார்ந்தும் எதிர்த்தும் பல்வேறு புத்திஜீவிகள் இயங்குகிறார்கள். இருப்பினும் ரோஸையும் மேரியையும் மட்டும் இங்கே குறிப்பிடுவதற்கு காரணம் அவர்கள் மாறுபட்ட குழுக்களில் முன்னணியில் இருப்பதும் அதற்குள் இருக்கும் இருவகை பாணியை இவர்கள் பிரதிநிதிப்படுத்துவதுமே ஆகும்.
மத எதிர்ப்பும் அதன் அவசியமும், மதம் எதிர்ப்பின் வரலாறாகவும்
‘மத எதிர்ப்பின்’ வரலாறு இன்றைக்கு நேற்று ஆரம்பித்ததல்ல. தொழிற்புரட்சிக்கு முன்பு கலாச்சாரம் பண்பாடு என்று மனித வரலாற்றுடன் பின்னிப்பிணைந்து குழமைப்படுத்தும் தலையாய பிசையாக மதம் பலப்பட்டு இருந்த காலத்தில் கூட அதற்கு எதிர்ப்பு இருந்து வந்தது. அக்காலத்தில் 1/3 பகுதி நிலம் கிறித்தவ ஆலயங்களுக்கு சொந்தமாக இருந்ததும் பல்வேறு மன்னர்களும் ஆளும் சக்திகளும் அவர்கள் கைவசம் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. ‘சமூக ஒழுக்கம்’, ‘கட்டுப்பாடு’ முதலான பொதுக்கருத்துக்கள், கலாச்சாரங்களின் சுரப்பிடமாக மதமே இருந்தது.
மதம் தன் கிறுக்குப்பிடியில் சமுதாயத்தை வைத்துக்கொள்ள முயன்ற அக்காலத்தில் கூட அதற்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு மதம் முன்வைத்த விளக்கம் எல்லா நேரமும் எடுபடவில்லை. அதன் ஒரு விளைவாக புதிய மதங்கள் எழுந்தன. இந்துத்துவத்துக்கு எதிராக எழுந்த புத்த சமண முறைகளை உதாரணமாக குறிப்பிடலாம். தொழிற்புரட்சி உந்தித் தள்ளிய வளர்ச்சிக்குப்பின் மதத்திற்கான எதிர்ப்பு மாற்றத்திற்கான தேவை பலமடைந்தது. நிலப்பிரபுத்துவத்தில் ஊறிய மதம் இதற்கு பலத்த எதிர்ப்பை கிளப்பியது. ஆனால் லாப நோக்கை முதன்மைப்படுத்திய முதலாளித்துவ வளர்ச்சி மதத்தை ஓரங்கட்டி வளர முயன்றது.
இதனால் கிறித்தவம் உட்பட பல மேற்கத்திய மதங்கள் மாற்றம் கண்டன. புது மதங்கள் உருவாகின. அதே சமயம் புதிய தலைமுறை சிந்தனையாளர்கள்- விஞ்ஞானிகள் பலரும் மதத்தின் அடிப்படை கருத்துகளை கேள்வி கேட்கத் தொடங்கினர். விஞ்ஞானம் கொஞ்சம் கொஞ்சமாக மதத்தின் பிடியில் இருந்து விடுபடதொடங்கியது. உலகம் தட்டை. வானத்தில் கடவுள் இருக்கிறார் போன்ற சின்னத்தனங்கள் உடைந்தன. உலகம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்ற மதத்தின் கருத்துக்கு எதிராக டார்வினிய உயிரியல் எழுந்தது.
இதன் பகுதியாக உருவான பெரிய மத எதிர்ப்பு தத்துவ ஞானியாக நீட்சேயை சொல்லலாம். ‘கடவுள் செத்துப்போன கதை உங்கள் காதில் விழவில்லையா’ என்று கத்திய நீட்சே மதத்திற்கு எதிராக வைத்த கருத்துக்கள் ஏராளம். இருப்பினும் மதத்தின் வளர்ச்சியை இந்த தத்தவ ஞானிகளால் மாற்றியமைக்க முடியவில்லை. மதம் வேகமாக தன்னை உருமாற்றிக் கொண்டது மட்டுமின்றி இந்த எதிர்ப்பாளர்கள் மாற்றத்திற்காக பெரிதாக எதுவும் செய்யவில்லை என்பதும் அதற்கு முக்கிய காரணம். இவர்கள் செய்ததெல்லாம் வெறும் பிரச்சார நடவடிக்கைகள் மட்டுமே. ஒரு மாற்றத்திற்கு உதவியாக இருக்கலாமே தவிர பிரச்சாரம் மட்டும் மாற்றத்தை கொண்டுவர முடியாது.
மார்க்சியமும் மத்திற்கெதிராக பலமான குரலை வைத்தது. இருப்பினும் இந்தக் குரல் மற்றயவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. கருத்து ரீதியால் வெல்வதால் மட்டும் மதத்தை நொறுக்கிவிடலாம் என்று மார்க்சியர் நம்பவில்லை. ஒடுக்கப்படும் மக்களின் ஒருவகை இளைப்பாறும் தளமாக மதம் இயங்குகிறது என்பதை சரியாக புரிந்து கொண்டதால் டாக்கின்ஸ் போன்று உலகின் பல பில்லியன் மக்களை ஒதுக்கித் தள்ளும் செயலை மார்க்சியர் செய்வதில்லை. மதம் இன்று ஏன், எங்கு முக்கிய செல்வாக்கு செலுத்துகிறது என்ற முக்கிய கேள்வியை கேட்டிருந்தால் புத்திஜீவிகளுக்கு மதம் பரவும் விதம் பற்றி ஒரு தெளிவு ஏற்பட்டிருக்கும்.
இன்றைக்கு ஏறத்தாழ 2 பில்லியனுக்கும் அதிகமானவர்கள் தங்களை கிறித்தவர்களாயும் 1.2 பில்லியனுக்கும் அதிகமானவர்கள் தங்களை முஸ்லிம்களாயும் அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். அதே சமயம் உலகின் மொத்த சனத்தொகையில் மூண்று பில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கிறார்கள். வறுமையான இடங்களில் ஆப்பிரிக்காவில், ஆசியாவில், தென்னமரிக்காவில் மதம் புற்றீசல்போல் பரவி வருகிறது. ஏகாதிபத்தியத்தின் கடும் தாக்குதலுக்கும் சுரண்டலுக்கும் உள்ளாகும் ஆசிய, ஆபிரிக்க, அரேபிய நாடுகளின் அரசமைப்பில் மதம் முக்கிய பங்கை வகிக்கிறது. (இந்நாடுகளில் நிலவும் நிலப்பிரபுத்துவத்தின் எச்சசொச்ச பொருளாதார கலாச்சார முறைகளும் இதற்கு இன்னுமொரு உதாரணம்).
மாற்று மதமாக இஸ்லாமிய அரசியலின் எழுச்சி நிகழ்கிறது. வளர்ச்சியடைந்த மேற்கத்திய நாடுகளில் மதத்தின்பிடி இளகியிருப்பினும் இங்கு வாழும் வெளிநாட்டு வேலையாட்கள் மத்தியில் மதம் மிகமிக வேகமாக பரவிவருகிறது. (US, UK இதற்கு நல்ல உதாரணங்கள்). இது ஒரு விபத்து அல்ல. எழுந்தமானமான நடவடிக்கை அல்ல. மதம் உட்பட சமூகம் சார்ந்த அறிவு சமூகத்தின் பொருளாதார கட்டமைப்பின் வெளிப்பாடாக இருக்கிறது. மதம் சார்ந்து இயங்கும் பெரும்பான்மை மக்கள் விஞ்ஞானத்திலும் ஏன் அசையாத நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்ற முரண்பாட்டை விளக்க, மதம், சார்ந்து இயங்கும் தளத்தை புரிந்து கொள்வது அவசியம்.
‘வறுமை இருந்தே ஆகும்’ –என்று வலியுறுத்தும் இன்றைய முதலாளித்துவ பொருளாதார வளர்ச்சி பெரும்பான்மை மக்களை ஓரங்கட்டியே நிகழ்கிறது. உலகின் முன்னணி 50 பில்லியனர்களின் சொத்து உலகின் முன்னனி 40க்கும் மேற்பட்ட நாடுகளின் சொத்திலும் அதிகமாக இருக்கிறது. 2 வீத பணக்காரர் 50 வீதத்திற்கும் மேற்பட்ட உலகின் சொத்துக்களை தம்வசம் வைத்துள்ளார்கள். 20 வீதத்திற்கும் மேற்பட்ட சாதாரண மக்கள் எந்தவித அரசியல் பொருளாதார உறவுமின்றி வறுமையில் வாடுகிறார்கள். இந்த இருபது வீத மக்களுக்கு எந்த நாசம் அழிவு ஏற்பட்டாலும் உலக பொருளாதாரத்தில் மாற்றமேதும் ஏற்படப் போவதில்லை.
தென் கிழக்காசிய சுனாமி, அமெரிக்க காற்றினா, முதலான இயற்கை அழிவுகளுக்கு உட்பட்ட மக்களும், நித்தம் வெள்ளத்தால் அழியும் பங்களாதேசிய மக்களும், மற்றும் மில்லியன் கணக்கில் எயிட்சாலும் வறுமையாலும் அழியும் ஆப்பிரிக்கர்களும் உலக பொருளாதாரத்தில் பெரிய செல்வாக்கற்றவர்கள். ஓரு பொறுக்கி சர்வதேச நிறுவனம் அழிந்தால் அல்லது ஒரு முன்னணி வங்கி விழுந்தால் பொருளாதாரத்தில் பூகம்பமே வெடிக்கும் என்பதை ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.
இந்த பொருளாதார முறை வறிய ஒடுக்கப்படும் மக்களின் கலாச்சாரத்தில் பாரிய தாக்கத்தை உண்டுபண்ணி நிற்கிறது. அவர்தம் அத்தியா அவசிய தேவைகள் மட்டுமின்றி அடையாளம், சமூக தொடர்பாடல் எதுவும் பூர்த்தி செய்யப்படாத நிலையில், இவர்கள் ‘அறுந்த மனிதர்கள்’ ஆக்கப்படுகிறார்கள். ஏகாதிபத்தியத்தால் முதலாளித்துவ பொருளாதாரத்தால் உடைக்கப்பட்டு சிதறிய கலாச்சாரத்தில் தடுமாறும் இந்த ‘அறுந்த மனிதர்கள்’ மனிதரின் இயற்கையான தேவைகளுக்கு சமூக தொடர்பாடலின் தேவைகளுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல! அதை அடைவதற்கு அவர்களுக்கு வழியில்லாத நிலையில் பலரும் மதத்திடம் தஞ்சம் புகுகிறார்கள்.
மேற்கத்திய நாடுகளில் புலம்பெயர்ந்த மக்கள் மத்தியில் கோவில்கள் ஒருவகை சமூகத் தொடர்பாடல் நிலையமாக விளங்கி வருகிறது. வறுமையில் வாடும் கறுப்பின, ஆசிய, அரேபிய இளவயதினர் தொடர்ந்து வறுமைக்கும் துவேசத்திற்கும் உள்ளாக்கப்பட்டு சட்டவிரோத நடவடிக்கைகளில் தூண்டப்படுவதை தவிர்க்க அவர்தம் பெற்றோர்கள் அவர்களை கோயில்களை நோக்கி துரத்துகின்றனர். தேசிய, இன, கலாச்சார அடையாளங்கள் அறுக்கப்பட்ட மனிதர்களுக்கு மதம் ஒரு அடையாளத்தை கொடுப்பதாக பாவனை எடுக்கிறது.
நாம் மேலே குறிப்பிட்ட, தம்மை மார்க்சியராக கருதும் ஸ்டீபன் ரோஸ் தனது மகனின் அடையாளம் பற்றிய கேள்வி எழுந்தவுடன் குழப்பமடைகிறார். தனது புத்திஜீவி மனைவியாருடனான ஆலோசனையின் பின் மகனுக்கு அடையாளம் கொடுப்பதற்காக பிரிஸ் (சுன்னத்து) செய்வித்தார். இது ஒரு மதம்சார் முட்டாள்தனமான நடவடிக்கை என்பது அவர்களுக்குத் தெரியும். இருப்பினும் யூத இன அடையாளத்தை இழந்து தமது மகன் அறுபட்டுபோகலாம் என்ற பயம் அவர்களை கவ்விக் கொண்டது.
இளைப்பாறும் குகையாக தோற்றமழிக்கும் மதம் ஒடுக்கப்படும் மக்களின் போராட்டத் தேவையை பின்போடுகிறது அல்லது மழுங்கடிக்கிறது. மக்களுக்கு போலியான போதையை வழங்கி அவர்கள் கிளர்ந்தெழுந்து தமது உரிமைகளை கோருவதை தவிர்க்கிறது. இதனால் மதம் ஆதிக்க ஆளும் வர்க்கத்தின் சிறந்த உபகரணமாக விளங்குகிறது. இஸ்லாம் பல அரபிய நாடுகளில் அரசியல் மதமாக விளங்குகிறது. அந்த அரசியல், ஏகாதிபத்திய ஒடுக்குமுறைக்கு எதிரான பாங்கால் அதிக செல்வாக்கை பெற்றுவருகிறது. இந்த ‘இஸ்லாமிய’ நாடுகளில் இருக்கும் வளத்தை கைப்பற்ற ஏகாதிபத்தியம் இஸ்லாமுக்கு எதிரான போரை தொடங்கியுள்ளது. இன்றைய பொருளாதார முறை உருவாக்கியுள்ள பல முரண்பாடுகளில் இதுவும் ஒன்று.
ஏகாதிபத்தியம் செய்யும் பொய்ப் பிரச்சாரங்களுக்கு சம்பந்தப்படாதது இந்த நாடுகளின் வரலாறு. ஈரான், சிரியா உட்பட அனைத்து நாடுகளிலும் முஸ்லிம் மக்கள் தமது விடுதலைக்காக கிளர்ந்து எழுந்துள்ளனர். இன்று லெபனானில் ‘கடவுளின் கட்சி’ என்று பெயர்கொண்ட இசபுல்லாவினதும், பாலஸ்தீனத்தில் கமாசினதும் நடவடிக்கைகளை நாம் அவதானிக்க வேண்டும். வர்க்க அரசியலை அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவித்துக் கொண்ட ‘கடவுளின் கட்சியில்’ இசபுல்லாவில் லெபனானின் இஸ்லாமியர் அல்லாத ஏனைய மதத்தை சேர்ந்தவர்களும் ஆயிரக்கணக்கில் இனைவதை நாம் கவனிக்க வேண்டும்.
எல்லா மதம்சார் இயக்கங்களும் சமூகம் சார்ந்தே இயங்குகின்றன. சமகால இஸ்லாமிய எதிர்ப்புக்கு எதிரான போர் ஏகாதிபத்தியத்துக்கும் எதிராக இருப்பதால் இசபுல்லா போன்ற இயக்கங்கள் லெபனானின் அனைத்து மக்களையும் உள்வாங்கக் கூடியதாக இருக்கிறது. இதேபோல் மதத்தின் தோற்றமும் சமூகம் சார்ந்ததே. பெரும்பான்மை மதங்களின் தோற்றம் ஒருவித சமூக புரட்சியாகவே நிகழ்ந்தது. மதத்தின் தோற்றத்திற்கு மீமியல் விளக்கம் தரும் டாக்கின்ஸ் மதம் பரவியது பற்றி மட்டுமே அதிகமாக பேசுகிறார் அன்றி ‘மதம்’ என்ற ‘கருத்து’ ‘மீம்’ என்பதற்கு சரியான விளக்கம் தரவில்லை.
அதே தருணம் மதம் பற்றிய அரசியல் விளக்கம் தனக்கு திருப்தி தருவதாக இல்லை என்று வர்க்கம் சார் விளக்கத்தை மறுக்கிறார். மதம் எப்படி ஒடுக்கும் கருவியாக அரசர்களாளும் மதத்தலைவர்களாளும், அரசியல்வாதிகளாளும் பயன்பட்டது பயன்படுகிறது என்பதற்கு இந்த அரசியல் விளக்கம் போதாது என்று கூறும் அவர் ‘மதம் பொல்லாத மதத்தலைவர்களாளும் ஆட்சியாளர்களாலும் வடிவமைக்கப்பட்டது என்ற வாதம் சுவாரஸ்யமான வாதம், அதை நாம் வரலாற்றாசிரியர்களுக்கு விடுவோம்’ என்று பிழையாக புரிந்து விளக்கி நழுவ முயல்கிறார். அவர் புரிந்து கொண்ட விதம் முற்றிலும் பிழையானது. அவர் கூறும் ‘அரசியல் விளக்கம்’ மதம் அடக்கு முறையாளர்களால் திட்டமிட்ட முறையில் கட்டமைக்கப்பட்டதென்று ஒருபோதும் சொல்லவில்லை.
எப்படி ஒரு சமூக கிளர்ச்சியாக எழுந்த கருத்து செயற்பாடு கிளர்ச்சி செய்த ஒடுக்கப்பட்டவர்கள் ஆயுதமாகவின்றி ஒடுக்கிய ஆதிக்க சக்தியின் உபகரணமாக மாறியது என்ற கேள்விக்கு பதிலளிக்க முடியாத நிலையிலேயே டாக்கின்ஸ் ஒதுங்கிக் கொள்கிறார். (தான் பிழை என்று கருதும் இக்கருத்தின் மேல் தமது வழமையான பாணியில் ஓங்கி அடிக்காமல் வரலாற்றாசிரியர்களுக்கு விட்டு ஒதுங்குவது இது பற்றிய அவரது குழப்பத்தையே காட்டுகிறது).
உற்பத்தி சக்திகளுக்கிடையிலான உறவில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக உருவான சமூக கிளர்ச்சியின் ஒரு வெளிப்பாடாக மதம் உருவானதே தவிர ‘மதத்தின்’ தோற்றத்தின் பின்பு கிளர்ச்சி உருவாகவில்லை. ஆக மத வெளிப்பாடு ஒரு காலத்தில் விடுதலை கருத்தியலாகவோ முற்போக்கு கருத்தியலாகவோ இருந்தாலும் அவை மக்களை ஒரு போதி போதையின் அடிப்படையில் ஒன்றிணைக்கும் கருத்தாகவே என்றும் இருந்தது. இதனால் கிளர்ச்சியை எதிர்கொண்ட ஆளும் வர்க்கத்திற்கு, மதத்தை கைப்பற்றியதன் மூலம் மக்களை எந்த பிரச்சினையுமற்று கட்டுப்படுத்த முடிந்தது. பின்பு மதம் நிர்வாகமயமாக்கப்பட்டதும் ஆளும் வர்க்கத்தின் முக்கிய ஒடுக்கும் கோலாகியதும் நிகழ்ந்தது. இவ்வாறு நாம் கூறும்போது ஏதோ இவை படிப்படியாக நிகழ்ந்தன அல்லது திட்டமிட்ட முறையில் உருவாக்கப்பட்டன என்று தவறாக அர்த்தம் கொள்ள வேண்டாம். மாறாக இதை இயங்கியல் முறையில் புரிந்து கொள்ள வேண்டும். புறக்காரணிகளால் உந்தப்பட்டு உருவான பல்வேறு கட்டமைப்புக்களில் மதத் தோற்றமும் வளர்ச்சியும் தவிர்க்க முடியாமல் நிகழ்ந்த ஒரு கட்டமைப்பு.
இதே தருணம், மதம் எல்லா தருணங்களிலும் ஆளும் வர்க்கத்தின் உபகரணமாகவே தொடர்ந்து இயங்கி வரும் என்ற கருத்துப்பிழை என்பதையும் நாம் இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும். குறுகிய வர்க்க நலன்களுக்காக மட்டுமே இயங்கும் ஆதிக்க சக்திகளுக்கு அவை துணை நிற்குமே அன்றி பெரும்பான்மை ‘மக்களின் ஆட்சிக்கு’ அவை துணை நிற்காது. அதாவது பெரும்பான்மை மக்களின் நலனுக்கான ஒரு பொருளாதார மாற்றம் நிகழும் பொழுது குறுகிய நோக்கம் கொண்ட மதத்தின் தேவை புறக்கணிக்கப்படும்.
வெனிசுலா நாட்டிற்கு எதிராக கடும் பிரச்சாரத்தில் இறங்கியுள்ள பாதிரிகளை இங்கு நினைவு கூறுவோம்! வெனிசுலா நாட்டு தலைவர் கூகோ சாவேஸை அமெரிக்க அரசு கொல்லவேண்டும் என்று அமெரிக்காவின் புகழ்பெற்ற பாதிரியார் கேட்டுக்கொண்டது எல்லாருக்கும் ஞாபகமிருக்கும். அரச மாற்றத்திற்காகவும் தனிநபர்களின் சொத்துக்களுக்காகவும் ‘போராடுவதாக’ சொல்லும் வெனிசுலாவின் கிறித்தவ கோயில்களும் அதன் பாதிரிமாரும் சாவாசை அரசியலில் இருந்து அறுக்க எதுவும் செய்ய தயாராக உள்ளார்கள். தலாய்லாமா, தெரேசா முதலானோர் நோபல் பரிசு பெற்று உலக பிரமுகர்களான பின்னனியும் இதுதான். இவ்வாறு பெரும்பான்மை மக்களின் நலனுக்கு எதிராகவே மதம் தொடர்ந்து இயங்கும். மக்களின் தேவைகள் சரியானபடி என்று பூர்த்தி செய்யப்படுகி;ன்றதோ அன்றே சரி மதத்தின் கதை. அதை சமகால மதத்தலைவர்களும் நன்றாகவே புரிந்து வைத்துள்ளார்கள்!
இன்றைய சூழலில் மதத்தை முற்று முழுதாக அழித்து விடுவது சாத்தியமில்லை. உண்மையில் மதத்திற்கான தேவை இல்லாமல் இருந்த போதும் மதத்தின் பாவனை நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. அனைத்து மக்களின் நலனுக்குமான புரட்சிகரமான சமூக மாற்றமே மதத்தின் தேவையின்மையை சரியானபடி உணர்த்தி அதன் பாவனையை இல்லாதொழிக்கும். இதை கூறியதன் மூலம் மதம் பற்றிய முழுமையான ‘சமூக பார்வையை’ நாம் வைத்திருகிறோம் என்று அர்த்தமில்லை. மதம்சார் புரட்சிகர சூழலும் இன்றய தருணத்தில் சாத்தியம் (இது முரண்பட்ட கருத்தல்ல. நாம் முன்பே கூறியபடி சிக்கலான சமூக உறவுகளின் தொடர்பாடலின் விளைவே இது).
ஊதாரணமாக இன்று இஸ்லாம் கிளர்ச்சிக்கு பயன்படக்கூடிய மதமாக இருக்கிறது. ஈரானிய புரட்சியின்போது நிகழ்ந்தது போல் பள்ளிவாசல்களுக்கூடாக புரட்சி வளர சாத்தியமுள்ளது. அதே தருணம் ஏகாதிபத்தியத்துடன் நெருங்கிய நட்பை பேணும் இந்துத்துவம் எதுவித புரட்சிகர பங்குமின்றி கடுமையாக எதிர்க்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது. மனித மூளையில் உருவாகும் இயற்கையின் பிரதிபலிப்பாக ‘கருத்துருவாக்கத்தை’ விளங்கி கொள்பவர்களுக்கு, எவ்வாறு புறக்காரணிகள் மாறும் பொழுது ‘கருத்து’ மாறிவிடுகிறது என்பது புரியும். ‘கருத்து’; தனித்தியங்க வல்லது அல்லது எல்லாக் காலங்களிலும் மாறாது இயங்கவல்லது போன்ற பார்வைகள் பிழையானவை.
டாக்கின்ஸ் சொல்லும் மீம்களின் குறைபாடும் இதுவே. ஒவ்வொரு காலகட்டத்திலும் தருணங்களிலும் நாம்தான் ‘கருத்துக்குள்’ அர்த்தத்தை தேவைக்கேற்றபடி திணிக்கிறோமே அன்றி அவை தனித்தியங்கி தாமாக மாற்றத்திற்குள்ளாகி ‘உயிர்ப்புடன்’ நடமாடவில்லை. உயிரியல் விளக்கத்தின் குறைபாடுகள் இங்கிருந்தே தொடங்குகிறது. இறுதியாக டாக்கின்சின் போக்கிரித்தனமொன்றை இங்கே சுட்டிக்காட்டாமல் இக்கட்டுரை நிறைவடையாது!! ஜன்ஸ்டைன் மதம் சார்ந்த அல்லது மதத்தில் முழுநம்பிக்கை வைத்திருந்த விஞ்ஞானியல்ல என்பதை நிறுவ பல பக்கங்களை விரயம் செய்யும் டாக்கின்ஸ் ஜன்ஸ்டைனின் அரசியல் சம்பந்தமாக ஒரு வார்த்ததை கூட குறிப்பிடவில்லை.
ஜன்ஸ்டைனின் தத்துவார்த்த அடிப்படை எங்கிருந்து வருகிறது என்பதை விளக்க, ‘ஏன் சோசலிசம்’ என்று சோசலிசத்தின் தேவை பற்றி ஜன்ஸ்டைன் எழுதிய கட்டுரைகளையோ அல்லது மர்க்சியத்துக்கு எதிராக அவர் முழு மூச்சாக போராடியதையோ குறிப்பிட்டாலே போதுமானதாக இருந்திருக்கும். மாறாக காலம் காலமாக ஆளும் வர்க்கம் பூசி மெழுகி புறக்கணித்து வரும் இந்த விஞ்ஞானியின் அரசியலை டாக்கின்சும் புறக்கணித்து அவரது கருத்துக்களை எமக்கு புரியவைக்க முயற்சிக்கிறார். இதுபோலவே மதம் பற்றி புகழ்பெற்ற கருத்துக்களை வைத்த மார்க்சைப்பற்றி ஒரு வரிகூட இல்லை. இந்த லட்சணத்தில் அவரது புத்தகத்தை படித்தவுடன் படிப்பவரின் மத நம்பிக்கை ஓடிப்போய்விடப்போகிறது என்று முன்னுரையில் அவர் அடிக்கும் தம்பட்டம் கேலிக்கிடமானதாகவே இருக்கிறது.