சம்மந்தன் ஐயாவின் மறைவு – ஒரு சகாப்த்தத்தின் முடிவு
சம்மந்தன் ஐயாவின் மறைவு – ஒரு சகாப்த்தத்தின் முடிவு
இராஜவரோதயம் சம்பந்தன் 30ம் திகதி யூன் மாதம் இயற்கை எய்தினார். தனது இறுதிக் காலத்தில் மிகவும் உடல்நலக் குறைவுடன் இருந்த அவர் அப்பொழுது கூட பல அரசியல் உரையாடல்களில் பங்கு பற்றிக்கொண்டிருந்தார். தனது 23 வயதில் இலங்கை தமிழரசுக் கட்சியில் இணைந்த சம்மந்தன் ஐயா 91ம் வயதில் மறையும் வரை தொடர்ந்து அரசியல் வெளியில் இயங்கி வந்தவர். இலங்கையின் அரசியல் சட்ட மாற்றம், இனக்கலவரங்கள், வட்டுக்கோட்டை மாநாடு, ஆயுத போராட்ட கால கட்டம், யுத்தக் கோரம், விடுதலைப் புலிகள் தலைமையில் ஒன்றுபட்ட அரசில் பிரதிநித்துவம் உருவாக்குதல், பின்பு புலிகள் படுகொலை செய்யப்பட்டு முறியடிக்கப்பட்ட பின் எழுந்த அரசியல் நெருக்கடிகள் என ஐயா பயணித்த அரசியல் கால கட்டங்கள் நீண்டவை – மிகச் செறிந்தவை.
சம்பந்தன் ஐயாவின் அரசியல் நிலைப்பாடு பல்வேறு முரண்கள் நிறைந்தவை – பல காரசாரமான விமர்சனங்களை எதிர்கொண்டவை. தமிழரசுக் கட்சிக்குள் வலதுசாரிய நிலைப்பாடுகள் கொண்ட ஒருவராக ஆரம்பித்த அவரது நிலைப்பாட்டில் இறக்கும் வரை பெரிய மாறங்கள் இருக்கவில்லை. பொருளாதார கொள்கை மற்றும் சமூக சனநாயக கொள்கை நிலைபாடுகள் பெரும்பாலும் வலது சாரிய கொள்கை சார்ந்ததாகவே இருந்து வந்திருக்கிறது. அப்பொழுது இருந்த தமிழரசுக் கட்சியின் ஏனைய தலைமைகளிடம் இருந்த அதே நிலைப்பாடுதான் சம்மந்தன் ஐயாவிடம் தொடர்ந்து வந்தது. இருப்பினும் தமிழ் தேசிய கோரிக்கை சார்ந்த அவரது நிலைப்பாடு குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு உள்ளாகி வந்ததை நாம் பார்க்க முடியும். ஜே ஆர் ஜெயவர்த்தனவின் இனவாத பாகுபடுத்தலின் பின் இலங்கை பாராளுமாற்றம் செல்ல மறுத்த பல தமிழ் பாராளுமற்ற உறுப்பினர்களில் ஐயாவும் ஒருவர். இருப்பினும் தீவிர சனாநாயக அல்லது தேசிய கோரிக்கையின் அடிப்படையில் அந்த முடிவை எடுத்தார் என்பதை விட கட்சியின் முடிவுக்கு கட்டுப்பட்டு இயங்கினார் என்றே கூற வேண்டும். அவர் ஒரு கட்சி மனிதன். தமிழரசுக் கட்சியின் – பின்பு தமிழர் விடுதலைக் கூட்டணியின் மிகுந்த விசுவாசியாக இயங்கியவர். கட்சி சார் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் விதம் அவரது பலமாக இருந்து வந்திருக்கிறது. எண்பதுகளின் கடைசிப் பகுதியில் இந்திய இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் புலிகளை நீக்கிய அரசியல் பிரதி நிதித்துவத்தை உருவாக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட பொழுது அதற்கான அதரவு நிலைப்பாட்டில் அந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டவர். இந்தக் காலப் பகுதியில் மற்றைய இயக்க தலைமைகள் செய்த தீவிர அராஜக நடவடிக்கைகளை அவர் ஆதரிக்கவில்லை. தமது கட்சி பாராளுமன்ற தேர்தலில் ஈடுபடுவது பற்றியே அவரது கவனம் இருந்தது. பாராளுமன்ற – அல்லது தேர்தல் அரசியல் தாண்டிய நடவடிக்கை, கொள்கை நோக்கி ஒருபோதும் அவர் நகரவில்லை. அவர் ஒரு பாராளுமன்ற அரசியல்வாதி.
புலிகள் மற்றைய இயக்கங்களை முடக்கி தடை செய்தபின் தமிழ் அரசியல் பிரதிநிதித்துவம் என்பதும் முடங்கி விட்டது. இந்தக் காலப் பகுதியில் எந்த ஒரு தமிழ் பாராளுமன்ற அரசியல்வாதியும் மக்களின் முழுமையான ஆதரவைத் திரட்ட முடியாத நிலையே இருந்தது. புலிகளின் ஆதரவு இன்றி எவரும் தமிழ் மக்களின் பரிதிநிதியாக முன் நிற்க முடியாத நிலையே இருந்தது. புலிகள் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து ஒரு உடன்படிக்கைக்கு வர முயன்ற காலப்பகுதியில் இருந்து புதிய காலகட்டம் ஆரம்பித்தது எனக் கூறுவது மிகையில்லை. இதன் பின்புதான் சம்மந்தன் ஐயாவின் தமிழ் பிரதிநித்துவ தலைமைக் காலம் ஆரம்பித்தது. புலிகளால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு ஆயுதக் குழுக்கள் இலங்கை அரசுடன் நெருக்கமாக (துணை இராணுவ படையாக) இயங்கி வந்தன. குறிப்பாக கிழக்கில் இந்த ஆயுதம் தாங்கிய குழுக்கள் மோசமான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்தன. இது தவிர சிறு கட்சிகளாக சுருங்கி நின்ற தமிழ் காங்கிரஸ் மற்றும் கூட்டணி மக்களின் ஆதரவை திரட்ட சக்தியற்றவையாக இருந்து வந்தன. இந்த நிலையில்தான் தமிழ் அரசியல் பிரதிநித்துவம் உருவாக்கும் நடவடிக்கையை முன்னெடுத்தனர் புலிகள்.
புலிகள் தமது அரசியற் பிரிவை இயக்கத்தின் வெளியே கொண்டுவந்து ஒரு அமைப்பாக நிறுத்தவில்லை. முற்றிலும் புதிய ஒரு கட்சியை கட்டும் நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மாறாக ஏற்கனவே பாராளுமன்ற தேர்தல் நடவடிக்கைகளில் பங்கு பற்றிக் கொண்டிருந்த சக்திகளை ஒன்றிணைத்து தமது கட்டுப்பாட்டில் இயங்க வைக்கும் நடவடிக்கையை முன்னெடுத்தனர். புலிகள் இதை நேரடியாகச் செய்யவில்லை. மாறாக மறைமுகமாக தங்களுடன் இயங்கிய நம்பத் தகுந்த சக்திகளை இந்த முயற்சியில் ஈடுபடுத்தினர். தராக்கி, அவருடன் நெருக்கமாக இயங்கிய கரிகாலன் போன்றவர்கள் பல பேச்சுவார்த்தைகளை வெளிப்படையாகவும் இரகசியமாகவும் நடத்தினர். எதிர் எதிர் திசையில் சிதறிக் கிடந்தவர்களை ஒன்றுபடுத்தி ஒரு குடையின் கீழ் கொண்டுவருவது என்பது மிகப்பெரும் சவால். புலிகள் தமது ஆயுத பலத்தின் அதிகாரம் இன்றி இதை சாதித்திருக்க முடியாது. தவிர புலிகளின் முற்றான ஆதரவுடன் தேர்தலில் நிற்பது என்பது பாராளுமன்ற பதவியை உறுதி செய்யும் என்ற நிலைப்பாடு பலருக்கும் பெரிய கவர்ச்சியை ஏற்படுத்தியது என்பதும் உண்மையே. இறுதியில் புலிகள் முன்வைத்த எல்லா கோரிக்கைகைகளையும் ஏற்றுக் கொண்ட புதிய கூட்டு – தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவானது. புலிகளுக்கு முழுமையான ஆதரவு – புலிகளுடன் நெருக்கமான தொடர்புடன் இயங்குவது என்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். இது ஒரு கொள்கை நிலைப்பாடு அல்ல – மாறாக தேர்தலில் நிற்பதற்காக அவர்கள் ஒன்றுபட்ட நிலைப்பாடு. ஆரம்பத்தில் இருந்தே கூட்டமைப்புக்குள் அடிபாடுகள் ஆரம்பித்து விட்டன. இந்த இடத்தில் சம்பந்தன் ஐயாவின் பங்கு முக்கியமானது. சிதறிய தலைகளை ஒரு குடைக்குள் இருத்தி வைக்கும் சாத்தியத்தை ஏற்படுத்தியதில் சம்பந்தன் ஐயாவின் பணி குறிப்பிடத்தக்கது. வயதில் மூத்தவர் என்பதால் மட்டுமின்றி, அவரளவுக்கு பாராளுமன்ற அரசியல் சார் அனுபவம் மிக்க வேறு யாரும் அன்று இருக்கவில்லை. புலிகளின் தலைமையுடன் நேரடியான உரையாடல் செய்வது அவர்களின் நம்பிக்கையை உள்வாங்குவது மற்ற இயக்க தலைவர்களுக்கு சாத்தியமான ஒன்றாக இருக்கவில்லை. சிதறியவர்கள் மத்தியில் சம்பந்தன் ஐயா ஒரு பசையாக இயங்கும் தன்மை கொண்டவராகினார்.
இக்கால கட்டம் – தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாகிய கால கட்டம் -தமிழர் அரசியல் பிரதி நிதித்துவம் சார் முக்கிய கால கட்டம். அதே சமயம் சம்மந்தன் ஐயாவின் மிகுதி வாழ்வை மாற்றிய முக்கிய காலகட்டம். கூட்டமைப்பின் அரசியல் கொள்கை புலிகள் இயக்கத்தின் தலைமையிடம் இருந்து வந்தது. தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையில் எந்த சமரசமும் இல்லாதிருத்தல் -ஒன்றுபட்ட தமிழர் பிரதேசம் என்ற நிலைப்பாடுகள் கூடமைப்பின் முக்கிய கொள்கை நிலைப்பாடாக முன்வைக்கப்பட்ட பொழுது அவற்றை முழுமையாக உள்வாங்கிக் கொண்டார் சம்மந்தன் ஐயா. சமாதானத்தைக் கோருதல் -சர்வதேச தலையீட்டுடன் தீர்வுக்கான பேச்சுவார்த்தையை ஆரம்பித்தல் ஆகிய நடவடிக்கைய முன்னெடுக்க அவர்கள் உடன்பட்டனர். சம்மந்தன் ஐயா தலைமையில் தேர்தலுக்கு சென்ற கூட்டமைப்பு முதல் தேர்தலிலேய குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்று – 15 ஆசனங்களை வென்று – முக்கியமான தமிழ் பிரதிநிதித்துவ அமைப்பாக மாறியது. கூட்டமைப்பின் தலைவராக பாராளுமன்றத்தில் சம்மந்தன் ஐயாவின் முதலாவது உரை தீவிரமான உரையாக இருந்தது. தமிழருக்கு நிரந்தரத் தீர்வு இல்லை என்றால் அடுத்த பாராளுமன்றத்துக்கு வரமாட்டோம் என அவர் அறிவித்தார். கூட்டமைப்பின் பா.உறுப்பினர்கள் ஒரு கூட்டாக இயங்க உடன்பட்டு இயங்கினர். இவர்களை ஒன்றாக இழுத்துச் செல்லும் நிர்வாகத்தை சம்மந்தன் ஐயாவை விட யாரால் செய்திருக்க முடியும் என தெரியவில்லை.
யுத்த முடிவின் பின்பு தமிழ் மக்களின் ஒற்றைத் தெரிவான அமைப்பாக கூட்டமைப்பு மாறியது. இக்கால கட்டத்தில் அதைச் சரியான கொள்கை உறுதியுடன் நடத்தும் தலைமையை வழங்க எவராலும் முடியவில்லை. இதனால் கூட்டமைப்பு சிதறுவதும் மக்களின் நம்பிக்கையை இழப்பதும் தவிர்க்க முடியாத ஒன்றாகிப் போனது. சம்மந்தன் ஐயாவின் பாரளுமன்ற அரசியல் முறையே இதற்கு காரணம். அமிர்தலிங்கத்தின் பின் மற்றும் ஒரு தமிழ் எதிர்கட்சி தலைவராக நியமிக்கப்பட்ட சம்மந்தன் ஐயா அக்கால கட்டத்தில் தீவிர கொள்கை நிலைப்பாட்டை முன்னெடுக்கவில்லை. ஒன்றுபட்ட இலங்கையின் கீழ் தீர்வு – மேற்கத்தேய அரச ஆதரவு மற்றும் இந்திய அரச ஆதரவை முதன்மை படுத்தியமை – போன்ற அவரது நிலைப்பாடுகள் தமிழ் அரசியல் பிரதி நிதித்துவத்தை தொய்வான நிலைக்கே எடுத்துச் சென்றது. ஆனால் இந்த நிலவரத்துக்கு சம்மந்தன் ஐயாவை மட்டும் குறை சொல்ல முடியாது. தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகள் என கூறிக்கொள்ளும் அனைவரும் கூட்டாக பொறுப்பெடுக்க வேண்டும்.
ஆறு தசாப்தங்கள் தாண்டிய அவரது அரசியல் வாழ்க்கை நீண்டது. பேச எழுத அதில் இருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. அவரது மறைவு அரசியல் வீழ்ச்சியையும் பதிவு செய்கிறது. தான் மறைவதற்கு முன்பே கூட்டமைப்பின் மறைவு நிகழ்ந்துவிட்டது என்பதை அறிந்து கொண்டார் சம்மந்தன் ஐயா. தமிழரசுக் கட்சிக்குள் குறைந்த பட்சம் இரண்டு பிரிவுகள் நின்று அடிபடுகின்றன. டெலோ இன்னொரு தேர்தல் தளத்தை உருவாக்கிவருகிறது. தலைமை வழங்குகிறோம் என இன்று முன்னுக்கு வருவோர் எல்லாம் – வெற்று பேச்சும் – வெறுமையான உறுதியும் வளங்குபவர்களாக இருக்கின்றனர். வெளிநாட்டு சக்திகளிடம் நம்பிக்கை வையுங்கள் என்பதை விட இவர்களிடம் வேறு கொள்கை நிலைப்பாடு இல்லை. சம்மந்தன் ஐயா இன்னொரு சகாப்தத்தை சேர்த்தவர். தமிழரசு கட்சி பிரிந்து நின்று தமிழர் உரிமைக்கான அடிபாடுகளை செய்யத் தொடங்கிய காலப் பகுதியில் ஆரம்பித்து எத்தனையோ அழிவுகள் இழப்புகளை தாங்கி போராட்ட அரசியலை முன்னெடுத்த சகாப்பதம் அது. பாராளுமன்ற அரசியலும் அதன் ஒரு பகுதியாக மட்டும் பார்க்கப்பட்ட சகாப்த்தம் அது. கூட்டணி – பின்பு கூட்டமைப்பு என ஆயுத முனையில் தமிழ் பிரதிநிதித்துவம் ஒன்றுபடுத்தப்பட்ட சகாப்த்தம் அது. அந்த சகாப்தத்தின் கடைசி பிரதிநிதியாக சம்மந்தன் ஐயாவை கூற முடியும். அவரது மறைவு ஒரு சாகப்தத்தின் மறைவையும் குறித்து நிற்கிறது.