லண்டன் மேயர் தேர்தல் தொடர்பாக
லண்டன் மேயர் தேர்தல் தொடர்பாக பிரித்தானிய சோசலிஸக் கட்சி செயற்பாட்டாளர் சேனன் தேசம் சஞ்சிகைக்கு வழங்கிய பதில் இங்கு பதிவு செய்யப்படுகிறது: ஜெயபாலன் த
வருகின்ற லண்டன் மேயருக்கான தேர்தலில் லண்டன் தமிழர்கள் எவ்விடயஙகளை கவனத்தில் கொண்டு தங்களது தெரிவை மேற்கொள்ள வேண்டும் என நினைக்கிறீர்கள்? யாரைத் தெரிவு செய்வது தமிழர்களுக்கு நல்லது என நினைக்கிறீர்கள்?
பெரும்பான்மையான தெற்காசியர்கள் ஜரோப்பிய நகரங்களின் வறிய பகுதிகளிற்தான் செறிந்து வாழ்கிறார்கள். குறைந்த வீடடு வாடகையைத் தேடி ஒடுவதும் – வேலைவாய்புக்காக இடம்பெயர்வதும் என பலரும் சிதறிய வாழ்க்கையே வாழ்கிறார்கள். லண்டனில் வீட்டு வசதி மிகப்பெரும் பிரச்சினையான ஒன்றாக இருக்கிறது. குடும்பத்தில் இருவர் வேலை செய்தாலும் லண்டனுக்குள் ஒரு அறை வீடு கூட வாடகைக்கு எடுக்க முடியாத நிலைதான் இருக்கிறது. சாதாரன வேலை செய்பவர்கள் தமது சம்பளத்தை வைத்து – போக்குவரத்துச் செய்வது- வாடகை கட்டுவது – மற்றய பில்களைக் கட்டுவது – பிள்ளைகளுக்கான கல்விச் செலவுகள் செய்வது – என்பது முற்றிலும் சாத்தியமற்றது. பெற்றோல் ஸ்டேசன் மற்றும் டெஸ்கோ முதலிய கடைகளில் வேலை செய்பவர்கள் லண்டனில் வாழ்வதற்கு ஏற்ப சம்பளத்தைப் பெறுவதில்லை. அரைவாசிக் காசு போக்குவரத்துக்கும் பில்லுகளுக்குமே செலவாகிவிடும் நிலையில் மாதா மாதம் வாடகை கொடுக்கவும் சாப்பிடவும் தடுமாறும் வாழ்க்கையையே பலர் எதிர்கொண்டுள்ளனர்.
இதில் இருந்து தப்புவதற்காக பல்வேறு தியாகங்களை மக்கள் செய்து வருகின்றனர். சமறி வாழ்க்கை – அறைகளை வாடகைக்கு விடுவது – சாப்பாட்டில் மிச்சம் பிடிப்பது என பல உத்திகளை மக்கள் செய்யவேண்டியுள்ளது. எந்தெந்த வகையில் மிச்சம் பிடிக்க முடியுமோ அவ்வகையில் எல்லாம் மிச்சம்பிடிக்கும் கலாச்சாரம் வேர் கொள்வதற்கு பொருளாதாரம் பின்தங்கிய நிலமையே காரணம். இது தவிர குடும்பத்துக்கு வளங்கப்படும் பமிலி கிரடிட் மற்றும் ஏனைய பெனிபிட் பண உதவிகள் இன்றி வாழ முடியாத நிலையில்தான் பல குடும்பங்கள் வாழ்கின்றன. இந்த வசதிகள் தடைப்பட்டால் குடும்பத்துடன் தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழயில்லை சில குடும்பங்களுக்கு. இந்த வறுமையில் இருந்து மீற அவர்கள் இரண்டு வேலை செய்ய வேண்டி தள்ளப்படுகிறார்கள். நாளுக்கு பதினாறு மணிநேரத்துக்கும் மேலாக –கிழமைக்கு ஆறு நாள் ஏழுநாள் என அவர்கள் கடும் வேலை செய்துதான் உயிர்வாழ முடிகிறது.
வீட்டு வசதி, வைத்திய கல்விச் சேவைகள், சமுக சேவைகளைக் காத்துக்கொள்ளுதல், குறைந்தபட்ச ஊதியத்தை மணிக்கு பத்து புவுன்சுகளுக்கு அதிகாpத்தல், போக்குவரத்துச் செலவைக் குறைத்தல் ஆகிய கோரிக்கைகள் மக்கள் மத்தியில் பலப்பட்டிருப்பதற்கு காரணம் மேற்சொன்ன நிலவரமே. இந்தக் கோரிக்கைகள் வெறும் வெற்றுக் கோசங்கள் அல்ல. இரத்தமும் தசையுமாக உருகி உருகி உதைதுக்கொண்டிருக்கும் மக்களின் வாழ்வா சாவா என்பது சம்மந்தப்பட்ட கோரிக்கைகள்.
உழைக்கும் ஒருவன் ஏன் வறுமையில் வாழ வேண்டும்? அத்தகய உழைப்போருக்கு எதிரான பொருளாதார முறை யாருக்குத் தேவை என்ற கேள்விகள் மக்கள் மனங்களிற் பலப்பட்டு வரும் காலம் இது. இத்தகய கோரிக்கைகளை ஆதாpக்கும் சோசலிஸ்டான ஜெரமி கோர்பின் வரலாறு கானாத ஆதரவுடன் லேபர் கட்சியின் தலைமைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது அனைவருக்கும் தொpந்ததே. இங்கிலாந்து வரலாற்றில் எந்தக் கட்சித் தலைவருக்கும் இத்தகய ஆதரவு இருந்ததில்லை. கோர்பினின் இந்த வரலாற்று வெற்றி மக்கள் மனங்களில் ஊறியிருக்கும் வெறுப்பையும் எதிர்ப்பையும் வெளிக்காட்டியுள்ளது.
இதற்கு மாறாக அனைத்து சேவைகளையும் அடித்து மூடும் வேலையிலும் அவற்றை பெரும் வியாபாரிகளுக்கு விற்கும் வேலையிலும் ஈடுபட்டு வருகிறது ஆளும் கண்சவேட்டிவ் கட்சி. இவர்கள் புதிய டாக்டர்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கையால் அனைத்து வைத்தியசாலைகளிலும் டாக்டர்கள் போராட்டம் செய்து வருவது அறிந்திருப்பீர்கள். இதேபோல் நாடெங்கும் இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் பலவேறு அரச ஊழியர்கள் அரசுக்கெதிரான கடுமையான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். இந்நிலையில் சிறுபான்மை மக்கள் எவ்வாறு கன்சவேட்டிவ் கட்சிக்கு வாக்களிக்க முடியும்? அத்தகய மக்களுக்கு எதிரான கொள்கைளை முன்னெடுக்கும் யாருக்குமே நாம் வாக்களிக்க முடியாது.
கன்சவேட்டிவ் கட்சிக்காக லண்டன் மேயர் தேர்தலில் நிற்பவர் ஒரு பெரும் மில்லியனர். இங்கிலாந்தில் வரி செலுத்தாமல் இருப்பதற்காக கள்ள வேலைகள் செய்து தனது வியாபாரத்தை வெளியிற் கொண்டு சென்றதாக அவர்மேல் குற்றச்சாட்டுள்ளது. சிறுபான்மை சமூகங்களின் நலன்களுக்கு முற்றிலும் எதிரான கொள்கை உள்ள பெரும் முதலாளி அவர். லேபர் கட்சி, கிறீன் கட்சி, ரெஸ்பக்ட் ஆகிய கட்சிகள் தவிர மற்ற வேட்பாளர்கள் துவேசிகளாகவும், பகிரங்கமாக புலம்பெயர்வோருக்கு எதிரானவர்களாகவும், பெரும் வியாபாரங்களின் நலன்களுக்காக இயங்குபவர்களாகவும்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு எமது வாக்குகளை வழங்கி எங்களை நாங்களே கேவலப்படுத்திக் கொள்ளக்கூடாது.
லேபர் கட்சிக்காக நிற்கும் வேட்பாளர் சிடிக் கானும்கூட பெரும் முதலாளிகள் சார் வேட்பாளர்தான். அவர் தனது கட்சித் தலைவர் ஜெரமி கோர்பினின் கொள்கைகளுக்கு எதிரானவர். இந்நிலையில் நாம் வாக்களிப்பதற்கு சாpயான வேட்பாளர் யாரும் இல்லை என்பதே உண்மை. இருப்பினும் இந்தத் தேர்தலில் லேபர் தோழ்வியுற்றால் அதைப் பாவித்து கோர்பினைக் காலிபண்ணத் திரிகின்றனர் தொழிலாளர் கட்சிக்குள் இருக்கும் வலதுசாரிகள். இதற்காக பல்லைக் கடித்துக்கொண்டும் – மூக்கைப் பொத்திக்கொண்டும் பலர் சிடிக் கானுக்கு வாக்களிப்பர் என எதிர்பார்க்கலாம். ஆனால் எமக்கான சாpயான தேர்வு இல்லாத நிலையில் வாக்களிக்காதோர் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கப்போகிறது.