மே 1:அதிகாரத்துக்கு எதிராக ஒன்றுபடுவோம்
இன்று மேதினம்.
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தொழிலாளர்கள், வறியவர்கள் மே முதலாம் திகதியை ஒடுக்குதலுக்கு எதிரான போராட்டத்தைத் தூண்டும் நாளாகக் கொண்டாடி வருகிறார்கள்.
ஒரு நாளில் 8 மணித்தியால வேலை நாளைக் கோரி உலகெங்கும், எல்லா நாடுகளிலும் நகரங்களிலும் ஒரே நேரத்தில் போராட்டம் நடாத்த 1889ம் ஆண்டு யூலை மாதம் இரண்டாம் அகில சோசலிச மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது.
இதன்பின், 1890ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் மே முதலாம் திகதியன்று உலகெங்கும் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் தமது சிவப்புக்கொடியை உயர்த்தி, சோசலிச மாற்றுக்காகத் தொழிலாளர் நலன்களை வென்றெடுக்கத் தெருவில் இறங்கி ஊர்வலம் செய்து வருகிறார்கள். இந்த மேதினம் சாதாரண ஊர்வலமாக மட்டுமின்றி வர்க்க வேறுபாட்டை அழித்துச் சமுதாய மாற்றத்திற்காகப் போராடுவதற்குத் தொழிலாளர்களின் விழிப்பைத் தூண்டுவதற்காகச் செயற்படவேண்டும் என்ற கோரிக்கை 1893ம் ஆண்டு காங்கிரசில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
போராட்டத்தின் அவசியத்தை உணர்த்தும் இந்த நாளில், இலங்கையில் ஒடுக்கப்படும் மக்களின் போராட்டத்தை எவ்வாறு வடிவமைப்பது என்பது பற்றியும் நாம் சிந்திப்போம்.
1 வருடன் முன்னர் தெற்காசியாவின் நீண்ட யுத்தம் கொடூரமான முறையில் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. மூன்று மாதத்துக்குள் 40 000 ம் மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். குழந்தைகள் முதியவர்கள் உட்பட ஒருத்தரைக் கூடத் தப்பிப் போகவிடாத இராணுவம் உயிர் தப்பிய –மிஞ்சிய அனைவரையும் சரியான வசதிகளற்ற முகாம்களில் அடைத்து இராணுவக் காவலில் வைத்தது.
உலகெங்கும் நியோலிபரல் கொள்கைகள் வளர்ச்சியடைந்த காலத்தில் அமெரிக்காவில் ரேகனும், இங்கிலாந்தில் தச்சரும் அவர்களின் அடிவருடியாக இலங்கையில் ஜே.ஆர். ஜெயவர்த்தனவும் கொட்டமடித்த காலத்தில் தமிழ்பேசும் மக்களின் மேலான தாக்குதல் உக்கிரமடைந்த காலத்தில் வலுப்பெற்றது இந்த யுத்தம். தற்போது நிகழும் உலகப் பொருளாதார மாபெரும் சரிவைத் தொடர்ந்து முதலாளித்துவ திறந்த பொருளாதாரக் கொள்கையின் வெற்றிக்களிப்பு முடிவுக்கு வரும் இத்தருணத்தில் இலங்கை யுத்தமும் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. தெற்காசியப் பிராந்தியத்தில் மேற்கத்தேய செல்வாக்குத் தளர்ந்து, பிராந்திய வல்லரசுகளின் கை ஓங்குவதையும் இலங்கையில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட விதம் எமக்குச் சுட்டிக் காட்டுகிறது. சீனா,இந்தியா,பாகிஸ்தான் ஆகிய பிராந்திய அரசுகள் இலங்கை இராணுவ முன்னெடுப்புக்கு உதவியது பலரும் அறிந்ததே. மேற்கத்தேய ஆளும் சக்திகள் உட்பட எந்த ஆளும் சக்திகளும் இந்தப் படுகொலைகளுக்கு எதிராக எதுவும் செய்யவில்லை.
இலங்கை வாழ் ஒடுக்கப்படும் மக்கள் இந்தக் கொடிய யுத்தத்தின் மூலம் தெட்டத் தெளிவாக ஒரு படிப்பினையைக் கற்றுக் கொண்டுள்ளார்கள். இலங்கையிலோ அல்லது உலகின் எந்த நாட்டிலோ ஒடுக்கப்படும் மக்களுக்கு உலகெங்கும் இருக்கும் எந்த ஆளும் வர்க்கமும் உதவ வரப் போவதில்லை என்ற கசப்பான உண்மையை இந்த யுத்தம் தெளிவாக்கியுள்ளது.
ஒவ்வொரு நாட்டிலும் ஒடுக்கப்படும் மக்களின் ஒன்றிணைந்த போராட்டத்தின் தேவை இன்றைய கால கட்டத்தின் அத்தியாவசியமாக இருக்கிறது.
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததன் மூலம் இலங்கை அரசு எந்த ஒரு பிரச்சனையையும் முடிவுக்குக் கொண்டுவந்து விடவில்லை. இலங்கை ஆளும் வர்க்கம் தேசிய இனப் பிரச்சினையைத் தீர்க்கவோ அல்லது தொழிலாள வறிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றவோ வக்கற்றது. தமிழ்பேசும் மக்களைத் தாக்குவது சிங்கள மக்களின் நன்மைக்கே என்ற அடிப்படையில் இனவாதப் பிரச்சாரத்தின் மூலம் யுத்தத்துக்குப் பெரும்பான்மை ஆதரவு திரட்டி வந்த அரசின் போக்கிரித்தனம் இன்று அனைத்து மக்களின் முன்பும் வெளிப்படையாகப்போகும் தருணம் வந்துள்ளது. நாட்டுப் பொருளாதாரம் வங்குறோத்தாகமல் இருக்க, இன்று அரசு IMF இடம் கையேந்தியிருப்பதை நாமறிவோம். IMF ன் அறிவுறுத்தலின்படி பிராந்திய வல்லரசுகளின் உத்தரவின்படி பொதுச்சேவைக்கான செலவுகள் குறைக்கப்பட்டுத் தொடர்ந்தும் வறிய சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமைகள் தாக்கப்படும் என்பது திண்ணம்.
இருப்பினும், இராணுவக் கொடுமைகளுக்கு மத்தியிலும், பேச்சுரிமை, ஊடக உரிமை, நடமாடும் உரிமை என்று அனைத்து அடிப்படை ஜனநாயக உரிமைகளின் மறுப்புக்கு மத்தியிலும் பலர் இந்த அடக்குமுறைக்கு எதிராகப் போராட முன்வருவது எமக்கு மிக உற்சாகமளிக்கிறது. ‘தமிழ் ஒருங்கமைப்பு’ அவர்களுடன் மிக்க ஆர்வத்துடன் இணைந்து இயங்கி வருகிறது. துரதிஷ்டவசமாக இன்று தமிழ் ஒருங்கமைப்பு மட்டும்தான் போராட்டம் தொடரவேண்டும் என்ற கோரிக்கையை வைத்து வருகிறது. நாம் மட்டும்தான் இன்று தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமை வழங்கப்படவேண்டும் என்பதை உரத்துப் பேசி வருகிறோம். நாம் மட்டும்தான் வடக்கு,கிழக்கு பிரதேசங்களில் இருந்து இராணுவம் பின்வாங்கப்பட்டு இராணுவச் செலவுகள் குறைக்கப்படவேண்டும் என்று உலகெங்கும் பிரச்சாரம் செய்து வருகிறோம்.
முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள இளையோரைக் குறைந்த சம்பளத்தில் வேலைக்கமர்த்த வசதிசெய்வதாக மூலதனமிட விரும்புபவர்களுக்கு உற்சாகமூட்டிவருகிறது அரசு. இதற்கெதிராக அவர்களின் உரிமைகளுக்காகப் போராடும் பலமான தொழிற்சங்கங்களை கட்டும் முக்கியபணியில் நாம் ஈடுபட்டுள்ளோம்.
இந்த போராட்டத்தில் எம்மோடு இணைந்து கொள்ளுங்கள். உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள்.
நன்றி
தமிழ் ஒருங்கமைப்பு
தொடர்புகளுக்கு : info@tamilsolidarity.org