அவலத்தைக் காட்சிப்படுத்தல்
புகைப்பட கலைஞர் அமரதாசின் புதிய புத்தகமான ‘THROUGH THE FIRE ZONES: PHOTOGRAPHS OF AMARATHAAS IN SRI LANKA S WAR ZONES’ என்னும் ஒளிப்பட நூல் 22-10-2022 அன்று லண்டனில் வெளியிடப்பட்டது. திரள் குழுமம் இந்த வெளியீட்டை ஒழுங்கு செய்திருந்தது. இந்த வெளியீட்டில் நிகழ்த்திய சிறு உரையின் சில பகுதிகளையும் இங்கு தொகுத்துள்ளேன். இந்த நூலை விமர்சிப்பதற்கு என நிகழ்வுக்குச் செல்லவில்லை – மாறாக பாராட்டவும் ஊக்கம் வழங்கவும் மட்டுமே கலந்து கொண்டேன். போரின் அவல வரலாற்றைக் காட்சிப்படுத்தும் ஆவணங்களை எவ்வாறு விமர்சிப்பது? விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட ஓன்று இல்லை என சிலர் சொல்ல முடியும். இந்த ஆவானங்களை முடக்கப் பாடுபடும் அதிகாரம் இன்றும் மும்முரமாக இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் எவ்வாறு விமர்சிப்பது?
1
2009
மே மாதம்
– மிகப்பெரும் வெடிப்புச் சத்தம் ஒண்டு கேட்டது – அந்த இறுதி வெடிப்பை நாம் அனைவரும் கேட்டோம். ‘ஐயோ’ என்ற அத்தருண துடிப்பில் எமக்கு முன் நின்ற ஒற்றைப் புள்ளி இதுதான் –
‘நாம் எல்லாவற்றையும் இழந்துவிடோம்.’
இந்த வெடிப்பின் பின் எமக்கு காட்சிகள் தேவைப்படவில்லை.
அவலம் – எமது நினைவுகளில் – மனங்களில் படம் படமாக காட்சிகளாக விரிந்து படிந்து விட்டன.
இந்த கழிவிரக்கத்தில் இருந்து இன்றுவரை விடுதலை பெறாத சமூகமாக இருக்கிறோம் நாம். இதன் தாக்கங்கள் இன்றுவரை தொடர்கிறது.
2
இழந்துபோன உயிர்ப்பு திரும்ப துடிக்க தொடங்க முதலே வரலாற்று மறுப்பு மற்றும் மறைப்பு மும்முரமாக ஆரம்பித்து விட்டது.
அழிவைச் செய்தவர்கள் ஆதாரங்களை அழிக்கத் தொடங்கினர். ஒரு சமூகத்தை முற்றாக முடக்குவதானால் அவர்தம் வரலாற்றையும் மாற்ற வேண்டிய தேவை ஏற்படுகிறது.
பயங்கரவாதிகளிடம் இருந்து மக்களை மீட்டு எடுத்துள்ளோம் என்றது இலங்கை அரசு. இறந்தவர்கள் தீவிரவாதிகள் மட்டுமே என்றனர். இந்த ‘சுத்தப்படுத்தல்’ வேலையோடு இன்னுமொரு பிரச்சாரமும் கட்டவிழ்த்து விடப்பட்டது. நடந்தவைகளை ‘மறக்கப் பழகுவோம்’ என்றார்கள். இணக்க அரசியல் முன்னுக்கு வந்தது. தமிழ் மக்கள் மத்தியில் இயங்கி வந்த -புலி எதிர்ப்பை மட்டுமே தமது அரசியலாக செய்து வந்தவர்கள் -இதைத் தலைமை தாங்கி நடத்தினர். இது மறுப்பு கோரிக்கை அல்ல ‘கொலை மறைப்பு’ நடவடிக்கை என நாம் ஒரு புத்தகமே போடவேண்டிய தேவை இருந்தது.
வரலாறை அழிப்பதை எவ்வாறு அனுமதிப்பது?
ஏராளமான ஆவனைகள் இன்று இல்லை.
புலிகளிடம் தகவல் பிரிவு சார்ந்து பல பிரிவுகள் இருந்தன. போராட்ட படப் பிடிப்பு பிரிவு ஒன்றும் இருந்தது. வெளிநாடுகளுக்கு வந்து தப்பியவை தவிர வேறு எதுவும் மிஞ்சவில்லை. புலிகள் காலத்து பிரச்சார படங்கள் – மற்றும் ஆவனங்கள் கூட – வெளிநாடுகளுக்கு வந்து சேர்ந்த ஆவனைகள் கூட – இன்று மக்கள் கைகளுக்கு கிடைக்க கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கின்றன பல்வேறு சக்திகள். பெரும் சனநாயக தளம் என பூச்சாண்டி காட்டப்படும் சமூக வலைத்தளங்கள் உட்பட பல மக்கள் தளங்களில் இத்தகைய எந்த ஆவணமும் வெளிவர முடியாத நிலைதான் இன்று இருக்கிறது. யுத்த காலத்தில் நடந்த அவலங்கள் பற்றிய ஆவணங்கள் அதி உச்ச பிரச்சினைக்கு உரியவையாக கருதப்படுகின்றன. இலங்கை அரசைப் பொறுத்த வரையில் இது அவர்களின் முதன்மை கவணமாக இருக்கிறது. இதனால்தான் எஞ்சியவை – தப்பியவையை நாம் பொக்கிசங்கள் என்கிறோம்.
இந்தப் பார்வையில் அமரதாசின் படங்கள் எமக்கு பொக்கிசங்கள்தான். எமது அவலத்தை விற்பதற்காக – அரசியல் நோக்கத்திற்காக இதை சொல்கிறோம் எனச் சிலர் திரிபு படுத்த முயலலாம். தமது சுயநலத்தை மட்டும் முதன்மைப்படுத்தி இயங்கிவரும் பலர் – அரச ஆதரவு சக்திகள் – புலி எதிர்ப்புச் சக்திகள் பலர் அவ்வாறு பார்ப்பர். யுத்தம் பற்றியோ – அல்லது யுத்த அவலம் பற்றியோ ஒரு சொட்டுத் தெளிவுமற்ற பார்வை அது. இது ஒரு எதிர்ப்பு நடவடிக்கை. ஆவணப்படுத்தல் என்பது சமூகத்தின் விடாயாக இருக்கிறது.
மறக்கமாட்டோம் என்ற உறுதித்தனம் –நடந்த சமூக அவலத்தை ஏற்க மாட்டோம் என்ற விடாப்பிடித்தனத்தில் இருந்து பிறக்கிறது. நாம் எமது நினைவுகளுக்குள் பாதுகாக்க துடிக்கிறோம்- மனங்களுக்குள்ளால் கடத்துகிறோம். இந்த அந்தரிப்பில் இருக்கும் ஆவணங்களை பாய்ந்து பிடித்து பாதுகாக்க துடிக்கும் அவா எழுகிறது.
இதன் பாதிப்பை இலங்கையில் சமீபத்தில் எழுந்த எல்லா கலை வடிவங்களிலும் பார்க்க முடியம். குணா கவியழகன் – தமிழ்நதி – தீபச் செல்வன்,முதற்கொண்டு சமீபத்தில் வந்த பெரும்பான்மை நாவல்களில் ஆவணப்படுத்தல் ஓங்கி நிற்பதை நாம் பார்க்க முடியும். ‘சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்கள்’ நாவலை நான் எழுத முனைந்தமைக்குப் பின்னும் இதே காரணம்தான். இவை உண்மைக் கதைகள். நாம் மீண்டும் மீண்டும் சொல்லி சொல்லி தீரவேண்டிய கதைகள். முடக்கப்படுதலில் இருந்து மீறும் நடவடிக்கை அது.
யுத்தத்தின் எந்தப் பாதிப்புமற்ற – வெறுமைக் கலை படைப்புகள் – நாவல்களும் உண்டு – சில இம்சை நாவல்களில் இருக்கும் வெறுமையை சுட்டிக் காட்டி விமர்சனங்கள் வர வேண்டும்.
இதை விளங்கி கொள்வதானால் அமரதாசின் படங்களைப் பாருங்கள்.
‘இப்படியும் இருந்திருக்குமோ’ – என சிலர் கேட்கிறார்கள். இந்த கேள்விக்குப் பின்னால் இருக்கும் வரலாற்றை திரிபு செய்யும் நோக்கத்தை நாம் கண்டு கொள்ளவேண்டும்.
3
இந்த ஆவணங்கள் யாருக்குச் சொந்தம் என்ற ஒரு அடிபாடும் உண்டு. புலிகள் வைத்திருந்த அனைத்து உபகரணங்கள் – மற்றும் ஆவனைகள் அனைத்துமே சூறையாடப்பட்டு விட்டது. புலிகளின் குடையின் கீழ் இயங்கிய காலத்தில் அவர்கள் உபகரணங்கள் பல ஊடகவியலாளரால் பாவிக்கப்பட்டன என்பது உண்மையே. அமரதாஸ் புலிகள் இயக்கம் வழங்கிய கருவிகளைப் பாவித்து வந்திருக்கிறார். அதற்காக இந்த படங்களை, புலிகளின் பிரச்சார படங்கள் ஒதுக்க முயல்வது தவறு. ஆனால் இங்கு இன்னொரு கேள்வியும் இருக்கிறது. இவை கற்பனை கட்டுரைகள் அல்ல – காட்சிப் படங்கள். புலிகள் இயக்ககத்தில் இருந்தவர் எடுத்தால் என்ன/ இராணுவத்தில் இருந்தவர் எடுத்தால் என்ன? அவை நேரடி சாட்சிகள் – ஆவணங்கள்தான். வெற்றுப் பிரச்சாரங்களால் மட்டும் ஆவணங்களை முடக்கி விட முடியாது.
இதே சமயம் இன்னொரு கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. அமரதாஸ் போராளிகளின் ஆவணமாக இதை வெளிவிட வேண்டும் – தனது பெயரில் மட்டும் வெளிவிடக் கூடாது என சிலர் கருதுகிறார்கள். தனது படங்களை அமரதாஸ் தனது பெயரில் வெளியிடுவதில் என்ன தவறு இருக்கிறது. இதை மறுப்பவர்கள் – தமது ஆதாரங்களுடன் முன்வந்து வெளிப்படையாக பேசவேண்டும். ஆளுக்கு ஆள் தொலைபேசியில் அடித்து அலம்புவது – புறம் பேசி பொய் புரட்டுகள் பரப்புவது – போன்ற கீழ்மையான பழக்கங்களை நாம் விட்டொழிக்க வேண்டும்.
சிற்றறிவும் சிறுமைத்தனமும் கொண்ட ஒரு சிலர் அலம்புவது அவர்தம் சொந்த லாப நோக்கில் மட்டுமே. சமூக அக்கறை அங்கில்லை.
4
யுத்த முனையில் ஊடகவியலாலராக இயங்குவது மிக சிரமமான காரியம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஓன்று. மேற்குலக ‘வெள்ளை’ ஊடக வியலாளர்களின் பெருமைகள் பெரிதாக பேசப்பட்டு வறுகின்றன(மேரி கொல்வின்). ஆனால் அவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி சற்று வித்தியாசமானது. அவர்கள் பின் பெரும் சர்வேதச ஊடகம் – உடலில் பாதுகாப்பு அணி – பாதுகாக்கும் நபர்கள் என பல சார்புகள் அவர்களுக்கு உண்டு. உள்ளக ஊடகவியலார்களுக்கு இவை எதுவும் கிடையாது. அவர்கள் கையில் கமரா இருக்கிறது என்பதற்காக அவர்களை சுடாமல் விடப்போவதில்லை இராணுவம். பாலஸ்தீனிய ஊடகவியலளர் செரீன் அபு அலீக் பட்டப் பகலில் சுட்டுக் கொல்லப்பட்டது அறிவோம்.
இலங்கை யுத்த காலத்தில் அங்கு செல்ல எந்த ஊடகவியலாளருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இராணுவத்தோடு சென்றவர்கள் தவிர யாரும் அந்த போரை சரியாக கண்காணிக்க முடியவில்லை. மக்களோடு மக்களாக நின்ற – யுத்தத்தால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் இயங்க ஊடகவியலாலருக்கு மேலதிக மனத்திடம் தேவை. பெரும் ஊடகமொன்றின் பிரதிநிதியாக செல்லும் வெள்ளை ஊடகவியலாலரை விட பல மடங்கு அர்ப்பணிப்பும் – திடமும் தேவை. ஆனால் இவர்கள் பாராட்டப் படுவதில்லை. மாறாக நெருக்கடிக்கு உள்ளாக்கப் படுகிறார்கள்.
இவர்கள் பக்கச் சார்பானவர்கள் என்ற குற்றச் சாட்டு வைக்கப்படுகிறது. இலங்கை கடைசி கால யுத்த குற்றம் பற்றிய ஆவணப் படம் எடுத்த கெலும் மக்ரே மேலும்கூட இத்தகய குற்றச் சாட்டு முன்வைக்கப்பட்டது. இது மிக கேவலமான நடவடிக்கை. அதிகார சக்திகளின் இருப்பை பாதுகாக்கும் இரக்கமற்ற – மனித விரோத – மனிதர்கள்தான் இதைச் செய்கிறார்கள். மக்கள் கொல்லப்படும் இடத்தில் நடுநிலை எவ்வாறு சாத்தியம்.
பாதிக்கபடுவோர்களில் ஒருவராக ஊடகவியலாளர் நிற்பது எத்தனை அவலம் – அதற்கு எவ்வளவு மனத்திடம் தேவை என்பதற்கு அமரதாஸ் நல்ல சாட்சி. யுத்தம் காவு கொண்ட தனது சகோதரரின் பிள்ளைகளின் படங்களுடன் ஆரம்பிக்கிறது அவரது படப்புத்தகம். யுத்தம் மனிதத் தேவைகளை முடக்கி அடிப்படை தேவைகளை மட்டும் கவனிக்கும்படி அவர்களை தள்ளுகிறது.
உணவு
இருக்க இடம்
இடம்பெயர சைக்கிள் – வாகனம்.
இவைதான் இந்த படங்களின் முக்கிய கருப்பொருட்களாக இருக்கின்றன.
இது பற்றி எனது நாவலிலும் நான் பதிவு செய்திருக்கிறேன். அதில் வரும் சாதனாவின் தாய் ‘எப்ப பார்த்தாலும் சமையல் செய்து கொண்டிருப்பார். அவள் தம்பியும் அப்படித்தான். ஏதாவது செய்துகொண்டிருப்பான்’ என்ற ஒரு வசனம் வரும். இது எப்படி சாத்தியம்? ‘மூலப்பொருட்கள் எப்படி அவருக்கு கிடைத்துக் கொண்டிருந்தன? அவர்கள் ஒருவேளை உணவுக்கான தானியம் பருப்புக்கு ஒறுப்பான வேளையில் எதனோடு எதைப்போட்டுச் சமாளித்தார்கள், என்றவிபரங்கள் பதிவாகவில்லை.’ என ஒரு கேள்வியை தமிழ் இலக்கிய உலகின் பிரபல எழுத்தாளர் கருணாகரமூர்த்தி அவர்கள் கேட்டிருந்தார்.
‘இது எனது சொந்த கற்பனை வடிவங்கள் அல்ல. தவிர பல்வேறு வாக்கு மூலங்களில் இந்த விடயங்கள் உண்டு. இந்தப் பகுதி அந்த வாக்குமூல தொனியிலேயே செல்கிறது. இந்தப் பகுதிகள் நாவலின் மிகவும் தொய்வான பகுதிகள் என நான் நினைக்கிறேன் (நடந்த விசயங்கள் அல்ல – மொழியும் சொல்லப்பட்ட விதமும்). இந்த தொய்வு பகுதிகளை முற்றாக நீக்கிவிடும் திட்டமும் எனக்கு இருந்தது. பதிவு செய்யப்பட வேண்டும் என்ற காரணத்தால் அப்படியே விட்டு விட்டேன்.’ என அவருக்கு நான் பதில் எழுதி இருந்தேன். யுத்தத்திற்கு அப்பால் இருந்து பார்க்கும் பார்வை யுத்தத்தின் மையத்தில் இருந்து பார்க்கும் பார்வை என இரு பார்வைகள் உண்டு என்பதை புரிந்து கொள்ள இதை பதிவு செய்கிறேன். யுத்தம் உக்கிரம் எவ்வாறு நிலைமைகளை மாற்றிக் கொண்டு சென்றது என்ற நீரோட்டத்தை படங்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த முறையில் பார்க்க முடியும். கடைசி நாட்களில் உணவு இலாமல் போய் விட்டது. காவல் நின்று கஞ்சி குடிக்கும் நிலை எல்லோருக்கும் உருவானது.
அமரதாசின் புத்தகத்தை வாங்கி பார்க்கும்படி அனைவரையும் பணிவோடு கேட்டுக் கொள்கிறேன். கூடாரங்களைப் போட்ட மக்கள் என்ன செய்தார்கள்? சும்மா வானம் பார்த்து படுத்துக் கிடந்தது வரும் குண்டுகளை ரசித்துக் கொண்டிருதார்களா? அவர்கள் தமது பயத்தையும் – அந்தரத்தையும் போக்க என்ன செய்துகொண்டு இருந்தார்கள். அமரதாசின் படங்கள் இவற்றை சரியாக பதிவு செய்திருக்கின்றன. சமையல் ஒரு முக்கிய தினக் கடமை. சாப்பாட்டு பொருட்களை அவர்கள் சுமந்து சென்றார்கள் – சில இடங்களில் வாங்கினர். யாரும் பட்டினி கிடக்காத பகிர்வும் இருந்திருக்கிறது.
இந்த படங்களில் வெளிகாட்டும் இன்னுமொரு பரப்பையும் நாம் அவதானிக்க வேண்டும். எந்த ஒழுங்கும் இன்றி மக்களும் பொருட்களும் கமராவுக்குள் நிறைவதை நாம் பார்க்க முடியும். எவ்வாறு திட்டமிட்டு எடுத்தாலும் காட்ட முடியாத படிமங்களையும் இவை காட்டுகின்றன. உதாரணமாக, கைக்குழந்தையை தூக்கிக் கொண்டு மாட்டு வண்டில் பக்கம் நடந்து செல்லும் தாயின் படத்தை சுட்ட முடியும் (317 – March 2009). அவருக்கு முன் செல்பவரின் கையில் இருக்கும் சட்டம் போட்ட படம் ( வீர வணக்கம் போட்ட போராளியின் படம்) அரைகுறையாக தெரிகிறது. இயல்பில் வெளியாகி இருக்கும் இந்தப் படம் ஆயிரம் வசனங்களின் – பல கதைகளின் -ஒற்றைச் சுருக்கம். அழகியலை மக்கள்தாம் உருவாக்கிக் கொள்கிறார்கள் – அவலங்களின் போதும்கூட. அதிகாரமும் – யதார்த்தவாத கலையாளரும் அதைக்கண்டு அஞ்சுவது ஆச்சரியமான ஒன்றல்ல.
மேற்குலகின் – இலங்கை அரசின் முகத்தில் அடிக்கும் படங்களாக – பங்கருக்குள் குண்டுக்கு காத்திருக்கும் மக்கள்(319)- முகத்தில் தகப்பனின் இரத்தம் பரவிய அவல முக சிறுமி(246) முதலான படங்கள் இருக்கின்றன. குண்டுக்கு காத்திருப்பதன் அனர்த்தம் யுத்த பூமியில் இருந்தவர்களால் மட்டுமே விளங்கிக்கொள்ள முடியும். எப்ப வந்து எவர் தலையில் வெடிக்கும் எனத் தெரியாது காத்திருக்கும் அவதியை அந்த படம் கைப்பற்றி உள்ளது. எல்லாப் படங்களிலும் இருக்கும் எல்லா முகங்களிலும் வன்முறையின் காயங்களை பார்க்க முடிகிறது. இவை மனதை உருக்க வல்லன (367, 371).
இந்தப் படங்களில் இருப்பவர்களில் பலர் இன்று இல்லை. யுத்தமும் யுத்தத்தின் பின்னான கொடுமைகளும் எஞ்சி இருப்பவர்களை இன்னும் பழிவாங்கிக் கொண்டு இருக்கிறது. இந்த படங்கள் வெறும் ‘கலை’ சார் நடவடிக்கை அல்ல. இரத்தமும் சதையுமாக இருக்கும் வரலாற்று பதிவுகள். வரலாறும் ஒரு கலை வடிவம் என்பர் சிலர்.
அனைவரும் அவசியம் வாங்க வேண்டிய புத்தகம் இது.
இந்த புத்தகத்தை விற்க முடிந்தவர்கள் – விநியோகிக்க முடிந்தவர்கள் தயவு செய்து அமரதாசையோ – திரள் குளுமத்தையோ தொடர்பு கொள்ளுங்கள்.
குறிப்பாக இலங்கையில் விநியோகிக்க முடிந்தவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்.
https://www.facebook.com/thiraluv