கோர்பின் இந்துக்களுக்கு எதிரானவர் என்ற பொய் பிரச்சாரம்

கோர்பின் இந்துக்களுக்கு எதிரானவர் என்ற பொய் பிரச்சாரத்தின் பின் இருக்கும் வர்க்க- சாதிய அடக்குமுறை.

ஆனால் இது கோர்பினுக்கு எதிராக இந்துக்கள் சார்பாக வலதுசாரி ஊடகங்களால் பரப்பப்படுகிறது. உண்மையில் கோர்பின் ஒரு வாழ்நாள் முழுவதும் இனவெறி மற்றும் சாதி என்பவற்றுக்கு எதிராக போராடி வந்தவர்.  இனவெறி மற்றும் சாதிய பாகுபாடுகளைத் தெற்காசிய மக்கள் பலர் நேரடியாக அனுபவிக்கும் போது இவற்றுக்கு எதிராக போராடும் கோர்பின் மீது இந்தக் குற்றச்சாட்டு கதை எங்கிருந்து வந்தது?

இந்து கவுன்சில் யுகே (HCUK) என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து இந்த பொய் புரளி கிளப்பி விடப்பட்டது.

HCUK அறிக்கை இவ்வாறு கூறுகிறது: “இந்த தேர்தலில் திடீரென்று இந்துக்கள் லேபர் கட்சியின்  வேட்புமனுத் தேர்விலிருந்து விலக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஜெர்மி கோர்பின் எப்போதும் இஸ்லாமிய எதிர்ப்புக்கு எதிராக பேசுகிறார். அதேசமயம் யூத எதிர்ப்பு மற்றும் இந்து எதிர்ப்பு நிலைப்பாடுகள் கேள்விக்கு உட்படாமல் இருக்கின்றன… இது ஒரு கவலைக்குரிய  விவகாரம். ஒரு முற்போக்கான சோசலிசக் குரலாக இருந்த நம் நாட்டின் முக்கிய அரசியல் கட்சி தற்போது கிட்டத்தட்ட ஒரு பாசிச சித்தாந்தத்தை நோக்கிச் சென்றுள்ளது .. ”. இவ்வாறு இந்த அறிக்கை தொடக்கத்திலிருந்து முடிவடையும் வரை தவறான கூற்றுகளால் நிரம்பி இருக்கின்றது.

கோர்பின் தேர்தல் அறிக்கையானது அனைத்து உழைக்கும் மற்றும் இளைஞர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு வழியை வழங்குகிறது – இலவச கல்வியை உறுதி செய்வதன் மூலம் பட்டதாரிகளை சராசரியாக, £54,000 கடனில் இருந்து விடுவிக்கிறது, எமது NHS ஐ அழிக்கும் தனியார்மயமாக்கலை மாற்றியமைக்கின்றது; அனைத்து பொதுத்துறை ஊழியர்களுக்கும் 5% ஊதிய உயர்வு மற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் உரிமைகளை உறுதி செய்தல் மற்றும் பூஜ்ஜிய நேர ஒப்பந்தங்களுக்கு முடிவுக்கு கொன்டு வருகின்றது. கோர்பினின் வீட்டுக் கொள்கைகள் – கவுன்சில் வீடுகளை பெருமளவில் கட்டுவது முதல், தனியார் துறையில் வாடகைக் கட்டுப்பாடு வரை பெரும்பான்மை மக்களுக்கு பயனுள்ளவை. இவை தங்கள் குழந்தைகள் ஒரு ஆபத்தான எதிர்காலத்தை எதிர்கொள்கின்றன என்று கவலைப்படுபவர்களுக்கு பயனளிக்கும். உண்மையில், தேர்தல்  அறிக்கை பெரும்பான்மையான மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகின்ற பல்வேறு கொள்கைகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. ஆனால் மக்களை சுரண்டும் பெரும் முதலாளிகள், இனவெறியாளர்கள் மற்றும் பேராசை கொண்ட நில உரிமையாளர்களுக்கே இந்த தேர்தல் விஞ்ஞாபனம் எதிரானது. ஆனால் இவர்களால் பதிக்கப்படுபவர்களாக பெரும்பான்மை ஆபிரிக்க ஆசிய மக்கள் இருக்கின்றார்கள்.

எனவே HCUK யார்? உங்கள் நண்பர்களால் நீங்கள் அறியப்படுவீர்கள் என்பார்கள். தீவிர வலதுசாரி இனவெறியாளன் டாமி ராபின்சன் தனது இணையதளத்தில் “இந்து கவுன்சில் பாசிச தொழிலாளர் கட்சியை எதிர்கிறது” என்று தலையங்கம் தீட்டியுள்ளார். ராபின்சன், ஒரு இனவாதி ஆனால் இந்து கவுன்சிலின் கோர்பின் மீதான  வெறுப்பை பகிர்ந்து கொள்வது விசித்திரமாகத் தோன்றலாம். முன்பு இதே அமைப்பு ஈ.டி.எல் வால்தம்ச்டோவ் என்ற தமிழ் மக்கள் வாழும் இடத்தில் ஒரு அணிவகுப்பை ஏற்பாடு செய்திருந்தது. அச்சமயம் இதே அமைப்பு இந்துக் கோவில்களின் முன் நின்று அதை எரிக்க வேண்டும் என்று கூச்சலிட்டது. ஆனால் பொய்யையும் அச்சத்தையும் பரப்புவதன் மூலம் தொழிலாள வர்க்க மக்களின் வீழ்ச்சியடைந்த வாழ்க்கைத் தரங்களைப் பற்றிய அச்சங்களையும் கோபத்தையும் சுரண்டுபவகள் சார்பில் திருப்ப இந்து கவுன்சிலும் துவேச அமைப்பும் ஓன்று பட்ட கருத்தை முன் வைக்கின்றன. ஒடுக்கப்பட்ட தலித் மக்களை அணிதிரட்டும் அல்லது சாதி பாகுபாட்டைக் கண்டிக்கும் எந்த ஒரு அமைப்பும் எந்த வகையிலும் HCUK உடன்  உடன்படவில்லை.

HCUK இன் முழு அறிக்கையும் அவதூறுகளால் நிரம்பிக்கிடக்கின்றது. இவர்களின் கோர்பின் மீதான தாக்குதலை ஊக்குவிக்கும் இரண்டு பிரச்சனைகள்  இவைதான்:

  •  கோர்பின் எதிர்க்கும் சாதி கட்டமைப்பை HCUK பாதுகாக்கிறது
  •  பிரதமர் மோடியின் கீழ் காஷ்மீர் மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதான இந்திய அரசாங்கத்தின் தாக்குதல்களை எச்.சி.யு.கே ஏற்றுக்கொண்டு ஆதரிக்கின்றது. கோர்பின் கஷ்மீரிகள் மீதான் அடக்கு முறைகளுக்கு எதிராக நிற்கின்ற வரலாறு அவர்களை அச்சுறுத்துகின்றது.

பிரிட்டனில் சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான  எந்தவொரு சவாலையும் HCUK எதிர்க்கிறது. சமத்துவச் சட்டம் 2010 க்குள் சாதி ஒடுக்குமுறை சட்டவிரோதமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை கோர்பினால் பாராளுமன்றத்தில் முன்மொழியப்பட்ட தருணம்  அவர்கள் அதை கடுமையாக எதிர்த்தனர். 2010 ஆம் ஆண்டில் தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்த பலர் அனுபவித்த சாதி பாகுபாட்டை சட்டவிரோதமாக்கும் இந்த முயற்சி டோரிகள், லிப் டெம்ஸ் மற்றும் வலது தொழிலாளர் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களால்  நிராகரிக்கப்பட்டது. சமத்துவ சட்டத்தில் சாதி பாகுபாட்டை 307 முதல் 243 வரை சேர்ப்பதற்கு எதிராக 2013 ல் எம்.பி.க்கள் மீண்டும் வாக்களித்தனர்.

2013 பாராளுமன்ற விவாதத்தின் போது  ​​அப்போதைய ‘ஈக்குவாலிட்டி’ அமைச்சர் லிப் டெம் ஜோ ஸ்வின்சன் தலைமையில், சாதி பாகுபாடு இருப்பதை நிரூபிப்பதற்கான  ஆதாரங்கள் இல்லை என்று தொடர்ந்து கூறினர். தேசிய பொருளாதார மற்றும் சமூக ஆராய்ச்சி நிறுவனத்தின் (NIESR) அறிக்கை பள்ளிகள் மற்றும் பணியிடங்களில் சாதி அடிப்படையிலான பாகுபாடு இருப்பதை சுட்டிக் காட்டி இருந்தது. ஒரு சம்பவத்தில் ஒரு மாணவருக்கு சாதியின் அடிப்படையில் பாடசாலை  அனுமதி மறுக்கப்பட்டது. இந்த விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெறும் போது பாராளுமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்களே சாதிய அடக்குமுறையால் பாதிக்கப்ப்ட்டதாக தெரிவித்தனர்.

2015 ஆம் ஆண்டில், கோர்பின் தொழிற்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, த எக்கேனமிஸ்ட் எழுதியது: “திரு கோர்பின் தலித்துகளின் நீண்டகால மற்றும் ஆர்வமுள்ள ஆதரவாளர், சாதி அமைப்பின் கீழ் குறைந்த அந்தஸ்து இருப்பதால், மற்றவர்களால் மோசமாக நடத்தப்படுவதாக புகார் கூறும் இந்திய மக்கள் எவ்வாறு கோபினை எதிர்ப்பார்கள்.” HCUK இன் எதிர்ப்பு இங்கிருந்துதான் வருகிறது.

டோரி மேட்டுக்குடியினரும்  இந்து மேட்டுக்குடியினரும் அப்போதிலிருந்து இப்பொழுதுவரை மிக நெருக்கமாக பணியாற்றி வருகின்றனர். அந்த நேரத்தில் ஐக்கிய ராட்சிய  இந்து கவுன்சிலின் நிர்வாக இயக்குனர் அனில் பானோட், “இங்குள்ள சாதி என்பது இப்போது ஒரு குல அமைப்பாக உருவாகியுள்ளது” என்றும் “இதில் எந்த பாகுபாடும் இல்லை” என்றும் கூறி சாதி அமைப்பை ஆதரித்தார். அத்தோடு  “சமூகத்தில் ஒரு ஆரோக்கியமான மற்றும் ஒத்திசைவான சக்தியைத் தவிர வேறு நபர்களோடு ஒன்றாக இருப்பது எப்படி?” என்றார்.

சாதி நடைமுறையின் மிகக் கொடூரமான வடிவங்களில் ஒன்றான ‘தீண்டாமை’ என்ற மோசமான நடைமுறையை எதிர்ப்பவர்களையும் நம்பமுடியாத அளவிற்கு HCUK தாக்கியது. எச்.சி.யு.கே இவ்வாறு கூறியது: “இங்கிலாந்தில் வீடற்ற மக்கள இப்போது அதிகமாக உள்ளனர், அவர்கள் இந்திய சமுதாயத்தின் தாழ்த்தப்பட்டவர்களை ஒத்திருக்கிறார்கள்.

அத்தகைய கேவலமான கருத்தை சொன்னது போதாது என பிறகு கேட்கிறார்கள்

….’தீண்டாமை’ ஏற்றுக்கொள்ளத்தக்க வடிவம் என்பதற்கான சான்றாக பிரிட்டிஷ்  தொழிலாளர்கள் எப்போதாவது உயர் மட்டத்தினருடன் சமூக தொடர்பு கொள்கிறார்களா’

எவ்வாறு சாதி காக்கும் நிலைப்பாட்டை அவர்கள் வைத்திருகிறார்கள் என்பதை இதிலிருந்து நீங்கள் தெறிந்து கொள்ள முடியும்.

காஷ்மீரில் உள்ள  இந்துக்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள் என்பதை  இந்துக்களுக்கு எதிரான பாகுபாட்டின் சான்றாக எச்.சி.யு.கே மேற்கோளிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அவர்களது சகாவான , ஆர்.எஸ்.எஸ் (பாசிச மையத்துடன் கூடிய ஹிந்து தேசியவாத அமைப்பு) அரசாங்கக் கட்சியான பாஜகவுடன் இணைந்து கஷ்மீர் பிரச்சனையை வைத்து இந்து தேசியவாத தேசபக்தியை தூண்டிவிடுகின்றது. இது இந்தியாவில் உள்ள தொழிலாழர்கள் மற்றும் ஏழைகள் மீது நடாத்தப்படும் அனைத்து வலதுசாரி தாக்குதல்களையும் மறைக்கப் பயன்படுகிறது. இந்தியாவில் உள்ள எந்தவொரு பெரிய சமூகப் பிரச்சினையையும் தீர்க்க முடியாத அரசாங்கத்தின் இயலாமை இந்த தேச பக்தியால் மூடி மறைக்கபடுகிறது.

மோடி ஆட்சியின் தலைமையில் காஷ்மீர் மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதான மிருகத்தனமான தாக்குதல் குறித்து தொழிற்கட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பலவீனமான தீர்மானமும் இந்த  இந்து தேசியவாதிகள் கோர்பினை எதிர்க்க மற்றொரு காரணமாகும்.

டோனி பிளேரின் தலைமையின் கீழ் பல சமூக அமைப்புகளில் வலதுசாரி தலைவர்கள் பிரபலியப்படுத்தப்பட்டார்கள். அவர்கள் பெரும்பாலும் ஜனநாயக பொறுப்புணர்வுக்கு உட்படுத்தப்படவில்லை. அவர்களின் வேலை  சமூகங்களை பரந்த தொழிலாள வர்க்கத்தின் கூட்டுப் போராட்டங்களிலிருந்து பிரித்து வைப்பதாக இருந்தது. நாம் எதிர்கொள்ளும் தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒன்றுபட்ட போராட்டத்தின் மூலம் உரிமைகளை வென்றேடுப்பதுக்கு பதிலாக  அவர்கள் கவுன்சில்களுடன் ‘ஒப்பந்தம் செய்வதை’ ஊக்குவித்தனர். இது வேலைகள் மற்றும் சேவைகளைப் பாதுகாக்கும் சமூக திறனைக் குறைத்து விடும் காரணியாக இருக்கின்றது.

தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்கும் பலவீனப்படுத்துவதற்கும் எப்போதும் பயன்படுத்தப்படும் இந்த அடையாள அரசியலை நாம் நிராகரிக்க வேண்டும். சமூக நலன்களின் அடிப்படையில் செயல்படாத, ஆனால் தங்கள் சொந்த முதலாளித்துவ / தேசியவாத / சாதி நலன்களுடன் செயல்பட்டு ஒற்றுமையை  பிளவுபட செய்யும் இந்த ஒடுக்குமுறை அதிகாரத்தை எதிர்க்க தெற்காசிய தொழிலாளர்கள் ஒன்று சேர வேண்டும். அனைவருக்கும் சிறந்த வீடுகள், வேலைகள் மற்றும் சேவைகளின் கோரிக்கை அடிப்படையில் நாம் ஒன்றிணைய வேண்டும். கோர்பின் அறிக்கையில் முன்வைக்கப்பட்ட அனைத்து நல்ல கொள்கைகளையும் வென்றெடுக்க தொடர்ந்து நாம் ஒன்றினைந்து போராட  வேண்டும். தேர்தல் முடிவு என்னவாக இருந்தாலும், ஒன்றுபட்ட ஜனநாயக தொழிலாள வர்க்கப் போராட்டம் கட்டமைக்கப்பட வேண்டும். மற்றும் அனைத்து தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கும் முன்னோக்கி செல்லும் வழியை வழங்கும் சோசலிச கொள்கைகளின் அடிப்படையில் ஒரு வெகுஜன தொழிலாளர் கட்சி கட்டமைக்கப்பட வேண்டும்.

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *