போராட்டத்தை முடக்கும் திசையில் ஐ.நா வும் மிதவாதிகளும்

இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் சம்மந்தமாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையின் அறிக்கை 16-09-2015 அன்று வெளியானது. 2001ல் இருந்து தொடர்ந்து நடந்த பல்வேறு மனித உரிமை மீறல்களையும் மற்றும் 2009 யுத்தகாலப் பகுதியில் நடந்த கோரங்களையும் இந்த அறிக்கை ஏற்றுக்கொண்டுள்ளது. பல்வேறு யுத்தக் குற்ற மீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் நடந்திருப்பதை விசாரணை செய்யவேண்டும் என அறிக்கை கூறுகிறது.

இந்த அறிக்கை ஒரு குற்ற விசாரணை அறிக்கை அல்ல. அறிக்கை குற்றத்தைச் செய்தவர்களைப் பற்றிக் குறிப்பிடவில்லை. குற்றங்களுக்கு எத்தகைய தண்டனை வழங்கப்படவேண்டும் எனவும் குறிப்பிடவில்லை. இதைத் தெளிவாக தெரிந்துகொள்வது அவசியம். சுமந்திரன் போன்ற கூட்டமைப்பின் தலைவர்கள் சர்வதேசக் குற்றவிசாரணை முடிந்துவிட்டது. அதன் விளைவு தான் இவ்வறிக்கை என்று பிரச்சாரம் செய்து வருவது மிகத் தவறு.

அறிக்கையில் புதிய விசயங்கள் எதுவும் இல்லை. இலங்கை அரசின் மனித உரிமை மீறல் பற்றியும் -கடைசி யுத்தத்தில் நடந்த போர்க் குற்றங்கள் மற்றும் படுகொலை பற்றியும் ஏராளமான ஆதாரங்கள் வெளிவந்து விட்டன. உலகப் புகழ் பெற்ற ஊடகங்கள் மற்றும் அமைப்;புகள் பல இந்த ஆவணங்களை வெளியிட்டுள்ளன. இலங்கை அரசியலைக் கவனித்து வருபவர்களுக்கு அறிக்கையில் எந்தப் புதினமும் இல்லை என்பது தெரியும். தவிர பல்வேறு புள்ளிகளை அறிக்கை தவிர்த்திருப்பதையும் அவதானிக்கலாம். படுகொலையில் ஐ.நா சபை, செஞ்சிலுவைச் சங்கம், இந்தியா மற்றும் மேற்கத்தேய நாடுகள் வகித்த பங்கு பற்றி அறிக்கை கண்டுகொள்ளவில்லை. படுகொலை யுத்தம் முடிந்த கையுடன் இலங்கை அரசைப் பாராட்டி ஐ.நாவில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைப் பலரும் அறிவர். யுத்தகாலத்தில் ஐ.நா எவ்வாறு கண்மூடியிருந்தது என்பதை மக்கள் அறிவர். இலங்கையில் ஐ.நாவுக்கு வேலை செய்த பலர் ராஜினாமா செய்திருப்பதும் பலரும் அறிந்ததே. தமது அறிக்கையில் தம்மைப் பற்றி அவர்கள் விமர்சிக்கப்போவதில்லைத்தானே என சிலர் கூறலாம். அவ்வாறாயின் எவ்வாறு குற்றம் செய்த இலங்கை அரசு சரியானபடி குற்ற விசாரணையை செய்யமுடியம் என ஐ.நா பரிந்துரைக்க முடியும் என நாம் கேட்கிறோம்.

ஐந்து வருடங்களுக்குப் பிறகும் குற்றங்களை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு அதற்கான நீதி வழங்குதல் நோக்கி நகரமுடியாத போதாமையைத்தான் நாம் பார்க்க கூடியதாக இருக்கிறது. யுத்தத்துக்குப் பிறகு மேற்கத்தேய அரசுகளுடன் பேச்சுவார்த்தைகளை செய்வது நோக்கி பல அமைப்புக்கள் தமது நடவடிக்கைகளை திருப்பியிருந்தன. ஐ.நா மற்றும் மேற்கத்தேய அரசுகளை லொபி செய்யும் நோக்கத்தை மட்டும் தலையாய நோக்காக கொண்டு இயங்கி வருகின்றன பிரித்தானிய தமிழர் பேரவை போன்ற அமைப்புக்கள். படுகொலை நடந்ததை மேற்கத்தேய அரசுகளை ஏற்கவைப்பது –அதன்மூலம் சுயாதீன சர்வதேச குற்றவிசாரணைக் கூண்டில் இலங்கை அரசை ஏற்றுவது – அதன்மூலம் தமிழ் பேசும் மக்களின் தேசிய அபிலாசையை நிறைவேற்றுவது நோக்கி நகர்வது. இதுதான் எமக்குச் சொல்லப்பட்ட “தந்திரோபாய” நடவடிக்கை. ஐ.நாவும் மேற்கத்தேய அரசுகளும் இலங்கையை மடக்கி வழிக்குக் கொண்டுவரும் என மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கப்பட்டது. இதன்மூலம் கொசோவோ நாடு உருவாகியதுபோல் தமிழ் ஈழம் உருவாகலாம் எனச் சிலர் நம்பினர். இந்த கதையாடலை அப்படியே கைப்பற்றிய தமிழத்; தேசியக் கூட்டமைப்பு எல்லாத் தேர்தல்களிலும் இந்தப் பிரச்சாரத்தைச் செய்தனர். தாம் வெளிநாட்டு அரசுகளுடன் பேசி வருவதாகவும் அதன்மூலம் ஏதோ ஒரு தீர்வு கிட்டும்- இலங்கை அரசுக்கு ஒரு அடி விழும் என்ற பிரச்சாரம்தான் கூட்டமைப்பின் எல்லாப் பிரச்சாரங்களிலும் ஊறியிருந்தது. கூட்டமைப்பு “தந்திரோபய” நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக கதைகள் உலாவி வருவதை அறிவோம். ‘சில விசயங்களை நாங்கள் வெளியே சொல்ல முடியாது. ஆனால் சர்வதேசத்தோடு நாம் கதைத்துக்கொண்டிருக்கிறோம்’ என சுமந்திரன் தேர்தல் மேடையில் பல தடவை பேசியிருக்கிறார்.

பிரித்தானியத் தமிழர் பேரவை ‘லொபி’ செய்த போதும்கூட தாம் தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகளைக் கைவிடவில்லை எனச் சொல்லி வருகிறார்கள். ஆனால் உலகத் தமிழர் பேரவையை நடத்துபவர்கள் அதுகூடச் சொல்வதில்லை. அவர்கள் தமது குறிக்கோளை நான்கு தூண்களாக பிரித்துக் கூறுகிறார்கள். சர்வதேசக் குற்ற விசாரணையை செய்யப்பாடுபடுவது –அந்த விசாரணையை ஐ.நா செய்ய வைக்க முயற்சிப்பது, இலங்கைக்குள்ளும் வெளிநாட்டிலும் இருக்கும் அமைப்புக்கள் மத்தியில் ஒரு உடன்பாட்டை ஏற்படுத்துவது, இலங்கைக்குள் இருக்கும் எல்லா மக்களுடனும் அவர்கள் சார் சிவில் அமைப்புக்களுடனும் வேலை செய்வது, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் இருக்கும் மக்களின் சமூகப் பொருளாதாரத் தேவைகளை கவனத்திற்கொள்வது என நான்கு தூண்களாக அவர்கள் கொள்கை விரிகிறது. இது விரிந்த கையோடயே இரண்டாவது தூண் சரிந்து விழுந்து விட்டது. பிரித்தானியப் பேரவைக்கும் உலகப் பேரவைக்கும் நடந்த மோதலின் பின் ஆழமான பிரிவு ஏற்பட்டது பலருக்கும் தெரிந்ததே. இன்று பிரித்தானியாவில் இருந்து இயங்கும் உ.த.பேரவை ஒரு வெற்று அமைப்பாக இருக்கிறது. அவர்களுக்கு பிரித்தானிய தமிழர்கள் மத்தியில் பெரும்பான்மை ஆதரவு கிடையாது. உ.த.பேரவையை உருவாக்கிய பிரித்தானிய பேரவை உட்பட அதில் அங்கம் வகித்த பல அமைப்புக்கள் வெளியேறிவிட்டன. வலதுசாரிய நிலைப்பாட்டுடன் இயங்கிவரும் கனடிய மற்றும் அவுஸ்திரேலிய பேரவை போன்ற ஒரு சில அமைப்புக்கள் மட்டும் உ.த.பேரவைக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றன. மக்கள் மத்தியில் கடுமையாக வேலை செய்யும் பெரும்பான்மை அமைப்புக்கள் பலதின் ஆதரவு அவர்களுக்கு கிடையாது.

இன்று இவர்களின் அரசியற் திட்டமிடலின் போதாமை வெளிப்பட்டுள்ளது. மேற்கத்தேய அரசுகளின் உதவியுடன் என்ன செய்யலாம் என்ன செய்ய முடியாது என்பதும் தெட்டத் தெளிவாகியுள்ளது. இலங்கையில் நடந்த கடந்த சனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களைத் தொடர்ந்து இலங்கை சார்பான மேற்கத்தேய அணுகுமுறை தலை கீழாக மாறிவிட்டது. இது எதனால் என்பதை மேற்சொன்ன லொபிகாரர் இன்னும் மக்களுக்கு விளக்க முன்வரவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்த பின்பு தெற்காசியாவில் திறந்த பொருளாதாரக் கொள்கையை பலப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் அதிகரித்திருக்கிறது என்பதை பல்வேறு வலதுசாரிய பத்திரிகைகள் பூரிப்புடன் எழுதுகின்றன. சந்தையை முன்னிலைப் படுத்திய பொருளாதார நடவடிக்கைகளை முடக்கி விடுவதற்கு வரலாறு காணாத அரிய சந்தர்ப்பம் கிடைத்திருப்பதாக வால்ஸ ரீட் ஜேர்னல் போன்ற பத்திரிகைகள் வாதிடுவதை அவதானிக்கலாம். ‘மகிந்த ராஜபக்சவை விழுத்திய கூட்டிடம் சந்தை பற்றிய ஒற்றுமை இருக்கவில்லை. ஆனால் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றி சந்தைப் பொருளாதாரத்திற்கான மேலதிக; சாத்தியங்களை வலுப்படுத்தியிருக்கிறது’ என அவர்கள் வாதிடுகிறார்கள்.

இலங்கை அரசை, தமக்குச் சார்பான பொருளாதாரக் கொள்கைகளை செயற்படுத்தும் கைப்பாவையாக பாவிப்பதுதான் மேற்கத்தேய அரசுகளின் தலையாய நோக்கம். ஐ.தே.க வலதுசாரிய கொள்கைகளை –திறந்த பொருளாதார நடவடிக்கைகளை அமுல்படுத்தும் கொள்கைகளை -கொண்ட கட்சியாக இருப்பதால் இன்றைய இலங்கை அரசின் பொருளாதார கொள்கை மேற்கை நோக்கித் திசை திரும்பியுள்ளது. பெரும் முதலாளிய மேற்கத்தேய அரசுகளுக்கும் இலங்கைக்குள் இருக்கும் பெரும் முதலாளிகளின் நலனுக்கும் சார்பாக நடவடிக்கைகளை முன்னெடுப்பதுதான் இவர்கள் அனைவரும் பேசும் “அரிய சந்தர்ப்பம்”. சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்த ஐ.எம்.எப். மற்றும் உலக வங்கி இலங்கைக்கு கடனுதவி வழங்க விரைவில் முன்வரலாம்;. யுத்தம் முடிந்த கையுடன் பெரும்தொகை கடனுதவியை வழங்கி இலங்கைப் பொருளாதாரத்தை ஐ.எம்.எப் காப்பாற்றியது அறிவோம். இலங்கை அரசு தமக்கு முழுமையான ஆதரவற்ற திசையில் நகர்ந்ததால் அவர்கள் மிகுதிக் கடன் தொகையை வழங்குவதை நிறுத்தியிருந்தனர். இனி அது இனிதே நடந்தேறும் என எதிர்பார்க்கலாம். ஆரம்பத்தில் இலங்கை அரசுக்கு கடனுதவி வழங்குவதற்கும் – மேற்கத்தேய அரசுகள் இலங்கை அரசுடன் கூடிச் செயற்படுவதற்கும் – மக்கள் மத்தியில் இருந்த எதிர்ப்பு திரும்பவும் வராமல் இருக்கும் அரசியலை கூட்டமைப்பு மற்றும் சில புலம்பெயர் அமைப்புக்களின் ஆதரவுடன் செவ்வனே நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த அரசியல்தான் நாம் ஐ.நா வெளியிட்ட அறிக்கையின் பின் இருக்கம் அரசியல். தமக்கு எதிரான திசையில் இலங்கை அரசு நகர முடியாத ஒரு தடுப்பை ஏற்படுத்திய அதே வேளை இலங்கை அரசு அனைத்துக் குற்றங்களிலும் இருந்து தப்புவதற்கு அழகான வழியை ஐ.நா வின் நடவடிக்கை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. குற்ற விசாரiணை பற்றியோ அல்லது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சரியான நீதி கிடைக்க வேண்டும் என்பது பற்றியே அக்கறை இருந்திருந்தால் அறிக்கை வேறு மாதிரி இருந்திருக்கும். குற்றத்தை விசாரிக்கும் பொறுப்பு இலங்கை அரசின் கைகளில் விடப்பட்டிருக்காது. தெட்டத் தெளிவாக குற்றங்கள் வரையறுக்ககப் பட்டிருக்க முடியும். குற்றவாளிகளையும் அவர்களுக்கு வழங்கப்படவேண்டிய தண்டனை பற்றியும் சுட்டியிருக்க முடியும். பல காரசாரமான பரிந்துரைகளை வைத்திருக்க முடியும். அத்தகைய அறிக்கையை இலங்கை அரசும் சிங்கள இனவாத துவேச சக்திகளும் கடுமையாக எதிர்திருப்பார்கள். எவர்களையும் சாந்தப்படுத்தும் நோக்கில் குற்ற விசாரணை செய்ய முடியாது என்பது அவர்களுக்கு தெரியாதா என்ன?

இது ஒரு நீதித்துறை மட்டும் சார்ந்த விசயமில்லை. இது அரசியல் அடிப்படையில் நிகழும் செயற்பாடு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அமெரிக்க முதலாளித்துவத்திக் கட்டுப்பாட்டில் இயங்கும் ஐ.நாவின் நடவடிக்கைகள் அனைத்தும் அரசியல் சம்மந்தப்பட்டதாகவே இதுவரை காலமும் இருந்து வந்திருக்கிறது. மக்களின் உரிமைகள் ஐ.நாவில் அதிகார சக்திகளுக்காக பந்தாடப்பட்டு வந்திருக்கிறது. இதில் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை என்பதையே இலங்கை சார்ந்த அவர்கள் நடவடிக்கையும் நிரூபித்துள்ளது. இந்த அறிக்கை வெளிவந்த இதே நேரத்தில் மனிதஉரிமை கவுன்சிலின் தலைமை- மிகப்பெரும் மனித உரிமை மீறல்களைச் செய்யும் சவுதி அரேபியாவுக்கு வழங்கப்பட்ட வேடிக்கையும் நிறைவேறியிருக்கிறது. அந்த அரசு பலரது தலைகளைத் துண்டாடிய இரத்தம் ஆற முதல் – அரசுக்கெதிரானவர்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்ற சட்டத்தை அவர்கள் கொண்டுவர இருக்கும் செய்தி ஆற முதல் – ஐ.நா வின் மனித உரிமை கவுன்சில் தலைமை அவர்கள் கைகளில் விழுந்துள்ளது. ஐ.நாவின் எல்லைகளை புரிந்துகொள்ள இதைவிட வேறு என்ன சிறந்த உதாரணம் இருக்க முடியும்?

இலங்கையைப் பொறுத்த வரையில் ஐ.நா தனது நடவடிக்கைகளை முடக்கி விட்டது என்பதை அறிக்கை தெளிவாக்கியிருக்கிறது. “மேற்பார்வையிடுதல்” , “கண்காணிப்பு”. “அவதானித்தல்”, “தொழில் நுட்ப உதவிகளை வழங்குதல்” என்பதாக ஐ.நா தன் பணிகளைக் குறுக்கிக்கொண்டுள்ளது. இலங்கை அரச தமது “அரசியலமைப்பை வலுப்படுத்த வேண்டும்” என்ற அடிப்படையில் சில பரிந்துரைகள் வைக்கப்பட்டுள்ளன. விபரங்களைத் தொகுத்தல், அரசியற் கைதிகள் பற்றிய விபரங்களை வெளியிடுதல், மனித உரிமை மீறல்களின் பாரதூரங்களைப் படையினருக்குப் படிப்பித்தல், முதலான பரிந்துரைகளும் வைக்கப்பட்டிருக்கிறது. எல்லா அரசுகளும் பின்பற்ற வேண்டிய அடிப்படைகள்தான் இவை. இது ஒரு விசேஷக் கோரிக்கை அல்ல. மனித உரிமைகளை மீறச் சொல்லி எந்த ஒரு அரசும் தமது இராணுவத்துக்கு போதிக்கக்கூடாதுதானே. இந்தப்படிப்பினை இராணுவத்துக்கு வழங்கப்பட்;டால் மட்டும் போதுமா? யுத்ததில் எல்லா இராணுவங்களும் மனித உரிமைகளை மீறுகின்றன. இதனாற்தான் ஒடுக்கப்படும் மக்கள் இராணுவத் தீர்வுக்கு அப்பாற்பட்ட – அரசின் அதிகாரத்துக்கு அப்பாற்பட்ட தீர்வைக் கோருகிறார்கள். அதை நோக்கி அரசுகளின் ஆசீர்வாதங்களுடன் நகரமுடியாது என்ற அடிப்படைப் புரிதல் அவசியம்.

இத்தகைய ஆலோசனைகளை இலங்கை அரசுக்க ஐ.நா வழங்கும் பின்னனி என்ன? நடந்த குற்றங்களையும் படுகொலையையும் மூடி மறைக்கும் அதே வேளை மக்களின் கோபத்தையும் எதிர்ப்பையும் தணிப்பது எவ்வாறு என்ற அரசியல்தான் அதன் பின்னணி. சந்தேகத்துடன் இருப்பவர்களை ‘நம்பச் செய்யும் நடவடிக்கை’ முன்னெடுக்க வேண்டும் என அறிக்கை நேரடியாகப் பேசுகிறது. தனியார் நிலங்களை அரசு திருப்பி வழங்கவேண்டும் என சொல்லப்பட்டிருப்பது வரவேற்கப்படவேண்டியதே. ஆனால் அதைத்தாhன் தாம் செய்துவருவதாக இலங்கை அரசு சொல்லி வருகிறது. தாம் அரச நிலத்திலும் பொது நிலத்திலும் மட்டும் முகாம் அமைப்பதாக அரசு சொல்லி வருகிறது. யுத்தகாலப்பகுதியில் உருவாக்கப்பட்ட அனைத்து இராணுவ முகாம்களும் மூடப்படவேண்டும். தமிழ் பேசும் மக்கள் பிரதேசங்களில் இராணுவம் முற்றுகையிட்டிருப்பது மாற்றப்படவேண்டும் முதலிய கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. இதற்குப் பதில் இல்லை.

‘கலப்பு நீதிமன்றம்’ ஒன்றை நிறுவி குற்றவாளிகளைக் குறுக்கு விசாரணை செய்யலாம் என எமக்குச் சொல்லப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து நீதிபதிகள், ஆய்வாளர்கள், முதலியோரை இணைப்பதை ‘கலப்பு’ குறித்து நிற்கிறது. இலங்கை அரசுக்கு வக்காலத்து வாங்கும் மேற்கத்தேய அதிகாரிகளை நியமிக்க நேர்ந்தால் எப்படி நீதி கிடைக்கும்? இதனாற்தான் மக்கள் சார்ந்த மனித உரிமை அமைப்பு;கள் மற்றும் தொழிற் சங்கங்கள், ஒடுக்குமுறைக்கு உள்ளானவர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலின் முக்கியத்துவத்தை தமிழ் சொலிடாறிற்றி போன்ற அமைப்புக்கள்.

வலியுறுத்தி வருகின்றன. அவர்கள் முன்வைக்கும் நல்லிணக்கத்துக்கான முன்மாதிரி இந்தக் கலப்பு நீதிமன்;றத்தின் போலித்தன்மையை வெளிக்காட்டி நிற்கிறது. தென்னாபிரிக்காவில் நிகழ்ந்தது போன்ற ‘உண்மையும் நல்லிணக்கமும்’ செய்யப் போகிறார்களாம். கூட்டமைப்புத் தலைமைகளை இலங்கை அரசுடன் இணைத்து நீதி வழங்குவதான நாடகத்தை நடத்தி – பின் எல்லாம் சுமுகம் என்ற கதையாடலை நிறுவுவதுதான் இவர்கள் நோக்கம். நீதி வழங்குவதானால் இன்றைய அரசில் பங்குவகிக்கும் பலர் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்படவேண்டும். கோத்தபய ராஜபக்ஷ, சரத் பொன்சேகா மற்றும் பல இராணுவத் தளபதிகள் உட்பட இன்றைய அரசில் பங்கு வகிக்கும் பலர் சிறை செல்ல நேரிடும். ஐ.நா, செஞ்சிலுவைச் சங்கம், மேற்கத்தேய அரசுகளின் பங்களிப்பு ஒளிப்பு மறைப்பின்றி விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். நடக்கிற காரியமா அது?

தென் ஆபிரிக்காவில் நடந்தது என்ன என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். ஆண்டாண்டுகளாக கடும் துவேசத்துக்குள்ளாகி வறுமைக்குள் முடக்கப்பட்டிருந்த கறுப்பின மக்களுக்கு அங்கு நீதி கிடைக்கவில்லை. உண்மை அறிதலும் நல்லிணக்கமும் என்ற பெயரில் துவேசத்துக்கும் ஒடுக்குதலுக்கும் காரணமாயிருந்தவர்கள் மன்னித்து அனுப்பப்பட்டதுதான் அங்கு நிகழ்ந்திருக்கிறது. புதிததாக உருவாக்கப்பட்ட ‘கறுப்புத் தலைவர்கள்’ அரசுடன் இணைக்கப்பட்டு அவர்களுக்கூடாக ஏனைய கறுப்பினத்தவர்களின் கோபங்களும் அதிருப்தியும் கட்டுப்படுத்தப்பட்டதுதான் அங்கு நிகழ்ந்தது. துவேசம் செய்து சுரண்டல் செய்து சுகம் கண்டவர்கள் பிரித்தானிய பிரதமர் மார்கிரட் தச்சரின் நெருங்கிய நன்பர்கள். அவர்களுக்கு பிரித்தானிய அரசு உட்பட பல அரசுகள் ஆதரவும் உதவியும் வழங்கி வந்திருக்கின்றன. ஆக இந்த ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிரான நடவடிக்கை இந்த அரசுகளுக்கு எதிரான நடவடிக்கையாகவும் இருக்கிறது. அதனால் நல்லிணக்கம் என்ற பெயரில் ஒடுக்குமுறையாளர்கள் காப்பாற்றப்படுகின்றனர். இதுதான் இலங்கையிலும் நிகழ்கிறது. இலங்கை அரசின் கூட்டாளிகளும் சேர்ந்து குற்றவாளிக் கூண்டில் ஏறாமல் இருப்பதற்காக குற்றம் செய்தவர்கள் காப்பாற்றப்படுவர். தென் ஆபிரிக்காவில் போராட்டம் நடந்த காலப் பகுதியில் சுரங்கத் தொழிலாளர்களின் தலைவராக இருந்த சிறில் ராமபோசா போன்றவர்கள் அதிகார சக்திகளாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். இன்று அவர் ஒரு மில்லியனர். இவர் இலங்கைக்கும் பயணம் செய்து நீதிக்கான ஆலோசனை வழங்கும் பரிதாபமும் நிகழ்கிறது.
இவ்வகை நீதி வழங்குதல் மூலம் அவர்கள் தென் ஆபிரிக்க நாட்டின் ஏற்றத் தாழ்வுகளைக் காப்பாற்றிக்கொண்டார்கள். இன்று உலகின் அதிகூடிய ஏற்றத் தாழ்வுள்ள நாடாக இருக்கிறது தென் ஆபிரிக்கா. மரிக்கானா என்ற இடத்தில் நடந்த படுகொலை இந்த ஏற்றத் தாழ்வையும் சிறில் ராமபோசா போன்றோரின் கொடிய முகத்தையும் கிழித்துக் காட்டியுள்ளது. தென் ஆபிரிக்க முன்னுதாரணம் இதுதான்.

சுமந்திரன் போன்றோர் இலங்கைச் சிறில் ராமபோசாக்களாக நடமாட பகொலைகளும் ஏற்றத் தாழ்வும் ஒடுக்குமுறைகளும் கேட்பாரற்றுத் தொடரும். இதற்கு எழக்கூடிய எல்லா எதிர்ப்புகளையும் முடிவுகட்டுவதில் அவர்கள் குறியாக இருக்கிறார்கள். “.இலங்கை அரசு சரியான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது” என ஏற்கனவே சம்மந்தன் சொல்லியிருக்கிறார். இலங்கை அரசு எறியும் பி;ச்சையை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு தமிழ் மக்களை மேய்க்க கூட்டமைப்பு தயாராகிவிட்டது. இதற்கு மக்களைத் தயார்படுத்தும் பிரச்சாரம் ஏற்கனவே தொடங்கிவிட்டது.

இதற்கு ஆதரவாக புலம்பெயர் அமைப்புக்கள் சிலவற்றின் ‘தலைமைகளும்’ தங்களை மாற்றிக்கொண்டுள்ளன. பிரித்தானிய தமிழர் பேரவை மற்றும் உலகத் தமிழர் பேரவை ஆகிய அமைப்புக்கள் பல பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நெருக்கமாக வேலை செய்து வருகின்றனர். இந்த மோசமான வலதுசாரிய பா.உ பலர் ஒன்றுகூடி தமிழர்களுக்கான பா.உ குழு ஐ.நாவை வரவேற்று ஒரு மோசமான அறிக்கையை விட்டிருந்தது. அறிக்கை வெளிவருவதற்கு காரணம் பிரித்தானிய அரசு என அந்த அறிக்கை ஒரு பகிடியும் விட்டிருக்கிறது. லொபி என்ற பெயரில் ஓடித்திரிந்தவர்கள் முகத்திலும் சேர்த்து விழுந்த ஒரு குத்து அது. அதே சமயத்தில் தமது வியாபாரத்துக்கான பிரச்சாரத்தையும் அவர்கள் முடக்கி விட்டுள்ளார்கள். இங்கிலாந்து பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் கலந்துகொண்ட இவர்கள் வைத்த கருத்துக்களை அவதானித்தால் தெரியும் அவர்களின் நோக்கம்.

கூகோ ஸ்வைர் என்ற மோசமான வலதுசாரிய கன்சவேட்டிவ் பா.உ ‘தமிழ் மக்கள் மிகச்சிறந்த வியாபாரிகள்’ என்றார். கண்ட நிண்;ட செலவுக்கெல்லாம் கணக்குக்காட்டி மக்களின் வரிப்பணத்தைச் சூறையாடிப் பிடிபட்டுப் புகழ் பெற்றவர் இவர். “தமிழ் மக்கள் சர்வதேச விசாரணையைக் கோருகிறார்கள். இருப்பினும் நாம் இலங்கை அரசை இணைத்த உள்நாட்டு விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தி வந்திருக்கிறோம்” என அவர் பெருமையாக சொல்லிக்கொண்டார். வியாபாரம் மற்றும் முதலீடு செய்வது பற்றியே அவர்களின் பேச்சு முக்கிய கவனம் செலுத்தியது. யாழ் விமானத் தளத்தை அபிவிருத்தி செய்வது- இந்தியாவுக்கும் இலங்கைக்குமான பாலம் அமைப்பதில் முதலீடு செய்வது பற்றிப் பேசிக்கொண்டார்கள். பிரித்தானியாவில் வாழும் தமிழ் பேசும் மக்கள் இந்த முதலீடுகளில் ஈடுபடுவதே அவர்கள் செய்யவேண்டிய அரசியல் என்பது அவர்களின் கருத்துக்களின் சாரம். பறக்கும் போக்ஸ் என முன்பு கிண்டலாக அழைக்கப்பட்டவரும் மகிந்த அரசுடன் மிக நெருக்கமாக இயங்கி வந்தவருமான லியாம் போக்ஸ் என்ற வலதுசாரிக் கன்சவேட்டிவ் பா.உ இதைத்தான் கன காலமாக வாதிட்டு வருகிறார். இன்று தமிழர்களுக்காக பேசுகிறோம் என போக்குக்காட்டிக்கொண்டிருந்த மற்றவர்களும் போக்சின் நிலைப்பாட்டையே வெளிப்படையாக வைக்கிறார்கள். அதைக் கேட்பார் இல்லை. அவர்களுடன் இணைந்து வேலை செய்யும் தமிழர் ஒரு சொட்டு எதிர்ப்புச் செய்யவில்லை. மாறாக கூகோ ஸ்வைரைச் சந்தித்த சுமந்திரன் ‘நல்லிணக்க நடவடிக்கையை பிரித்தானியா தலைமை தாங்கி நடத்த வேண்டும்’ எனக் கேட்டிருக்கிறார் என்றால்; பாருங்கள்.

இந்தத் தலைமைகள் தங்கள் தோல்வியை ஒத்துக்கொள்ள வேண்டும். சர்வதேச விசாரணை என்ற பேச்சுப்பேசி இதுவரை காலமும் இவர்கள் வெவ்வேறு அதிகாரச் சக்திகளுடன் நெருக்கமாகி வந்திருக்கிறார்கள். இந்த நடவடிக்கையால் தமிழ் பேசும் மக்களுக்கு எந்த நன்மையும் கிட்டவில்லை. மாறாக வலதுசாரிய அரசுகளின் பிரச்சாரங்கள் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பலப்படத்தான் இது உதவியுள்ளது. அதுமட்டுமின்றி இந்த அமைப்புக்களுக்குள் வலதுசாரிய நபர்களின் கைகள் ஓங்குவதற்கும் இது வசதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. முற்போக்குச் சக்திகளும் போராட்டக் குரல்களும் மேலும் மேலும் நசுக்கப்பட்டு வருகிறது. ராஜதந்திரம் என்ற பெயரில் இவர்கள் அதிகார சக்திகளிடம் நெருங்க நெருங்க இந்த அமைப்புக்கள் போராட்டக் கருத்துக்களிலும் நடவடிக்கைகளிலும் இருந்து மேலும் மேலும் தூர விலகிக்கொண்டிருப்பதைப் பார்க்க கூடியதாக இருக்கிறது.

தமிழ் மக்களின் மத்தியில் மிதவாதிகளின் செல்வாக்கைப் பலப்படுத்துவதற்கான முயற்சியை அதிகாரச் சக்திகள் நீண்டகாலமாகச் செய்துவருகின்றன. 2009ல் கோரப் படுகொலையுடன் முடிந்த யுத்தம் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து விடவில்லை.‘போராட்டம் தொடரவேண்டும் என்ற தலைப்பில் தமிழ் சொலிடாறிற்றி அமைப்பு வெளியிட்ட துண்டுப் பிரசுரத்தை மக்கள் பறித்துக்கொண்டு செல்லும் நிலைதான் 2009ல் இருந்தது. பல தடவைகள் அத்துண்டுப் பிரசுரத்தை மீண்டும் மீண்டும் அச்சடிப்பதும் அவற்றை மக்கள் அள்ளிச் செல்வதுமாக இருந்தது நிலமை. போராட்டக் கருத்தாடல் தோற்கடிக்கப்படவில்லை. மாறாக படுகொலை அக்கருத்தாடலை மேலும் பலப்படுத்தியிருந்தது. தேசியக் கோரிக்கை இதனால் மேலும் பலப்பட்டிருக்கிறதேயன்றி பலவீனப்படவில்லை. அதுவரை காலம் கிரிக்கெட்டில் இலங்கைக்கு ஆதரவு கொடுத்துக்கொண்ருந்த இளசுகள் அதை கைவிட்டார்கள். அடுத்த தலைமுறையிடம் ‘தமிழ்’ அடையாளம் துரிதகதியில் ஊறி வளர்ந்தமைக்கு பின்னால் போராட்டம் தொடருவதற்கான உந்தல்தான் இருந்தது. தமிழ் சொலிடாறிற்றி உட்பட போராட்டக் கருத்தியலைக் கொண்ட பல்வேறு அமைப்புக்கள் உயிர்ப்படைந்தன. இது ஒரு விபத்தல்ல. புறநிலையில் இருந்த போராட்டத் தேவையின் வரலாற்று உந்து விசையின் வெளிப்பாடுகள் இவை.

‘சுமூக நிலைக்குத் திரும்புதல்’ என்பதை அனைவரும் ஆதரித்தனர். ஆனால் இது தோல்வியை ஏற்று அடிபணிந்த அடிப்படையில் நிகழவில்லை. போராட்டக் கதையை முற்றாக கைவிட்ட நிலையில் அக்கோரிக்கை எழவில்லை. மாறாக எதிர்காலத்தில் போராட்டத்தைக் கட்டுவதற்குத் தேவையான முதற்படியாகத்தான் இக்கோரிக்கை வைக்கப்பட்டது.

மக்கள் மத்தியில் பலப்பட்டிருந்த போராட்ட அரசியலுக்கான வேட்கையை ‘ஆபத்தானதாகக்’ கருதின இலங்கை அரசும் மேற்குலக அரசுகளும். குறிப்பாக புலம்பெயர் இளையோர் மத்தியில் ஏற்பட்ட மாற்றம் எதிர்காலத்தில் ஆபத்தானதாக மாறலாம் என்ற பயம் இருந்தது. அரசுகளுக்கும் அரச நிறுவனங்களுக்கும் அறிவுரை வழங்க ஆய்வுகளைச் செய்துவரும் ஜ.சி.ஜி என்ற அமைப்பு 2010ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் எவ்வாறு புலம்பெயர் மாற்றத்தைப் பார்த்தார்கள் என்பதை அவதானிக்க வேண்டும். புலம் பெயர் தமிழ் மக்கள் பற்றிய தனிப்பட்ட அறிக்கையை அவர்கள் தயாரித்திருந்தார்கள். இந்த அறிக்கையை அனைவரும் படித்துப் பார்க்க வேண்டும். ‘யுத்தத்தின் இறுதிகாலப் பகுதியில் சனநாயக நாடுகள் என்று சொல்லப்படுகிற மேற்குலக நாடுகள் ஏதாவது ஒரு விதத்தில் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்துவர் என பல இளைஞர்கள் எதிர் பார்த்தார்கள். இது நிகழவில்லை. இதனால் மேற்கு நாடுகள் மேலிருந்த இளையோரின் நம்பிக்கை உடைந்து விட்டது எனச் சரியாக அவர்கள் கணித்திருந்தனர். இதைத் தொடர்ந்து இவர்களை ‘வசப்படுத்தும்’ நடவடிக்கைகள் முடக்கி விடப்பட்டது. லொபி செய்யப் போhனவர்கள் அனைவருக்கும் முதல் போடப்பட்ட நிபந்தனை அவர்கள் முற்று முழுதாக புலிகளை மறுக்க வேண்டும் என்பதாக இருந்தது. புலிகளை மறுக்கச் சொல்லி அவர்கள் கேட்டது மனித உரிமையை மதிக்கும் நோக்கத்துடனோ அல்லது புலிகளின் தவறுகளை விமர்சித்த நோக்கத்துடனோ அல்ல. அவர்களின் புலி மறுப்புக்குப் பின்னால் ஒட்டுமொத்த போராட்டத்துக்குமான மறுப்பு இருந்தது. புலிகள் விட்ட தவறுகளை விமர்சித்துக்கொண்டு போராட்ட அரசியலைத் தொடரவேண்டும் என வாதிப்பவர்கள் செய்த நோக்கில் இருந்து இது முற்றாக மாறுபட்ட ஒன்று என்பதை அவதானிக்க வேண்டும்.

இதைத் தொடர்ந்து 2011ல் வெளியான ஐ.நா அறிக்கையும் புலம் பெயர் மக்கள் மேல் தாக்குதல் செய்திருந்ததை நாம் மறந்துவிடக்கூடாது. ‘புலிகள் வன்னியில் செய்த மனித உரிமை மீறல்களை ஏற்றுக்கொள்ள சிலர் மறுத்து வருகிறார்கள். நீண்ட அமைதியை உருவாக்க இது தடையாக இருக்கிறது’ என்ற கேவலமான விமர்சனத்தை அந்த ஐ.நா அறிக்கை வைத்திருந்தது. புலிகளை மக்கள் விமர்சிக்காததுதான் அமைதிக்கு தடையாக இருக்கிறது என ஐ.நா சொன்ன இந்த வெட்கக்கேடான கதைக்குப் பின்னால் இருக்கும் அரசியல் என்ன என்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டும். போராட்ட வரலாற்றில் இருந்து முற்றாக முறித்துக்கொண்டு தமிழ் மக்கள் மிதவாதத்துக்கு நகரவேண்டும் என்ற அடிப்படையை முன்னணி நிபந்தனையாக வைத்திருந்தன அனைத்து அதிகார சக்திகளும். அதிகார சக்திகளின் ஆதரவை வெல்வதைத் தவிர வேறு வழியில்லை என வாதிட்ட சிலர் அவர்களின் கோரிக்கைகளுக்கு ஏற்பத் தம்மை மாற்றிக்கொள்ள தயாராக இருந்தனர். இவர்களை கண்டு பிடித்து தூக்கி விடுவதில் அதிகார சக்திகளும் குறியாக வேலை செய்தன. மக்களைத் திரட்டி அவர்களின் போராட்ட ஆதரவுப் பலத்துடன் அதிகாரங்களுடன் பேசுவது பற்றி பேசியவர்கள்கூட ஒதுக்கப்பட்டனர். அதிகார சக்திகளைக் கவர்வதானால் அவர்கள் மொழியில் பேசவேண்டும் – அவர்கள் சொல்வதைக் கேட்கவேண்டும் என வாதிடப்பட்டது. இவ்வாறு வாதிட்ட நபர்களை உயர்த்தித் தமது பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் பலப்படுத்தும் நடவடிக்கையில் மேற்குலகு ஓரளவு வெற்றியடைந்திருக்கிறது. போரட்ட அரசியலுக்காக வாதிடுபவர்களைத் தாக்கும் செயலைச் செம்மையாகச் செய்து வருகிறார்கள் மேற்கின் நண்;பர்கள். ‘போராட்டத்தை பண்பாடோடு’ செய்யவேண்டும் என அறிவுரை வளங்கப்படுகிறது.

தமக்கு மக்கள் மத்தியில் அதரவு இருப்பதாக இந்த மிதவாதிகள் சொல்லி வருவது தவறு. சர்வதேசத்தைக் கொண்டு வந்து இறக்கப் போகிறோம் என்ற பிரச்சாரத்தை வைத்துத்தான் கூட்டமைப்பு வாக்கு வாங்கி வந்திருக்கிறது. இன்றும் அவர்களுக்கு புலம்பெயர் மக்கள் மேல் பயமிருக்கிறது. இன்றும் அவர்கள் தாம் புலிகளுக்கு அடுத்த தமிழர் பிரதிநிதி என்ற அடிப்படையில்தான் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். கூட்டமைப்புக்கு வாக்களிப்பதைவிட மக்களுக்கு தமது எதிர்ப்பைக் காட்ட வேறு வழியில்லை. இலங்கை அரசுக்கு எதிரான எதிர்ப்பின் வாக்குகள் மூலம்தான் கூட்டமைப்பு அதிகாரம் திரண்டுள்ளது. கூட்டமைப்பின் கொள்கைகளை ஆய்வுசெய்து அவர்களின் வலதுசாரிய சரிவுக்கு உடன்பட்டு தெளிவுடன் விழுந்த வாக்குகளாக கூட்டமைப்புக்கு விழுந்த வாக்குகளைப் பார்ப்பது தவறு. ஒன்றுபட்ட எதிர்ப்பு என்பது தமிழ் மக்கள் மத்தியில் இன்றும் ஓங்கியிருக்கும் கருத்தாக இருப்பதால்தான் இதுவரை தப்பி வந்திருக்கிறது கூட்டமைப்பு. இந்த எதிர்ப்பை பாவித்து அதிகாரத்தை சுவாசிக்கும் கூட்டமைப்பு எதிர்ப்பை மழுங்கடிப்பதற்கான எல்லா வேலைகளையும் செய்து வருகிறது. தாம் கண்டு பிடிக்கப்பட்டு விட முதல் போராட்ட அரசியலை மிதவாத அரசியலாக மாற்றிவிட வேண்டும் என்பதில் அவர்கள் முனைப்போடிருக்கிறார்கள். ஐ.நா அறிக்கைக்கு பிறகு சுமந்திரன் கலந்துகொண்ட லண்டன் கூட்டத்துக்குப் போனவர்களுக்கு இதை புரிந்துகொள்ள முடியும். இந்த அறிக்கை போல் திறமான அறிக்கையை நாம் பெற்றுவிட முடியாது என சுமந்திரன் ஒரு போடு போட்டார். அமெரிக்காவுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றார் இன்னுமொரு கூட்டமைப்பாளர். ரோட்டுவழிய கொடிய எரிச்சுப்போட்டு பிறகேன் ஐ.நா வுக்கு வாறிங்க என மற்றுமொருவர் “ஆழமான” கேள்வியைக் கேட்டார். நாடுகளின் கொடிகளை எரித்து அசிங்கமான போராட்டத்தைச் செய்யாதீர்கள் – மூளையை வளர்த்துக்கொள்ளுங்கள் என்ற அறிவுரையும் வழங்கப்பட்டது. உங்கள் விமர்சனங்களால் மற்ற நாடுகளை எங்களுக்கு எதிராகத் திருப்பி விடாதீர்கள் என்ற மோட்டுத்தனமான எச்சரிக்கையும் விடப்பட்டது. போராட்டம் பற்றிப் பேசும் திருமுருகன் காந்தி போன்றவர்கள் கடுமையான வார்த்தைகளால் திட்டப்பட்டார்கள். அதிகாரத்தின் மொழியில் அவர்கள் பேசினார்கள். இதுவரை காலமும் அதிகார சக்திகள் தமிழ் பேசும் மக்களுக்கு “படிப்பிக்க” விரும்பியவைகளை தற்போது சுமந்திரனின் மற்றும் ஏனைய மிதவாதிகளின் வாய்கள் தமிழில் படிப்பிப்பதை பார்க்கக்கூடியதாக இருந்தது. மேற்கின் முகவர்களாக அவர்கள் உருமாறிவிட்டது தெரிந்தது.

‘பிடரலுக்கான கோரிக்கையை மயித்திரியும் ரணிலும் ஏற்றுக்கொண்டால் விசயம் முடிஞ்சுது’- ‘அது இன்னும் நடக்காததால் அதற்கான் பேச்சுவார்த்தை செய்வதுதான் எமது நோக்கம்’ என நக்கல் சிரிப்புடன் தமது திட்டத்தை விளங்கப்படுத்தினார் சுமந்திரன். இலங்கைக்குள் “சமமான பிரஜா உரிமையுடன்” வாழ்தல் என்பதுதான் முக்கியம் என அவர் வாதிட்டார். யாழ் மேலாதிக்க தொனியில் பேசினார் சுமந்திரன். ஏற்கனவே மேற்கின் பிச்iயில் வாழுதல் – சந்தர்ப்பத்தை பாவித்து வியாபாரத்தைப் பெருக்குதல் என்பதால் கவரப்பட்டவர்களுக்கு சுமந்திரனின் பேச்சு தேனாக இருந்திருக்கும். தனது இலகு தர்க்கங்களால் போராட்ட அரசியலுக்காக வாதிடுபவர்கள் தலைகளில் ஓங்கி அடித்து நொருக்கலாம் என அவர் நினைக்கிறார் போலும். வெற்றுத் தர்க்கங்களுக்கு அப்பாற்பட்ட இயங்கியலில் அவர்க்கு அக்கறையில்லை. வரலாற்று நீரோட்டத்தை கணக்கில் எடுத்து அவர்கள் கதைக்கப்போவதில்லை. தான் ஒரு வக்கீல் என்பதையும் அவர் அடிக்கடி ஞாபகப்படுத்தி எம்மை மிரட்டப் பார்த்தார்.

ஒரு “வக்கீலாக” ஏன் நாம் “படுகொலை” என்ற பதத்தைப் பாவிக்க கூடாது என்ற விளக்கத்தையும் தந்தார். ‘வெற்றி பெறத்தக்க ஆதராங்களைத் திரட்டிய பிறகுதான் நீங்கள் நீதிமன்றம் செல்ல வேண்டும். அதற்கு முதலே அவசரப்பட்டால் வழக்கு தோல்விதான்’என எமக்கு வக்கீல் ஆலோசனை வழங்கினார். நீங்கள் படுகொலைக் குற்றச் சாட்டை அவசரப்பட்டு வைத்து விட்டீர்கள் என்பது அவர் குற்றச்சாட்டு. இது வெறும் சட்டம் சம்மந்தப்பட்ட விசயமில்லை என்பதை அவர் கவனிக்கவில்லை. அதைக் கவனித்திருந்தால் ஏராளமான ஆதாரங்கள் ஏற்கனவே வெளிவந்திருப்பது அவர் கண்களுக்குத் தெரிந்திருக்கும். படுகொலை குற்றச்சாட்டை வைக்க அந்த ஆதாரங்கள் போதும். பிரச்சினை அதுவல்ல. ஆதாரங்கள் இருந்தாலும் இந்தக் குற்றச்சாட்டு ஏற்றுக் கொள்ளப்படப் போவதில்லை. அதற்கான அரசியல் விருப்பு இல்லை என்பதுதான் உண்மை. மேற்குலகு இக்குற்றச் சாட்டை வைப்பதன் மூலம் தமது நலன்களை நகர்த்த முடியும் என நினைத்தால் ஆதாரம் இல்லாமலே அவர்கள் அதைப் பேசியிருப்பார்கள். ஆதராங்களைக் காட்டி நிரூபித்து விட்டபிறகா அவர்கள் ஈராக் நோக்கி படை எடுத்தார்கள். உலக அரசியல் மேடையில் ஆதாரங்கள் என்பது வெறும் போலி விளையாட்டாகத்ததான் இருந்து வந்திருக்கிறது. மிதவாதிகள் அவற்றை வைத்து பந்தாடி வந்திருக்கிறார்கள். இலங்கையின் படுகொலைக்கு ஆதாரம் இல்லை என்பதைப் போன்ற விசர்க்கதையை “தமிழ் வக்கீல்” சொல்லி விட்;டால் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமாம். வடக்கு மாகாண கவுன்சிலில் இது பற்றி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து படுகொலை குற்றச் சாட்டு உலக அரங்கில் பலப்பட்டது என்பது உண்மை. அவசரப்படக்கூடாது என ஏன் சுமந்திரனும் கூட்டமைப்பும் அந்தத் தீர்மானத்தை தடுத்து நிறுத்தவில்லை? நாட்டுக்குள் நேர்மையாக நடந்துகொண்டு நீங்கள் வாக்கு கேட்கப் போகவேண்டும். வடக்கில் ஒரு கதை – தெற்கில் ஒரு கதை–வெளிநாட்டில் ஒரு கதை என பல கதைககள் கதைக்கக்கூடாது. ஆனால் வட மாகாணத் தீர்மானம் முதலமைச்சரின் பிழை என அவர்மேல் விமர்சனம் வைக்கப்படுகிறது. மக்கள் மத்தியில் மாறிவரும் சூழ்நிலை கூட்டமைப்பு தலைவர்களுக்குத் தெரியவில்லை –அவர்கள் இளையோருக்கு வழிவிடத் தயார் இல்லை போன்ற விமர்சனங்களை முதலமைச்சர் வைத்தமையால் அவர்மேல் சரியான கடுப்போடு இருக்கிறார்கள் கூட்டமைப்பின் தலைவர்கள். எதிர்காலத்தில் முதலமைச்சர் கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும்.

சட்டப்படி சரிசமத்தை வென்றடுக்கப் பாடுபடும் இந்த வக்கீல்களுக்கு சட்டத்துக்கும் அரசியலுக்கும் இருக்கும் தொடர்பு தெரிவதில்லை. பெரும்பான்மை மேற்குலக நாடுகளில் துவேசத்துக்கு எதிரான சட்டம் உண்டு. இதனால் துவேசம் இல்லாமற் போய்விடவில்லை. சட்டத்தை மாற்றுவதால் மட்டும் தெற்கு இனவாத அரசு வழிக்கு வந்துவிடப் போவதில்லை. அரசியல் மாற்றம் வரவேண்டும். அரசியல் மாற்றத்தின் பகுதியாகத்தான் மக்கள் நீதி கேட்கிறார்கள். நீதி என்பது பழிவாங்கும் நோக்கில் கேட்கப்படவில்லை. ஒரு சிலர் குற்றவாளிக்கூண்டில் ஏற்றப்பட்டு சிறை செல்வதால் மட்டும் மக்களுக்கு நீதி கிடைத்துவிடப் போவதில்லை. மாறாக அவர்களது தேசிய அபிலாசைகளை இணைத்த அரசியற் தீர்வை நோக்கி நகருதல்தான் நீதியையும் சமாதானத்தையும் அடைய ஒரே வழி. இது அரசுகளின் ஆசீர்வாதங்களோடு மட்டும் நிகழ முடியாது. மக்களின் போராட்டப் பலத்தைக் கட்டுவதன் மூலம் மட்டுமே இது சாத்தியம். “பேச்சுவார்த்தை” மூலம் உரிமைகளை வென்றெடுத்துத் தருகிறோம் என “தலைவர்களால்” விற்கப்பட்ட வரலாறைத் தமிழ் பேசும் மக்கள் அறிவர். எத்தனை ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டன என்பதையும் அறிவர். தமிழ் பேசும் மக்களின் தனிப்பட்ட பலத்தைக் கட்டி நிமிர்த்தாமல் எவ்வித வாய்ப் பேச்சுக்களும் மாற்றத்தைக் கொண்டு வந்துவிடப்போவதில்லை.

கூட்டமைப்புத் தலைவர்களோ ஏனைய மிதவாதிகளோ கனவு காண்பதுபோல் அவ்வளவு இலகுவில் போராட்ட அரசியலைச் சாகடித்துவிட முடியாது. ஒடுக்குமுறை இருக்கும்வரை அது இருந்துகொண்டுதான் இருக்கப் போகிறது. ஆனால் கூட்டமைப்பு போராட்ட விரும்பிகளின் தளமாக இருக்கப்போவதில்லை என்பது தெளிவாகியுள்ளது. ஏராளமான இளையோர் போராட்ட கருத்துக்களை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறார்கள். இவர்கள் மூலமாக புதிய போராட்ட அரசியலமைப்பு எழும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *