கம்யூனிஸ்ட்களும் சில மார்க்சிய புரிதல்களும்
1
வாகசாலை என்ற அமைப்பச் சேர்ந்தவர்கள் 15/06/2019 அன்று சென்னையில் மார்க்ஸ் பற்றிய ஒரு முழு நாள் நிகழ்வை நடத்தி இருந்தனர். இந்நிகழ்வில் பேசப்பட்ட பல விசயங்கள் மேலதிக உரையாடல்களை உருவாக்கி இருந்தது. அங்கு பேசிய தோழர் கனராஜ் அவர்களின் கருத்துக்கள் சிலதை மறுத்துப் பேசியதும் சில சர்ச்சைகளை உருவாக்கி இருந்தது. தோழர் கனகராஜ் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) யின் தமிழ் நாட்டு மாநில செயற்குழு உறுப்பினராக இருப்பவர். கட்சி வேலைகளில் கடுமையாக உழைப்பவர். பலராலும் மிக மரியாதையுடன் பாராட்டப் படுபவர். அவர் முன் வைத்த சில கருத்துக்கள் மார்க்சியம் சார் புரிதல்கள் பற்றி இருந்தமையால் நாம் மீண்டும் இது பற்றிய விளக்கத்தை தர வேண்டியதாக இருக்கிறது. மார்க்சிய விஞ்ஞானத்தை கடுமையாக பாதுகாக்க வேண்டிய கால கட்டத்தில் நாம் இருக்கிறோம். அந்த நோக்கில்தான் கீழ்வரும் மேலதிக விளக்கங்கள் எழுதப்பட்டுஉள்ளது.
2
வேலை நேரம் (working day ) – திறன் உழைப்பு (skilled labour) – உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி (development of productive forces) – மற்றும் இவைகளுக்கு இடையிலான தொடர்புகள் பற்றிய கருத்துக்கள் சார்ந்த உரையாடல் அது.
3
தோழர் கனகராஜ் சொல்ல வருவது என்ன?
தொழில் நுட்பம் வளர வளர திறன் வேலை குறைந்து விடும் (1) என்றும் அதே சமயம் வேலை நேரம் அதிகரிக்கும் (2) என்றும் தோழர் பேசி இருந்தார். இதில் இருந்து அவர் தாவும் ஒரு முக்கிய முடிவு வேலை நேரக் கோரிக்கையை யார் முன் வைப்பது என்பதாக இருக்கிறது. வேலை அற்றோர் மட்டுமே முன் வைக்க வேண்டிய கோரிக்கையாக வேலை நேரக் குறைப்புக் கோரிக்கையை அவர் முன் வைக்கிறார்(3) (பார்க்க பின் இணைப்பு).
ஒரு முக்கியமான கட்சியின் – மார்க்சியக் கட்சி என சொல்லிக் கொள்கிற கட்சியின் – தலைமை உறுப்பினர் இவ்வாறு அந்தக் கோரிக்கை பற்றி பேசி இருக்கிறார். இது பற்றி தான் கட்சியில் உரையாடியதைப் பற்றியும் அவர் தமது பேச்சில் குறிப்பிட்டிருந்தார். தோழர் இது பற்றி பல இடங்களில் பேசி இருக்கிறார் என்பதும் அவர் இக்கருத்தைஉதாரணங்களோடு விலாவாரியாகப் பேசியதில் இருந்து தெரிய வருகிறது.
மிகவும் ஊதியம் குறைந்த –மற்றும் கடின வேலை நிலவரம் இருக்கும் – இந்தியா போன்ற நாட்டில் மார்க்சியக் கட்சிகள் முன்னெடுக்க வேண்டிய தலையாய கோரிக்கைககளில், ஊதியம் மற்றும் வேலை நேரம் பற்றிய கோரிக்கைகள் முதன்மை வகிக்க வேண்டும். கட்சியின் செயற் திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்க வேண்டிய கோரிக்கைகள் இவை. இவை சரியான முறையில் முன் வைக்கப் பட வேண்டுமாயின் அவை பற்றிய சரியான விஞ்சான பூர்வ அறிதல் அவசியம். தமது ‘செயற்திட்டம் சரி இல்லை என்றால் தான் அந்த மார்க்சியக் கட்சியில் இருக்க மாட்டேன்’ என தோழர் கனகராஜ் வெளிப்படையாக ஒரு சவாலையும் விட்டிருந்தார். இந்த கருத்துக்கள் பற்றிய தோழரின் மார்க்சிய அறிதல் தவறு என்பது மட்டுமின்றி அவர் இக்கோரிக்கைகள் பற்றி முன் வைக்கும் புரிதலின் போதாமையையும் நாம் சுட்டிக் காட்ட வேண்டியது அவசியம்.
4
வேலை நேரம் என்றால் என்ன?
மனித உழைப்பை அளக்கும் கருவிகள் எதுவும் கிடையாது. மணித்தியால அலகுகளாக பிரித்து நாம் உழைப்பை விற்கிறோம். முதலாளித்துவ உற்பத்தி முறையின் தோற்றம் உழைப்பை அரூப மயப்படுத்தி அதை நேர அடிப்படையில் அலகுகளாகப் பிரித்து விற்கும் முறையை உருவாக்கியது என்பதை அறிவோம். ஒரு மணி நேர வேலைக்கு விலை நிர்ணயிக்கப் பட்டு உழைப்பு வாங்கப் படுகிறது. இவ்வகையில் உழைப்புச் சக்தியும் ஒரு பண்டமாக பரிமாறப் படுகிறது. இந்த உழைப்புச் சக்திதான் உபரி மதிப்பை – அதாவது லாபத்தை உருவாக்குகிறது என்பதை மார்ஸ் நிருபித்துக் காட்டி இருப்பார். உழைப்புச் சக்தியின் விலை எவ்வாறு நிர்ணயிக்கப் படுகிறது – எவ்வாறு வாங்கப் படுகிறது என்பதற்குப் பல காரணிகள் உண்டு. இவை உபரி உருவாகும் வீதத்திலும் செல்வாக்கு செலுத்துகின்றன.
உபரி என்பதை ஊதியம் வழங்கப் படாத உழைப்புச் சக்தி என பொதுவாக வரையறுப்பர். ஆக உபரி அதிகரிப்பு பல முறைகளில் நிகழ முடியும். உழைப்புச் சக்தியின் விலை குறைவாக நிர்ணயிக்கப் படுதல் – சுரண்டப்படும் வேலை நேரம் அதிகமாக இருத்தல் – ஆகிய காரணிகள் முக்கியமானவை.
ஒரு நாளில் இருபத்தி நான்கு மணி நேரம் மட்டுமே உண்டு. தரமான உழைப்புச் சக்தி பண்டத்தை வாங்க வேண்டுமாயின் ஒருவரை இந்த இருபத்தி நான்கு மணி நேரமும் வேலை செய்ய வைக்க முடியாது. ஆக ஒருவர் ஒரு நாளுக்கு வேலை செய்யும் நேர அளவு நிர்ணயிக்கப் படுகிறது. ஒருவர் ஒரு நாளுக்கு எத்தனை மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்பது ஒரு தொடர் யுத்தம். முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான இந்த தொடர் யுத்தத்தில் எப்பக்கம் அதிக பலம் திரண்டு நிற்கிறது என்பது ஒரு நாளின் வேலை நேரத்தை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
வேலை நேரத்தைக் குறைக்கும் கோரிக்கை முதலாளித்துவத்தின் ஆரம்ப கால கட்டங்களில் இருந்தே முன் வைக்கப் பட்டு வருகிறது (எட்டு மணி நேரம் வேலைக்கு எட்டு மணிநேரம் மறு உற்பத்திக்கு, எட்டு மணி நேரம் தூங்குவதற்கு –எனப் பேசப்பட்டது இருநூறு ஆண்டுகளுக்கு முப்பே பிரபலமாகி விட்டது). பிரஞ்சுப் புரட்சியின் போது அடிமை முறையை தடை செய்து வேலை நேரம் குறைக்கப்பட்டது. இங்கிலாந்து சார்டிஸ்ட் தொழிலாளர் இயக்கம் வேலை நேர குறைப்புக்கு மிகப் பெரும் போரட்டங்களை செய்தது. ‘நியாயமான ஒரு நாள் உழைப்புக்கு நியாயமான ஊதியம்’ என்ற கோரிக்கையை தொழிலாளர்கள் முன் வைத்து போராடினர். பல்வேறு நகரங்களில் வேலை நிறுத்தம் முன்னெடுக்கப் பட்டது. இதன் விளைவாக வேலை நேரம் பத்தாக குறைந்தது. இக்காலப் பகுதியை தொழிலாளர் ‘சகாப்த்தம் செய்த காலம்’ என பெருமையாக வர்ணித்திருப்பார் மார்க்ஸ் (https://www.marxists.org/archive/marx/works/1867-c1/ch10.htm). கார்ல் மார்க்ஸ் காலத்தில் இருந்து கட்டப்பட்ட அனைத்து தொழிலாளர் அமைப்புக்களும் எட்டு மணி நேர கோரிக்கையை முன் வைத்து போராடி வந்தன. எட்டு மணி நேர வேலை நாளுக்காக சிக்காக்கோ (Chicago, Milwauke) ஆகிய இடங்களில் தொழிலாளர் இயக்கங்கள் நடத்திய மாபெரும் போராட்டங்கள் – மாற்றும் அதிலிருந்து உருவாகிய தொழிலாளர் கட்சிகளின் பலம் பற்றியும் மிகப் பாராட்டி எழுதி இருப்பார் மார்க்ஸ்(https://www.marxists.org/archive/marx/works/1887/01/26.htm).
வேலை நேர குறைப்பு என்பது தொடர் தொழிலாளர் போராட்டங்களால் – அதுவும் அமைப்பு மயப்பட்ட தொழிலாளர்களின் தலைமையில் நடந்த போராட்டங்களால் மட்டுமே குறைக்கப்பட்டு வந்தது என்பதை வேலை நேர வரலாற்றை பார்ப்பவர்களுக்கு தெரியும். இருப்பினும் இந்த வெற்றிகள் எதுவுமே நிரந்தரமல்ல. சமீபத்தில் அவுஸ்திரேலியாவில் வேலை நேரத்தை பன்னிரண்டு மணி நேரமாக அதிகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப் பட்டு வருவதைப் பார்க்கலாம். தொழிற்சங்கங்கள் பல இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருகின்றன. தொழிலாளர் மத்தியில் இதற்கு கடும் எதிர்ப்பு உண்டு. இருப்பினும் அவர்தம் போராட்ட பலவீனம் மீண்டும் வென்றெடுத்த வேலை நேரத்தை பின் தள்ள விட்டுள்ளது.
வேலை நேரக் குறைப்புக் கோரிக்கை யாருடையது ?
வேலை நேரத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எப்போதுமே வேலை செய்யும் தொழிலாளர்கள் கோரிக்கையாக இருந்து வந்திருக்கிறது. வேலை இல்லாதோருக்கு அரசு வழங்க வேண்டிய மானியங்கள் பற்றிய போராட்டங்களும் தொழிலாளர் போராட்டங்களே. அரச இலவச சேவைகள் பல்வேறு பலமான தொழிலாளர் போராட்டங்களால் உருவானவை. இந்த சேவைகள் வேலை செய்யும் தொழிலாளர்களின் உழைப்பில் வரும் பணத்தில் (வரி மூலம்) வழங்கப் படுபவை. வேலை அற்றவர்களின் சுமையும் தாங்கும் கோரிக்கைகளை வேலை செய்யும் வர்க்கம் முன்னெடுக்கிறது. தொழிலாளர் வர்க்கத்தின் கோரிக்கைகள் எனபது அனைத்து சமூகத்துக்குமான – சமூகத்தை முன்னேற்றும் கோரிக்கைகள். வேலை வழங்கு என்ற ஒரு கோரிக்கையை வேலை அற்றோர் முன்னெடுக்க முடியும். ஆனால் இந்தக் கோரிக்கை கூட வேலை அற்றோர் மட்டுமே முன்னெடுக்கும் தனிப்பட்ட கோரிக்கை அல்ல. வேலை செய்வதற்கான உரிமை என்பதும் தொழிலாளர்கள் தமையில் முன்னெடுக்கப் பட வேண்டிய கோரிக்கையே.
ஒழுங்கமைக்கப்பட தொழிலாளர் வர்க்கம் மட்டுமே இத்தகைய கோரிக்கைகளை வென்றெடுக்க கூடிய சக்தி. வேலை அற்றோர் கோரிக்கைகள் – மாணவர்கள் கோரிக்கைகள் – மற்றும் பல சமூக சனநாயக கோரிக்கைகள் அனைத்தும் தொழிலாளர் ஆதரவின்றி முழுமையாக வென்றெடுக்கப் பட முடியாது. வேலை நிறுத்தம் முதலிய கருவிகளை பாவித்து அரசை – முதாளித்துவ அதிகாரத்தை அடிபணிய வைக்கக் கூடிய சக்தி இந்த வர்க்கத்துக்கு மட்டுமே உண்டு.
குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயித்தல் – மற்றும் வேலை நேரத்தை குறைத்தல் ஆகிய இரண்டு கோரிக்கைகளும் அனைத்து தொழிற்சங்கங்களும் முன் வைக்க வேண்டிய கோரிக்கைகள். மார்க்சியக் கட்சி என சொல்லிக் கொள்ளும் எந்தக் கட்சியும் இதில் இருந்து பிரள்வது தவறு. தொழிலாளர்களைத் திரட்டுவது தொழிலாளர்களுக்கான ஒரு சில சலுகைகளை மட்டும் வெல்வதற்கல்ல என்பது அறியாத மார்சியக் கட்சி எதற்கு?
வேலை நாள் குறைந்தால் பலருக்கு வேலை வாய்ப்பு உருவாகும் – அதனால் அந்தக் கோரிக்கை என்பது வேலை இல்லாதோர் முன்னெடுக்கும் கோரிக்கை என தர்க்கம் பேசுகிறார் தோழர்! வேலை நேரம் குறைவது தொழிலாளர் பலம் சார்ந்தது என அவருக்கு தெரியவில்லை. வேலை நாள் குறைந்த வரலாறும் தெரியவில்லை. பதின் நான்கு மணி நேரம் வேலை செய்யும் ஒரு தொழிலாளி அதை எட்டு மணி நேரமாக குறைக்க வேண்டும் என கேட்டு போராடுவது தவறா ? அந்த தொழிலாளிக்கு வேலை நேரத்தை எட்டாக குறைத்து – மிகுதி ஆறு மணி நேரத்து வேலையை எனக்கு தா என வேலை இல்லாத தொழிலாளி கோரிக்கை வைத்து போராடுவதுதான் சரியா? இத்தகைய தலை கீழ் புரிதலுடன் ஒரு செயற் திட்டத்தையும் வரைய முடியாது – போராட்டத்தை கட்ட முடியாது. வேலை நாள் குறைப்பு எனபது ஊதியத்தை விட்டுக் கொடுத்து முன் வைக்கப் படும் கோரிக்கை அல்ல. கூடிய ஊதியத்தில் குறைந்த வேலை செய்வது என்பது மூலதனத்தை நேரடியாக சவாலுக்கு அழைக்கிறது. இது வர்க்கப் போரின் அடி நாதம். வர்க்கப் போரை விட்டு விட்டு தொழிலாளர் வர்க்கத்தை ஒன்றிணைப்பது பற்றி ஏன் வெற்றுப் பேச்சு? வேலை நாள் குறைவதால் மட்டும் வேலை வாய்ப்பு அதிகரித்து விடாது. தொழில்கள் உருவாக வேண்டும். அதற்கு மூலதனமிட வேண்டும். வேலை செய்வதற்கான உரிமை கோரிக்கை என்பது பொருளாதாரத் திட்டமிடல் சார்ந்த சனநாயக கோரிக்கைகளோடு பின்னிப் பிணைந்தது. பெரும் லாபமீட்டும் கம்பனிகள் மற்றும் சமூக சேவை துறைகளை தேசிய மயப்படுத்தி அதை தொழிலாளர்களின் சனநாயக கட்டுப் பாட்டில் கொண்டு வருவது பற்றியது. இவை உங்கள் கட்சி செயற் திட்டத்தில் உண்டா தோழர்? இல்லை என்றால் வாக்குறுதி தந்ததுபோல் கட்சியை விட்டு விலகுங்கள். இவற்றை முன் வைக்கும் இன்னொரு கட்சியை உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்க முடியும்.
சிறு கட்சியாக இருந்த போதும் புதிய சோஷலிச கட்சி என்ற அமைப்பு வேலை நேரம் மற்றும் குறைந்த பட்ச ஊதிய கோரிக்கையை முன் வைத்து போராடி வருகிறது. மணிக்கு நூறு ரூபாயை – அல்லது மாதம் இருபத்தி ஐயாயிரம் ரூபாயை குறைந்த பட்ச ஊதியமாக நிர்ணயி என்ற கோரிக்கையை எனக்குத் தெரிந்து அவர்கள் தான் முதன் முதலில் முன் வைத்தார்கள். அந்தக் கோரிக்கைகளை அப்படியே ஏற்றுக் கொள்ளா விட்டாலும் – நீங்கள் சரி என நினைக்கும் ஊதிய தொகையை முன் வைத்து போராட முன் வாருங்கள் என அவர்கள் அனைத்துத் தொழிற் சங்கங்கள் மற்றும் இடது சாரிய அமைப்புக்களை அழைத்து வருகிறார்கள். தற்போது சில தொழிற் சங்கங்கள் இந்த கோரிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. ஆனால் போதாது. பலமான தொழிற்சங்கங்களை கட்டுப்பாடில் வைத்திருக்கும் மர்சியக் கட்சி இதைக் கட்டாயம் முன்னெடுக்க வேண்டாமா? கட்சியின் தலைமைக்கு இது பற்றிய தெளிவு வேண்டாமா?
இந்தக் கோரிக்கைகள் வெற்றி பெறுவது இந்தியத் தொழிலார்களின் வாழ்வாதார நிலைமையை உயர்த்தும் – அதுவும் இந்தியப் புரட்சியை துரிதப் படுத்தும். இந்தியப் புரட்சியைக் கட்ட வேண்டும் என எண்ணுபவர்கள் இந்தக் கோரிக்கைகளுக்கு ஆதரவு வழங்க வேண்டாமா? அடிப்படை சமூக மாற்றம் தேவை இல்லை – சில சனநாயக கடமைகள் மட்டுமே தீர்க்கப் பட வேண்டும் என கருதுவோர் தங்களுக்கும் காங்கிரஸ் கட்சிக்குக் வித்தியாசம் இல்லை என நினைப்பது நியாயமானதே.
–தொடரும்…
பின் இணைப்பு -1
1
‘தொழில்நுட்பம் வளர வளர சலிப்புத் தட்டுகிற வேலையில் –மிக சாதாரணமாக ஒரு மனிதனுக்கு பிரத்தியோகமாக – திறமை இல்லாத ஆக்களை வைத்து அதை ரீப்லேஸ் பண்ணலாம்’
2
‘தொழில்நுட்பம் வளர வளர வேலை நேரம் அதிகமாகும். உழைப்புச் சுரண்டல் அதிகமாகும்’
தொழில்நுட்பம் வளர வளர வேலை நேரம் குறைக்க வில்லை என்றால் எட்டு மணி நேரத்தில் இருந் பன்னிரண்டு மணி வேலை செய்ய வேண்டி ஏற்படும்’
‘வேலை நேரத்தைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை யாருடையது? வேலை செய்பவர்கள் கோரிக்கை அல்ல. வேலை தேடிக்கொடிருப்பவர்கள் கோரிக்கை’
5
திறன் உழைப்பு பற்றிச் சிறு குறிப்பு.
“ஒருவர் ஐந்து மணி நேரம் செய்யும் வேலையை இன்னுமொருவர் ஒரு மணி நேரத்தில் செய்து முடித்து விட முடியும் என்றால் அவரது தனிப்பட்ட திறமை தானே காரணம். அத்தகைய திறன் உழைப்பு சாதாரன உழைப்பில் இருந்து மாறு பட்டதுதானே. இது பற்றி மார்க்ஸ் கவனிக்க வில்லை. அவர் எல்லா உழைப்பையும் சமமாக பார்க்கும் தவறை செய்து விட்டார்” என வாதிப்போர் இன்றும் உண்டு. ஆனால் இது பற்றி மார்க்ஸ் நிறைய எழுதி உள்ளார். தவிர பிற்கால மார்க்சியர்கள் பலரும் இது பற்றி ஆழமான உரையாடல்களை செய்திருக்கிறார்கள் (https://www.marxists.org/archive/rubin/value/index.htm). இது பற்றி நீண்ட உரையாடலை இங்கு தவிர்த்துக் கொண்டு ஒரு புள்ளியை மட்டும் குறித்துக் செல்வோம்.
மார்க்ஸ் பேசும் உழைப்புச் சக்தி என்பது ஒரு அரூபக் குறியீடு. உழைப்பு அரூப மயப்படுவாதல் உருவான ஒருவகை அலகு அது. சந்தையில் இருக்கும் எல்லாப் பண்டங்களையும் போல் அதுவும் ஒரு பண்டமே. திறன் உழைப்பு உட்பட அனைத்து உழைப்பையும் இந்த அலகால் பிரிக்க முடியும். ஆக மார்க்சியக் கருத்தின் படி திறன் உழைப்பு என்பது ஒரு தனிப்பட்ட விசேட உழைப்பு அல்ல. அதுவும் உழைப்புச் சக்தியால் அளக்கப் படக் கூடியதே.
6
உற்பத்தி சக்திகளும் – அதன் வளர்ச்சியும்.
தொழில்நுட்பம் வளர்த்தல் என்று சொல்வதன் மூலம் நாம் உற்பத்தி செய்யும் கருவிகளின் வளர்ச்சி பற்றியே தோழர் கனகராஜ் குறிப்பிடுகிறார். இதை நாம் சுருக்கமாக உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி என குறிப்பிட முடியும்.
உற்பத்திக்கு உபயோகிக்கும் கருவி, வளர்ச்சி அடைவதாலோ அல்லது ஒருவரின் துறை சார் திறன் அதிகரிப்பதாலோ குறிப்பிட்ட உற்பத்திக்கு தேவையான நேரம் குறையலாம். தோழர் கனகராஜ் சொல்வது இதற்கு நேரெதிரானது.
லாபத்தை பெருக்குவதை தலையாய நோக்காக கொண்டு இயங்கும் முதலாளித்துவ உற்பத்தி முறை அதை செய்வதற்காக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது. உற்பத்தி கருவிகளைத் தொடர்ந்து புதுப்பிப்பது அதில் ஓன்று. ஆனால் உற்பத்தி கருவிகளின் வளர்ச்சி முதாலாளிகளின் நடவடிக்கை மட்டும் சார்ந்ததல்ல. இயற்கை சார்த்த வளர்ச்சியுடனும் சம்மந்தப்பட்டது அது. உற்பத்தி கருவிகள் தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கின்றன.
உற்பத்தியை செழுமைப்படுத்தும் கருவிகளை அறிமுகப்படுத்தல் உற்பத்திக்கு தேவையான மாறும் மூலதனத்தைக் ( உழைப்புச் சக்தி) குறைக்கும். இது லாப பெருக்கை ஏற்படுத்த முடியும் எனபது தர்க்கம். ஆனால் குறைந்த உழைப்புச் சக்தி வழங்கப் படுவது லாப வீதத்தை குறைக்கிறது. ‘லாப வீத வீழ்ச்சி நோக்கிய போக்கு’ என்ற விதி மூலம் இந்த முரண் நிலையை மார்க்ஸ் விளக்கி இருப்பார். இந்த விதியைக் குழப்பிக் கொள்ளக் கூடாது. மார்க்ஸ் மூலதனம், பண்டம், உழைப்புச் சக்தி என்பவற்றை தனிப்பட்ட முறையிலோ – அல்லது சிறு பிரிவுகளுக்குள் முடக்கியோ ஆய்வு செய்ய வில்லை. மாறாக அவர் அதன் முளுமைத்தன்மையைப் பற்றிய அவதானத்தோடு ஆய்வு செய்துள்ளார்.
உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி எவ்வாறு முதலாளித்துவத்தை நெருக்கடிக்கு உள்ளாக்குகிறது என அவர் விளக்கி இருப்பார். உபரிக்கும் அதை உருவாக்க வழங்கப் பட்ட உழைப்புச் சக்திக்குமான வீதத்தையே சுரண்டல் – அல்லது வகையீட்டுச் சுரண்டல் – என மார்க்ஸ் குறிப்பிடுகிறார் (https://www.marxists.org/archive/marx/works/1867-c1/ch09.htm#S1). அதே போல் மாறா மூல தன உற்பத்திக்கும் உழைப்புச் சக்திகுமான வீதம் உற்பத்தி திறனை குறித்து நிற்கிறது. ஆக சுரண்டல் அதிகமாவது வழங்கப் படும் உழைப்புச் சக்தியை பொறுத்தது. அது வேலை நேரத்தோடு மட்டும் தொடர்புடையது அல்ல. குறைந்த வேலை நேரத்திலும் கூடிய உபரி பெருக்குதல் நிகழ முடியும். உற்பத்திச் சக்திகள் வளர்ச்சி வேலை நேரத்தை கூட்டும் என்று கருதுவதும் – அதனால்தான சுரண்டல் அதிகரிக்கும் எனவும்- தர்க்க ரீதியான முடிவுக்கு வருவது தவறு. புதிய கருவி அறிமுகம் எப்படி எட்டு மணி நேர வேலையை பன்னிரண்டு மணி நேர வேலையாக மாற்றும் என தோழர் கனகாஜ் விளக்க வேண்டும். ஒரு வராலாற்று உதாரனத்தையாவது காட்ட முடியுமா?
இங்கு சில விசயங்களை நுணுக்கமாக பார்க்க வேண்டும். உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி உற்பத்திக்கு தேவையான உழைப்பைக் குறைக்கும் போக்கு கொண்டது. அதே சமயம் திறன் உழைப்பை அதிகரிக்கும் வல்லமை கொண்டது – அதன் மூலம் லாப வீத பெருக்கைக் காத்துக் கொள்ளும் வல்லமை கொண்டது. உதாரணமாக அப்பிள் கம்பனியை எடுத்துக் கொள்ளுங்கள். உயர் தொழில் நுட்பம் – அதே சமயம் உயர் ஊதியம் – அதே சமயம் உயர் உபரி உருவாக்கள் – ஆகியன ஒரே சமயத்தில் நிகழ முடியும். உழைப்புச் சக்தி என்பது வரையறைக்கு உற்பட்டதோ அளக்க கூடியதோ அல்ல என முன்பு பேசி இருந்தோம். சுரண்டல் வீத அதிகரிப்பு என்பது நேர அளவு அதிகரிப்பால் மட்டும் நிகழ வேண்டிய அவசியமில்லை. திறன் உழைப்பை பிழிவதாலும் அது நிகழ முடியும்.
புதிய உற்பத்தி கருவி அறிமுகப்படுத்தல் என்பது பழைய கருவியில் வேலை பழகிய தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழக்க வைக்கலாம். அந்தப் பழைய கருவி பழக்கத்தில் இல்லாது போதல் அந்த கருவியை உபயோகிக்கும் திறனை இல்லாதொழிக்கலாம். முதலாளித்துவத்தின் ஏகாதிபத்திய வளர்ச்சி இந்தப் போக்கைத் துரிதப் படுத்துகிறது. பழையன கழிதலும் புதியன புகுதலும் தொடர் வேகத்தில் நிகழ்கிறது. ஆனால் இவை மனித திறனைக் குறைப்பதில்லை – அழிப்பதில்லை. மாறாக திறனை அதிகரிக்கின்றன. வில்லு அம்பை உபயோகித்த ஒருவரின் திறனுடன் கணணியை உபயோகிக்கும் ஒருவரின் திறனை ஒப்பிட முடியாது. தனிப்பட்ட சில திறன்கள் இல்லாது போகலாம். ஆனால் திறன் உழைப்பு மங்குவதில்லை. ஏனெனில் இது சமூகம் சார்ந்தது. சமூகத் தொடர்பாடல் முறைதான் உற்பத்தி முறையை தீர்மானிக்கிறது. குறிப்பிட்ட சமூக உறவுமுறை அடிப்டையில்தான் முதலாளித்துவ உற்பத்தி நடை பெறுகிறது.
நவீன கருவியை அறிமுகப்படுத்தல் என்பது திறமை இல்லாத தொழிலாளரை வேலைக்கு அமர்த்த உதவுகிறது என்ற மோசமான கருத்துக்கு தோழர் எப்படி வந்து சேர்ந்தார் எனத் தெரியவில்லை. திறனும் குறைகிறது அதே சமயம் வேலை நேரமும் கூடுகிறது என்றால் முதலாளி எவாறு லாபம் பெருக்க முடியும் ? இது என்ன புது பொருளாதார கருத்தாக இருக்கிறது. தோழர்தான் விளக்க வேண்டும். வேலை நேரம் சமன் உபரி என்பதை ஒரு இயந்திரத் தன்மையுடன் விளங்கிக் கொண்டு தர்க்க அடிப்படையில் சிந்திப்பதன் விளைவு அது.
இன்னுமொரு வகையிலும் தர்க்க விளக்கம் கொடுக்க முயலலாம். இயந்திரங்கள் எல்லா வேலைகளையும் செய்கிறது அதனால் தொழிலாளர்கள் இனி ஒன்றும் செய்ய தேவை இல்லை – திறன் மனிதரிடம் இருந்து இயந்திரங்களுக்கு மாறிக் கொண்டு இருக்கிறது என்ற அடிப்படையில் வாதிட முடியும். இது ஒரு ஊகம் மட்டுமே. அப்படி ஒரு தர்க்க விளக்கத்தை திணித்துப் பார்த்தால் கூட தோழர் சொன்ன கருத்துப் பிழையே. மனித திறனின் பண்பில் தொடர் மாற்றங்கள் நிகழ்வதை நாம் அவதானிக்க வேண்டும். அதனால் சமூகம் சார் அறிதல் மங்கி விடுவதில்லை. மாறாக அது திறன் வளர்ச்சியின் பாற்பட்டதாக இருக்கிறது. உற்பத்தி சக்திகள் வளர்ந்தால் திறன் மங்கி விடும் என்றால் நாம் உற்பத்தி சக்திகளை எரித்துக் கொளுத்தும் திட்டமிடல் அல்லவா முன் வைக்க வேண்டும். தோழர் இருக்கும் கட்சி அப்படி ஒரு செயற் திட்டத்தை முன் வைத்ததாக தெரியவில்லை. முதலாளித்துவம் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியை ( மணித திறன் உட்பட) முடக்குகிறது என்பது உண்மையே. இந்த முடக்குதல் வளர்ச்சியை நிறுத்துவதில்லை. மாறாக புரட்சியை உற்பத்தி செய்கிறது. ஆனால் அது வேறு கதை. தோழர் பேசுவது அது பற்றி அல்ல.