புதைக்கும் அரசியல்
கொழும்புச் ‘சர்வதேச’த் தமிழ் எழுத்தாளர் மாநாடு இன்று ஊர்வலத்துடன் ஆரம்பமாகியுள்ளது. சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு என்று பெயரளவில் அறிவிக்கப்பட்டாலும் உலகெங்கும் இருக்கும் பல தமிழ் எழுத்தாளர் மத்தியில் இதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏராளமான தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அறிக்கை விட்டிருக்கிறார்கள். ஏராளமான புலம்பெயர் எழுத்தாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்து எழுதியுள்ளார்கள். இலங்கையில் இருந்து எழுதிக்கொண்டிருக்கும் முன்னனி இளம் தலைமுறை எழுத்தாளர்களில் பெரும்பான்மையானோர் இந்த மாநாட்டுக்கு ஆதரவு வழங்கவில்லை. மாநாட்டுக்கும் அவர்களைக் கண்டு கொள்ளும் நோக்கம் எதுவுமில்லை. இதை ஒரு சர்வதேச மாநாடு என்று சொல்வதே தவறு. இந்த லட்சனத்தில் புலம்பெயர் இலக்கிய-அரசியல் சூழுலில் இருந்து சிறு குழு ஒன்றும் மாநாட்டுக்கு ஆதரவாக அறிக்கை விட்டுள்ளது.
வடக்கு கிழக்கு மலையகம் என்று இலங்கைக்குள் இருந்து எழுதிக்கொண்டிருப்பவர்களே பங்கு பற்ற முடியாத ஒரு மாநாட்டுக்கு எதற்கு சர்வதேச அங்கீகாரம் ? இந்த மாநாட்டுக்கு முழு மனதுடன் ஆதரவு கொடுத்து அறிக்கை விட்டவர்களை நோக்கி சில சாதாரன கேள்விகள்..
இலங்கையின் அச்சுறுத்தும் சூழலை எதிர்கொண்டு மாநாடு நடத்தப்படுவதாக நம்பும் நீங்கள் அதற்கான பத்திரிகை சுதந்திரம் இலங்கையில் உண்டென்று ஏற்றுக்கொள்கிறீர்களா.
நிதானமாக –நியாயமான முறையில் எதிர்ப்புத் தெரிவிக்கும் சக எழுத்தாளர்களை ‘சட்டாம்பிள்ளைத்தனம்’ செய்பவர்கள் என்று உதாசீனம் செய்யும் நீங்கள் – அவர்கள் கேட்ட அரசியல் ரீதியான கேள்விகள் கருத்துக்கள் எதற்குமே பதில் சொல்ல முடியாத நீங்கள் – இலங்கையில் மாநாடு நடத்தப்படுவதற்கு பின்னால் எந்த அரசியலும் இல்லை என்று நம்புகிறீர்களா? இது வெறும் இலக்கிய மாநாடு என்று நழுவப்பாக்கும் போக்குடன் எந்த அர்த்தத்தில் விழிம்பு மனிதரை மாநாடு பிரதிபலிக்க வேண்டும் என்று கேட்கிறீர்கள்.
இலங்கை அரசை பகிஸ்கரித்து சிங்கள-தமிழ்-முஸ்லிம் எழுத்தாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள். நாடு திரும்பினால் கொல்லப்படும் ஆபத்தான நிலையில் உள்ளார்கள். அவர்களை கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறீர்களா?
இவை சாதாரன கேள்விகள். கையெழுத்து வைத்து அதரவு தெரிவித்த பலர் தாம் நுனுக்கமான தளங்களில் விசயங்களை பார்ப்பவர்கள் என்று பாவனை செய்பவர்கள். இந்த மாநாடு மாவிலை தோரனம் கட்டி குத்து விளக்கேற்றி தொடக்கப்பட்டு சங்கத்து மரபு பிசகாத ‘ஆய்வுகளோடு’ சங்கமித்து சுபத்தில் முடியும் என்று தெரியாதவர்கள் அல்ல நீங்கள். தெரிந்தும் வாய்கூசாமல் இதில் விளிம்பு மனிதர்களுக்கான பிரதிநிதித்துவம் கேட்கிறீர்கள். அவர்களிடம் எங்களுக்கான பிரதிநிதித்துவத்தை நீங்கள் கெஞ்ச வேண்டாம்.
செருப்பை மேசையில் வைத்து கூட்டம் தொடங்கிய ஆரோக்கியமான ஒரு பாரம்பரியமும் ஒருகாலத்தில் புலம் பெயர் எழுத்தாளர்கள் மத்தியில் இருந்ததை இச்சந்தர்ப்பத்தில் உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறோம். ‘நுனுக்கமான’ பிரச்சினைகளை விடுங்கள் -குறைந்த பட்சம் மேலோட்டமான அரசியற் கேள்விகளுக்காவது பதிலளித்திருக்கலாம் -உங்கள் தெனாவட்டு அதற்கு இடமளிக்கவில்லை போலும்.
மாநாடு வைக்க அவர்களுக்கு ‘உரிமை உண்டு’ அந்த பிறப்புரிமையை யாரும் தடுக்க முடியாது என்ற விசர்க்கதையையும் நாம் பதிலாக ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை. மாநாடு வைக்கும் உரிமை பற்றியதல்ல இந்த உரையாடல். கூட்டம் போடும் உரிமையை தடுக்;கும் அராஜகத்தின் பக்கம் நின்று நாம் ஒருபோதும் பேசியதில்லை. தற்போதய அரசியல் நிலையை –நடந்து முடிந்த கோர யுத்தத்தை போக்கிரித்தனமாக புதைக்கும் அரசியல் பற்றிய உரையாடல் இது. மாநாடு வைக்கும் உரிமை பற்றி அக்கறைப்படும் நீங்கள் அடித்து நொருக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அடிப்படை உரிமைகள் பற்றி கதைக்க பஞ்சிப்படுவதன் அரசியல் பற்றிய உரையாடல் இது.
அதேபோல் தமிழக எழுத்தாளர்கள் அங்கு நடந்த மாநாட்டுக்கு ஏன் எதிர்ப்பு தொவிக்கவில்லை என்று அவர்கள் மேல் நீங்கள் பாய்வீரானால் அதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் இந்த மாநாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களிற் பலர் அந்த மாநாடு தொட்டு பல வங்குறோத்து மாநாடுகள்-கருத்தரங்குகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருபவர்கள். அது மட்டுமின்றி கொழும்பு மாநாடு பற்றி தமது சொந்த கருத்துக்களைப் பலர் தெளிவாக வைத்துள்ளார்கள். கேட்டால் தயங்காமல் வைக்கவும் தயாராக இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் வன்மையாக கண்டிக்கும் உங்களை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.