2017- இலங்கை நிலவரம் -கவனத்துகான சில புள்ளிகள்
- இலங்கைக்குள் வாழும் ஒடுக்கப்படும் மக்கள் – மற்றும் தமிழ் பேசும் மக்கள் சமீப கால கட்டத்தில் பல கடும் அதிர்சிகளைச் சந்தித்துள்ளார்கள்.
- 2009ல் படுகொலையுடன் முடிந்த யுத்தம் ஒரு பெரும் அதிர்ச்சியாக தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இன்றும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இன்னிகழ்வு தெற்கில் இனவாத சக்திகளுக்கு குறிப்பிடத்தக்க பலத்தை வழங்கும் நிகழ்வாக மாறியதற்கு அபோதைய மகிந்த அரசு வழங்கிய அதிகார பூர்வ அங்கீகாரம் முக்கிய காரணம். மகிந்த அதிகாரத்தின் நிழலில் மேலதிக பலமடைந்த சிங்கள பௌத்த இனவாதாம் இலங்கை வரலாறு காணாத அளவு பலத்துடன் இயங்கி வருகிறது. துவேச – இனவாத சக்திகள் எண்ணிக்கையில் குறைவாக இருந்த போதும் மகிந்த குடும்பப் பலத்தில் –அவர்கள் தலைமயில் இருக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஊடாக அவர்கள் பெரும்பான்மை சிங்கள மக்களை தம் பக்கம் வைத்திருக்கும் முயற்சியை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.
- இது இலகுவான காரியமில்லை என்பதை 2015ம் ஆண்டுத் தேர்தல் முடிவு அதிர்ச்சி வெளிக்காட்டியது. மகிந்த குடும்பம் தன் சர்வாதிகாரப் பிடியை விடப் போவதில்லை என்ற நிலையை மாற்றியதால் மட்டுமல்ல இந்த அதிர்ச்சி. நூறு நாள் திட்டம் என்ற பெயரில் பல உறுதி மொழிகளுடன் ஆட்சியைப் பிடித்தவர்கள் முனெடுத்த நடவடிக்கைகள் மிக முக்கிய தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது.
- ஊழல் அழிப்பு – நிறைவேற்று அதிகாரச் சனாதிபதி முறை ஒழிப்பு – தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு – மலையாக மக்களுக்கு வீடு நிலம், ஊதிய வசதிகள் என பல பொபுலிச திட்டங்களை முன் வைத்துப் பெரும் எதிர்பார்புகளை உருவாக்கி ஆட்சிக்கு வந்தவர்கள் மக்களின் எதிர்பார்ப்புக்கு எதிர் திசையில் இயங்கி வருகின்றனர்.
ஐக்கிய தேசிய கட்சி சார்ந்தவர்களின் பெரும் ஊழல்கள் வெளியாகி உள்ளன. ஐ.தே.க வினரால் நியமிக்கப் பட்ட இலங்கை மத்திய வங்கியின் முகாமையாளர் செய்த ஊழல் குறிபிடத்தக்கது. இது மடுமின்றி இந்த அரசு தாம் குறிப்பிட்ட எந்த மாற்றங்களையும் சாதிக்க வில்லை. மாறாக ஐ.எம்.எப் அமைப்பின் வழிகாட்டல் படி தனியார் மயப்படுத்தும் நடவடிக்கைகள் – வரிகளை அதிகரிக்கும் நடவடிக்கைகள் என நவ லிபரல் பொருளாதார நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. சீன முதலீட்டை கட்டுப் படுத்தவும் இவர்களால் முடியவில்லை.
- ஹம்பாந்தோட்டையில் ஆயிரக்கனக்கான ஏக்கர் நிலத்தை சீனாவுக்கு தரை வார்தமைக்கு எதராக மகிந்த குடும்பம் போராட்டம் நடத்தும் தலைகீழ் அரசியல் நிலவரத்தை காணும் கேவலம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. கொழும்புத் துறைமுகத் திட்டம்– மற்றும் ஹம்பாந்தோட்டை திட்டங்களில் இந்திய முதலீடு நிலை கொள்ளவும் இந்த அரசு வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. பிராந்திய நெருக்கடியின் உச்சம் இலங்கைக்குள் வெடித்துப் பரவும் சந்தர்பங்களை முறைப்படி செய்து வருகிறது இவ்வரசு. ‘பூகோள யதார்த்தத்தை நாம் ஏற்றுக் கொள்ளுகிறோம்’ என முன்பு மங்கள சமர வீர சொல்லி இருந்தது அறிவோம். அதன்படி இந்திய நலனை சார்ந்து தயக்கமின்றி இயங்கி வருகிறது அரசு. எண்பதுகளில் –பனி யுத்தக் கால கட்டத்தில் இந்தியாவுடன் இயங்குவதில் இலங்கைக்கு இருந்த தயக்கத்தில் ஒரு சொட்டும் தற்போது இல்லை.
- மக்கள் மேலான இந்தத் தாக்குதல்களுக்கு இலங்கைக்குள் இருக்கும் அனைத்து வலது சாரிக் கட்சிகளும் ஆதரவு வழங்கி வருகின்றன. கொள்கை அடிப்படையில் இன்றி அதிகாரத்தை பிடிக்க வேண்டு என்ற ஒற்றை நோக்குக்காக மட்டும் எதிர்ப்புக் குரல் காட்டி வரும் இன வாத சக்திகளை தவிர்த்துப் பார்த்தால் இலங்கைக்குள் நியாயமான் எதிர்ப்பு முழுமையாக முடங்கி இருப்பதை பார்க்கலாம்.
- ஒடுக்கப்படும் தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காக இயங்கி வருவதாக சொல்லும் கூடமைப்புத் தலைமைகள் எதிர் கட்சி தலைமைப் பதவியை வைத்திருந்த போதும் அரசின் முழு ஆதரவளர்களாக இயங்கி வருகிறார்கள். இணக்க அரசியல் என்ற அடிப்படையில், தற்போதைய அரசின் புகழ்பாடி வருகிறது த.தே.கூ.
- யுத்தத்துக்குப் பிறகான முறைப்படி மீள் நிர்மான வேலைகள் எதுவும் வடக்கு கிழக்கில் நிகழ வில்லை. வடக்கு கிழக்குப் பிரதேசங்கள் இலங்கைக்குள் இருக்கும் மிகப் பின் தங்கிய பிரதேசங்களாக – மிக வறிய பிரதேசங்களாக இருந்து வருகிறது. இது மட்டுமின்றி மொழி ரீதியான ஒடுக்குமுறை – நில ஆக்கிரமிப்பு என்பன அங்கு தொடர்ந்து வருகிறது.
- ஆயிரக் கணக்கான நிலங்களை இராணுவம் வடக்கு கிழக்கில் தொடர்ந்து ஆக்கிரமித்து வருவது மட்டுமின்றி, முக்கிய இடங்களில் இராணுவ தளங்களை அமைத்து சமூகத்தை தனது கட்டுப் பட்டில் வைத்து வருகிறது. இருனுவத்தின் தலைமையில் இயங்கும் பல்வேறு பினாமி அமைப்புகளும் மக்கள் மத்தியில் இயங்கி வருகின்றன. இராணுவத்தின் முழு அங்கீகாரம் இல்லாத செயற்பாடுகள் எதுவும் முன்னெடுக்க முடியாதவாறு கட்டுப்பாடு இருக்கிறது. முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இருவருக்கு ஒரு இரணுவத்தினர் என்ற அடிப்படையில் இராணுவம் செறிந்திருப்பதைப் பார்க்கக் கூடியதாக இருக்கிறது.
- இந்திய இராணுவம் எவ்வாறு காஷ்மீர் மக்களை கட்டுப் பாட்டில் வைத்திருக்கிறதோ அதே முறையில் வடக்கு கிழக்கைக் கட்டுப் பாட்டில் வைத்திருப்பதுதான் இலங்கை இராணுவத்தின் நோக்கமாக இருக்கிறது.
- இத்தகைய நிலைமைகள் தமிழ் தேசிய உணர்வைத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் மேலும் வலுப்படுத்தி வருவதை பார்க்கலாம். படுகொலையில் முடிவுக்கு வந்த யுத்த தாக்கத்தால் எதிர்ப்பு பலவீனப் பட்டிருந்த போதும், தமிழ் தேசிய உணர்வு மிக அதிகரித்த நிலையில் இருப்பதை பார்க்கலாம். இந்த எதிர்ப்பு ஏதோ ஒரு வகையில் தொடர்ந்து வடிந்து கொண்டுதான் இருக்கப் போகிறது. காணாமல் போனவர்கள் பற்றிய தொடர் போராட்டம் – அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரும் தொடர் போராட்டம் ஆகிய போராட்டங்களுக்கு மக்கள் மத்தியில் வளரும் ஆதரவு கவனிக்கத் தக்கது.
- தெற்கிலும் கல்வி மற்றும் சுகாதார தனியார் மயமாக்கல் நடவடிக்கைகளுக்கு எதிராக கடுமையான போராட்டங்கள் நிகழ்ந்ததைப் பார்த்தோம். சைதம் தனியார் கல்லூரி அமைப்பது இந்த போராட்டத்தால் தள்ளிப் போடப்பட்டுள்ளது. இந்தப் போராட்டங்களில் தமிழ் மற்றும் முஸ்லிம் இளையோரும் கலந்து கொண்டிருந்தனர். இருப்பினும் இந்த போராட்டங்களை முன் எடுத்த அமைப்புக்கள் சிலதின் தலைமைகள் மத்தியில் இருந்த இனவாதம் தமிழ் பேசும் இளையோரை ஓரம் கட்டி இருந்த நிலையையும் பார்க்க கூடியதாக இருக்கிறது. இது அவர்களுக்கு எதிரான ஒரு பக்க விளைவையும் ஏற்படுத்தி இருக்கிறது. போராட்டத்தில் கலந்து கொண்ட இளையோரை தமது சகோதரர்களாக பார்க்கும் பல சிங்கள இளையோரை இனவாதத்திற்கு எதிராக திருப்பும் விளைவையும் இது ஏற்படுத்தி உள்ளது. மிகச் சிறு பன்மையாக இருப்பினும் இந்த இளையோரை நோக்கி நேசக்கரம் விரிப்பது போராட்டச் சக்திகளுக்கு அவசியம்.
- இனவாத இலங்கை அரசு தமது எதிரி என்பதை தெற்கில் போராட்டத்தில் ஈடுபடுவோர் நன்கு உணர்ந்து கொள்ளும்படி தமது வலிய தாக்குதல்களை செய்து வருகிறது அரசு. இலங்கை இராணுவ சக்திகள் – அரசுக்குள் இருக்கும் இன வாத சக்திகள், மற்றும் இரகசிய பாதுகாப்பு அமைப்புக்கள் ஆகியனவும் – அவற்றை மையமாக வைத்து அரசியல் செய்யும் வலது சாரிகளும் தாம் வடக்கில் படித்த படத்தை தெற்கிலும் அமுல் படுத்த விரும்புகின்றனர். எந்தக் கட்சி அரசின் பொறுப்பை எடுத்தாலும் இராணுவ மைய அதிகாரம் தான் முழுக் கட்டுப் பாட்டில் இருக்க வேண்டும் என்பது அவர்கள் நோக்கமாக இருக்கிறது.
- வடக்கின் படத்தை வைத்து தெற்கை பாகிஸ்தான் மயப் படுத்தும் நோக்கில் இனவாத சக்திகளின் முயற்சி இருக்கிறது. சமீபத்தில் கோதாபய இராஜபக்சவினால் உருவாக்கப் பட்ட எலிய (வெளிச்சம்) என்ற அமைப்பின் பின் நோக்கம் அதுவாகவே இருக்கிறது. இந்த அமைப்பு தங்களை தேர்தலுக்கு அப்பாலான அமைப்பாக அடையாளப் படுத்துகிறது. இராணுவ அதிகாரிகள் – இன வத்த சக்திகள் என மிக மோசமான அதி தீவிர சகதிகளை ஒன்றிணைக்கும் அமைப்பாக இருக்கிறது இது.
- தமது இனவாதக் கோரிக்கைகளை உள்வாங்காத அரசியலமைப்புக்கு ஆதரவு கொடுப்போரை தாம் கொலை செய்யத் தயார் என 2009ல் இறுதி யுத்தத்துக்கு தலைமை தாங்கிய தளபதி அண்மையில் அறிக்கை விட்டிருந்தார். யுத்தத்தின் கடைசிக் கட்டத்தில் தயங்காது கொலை உத்தரவுகளை வழங்கி இருப்பார் என்பது மேலும் மேலும் உறுதிபடுத்தும் விதத்தில் நடந்து கொள்கிறார் என தெற்கிலேயே பேசுமளவுக்கு இவர் நடவடிக்கைகள் இருக்கிறது. இது மட்டுமின்றி பாராளுமன்றத்தை குண்டு வைத்து தகர்ப்போம் எனவும் இவர்கள் அரக்கி விடிருந்தது குறிப்பிடத் தக்கது.
- புதிய அரசியல் யாப்பு கொண்டு வரும் நடவடிக்கை முற்று முழுதாக சனநாயக மறுப்பு முறையிலேயே நடக்கிறது. சரியான முறையில் சனநாயக தேர்தல் அடிப்படையில் அரசியல் யாப்பு குழு தெரிவு செய்யப் படவில்லை. பாராளுமன்றம் அரசியல் யாப்பு அமைக்கும் குழுவாக இயங்கும் என அறிக்கை விட்டு விட்டு மக்கள் கருத்துக் கணிப்பீடு செய்வதாக வெறும் பாசாங்குகள் மட்டுமே காட்டப் படுகிறது. தேர்தலில் வாக்களிக்கப்பட்ட முறையில் நிறைவேற்று அதிகாரத்தை மற்றும் நோக்கு யு.என்.பி தலைமை அரசுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. நிறைவேற்று அதிகாரத்தை இல்லாமல் செய்வதற்குப் பதிலாக அதைப் பிரதமருக்கு மாற்றும் முயற்சி தெரிகிறது. பிரதமரும் -சனாதிபதியும் இணைந்து அனைத்து அதிகாரங்களையும் தம்மிடமே வைத்து கொள்வது மாற்றம் அல்ல. இன்னுமொரு அதிகாரம் குறைந்த செனட் சபை ஒன்றை உருவாக்கி அதில் மாகான சபை தலைமைகளை இருத்தி சனயாக அதிகரிப்பு செய்தது போன்ற பாவனையை ஏற்படுத்தவும் அவர்கள் விரும்புகின்றனர். இருப்பினும் இதன் முதன்மை நோக்கம் மாகாணங்களைக் கட்டுப் படுத்துவதாகவே இருக்கிறது. முக்கிய அதிகாரங்கள் அனைத்தும் மத்திய அரசே வைத்திருகிறது. தேர்தல் நடக்கும் முறை மாற்றுதல் மற்றும் தேர்தல் தொகுதிகள் மாற்றம் – ஆகியன முதற்கொண்டு அனைத்தும் பெரும் வலது சாரிக் கட்சிகள் தமது செல்வாக்கை அதிகரிப்பது – தக்க வைப்பது தொடர்பானதாகவே இருக்கிறது சட்ட மாற்று முயற்சிகள். குறிப்பாக ஐ.தே.க தனது செல்வாக்கை – அதிகாரத்தை தொடர்ந்து நிலை நாட்டுவது பற்றி மட்டுமே சிந்திக்கிறது.
- புதிய அரசியலமைப்புத் திட்டத்தில் ஒடுக்கப்படும் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வுக்கு இடமே இல்லை. இதை அரச கட்சிகள் வெளிப்படையாகவே பேசி வருகின்றன. வடக்கு கிழக்கை இணைப்பது என்பது தவிர வேறு எந்தக் குறிப்பிடத் தக்க செய்திகளும் இல்லை. இருபினும் இந்த ஒரு உடன்பாடே இனவாதிகள் மத்தியில் எதிர்ப்புக் கிளம்பப காரணமாக இருக்கிறது. எல்லா மாகாணங்களுக்கும் சம உரிமை என்ற அடிப்படையில் சட்டத்தில் தற்போது இருக்கும் முரணைத் தீர்க்க கூட அவர்கள் தயாராக இல்லை. வட மாகாணம் தனித்து இருக்க வேண்டும் என்றும் – தனிப்பட்ட அதிக கட்டுப் பாட்டில் இருக்க வேண்டும் எனவும் அவர்கள் விரும்புகிறார்கள். இதனால் புதிய மாற்றத்தை கடுமையாக எதிர்கிறார்கள்.
- அரசியல் யாப்பு ஒற்றை ஆட்சி என்ற அடிப்படியில் இருப்பதா ? அல்லது ஒருமித்த என்ற அடிப்படையில் இருப்பதா என்ற போலி விவாதங்களும் நடக்கிறது. இங்கிலாந்துச் சட்டம் ஒற்றை ஆட்சி என்ற அடிப்படையில் இருப்பினும் ஸ்காட்லாந்தில் வாக்கெடுப்பு நடப்பதையும் –அந்த வாக்கெடுப்பில் வென்றால் பிரிந்து போகும் உரிமை வழங்கப் படுவதையும் அனுமதிக்கிறது. ஆகையால் பழைய ஆங்கிலேய அடிபடையில் ஒற்றை என்ற பதம் பாவிப்பது பொருந்தாது என வாதிடுகிறார்கள். இதனால் ஆங்கிலச் சொல்லை எடுத்து விட்டு சிங்கள், தமிழ் சொல்லை பாவிக்க வேண்டும் என்பது அரச ஆலோசனையாக இருக்கிறது. இது மட்டுமின்றி கட்டலோனியாவில் நிகழ்ந்த சம்பவங்களை உள்வாங்கிய அடிப்படையில் பிரிந்து போகும் உரிமை பேசப்படுவதை சட்டப்படி குற்றமாகும் ஆலோசனைகளும் வழங்கப் பட்டுள்ளது. இது மட்டுமின்றி சட்டத்தில் பௌத்தத்துக்கு முதன்மை இடம் கொடுப்பது மேலும் பலப் படுத்தப் பட்டுள்ளது. பெளத்த மகா சபை அரசியல் முடிவுகளை எடுப்பது – செல்வாக்கு செலுத்துவது சட்டமயமாகும் முயற்சி இது.
- இவ்வளவு கேவலமான ஆலோசனைகள் நிறைந்த அரசியல் சாசனம் ஆலோசனைக்கு விடப்பட்ட நிலையில் தமிழ் தலைமைகள் எனச் சொல்லிக் கொள்பவர்கள் மத்தியில் எந்த எதிர்ப்பும் கிளம்பவில்லை. மிக மோசமான பட்ஜெடுக்கு அதரவு அளித்துக் கொண்டிருப்பது மட்டுமின்றி தற்போதைய அரசு யாஹபாளன – நல்லாட்சி அரசு என தமிழ் மக்கள் மத்தியில் பிரச்சாரித்து வரும் தமிழ் தேசிய கூட்டமைப்புத் தலைமைகள் அரசின் புதிய யாப்பு ஆலோசனைக்கு தமது முழு ஆதரவையும் வழங்கி உள்ளன. வடக்கு கிழக்கு இணைவதன் மூலம் தமது செல்வாக்கு அதிகரிக்கும் -அதன் மூலம் பாராளுமன்ற கதிரைகளைப் பாது காக்கலாம் அல்லது அதிகரிக்கலாம் என்ற உள் நோக்கம் அவர்களுக்கு இருக்கலாம். இத்தகைய பாராளுமன்ற ஆசை அடிப்படை தவிர அவர்களுக்கு வேறு நோக்கங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. இலங்கை வரலாறு காணாத மோசமான அரசியல் யாப்புக்கு எந்த எதிர்ப்பும் இன்றி இவர்கள் ஆதரவு வழங்குவது மிகப் பெரும் அதிர்ச்சியை –குறிப்பாக இளையோர் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது. அரசுடனான அவர்களின் இணக்கம் மிகப் பெரும் அரசியல் வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது.
- இந்த வெற்றிடத்தை நிரப்ப மற்றைய கட்சிகள் எதுவும் முன் வரவில்லை. தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி போன்ற அமைப்புக்கள் கூட ஒரு மாற்றை முன் வைக்க வில்லை. இவர்களுக்கும் த.தே.கூ முன் வைக்கும் கோரிக்கைகளுக்கும் பெரிய வித்தியாசமில்லை. தமிழ் தேசியம் என்ற ஒற்றைப் பார்வைக்குள் ஒழித்து நின்று கொண்டு தமது போதாமைகளை மறைக்க முடியாது. த.தே.கூ தலைமைகளும் தேர்தல் காலங்களில் அதைதான் செய்கின்றன.
- கிளிநொச்சியில் செல்வாக்கு செலுத்தி வந்த சிரிதரன் அவ்வாறுதான் தமிழ் தேசிய பிரச்சாரத்தை தேர்தல் களங்களில் செய்து வந்தார். தற்போது அவரது நடவடிக்கைகைகளால் இவரது செல்வாக்கு குறையத் தொடங்கி உள்ளது. தாம் ‘சுயமரியதயையும் தன்மானத்தையும்’ விட்டு வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவு அளிப்பதாக சமீபத்தில் அவர் பராளுமன்றத்தில் பேசி இருந்தார். தலைமை கோருகிறது என்பதற்காக எதையும் விட்டுக் கொடுக்க தாம் தயார் என அவர் இவ்வாறு பகிரங்கமாக ஒத்துக் கொண்டுள்ளார் என கடும் விமர்சனத்துக் குள்ளானார். இவர் தன் மானம் இன்றி வாக்குப் போட்டு விட்டு வந்து விடுவார். ஆனால் அந்த வாக்கின் அடிப்படையில் மேலதிக வறுமைக்குள் தள்ளப் படுவது தமிழ் மக்களுமே. கிளிநொச்சி மிக வறிய பிரதேசம். அங்கிருக்கும் நெசவு ஆலையில் சிறு வயதினர் உட்பட பலர் மிக குறைந்த ஊதியத்துக்கு அதி கடின வேலை செய்து வருகின்றனர். இது பற்றி அவருக்கு என்ன அக்கறை ? முன்பு அரசு சார்பில் ஐரோப்பிய ஒன்றியத்தில் பேசி சென்றவர் அவர். அவர் அரச அதிகாரிகளோடு வரவில்லை எனச் சொன்ன போதும் அவர் பேசியது அரசை காக்கும் உதவியே செய்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. இவாருதான் இவர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள். கிளிநொச்சியில் பெரும்பான்மையாக வாழும் மலையாக மக்கள் இதை நன்கு தெரிந்து கொண்டுள்ளார்கள். சமீபத்தில் ‘தோட்டக் காட்டார்’ என சொல் பாவித்து கேவலமான முறையில் அந்த மக்களை அவர் திட்டியது வெளிச்சத்துக்கு வந்திருந்தது. இது போன்ற அரசியல் வாதிகளுக்கு மக்கள் நலனை விட தமது பாராளுமன்ற இருக்கியே முதன்மையானது என்ற கருத்தை மக்கள் புரிந்து கொள்ளத் தொடங்கி இருக்கிறார்கள்.
- தமிழ் முஸ்லிம் மற்றும் மலையகத் தமிழ் மக்கள் இடையே உறவுகளை உடைத்து பிரிவினை அரசியல் செய்து தமது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள தமிழ், முஸ்லிம் மலையகத் தலைமைகள் ஓயாது பாடு படுகின்றன. கிழக்கில் முஸ்லிம் மக்களுக்கு காணி உரிமை உண்டு. தமிழ் மக்களின் நிலத்தை சிறு முதலாளிகள் புடுங்குவதை கரணம் காட்டி தமிழ் தலைமைகள் பிளவு வளர்கின்றனர். முஸ்லிம் தலைமைகள் இந்த சந்தர்ப்பத்தைப் பாவித்து தாம்தான் முஸ்லிகளின் நலன் காப்போர் போல் பவனை செய்கின்றனர். இவர்களின் அரசியல் மாயத் தனத்தை உடைத்துக் காட்ட வேண்டியது போராட்ட சக்திகளுக்கு அவசியம். முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் அனைவருக்கும் நில உரிமை வேண்டும் என்ற கோரிக்கையில் இருந்து எமது நடவடிக்கைகள் ஆரம்பிக்க வேண்டுமே தவிர ஒரு காணிக்கு இரு சாராரும் அடிபடுவதில் இருந்து இது ஆரம்பிக்கக் கூடாது. அனைவருக்கும் சொந்தக் காணி வழங்கும் அளவுக்கு அங்கு நிலம் உண்டு. யார் எங்கு வசிக்கிறார் என்பதை மக்கள் தாமே தெரிவு செய்ய வேண்டும். அங்கு மேலதிக முதலீடு செய்ய வேண்டும். நில வளத்தை உபயோகிக்க மக்களுக்கு மேலதிக உதவிகள் வழங்க வேண்டும். சிறு முதலாளிகள் மற்றும் அரசியல் தலைமைகள் மக்களின் வறுமையைப் பாவித்து காணிப் பறிப்பில் ஈடுபடுவது தடுக்கப் பட வேண்டும். இதற்கு காரணமாகவும் –மக்கள் எதிர் கொள்கை ஆதரவாளர்களாகவும் இருக்கும் முஸ்லிம் மற்றும் தமிழ் தலைமைகள் கடுமையாக எதிர்க்கப் பட வேண்டியவர்கள்.
- தமது வறுமை காரணமாக – வேறு வழி இன்றி அரச அமைப்புக்கள் மற்றும் கட்சிகளுடன் இணைந்து பல இளையோர் வேலை செய்து வருகின்றனர். குறிப்பாக முன்னால் போராளிகள் இத்தகைய நிலைமைக்குத் தள்ளப் பட்டுள்ளனர். அரசுடன் நல்லிணக்கம் செய்து வரும் தலைமைகள் இவர்களைத் துரோகிகள் எனத் தள்ளி வைத்து பிரித்துப் பேசுவதும் நடந்து வருகிறது. இவர்கள் அரசுடன் இணக்கத்துடன் இயங்கவில்லை. தமது தினப் பாடுகளை பார்க்கவும் – பல சமயம் தமது சக இளையோர் –மற்றும் போராளிகளுக்கு உதவவுமே இவர்கள் சில காரியங்களைச் செய்கின்றனர். இவர்களை தமிழ் தலைமைகளும் வட மாகான சபையும் கைவிட்டு விட்டது மட்டுமின்றி – இவர்களை அரச கூலிகள் எனக் கேவலம் செய்யவும் செய்கின்றனர். போராட்டச் சக்திகள் தான் இவர்களை ஆதரிக்க வேண்டும். ஆவன செய்ய வேண்டும்.
- வட மகான சபை எத்தகய அபிவிருத்தி நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியாத கையாலாகாத சபையாக இருக்கிறது. அங்கு நிகழும் ஊழல் பற்றியும் சமீபத்தில் பல தகவல்கள் வெளி வந்துள்ளது அறிவோம். மத்திய அரசு வழங்கும் பணமே சொற்பம். அதைக் கூட செலவு செய்ய வக்கற்று இவர்கள் திருப்பி அனுப்பிகிறார்கள் என்றால் இவர்களின் நிர்வாகத் திறமை எவ்வளவு போதாமல் இருக்கிறது எனப் பாருங்கள்.
- இந்நிலையில் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கக் கூடிய புதிய அமைப்புக்கள் கட்ட வேண்டிய தேவை எழுந்துள்ளது. வடக்கு கிழக்கில் மட்டுமின்றி தெற்கு மற்றும் மலையகம் எங்கும் உள்ள முற்போக்குச் சக்திகளை ஒன்றிணைத்த ஒரு பலமான போராட்டச் சக்தி கட்டி எழுப்பப் படவேண்டும்.
- தேர்தலுக்காக மக்களை ஏமாற்றாத – மாக்களின் சனநாயக உரிமைக் கோரிக்கைகளை சமரசத்துக்கு உட்படுத்தாத ஒரு சக்திதான் மக்களின் ஒட்டு மொத்த விடுதலை நோக்கி நகர முடியும்.