நேபாளம்- புரட்சிக்கான சூழலும் போதாமைகளும்

குறிப்பு :( நேபாள மக்கள் எழுச்சி புரட்சிகர சமூக மாற்றம் நோக்கி நகர முடியாமலிருப்பதற்கான காரணமென்ன என்பது பற்றி நிகழும் உரையாடலின் தொடர்ச்சியாக தொழிலாளர் அகிலத்துக்கான அமைப்பின் (Committee for workers international) சார்பில் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் வடிவமிது. (இக்கட்டுரையின் சற்றே விரிவான ஆங்கில வடிவத்தை படிக்க இங்கே அழுத்தவும்). மேலதிக உரையாடல்களை இடதுசாரிய ஆங்கில இணையத்தளங்களிற் பார்க்க. மாவோயிச, ஸ்டாலினிய இருநிலை வாத போதாக்குறை பற்றி இங்கு குறிப்பிட்டிருப்பது பற்றி தமிழில் எழுதும் ஏனைய போராளிகளின் கருத்துக்களை அறிய ஆவலாயுள்ளோம். படங்கள்:- மனசி & சுவராட்.)

இந்த ஆண்டு தொழிலாளர் தினமான மே முதலாம் திகதி தொடக்கம் தெருக்களில் திரண்ட இலட்சக்கணக்கான நேபாளத்து மக்கள் சமத்துவமான ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டுமென்ற தமது அவாவை மீண்டும் பகிரங்கப் படுத்தியுள்ளார்கள்.

பிரதம மந்திரி மாதவ் குமார் நேபாளை (Madav Kumar Nepal) இராஜினாமா செய்யக்கோரிப் பொது வேலை நிறுத்தத்தை ஆரம்பிக்கும்படி மாவோயிஸ்டுகள் (Unified Communist Party of Nepal (Maoists)) கோரியதைத் தொடர்ந்து மே 2 இலிருந்து ஆரம்பித்த பொது வேலை நிறுத்தம் 6 நாட்கள் தொடர்ந்து வெற்றிகரமாக நடந்தேறியது. நாட்டை ஸ்தம்பிக்க வைத்த இந்த வேலை நிறுத்தத்தின் போது நடந்த ஆர்ப்பாட்டங்கள, கூட்டங்கள, ஊர்வலங்களில் அரை மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டதாகக் கருதப்படுகிறது.

மே 6ஆம்திகதி தலைநகர் காட்மண்டுவைச் சுற்றியோடும் வளைபாதையை மக்கள் மனிதச்சங்கிலியாக நின்று நிரப்பினர். அதே நாள் நடந்த பொதுக்கூட்டம் நேபாள வரலாற்றிலேயே மிகப் பெரிய கூட்டமாகக் கருதப்படுகிறது. மக்கள் மத்தியில் மாவோயிஸ்டுகளுக்கு இன்றும் இருக்கும் ஆதரவை இது தெளிவுபடுத்தியுள்ளது.

நேபாளத்து இடைக்கால அரசுடன் தொடர்ந்து மாவோயிஸ்டுகளுக்கு இருந்துவரும் முரண்பாட்டின் தொடர்ச்சியே இந்தப் பொது வேலை நிறுத்தம். மாவோயிஸ்ட் கட்சியின் தலைவரான பிரசந்தா என்றழைக்கப்படும் புஸ்ப கமால் தகால் (Puspa Kamal Dahal) இடைக்கால அரசில் 9 மாதகாலம் பிரதமமந்திரியாக இருந்த பின் இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து மாவோயிஸ்டுகளுக்கும் இடைக்கால அரசுக்குமான முரண் மேலும் வலுப்பட்டு வருகிறது.

மாவோயிஸ்டுகளின் ஆயுதப் பிரிவான மக்கள் விடுதலை இராணுவத்தை எவ்வாறு நேபாள இராணுவத்துடன் இணைப்பது என்பது தொடர்பாக வலதுசாரிகளிடமிருந்தும், இராணுவத் தளபதிகளிடமிருந்தும் மாவோயிஸ்டுகள் பல்வேறு தடைகளைச் சந்தித்து வருகின்றனர். தடைகளை நீக்கும் ஒரு நடவடிக்கையாகப் பிரதம மந்திரியாகவிருந்த பிரசந்தா இராணுவத் தளபதியை வேலையை விட்டுத் தூக்கியிருந்தார். அந்தத் திடீர் நடவடிக்கையால் திகைத்துத் துள்ளியெழுந்த வலதுசாரிகள் சனாதிபதியைக் கொண்டு மீண்டும் தளபதியை வேலைக்கமர்த்தினர். இந்த இடைக்காலச் சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கையை எதிர்த்த பிரசந்தா தமது பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து மாவோயிஸ்டுகள் தற்போது அரசுக்கு வெளியிலிருந்து தமது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். முன்பு மன்னராட்சியைக் காவல்காத்த இராணுவம் தற்போது வலதுசாரிகளுடன் சேர்ந்து கொண்டு மாவோயிஸ்டுகளுக்குத் தடைகளை ஏற்படுத்துவதில் குறியாக இயங்கி வருகிறது.

22 கட்சிகளும் இராணுவமும் சேர்ந்து ஒரு பக்கம் எதிர்க்க, சீனா இந்தியா முதற்கொண்டு உலகெங்கும் வலதுசாரி அரசுகளின் எதிர்ப்பு ஒரு பக்கம் அழுத்த சோசலிச மாற்றுக்கான போராட்டத்தை மாவோயிஸ்டுகள் எப்படி முன்னெடுக்க முடியும் என்ற கேள்வி இன்று பலமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

ஏப்ரல் 2006 மக்கள் எழுச்சி

நேபாள நவீன வரலாற்றின் மிகப்பெரிய திருப்புமுனை ஏப்ரல் 2006இல் நடந்த மாபெரும் மக்கள் போராட்டத்திலிருந்து ஆரம்பிக்கின்றது. நேபாளத்தில் மன்னராட்சிக்கு முடிவு கட்டிய இந்த மக்கள் போராட்டம் அத்துடன் நின்றுவிடாது சனநாயக உரிமை, சமத்துவ உரிமைகள், வறுமையில் இருந்து மீட்சி முதலிய கோரிக்கைகளைக் கோரி நின்றனர்.

நேபாள காங்கிரஸ் கட்சி உட்பட வலதுசாரி ஏழு கட்சிக் கூட்டமைப்பு (SPA-seven party alliance) மற்றும் மாவோயிஸ்டுகள் என்று அனைவரும் அந்தப் போராட்டத்துக்கும் பொது வேலை நிறுத்தத்துக்கும் ஆதரவு வழங்கியிருந்தனர். ஆனால, மன்னர் இராணுவத்தைப் பயன்படுத்தி முழு அதிகாரத்தையும் தான் எடுத்து ஆட்சியில் இருந்த வலதுசாரிக் கட்சிகளுக்கெதிராகத் திரும்பிய பிறகே SPA மன்னராட்சிக்கெதிராகத் திரும்பியது. இதற்கு முன்பு SPA வின் பல தலைவர்கள் மன்னராட்சியின் கீழ் சந்தோசமாக ஆட்சி செய்தது நாமறிந்ததே. மாற்றத்தைக் கோரி நின்ற மக்களின் வேட்கையைக் கண்டு மிரண்ட இக்கட்சியினர் தங்களை வேகமாக மன்னராட்சியின் எதிரிகளாக மாற்றிக் கொண்டு விட்டனர்.

முன்பு நேபாள ரோயல் ஆமிக்கு எதிராகக் கடும் போராட்டத்தைச் செய்து வந்த மாவோயிஸ்டுகள் அத்தருணம் பெரும்பான்மைக் கிராமப்பகுதிகளைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. வலதுசாரிக் கட்சிகள் போலன்றி அவர்கள் மன்னராட்சிக்கு எதிராகக் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து செய்து வந்தவர்கள். இதனால் அவர்களுக்கு வறியமக்கள் மற்றும் தொழிலாளர் ,விவசாயிகள் மத்தியில் நல்ல ஆதரவு இருந்தது. இதனால் 2006இல் மக்கள் போராட்டம் வெடித்த பொழுது அதற்கு விரைவில் தலைமையேற்று நடத்தக்கூடிய சக்தி அவர்களிடமிருந்தது.

2006இல் மன்னராட்சிக்கெதிராகத் திரண்ட மக்களைச் சரியான திசையில் வழிநடத்திச் சமுதாயத்தைப் புரட்சிகரமாக மாற்றியமைக்கக் கூடிய வாய்ப்பிருந்தது. வலதுசாரி அதிகாரம் பிளவுபட்டுத் தகர்ந்திருந்த நிலையில் சமூகத்தின் பல்வேறு பிரிவினர் போராட்டத்தில் ஒன்றுபட்டிருந்தனர். தொழிலாளர், விவசாயிகள் மட்டுமின்றி புத்திஜீவிகள், மத்தியதர வர்க்கத்தினர் உட்படப் பலரும் இணைந்த போராட்டம் அதிகாரத்தை இலகுவில் கைப்பற்றும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. ஆனால், இந்தப் புரட்சிக்கான வாய்ப்பைச் சரியான முறையில் பயன்படுத்தி ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பில் முற்றாக அதிகாரத்தைக் கைப்பற்றும் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்த அமைப்போ, தலைமையோ, கட்சியோ இல்லாமற் போனது நேபாள வரலாற்றின் சோகம். இதைச் சரியானபடி கவனிக்கத் தவறிய மாவோயிஸ்டுகள் அரிய வாய்ப்பைக் கைவிட்டார்கள். முன்பு மன்னராட்சியின் கீழ் மகிழ்ச்சியாகச் சேவகம் செய்து வந்த SPA வுடன் கூட்டுச் சேர மாவோயிஸ்டுகள் எடுத்த முடிவு அவர்களை மேலும் பலவீனப்படுத்தியுள்ளது. அதே தருணம், பலவீனப்பட்டுக்கொண்டிருந்த வலதுசாரிகளுக்கு அது புத்துயிர் வழங்கியுள்ளது.

புரட்சிக்கான வேட்கை இல்லாததால் மாவோயிஸ்டுகள் இந்தப் பலவீனமான காரியத்தைச் செய்யவில்லை. மாறாகப் புரட்சியை நடத்துவது தொடர்பான அவர்தம் தவறான மார்க்சிய புரிதலின் வெளிப்பாடேயிது. முதல் முதலாளித்துவ சனநாயகப் புரட்சியை நிறைவேற்றி பாராளுமன்ற சனநாயகத்தை நிலை நாட்டவேண்டும்-இதன் பிறகே சோசலிசப் புரட்சிக்கான நடவடிக்கையில் இறங்கமுடியும்- என்பது மாவோயிஸ்டுகளின் வாதம். (நிலப்பிரபுத்துவ உறவு முறையிலிருந்து நாட்டை விடுவித்துத் தேசிய இனப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருதல், நிலச்சீர்திருத்தம், மற்றும் சரியான சனநாயக முறைகளை அமுலுக்கு கொண்டுவருதல் முதலான கடமைகளை நிறைவேற்றுதலை முதலாளித்துவ சனநாயகப் புரட்சி என்று மார்க்சியர் ‘சுருக்கமாக’ அழைப்பர்.)

இந்த இருநிலை வாதத்தின் (Two stages theory) பற்றாக்குறையை நாம் பலதடவை சுட்டிக்காட்டியுள்ளோம். நவகாலனித்துவ நாடுகளில் ஏகாதிபத்தியத்துடனான உறவை முறித்துக் கொள்ள முடியாத தேசிய முதலாளித்துவம் தமது வரலாற்றுக் கடமையான முதலாளித்துவப் புரட்சியை நிறைவேற்ற வக்கற்றது. சர்வதேச முதலாளித்துவ ஆளுமையிலிருந்து விலகித் தனியாகச் இயங்க முடியாத தேசிய முதலாளித்துவம் சர்வதேச முதலாளித்துவச் சுரண்டல்களை ஊக்குவிப்பதைத் தாண்டி மேலதிகச் சீர்திருத்தங்களைச் செய்யாது. இதனால் தேசிய முதலாளித்துவத்தில் இருந்து முறித்துக் கொள்ளாமல் சரியானபடி சனநாயகத்தை அறிமுகப்படுத்துவதோ அல்லது வறுமையிலிருந்து மக்களை மீட்பதோ சாத்தியமில்லை. இதனால்தான் முதலாளித்து சனநாயகப் புரட்சியை நடத்தும் கடமையும் தொழிலாளர்களின் கைகளில் விழுகிறது.

லியோன் ட்ராட்ஸ்கி நிரந்தரப்புரட்சி என்ற தமது புத்தகத்தின் மூலம் மிகத் தெளிவாக விளங்கப்படுத்தியிருக்கும் விடயமிது. நவ காலனித்தவ நாடுகளில் எவ்வாறு புரட்சியை முன்னெடுக்க முடியும் என்பதற்குச் சரியான மார்க்சிய பார்வையாக இன்று வரை இருந்து வருகிறது ட்ரொட்ஸ்கியின் இவ்விளக்கம். ட்ரொட்ஸ்கியின் இப்புத்தகத்தின் உருது மொழிபெயர்ப்பு முதல்முறையாக பாகிஸ்தானில் பதிப்பிக்கப்பட்ட போது அதற்கான முன்னுரையில் பின்வருமாறு விளக்கியிருந்தார் பீட்டர் டாவ்- (CWI ன் சர்வதேச செயலாளர்களில் ஒருவர்).

“1848 புரட்சியின் படிப்பினைகளின் தொடர்ச்சியாக புரட்சியின் ‘நிரந்தர’ தன்மை பற்றி முதலில் பேசியவர் மார்க்ஸ். ‘எம் சொத்துக்களை கைப்பற்றும் வர்க்கங்கள் அதிகாரத்தில் இருந்து துரத்தப்படும் வரை புரட்சியை நிரந்தரப்படுத்துவது எமது வேலை’ என்று 1850ல் மார்க்ஸ் குறிப்பிட்டிருந்தார். இதற்கு ஒரு படி மேலே சென்ற ட்ரொட்ஸ்கி தொழிலாளர் விவசாயிகளை தமக்கு ஆதரவாகத் திரட்டிய பின் சோசலிச மாற்றுக்கான வழியை நோக்கி நகர்வது தவிர்க்க முடியாதது என்று விளக்கியிருந்தார்.

இம்மார்க்சிய விளக்கம் 1917இல் ரஷ்யாவில் நடந்த புரட்சியின் தன்மையைச் சரியானபடி கணித்தது. பெட்ரோகிராட்டில் அதிகாரத்தைக் கைப்பற்றிய தொழிலாளர்கள் உடனடியாகக் கிராமத்து மக்களின் ஆதரவைத் திரட்டினர். விவசாயிகளைத் தம்பக்கம் வென்றெடுத்த அவர்களால் முதலாளிகளுக்கும் நிலப்பிரபுகளுக்கும் எதிரான போராட்டத்தை முன்னெடுக்க முடிந்தது. தொழிலாளர்கள் அதிகாரத்தைத் தாம் எடுத்துக்கொள்வதன் மூலம் மட்டுமே விவசாயிகளுக்கு நிலத்தை வழங்க முடியும் என்பதை போல்ஷ்விக்குகள் அறிந்திருந்தனர். இதை உணர்ந்த விவசாயிகள் போல்ஷ்விக்குகளின் பின்னே திரண்டது புரட்சியைச் சாத்தியமாக்கியது.

புரட்சியை எதிர்த்த 21 நாடுகளின் இராணுவத் தாக்குதல், புரட்சியை மொஸ்கோ பெட்ரோகிராட் பிரதேசத்துக்குள் முடக்கிய போதும் கூட அவர்களால் புரட்சி பரவுவதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.”

தனி ஒரு நாட்டில் புரட்சி சாத்தியமா? நேபாளத்தில் புரட்சி வெடித்தால் சீன இந்திய இராணுவம் உட்பட சர்வதேச சக்திகள் புரட்சியை அடக்கி ஒடுக்காதா? போன்ற கேள்விகளுக்கு மேற்கண்ட மேற்கோள் சரியான பதிலைச் சுட்டுவதை அவதானிக்க. இது தவிர மிக மிகச் சிறிய தொழிலாள வர்க்கம் கொண்ட நேபாளத்தில் எவ்வாறு புரட்சிக்குத் தொழிலாள வர்க்கம் தலைமை தாங்க முடியும் என்ற கேள்விக்கும் பதிலை மேற்கண்ட விளக்கம் சுட்டுவதை அவதானிக்க. இது பற்றிய ஆழான அறிதலைச் செய்ய விரும்புபவர்கள் CWI இணையத்தில் உள்ள கட்டுரைகளைப் பார்க்க. தற்சமயம் சீன மொழிபெயர்ப்பில் வரும் டோனி சுனுவா எழுதிய சே குவேரா புத்தகத்துக்கு அவர் வழங்கியிருந்த முன்னுரையிலும், குறிப்பாக இது பற்றிய உரையாடலை நீங்கள் வாசிக்கலாம். சுருக்கம் கருதி இது பற்றிய விலாவாரியான உரையாடலை இங்கு செய்வதைத் தவிர்க்கவேண்டியுள்ளது.

மிகச் சிறிய தொகையாக இருப்பினும் நேபாளத் தொழிலாள வர்க்கம் புரட்சிக்கான நகர்வில் மிக முக்கிய பங்களிக்கும் என்பதை அங்கு வெற்றிகரமாக நிகழும் வேலை நிறுத்தங்கள் எடுத்துக் காட்டுகின்றன. மக்கள் திரட்சியை உருவாக்குவதில் விவசாயிகள் மிக முக்கிய பங்கு வகித்தாலும் தொழிலாளர்களை ஒன்றிணைத்துத் திரளாமல் புரட்சிகர மாற்றத்தைக் கொண்டு வருவது சாத்தியமற்றது என்பதைத் தற்கால நேபாள வரலாறு மிகத் தெளிவாக விளக்குகிறது.

நிலப்பிரபுக்களுடனும் -அவர்கள் நெருங்கிய உறவு வைத்திருக்கும் முதலாளித்துவ சக்திகளுடனும் இணைந்து இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குவதன் மூலம் நிலச் சீர்திருத்தங்களைக் கொண்டு வரமுடியும் என்று மாவோயிஸ்டுகள் நம்பியது மிகப்பெரிய தவறென்பது தற்போது மிகத் தெளிவாகியுள்ளது. சட்டத்துக்குப் புறம்பாக நிலப்பிரபுக்கள் கைப்பற்றிய காணிகள் திருப்பிக் கொடுக்கப்பட்டிருப்பதைத் தவிர வேறு எவ்வித நிலச் சீர்திருத்தங்களையும் தமது ஒன்பது மாதக் கூட்டாட்சி காலத்தில் மாவோயிஸ்டுகளால் அறிமுகப்படுத்த முடியவில்லை. முதலில் சனநாயகப் புரட்சியைச் செய்வோம் பிறகு பார்க்கலாம், பாட்டாளி மக்கள் புரட்சி என்ற வாதங்கள் மண் கவ்வியிருப்பதும் இன்று தெளிவு. இவ்வகை இருநிலை வாதம் நேபாளத்தில் மட்டுமின்றி உலகெங்கும் பல்வேறு நாடுகளில் புரட்சி நடந்தேறுவதை தடுத்து நிறுத்தியதை வரலாறு முழுக்க பார்க்கலாம் நாம். இந்த வாதங்கள் தொழிலாளர் முதலாளிகளுடன் அதிகாரத்தைப் பகிர்வதை நியாயப்படுத்துகிறது. முதலாளித்துவ சனநாயகத்தை அமுலுக்குக் கொண்டு வருகிறோம் என்ற பெயரில் முதலாளித்துவ சக்திகளை பலப்படுத்தும் வேலையிது. இதன் மூலம் இறுதியில் தொழிலாளர் நலன்கள் தோற்கடிக்கப்பட்டதற்கு நிறைய உதாரணங்கள் உண்டு. சீனப்புரட்சியின் தோல்விக்கும், இன்று சீன அரசு முதலாளித்துவப் பொருளாதாரம் நோக்கி நகர்தலுக்கும் இதுவே காரணம். இந்தியாவில் புரட்சிகரச் சக்திகள் பலப்படமுடியாமற் போனதற்கும் இதுவே காரணம். இதே வாதத்தைப் பயன்படுத்தி சி. பி. எம், இன்றுவரை அதிகாரத்துடனான உறவைப் பேணுவதும் தொழிலாளர்கள் ,விவசாயிகள், பழங்குடி மக்களின் நலன்களுக்கெதிராக இயங்கி வருவதும் பலரும் அறிவர். நந்திகிராமை யாரும் மறக்க முடியாது. போதாக்குறைக்கு நேபாள மாவோயிஸ்டுகளுக்கு எதிரான இந்திய அரசின் நடவடிக்கைகளுக்கும் அவர்கள் உதவி வருகிறார்கள். இதை அவர்கள் மார்க்சியத்தின் பெயரால் நியாயப்படுத்துவதற்கு அவர்களுக்கு உதவுவது இந்த இருநிலை வாதமே. இதனால்தான் இந்தியத் தொழிலாளர்களோ அல்லது வறிய மக்களோ சி.பி.எம் மைத் தமது கட்சியாகப் பார்ப்பது குறைந்து வருகிறது. இக்கட்சியில் தமது உயிரைக் கொடுத்துக் கடும் பணியாற்றிவரும் இளையோர் கட்சியிலிருந்து விலக வேண்டும். இக்கட்சி –அவர்தம் தலைமை –தத்துவம் மார்க்சியத்துக்கு எதிரானது-ஒடுக்கப்படும் மக்களுக்கு எதிரானது.

நேபாளத்திலும் மாவோயிஸ்டுகள் தற்போதய வழியைத் தொடர்வார்களானால் அவர்களும் சி.பி.எம்மின் நிலையையே சந்திக்க நேரிடும். சனநாயகத்தை நிறுவும் நிலையைத் தாண்ட வேண்டுமென்ற காரணம் காட்டி வலதுசாரிகள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதைக் கண்மூடிப் பார்த்து நிற்பது மகா பிழை. இங்கிலாந்தில் இருப்பது போல் சட்டத்துக்குட்பட்ட மன்னராட்சி முறையைக் காப்பாற்ற விரும்பியிருந்த வலதுசாரிக் கட்சிகளின் நோக்கத்தை முறியடித்தது மாவோயிஸ்டுகளின் விட்டுக் கொடுக்க மறுத்த திடமான நிலையே. இன்று நேபாளத்தில் மன்னராட்சி முறை முற்றாக ஒழிக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் மாவோயிஸ்டுகளே என்பது மிகையான கூற்றல்ல. ஆனால், மன்னராட்சியை முடிவுக்கு கொண்டுவருவதில் காட்டிய உறுதியை மாவோயிஸ்டுகள் மற்றய விடயங்களில் காட்ட தவறி வருகின்றனர். இவர்கள் ஏற்படுத்திக் கொடுத்த இடைவெளியில் வலதுசாரிகள் தம்மைப் பலப்படுத்தி வருவதே இன்று நிகழும் யதார்த்தம்.

தேர்தலுக்கு முன் யூன் 2006 இல் மாவோயிஸ்டுகள் ஒத்துக்கொண்ட 12 புள்ளி ஒப்பந்தம் அவர்தம் இயக்கத்தை உடைக்க வழியேற்படுத்திக் கொடுத்திருக்கிறது. உதாரணமாக, தேசிய எல்லையை மதிக்கும் ஒன்றுபட்ட நேபாளத்தில் தேசிய இறையாண்மையை மதிக்கிறோம் என்று அவர்கள் ஒத்துக்கொண்டது பல தேசிய இனங்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒப்பந்தம் உருவாகி ஒரு வருடத்துக்குள் தாராய் பிரதேசத்தில் தாராய் விடுதலை இயக்கம் உருவானது குறிப்பிடத்தக்கது. சிறுபான்மையினரது உரிமைகளைக் காப்பாற்றும் உறுதி மற்றும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் உறுதி முதலியன இன்றி, நேபாள தேசிய ஒருமிப்புக்கு இணங்குவது இவ்வாறுதான் பிளவுகளுக்கு இட்டுச்செல்லும். போதாக்குறைக்கு உலக நாடுகளுடன் நல்லுறவைப் பேணுவதற்கும் குறிப்பாக அண்மைய நாடுகளான சீனா இந்தியாவுடன் நெருங்கிய உறவைப் பேணவும் மாவோயிஸ்டுகள் ஒத்துக் கொண்டுள்ளார்கள். உலகெங்கும் பரந்து பெருகி வரும் போராட்டச்சக்திகளை நோக்கி ஆதரவு தேடாமல் முதலாளித்துவ அரசுகளுடன் உடன்படுவது நேபாளப் போராட்டத்தை மேலும் தனிமைப்படுத்தி பலவீனப்படுத்தும். இதுவொரு பெரும் பிழை. நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதைத் தமது நலனுக்கெதிராகப் பார்க்கும் உலக முதலாளித்துவ அரசுகள் தொடர்ந்து SPA வுடன் நல்லுறவைப் பேணி, அவர்களைப் பலப்படுத்தி வருவதை அனைவருமறிவர். SPA யின் முக்கிய தலைவர்கள் இந்திய அரசின் வெறும் பொம்மைகளாக இந்திய முதலாளித்துவ நலனுக்கேற்ப ஆட்டம் போடுவதும் மாவோயிஸ்டுகளுக்குத் தெரியும். 12 புள்ளி ஒப்பந்தத்துக்கு முன்பு SPA தலைவர்கள் இந்திய அரசுடன் இரகசியமாகப் பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தியதும் இன்று பலரும் அறிந்தவொன்று. அப்படியிருக்க அவர்களுடன் கூட்டு வைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக எதை வெல்ல முடியும்?

இன்று ஒன்றிணைந்த – தொழிலாளர்களுக்கென தனித்த சக்தியைக் கட்டியெழுப்ப வேண்டியிருக்கும் நிலையில் ஒடுக்கும் வர்க்கங்களுடன் இணைவது எவ்விதத்திலும் உபயோகமற்றது. மாறாக, அது புரட்சிகர நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலைக்கே தள்ளும். புரட்சிகர நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டையாகக் கூட்டாட்சி இருக்கும் என்பதை உய்த்தறிய மாவோயிஸ்டுகள் தவறிவிட்டார்கள். மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவு வழங்கிவரும் ஒடுக்கப்படும் மக்கள் வலதுசாரிக் கட்சிகளைத் தமது எதிரிகளாகத் தொடர்ந்து கருதி வருவதையும் அவதானிக்கலாம். அவர்தம் அந்த வர்க்க உணர்வு மாவோயிஸ்டுகளின் இருநிலை வாதத்தைத் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கி வருகிறது. இந்த முரணைத் தற்போது ஒரளவுக்காவது புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ள மாவோயிஸ்டுகள் தமது பழைய கருத்துகள் பலதை விட்டுக் கொடுக்க முன் வந்துள்ளார்கள். அவர்களது கடைசிக் கட்சி அறிக்கை கூட்டாட்சியால் ஏற்பட்ட முட்டுக்கட்டை மற்றும் குறைபாடுகள் பலவற்றை நேர்மையுடன் சுட்டிக்காட்டுகிறது. “பழைய அரச இயந்திரத்துடன் இணைந்து வேலை செய்ய வேண்டி ஏற்பட்டதால் சரியானபடி இயங்க முடியாமல் போய்விட்டதை நாம் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்” என்கிறது அவ்வறிக்கை. ஆனால், இந்த முட்டுக்கட்டையை மீறி எவ்வாறு நகர்வது என்பது பற்றி எந்த விளக்கமும் அவ்வறிக்கையில் வழங்கப்படவில்லை. எத்திசையில் இனி நகர்வது என்பது பற்றி ஒரு குழப்பமான நிலையே நிலவிவருகிறது. இத்தருணத்தில் ட்ரொட்ஸ்கிய வழிமுறைகளையும் தமது கவனத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

“தற்போதய காலகட்டத்தில் பாட்டாளி மக்களின் நலனை முன்னெடுக்க ஸ்டாலினியத்தை விட ட்ரொஸ்கிய வழிமுறைகளே சிறந்தது என்பதை மார்க்சிய புரட்சிகரவாதிகள் தெரிந்துகொள்ளவேண்டும்” என்று கட்சியின் முக்கிய தலைமை உறுப்பினரான பாபுராம் பட்டாராய் தாம் வழங்கிய செவ்வி ஒன்றில் சொல்லியதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இருப்பினும், அத்தகைய ஒரு பாய்ச்சலைச் செய்ய அவர்கள் இன்னும் தயங்கிக் கொண்டிருப்பதையே நாம் அவதானிக்க முடிகிறது.

பதிலாக, அவர்கள் தாம் தமக்கென- நேபாளத்துக்கென- புதுவழி ஒன்றை வைத்திருப்பதாகக் கூறுகிறார்கள். பிரசந்தா வழி என்று கட்சியின் தலைவரின் பெயரைக்கொண்டு அழைக்கப்படும் ‘நேபாள வழி’ பழைய கூழைப் புதிய பிளாவில் தருவது போன்றிருக்கிறது. நேபாளத்தில் எப்படிப் புரட்சியைச் சாதிப்பது என்பது பற்றி அவர்கள் இன்னும் ஒரு முடிவுக்கும் வந்த மாதிரித் தெரியவில்லை. ‘நாம் நிலப்பிரபுத்துவ மன்னராட்சியை இல்லாதொழித்து விட்டோம். ஆனால், சமூக பொருளாதார அமைப்பு இன்னும் மாறவில்லை. அதனால், நாம் சனநாயகப் புரட்சியைச் செய்து முடிக்க வேண்டும். தற்போதைய உலக நடைமுறையைக் கருத்திற்கொண்டு நேபாளத்திற்கேற்றாற் போல் நாம் சனநாயகப் புரட்சியை நடத்தி முடிப்பதில் குறியாக இருக்கிறோம். சனநாயக முறை மூலமாக – சட்டமாற்றம் மூலமாக இதை நிறைவேற்ற நாம் முயற்சிக்கிறோம். இருப்பினும் பலப்படும் வலதுசாரி எதிர்ப்பால் எமக்குப் பெருந்தடைகள் வந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில், அமைதி முறையில் புரட்சியைச் சாதிப்பது சாத்தியமற்றதாகிப் போய்க் கொண்டிருக்கிறது.’ என்று பாபுராம் பட்டாராய் சமீபத்தில் கூறியிருப்பது எவ்வாறு அவர்கள் தமது பழைய வாதங்களின் எல்லையைத் தொட்டு விட்டார்கள் என்பதற்குச் சரியான எடுத்துக் காட்டு. இந்த எல்லையைத் தாண்டிச் செல்ல அவர்கள் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தாம் முதலாளித்துவ சக்திகளுடன் தொடர்ந்து சமரசத்தில் ஈடுபட ஒடுக்கப்படும் மக்கள் ஒன்று பட்ட ஆதரவைத் தொடர்ந்து வழங்கிக்கொண்டிருப்பார்கள் என்று எதிர்பார்ப்பது தவறு. மாறாக, சமூகத்தில் என்னென்ன பிளவுகளை உருவாக்க முடியுமோ அப்பிளவுகளை உருவாக்கி அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள முதலாளித்துவ சக்திகள் முயலும் என்பதை நாம் உணர வேண்டும். இந்த வேலையை அவர்கள் ஏற்கனவே தொடங்கி விட்டார்கள். அது மட்டுமின்றி வலதுசாரி ஆளும் வர்க்கத்தினர் தம்மைப் பாதுகாக்க இராணுவத்தையும் உபயோகிக்கத் தயங்க மாட்டார்கள் என்பது நிச்சயம். புதிய சட்டமைப்பில் புரட்சிகரச் சக்திகளுக்கு எதிரான பகுதிகளை இணைப்பதன் மூலம் ‘சட்ட முறைப்படி’ அதிகாரத்தைத் தமக்கு மட்டும் சொந்தமாக்கிக் கொள்ளவும் அவர்கள் தயங்க மாட்டார்கள். எவ்வளவு காலம் மாவோயிஸ்டுகள் தாமதிக்கிறார்களோ அவ்வளவுக்கு நிலைமையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த வலதுசாரிகள் முற்படுவர் என்பதை உறுதியாகச் சொல்லலாம். இன, சாதிய, மத அடிப்படையில் பல்வேறு பிளவுகளைத் தூண்டுவதன் மூலம் அவர்கள் தமது செல்வாக்கைப் பலப்படுத்த முயன்று வருகின்றனர். மாவோயிஸ்டுகளின் தலைமை உயர்சாதியைச் சேர்ந்தது என்ற பிரச்சாரத்தை எதிர்கொள்ள மாவோயிஸ்டுகள் சாதியத்துக்கு எதிரான பிரச்சாரங்களைச் செய்தும், ஒடுக்கப்படும் சாதியப் போராளிகளை தலைமைப் பதவிகளுக்கு எடுக்க தனிச்சலுகைகளை உருவாக்கியும் பல்வேறு முயற்சிகள் செய்தாலும் சாதிய அமைப்பு முறையைப் பேணிக்கொள்ளும் அனைத்து அதிகாரங்களுடனும் அவர்கள் திட்டவட்டமான முறிவை ஏற்படுத்திக் கொள்ளும்வரை இது பெரும் பிரச்சினையாக நிலைத்திருக்கப் போவது திண்ணம். தலைவர்கள் நெற்றியில் திலகத்துடன் குத்துவிளக்கேற்றிக் கூட்டங்களைத் தொடங்குவது இதற்கு உதவப் போவதில்லை. கிராமப்புறங்களில் நிகழும் சாதியப் பாகுபாட்டை முறியடிக்கும் திட்டவட்டமான நடவடிக்கைகள் இன்னும் முன்னெடுக்கப்படவில்லை.

இதேவேளை மாவோயிஸ்ட் தலைமைகளுக்குள்ளேயே பல முரண்பாடுகள் வெடிப்பதையும் நாம் அவதானிக்ககூடியதாக இருக்கிறது. இந்த உதிரிப் பிளவுகள் நேபாளத்தில் புரட்சிக்கான சாத்தியக்கூறை முடிவுக்குக் கொண்டுவரும் என்பது தெளிவானது. 2006ஆம் ஆண்டில் மன்னராட்சிக்கு எதிராகப் போராடிய காலம் வேறு, தற்போதைய காலம் வேறு. தற்போது வலதுசாரிகள் குறிப்பிட்ட உயர்வர்க்கத்தையும் மத்தியதர வர்க்கத்தையும் புத்திஜீவிகளையும் மாவோயிஸ்டுகளுக்கு எதிராகத் திருப்ப முயன்று வருவதை அவதானிக்கலாம். இதை முறியடிக்க அனைத்துத் தொழிலாளர்களினதும் ஆதரவைத் திரட்டும் முயற்சியில் இறங்காமல் வலதுசாரிகளுடன் சமரசம் செய்வதில் நேரம் செலவிடுவதால் மாவோயிஸ்டுகளுக்கு எந்தப் பிரயோசனமும் இல்லை. இந்தத் தொடர் சமரசமே மாவோயிஸ்டுகள் மக்கள் ஆதரவை இழக்க வழியேற்படுத்திக் கொண்டிருக்கிறது.

எவ்வளவு காலம்தான் புரட்சியைத் தள்ளிப்போடுவது?

புரட்சியை நடத்தியே ஆகவேண்டிய கட்டாயத்தில் வந்து நிற்கிறார்கள் மாவோயிஸ்டுகள். அவர்கள் ‘இறுதி முயற்சி’ என்று வர்ணித்த மே மாதப் பொது வேலை நிறுத்தப் போராட்டங்கள் எவ்வித வெற்றியும் இல்லாமல் முடிவுக்கு வந்துள்ளன. பொது வேலை நிறுத்தத்தை முறியடிக்க இராணுவத்தை உபயோகிப்போம் என்று வெருட்டிய இடைக்கால அரசுக்குத் தமது முழுமையான ஆதரவையும் இந்திய அரசு வழங்கியது தெரிந்ததே. போதாக்குறைக்கு வலதுசாரி ஊடகங்கள் மாவோயிஸ்டுகளைப் போட்டு மோசமாகத் தாக்கின. எதிர்ப்பாளர்கள் ஒருங்கமைத்த ‘அமைதி ஊர்வலம்’ என்ற வலதுசாரிய வக்காலத்தில் 25 000 க்கும் மேற்பட்டோர் பங்குபற்றியது அவர்களுக்கு மேலும் பலத்தைச் சேர்த்திருந்தது. இதில் பங்கு பற்றியவர்கள் பலர் உயர் சம்பளத்தில் வேலை செய்பவர்களும், வியாபாரிகளுமென்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அழுத்தங்களால் மாவோயிஸ்டுகள் தமது வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர நேரிட்டது. இருப்பினும், பொதுக்கூட்டங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கின்றன. தாம் எந்நேரமும் வேலைநிறுத்தத்தை மீண்டும் ஆரம்பிக்கலாம் என்று மாவோயிஸ்டுகள் சொல்கின்றனர். பைப்பில் தண்ணி திறந்து பூட்டுவதுபோல் மக்கள் இயக்கத்தைத் தொடர்ந்து பாவிக்க முடியாது என்பதை அவர்கள் உணர வேண்டும். எவ்வித வெற்றியும் இல்லாமல் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தது ஒரு பின்னடைவே. பிரதமமந்திரியின் இராஜினாமாவிற்குப் பிறகு தான், தாம் பேச்சுவார்த்தைக்கு வருவோம் என்று பொது வேலை நிறுத்தத்தின்போது மாவோயிஸ்டுகள் அறிவித்திருந்தனர். தற்போது மாவோயிஸ்டுகள் தமது இளையோர் பிரிவைக் கலைத்துச் சிட்டிசன் கட்சியாக மாறினால் தான் பிரதமமந்திரி இராஜினாமா செய்வாரென்று வலதுசாரிக் கட்சிகள் அடம்பிடிக்கின்றன.

கால வரையறையற்ற பொதுவேலை நிறுத்தம் தொழிலாளர் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுக்கிறதென்பது உண்மையே. சமூகத்தை உண்மையில் இயக்கிக்கொண்டிருப்பது தொழிலாளர்களே தவிர ஆளும் வர்க்கமல்ல என்ற உண்மையையும் பொது வேலை நிறுத்தம் தெளிவாக்குகிறது. தொழிலாளர்களின் தொகை நாட்டின் மொத்த சனத்தொகையில் மிகச்சிறியதாக இருப்பினும் அவர்களால் ஒட்டுமொத்த நாட்டையும் ஸ்தம்பிக்க வைக்க முடியும் என்பதையும் அது திறம்பட எடுத்துக் காட்டுகிறது. இருப்பினும், பொது வேலைநிறுத்தம் ஊடாக மட்டும் அதிகாரத்தைக் கைப்பற்றிவிடலாம் எனக் கருதுவது தவறு.

சரியாக ஒழுங்குபடுத்தப்படாத வேலைநிறுத்தம் புரட்சிகர மனநிலையைச் சோர்வடையச் செய்யக்கூடிய அபாயமும் உண்டு. அது மட்டுமின்றி நேபாளம் போன்ற வறிய நாட்டில் இலக்கற்றுத் தொடரும் வேலை நிறுத்தம் மக்களைப் பட்டினியிற் தள்ளும் அபாயமும் உண்டு. உணவு பகிர்ந்தளித்தல் முதலான சமூகம் சார் பல்வேறு தேவைகளைச் சரியானபடி ஒருங்கமைக்காது எவ்வாறு தொடர்ந்து வேலை நிறுத்தத்தை நடத்த முடியும்? வேலை நிறுத்தத்தின்போது தொழிலாளர் கமிட்டிகள் உருவாக்கப்பட்டதாகத் தெரியவில்லை. ஒருத்தரும் வேலைக்கு போகவேண்டாம், ஒருத்தரும் கடை திறக்கவேண்டாம், வரிசையாக வாங்கோ வந்து எம் தலைவர்களின் பேச்சை கேளுங்கோ என்று சொன்னால் மட்டும் போதுமா? மக்கள் தங்கள் தேவைகளுக்கான நடைமுறைகளை ஒழுங்கமைக்கும் நிர்வாகக் கட்டமைப்புகளை ஒழுங்கமைக்காமல் புரட்சியைச் சாதிப்பது எப்படி?

தொழிலாளர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதென்பது ஒரு அடிப்படை சமூக-பொருளாதார மாற்றத்தை குறிக்கிறது. இந்த நடவடிக்கை நேபாளத்தில் மட்டுமல்ல உலகெங்கும் இருக்கும் அதிகார சக்திகளுக்கு எதிரான சவாலான மாபெரும் செயல். இந்த புரட்சிகர நடவடிக்கையை உள்நாட்டு வெளிநாட்டு ஆளும் வர்க்கங்கள் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருப்பர் என்று எதிர்பார்க்க முடியாது. இராணுவம் உட்படத் தமது முழுப் பலத்தையும் பாவித்து இதை அவர்கள் எதிர்ப்பார்கள் என்பது தெரிந்ததே. ஆயிரக்கணக்கான போராளிகளைக் கொன்று இரத்தக்களறி ஏற்படுத்தினாலும் ஏற்படுத்துவார்களே தவிர அவர்கள் தமது அதிகாரத்தை தாமாக ஒருபோதும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை. இதை நன்றாகத் தெரிந்துள்ள புரட்சிகர சக்திகள் தமது அதிகாரத்தைக் கைப்பற்றும் நடவடிக்கையைத் திட்டவட்டமான முறையில் செய்ய வேண்டியது தவிர்க்க முடியாதது. மக்களை ஆயுத மயப்படுத்தல் முதற் கொண்டு பல உத்திகளைக் கையாளவேண்டியது தேவையே. இதற்கு மக்களை முறைப்படி அரசியல் மயப்படுத்துவது மிக முக்கியமானது.

சமீபத்திய நேபாளப் பொது வேலை நிறுத்தத்தின் போது அரசியல் உரையாடல் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே நிகழ்ந்தது. தனியொரு நாட்டுக்குள் சோசலிசப் புரட்சி தப்பி வாழ முடியுமா? போன்ற உரையாடல்கள் தலைவர்கள் மத்தியில் நிகழ்ந்ததேயன்றி, மக்கள் மத்தியில் புரட்சிகரக் கருத்துகள் பற்றிய உரையாடல்கள் நிகழ்த்தப்படவில்லை. சமூக மாற்றம் என்றால் என்ன? புரட்சிகரமாகச் சமூகத்தை மாற்றியமைப்பது எப்படி? புதிய சமூகக் கட்டமைப்பு எப்படிப்பட்டதாக இருக்கும்? எவ்வாறு மக்கள் அதிகாரத்தைத் தமது கைகளில் வைத்திருக்க முடியும்? போன்ற எந்த உரையாடல்களும் நிகழ்த்தப்படவில்லை. எப்படி நகரும் புரட்சி?

இந்திய-சீனத் தொல்லைகள்

நாம் புரட்சியை முன்னெடுக்கும்போது இந்திய – சீன இராணுவங்கள் நுழைந்து எம்மைத் தாக்கலாம் என்பது மாவோயிஸ்டுகள் தமது தயக்கத்தை நியாயப்படுத்த முன் வைக்கும் வாதங்களிலொன்று.

ஓராண்டுக்கு முதல் இதே மே மாதம் ஆசியாவின் நீண்ட கால யுத்தமாகக் கருதப்பட்ட யுத்தம், இலங்கையில் கொடூரமான முறையில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை நாமறிவோம். முக்கியமாக யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் நிகழ்ந்த கோரம் இன்று பலரும் அறிந்ததே. இனப்பிரசினைக்கு ‘சீனத் தீர்வு’ என்று குறிப்பிடும் படிக்கு இந்த யுத்தம் முடிவுக்கு வந்ததுக்கு பின்னே யிருந்த சீன அரசின் உதவியும் இன்று பலரும் அறிந்தவொன்று. ‘இலங்கை வழிமுறை’ என்ற பெயரில் பர்மா உட்படப் பல்வேறு கொடிய அதிகார வர்க்கங்கள் ‘சீன உதவியுடன்’ வன்முறையைக் கட்டவிழ்க்கத் துடித்துக் கொண்டிருப்பதும் -இலங்கை அரசிடம் ஆலோசனைகள் பெறுவதும் நாமறிவோம். நேபாளத்து மாவோயிஸ்டுகளையும் ஒட்டுமொத்தமாக அழித்தொழிக்க ‘இலங்கை முறை’ பயன்படுத்தப்படலாம் என்ற பயமும் பலரிடம் உண்டு. இந்திய-சீன அரச உதவியுடன் இலங்கையில் நடந்த கோரம் தெற்காசியா மற்றும் உலகெங்கும் ஏற்படுத்திய அதிர்வின் தொடர்ச்சியேயது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இருக்கும் முரண்பாட்டைப் புரட்சிகர சக்திகள் பயன்படுத்தலாம் என்ற முட்டாள்தனமான வாதத்தையும் இது ஒரு முடிவுக்கு கொண்டுவந்துள்ளது.

சர்வதேச அளவில் ஒடுக்கப்படும் தொழிலாளவர்க்கத்தை ஒன்றிணைத்துப் பலத்தைக் கட்டுவதற்குப் பதிலாக ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான முரண்பாடுகளை மட்டும் பாவித்துத் தொழிலாளர் நலன்களை வென்றெடுக்கலாம் என்ற திட்டமிடலும் எவ்வளவு தவறானது என்பதையும் இலங்கை உதாரணம் தெளிவாக்கியுள்ளது. நூற்றாண்டுகளாக மேற்கத்தேய ஏகாதிபத்திய பொருளாதாரக் கட்டுப்பாட்டின் கீழிருந்த தெற்காசியா முதன் முறையாகப் பிராந்திய ஏகாதிபத்தியங்களின் செல்வாக்குக்குள் நகர்வதன் இரத்தக்கறை படிந்த அறிவிப்பே இலங்கை யுத்த முடிவு. சீனாவினதும் இந்தியாவினதும் முதலீடுகள் தெற்காசிய நாடுகளில் பரவிவருவதை நாம் அறிவோம். இந்தச் சூழலில், நேபாளம் தெற்காசியாவிலேயே ஒரு வில்லங்கமான இடத்திலிருக்கிறது. உலகிலேயே மிக வறிய நாடுகளில் ஒன்றான நேபாளம் உலகின் மிக வேகமாக ‘வளரும்’ நாடுகளான சீனாவுக்கும் இந்தியாவுக்கும் நடுவில் இருக்கிறது. இந்த இரண்டு பிராந்திய வல்லரசுகளும் நேபாளத்தின் பொருளாதாரத்தையும் அதன் அரசியலையும் தாம்தான் தீர்மானிக்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக நிற்கின்றன. இதில், குறிப்பாக இந்திய அரசு கலாச்சார உறவுகளைப் பாவித்துத் தமது முரட்டுத்தனமான பிடியை மேலும் இறுக்க முயற்சித்து வருகிறது.

நேபாளத்துடன் எல்லையைப் பகிரும் திபேத், சீன-அமெரிக்க உறவுகளைச் சீண்டிப் பாதிக்கும் நிலை இருப்பதும் பெரும் பாதுகாப்பு அச்சங்களை ஏற்படுத்துகிறது. ஒபாமா – தலாய்லாமாவை சந்தித்ததைச் சீனா வன்மையாகக் கண்டித்திருந்ததை நாமறிவோம். சீனாவில் 2008ல் ஒலிம்பிக் நடந்த காலப்பகுதியில் திபேத்தில் வெடித்த போராட்டம் நேபாளத்திற்கும் பற்றியதும் அறிவோம். ஆயிரக்கணக்கான திபேத்தியர்கள் இன்றும் நேபாளத்தில் வாழ்ந்து வருவது கவனிக்கப்பட வேண்டியது. இலங்கையிலும் பாகிஸ்தானிலும் பில்லியன் டொலர்களுக்கு மேலான செலவில் துறைமுகங்களைக் கட்டிவரும் சீன அரசு அதே போன்ற பெரு முதலீடுகளைச் செய்து, நேபாளத்தையும் தனது கட்டுபாட்டின்கீழ் கொண்டுவர முயற்சிக்கலாம். இதைச் சாதிக்க அவர்களுக்கு ஸ்திரமான அரசு தேவை. நேபாள வலதுசாரிக் கட்சிகள் இந்த ஸ்திர அரசை வழங்கப் போட்டி போடுகின்றன. நேபாள இடைக்கால அரசு, திபேத்திய எல்லையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முஸ்டாங் மற்றும் மனாங் பிரதேசங்களில் முதன்முறையாக இராணுவம் நிலைகொள்ள ஏற்பாடு செய்துள்ளது. நேபாளத்தில் விசேட வர்த்தக வலையங்களை உருவாக்கத் (SEZ) தாம் மிக்க ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார் நோபாள பொருளாதாரம் சம்மந்தமாக முக்கிய தீர்மானங்களை எடுக்கும் குஸ்குமார் யோசி. இத்தகைய வர்த்தக வலையங்கள் இந்தியாவில் பூகம்பங்களை ஏற்படுத்தி வருவது பலரும் அறிந்ததே. இந்தியாவின் பழங்குடியினரும், வறிய ஒடுக்கப்படும் மக்களும், மாவோயிஸ்டுகளும், ஏனைய போரளிகளும் இந்த நடவடிக்கைகளுக்குப் பலத்த எதிர்ப்புச் செய்து வருகிறார்கள். இந்தியாவிலேயே இந்த எதிர்ப்பு சூடு பிடித்து வரும் இத்தருணம் நேபாளத்தில் என்ன நடக்கும் என்பதை நாம் இங்கு கூறத் தேவையில்லை.

இந்நிலையில், மாவோயிஸ்டுகள் நேபாள அதிகாரத்தைக் கைப்பற்றினால் என்ன நடக்கும்? இந்நடவடிக்கை இந்தியாவில் கிளம்பியிருக்கும் எதிர்ப்புப் பூகம்பத்தை எரிமலையாக மாற்றும் என்பது இந்திய அரசுக்கு நன்றாகத் தெரியும். இதனால்தான், இந்தியா தனது அரசியல் செல்வாக்கை வலதுசாரிகள் ஊடாக நிலைநாட்டி வருகிறது. நேபாள காங்கிரசும், ஒன்றிணைந்த மார்க்சிய லெனினிசக் கட்சியும் இந்திய அரசின் செல்வாக்கின் கீழ் இயங்கி வருகின்றன. குறிப்பாக, நேபாளக் காங்கிரசின் பொதுச் செயலாளரும் தற்போதய பிரதமருமான மாதவ்குமார் நேபாள் இந்திய அரசடன் மிக நெருக்கமானவராகக் கருதப்படுகிறார். மாவோயிஸ்டுகளுடனான 12 புள்ளி ஒப்பந்தத்துக்கு முன் பலதடவை அவர் இந்தியா சென்று திரும்பியது இன்று இரகசியமில்லை. இந்திய சி.பி.எம் மை போலவே நேபாள யு.எம்.எல் லுக்கும் எந்த ‘புரட்சிகர’ நோக்கமும் கிடையாது. சி.பி.எம் க்கும் இந்திய காங்கிரசக்கும் இருக்கும் உறவை விட மேலாக நேபாள காங்கிரசும் யு.எம்.எல் லும் நல்லுறவு பேணி வருகின்றன.

வலது சாரிகள் நேபாள வளங்களை, மக்கள் சேவைகளை எவ்வாறு கூறுபோட்டுச் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் விற்கலாம் என்பதில் குறியாக இருக்கிறார்கள்.

நேபாளப் பாஸ்போட்டை இந்தியாவில் அச்சிட எடுத்த முடிவு அரசுக்குப் பெரும் பிரச்சினையை உருவாக்கியிருந்தது. ஞாயிற்றுக்கழமை இரவு என்றும் பார்க்காமல் விழுந்தடித்து மந்திரிசபையைக் கூட்டிய பிரதமர் இந்த ஒப்பந்தத்தை இரத்து செய்ய வேண்டிய அளவுக்குப் பிரச்சனை ஊதி வெடித்திருந்தது. இதற்கு பின்னால் மாவோயிஸ்டுகளின் பிரச்சாரம் இருப்பதாகப் பல வியாபாரிகள் கொதித்துப் போயுள்ளார்கள்.

இந்திய அரசு இந்திய பொருளாதார நலனுக்கு எதிரானவர்களாக நேபாள மாவோயிஸ்டுகளை கருதிவருகிறது.மாவோயிஸ்டுகள் இந்தியாவுடனான திறந்த எல்லை மூடப்பட வேண்டும் என்று கோரிக்கையோடு நிறுத்திக் கொள்ளவில்லை. 1950களில் இந்திய அரசு தனக்குச் சாதகமாக ஏற்படுத்திக் கொண்ட ‘அமைதியும் நட்பும்’ என்ற (என்னே பெயர்- அக்காலம் தொட்டு இக்காலம் வரை இந்திய அரசின் சுத்துமாத்துக்கு அளவு கணக்கில்லை) நீர் பகிரும் ஒப்பந்தத்தை ரத்து செய்யவேண்டும் என்ற அவர்கள் கோரி வருகிறார்கள். நேபாளப் புதுச்சட்டமைப்பை உருவாக்க முடியாமல் இருப்பதற்கும் இந்திய அரசுதான் காரணமென மாவோயிஸ்டுகள் குற்றம் சுமத்தி வருகிறார்கள். ‘போலி அரசே இந்தியாவுக்குத் திரும்பி போ’ என்ற கோஷம் மே மாத வேலை நிறுத்தத்தில் ஒரு முக்கிய கோஷமாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்திய அரசுடன் நல்லுறவைப் பேணுவதாக மாவோயிஸ்டுகள் முன்பு உடன்பட்டது சாத்தியமற்றது என்பது தினமும் தெளிவாகி வருகிறது.

இப்படியிருக்க, இராணுவத் தாக்குதலைப் பற்றி மாவோயிஸ்டுகள் பயப்படுவது நியாயமானதே. தற்போதய காலகட்டத்தில் நேபாளத்தில் புரட்சி நடக்கவிட்டுப் பார்த்துக் கொண்டிருப்பார்கள் உலக முதலாளித்துவ வர்க்கத்தினர் என்ற கருத்து எந்தப் புரட்சிகர சக்திகளுக்கும் கிடையாது. உலகின் இரண்டாவது பலமான இராணுவத்தையும், உலகின் நான்காவது பலமான இராணுவத்தையும் அவர்களுக்குத் துணைவரும் ஏனைய உலக ஆதிக்க அரசுகளின் இராணுவங்களையும் என்று பலத்த எதிர்ப்பை ஒட்டுமொத்தமாக எதிர்கொள்ளும் சக்தி மாவோயிஸ்டுகளிடம் இல்லை. அதற்காக ஒடுக்கப்படும் மக்களை வெற்றி நோக்கி நகர்த்துவதை நாம் ஒத்திபோடலாமா? இந்த அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடலாமா?

நேபாளப் புரட்சி நேபாளத்துடன் மட்டும் நின்றுவிடாது என்பதை இங்கு அழுத்திச்சொல்வது அவசியம். இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் என்று எங்கும் புரட்சி பரவும் ஆபத்துக்குப் பயந்துதான் இதை ஏகாதிபத்தியங்கள் எதிர்க்கின்றன. ‘மாவோ’வின் பெயரைச் சொல்லி அவரது வழிமுறைகளைப் பின்பற்றுவதாகக் கூறும் மாவோயிஸ்டுகளை நொருக்கித் தள்ள அதே மாவோவைப் பின்பற்றுவதாகக் கூறும் சீன அரசு கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறது. அதற்குப் புரட்சி பற்றிய பயம்தான் காரணம். நேபாளத்தில் புரட்சி வெடிப்பது சீனாவுக்கும் விரைவில் பரவ வாய்ப்புள்ளது.

சீனா உலகிலேயே அதிக வேலை நிறுத்தங்கள் நிகழும் நாடாக இருக்கிறது. 50 வீதத்துக்கும் அதிகமான அரச வருவாயை ஐ.எம்.எப் க்கு வட்டியாகக் கட்டி வரும் பாகிஸ்தானில் சமூக அமைப்பு சிதறிக் கொண்டிருக்கிறது. இலங்கையில் ஒடுக்குமுறை அரசின் அட்டகாசம் பொறுக்க முடியாத அளவுக்குப் போய்விட்டது. இதே போல் பர்மா, இந்தோனேசியா என்று ஒரு பெரும் போராட்டம் வெடிக்கக் கூடிய நாடுகளின் பெயர்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த நாடுகளில் ஒடுக்கப்பட்டுக் கொண்டிருப்பவர்களின் போராட்டத்துக்கு நேபாளப் புரட்சி புத்துயிர் வழங்கும். தெற்காசியா மட்டுமின்றி உலகளவில் மிகப்பெரும் மாற்றத்தைக் கொண்டுவரவல்லது புரட்சி. இருபது ஆண்டுகள் கூட நிலைக்காத ரஷ்யப் புரட்சி உகெங்கும் ஒடுக்கப்படும் மக்கள் ஏராளமான உரிமைகளை வென்றெடுக்க வழியேற்படுத்தியது தெரியும். இனி வரும் புரட்சி அதைவிட அதிக வெற்றிகளைச் சாதிக்க வல்லது. தெற்காசிய சோசலிசப் பிடரேசனுக்கான கோரிக்கையோ – அதையும் தாண்டி புரட்சி பரவுவதோ வெறும் கனவாக மட்டும் இருக்க வேண்டியதில்லை. நனவாக வேண்டிய- நடத்திக் காட்டப்படவேண்டிய அவசியத்தேவையது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *