இங்கிலாந்தின் உயர்வர்க்க யுத்தப்பிரகடனம் -பட்ஜட் 2010

தை நீ எழுதியது எனது கம்பனியிலிருந்து, அதனால் இது என்னுடையது, வை கையெழுத்து’ என்று ‘அவன்’ பொல்லாங்கட்டையைக் காட்டி மிரட்டியது ஞாபகத்துக்கு வருகிறது. ‘அட மடையா இதைபோல் எத்தனை மென்பொருளை என்னால் எழுத முடியும் தெரியுமா? சும்மா கேட்டிருந்தாலே தந்திருப்பேனே எதுக்கு இத்தனை ஆர்ப்பாட்டம்?’ என்று சொல்லியும் கேட்காமல் ஆர்ப்பரித்த அவன், பையில் இருந்து சீடியைக் கைப்பற்றிய பின் வாசல் வரையும் பொல்லாங்கட்டையுடன் வந்து வழியனுப்பி வைச்சான்! அப்போது அவன் கடைசியாகச் சொன்னது இப்போதும் ஞாபகத்தில் இருக்கு. வியாபாரம் என்றால் இதுதான் என்ற போக்கில் Welcome to business என்று அவன் இளித்தது இன்னும் ஞாபகத்திலிருக்கு.

‘நாடு வியாபாரத்துக்குத் தயார்’ என்று தற்போதய இங்கிலாந்து நிதியமைச்சர் வரலாறு காணாத ‘இரத்தக்களறி பட்ஜெட்’ டை அறிமுகப்படுத்தி (26-06-10) இளித்தது எனக்கு மேற்சொன்ன சம்பவத்தை ஞாபகப்படுத்தியது. தில்லு முல்லுகள்தான் வியாபாரம் -அடுத்தவன் வயிற்றில் அடிப்பதுதான் வியாபாரம் என்பதை இவர்கள் திருப்பித் திருப்பி எமக்குப் படிப்பித்த வண்ணம் இருக்கிறார்கள். முதலாளித்துவப் பத்திரிகையான எக்கொனமிஸ்ட், லண்டன் மெற்றோவுக்குள் ஒட்டியிருக்கும் பெரும் விளம்பரத்தையும் இது ஞாபகப்படுத்தியது. ‘வியாபாரத்துக்கு மூடப்பட்டுள்ளது’ என்று மனிதக்கூட்டில் எழுதப்பட்டுள்ள வாசகத்துடன் உடற்பாகங்களை விற்கும் வியாபாரம் பற்றிய தமது கட்டுரையை சிறப்புப்படுத்தி அந்த பத்திரிகைக்கான விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. ‘திறந்த சந்தையை எல்லை மீறிக் கொண்டுசெல்லும் நடவடிக்கை இது’ என்று ‘திறந்த சந்தையின்’ பலவீனத்தையும் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

அவர்களுக்கு – அதிகார வர்க்கத்துக்குத்- தெரியும்.
வறிய மக்களின் வயிற்றலடிக்கிறோம் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

‘உங்களுக்குக் கொஞ்சம் கஸ்டமாகத்தான் இருக்கும். கொஞ்சம் பல்லை கடித்துப் பொறுத்துக்கொள்ளுங்கள்’ என்கிறார் நிதியமைச்சர் ஓஸ்போர்ன். வங்கிகளை வங்குறோத்தில் இருந்து காப்பாற்றுகிறோம் என்று கூறி எமது வரிப்பணத்தில் பில்லியன் பவுண்சுகளை வாரியிறைத்து முதலாளிகளைக் காப்பாற்றுவதற்கு மட்டும் இவர்கள் தயங்கவில்லை. தொடர்ந்து பெருகும் அமோக லாபத்திலோ அல்லது முதலாளிகளுக்கு அனாவசியமாக வழங்கப்படும் ‘போனஸிலோ’ கை வைக்கத் தயாரில்லை. ஆனால் எமது வயிற்றிலடித்து லாபம் சேர்க்க அரக்கப்பரக்க ஓடித்திரிகிறார்கள்.

பொருளாதாரச் சரிவுக்கு நாமா காரணம்?

வரலாறு காணாத ‘இரத்தக்களறி பட்ஜெட்’ என்று வர்ணிக்கப்படும் இவ்வருடப் பட்ஜெட்டை அறிமுகப்படுத்திய கன்சவேட்டிவ் கட்சிக்கு அவர்களுடன் கூட்டாட்சியில் இருக்கும் லிபரல் டெமோகிராட் கட்சியும் முழு ஆதரவு. இவர்களுக்கு ஓடி ஓடி வாக்களித்தவர்கள் ஒழிந்திருந்து அழும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இருப்பினும் கன்சவேட்டிவ் கட்சிக்குப் பெரும்பாலும் வசதியான பகுதிகளிலிருந்தே வாக்குகள் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு நன்றியாக அவர்கள் கோப்பரேசன் வரியைக் குறைத்து முதலாளிகளைச் சந்தோசப் படுத்தியுள்ளார்கள். வியாபாரத்துக்குத் தயாரென்று ‘இங்கிலாந்து கடை’ திறந்து எமது உழைப்பைக் கூவிக் கூவி விற்கிறார்கள்.

இதை எதிர்த்து நாட்டின் பல பாகங்களிலும் போராட்டம் நடந்தது. வால்தம்ஸரோவில் நடந்த போராட்டத்தில் பல்வேறு தொழிற்சங்கத் தலைவர்களும் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். அரசுக்கெதிரான பெட்டிசனில் மக்கள் வரிசையில் நின்று கையெழுத்திட்டனர். தங்க வீடற்றுத் தெருக்களில் உறங்கும் வீடற்றோரும் அவர்களுடன் இணைந்து கொண்டனர். தமக்கான ஒரு சில சலுகைகள்கூட துடைத்தெறியப்படப் போகிறது என்ற தவிப்பு முதல் முறையாக ஒரு அரசியல் பெட்டிசனில் கையெழுத்திடும்படி அவர்களைத் தள்ளியுள்ளது. மிகவும் ஒடுக்கப்படும் மக்களைக் கன்சவேட்டிவ் கட்சி என்ன வெருட்டு வெருட்டியுள்ளது என்பதற்கு இது நல்ல உதாரணம்.

ஆனால், எதிர்கட்சியான லேபர்கட்சிக்கோ இது பற்றி எக்கவலையுமில்லை. வால்தம் பொறஸ்டில் கடந்த தேர்தலில் ஸ்டெல்லா கிறீசிக்கு அவரே எதிர்பார்த்திராத வகையில் இப்பகுதி மக்கள் வாக்குகளை அள்ளிப் போட்டிருந்தனர். வலதுசாரிய எதிர்ப்பைப் பதிவு செய்த வாக்குகளிவை. கன்சவேட்டிவ் கட்சியை வெல்லாமற் செய்ய வேறு வழியின்றி லேபருக்கு வாக்களிக்க வேண்டியுள்ளது என்று ஏராளமானவர்கள் தேர்தலின்போது கூறியிருந்தனர். ஆனால் ஸ்டெல்லா அவர்களின் தேவையைப் பிரதிபலிக்க வக்கற்றவர். லேபர் முதற்கொண்டு அனைத்து கட்சிகளினதும் வங்குறோத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்ல நாம் ஒவ்வொரு கிழமையும் வால்தம்ஸ்ரோ சந்தை பகுதியில் ‘கம்பெயின்’ செய்து வருகிறோம். இந்த இடத்தைக் கைப்பற்ற லேபர்கட்சி கடும் முயற்சி செய்துவருகிறது. கவுன்சில் மூலமாக எம்முடன் தொடர்ந்து கொழுவி வருகிறார்கள்! லேபர் கட்சித் தலைவர்கள் தாமும் ஒடுக்கப்படுபவர்களுக்காகப் போராடுவதான பாவனை செய்ய இடைக்கிடை நாம் ‘கம்பெயின்’ செய்யும் இடம் வந்து தொல்லை தருவார்கள்.

‘எமது பகுதியில் வீடற்றோர் இல்லை’ என்று ஒருமுறை என்னிடம் சொன்னார் ஸ்டெல்லா கிறீசி.

‘என்ன பகிடியா’ என்று கேட்டதற்கு ‘உம்மைப்போல் எனக்கும் கம்பெயின் பாக்கிரவுன்ட் உண்டு’ என்றார். எதற்கெடுத்தாலும் ‘எனக்கு அதில் பாக்கிரவுன்ட் இருக்கு’ என்று சொல்வது அவர் வழக்கம்.

‘எமது பகுதியில் வீடற்றோர் இல்லை. ஆனால் மற்றப்பகுதிகளில் இருக்கும் வீடற்றோருக்கு உதவ நான் தயார்’ என்று பின்பு ஒரு குண்டை போட்டார்.

சரி வீடற்றோர் பிரச்சினையை விடுவோம். வால்தம் பொறஸ்ட் காலேஜில் மில்லியன் கணக்கில் பணம் மிச்சம் பிடிக்க வகுப்புகளை நிறுத்தி விரிவுரையாளர்களை வேலை நீக்கும் முயற்சி நடக்கிறதே தெரியுமா? அதை எதிர்த்து விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் நடத்தும் போராட்டத்தில் பங்கு பற்ற முடியுமா? வலது குறைந்தவர்களைப் பராமரிக்கும் நிலையத்தில் வேலை செய்பவர்கள் நிறுத்தப்பட்டு அந்நிலையத்தை மூடுவதற்கான ஆயத்தம் நடக்கிறதே அதைத் தடுக்கும் போராட்டத்தில் இணைய முடியுமா? பல பாடசாலைகள் விற்பனைக்கு வருகிறதே அது பற்றி என்ன செய்யலாம். அரச கணிப்பீட்டின் படி 50 வீதத்துக்கும் அதிகமான இளையோர் மற்றும் 7000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொழில் வாய்ப்பின்றி வறுமைக்குள் தள்ளப்படுகிறார்களே அது பற்றி என்ன செய்யலாம்? நாட்டின் படுமோசமான ஊழல் நிறைந்ததாகச் சொல்லப்படும் இப்பகுதி கவுன்சில் எமது வரிப்பணத்தில் மில்லியன் கணக்கான காசைக் களவாடிவிட்டதே அதற்கு என்ன செய்யலாம்?
என்று அடிக்கிக்கொண்டே போன கேள்விகள் எதுக்கும் அவரிடம் பதில் இல்லை. அது எமக்கும் தெரியும்.

‘இங்கிருந்த சினிமா தியேட்டர் மூடப்பட்டதற்கு எதிரான கம்பெயினில் நான் இணைந்திருக்கிறேன். ஒக்ஸ்பாமில் நான் உறுப்பினர்’ என்று சளைய முற்பட்டவரை தடுத்துக் கவுன்சிலில் காணாமற்போன காசை பற்றி மீண்டும் கேட்க அவர் முகம் மாறியது.

‘போனது போனதுதான். இனி என்ன செய்வது. அரச பையில் பணம் இல்லை. செலவுக்கான பணம் எங்கிருந்து வருவது? நாம் பல்லைக் கடித்துக் கொஞ்சம் பொறுத்துத்தான் ஆகவேண்டும்’ என்றார்.

ஐயோ! என்று தலையில் அடித்து இதைச்சொல்ல எப்படி உங்களுக்கு துணிவு வருகிறது எனறு வாயடைத்தோம். ‘இன்று உங்கள் பையை நான் பறித்துச்செல்கிறேன். போனது போனதுதான் என்று சொல்லிவிட்டு வீட்டுக்குப் போவீர்களா?’

அரச பையிலா பணம் இல்லை? ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் எங்கள் பெயரைச் சொல்லி அப்பாவி மக்களைச் சாகடிக்கக் காசு எங்கிருந்து வருகிறது? பல பில்லியன் பவுண்சுகள் செலவாகும் அணு ஆயுத உற்பத்திக்குப் பணம் எங்கிருந்து வருகிறது? எமது காசைப் போட்டுக் காப்பாற்றிய வங்கி முதலாளிகளுக்கு மில்லியன் கணக்கில் போனஸ் வழங்கக் காசு எங்கிருந்து வருகிறது. இந்தக் காசில் கொஞ்சத்தை எடுத்தால் என்ன குறைந்து போகும்? ஆர். பி. ஏஸ் வங்கி முதலாளிக்கு வழங்கப்படும் போனசும் சம்பளமும் நியாயமற்ற முறையில் அளவுக்கதிகமானது என்று அவரின் பெற்றோரே அண்மையில் ஒத்துக்கொண்டிருந்தது உங்களுக்குத் தெரியாதா? என்று கேட்க இடைமறித்த ஸ்டெல்லா சொன்னார் ‘அவர் என் வீட்டுக்குப் பக்கத்தில்தான் இருக்கிறார். எனது நல்ல நண்பர்’ ! என்று.

இதற்குள் எம்மைச் சுற்றி கூடியிருந்த கூட்டம் பொள்ளென்று சிரித்தது. அசௌகரியப்பட்ட ஸ்டெல்லா ‘நான் என்ன செய்வது?’ என்றார்.

‘நான் சொல்லவா என்ன செய்யலாம் என்று தொடங்க ‘நானும் ஒரு சோசலிஸ்ட்தான்’ என்று இடைமறித்தாரவர். சனம் இன்னொரு முறை சிரித்தது.

‘என்னிடம் மட்டும் சொன்னதால் தப்பி விட்டீர்கள். இதைபோய் தப்பித்தவறி உங்கள் தலைமைப் பீடத்துக்குச் சொல்லிப்போடாதீர்கள். கட்சியில் இருந்து வெளியேற்றிப்போடுவார்கள்.’ என்று நாம் சொல்ல நக்கல் விளங்காதது போல் அலட்சியம் செய்த ஸ்டெல்லா கடைசியாகக் கெஞ்சினார் ‘ எனக்கொரு சந்தர்ப்பம் தா நான் நிரூபிக்கிறேன்’ என்று.

இந்த உரையாடல் அவர் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட முன் நிகழ்ந்த உரையாடல். ஸ்டெல்லாவுக்குத் தன்னை நிரூபிக்கத் தற்போது நல்ல சந்தர்ப்பம். எம் வயிற்றில் அடிக்கும் பட்ஜெட்டை எதிர்க்கப் பொதுச்சேவைகளைத் தாக்குவதற்கு எதிரான கம்பெயின் ஒன்றைத் துவக்கியுள்ளோம். சேர்ந்து போராடத் தயாரா?

பதில் என்ன வரும் என்று எமக்குத் தெரியும். அதனால்தான் நாம் லேபர் கட்சியின் ஏமாத்து வேலைகளுக்கு எதிராகவும் போராட வேண்டியுள்ளது. இப்பகுதியில் வாழும் ஏராளமான தமிழ் பேசும் மக்களும் ஏனையோருடன் இணைந்து போராட முன்வரவேண்டும். நாம் கேள்வி கேட்காத வரையும் அவர்கள் எம்மைத் தாக்குவது தொடரும்.

ஏன் பொறுத்துக்கொண்டிருக்கிறீர்கள்? எங்கள் உரிமைகளை நாம் இலகுவில் விட்டுக் கொடுக்கக் கூடாது. மக்கள் பலவீனமானவர்கள் என்ற தெனாவட்டில் ஆளும் வர்க்கம் லாபம் சுருட்ட முயல்கிறது. அதற்கு மறுப்பு செய்ய நாம் திரள்வோம். தொழிலாளர்களுக்கு எதிராக இங்கிலாந்து அரசு செய்துள்ள யுத்தப்பிரகடனத்தை சரியானபடி எதிர்கொள்வோம்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *