இலங்கை புலனாய்வுத் துறையின் அரசியற் பின்னணி மற்றும் நடவடிக்கைகள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்து இயங்கவும் – மீளுருவாக்கம் செய்யவும் முக்கிய ‘மத்திய ஸ்தலமாக’’ பிரித்தானியா இருக்கிறது என்பது இலங்கை அரசின் நிலைபாடாக இருக்கிறது. பேராசிரியர் ரோகான் குணரத்ன இங்கிலாந்து நீதிமன்றத்துக்கு வழங்கிய சாட்சியின்போது இதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.

இலங்கை அரசியலை அறிந்தவர்களுக்கு ரோகான் குணரத்ன நன்கு தெரிந்த பெயரே. பயங்கரவாதம் சார் நிபுணர் என்ற பெயரில் பயணி வருபவர். இலங்கைப் புலனாய்வுத் துறையுடன் ‘நெருங்கிய தொடர்பு’ உள்ளவர் என்பது அனைவருக்கும் தெரியும். இவர் இலங்கை அரசின் பிரதிநிதியாகவும் இயங்கி உள்ளார். இனவாத அரசியலை முன்னெடுக்கும் இவர் மனித உரிமை மீறல் – அரசின் படுகொலை அனைத்தையும் பூசி மொழுகி மறைத்து வருபவர். பொய் பேசுதல் – திரித்தல் – அதிகார சக்திகளின் பின் இயங்குதல் போன்ற நடைமுறைகளால் அறிவுத்துறையில் இருக்கும் பலர் மத்தியில் மதிப்பை இழந்தவர் இவர். புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் மேல் கடுமையான அவதூறு செய்து வருபவர் ரோகான் குணரத்ன. தமிழ் தேசியம் சார் எல்லா அமைப்புக்களும் தீவிரவாத அமைப்பு என்ற அடிப்படையில் இயங்கி வருபவர் இவர். கனடா தமிழ் காங்கிரசை புலிகளின் பினாமி அமைப்பு என இவர் கூறியதும் பின் அந்த அமைப்பால் நீதிமன்றத்துக்கு இழுக்கப்பட்டு அபராதம் கட்டியதும் அறிவோம்.

இலங்கை அரசின் சார்பில் ஏனைய அதிகார சக்திகளுக்கு உதவுவதும் இவர் வாழ்நாள் இருத்தலாக இருந்து வந்திருக்கிறது. இங்கிலாந்தில் அகதி விண்ணப்பம் செய்பவர்கள் வழக்கு நீதி மன்றத்துக்கு வரும் பொழுது அதை தீர்மானிப்பதற்கு  ‘நாடுபற்றிய அறிவுரை’ ஒன்றை நீதிமன்றம் பின்பற்றுவது வழக்கம். இந்த அறிவுரையைத் தீர்மானிக்கும் முக்கிய வழக்குகளில் ரோகன் குணரத்ன சாட்சி வழங்கி இருக்கிறார்.

சமீபத்தில் நடந்த இலங்கை பற்றிய அறிவுரையைத் தீர்மானிக்கும் முக்கிய வழக்கு ஒன்றிலும் இவர் சாட்சி வழங்கி இருந்தார். இலங்கை அரசு தமிழ் அமைப்புக்களை, செயற்பாட்டாளர்களை எவ்வாறு அனுகுகிறது என்பதை இவரது வாக்குமூலம் மூலம் நாம் அனுமானிக்க முடியும். இலங்கை அரசுடனான விசுவாசம், அரச புலனாய்வுத் துறையுடன் இருக்கும் நெருக்கம் என்பவைதான் இவரது முக்கியத்துவம். ரோகான் குனரத்னா அறிவுத்துறை சார்  ‘நேர்மை’ அற்றவராக இருந்த போதும் ‘முட்டாள்’ இல்லை. பத்து வருடங்களுக்கு முன் – கோர யுத்த முடிவின் போது இருந்த நிலவரத்துக்கும் தற்போது இருக்கும் நிலவரத்துக்கும் நிறைய வேறுபாடு உண்டு என அவருக்குத் தெரியும். இருப்பினும் பழைய அணுகுமுறையில் இருந்து இலங்கை அரசு மாறவில்லை என்பதை இவர் வாக்குமூலம் சுட்டிக் காட்டுகிறது.

யுத்தம் முடிந்த கையோடு புலிகள் அமைப்பு சிதறி உடைபட்டுப் போனது (குறிப்பாக நான்கு அமைப்பாக குழுக்களாக அவை உடைப்பட்டு நின்றன). இந்தப் பிரிவுகளின் பினாமிகளாக புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை கட்டமைப்பது இலங்கை அரசுக்கு அவசியமாக இருந்து வந்திருக்கிறது. தமக்கு எதிரான எதிர்ப்பு அனைத்தும் ‘தீவிரவாத’ நடவடிக்கை எனச் சுட்டி தமிழ் பேசும் மக்களின் அனைத்து அரசியல் நடவடிக்கைகளையும் முடக்குவது அரசின் நோக்கம். ‘புலிகளின் பின்னணி’ என சுட்டுவது அதற்கு அவசியமாக இருக்கிறது.

இலங்கை அரசு சமீபத்தில் தமிழ் அமைப்புகள் பலதைத் தடை செய்ததை அறிவோம். உண்மையில் இது மிகப்பெரும் பகிடி என்பது பலருக்கும் தெரியும். இறந்தவர்கள் கூட தடை செய்யப் பட்டிருக்கிறார்கள். ஜி.டி.எப் போன்ற அமைப்புக்கள் இலங்கை அரசின் இறையாண்மையை கேள்விக்கு உட்படுத்தாத அமைப்புக்கள். அதன் தலைவர்கள் பலர் இலங்கை சென்று அரச தலைவர்களுடன் கூடிக் குலாவி வந்திருக்கிறார்கள். தடை செய்யப்பட்ட எந்த ஒரு அமைப்பும் இலங்கை அரசுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் அமைப்புக்கள் அல்ல. பல அமைப்புக்கள் அரசியல் ரீதியாக இலங்கை அரசை வீழ்த்தும் நடவடிக்கைகளைக் கூட முன்னெடுப்பதில்லை. இந்த முடிவு அத்தகைய அடிப்படைகளில் இருந்து எடுக்கப்படவில்லை.

‘ஈழ விடுதலை’ அரசியலை ஒட்டுமொத்தமாக முடக்குவது – ஈழம் பற்றிய கதையாடலை ஒட்டுமொத்தமாக முடிவுக்கு கொண்டு வருவது – இவைதான் அரசின் முக்கிய நோக்கம். அரசைப் பொறுத்தவரை விடுதலைப் புலிகள் இயக்க வரலாறு மிகப்பெரும் ஆபத்தானது. உயிரைத் துச்சமாக மதித்து அரசுக்கு எதிராக இளையோர் ஆயுதம் தூக்கிய வரலாறு – புலிகள் இயக்கம் அரசுக்கு எதிராக ஒரு கட்டமைப்பை நிலைநாட்டிக் காட்டிய வரலாறு ஆகியன முடக்கப்படுவது அவசியம். புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கம் எனவும் அவர்கள் நடவடிக்கைகள் தீவிரவாத நடவடிக்கைகள் எனவும் நிறுவி ஒட்டுமொத்தமாக புலிகள் இயக்க கால வரலாற்றை புதைப்பது அவசியமாக இருக்கிறது. போராட்ட வரலாற்றை புதைப்பது எல்லா அரசுகளும் செய்யும் ஒன்றுதான். உரிமைகளை தாம்தான் வழங்கினோம் அவை போராட்டத்தால் பெறப்பட்டவை அல்ல எனக் காட்டுவது எல்லா அரசுகளும் செய்வதுதான். ஆனால் இலங்கை அரசு அதை இலகுவில் செய்ய முடியாத அளவு ஆயுத போராட்ட காலகட்டம் தமிழ் மக்கள் மத்தியில் வேரூன்றிக் கிடக்கிறது. புலிகள் அமைப்பு ஒரு குறியீடு. அந்தக் குறியீட்டைத் தாக்குவது அனைத்து போராட்ட அரசியலையும் முடக்க உதவுகிறது.

புதிதாக புலிக் கொடி தூக்குபவர்கள் – பிரபாகரன் எங்கள் தலைவர் என சொல்லும் புதிய தலைமுறையினர், புலிகள் அமைப்போடு தொடர்பு இல்லாதவர்கள் என்பதும் – அல்லது புலிகள் போன்ற அமைப்போடு தொடர்பு இல்லாதவர்கள் என்பதும் அனைவரும் அறிவர். அரசுக்கும் தெரியும். இதில் பலர் எந்த அமைப்பும் சாராதோர் என்பதும் தெரியும். இவர்களைப் பார்த்து அரசு பயப்படவில்லை. அடுத்த தலைமுறை போராட்ட அரசியலைக் கையில் எடுக்கக் கூடாது – ஈழ விடுதலை அரசியல் மீண்டும் தலை தூக்கக்கூடாது என்பதுதான் அவர்களின் தலைவலி. தமிழீழ கோரிக்கை அரசியலை முடக்குவதுதான் அவர்கள் தலையாய நோக்கம். புலிகளை படுகொலை செய்து முடக்கிய அரசு அவர்கள் சார் நினைவுகளும் வரலாறுகளும் முற்றாக முடக்கப் படவேண்டும் எனத் துடிக்கிறது. இதனால்தான் ஈழ அரசியல் பேசுபவர்கள் நோக்கி ‘தீவிரவாத’ முத்திரை குத்துவது அவசியமாக இருக்கிறது.

தமிழீழம் கோருவோர்  – பிரிவினை பேசுவோர் அனைவரும் தீவிர வாதிகள் என்பதுதான் அரச நிலைப்பாடு. ஒரு அமைப்பு மேல் / அல்லது செயற்பாட்டாளர் மேல் ‘தீவிரவாத’ குற்றச் சாட்டை வைத்த பின் அவர்களை என்னவேண்டுமானாலும் செய்யலாம். கைது செய்யலாம் – சித்திரவதை செய்யலாம் – கொலை செய்யலாம். ஈழ விடுதலை நோக்கி இளையோர் போகாமல் பார்த்துக் கொள்ள இத்தகைய பயக்கெடுதியை உருவாக்குவது அவசியமாக இருக்கிறது. எதற்கு வீண் பிரச்சினை என பிள்ளைகளை முடக்கும் பெற்றோர் – அனாவசியப் பிரச்சினை வேண்டாம் என கருதும் இளையோர் – ஊருக்குத் திரும்பிச் சென்று உற்றாரைப் பார்க்க வேண்டும் என விரும்புவோர் – எனப் பலர் இந்த அமைப்புக்கள் மற்றும் ஈழ விடுதலை அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க இது உந்துகிறது.

உண்மையில் இது அவர்கள் எதிர்பார்ப்பதற்கு மாறான எதிர்வினையைத்தான் உருவாக்கி இருக்கிறது. ஒடுக்குதலுக்கு எதிராக இளையோர் தீவிரமாக திரளும் சந்தர்பத்தைத்தான் இது அதிகரிக்கிறது. இந்த வருட முள்ளிவாய்க்கால் நினைவு நாளின் போது, நினைவுத் தூபி உடைக்கப்பட்ட பொழுது – ‘எல்லா அமைப்பு நினைவு செயற்பாட்டுக்கும் திரண்டு செல்லுங்கள்’ என தமிழ் சொலிடாரிட்டி போன்ற அமைப்பு அழைப்பு விட்டதை உதாரணமாக காட்ட முடியும். இந்த வருடம் கூட்டங்களில் அதிக இளையோர் பங்குபற்ற இது உதவியது என்றே சொல்ல வேண்டும். அடக்குமுறையால் வரலாற்றைப் புதைக்க முடியாது என்பதை அதிகார சக்திகள் ஒருபோதும் புரிந்துகொள்ளப் போவதில்லை.

இளையோர் பிரிவினைவாதம் நோக்கி நகரக்கூடாது என்ற ‘அரசியற் காரணத்துக்காகத்தான்’ அமைப்புக்கள் மேல் தடைப் பட்டியல் கொண்டுவரப்பட்டது என்பதை குணரத்னவின் வாக்குமூலம் தெட்டத்தெளிவாக சொல்கிறது.

2

இலங்கை புலனாய்வுத் துறை இரண்டு தடை லிஸ்ட் வைத்திருக்கிறது. உடனடியாக கைது செய்ய வேண்டியவர்கள் என்பது ஒரு பட்டியல் – கண்காணிக்கப் படவேண்டியவர்கள் என்பது இன்னொரு பட்டியல். முதலாவது பட்டியலின் பகுதிதான் வெளியாகி இருக்கிறது. முழு விபரம் யாருக்கும் தெரியாது. இரண்டாவது பட்டியலில் யார் யார் இருக்கிறார்கள் என்ற விபரம் ஒருவருக்கும் தெரியாது. நாட்டுக்குள் செல்பவர்களை உள்ளே விட்டபின் கண்காணிப்புச் செய்கிறார்கள் என்பதை தமிழ் சொலிடாரிட்டி நன்கறியும். இது பற்றி தமிழ் சொலிடாரிட்டி தொடர்ந்து பேசி வந்திருக்கிறது. எனது சொந்த அனுபவத்தில் இருந்தும் இதை தனிப்பட்ட முறையில் நான் குறிப்பிட்டுக் காட்டி இருக்கிறேன். இந்த கண்காணிப்பு இலங்கைக்குள் மட்டும் நடக்கவில்லை – இங்கிலாந்திலும் நடக்கிறது என்பதை தமிழ் சொலிடாரிட்டி சுட்டிக் காட்டி வந்திருக்கிறது. குறிப்பாக இங்கிலாந்தில் இது நடந்து வருகிறது என்பதையும் இலங்கை அரசு லண்டன் நடவடிக்கைகளை முடக்க நடவடிக்கை எடுப்பதை முடுக்கி விட்டிருக்கிறது என்பதையும் நாம் முன்பு சுட்டிக் காட்டி இருந்தோம். இந்த புள்ளிகளை குணரத்ன உறுதிப்படுத்தி இருக்கிறார்.

பிரித்தானியா தமிழ் பிரிவினைவாதத்தின் தலையாய மையமாக இருக்கிறது என்ற அடிப்படையில் பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது இலங்கை அரசு. (பிரித்தானியா எனக் குறிப்பிட்டாலும் அது லண்டன் அரசியல் நடவடிக்கைக்களையே குறித்து நிற்கிறது).

இந்த அடிப்படையில் லண்டனை மத்தியமாக கொண்டு இயங்கும் அனைத்து அமைப்புக்களின், அனைத்துத் தலைமை உறுப்பினர்களும் கண்காணிப்பில் இருக்கிறார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது நாம் அறிந்த விசயம்தான். ஆனால் இதையும் தாண்டி ‘தீவிர வாத கண்காணிப்பை’ அனைத்து செயற்பாட்டாளர்கள்  மேலும் முன்னெடுத்து வருகிறது புலனாய்வுத்துறை என்பது இப்போது வெளியாகி இருக்கிறது. யுத்தத்தின் பின் எவ்வாறு மிகப் பலம்வாய்ந்த புலனாய்வுத் துறையை நிர்மாணித்து இருகிறது இலங்கை அரசு என்பதை அறிவோம். அது எவ்வாறு இந்த கண்காணிப்பு வேலைகளை மேலும் பலப்படுத்தி இருக்கிறது என்பதை இப்போது அறிகின்றோம்.

முக அடையாளம் காட்டும் கமரா மற்றும் மென்பொருள் பாவனை முதற்கொண்டு பல இரகசிய நடவடிக்கைகளை அவர்கள் முன்னெடுத்து வருகிறார்கள். சமூக வலைத்தளம் மற்றும் இணைய வழிமுறைகள் ஊடாக வெளிநாட்டு செயற்பாட்டாளர்களை கண்காணிப்பதை இலங்கை அரசு முன்பு ஒத்துக்கொண்டிருந்தது. வாட்சாப் உரையாடலை உடைக்கும் மென்பொருளை சீன அரசு இலங்கைக்கு வழங்கி இருப்பதையும் அறிவோம். இது தவிர அரசியற் தஞ்சம் நிராகரிக்கப்பட்டு திரும்பி செல்லப்படுபவர்களை விசாரணை செய்வதன் மூலமும் தகவல்கள் சேகரிக்கப் பட்டு வருகிறது. மேலும் தகவல் வழங்குவோர் பலரை வேலைக்கமர்த்தி வருகிறது இலங்கை தூதரகம். அதாவது புலம்பெயர் அமைப்புக்களை ஊடுருவ – மற்றும் அவை பற்றி தகவல் பெற ஒற்றர்களைப் பாவித்து வருகிறது இலங்கை அரசு. அனைத்து தகவல்களும் உடனடியாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவதும் – இந்த தகவல்களை ஆய்வு செய்யும் வேலை இலங்கைக்குள்தான் நடக்கிறது என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

லண்டனில் இருக்கும் இலங்கை தூதரகம் செயற்பாட்டாளர்களைக் கண்காணிக்கிறது என்பதையும், அவர்கள் படங்களை ஆவணப்படுத்தி வருகிறது என்பதையும் தமிழ் சொலிடாரிட்டி முன்பு சுட்டிக் காட்டி இருந்தது. இது தவிர கண்காணிப்பு செய்பவர்கள் சிலரைக் கூட அடையாளப் படுத்தி இருந்தது தமிழ் சொலிடாரிட்டி. இத்தகைய நடவடிக்கை லண்டனில் முன்னெடுப்பதற்கு இலங்கை தூதரகத்துக்கு எந்த உரிமையும் இல்லை. இது இங்கிலாந்து சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கை. இதை பல தடவை தமிழ் சொலிடாரிட்டி சுட்டிக் காட்டியும் இங்கிலாந்து அரசு இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இலங்கை அரசுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் டோரி அரசு இதைக் கண்டுகொள்ளப் போவதில்லை. அவர்கள் கண்டும் காணாமல் இருந்து வருகிறார்கள். அவர்கள் தனிப்பட்ட முறையில் கண்காணிப்பை செய்து வருகிறார்கள் என்பதும் எமது குற்றச் சாட்டு.

இங்கிலாந்து உள்துறை அமைச்சின் ‘நாட்டுக் கொள்கை’ தீர்மானிக்கும் குழுவின் தலைமை பொறுப்பில் இருக்கும் மார்டின் ஸ்ட்ராஸ், தான் வழங்கிய சாட்சியில் இங்கிலாந்தில் கண்காணிப்பு நடப்பதை உறுதிப்படுத்தி உள்ளார். இருப்பினும் இது பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இலங்கை அரசின் இந்த அத்து மீறிய நடவடிக்கைக்கு இங்கிலாந்து புலனாய்வுத் துறையும் உதவி வருகிறது என்ற குற்றச் சாட்டை தமிழ் சொலிடாரிட்டி முன்வைக்கிறது. கண்காணிப்பை அதிகரிக்க மேலதிக பணத்தை தற்போதைய கன்சவேட்டிவ் அரசு ஒதுக்கியதையும், புதிய இணைய கண்காணிப்பு பிரிவு உருவாக்கப் பட்டிருப்பதையும் நாம் அறிவோம். தமிழ் மக்கள் மத்தியில் நடக்கும் அரசியற் செயற்பாட்டைக் கண்காணிக்க ஏராளமானவர்களை வேலைக்கமர்த்தி உள்ளது இங்கிலாந்து அரசு என்பதையும் அறிவோம். குறிப்பாக முன்னாள் புலி இயக்க உறுப்பினர் – புலிகள் இயக்கத்தோடு தொடர்பு கொண்டவர்கள் பலர் இந்த வேலைக்கு அமர்த்தப் பட்டுள்ளனர். ஏராளமான முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர்களை இலங்கை புலனாய்வுத்துறை வேலைக்கமர்த்தி இருப்பதையும் நாம் அறிவோம். அவர்கள் வெளிநாட்டில் இருக்கும் பலரோடு தற்போதும் தொடர்பில்தான் இருக்கிறார்கள். உண்மையில் ‘பினாமி புலி கட்டமைப்பை’ இயக்கி வருவது இந்த அரசுகள்தான். புலிகள் இயக்கத்தில் முக்கிய தலைமைப் பொறுப்பில் இருந்த ஒருவரும் லண்டனில் இருந்து இலங்கை அரசிற்கு வேலை செய்து வருகிறார் என்பதும் தெரிய வந்துள்ளது. ஆனால் இந்த தகவல் பற்றிய மேலதிக விபரங்களை தமிழ் சொலிடாரிட்டியால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. குணரத்னவும் இதை பதிவு செய்துள்ளார். அந்த ஒற்று வேலை செய்பவர் புலிகள் இயக்கத்தின் முக்கிய தலைமை உறுப்பினராக இருந்தவர் என்பதற்கு மேல் வேறு தகவல்களை அவரும் வெளியிடவில்லை. அதை அவர்கள் செய்ய மாட்டார்கள். எமக்கு கிடைத்த தகவல்களும் அதை அறிய போதுமானதாக இல்லை.

தமிழ் சொலிடாரிட்டி உறுப்பினரையும் தொடர்பு கொண்டு லண்டன் அரசியற் செயற்பாடு பற்றி தமக்கு தகவல் தரும்படி இங்கிலாந்து புலனாய்வுத் துறையினர் கேட்டதையும் இங்கு முதன் முறையாக பதிவு செய்கிறோம். உறுப்பினர் அதற்கு மறுத்து விட்டார். அமைப்புக்களின் உறுப்பினர் பற்றிய தகவல்கள் பலத்தை அகதி தஞ்சம் கோருபவர்கள் மத்தியில் இருந்து முளுமையாக பெற்று வருகிறது இங்கிலாந்து அரசு. நடக்கும் வழக்குக்கு தேவை அற்ற எல்லா கேள்விகளையும் அவர்கள் கேட்பார்கள்.

அமைப்புக்களின் உறுப்பினர் பட்டியலை (டேட்டாபேஸ்) இலங்கை அரசு வைத்திருக்கிறது என்றும் உறுதியாகி இருக்கிறது (பல்வேறு வகை  டேட்டாபேஸ்களை அவர்கள் வைத்திருக்கிறார்கள் எனத் தெரிய வருகிறது). இந்த தகவல்கள் எவ்வாறு பெறப்படுகின்றன என்பது எமக்கு தெரியவரப் போவதில்லை. அமைப்புக்களை ஊடுருவல் மற்றும் இங்கிலாந்து புலனாய்வுத் துரையின் உதவி ஆகிய இரண்டு நடவடிக்கைகள் இதற்கு உதவி வருவது தெரியவந்திருக்கிறது. இதை குணரட்னவும் உறுதிப்படுத்தி உள்ளார்.

லண்டன் அரசியல் நடவடிக்கைகளை கண்காணிக்க, இங்கிருக்கும் இலங்கைத், தூதரகம் தனிப்பட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதும் அந்த பொறுப்பு உயரதிகாரிகளுக்கு வழங்கப் பட்டு இருப்பதும் அறிவோம். பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டோவின் முக்கிய பொறுப்பு இது. இரகசியமாக இயங்கிவந்த இந்த மனித உரிமைக்கு எதிரான அதிகாரியை சமூகத்துக்கு வெளிக்காட்டியதில் தமிழ் சொலிடாரிட்டிக்கு முக்கிய பங்கு உண்டு. அவர் ஒரு டிப்லோமட் என்று சொல்லி அந்த அடிப்படையில் அவரைக் காப்பாற்றிச் சென்றுவிட்டது இலங்கை அரசு. அவர் மேலான வழக்கின் போது வெளிவந்த தகவல்களின் அடிப்டையில்கூட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அமைப்புக்களின் தலைமை உறுப்பினர்கள் மட்டுமல்ல, லண்டனில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் அனைவரையுமே இலங்கை தூதரகம் கண்காணிக்கிறது என்பது தற்போது தெரியவந்திருக்கிறது. இலங்கை அரசைப் பொருத்தவரை இவர்கள் அனைவரும் ‘தீவிரவாதிகளே’. அவர்கள் கூறும் ‘தீவிரவாத’நடவடிக்கைகள் என்ன? அரசியற் கூட்டத்திற்குச் செல்வது – வீதிப்போராட்டத்தில் கலந்து கொள்வது – அமைப்புக்கு காசு சேர்ப்பது – போன்ற விசயங்கள் எல்லாம் ‘தீவிரவாத’ நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. இந்த அடிப்டையில் எல்லா தமிழ் அமைப்புக்களினதும் உறுப்பினர் பட்டியல் தயாரிக்கப்பட்டு கண்காணிப்பு செய்யப்படுகிறது. அமைப்பில் உறுப்பினராக இல்லாதோர் பலர்கூட இந்த கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படுகிறார்கள். மாவீரர் நாள் – கரும்புலி நாள் – முள்ளிவாய்க்கால் நாள் என்ற மூன்று தருணங்களில் கூடுபவர்கள் கண்காணிக்கப் படுகிறார்கள்.

குணரத்னவின் வாக்குமூலம் இன்னுமொரு புள்ளியையையும் தெளிவாக்கி இருக்கிறது. இலங்கை புலனாய்வின் பெரும் ‘கோப’ நடவடிக்கை இலங்கைக்கு வெளியில்தான் முக்கியமாக மையம் கொண்டுள்ளது. குறிப்பாக லண்டன் என நாம் குறிப்பிட முடியும். இலங்கைக்குள் இருப்பவர்கள் பற்றியோ அல்லது பழைய புலிகள் பற்றியோ இலங்கை அரசுக்கு எந்தக் கவலையும் இல்லை. மேற்சொன்னதுபோல் அதில் பலர் அரசுக்கு வேலை செய்து வருகிறார்கள். லண்டன் அரசியலில் நிகழும் ‘தீவிர’ மாற்றங்கள் – குறிப்பாக இளையோர் மத்தியில் நடக்கும் மாற்றங்கள்தான் அவர்களின் முக்கிய கரிசனையாக இருக்கிறது. இந்த அடிப்படையில் ஏற்கனவே நன்கறியப்பட்ட செயற்பாட்டாளர்களை விட அறியப்படாத செயற்பாட்டாலர்களையும்  தீவிரமாக கண்காணித்து வருகிறது அரசு.

3

சமீபத்தில் நடந்த ‘நாடுபற்றிய அறிவுரை’ தீர்மானிக்கும் வழக்கு (KK and RS/ST) பழைய காலாவதியாகிப்போன அறிவுரைக்கு திருத்தங்களை செய்துள்ளது. இந்த வழக்கில் பங்காற்றியவர்கள் உறுப்பினாரக இருக்கும் இரண்டு அமைப்புக்கள் பற்றி மட்டும் தனிப்பட்ட கவனத்தை செலுத்தி இருந்தது நீதி மன்றம். நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் தமிழ் சொலிடாரிட்டி அமைப்புக்களை மட்டும் குறிப்பாக கவனத்தில் எடுத்துக்கொண்ட பொழுதும் மற்ற அமைபுக்கள் சார் புள்ளிகளும் விவாதிக்கப்பட்டது. இறுதியில் இங்கிலாந்து உள்துறை அமைச்சுக்கு எதிரான தீர்ப்பை வழங்கிய உயர் நீதிமன்றம் ‘நாடுபற்றிய அறிவுரை’யில்’ பல்வேறு மாற்றங்களை அறிமுகப் படுத்தியுள்ளது. யார் யார் இலங்கை அரசின் அடக்குமுறைக்கு உள்ளாவார்கள் என்ற வரையறை தற்போது மாற்றப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட இயக்கத்தில் இருப்பவர்கள் – மற்றும் நன்கு அறியப்பட்ட செயற்பாட்டாளர் முதலானவர்களுக்கு மட்டும்தான் இலங்கை அரசால் பிரச்சினை என்ற நிலைப்பாடு மாற்றப் பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட  TGTE, BTF , GTF ஆகிய அமைப்புக்கள் புலிகளின் பினாமி அமைப்பாக பார்க்கப் படுவதையும் தீர்வு பதிவு செய்கிறது. புலிகளின் பினாமி அமைப்பாக பார்க்கப்படாத தமிழ் சொலிடாரிட்டி இலங்கை அரசால் எதிரிப்புச் சக்தியாக பார்க்கப்படுகிறது என்பதும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரசியல் தஞ்சம் கோருவோர் பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். பக்கம் பக்கமாக அவர்கள் தமது செயற்பாடுகளை ஆவணப்படுத்தி வழங்க நிர்பந்திக்கப் பட்டிருக்கிறார்கள். இங்கிலாந்து அரசிடம் புலம்பெயர் தமிழர் நடவடிக்கை பற்றி முழு ஆவணமும் இருக்க இதுவும் ஒரு காரணம். தமது வழக்கை சரியாக ஆவணப்படுத்த முடியாதவர்கள் பலர் வழக்கில் தோல்வி அடைந்திருக்கிறார்கள். இந்த நிலவரம் மாறுவதற்கு தற்போது வசதி ஏற்பட்டிருக்கிறது.

எந்த ஒரு அரசியற் செயற்பாட்டாளரும் இலங்கைக்கு வலுக்காட்டாயமாக திருப்பி அனுப்பப்படக்கூடாது என்பதுதான் தமிழ் சொலிடாரிட்டியின் நிலைப்பாடு. தமிழரின் உரிமை பேசுவதாக காட்டி அவர்கள் வாக்கை தமக்கு வழங்க வேண்டும் எனக் கேட்கும் எந்த அரசியல்வாதியும் அரசியற் தஞ்சம் கோருவோர் பற்றி கண்டுகொள்வதில்லை. இலங்கையில் இருந்து வந்து அரசியற் தஞ்சம் கோரிய எவரும் திருப்பி அனுப்பி வைக்க கூடாது என நாம் சொல்வதற்கு பலமான காரணங்கள் உண்டு. இலங்கைக்குள் சுதந்திர அரசியற் செயற்பாடு சாத்தியமில்லை என்பதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு. அகதி கோரிக்கை செய்பவர்களுக்கு நிறைய உரிமைகள் மறுக்கப்பட்டு வருவதும் அறிவோம். தமிழ் மக்கள் மத்தியில் – ஏன் தமிழ் அரசியல் அமைப்புக்கள் மத்தியில் கூட அகதி கோரிக்கையாளர்கள் மோசமாக நடத்தப் படுவதும் உண்டு. ஏற்கனவே நொந்து நூலாகி இருக்கும் அவர்களிடம் பணம் புடுங்கும் நடவைக்கைகள் பல நடப்பதையும் நாம் பார்த்து இருக்கிறோம். இந்த நிலவரங்களை மாற்ற வேண்டும் என்றுதான் ‘அகதிகள் உரிமைகள்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தது தமிழ் சொலிடாரிட்டி. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தாமும் இணைந்து இந்த அமைப்பை நடத்துவதாக முன்பு தெரிவித்து இருந்தனர். அகதி கோரிக்கையாலர்களுக்கான நடவடிகைகளை முன்னெடுப்பதை விட அவர்களைக் கட்டுப்படுத்துவதைத்தான் பலர் செய்து வருகின்றனர். இந்த நிலை மாற வேண்டும். பிரச்சனைகளை எதிர்கொள்ளும் அகதி கோரிக்கையாளர்கள் உடனடியாக அகதிகள் உரிமை இயக்கத்தை தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் விண்ணப்பங்கள் மீள் பரிசோதனை செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப் படுவதற்கான வேலையை முன்னெடுக்க வேண்டிய தேவை உள்ளது. ஒரு போராட்ட அமைப்பு பலமாக இருக்கும் இடத்தில் அகதிகள் உரிமைகளை துச்சமாக மதித்து நடப்பது அரசுக்கு இலகு அல்ல.

4

போராட்ட அமைப்புக்களை முடக்க எல்லா அரசுகளும் பல்வேறு சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளை எடுத்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அமெரிக்க புலனாய்வுத் துறை, கொலை செய்வது முதற்கொண்டு ஊடுருவல் – பொய் வழக்கு போடுதல் என பலவேறு காரியங்களைச் செய்து சிவில் உரிமை இயக்கத்தை முடக்கியதை நாம் அறிவோம். இங்கிலாந்தில் இயங்கி வரும் சோசலிசக் கட்சியை ஊடுருவி இங்கிருக்கும் புலனாய்வு செய்த வேலைகள் பலதை சமீபத்தில் கார்டியன் பத்திரிகை அம்பலப்படுத்தி இருந்தது. போராட்ட அமைப்புக்கள் மேல் எத்தகைய வன்முறையை இந்திய அரசு செய்கிறது என்பதை நாம் அறிவோம்.

இந்த போராட்ட அமைப்புக்கள் மக்கள் விரோத சக்திகள் என்ற அடிப்படையில் இது நடப்பதில்லை. மாறாக ஒரு போராட்ட அமைப்பு மக்கள் நலன்சார் அமைப்பாக வளர்ச்சி அடைவது – பலப்படுவதுதான் இவர்களின் தலையாய பிரச்சினை. மக்கள் நலனை முதன்மைப்படுத்தும் போராட்ட அமைப்பு அரச அதிகாரத்துக்கு எதிராக தன்னை நிறுத்துவது தவிர்க்க முடியாது. இலங்கை அரச அதிகாரம் உடைக்கப் படுவதால்தான் மக்களுக்கு விடுதலை சாத்தியம் என நாம் பேசுகிறோம். நாம் அந்த காரியத்தை நிறைவேற்ற முதல் எம்மை உடைத்து துடைத்து எறிந்து விடும் வேலையை செய்ய இந்த அரச அதிகாரம் தனது அனைத்து சக்திகளையும் பாவிக்கும்.

இந்த பலவீனத்தை உணர்ந்து எதுவும் செய்ய முடியாது என நாம் இருந்துவிட முடியாது. அதே சமயம் எமது இயங்குதல் இரகசியமானதாகவும் இருக்க முடியாது. சரியான அரசியல் அடிப்படையில் இயங்குவதன் மூலம்தான் ஒடுக்குமுறையை நாம் எதிர்கொள்ள முடியும்.

புலனாய்வுத்துறை – காவல்துறை தொடர்பு கொண்டு தகவல் கேட்டால் பயந்து நடுங்க வேண்டிய அவசியம் எதுவும் கிடையாது. தகவல்களை கொடுப்பதா, மறுப்பதா என்ற முடிவை எடுப்பது உங்கள் உரிமை. முழுமையான தெரியாத விசயங்கள் பற்றி ஊகங்களின் அடிப்டையில் பேசுவதை விட தெரியாது எனச் சொல்லி தகவல்கள் வழங்குவதை மறுப்பதே சிறந்தது என்பதே நாம் உங்களுக்கு வழங்கும் ஆலோசனை. எம்மிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை. இரகசிய முறையில் இயக்கம் கட்டும் காலம் கடந்து விட்டது. அரச அதிகாரத்திடம் இன்று இருக்கும் வசதிகள் போன்ற நிலையை அடைவது எந்த ஒரு போராட்ட சக்தியாலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. அவர்கள் தகவல்களைப் பெறுவதை தவிர்ப்பது சாத்தியமுமில்லை. எமது நடவடிக்கைகளை ‘பாதுகாப்பு’ நோக்கி முடக்குவதும் தவறு. சரியான அரசியல் நிலைப்பாடுதான் எமக்கான சரியான பாதுகாப்பாக இருக்க முடியம். இது பற்றிய தனிப்பட்ட சிறு அறிக்கை ஒன்றை அமைப்புக்களின் தலைமைகள் மற்றும் உறுப்பினர்களுக்கு விரைவில் சமர்பிக்க உள்ளது தமிழ் சொலிடாரிட்டி அமைப்பு.

மேலதிக தகவல்களுக்கு நேரடியாக எம்மை தொடர்பு கொள்ளுங்கள்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *