ஊடக சுதந்திரம் – சேனன்

முன்குறிப்பு

‘ஜனநாயகம்’ மற்றும் ‘ஊடக சுதந்திரம்’ என்ற பதங்கள் இன்று உலகெங்கும் அதிகாரம் சார்ந்த பொது அர்த்தத்திலேயே பேசப்பட்டு வருகிறது. ஜனநாயகம் சிறுபான்மை அதிகார கும்பலின் ஜனநாயகமாகவும,; சிறுபான்மை அதிகாரத்தின் பேச்சு சுதந்திரத்தை பிரச்சாரம் செய்வது ஊடக சுதந்திரமாகவும் அர்த்தப்பட்டு வருகிறது. இந்த அர்த்தப்படுத்தலில் பெரும்பான்மை மக்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். உலகின் பெரும்பான்மை ஊடகங்கள் மிகச்சிறுபான்மை பணக்காரர்களின் கைகளில் முடக்கப்பட்டு வருவதால் அவை பெரும்பான்மையினர் நலன்களில் இருந்து விலத்துவது தவிர்க்க முடியாததாகிறது. ஊதிப்பெருத்த பெரும் ஊடகங்கள் சிறு சிறு ஊடகங்களை விழுங்கி மிகச்சிறுபான்மை நலனை பிரதிபலிக்கும் பிரமாண்டமான ஊடக நிறுவனங்களின் காலத்தில் நாம் வாழ்கிறோம். இந்த ‘பொது’ ஊடகங்களில் பெரும்பான்மை மக்களின் பங்களிப்பு மிக மிக குறைந்தளவிலேயே இருக்கிறது. விக்டோரியன் காலத்தின்பின் மிககூடிய அளவில் ஊடகங்கள் மக்களிள் இருந்து தனிமைப்பட்டு போயுள்ளன என்பது மிகையான கருத்தல்ல. இன்று ஊடகங்கள் மேல் விழுந்துள்ள பொருளாதார-அரசியல் ஆதிக்கத்துக்கு பலத்த எதிர்ப்பை ஏற்படுத்துவதன் மூலமே மக்கள் பங்களிப்பை – மக்களின் நலன் பிரதிபலிக்கும் பொது ஊடகத்தை உருவாக்க முடியும். இந்த சாத்தியத்தை இணைய ஊடகங்கள் ஏற்படுத்தி கொடுத்துள்ளன. ஜனநாயகத்தின் எல்லைகளை அகலப்படுத்துவதிலும் பெரும்பான்மை மக்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதிலும் அதிக பங்களிப்பை வழங்கி வருபவை இணைய ஊடகங்களே.

உலகளாவிய பாரிய நிறுவனங்கள் பல சரிந்து பெரும் பொருளாதார சிக்கலுக்குள்ளாகியுள்ள இத்தருணத்தில் அரசியலில் தமது பங்களிப்பின் அவசியத்தை பெரும்பான்மை மக்கள் உணரத்தொடங்கியுள்ளனர். தேர்தல்களிள் மக்களின் நலனை பிரதிபலிக்கும் சந்தர்ப்பம் பெரும்பான்மை மக்களுக்கு கிடைப்பதில்லை. போட்டியிடும் ‘பெரும்பான்மை’ கட்சிகள் யாவும் சிறுபான்மை அதிகார வர்க்கத்தினர் நலன்சார்ந்தே இயங்குவதால் மக்கள் நலன் ஜனநாயக தேர்வுக்கு வருவதே இல்லை. அதனால் பல்வேறு நவீன முறைகளிள் மக்கள் தங்கள் அரசியற் பங்களிப்புகளை செய்யும் புதிய காலத்தில் நாம் நுளைந்துள்ளோம். அதிகாரவர்கத்தின் தான் தோன்றி தனமான முடிவுகளை எதிர்க்க வேண்டிய தேவையும் அரசியல் முடிவுகளிள் மக்களின் பங்களிப்பு இருக்கவேண்டிய அவசியமும் இன்று உலகெங்கும் உணரப்பட்டு வருகிறது. இந்நிலையில் மக்கள் பங்களிப்பை உள்வாங்குவது மக்கள் சார்ந்து இயங்கும் எந்த ஊடகத்தினதும் பெரும் சவாலாக இருக்கிறது.

வரலாற்று பின்னனி

18ம் நூற்றான்டு காலகட்ட தொழிற்புரட்சி பல்வேறு சமூக பொருளாதார விஞ்ஞான மாற்றங்களை கொண்டு வந்தது. இக்காலகட்டத்தில் அச்சுத் துறையில் ஏற்பட்ட வேகமான மாற்றம் மிக முக்கியமானது. 19ம் நூற்றான்டின் மத்திய காலத்தில் பத்திரிகைகள் மில்லியன் கணக்கான பிரதிகளை அச்சிடும் அளவுக்கு அச்சுதுறை தொழில்நுட்பம் மிக வேகமான வளர்ச்சி கண்டது. பெரும்பான்மை மக்களை குறிவைத்து பத்திரிகைகள் அச்சிடப்பட்டாலும் அவை பெரும்பான்மையினரின் நலன்சார்ந்து இயங்கவில்லை. பத்திரிகை துறையை அதன் ஆரம்பகாலம் தொட்டு அதிகார வர்க்கம் தனது கட்டுபாட்டில் வைத்துக் கொள்வதில் கவனமாக இருந்து வந்துள்ளது. பொது அறிவில் செல்வாக்கு செலுத்தல் – தகவல்களை கட்டுப்படுத்தல் முதலானவையை அதிகாரம் தனது இருத்தலை உறுதிப்படுத்தும் இயல்பான நடவடிக்கையாக கொண்டிந்தமையால் இதற்கு சிறந்த வசதி ஏற்படுத்தி கொடுத்த அச்சுதுறையை அதிகாரம் உடனடியாக தமது கட்டுபாட்டில் கொண்டுவந்தது ஆச்சரியமானதல்ல. பெரும்பான்மையர் சுயமாக பணம்கொடுத்து வாங்கும் பத்திரிகை மிக சிறுபான்மை நலன்சார்ந்து அச்சிடப்பட்டது விரைவில் முரண்பாடுகளை தோற்றுவித்தது. இந்த முரண்பாடு தோற்றுவித்த அதிருப்தியை மக்கள் சார்ந்து சிந்தித்த ‘மொழி வல்லுமையாளர்’ பலர் தமது வெளிப்பாடுகளில் பிரதிபலித்து வந்துள்ளனர். பெரும்பான்மையரின் எதிர்ப்பு இவர்களுக்கூடாவகவே சிறிய அளவில் பதியப்பட்டது. இவர்கள் தமக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை பாவித்து ‘பேச்சு சதந்திரம்’ என்ற கருத்தை முன்தள்ளினர்.

பெரும்பான்மை மக்களின் பல்வேறுபட்ட குரலை உள்நுளைப்பதானால் முரணான பல கருத்துக்களை-ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துக்களை அனுமதித்தாக வேண்டும் என்ற அவசியத்தை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாததாகியது. பேச்சு சுதந்திரம் என்ற உரிமை ஒவ்வொருவரினதும் தனி உரிமை ஆக்கப்பட்டால் மக்களின் குரல் வெளிப்படுவதற்கான அதிகாரத்தின் தடை தளர்த்தப்படும் என்பது உணரப்பட்டது.

பேச்சுரிமை ஒவ்வொரு மனிதனிதும் அடிப்படை உரிமைகளில் ஒன்று என்பதை நிலைநாட்டுவது, மக்களின் பேச்சு பொதுவில் வளரவிட அதிகாரத்தை நிர்பந்திக்கும் உத்தியானது. அதிகாரம் சார்-எதிர் என்ற சார்நிலைகளுக்கும் அப்பால் ‘பேசும் உரிமை’ என்பதை மனித உரிமையாக பார்க்கும் போக்கு அதிகார வர்க்கத்துக்கு பெரும் சிக்கல்களை தோற்றுவித்தது. பேச்சு உரிமை அதிகாரத்துக்கு எதிரான நலன் கொண்டது என்பதை அதன் ஆரம்பகாலங்களிலேயே அதிகாரம் தெட்டத் தெளிவாக புரிந்து கொண்டது. தமக்கு எதிரான கருத்துக்களையும் ‘உரிமை’ அடிப்படையில் அதிகாரம் ஏற்றுகொள்ள வைப்பது என்பது மக்கள் சார்ந்து கருத்து வைத்த அன்றய புத்திஜீவிகளின் பெரிய சவாலானது. பிரெஞ்சு புத்திஜீவி வால்டேரின் புகழ்பெற்ற கூற்றை இந்த அடிப்படையிலேயே பார்க்கவேண்டும். ‘நீ சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் அதை சொல்ல இருக்கும் உனது உரிமையை காக்க நான் எனது உயிரையும் கொடுப்பேன்.’ என்று வால்டேர் வலியுறுத்தியதன் அரசியற் பின்னணி இதுதான். ‘நீ சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை’ என்ற பகுதி அதிகாரத்தை நோக்கி பேசியதாகவும் அதிகாரம் உடன்படாத கருத்து வெளிப்பாட்டின் குறியீடாகவும் பார்க்கபட வேண்டும். ஆனால் அதிகாரம் ‘தத்துவ’ கோரிக்கைகளுக்கு மசியவில்லை. அதிகாரத்தை மசியவைக்க மக்கள் உரிமை போராட்டத்தை நடத்தவேண்டியிருந்தது.

1776ல் இருந்து 1800 வரையான காலப்பகுதியை ‘புரட்சிகளின் காலம்’ என்று பல வரலாற்றாசிரியர்கள் வர்னிப்பர். ஒடுக்கப்பட்டுகொண்டிருந்த பெரும்பான்மை மக்களின் உரிமைகளுக்கான கிளர்ச்சி பாரிய அளவில் வெடித்த காலப்பகுதியிது. ஆரம்பகால முதலாளித்துவத்தின் ‘கருத்துநிலையை’ தீர்மானித்த காலப்பகுதியிது. 1776 யூலை 4ல் அமெரிக்க சுதந்திர பிரகடனத்தில் ‘மனித உரிமைகளை’ தோமஸ் ஜெபர்சன் அறிமுகப்படுத்தியது மறுமலர்ச்சி காலகட்டத்தின் உச்சக்கட்ட நடவடிக்கை. இதன்பின் 1789 பிரெஞ்சு புரட்சியின்போது உருவான பல்வேறு கோசங்களில் ‘மனிதரின் உரிமைகள் பிரகடனம்’ முக்கிய செல்வாக்கு செலுத்தியது. தோமஸ் பெயினின் ‘மனிதரின் உரிமை’ புத்தகம் உரிமை கோரிக்கைகளின் சின்னமானது மட்டுமின்றி அக்கால புரட்சியாளர் பலருக்காக வாதாடவும் உதவியது. இக்கருத்துகள்மேல் அன்று அதிகாரத்துக்கு இருந்த அச்சத்தை குறைத்து மதிப்பிடக்கூடாது. தோமஸ் பெயினுக்கு இங்கிலாந்து ஆழும் வர்க்கம் மரண தண்டனை வளங்கியது ஆச்சரியமானதல்ல. அவர் பிரான்சுக்கு தப்பியோடித்தான் தூக்கில்; இருந்து தப்பினார்.

1791ல் அமெரிக்காவில் அமுலுக்கு வந்த உரிமை சட்டமும் அதில் முதலாவது சேர்ப்பாக (First Amendment to the Bill of rights) பேச்சு சுதந்திரமும் மனித குல வரலாற்றில் மிக முக்கியமான மைல்கற்கள். பேச்சுரிமையையோ அல்லது ஊடகத்தையோ பாதிக்கும் எந்த சட்டத்தையும் காங்கிரஸ் கொண்டுவரகூடாது என்று தடுத்தது இச்சட்டம்.

இருப்பினும் அதிகாரிகள் தொடர்ந்து மக்களின் உரிமைகளை சூறையாடிக் கொண்டுதான் இருந்தனர். வளங்களையும் ஊடகங்களையும் தொடர்ந்தும் அவர்கள் தமது கட்டுபாட்டிலேயே வைத்திருந்தனர். ஆனால் அதிகாரத்துக்கும் ஊடகத்துக்குமான உறவு பற்றி மக்கள் நன்றாகவே அறிந்திருந்தனர். யோன் ஸ்டுவர்ட் மில் தனது ‘ஊடக சுதந்திரமும் அவதூறு சட்டமும் ‘‘Law of Libel and Liberty of press’ (1825) என்ற கட்டுரையில் இதுபற்றிய முக்கியமான அவதானத்தை ஏற்படுத்துகிறார். அதிகாரம் எப்பொழுதும் பெரும்பான்மை ஒடுக்கப்படுபவர்களின் சுதந்திரத்தை நசுக்குவதாகவே இருக்கும் என்பதை மில் சுட்டிகாட்டுகிறார். பொது உரையாடல் மூலமாகவும், பிழை-கூடாது-தவிர்க்கப்படவேண்டியது என்று கருதப்படுகிற கருத்துக்களை அனுமதிப்பதன் மூலமாகவுமே சுதந்திரத்தை சாத்தியப்படுத்த முடியும் என்றார் அவர்.

‘எதிர்’ கருத்து எவ்வகைப்பட்டதாக இருப்பினும் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற வலியுறுத்தல் கருத்து சுதந்திரத்தை நிலைநாட்டுவதோடு தொடர்ந்தும் பின்னி பிணைந்திருப்பதை நாம் இங்கு அவதானிக்கவேண்டும்.

இதன்பிறகு முதலாளித்துவம் முதிர்ச்சியடைய தொடங்கிய கால கட்டத்தில் உருவான புது ஒடுக்குமுறைகள் புது ஒடுக்குதல்களை தோற்றுவித்தது. அதற்கெதிரான போராட்டமும் வலுப்பெற்றது. இரஸ்ய புரட்சி பேச்சு சுதந்திரத்தின் எல்லைகளை வரலாறுகாணாத வகையில் அகட்டியது. மார்க்சிய புரட்சியாளர் ஊடகத்துக்கும் அதிகாரத்துக்குமான உறவை முதல் முதலாக உடைத்தனர். தொழிலாளர்களுக்கும் வறிய மக்களுக்குமான ஊடகத்தை உருவாக்கும் முயற்சியில் முதன் முதலாக இறங்கினர் இரஸ்ய புரட்சியாளர்கள். அதிகாரத்தை தகர்த்து ஒடுக்கப்படும் மக்களுக்கான தொழிலாளர் ஜனநாயகத்தை உருவாக்கியதன் மூலம் புதிய அரசியல் -பொருளாதார உறவுமுறைகளுக்கு வழியேற்படுத்தினர். மனித குல வரலாற்றில் முதன் முறையாக ஒடுக்கப்படும் அனைத்து மக்கள் சார்பிலும் இயங்கும் பதிய சமுக ஒழுங்கு உருவாக்கப்பட்டது.

புரட்சி நடந்த ஒரு மாதத்திற்குள் நவம்பர் 1917ல் போல்சிவிக் கட்சி பத்திரிகை பிரவ்டா லெனினின் பின்வரும் கோரிக்கையை பிரசுரித்தது.

‘ தோழர்களே! தொழிலாளர்களே! இனி நீங்கள்தான் அரசின் தலைமைத்துவத்தில் இருக்கிறீர்கள் என்பதை நன்றாக ஞாபகத்தில் வைத்துகொள்ளுங்கள். நீங்களாக ஒன்றினைந்து உங்கள் அரச கருமங்களை உங்கள் கையில் நீங்கள் எடுப்பதற்கு வேறு யாரும் உதவப்போவதில்லை. உங்கள் வேலையில் இறங்குங்கள். அடிமட்டத்தில் இருந்து ஆரம்பியுங்கள். யாருக்காகவும் தாமதிக்காதீர்கள்.’

சர்வாதிகாரி என்று பூர்சுவாக்கள் புறங்கூறும் லெனினின் மக்கள் நோக்கிய கோரிக்கை இது. சோவியத் துரித கதியில் மாற்றத்துக்குள்ளானது. உலகெங்கும் உள்ள அதிகார வர்கத்துக்கு அதிர்வலைகளை சோவியத் மக்கள் அனுப்பினர். பல்வேறு நாடுகளில் உரிமைபோரில் மக்கள் இறங்க இது ஊக்கமளித்தது. இருப்பினும் புரட்சியின் வெற்றி தொடர்ந்து நீடிக்கவில்லை. சிறு அதிகார வர்க்கம் அரசை கைப்பற்றி தொழிலாளர் நலனை நசுக்க தொடங்கியது. ஸ்டாலினுடன் பிராவ்டாவின் இணை ஆசிரியர்களில் ஒருவரான காமினேவ் புரட்சிக்கு சில மாதங்களின் முன் லெனின் எழுதிய ஏப்பிரல் தீசிஸ்க்கு எதிராக ஆசிரியர் தலையங்கம் எழுதி விமர்சிக்ககூடிய ஒரு சூழல் இருந்தது. ஆனால் ஸ்டாலினிஸ்டுகள் அதிகாரத்தை கைப்பற்றியதுடன் நிலை தலைகீழாக மாறியது. பேச்சு சுதந்திரத்தை நசுக்குவது ஸ்டாலினிஸ்டுகளின் முக்கிய பணியானது. மக்கள் அபிப்பிராயத்தை காவல்காத்து வழிநடத்துவதல்ல ஒரு உண்மையான புரட்சிகர தொழிலாளர் அரசின் பணி. மாறாக முதலாளித்துவ கட்டுபாட்டில் இருந்து மக்கள் கருத்தை விடுவிப்பதே அவர்கள் பணியாக இருக்கவேண்டும் என்பதை ட்ரொட்ஸ்கி சுட்டி காட்டினார். தகவல் உற்பத்தியையும் மக்கள் மயப்படுத்துவதன் மூலம் மட்டுமே இதை சாதிக்கலாம் என்று ட்ரொட்ஸ்கி கூறியது மக்கள் நலனில் இயங்காத ஸ்டாலினிஸ்ட் அதிகாரத்துக்கு துரோகமாக பட்டதில் ஆச்சரியமில்லை.

இதை தொடர்ந்த பனி யுத்தத்தில் ‘தகவல் கட்டுப்பாடு’ மிக முக்கிய பங்குவகித்தது. தேசிய இறையான்மை – பாதுகாப்பு காரனங்கள் என்ற பம்மாத்துகள் காட்டி அதிகாரம் தகவல் சுதந்திரத்தையும் பேச்சு சுதந்திரத்தையும் தமது கைக்குள் இறுக்கி வைத்துக்கொண்டிருக்கின்றன. பனியுத்த காலத்திலும் அதற்கு பிறகும் ஊடக சுதந்திரத்துக்கான பல போராட்டங்களை நாம் பார்த்துவிட்டோம். அமெரிக்காவில் 60களில் சிவில் ரைட் இயக்கம் முன்தள்ளிய போராட்டம் இவற்றில் முக்கியமானது. அதன் தொடர்ச்சியாக எழுந்த பேச்சு சுதந்திர இயக்கம் உலகெங்கும் பலமான செல்வாக்கு செலுத்தியது நாமறிவோம்.

ஒரு ஏக்கர் கானிக்குள் அடைத்துவைக்கக்கூடிய தொகை பணக்காரர் பூமிப்பந்தின் மொத்த வளங்களையும் சொந்தம் கொண்டாடி மில்லியன் கணக்கான மக்கள் பட்டினியாலும் நோயாலும் தினமும் சாவதை பார்த்துகொண்டிருக்கும் மிகவும் சமமற்ற உலகில் இன்று நாம் வாழ்கிறோம். இந்நிலையில் மக்கள் குரலை வலுப்படுத்துவதும் அதற்கான முன்னெடுப்புகளை செய்வதும் மிக முக்கியமானது.

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் ஜோன் ஸ்டுவர்ட் மில் ஏற்படுத்தின தெளிவுகூட இன்று பலருக்கு இல்லை. சுதந்திர உரையாடலுக்கு எதிரான கருத்து எவ்வாறு உருவாகிறது என்பதை அவர் அன்றே சுட்டிகாட்டியிருந்தார். ‘ சரியான கருத்தை உருவாக்கி கொள்ள முடியாத படியால்தான் ஒரு தவறான கருத்து உருவாகிறது. சுதந்திர உரையாடலை தொடர்வதுதான இதை மாற்ற ஒரே வழி;. சுதந்திர உரையாடல் உருவாக்கும் தவறான கருத்துக்களை தவிர்க்க-மாற்ற சுதந்திர உரையாடலை தொடர்வதுதான் ஒரே வழி. சுதந்திர உரையாடலில் ஏற்படும் அறிதலே தவறான கருத்துகள் உருவாகும் அறிவின்மை சூழலை தவிர்க்க உதவும்’ என்று மில் கூறியது இன்றும் பலருக்கு புதினமாக படலாம். பேச்சு சதந்திரத்தை எதற்காகவும் விட்டு குடுக்க முடியாது என்று கடந்த இரு நூற்றாண்டுகளுக்கும் மேலாக போராடி வந்தாலும் இன்றும் அது அதிகாரத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாலேயே இந்தநிலை.

இதை நிரந்தரமாக மாற்ற இன்றுள்ள இணைய சுதந்திரத்தை நாம் எமது போராட்டங்கள் மற்றும் பேச்சு சுதந்திரம் வலுப்பட பாவிக்கவேண்டும்.

… மிகுதி என்றோ ஒருநாள் தொடரும்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *