ஒரு கனவின் வயது – 50

ஈராக்கில் லட்சக் கணக்கில் மக்களைக் கொண்று குவித்து எண்ணைக் கிணறுகளை வசப்படுத்திய சூடு ஆறமுதல் சிரியாவுக்குள் குண்டுகளை வீச டிரோனைத் தயார்படுத்தி வருகிறது அமெரிக்கா. மனிதர் அல்லாத விமானத்தின் மூலம் குண்டுகளை வீசும் முறை டிரோன் தாக்குதல் என அறியப்படுகிறது. சிரியா தாக்குதலில் பொருளாதார லாபம் குறைவாக இருப்பினும் பிராந்திய நலன் -மற்றும் மத்திய கிழக்கில் புரட்சிமாற்றங்கள் மேலும் பரவாமல் தடுப்பது –எனப் பல முக்கிய குறிக்கோள்களுடன்தான் இயங்கிவருகின்றன மேற்குலக அரசுகள். தாக்குதல் நிகழ்ந்தால் ஏராளமான அப்பாவி மக்களும் அவர்தம் கனவுகளும் சுக்கல் சுக்கலாக நொருக்கப்படும் என்பதறிவோம். இந்த கனவழிக்கும் தாக்குதல் முன்னெடுப்புகளுக்கு தலைமை தாங்குபவர் அமெரிக்க சனாதிபதி ஒபாமா. அவர் ஒரு ஆபிரிக்க அமெரிக்கர்.
ஆனால் இன்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு 28 ஆகஸ்ட் 1963ல் இன்னுமொரு ஆபிரிக்க ஆமெரிக்கர் ஒரு கனவை உருவாக்கினார். வாசிங்டனில் ஆபிரகாம் லிங்கன் நினைவிடத்தில் கூடியிருந்த 250 000 மக்களுக்கு முன்னால் வழங்கிய உலகப் புகழ்பெற்ற பேச்சில் ‘எனக்கொரு கனவிருக்கு” என்றார் அந்த ஆபிரிக்க அமெரிக்கர். அவர் பெயர் மார்ட்டின் லூதர் கிங்.

சமூக உரிமைப் போராளியான அவரது பேச்சுக்கு வயசு ஐம்பது. ஆனால் அந்தக் கனவுக்கு என்ன நடந்தது. எமது தோலின் நிறத்தை வைத்து எம்மை அளவிடாமல் எமது குணத்தின் உள்ளடக்கத்தை வைத்து அளவிடும் ஒரு நாள் வரும் என்று எனக்கொரு கனவிருக்கென்றார் அவர். எல்லா மனிதர்களும் சமம் என்ற நிலை வரும் என கனவிருக்கென்றார் அவர். அந்தக் கனவு இன்னும் காற்றில் தொங்கிக்கொண்டிருக்கிறது.

என்னிடம் ஒரு கனவிருக்கென்ற கிங்கின் முதுகில் ஏறி நின்றுகொண்டு இன்று ஒபாமா என்னிடம் ஒரு டிரோன் இருக்கென்கிறார். கிங்கின் கனவின் மேல் கரி பூசுவதை கச்சிதமாக செய்துகொண்டிருக்கிறார் ஒபாமா.

கிங் சொன்னது சரி. தோலின் நிறமல்ல – அவர்களின் உள்ளடக்கத்தைப் பார்க்க வேண்டும். ஒபாமா பெரும் முதலாளித்துவத்தின் பிரதிநிதி என்பதை பார்க்கவேண்டும் என்பதை புரிந்து கொள்ளாதவர்களும் இருக்கிறார்கள். இந்தப் புகழ்பெற்ற பேச்சின் 50ம் ஆண்டை நினைவுகூரும் அதே மாதம் ஆபிரிக்க அமெரிக்கர் தலைமையில் முன்னெடுக்கப்படும் யுத்தத்துக்கு எதிரான போராட்டங்கள் உலகெங்கும் முன்னெடுக்கப்படுவது ஆச்சரியமானதல்ல. இத்தருணத்தில் கிங் கின் பேச்சின் வரலாற்றுப் பின்னணியை முடக்கும் நோக்கமும் முதலாளித்துவ ஊடகங்களுக்கு உண்டு. இதே ஆண்டில் – 63 நவம்பரில் நிகழ்ந்த கென்னடியின் கொலையை இப்பவே நினைவுகூறத் தொடங்கிவிட்ட ஊடகங்கள் இந்த வரலாற்றுப்புகழ் மிக்க மனிதஉரிமை கோரும் பேரணி பற்றி மூச்சுக்கூட விடவில்லை. சீனாவில் இருந்து லண.டன் வரை போராளிகள்தான் இதை கூட்டங்கள் போட்டும் போராட்டங்கள் நடத்தியும் நினைவுபடுத்திக்கொள்கிறார்கள். கிங்கின் கனவைப் பகிர்ந்த ஆயிரக்கணக்கான போராளிகள் முன்னெடுத்த உரிமைப் போர் இன்றும் லட்சக் கணக்கானவர்களால் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. 63ல் நடந்த பேரணியின் வரலாற்றுப் பின்னணி பற்றிய சில கருத்துக்களை நினைவுகூறுவது அனைத்து மனித உரிமைப் போராளிகளுக்கும் அவசியமானது.

2
அமெரிக்கப் புரட்சி ஒரு முக்கிய நிகழ்வு. சந்தைப் பொருளாதாரத்தை முன்னிறுத்திய உற்பத்திமுறையினை முதன்மைப்படுத்தும் சக்திகள் இப்புரட்சியின் பின்னிருந்தன. பல்வேறு சனநாயக உரிமைகள் இப்புரட்சியின் போது வென்றெடுக்கப்பட்டபோதும் இப்புரட்சியால் அடிமைமுறை முற்றாக ஒழிக்கப்படவில்லை. 1787ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அரசியற் சாசனம் அடிமை வியாபாரத்தை தடுக்கவில்லை. ஆனால் 1789ல் பிரான்சில் நிகழ்ந்த புரட்சி உலகைக. குலுக்கும் நிகழ்வாக இருந்தது. 1793ல் அங்கு கொண்டுவரப்பட்ட அரசியல் சாசனம் அதுவரை கால வரலாறு அறியாத அதிகபட்ச சனநாயக உரிமைகளை மக்களுக்கு வழங்கியது. அனைத்து மனிதர்களும் சமமாக பிறக்கிறார்கள் என்று அறிவித்துக்கொண்ட பாரிஸ் மக்கள் அடிமை முறைக்கு தடை விதித்தனர். இதன் தாக்கம் பிரெஞ்சுக் காலனிகளில் பூகம்பத்தை உருவாக்கியது. செயின் டொமினிக் (இன்றைய கெயிட்டி) போன்ற பிரெஞ்சுக் காலனிகளில் அடிமைகளாக துன்புறுத்தப்பட்டவர்கள் கிளர்ந்தெழுந்தார்கள் (சி. எல் ஆர் ஜேம்சின் கறுப்பு ஜாக்கோபின்கள் என்ற அற்புதமான புத்தகத்தில் மேலதிக விபரங்களைப் படிக்கலாம்).

இதன் தாக்கம் அமெரிக்கா முதலான நாடுகளுக்குப் பரவாமல் இருக்க புரட்சிகர பேச்சுக்கள் பேசிய அடிமைகள் கொடிய முறையில் அடக்கப்பட்டார்கள். இருப்பினும் அமெரிக்க சிவில் யுத்தம் இந்நிலமையில் சிறு மாற்றத்தைக் கொண்டுவந்தது. யுத்தத்தை வெல்ல வேண்டுமென்றால் அடிமைகளின் ஆதரவை வெல்ல வேண்டும் என்ற நிலை அமெரிக்க அரசுக்கு உருவாகியது. இதன் தொடர்ச்சியாக 1864 ஏப்பிரல் மாதம் 13ம் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டு அடிமை முறை ஒழிக்கப்பட்டது. சனாதிபதி ஆபிரகாம் லிங்கன் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த விடுதலைப் பிரகடனம் ஆபிரிக்க அமெரிக்கர்களுக்கு நீண்டகாலமாக உயிர்ப்பை கொடுத்து வந்தது என்பது மிகையில்லை. லிங்கன் அரசியற் காரணங்களுக்காக ஒரு உபாய நடவடிக்கையாக இச்சட்டத்தை நிறைவேற்றியதாக இன்று கருதப்படுகிறது. இருப்பினும் ஆபிரிக்க மக்கள் இதை ஒரு உசாத்துணையாக கொண்டு தமது போராட்டங்களை எடுத்தது வரலாறு. மார்ட்டின் லூதர் கிங் தனது உரையில் லிங்கனைப் பற்றியும் விடுதலைப் பிரகடனம் பற்றியும் குறிப்பிடுவதும் கவனிக்கத்தக்கது.

அடிமைத்தனம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற சட்டம் உருவாக்கப்பட்டும் அது அமுலுக்கு கொண்டுவர ஒரு வருடம் எடுத்தது. அமுலுக்கு வந்தபோதும்கூட முற்றாக ஒழிக்கப்படமுடியாத நிலையிருந்தது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக ஊதிய அடிமைத்தனத்தின் வளர்ச்சி அதை அடிமைத்தனத்தை முடிவுக்கு கொண்டுவந்தது. இருப்பினும் ஆபிரிக்க அமெரிக்கர்களின் வாழ்க்கைத் தரத்தில் – அவர்களது பொருளாதார நெருக்கடியில் எந்த முன்னேற்றமும் நிகழவில்லை.

கொத்தடிமையாக இருந்தவர்கள் ஊதிய அடிமையாக மாறினர். மாற்றம் பொருளாதார ரீதியில் எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. விடுதலை பெற்ற அடிமைகளுக்கு விடுதலை விலை மதிக்க முடியாததாக இருந்தது. ஆனால் அந்த விடுதலையை வைத்து அவர்களால் தமது உழைப்பை உருப்படியான விலைக்கு விற்கமுடியவில்லை. வேலை கிடைத்தவர்கள் ஏறத்தாள அடிமைகள் போல் மிகச் சொற்ப பணத்திற்கு வேலைக்கமர்த்தப்பட்டனர். அதிக ஊதியமுள்ள வேலைகள் அவர்களுக்கு வழங்கப்படுவது தடுக்கப்பட்டது. வெள்ளையர்களுடன் அவர்கள் கலப்பதோ அல்லது வெள்ளையர்கள் பயன்படுத்தும் இடங்கள் – சேவைகள் – சலுகைகளை அவர்கள் பயன்படுத்துவதோ தடை செய்யப்பட்டது. இத்தகைய பிரிவு சமூகத்தில் கடைப்பிடிக்கப்படுவதற்கு ஏற்ப சட்டங்களும் இயற்றப்பட்டன. ‘கறுப்பர்களுக்கு அனுமதியில்லை”, ‘நீக்கிரோக்களுக்கு இடமில்லை” என்று அறிவிப்புப் பலகைகள் மதுபானக் கடைகள் மற்றும் தங்குமிடங்களில் மாட்டப்பட்டிருப்பது சகஜமாக இருந்த காலமது.
இக்காலத்தில் வெள்ளை ஊதிய உழைப்பாளிகளும் கடும் துன்பத்துக்குள்ளாகிக்கொண்டிருந்துது குறிப்பிடத்தக்கது. ஜோர்ஜ் ஓர்வலின் விலங்குப் பண்ணை நாவல் பகிரங்கத்துக்கு கொண்டுவந்த வேலை நிலவரம் பலருக்கு ஞாபகத்துக்கு வரலாம். ஆனால் இந்தக் கொடிய பொருளாதார – வேலை நிலமையோடு சேர்த்து ஆபிரிக்கர்கள் துவேசத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. குகுளஸ்கான் முதலான கொடிய துவேச அமைப்புகள் ஆபிரிக்க அமெரிக்கர்களை வேட்டையாடுவதையும் அவர்களைச் சித்திரவதை செய்து கொலை செய்வதையும் தொழிலாகக் கொண்டு இயங்கி வந்தன. இத்தகைய நிலமையில் தான் உலகைக் குலுக்கிய இன்னுமொரு சம்பவம் நிகழ்ந்தது.

3
1917ல் ரஷ்யாவில் நிகழ்ந்த தொழிலாளர்களின் புரட்சி உலக நடைமுறைகளைப் புரட்டிப் போட்டது. ஊதிய அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை சாத்தியம் என்பதை இப்புரட்சி அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக உலகெங்கும் தொழிலாளர்களின் போராட்டங்கள் வலுப்படத் தொடங்கியது. இதைத் தடுத்து நிறுத்த அமெரிக்க அரசும் அதிகார வர்க்கமும் பலமான பிரச்சாரத்தை கட்டவிழ்க்க வேண்டி ஏற்பட்டது. 1917ல் இருந்து 1920ம் ஆண்டு வரையான காலகட்டம் ‘சிவப்புப் பயங்கர” காலகட்டம் என ‘அதிகாரபூர்வ” வரலாற்றாசிரியர்களால் வர்ணிக்கப்படுகிறது. இக்காலகட்டத்தில் 1919ம் ஆண்டு நிகழ்வுகள் முக்கியமானவை.

அக்காலத்தில் மே தின விழாக்கள் -ஊர்வலங்கள் அமெரிக்காவில் புகழ்பெற்ற நிகழ்வுகள். ஆனால் 1919 மே தின ஊர்வலம் பொலிசாரால் கடுமையாகத் தாக்கப்பட்டது. போஸ்டன், நியு யோர்க், கிளீவ்லன்ட் ஆகிய இடங்களில் ஊர்வலத்தில் ஈடுபட்டவர்கள் தாக்கப்பட்டு ஊர்வலம் கலைக்கப்பட்டது. இதில் ஓகையோவில் நடந்த பொலிஸ் வன்முறை மிக மோசமானது. ஓகாயோவில் மே தின ஊர்வலம் வெறும் ஊர்வலமாக மட்டும் இருக்கவில்லை. அக்காலத்தில் புகழ்பெற்ற சோசலிஸ்ட்டான ஈயுஜின் வி. டெப்ஸ் கைது செய்யப்பட்டு சிறையிடப்பட்டதற்கு எதிராகவும் அங்கு மேயர் பதவிக்கு போட்டியிட்ட இன்னுமொரு சோசலிஸ்டான சார்லஸ் ரத்தன்பேர்க்குக்கு ஆதரவாகவும் ஊர்வலத்தினர் திரண்டது அரசுக்கு கடும் கிலியை உருவாக்கியிருந்தது. ஊர்வலம் நொருக்கித் தள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து வந்த கோடைக்காலம் ‘சிகப்புக் கோடைக்காலம்” என அழைக்கப்படுகிறது.

தொடர்ச்சியாக நிகழ்ந்த நிகழ்வுகளில் சிக்காகோவில் நிகழ்ந்த கலவரம் கவனத்திற் கொள்ளப்படவேண்டியது. 13 நாட்களுக்கும் மேல் நிகழ.ந்த இக்கலவரத்தில் ஆபிரிக்க அமெரிக்கர்கள் கொடுமையாகத் தாக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வீடிழந்தன. பலர் கொல்லப்பட்டனர். இத்தருணத்தில் நியு யோர்க் டைம்சுக்கு பேட்டியளித்த பிடரல் அதிகாரி கொடிய பொய்களைப் பரப்பினார். ‘இந்தக் கலவரம் போல்சுவிக்குகளால் – சோசலிச புரட்சிக்காரர்களால் – தூண்டிவிடப்பட்டது என அடித்துப் பேசினார் அவர். அதற்கு ஆதாரமாகத் தாம் கைப்பற்றிய சிறு புத்தகத்தையும் அவர் டைம்சுக்கு கையளித்தார். கறுப்பர்கள் இடதுசாரிகளுடன் இணையவேண்டும் என வாதிட்ட அப்புத்தகம் சோவியத் அரசைப் புகழ்ந்தும் ஈயுஜின் டெப்பின் கைதைக் கண்டித்திருந்ததையும் அவர் சுட்டிக் காட்டினார். கறுப்பினத்தவர்களின் புலம்பல்களுடன் இருக்கும் இப்புத்தகம் கம்யூனிஸ்டுகளின் தூண்டும் கருவியாக பாவிக்கப்பட்டது என அவர் பிரச்சாரித்தார். ‘சிவப்புகள் நீக்ரோக்களை கிளர்ச்சிக்குத் தூண்டுகிறார்கள்” எனத் தலையங்கம் எழுதியது டைம்ஸ். இப்புத்தகம் கொடூரமானதும் கம்யூனிஸ்டுகளின் பணத்தால் உருவானதும் ஆகும் என அவர்கள் அறிவித்துக்கொண்டனர்.
இந்தப் பொய்கள் எல்லாத் தொழிலாளர் மத்தியிலும் எடுபடவில்லை. பல்வேறு வேலையிடங்களில் வேலை நிறுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த வேலை நிறுத்தங்களை முறியடிக்க சில முதலாளிகள் ஆபிரிக்க அமெரிக்கர்களை பாவிக்கத் தொடங்கியதும் நிகழத் தொடங்கியது. 98வீத தொழிலாளர்கள் வாக்களித்துக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்த இரும்புத் தொழிற்சாலைகளில் அவர்களின் வேலைநிறுத்தத்தை முறியடிக்க 40 000க்கும் மேற்பட்ட ஆபிரிக்க அமெரிக்கர்கள் வேலைக்கெடுக்கப்பட்டார்கள். குறைந்த சம்பளத்தில் வேலைக்கெடுக்கப்பட்ட இவர்கள் வேலை நிறுத்தத்தை முறியடிக்க பாவிக்கப்பட்டனர். அது மட்டுமின்றி இவர்கள் கடும் வேலை செய்பவர்களாயும் இருந்தமையால் மேலும் லாபம் அதிகரிக்கிறது என்ற ‘புதிய புத்திக்கூர்மை” ஏற்பட்டது முதலாளிகளுக்கு. இதனாலும் அத்தருணம் ஏற்பட்ட பொருளாதார முன்னேற்றத்தாலும் முன்பு காணாத அளவு ஊதியத்தில் வேலை செய்யும் வாய்ப்பு பல ஆபிரிக்க தொழிலாளர்களுக்கு கிடைத்தது. இது அவர்களின் போராடும் சக்தியை வளர்த்தெடுக்க உதவியது.

முதலாம் உலக யுத்தம் பின்பு பெரும் பொருளாதார சரிவு கால கட்டத்தில் அமெரிக்க கம்யூனிச கட்சி வேகமாக வளர்ந்ததையும் கவனிக்க வேண்டும். இது அரசுக்கு பெரும் அச்சத்தை உண்டுபண்ணியது. ஆனால் இரண்டாம் உலக யுத்தத்தில் பாசிசத்துக்கு எதிர் என்ற போர்வையில் தற்காலிகமாக கம்யூனிச கட்சிகளின் ஆதரவைப் பெறும் வாய்பை ஏற்படுத்திக்கொண்டன முதலாளித்துவ அரசுகள். ஒரு நாட்டுக்குள் சோசலிசம் என அறிவித்து புரட்சியை ரஷ்ய எல்லைகளுக்குள் முடக்கிய மூன்றாம் அகிலத்தின் வழிகாட்டலில் கம்யூனிச கட்சிகள் தமது போராட்ட திட்டமிடல்களை முடக்கின. இருப்பினும் இரண்டாவது உலகயுத்தம் முடிவுக்கு வந்த கையுடன் அமெரிக்க அரசு சோசலிஸ்டுகளை மீண்டும் வேட்டையாட ஆரம்பித்தது. இதைத் தொடர்ந்து நிகழ்ந்த பனி யுத்தத்தின் போது அமெரிக்காவின் இடதுசாரிய வரலாறு திட்டவட்டமாக துடைத்தெறியப்பட்டதும் – இடதுசாரிகள் கேவலமாக வேட்டையாடப்பட்டதும் அறிவோம். இதை முன்னின்று நடத்திய செனட்டர் மக்காத்தியின் பெயரால் ‘மக்காத்தி காலம்” என இக்காலம் அழைக்கப்படுகிறது. இது மட்டுமின்றி பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ரூஸ்வெல்ட் அறிமுகப்படுத்திய புதிய பொருளாதார நடைமுறைகளையும் முடிவுக்கு கொண்டுவரவேண்டிய தேவை முதலாளிகளுக்கு ஏற்பட்டது. இக்காலத்தில்தான் நவீன நியோ லிபரலிச கருத்தாங்கள் உருவாகத் தொடங்கியது. ஒரு பக்கம் இடது சாரிகளை வேட்டையாடிக்கொண்டு மறுபக்கம் கொடிய சந்தைப் பொருளாதார முறையை அமுலுக்கு கொண்டுவந்தன அதிகார சக்திகள்.

இந்த மாற்றங்களின் போதும் அமெரிக்க ஆபிரிக்கர்களின் நிலமையில் பெரு மாற்றங்கள் எதுவும் நிகழ்ந்திருக்கவில்லை. ஆனால் அவர்களில் பெரும்பான்மையானவர்கள் இடது சாரிகளுடன் இணையத் தொடங்கினர். ஏராளமான தொழிலாளர்கள் தொழிற் சங்கங்களில் இணையத் தொடங்கினர். அவர்கள் தமக்கெனக் கறுப்பின தொழிலாளர் சங்கம் என்ற பெயரில் சங்கங்களையும் அமைத்துக்கொள்ளத் தொடங்கினர். 1925ல் பிலிப் ரான்டோல்ப் உருவாக்கிய பி.எஸ்.சி.பி என்ற தொழிற்சங்கம் முக்கியமானது.

இந்த சங்கங்கள் உட்பட பல சங்கங்களை இணைத்து தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் பிடரேசன்கள் அமைக்கப்பட்டது. 1930களில் இருந்து குறிப்பிடத்தக்க அரசியற் செல்வாக்குப் பெற்றவையாக இருந்தன இச்சங்கங்கள். இதில் தொழிற்சாலை ஊழியர்களின் காங்கிரஸ் என அழைக்கப்பட்ட அமைப்பு முக்கியமானது. இரும்புத் தொழிற்சாலையில் வேலை செய்த 85 000க்கும் மேற்பட்ட ஆபிரிக்க அமெரிக்க தொழிலாளர்களை இவ்வமைப்பு உள்வாங்கியிருந்தது. தோலின் நிறத்தை வைத்து பழகும் நடைமுறையை மறுத்த பழக்கவழக்கங்கள் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டது. சகோதரர் சகோதரி என்று சக தொழிலாளர்கள் நிற அடிப்படையின்றி விழிக்கப்பட்டனர். முன்பு கறுப்பர்களை வைத்து வேலை நிறுத்தத்தை உடைப்போம் என்று கனவு கண்ட முதலாளிகளின் கனவில் மண்ணள்ளிப்போட்டது தொழிலாளர் காங்கிரஸ். உதாரணமாக போர்ட் தொழிற்சாலையில் நிகழ்ந்த புகழ்பெற்ற சம்பவத்தைக் குறிப்பிடலாம். அங்கு 1941ல் நடந்த வேலை நிறுத்தத்தில் வெள்ளைத் தொழிலாளர்களுடன் கறுப்பு தொழிலாளர்களும் இணைந்து கொண்டனர்.

அவர்களின் ஒன்றிணைந்த கடும் போராட்டம் பெரும் வெற்றியை ஈட்டிக்கொடுத்ததானது தொழிலாளர்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க அதிர்வை ஏற்படுத்தியது. நினைத்தபடி கறுப்பர்களை வேலையை விட்டு தூக்குவது மற்றும் நினைத்த சம்பளத்துக்கு வேலைக்கெடுப்பது எனற நிலவரம் கேள்விக்குள்ளானது. வேலையில் இருந்த ஸ்தரத் தன்மை ஆபிரிக்க அமெரிக்கர்களின் போராடும் நம்பிக்கையை வளர்த்தது. அவர்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க வசதியான தொழிலாளர் வர்க்கத்தையும் இது உருவாக்கியது.

இதன் தொடர்ச்சியாகத்தான் சம உரிமை கோரிக்கை பலப்படத் தொடங்கியது. ஆரம்ப காலங்களில் இந்த உரிமைக் கோரிக்கைகளுக்குப் பின்னால் இருந்தவர்கள் தொழிற்சங்க வாதிகளாக இருந்தனர். முன்பு குறிப்பிட்ட பி.எஸ்.சி.பி யினை உருவாக்கிய ரான்டோல்ப் தான் உரிமைக் கோரிக்கையை வைத்து வாசிங்டனை நோக்கி பேரணி நிகழ்த்த வேண்டும் என்ற கோரிக்கையை 1941ல் முன்வைத்தார். மக்கள் பேரணி என்ற அபாயத்துக்குப் பயந்து சில சலுகைகளை வழங்கியது அரசு. இக்கால கட்டங்களில் வெள்ளை மேலாதிக்கத்தை நிறுவுவதை நோக்காக கொண்டு இயங்கி வந்த துவேச அமைப்புகள் பல தொழிலாளர் அமைப்புக்களைக் குறி வைத்துத் தாக்கின. இதனால் பல வெள்ளைத் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டனர். இது மட்டுமின்றி இரண்டாம் உலக யுத்தத்தின் பின் பாசிசம் ஏற்படுத்திய கொடும் கொலைகளும் கொடூரங்களும் உலகெங்கும் பெரும் அருவருப்பையும் அவமானத்தையும் ஏற்படுத்தியதை நாம் கவனிக்கவேண்டும்.

வெளிப்படையான பாசிச கருத்துள்ள அமைப்புக்களை முதலாளித்துவ அரசுகள் ஆதரித்த நிலையை இது மாற்றியது. துவேசிகளை வைத்து தொழிலாளர் அமைப்புகளை உடைத்தலோ அல்லது வெளிப்படையாக மனிதாபிமானமற்ற முறையில் ஆபிரிக்க அமெரிக்கர்களை தாக்குவதோ சமூகத்தின் கோபத்தைக் கிளப்பும் என்ற நிலை உருவாகிக் கொண்டிருந்தது. இதனால் வலதுசாரிய அரசியல் வாதிகள் பலர் கூட கறுப்பர்களின் உரிமை பற்றிப் பேசும் நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மக்காத்தியின் கொடிய வழிமுறைகளும் வெளிச்சத்துக்கு வரத்தொடங்கியது. விடுதலை பிரகடனத்தை ஏற்படுத்திய லிங்கனின் கட்சியான ரிப்பப்ளிக்கன் கட்சி அனைத்து தொழிலாளர்களுக்கும் எதிரான கட்சி என்ற அறிதல் வளரத் தொடங்கியதைத் தொடர்ந்து டெமொக்கிராட் கட்சி ஆபிரிக்க அமெரிக்கர்கள் மத்தியில் ஆதரவு பெறத் தொடங்கியது. இந்தப் பின்னணியிற்தான் 1955களில் இருந்து சிவில் உரிமை இயக்கம் வளரத் தொடங்கியது.

இந்த சிவில் உரிமை இயக்கத்தில் ஆரம்பத்தில் இருந்தே இரண்டுவித பண்புகள் இருந்ததை அவதானிக்கலாம். தொழிலாளர்கள் – அவர்களின் அமைப்புக்கள் சார்ந்து நேரடி மோதலைத் தூண்டியவர்களின் ஆதிக்கம் ஓரு பக்கமிருந்தது. மறுபக்கம் மிதவாதப் போக்குள்ள அரசுடன் சமரசம்செய்து போகக்கூடியவர்களின் செல்வாக்கும் இருந்தது. இந்நிலையில்தான் டெமொக்கிராட் கட்சி மிதவாதிகளின் பக்கத்தைப் பலப்படுத்தி மற்றயவர்களை புறந்தள்ளும் நிலமை ஏற்பட்டது. மார்ட்டின் லூதர் கிங் ஒரு கிறிஸ்தவப் பாதிரியார் என்பதாலும் அவர் அரசை நேரடி எதிர்ப்புச் செய்யாத நாட்டுப்பற்றாளர் என்பதாலும் வெள்ளையர் பத்திரிகைகளும் அதிகாரமும் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்ததை அவதானிக்க வேண்டும். சிவில் உரிமை இயக்கத்தினருக்குள் வேலை செய்துகொண்டிருந்த தொழிற்சங்க அல்லது இடதுசாரிய செயற்பாட்டாளர்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருந்தது மட்டுமின்றி பல்வேறு நடவடிக்கைகளை அவர்கள்தான் முன்னெடுத்தும் வந்தனர். ஆனால் வெள்ளைப் பத்திரிகைகள் அவர்களைக் கவனமாகப் புறக்கணித்து செய்தி வெளியிடவேண்டிய தருணங்களில் கிங் போன்றவர்களுக்கு முக்கியத்துவத்தைக் கொடுத்ததையும் கவனிக்க வேண்டும். இத்தகைய ‘சமூக இயந்திரவியல்” நடவடிக்கைகள் பற்றி –குறிப்பாக எவ்வாறு சிவில் உரிமைப் போராட்டம் வடிவமைக்கப்பட்டது என்பது பற்றி தனி ஆய்வு செய்ய வேண்டும்.

மார்ட்டின் லூதர் கிங் 1955-56களில் பஸ் புறக்கணிப்பு போராட்டத்தில் மூலம் புகழ்பெற்றார். ரோசா பார்க் என்ற பெண் பஸ்சில் தனது இருக்கையை வெள்ளையருக்கு வழங்க மறுத்த புகழ்பெற்ற சம்பவத்தை தொடர்ந்து பஸ் புறக்கணிப்பு போராட்டம் பரவியது. பி.எஸ்.சி.பி சங்க உறப்பினரான ஈ.டி. நிக்சன் தான் கிங்கை அலபாமாவுக்கு அழைத்துவந்து இந்த புறக்கணிப்பு போராட்டத்தில் இணைத்துவிட்டார். இந்த போராட்டத்தை தெதாடர்ந்து வாசிங்டனை நோக்கி உரிமைப் பேரணி நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுப்படத் தொடங்கியது. இதை நிறைவேற்ற பல தொழிற்சங்கங்கள் உட்பட முக்கியமான சிவில் உரிமை அமைப்புக்கள் எல்லாம் ஒன்றுபட்டன.

4
பேரணி நடத்துவது பற்றி ஆரம்பத்தில் இருந்தே பல பிரச்சினைகளை சந்திக்கவேண்டியிருந்தது. இதைத் தடுக்க போலிசாரும் வலதுசாரிய அதிகாரிகளும் படாத பாடு பட்டுக்கொண்டிருக்க இதனால் சாதிக்கக்கூடியது என்ன என்ற கேள்வியும் பலருக்கும் பலமாக இருந்தது. அத்தருணத்தில் இஸ்லாமிய போராளியாக இருந்த மால்கம் எக்ஸ் இதை வெறும் கேலிக்கூத்து என்றழைத்தார். இருப்பினும் தொழிற்சங்க வாதிகளின் தலையீட்டால் பேரணிக்கு பலம் சேர்க்கும் நம்பிக்கை ஏற்பட்டது. ‘கறுப்பர்களின் விடுதலை” கோரி இப்பேரணியை நடத்தவேண்டும் எனவும் இந்த விடுதலை நிற அடிப்படையிலான விடுதலை மட்டுமின்றி பொருளாதார விடுதலையாகவும் இருக்கவேண்டும் எனவும் ஆரம்பத்தில் கோரிக்கைகள் வைக்கப்பட்டது. ஆபிரிக்க அமெரிக்கர்களின் ஊதியம் வெள்ளைத் தொழிலாளர்களின் ஊதியத்திலும் குறிப்பிடத்தக்கள அளவு குறைவாக இருந்தது. உதாரணமாக மெம்பிஸ் ரெனசியில் ஆபிரிக்க அமெரிக்கர்களுக்கான ஊதியம் அதிகுறைந்த அளவில் வளங்கப்பட்டதால் 40வீதத்துக்கும் அதிகமானோர் நலன்புரி உதவி பெற வேண்டியவர்களாக இருந்தர்கள். இத்தகைய மோசமான பொருளாதார நிலமையில் இருந்தமையினாலும் பெரும்பான்மையானவர்கள் வேலையற்று இருந்தமையினாலும் சிவில் உரிமை போராட்டத்தின் கோரிக்கைகள் பெரும்பாலானவை பொருளாதார விடிவை நோக்கிய கோரிக்கைகளாக இருந்தன. அதன் தொடர்ச்சியாக பேரணிக்கான கோரிக்கை ஆரம்பத்தில் பின்வறுமாறு வகுக்கப்பட்டது.
அரச பாடசாலைகளில் பிரிவு முறை ஒழிக்கப்படவேண்டும். நிற வேறுபாட்டை வேலையிடங்களில் தடைசெய்வது உட்பட பல நிற வேறுபாட்டை மறுக்கும் உருப்படியான சிவில் உரிமைச் சட்டம் கொண்டுவரப்படவேண்டும். பொலிஸ் அராஜகத்தில் இருந்து சிவில் உரிமைக்கு போராடும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படவேண்டும். எல்லாத் தொழிலாளர்களுக்கும் மணிக்கு இரண்டு டாலர்கள் குறைந்தளவு ஊதியம் வழங்கப்படவேண்டும்.

இதுபோன்ற கோரிக்கைகளை வைத்து ‘வேலையும் உரிமையும்” போன்ற கோசங்களுடன் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது. பேரணியின் பழைய படங்கள் ஒளிஒலிப் பேழைகளைப் பார்ப்பவர்கள் இத்தகைய கோசங்களை; மக்கள் தாங்கி நிற்பதைப் பார்க்க முடியும். இதற்கிடையில் பேரணியை நிறுத்துவதற்கு அரசு கடும் முயற்சியை செய்தது. கறுப்பர்கள் ஒன்றுகூடினால் கலவரம்தான் வரும் என பல வலதுசாரிய அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் மோசமான வாந்திகளைப் பரப்பி பீதி கிளப்பினர். அத்தருணம் எ.பி.ஜ.யின் கொடிய தலைவராக இருந்த எட்கார் கூவர் பேரணியை நிறுத்த கடும் பாடு பட்டார். இப்பேரணிக்குப் பின்னால் கம்யூனிஸ்டுகள் இருக்கிறார்கள் அதற்கு தம்மிடம் ஆதாரங்கள் இருக்கின்றன என வேவு செய்யும் நிறுவனங்கள் உட்பட பல அரச அமைப்புக்கள் அறிவித்தன. கறுப்பர்களை பெருங்கூட்டமாக வாசிங்டன் வராவிட்டால் அவர்கள் வெள்ளைமாளிகைக்குள் புகுந்து கலகம் செய்வார்கள் – இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து கம்யூனிஸ்டுகள் ஆட்சியைப் பிடிக்க சதித்திட்டம் போடுகிறார்கள் என்ற அச்சம் அவர்களுக்கிருந்தது. கிங் குடன் நெருக்கத்தை ஏற்படுத்தியிருந்த கென்னடி அரசு அவருக்கு பலமான அழுத்தத்தை கொடுத்தது. பேரணிக்கு தலைமை தாங்கியவர்கள் சிலரைக் கம்யூனிச பூச்சாண்டி காட்டி அவர்கள் பேரனியை ஒழுங்கமைப்பதில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டனர். கிங் தனது பேச்சில் கென்னடியை விமர்சிப்பது தடுக்கப்பட்டது. தவிர பொருளாதாரம் சார்ந்த கோரிக்கைகளை பேரணி முன்வைப்பது தடுக்கப்பட்டது. குறிப்பாக குறைந்தபட்ச ஊதிய கோரிக்கையை முன்வைக்க வேண்டாம் என கடும் அழுத்தம் வழங்கப்பட்டது. கிங் உட்பட பலரும் பேரணி நடத்துவதில் மிக உறுதியாக இருந்தனர். வேறு வழியின்றி வெறும் சமூக உரிமைக் கோரிக்கையை மட்டும் முதன்மைப்படுத்தச் சொல்லி பேரனி நடக்க அனுமதி வழங்கப்பட்டது.
பேரணி நிகழவிருந்த தருணத்தில் பல்வேறு உரிமைக் கோரிக்கை அமைப்புக்களும் இதில் இணைந்து கொள்ள இருப்பதாக அறிவித்தன. யூதர்கள் உரிமை போராட்ட அமைப்புக்களும் இணைந்தன. இப்பேரனி அமெரிக்க வரலாற்றில் முக்கிய கட்டமாக கருதப்படும் அளவுக்கு மாற்றும் அளவில் நிறவேறுபாடு இன்றி மக்கள் திரண்டனர். இந்த உணர்ச்சிவசப்பட்ட மக்கள் கூட்டத்தின் மத்தியிற்தான் உலகப் புகழ்பெற்ற ‘எனக்கொரு கனவிருக்கு” என்ற பேச்சை வழங்கினார் மார்ட்டின் லூதர் கிங். இதைத் தொடர்ந்து சிவில் உரிமைச் சட்டம் 1964ம் ஆண்டு யூலை 2ம் திகதி உருவாக்கப்பட்டது. இதன்மூலம் வேலைத் தளங்களில் நிறவாரி ஏற்றத்தாழ.வு செய்யப்படுவது சட்டத்துக்கு புறம்பாக்கப்பட்டது.

இருப்பினும் இதன்பிறகும் ஆபிரிக்க அமெரிக்கர்களின் பொருளாதார நிலைப்பாட்டில் மாற்றம்கொண்டு வராதது கிங் கை இடதுசாரிய கொள்கைகள் நோக்கி நகர்த்தியது. பொருளாதார மாற்றம் இன்றி எந்த வெற்றியாலும் பயன் கிடைக்கப்போவதில்லை என்பதை உணர்ந்து கொண்ட கிங் ‘பொருளாதார சமஉரிமை” போராட்டத்தை மேலும் முன்னிலைப்படுத்தத் தொடங்கினார். உண்மையான புரட்சிகர மாற்றம் என்பது வறுமையை ஒழிக்காமல் நிகழ முடியாதென்றார் அவர். ஆசியா, ஆபிரிக்கா, தென்னமெரிக்கா எங்கும் சுரண்டிக்கொண்டிருக்கும் மேற்குலக முதலாளிகள் நன்மையா செய்கிறார்கள் ? எனக்கேட்கத் தொடங்கினார் கிங். 1964ல் நோபல் பரிசும் கொடுத்து அதிகாரத்தின் பக்கம் கிங்கை இழுத்துவிட்டோம் என்ற அதிகார சக்திகள் கனவில் மண்ணள்ளிப் போட்டது கிங்கின் மாற்றம். அவர் தனது கனவை விடாப்பிடியாக பிடித்துக்கொண்டிருந்தார். இரகசிய ஏஜென்சிகள் கிங்கை பின்தொடரத் தொடங்கின. எப்.பி.ஜ கிங்கை கண்காணிக்கத் தொடங்கியது. கம்யூனிச ஊடுவருலுக்குட்பட்டிருப்பதால் கிங் ஆபத்தானவர் என்ற முடிவுக்கு வந்தது எப்.பி.ஜ. கிறித்தவப் பாதிரியாக இருந்தவர் தம்மை ஏமாற்றிவிட்டார் என்ற ஏக்கத்தைப் பிரதிபலித்தனர் பல வலதுசாரிய அரசியல்வாதிகள். ஏமாற்றுவேலை செய்யும் பாதிரி அவர் எனத் திட்டினார் சனாதிபதி லின்டன் ஜோன்சன். கிங் பல பெண.களோடு தொடர்புடயவர் என பல்வேறு வாந்திகள் பரப்பப்பட்டது.
இத்தருணம் அமெரிக்க அரசு வியட்நாமில் நிகழ்த்திக்கொண்டிருந்த யுத்தத்துக்கு எதிராக பெரும் யுத்த எதிர்ப்பு இயக்கம் வளர ஆரம்பித்தது. கிங்கும் தயக்கமின்றி அந்த யுத்த எதிர்ப்பு இயக்கத்தில் இணைந்து கொண்டார். யுத்த எதிர்ப்பு போராட்டமும் பொருளாதார சம உரிமைப் போராட்டமும் ஒன்றிணையவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். பின்பு 1968ல் ‘வறிய மக்களின் இயக்கத்தை” அவர் ஒழுங்கமைத்தார். வறிய அமெரிக்கர்களின் சார்பில் பொருளாதார உரிமைச் சட்டம் கொண்டுவரப்படவேண்டும் என்ற கோரிக்கையுடன் இன்னுமொரு பேரணியை நடத்தவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார் அவர்.

அதற்கவருக்கு பலத்த வரவேற்புக் கிடைத்தது. 1968 பெப்பிரவரி மாதம் மெம்பிஸ் டெனன்சியில் துப்பரவுசெய்யும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடத் தொடங்கியபோது கிங் தனது ஆதரவை வழங்கினார். அந்த வேலை நிறுத்தத்திற்கு நேரடியாகச் சென்ற தனது ஆதரவை வழங்கச் சென்றபோது 1968ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தகதி கிங் சுட்டுக்கொல்லப்பட்டார். இதே தருணம் அவர் சுடப்பட்ட விடுதிக்கு வெளியே அவரைக் கண்காணிக்க என சில எப்.பி.ஜ ஏஜென்டுகள் நின்றுகொண்டிருந்தனர். அவரது சாவு அரசால் நிகழ்ந்தது என்பதை இன்றுவரை பலரும் நம்பிவருகின்றனர். எ.பி.ஜ க்கு பொறுப்பாக இருந்து கொடூர எட்கார் கூவர் அளந்த பொய்களை இன்றுவரை யாரும் நம்பத் தயாரில்லை. கிங்கின் சாவு பற்றிய விசாரனை ஆவணங்கள் 1927ம் ஆண்டுவரை இரகசியமாக வைத்திருக்கப்படவேண்டும் என சட்டத்தால் காக்கப்படுகிறது.

கனவு நனவாகாமல் அவர் சாவைத் தழுவிக்கொண்டார். அவர் கனவு இன்றும் பாதியில் நிற்கிறது. சிவில் உரிமைப் போராட்டம் சார்ந்து அதிகாரத்தின் மேல் சவால் எழுந்துவிடாதவண்ணம் இன்று குறிப்பிட்ட தொகை ஆபிரிக்க அமெரிக்கர்களை ஆழும் வர்க்கம் தன்பக்கம் உள்வாங்கியுள்ளது. சிவில் உரிமைப் போராட்டத்தின் முதுகில் நின்று சுகபோகம் அனுபவிக்கும் ஆபிரிக்க அமெரிக்க முதலாளிவர்க்கம் இன்று போராட்டங்களை முடக்கி வைத்திருக்கிறது. பெரும்பான்மை மக்கள் இன்றும் கடும் வறுமைக்குள் வாடி வதங்கி வருகிறார்கள். 2005ல் நிகழ்ந்த கற்றினா சூறாவழி அழிவு ஆபிரிக்க அமெரிக்கர்களின் வறுமையின் கொடுமையை உலகுக்கு படம்பிடித்துக் காட்டியதை அறிவோம். ஆபிரிக்க அமெரிக்கர்கள் பெரும்பான்மையாக வாழும் நியு ஓர்லியோனில் அதிகளவு இறப்பு நிகழ்ந்ததும் அதற்கு அங்கு நிலவிய கொடிய வறுமையும் அறிவோம்.

இன்று 26வீதத்துக்கும் அதிகமான ஆபிரிக்க அமெரிக்கர்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கிறார்கள். ஆபிரிக்க அமெரிக்க மத்தியதர குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகளில் 46வீதத்தினர் கடும் வறுமைக்குள் புகுத்தப்படுகிறார்கள். 74வீத சிறுவர்கள் இன்றும் தனியாக பிரித்துவைக்கப்பட்ட கறுப்பர்களுக்கான பாடசாலைக்கே செல்கிறார்கள். ஒவ்வவொரு 28மணி நேரமும் ஒரு ஆபிரிக்க அமெரிக்கர் பொலிசாரினால் கொல்லப்படுகிறார். இவ்வாறு இன்றைய நிலவரம் சார் புள்ளி விபரங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
50 ஆண்டுகள் கழிந்துவிட்டன. இன்னும் விடுதலை இல்லை. கனவுக்கான யுத்தம் தொடர்கிறது.

thanks -Uyirmai -Nov 2013

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *