பிள்ளையானிஸ்டுகளின் சிறுபிள்ளை வாதங்கள்!
சுகன் பிள்ளையானைப் போற்றிப் பாடிய போது பிள்ளையான் கவனம் பிசகாது ஒழுங்குமுறையாக மக்களிடம் வரி வசூலித்துக் கொண்டிருந்தார். சுகனின் நண்பர் எம்.ஆர்.ஸ்டாலின் பிள்ளையானின் ஆலோசகராக இருந்தார். பிள்ளையானின் தொண்டரடிப்பொடிகள் சிறுமிகளைக் கடத்தி பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிக் கொன்று கொண்டிருந்தார்கள்.
இதே சுகனும் சோபாசக்தியும் புலிகளின் வரிவசூலிப்புக்காகவும் சிறுவர் ராணுவத்திற்காகவும் ஓயாது குரல் கொடுத்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்குக் குரல் வற்றிய போதெல்லாம் அ.மார்க்ஸ் ஓடியோடி தண்ணீர் எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார். இவர்களின் சார்பையும் மக்கள் விரோத நிலைப்பாட்டையும் இதில் இருந்து கூட விளங்கிக் கொள்ளாதவர்கள் இவர்களைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.
மகிந்த ராஜபக்சேவுக்கு சுகன் நன்றி தெரிவித்து இந்த உலகத்தில் காணப்படும் அனைத்து வலைப்பூக்களிலும் பின்னூட்டம் விட்ட போது இலங்கை அரசாங்கம் தலித் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து கொண்டிருந்தது. எண்ணுக்கணக்கற்ற தலித் நண்பர்கள் இன்றும் வெலிக்கடை மற்றும் மகசின் சிறைகளில் வாடினார்கள். புலிகளையும் தமிழ்மக்களையும் அழிப்பதற்காக பொருளாதாரத்தின் பிதங்கிய இளைஞர்களைப் பலிகொடுத்த அரசாங்கத்திற்கு சார்பாக சுகன் பின்னூட்டம் வெளியிட்ட போதும் சத்தியக்கடதாசியின் தந்தை பெரியார் சத்தியக்கடதாசியைப் பார்த்து த்தூ என்று துப்பிக் கொண்டிருந்தார். 15,000 இற்கும் மேற்பட்ட தலித் மக்களை அரசாங்கம் கொன்று குவித்ததை நினைத்து மகிந்த மாத்தையா என்று குழைந்து குழைந்து சுகன் பின்னூட்டம் போட்ட போது சத்தியக்கடதாசியின் பின்னே அதிகாரத்தை நோக்கி உண்மைகளைப் பேசுவோம் என்று சிவப்பு வாசகத்தில் எழுதி வைத்திருந்தார்கள்.
இந்த வாசகத்தை எல்லாம் தங்களது கக்குஸ் சுவர்களில் எழுதி வைக்க வேண்டியது தானே…
பிள்ளையானிஸ்டுகளின் சிறுபிள்ளை வாதங்கள் என்ற கட்டுரைய சேனன் தேசம்நெட் இல் எழுதியது எவ்வளவு பெரிய உண்மை. கீழ்வரும் தொடுப்பில் அக்கட்டுரையையும் அதைத் தொடர்ந்த உரையாடல்களையும் படிக்க முடியும்.
பிள்ளையானிஸ்டுகளின் சிறுபிள்ளை வாதங்கள்! : சேனன்
இலங்கை இன்று ஒரு ஆபத்தான அரசியற் கட்டத்தில் நிற்கிறது. இனத்துவேச அரசின் யுத்த முன்னெடுப்புகளும் – அதற்கு ஆதரவாக இயங்கும் குழுக்களின் அரசுசார் அரசியல் வித்தைகள் ஜனநாயகம் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுவதும் – புலிகள் மக்களை பணயம் வைத்து தமது குறுகிய யுத்தக் காய்ச்சலை வெளிப்படுத்த தயாராகுவதுமாக – ‘அதிகார சக்திகள்’ கடும் முரண்;களில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆதன் பலனாக ஆயிரக்கணக்கான மக்கள் இலங்கை வரலாறு காணாத வறுமையையும் வன்முறையையும் எதிர்நோக்கி உள்ளார்கள். குறிப்பாக வன்னி மக்களின் எதிர்காலம் நினைத்துப் பார்க்க நடுக்கமேற்படும் கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
அதே தருனம் இலங்கை அரசியலில் புலம்பெயர் தமிழ் மக்களின் பங்கு என்றுமில்லாதபடி மிக முக்கியமானதாக மாறிக் கொண்டிருக்கிறது. இலங்கையில் உள்ள தமிழ் தலைமைகள் தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு அப்பாலான அரசியலை மட்டுமே முன்வைக்கிறார்கள். தமிழீழக் குழு – அரசுசார் அதிகார குழு என்று இரண்டு கன்னைகளாக இத்தலைமைகள் தங்களின் இருப்புகளை பேணும் பணியில் தீவிரமாக செயற்பட்டு வருகிறர்கள். மக்களின் இருப்புப் பற்றி இவர்களுக்கு எந்த அக்கறையும் இருப்பதாக தெரியவில்லை. அதேபோல் புலம்பெயர் ‘முக்கியஸ்தர்’களும் தமது இருப்புக்கள் சார்ந்த அரசியலையே முன்வைக்கிறார்கள். இதில் பலர் ஆயுதப் போராட்டம் தொடங்கிய காலத்திலிருந்து ‘அரசியலில் இருப்பவர்கள்’. ஆயுதப் போராட்டம் தொடங்கிய காலத்தில் தமிழ் மக்கள் எவ்வாறு தமிழ் தலைமைகளாலும் ஆயுத குழுக்களாலும் புத்திஜீவிகளாலும் மோட்டுத்தனமாக யுத்தத்துக்கு இழுக்கப்பட்டனர் என்ற விபரமான விளக்கம் இன்றய காலகட்டத்தை புரிந்து நகர்வதற்கு மிக மிக முக்கியமாக இருக்கிறது. அக்கால கட்ட படிப்பினைகள் மிகவும் அவசியமானவை. அவற்றை பயன்படுத்தி தற்கால அரசியல் முன்னெடுப்புகளை ‘மக்கள்’ சார்ந்து ஈவிரக்கமற்ற முறையில் கேள்விக்குள்ளாக்குவது மிக முக்கியமானது. இத்தகைய உரையாடல் சாத்தியமாக முடியாத சுழ்நிலைக்குள் இலங்கை வாழ் தமிழ் மக்களின் வாழ்நிலைää அதிகார சக்திகளால் தள்ளப்பட்டுள்ளதால் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில்தான் இன்று பெரும்பாலும் இவ்வுரையாடல் சாத்தியமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆதிகாரத்துக்கு எதிரான போக்கு மற்றும் கேள்விகளும் ஜனநாயகத்துக்கான உந்துதலும் முன்னிலைப்பட வேண்டிய கட்டத்தில் இவற்றை புலம்பெயர் ‘புள்ளிகள்’ தமது இருப்புகளுக்காக மட்டுமே பாவிக்க முன்வருவது தெட்டத்தெளிவாகிக் கொண்டிருக்கிறது. இதில் முக்கியமாக கவனத்திற்கெடுத்து கொள்ளப்பட வேண்டிய விடயம் தற்போது அரசுசார் அதிகார குழுக்களால் முன்வைக்கப்படும் காட்சி பிம்பங்கள்.
‘ஒடுக்கப்படும் மக்களுக்காக’ போராடும் அனுமதிச்சீட்டை வைத்திருப்பது யார் என்று சண்டை போடும் பல சக்திகள் தயவுசெய்து சிந்திக்க வேண்டும். தமிழ் மக்கள் நேர்கொண்டுள்ள ஒடுக்குமுறைகள் பன்முகம் கொண்டவை. தமிழ் மக்களுக்குள் நிலவும் ஒடுக்குமுறைகளும் பன்முகம்கொண்டவை. இவற்றில் இருந்து மீளுவதற்கான போராட்டத்தை – தீர்வை நோக்கி நகர்வதற்கு பதிலாக யார் கூட ஒடுக்கிறான் யார் குறைய ஒடுக்கிறான் என்று அதிகாரத்தின் பலம் சார்ந்து நாம் சிந்திப்பது மகா பிழை. குறிப்பாக பிள்ளையான் பரவாயில்லை என்று பேசுபவர்களை நோக்கி நாம் இதை கூறுகிறோம். பிள்ளையான் பக்கம் இருக்கும் ஓரே ஒரு பலம் நண்பர்கள் ஞானம் ராஜேஸ்பாலா பசீர் போன்ற ஜனநாயக விரும்பிகள் அவரது நடவடிக்கைளுக்கு நெருக்கமாவதே. இருப்பினும் பிள்ளையானின் நடவடிக்கைகளுக்கு வெறும் ஊதுகுழல்களாக இவர்கள் மாறிப்போவது மக்களை தோற்கடிக்கும் செயலே. விடுதலை புலிகள் ஆயுத போராட்டத்தை முன்னெடுத்து வலதுசாரிய அதி ஒழுக்க மேலாதிக்க நடைமுறைகளை முன்வைத்த போது மார்க்சியம் புரட்சி என்று பறைந்து கொண்டிருந்தவர்கள் பலரும் கேள்வியின்றி அதற்கு உடன்பட்டது மகா பிழை. புலிக்குள் சோசலிச கருத்தை புகட்ட லண்டனில் இருந்து ஓடிய அன்ரன் பாலசிங்கம் வலதுசாரிய புலியிசத்தின் வாலாகியது போல் அன்றய ‘மேற்தட்டு’ புத்திஜீவிகள் ஆதிக்கத்துக்கு சரணடைந்தது வரலாற்று தவறு. அதே பிழையை நாம் மீண்டும் அனுமதிக்க முடியாது. ஆர்த்தமற்ற ஆயுதக் கலாச்சரத்துக்கு எதிரான குரல் மழுங்கடிக்கப்பட ஒத்தூதக்கூடாது. மக்களுக்கு சரியான தலைமையை – வழிகாட்டலை வழங்குவதற்கு பதிலாக நிறுவப்படும் அதிகார கன்னைகளில் சாதகமான ஒன்றை தேர்வுசெய்தல் வெட்கக்கேடான விடயம்.
“– கேணல் கருணாவிற்குப் பின்னான கிழக்கிலங்கை அரசியலில் பிள்ளையான் என்றழைக்கப்படும் ஆயுதப் போராளி முதலமைச்சராகின்ற நிலைமை எவ்வளவு அற்புதமானதும் உன்னதமானதுமாகும்! —”
என்று எழுதுவது எவ்வளவு பொறுக்கித்தனமான அரசியல். இவர்களின் வன்முறைகளுக்கு பலியான மற்றும் காணாமற்போன உயிர்களின் மீதான காறித்துப்பல் என்று பர்ர்க்காமல் வேறு எப்படி இதை பார்ப்பது. பாசிசத்தில் இருந்து ஜனநாயகத்துக்கு மாறும் ‘மலையிலும் கடினமான’ பணியில் இந்த இழப்புக்கள் தவிர்க்க முடியாத செலவுகள் என்று வாதிடுவீகளோ? எமது தோழர்கள் உட்பட அரசியல் காரணங்களுக்காக தாக்கப்பட்டவர்களின் பட்டியல் மிகபெரியது. உலகலாவிய பல மனித உரிமை அமைப்புக்கள் கட்டுக்கட்டாக கண்டணக் கட்டுரைகள் எழுதியுள்ளன அவற்றை கொஞ்சம் பாருங்கள். இவரது பொன்னான ஆட்சியின் கீழ் ஊடகவியலாளர்களுக்கு நடக்கும் ஆக்கினைகளை பாருங்கள்.
மேற்கண்டபடி வெளிச்சங்கள் பரப்பும் நண்பர் சுகன் சிந்திக்க நிறைய சந்தர்ப்பங்கள் கிடைத்த பிறகும் சத்தியகடதாசியில் மீண்டும் புதிய வெளிச்சத்தை பின்வருமாறு ஏற்படுத்துகிறார்.
“— முஸ்லிம்கள் – தலித்துகள் அரசியல் ஐக்கியதிலும் வேலைமுறைகளிலும் கிழக்கு மாகாண அரசிற்கு முன்மாதிரியாக வடமாகாண அரசியல் இயங்க முடியும். வடமாகாண அரசிற்கான முதலமைச்சராக முஸ்லிம் பெருமகன் ஒருவர் வருமிடத்து சர்வதேச நிலவரத்தின்படி வடமாகாணத்திற்குச் சிறப்பான எதிர்காலமுண்டு. சாதீய சமூகம் தொலைந்துபோக வாய்ப்புண்டு. இனங்களுக்கிடையிலான ஐக்கியம், நல்லுறவுää சகோதரத்துவம் வளர வாய்ப்புண்டு. —”
இதை விசர்கதை என்று ஒதுக்க முடியாது. இந்த பினாத்தல் அதிகாரத்தை காப்பாற்றும் தத்துவ விளக்கமாக பல தரப்புகளில் வைக்கப்படுகிறது. ‘மகிந்த சிந்தனை’ யில் மூளையை பிசைந்து காசை அள்ளி எறிந்து இயங்கும் அரச பிரச்சார மையங்கள் உருவாக்கும் கதைகளுக்கும் இவற்றுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. கிழக்கில் உருவாகியிருப்பது போன்ற அரசால் ‘சாதிய சமூகம் தொலைந்து போக வாய்ப்புண்டு’ என்ற நண்பரின் வசனத்தை படிக்க நெஞ்சு பகீரென்று வெடித்து – சிதறுவது போலானது. ‘நிறுவப்பட்ட அரசியல் – பண்பாட்டு ஆதிக்கங்களுக்கு எதிரான தலித்தியம்ää மார்க்ஸியம், பின்நவீனத்துவம் சார்ந்த…’ என்று சத்தியகடதாசியில் ஓடிக்கொண்டிருக்கும் வசனத்தை இனியாவது எடுத்துவிடுங்கள். ‘தாயின் செக்ஸ் படத்தை மகள் விற்கிறாள்’ என்று கிசுகிசு படிக்கும் வாசகர்கள் சீரழிந்து போவார்கள் என்ற மிக கடும் ஓழுக்க அக்கறையுள்ள அதே நீங்கள் கொலைகாரரிடம் மக்கள் தங்கள் எதிர்காலத்தை சரணடைய வேண்டும் என்று பிரச்சாரம் செய்வதை பார்த்ததும் நமக்கு மனம் வாடிப் போய்விட்டது ராசா. ஏனெனறால் மதிப்பு மறுப்பறிக்கை எழுதிய காலத்தை நீவிர் மறந்து ஆதிக்கம் – ஒழுக்கம் மற்றும் அறத்தில் சங்கமித்துவிட்டீர் – நாம் மறக்கவில்லை. அடுத்தவன் உயிரை விளையாட்டு பொருளாக நாம் கருதவில்லை.
யாழ்பாண சமூகம் கிழக்கு சமூகம் என்று ஒட்டுமொத்த மக்களையும் உங்கள் வசதி கருதி விழிப்பதை நிறுத்துங்கள். சிங்கள சமூகம் சர்வதேச சமூகம் என்று பிரபாகரன் மாவீரர் உரையில் எல்லா மக்களையும் திட்டித்தீர்ததற்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? யாழ்பாணம் பிற்போக்காய் போய்விட்டது – அங்கு இனி தலித்துகள் இல்லை என்று வாதிட்டாலும் இனி ஆச்சரியப்படமாட்டோம். ‘வாய்ப்புண்டு’ என்ற சொல்லைதானே மயக்கமாக பாவித்தேன் என்று இலக்கண இலக்கிய விதண்டா வாதங்களை பேசாதீர்கள். தொண்டமான் மலையக தமிழர் அதனால் அவர் தலைமையில் மலையக மக்கள் விடுதலை பெறுவர் – அஸ்ரப் முஸ்லிம் தலைவர் அதனால் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு அவர் தீர்வுகொண்டு வருவார் – பிரபாகரன் வெள்ளாளன் அல்ல அதனால் புலிகளுக்குள் சாதிய ஒடுக்குமுறையில்லை – அவர்கள். சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரானவர்கள் – முஸ்லிம் ஒருவர் தலைரவரானால் வடக்கில் பிரச்சினை முடிவுக்கு வரும் – போன்ற மொக்குத்தனமான குழந்தைப் பிள்ளை கதைகளை பிரச்சாரமாக்கி மக்களை முட்டாள்களாக பார்பதை நிறுத்துங்கள்.
எந்தவித அதிகாரங்களுமற்ற மாகான அரசு – மகிந்தவின் இறுதி ஆசியின்றி ஒரு பருப்பையும் புடுங்க முடியாத அதிகாரிகள் தமது ஆயுத பலத்தால் மக்கள் மத்தியில் பயக்கெடுதி உருவாக்கி கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு பெயர் ஜனநாயகம் அல்ல. ‘அபிவிருத்தி’ என்ற சொல்லைகாட்டி வெருட்டலாம் என்றும் நினைக்காதீர்கள். புலிகளும் வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கு – நீண்ட மாக்ரோ மைக்கிரோ பொருளாதார திட்டங்களை போட்டு வைத்துள்ளார்கள். அமெரிக்கா இந்தியா எல்லாரையும் வந்து புடுங்குங்கோ என்று அவர்களும்தான் அழைப்பு விட்டுள்ளார்கள். எரிகிற வீட்டில் புடுங்குவதற்கு வெளிநாட்டு முதலாளிகள் கூச்சப்பட போவதில்லை. அவர்கள் வசதியாக தங்குவதற்கு கோட்டல் கட்டுகிறார் பிள்ளையான். மேற்கு நாடுகளில் – ‘அபிவிருத்தி’ அடைந்த நாடுகளாக கருதப்படும் நாடுகளில் வாழும் புலம்பெயர் புத்திஜீவிகள் உங்களை சுற்றி பாருங்கள். இந்த நாடுகளின் தெருக்களில் ஒடுக்கப்பட்டவர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களுடன் இணைந்து ஒடுக்குதலுக்கு எதிர்ப்பை வைப்பது பற்றித்தான் நாம் கதைக்கிறோம். இலங்கையிலும் அது தான் தேவை – அரச மாற்றமோ புது மன்னர்களோ மாற்றத்தை கொண்டுவந்துவிட போவதில்லை. பிரான்சில் சாக்கோசிக்கும் இங்கிலாந்தில் பிரவுனுக்கும் ஜேர்மணியில் மேர்கலுக்கும் வாக்களிக்கும் தமிழர்கள் சார்ந்து அபிவிருத்திக்கான போராட்டத்தை பற்றி நீங்கள் பேசிக் கொண்டிருக்கும் வரைக்கும் உங்களுக்கு எதிரில் ஒடுக்கப்படுபவர்களின் குரல் இயங்கும்.
தலித்துகளின் விடுதலை பிள்ளையானால் சாத்தியம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் உங்களை என்னென்று வைவது. தலித்மேம்பாட்டு முன்னனி வைத்த கோரிக்கைகள் பல மிகவும் அடிப்படையான அத்தியாவசிய கோரிக்கைகள் – இதி;ல் எவை நிறைவேற்றப்படுகின்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பை தடைசெய்யும் அதிகார பலமுள்ளவர்கள் ஏன் இந்துத்துவ ஒடுக்குமுறை சார் நடவடிக்கைகளை தடைசெய்யகூடாது. தலித்துகளுக்கான அபிவிருத்தி திட்டங்களை – ஒடுக்குதலின் வேர் அறுக்கும் சமூக மாற்ற நடவடிக்கைகளை கொஞ்சம் சுட்டிகாட்டுங்கள். பிள்ளையான் கோயில் கோயிலாக வெள்ளை வேட்டியுடன் ஏறி இறங்குவதை பார்க்கவில்லையா? கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நகர வேண்டும் இப்போதைக்கு அது சாத்தியமில்லை என்று நழுவாதீhகள். மக்களிடம் அதிகாரத்தை கொடுத்து பாருங்கள் அவர்கள் சாதித்து காட்டுவார்கள்.
இலங்கை அரசுக்கும் பிள்ளையானுக்குமான – இலங்கை இரானுவத்துக்குமான தொடர்புகள் பற்றியேன் மூடி மறைக்கிறீர்கள்? அபிவிருத்திக்கு என்று வழங்கப்பட்ட காசுகள் எப்படி செலவிடப்படுகிறது என்பதை ஏன் மூடி மறைக்கிறீர்கள். மோசமான ஒரு யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது என்பதையும் அதனால் கடந்த சில மாதங்களுக்குள் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் என்பதையும் ஏன் மூடி மறைக்கிறீர்கள்? அரசு மக்களை கொண்று குவிப்பதுக்கு எதிராக ஒரு சொல் கதைக்க மாட்டீர்களா? ‘யுத்தத்தையே நியாயப்படுத்துமளவிற்கு சாதிய ஒடுக்குமுறையும் சாதீய சமூகமும் ஆனதுதான் யாழ்ப்பாணம்.’ என்று சரியாக சொல்லும் உங்களுக்கு பிள்ளையானை ஆதரிப்பதும் யுத்தத்தை ஆதரிப்பதும் இன்றய காலகட்டத்தில் ஒன்றுதான் என்று ஏன் விளங்கவில்லை. அந்த விளக்கமின்மைக்கு பின்னால் இருக்கும் அரசியல் என்ன? யுத்தத்தை நிறுத்த சொல்லி பிள்ளையான் அரசை கேட்டால் பிழையா? இந்த ஆண்டுக்குள் முழு இலங்கையும் தமது நேரடி கட்டுபாட்டில் வரும் என்று அறிக்கை விட்டுள்ளது அரசு. அடுத்த புதுவருடத்தை புலியில்லாத சுதந்திர புதுவருடமாக நீங்கள் கொண்டாடலாம் என்கிறது அரசு. மக்களை கொன்று குவித்து பின் திட்டமிட்ட முறையில் தமது பொம்மைகளை கண்காணிப்பு அதிகாரிகளாக்கி தெற்கு அரசின் மைய அரசியலை அகில இலங்கையில் நிறுவ நடக்கும் முயற்சி புரட்சி என்று கருதும் அளவுக்கு எமக்கு மூளை மழுங்கி போய்விடவில்லை. இடங்களை கைப்பற்றி வெளிநாட்டு முதலாலிகளை வரவளைத்து சுரண்டலுக்காக பகுதிகளை பிரித்து குடுத்தபிறகு நடக்கபோவதென்ன? ‘தலித்துகள் மீண்டும் மதகு திருத்தும் வேலையில் சேறள்ளும் வேலைக்காக இப்போதே காத்திருப்பதைத் தவிர வேறென்ன இருக்கிறது’ என்ற நிலைதான் திரும்பவும் வரப்போகிறது. ‘சொறி மை பீப்பிள் முந்தி சொன்னது பிழைச்சுப்போச்சு இனி புதுசா ஒரு போரச் செய்வம்’ என்று பிறகு வெளிக்கிடுவியல். தலித்துகளுக்கு உங்களின் இதுபோன்ற கதை கேக்கும் சாபக்கேடு ஒருகாலமும் வரவிடாமல் ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டத்தை செயற்படுத்துவதில் நாம் தீவிரமாக இருக்கிறோம்.
வெள்ளாள மையவாதத்தை தலித்தியமாக பினாத்திக் கொண்டிருக்கும் நீங்கள் -‘ஆதிக்க சக்திகளை ஜனநாயக சக்திகளாக படங்காட்டும் நீங்கள்’ சும்மா கிறுக்கி கொண்டிருப்பதை விட்டுவிட்டு சமூக பிரச்சினைகளை நேரடியாக சந்திக்க முயற்சி செய்யுங்கள். பட்டினி கிடப்பதும். மழைக்கு மரத்தடிக்குள் குழந்தைகளுடன் ஒதுங்கி அவதிப்படுவதும் ஓடுதல் என்ற பிரங்ஞை வறண்ட அகதிகளாக வெருண்ட முகங்களுடன் விரக்தி சுவாசிப்பதும் அப்பொழுது தெரியும்.
‘ஜரோப்பிய கத்துக்குட்டி புத்திஜீவிகளே!’ நீங்கள் நீண்டகாலம் ஜரோப்பாவில் வாழ்ந்து விட்டீர்கள். அந்த ஆறுதலில் அரசியலில் குதிக்காதீர்கள். அறுபட்ட நீங்கள் நாட்டில் நடக்கும் பிரச்சினையுடன் ஒட்டி உங்கள் இருத்தலை பதிவுசெய்ய மக்களின் உரிமைகளுடன் உயிருடன் விளையாடாதீர்கள். இங்கு வாழும் ஒடுக்கப்படும் மக்களுக்கும் உங்களால் பிரயோசனமில்லை. உங்களை வைச்சு எப்படி இந்த ஆபத்தான காலத்தை தாண்ட போகிறோமோ தெரியவில்லை. பயமாக இருக்கிறது.
POSTED BY UNIDENTIFIED SPACE AT 5:54 AM