The Matter of Time – Richard Serra

என் செய்வேன்?
உன்னைச் சுற்றிய வெளிச்ச முக்காடு.

இப்போதைக்கு விழா என்று
நித்தம் நினைவூட்டும்.

நீ
இடைக்கிடை உன் இறகுகள் காட்டி
பாவனை எப்படியென்று பரிதவிக்கிறாய்.

புகையிரதத் தடங்கள்
சமாந்தரத்தில் வளையும் என்றும்
ஒட்டாது என்றும்
நீயும் நானும் சின்னனில் கற்றோம்.

வளர்ந்த போது அவை எங்கோ ஒரு புள்ளியில் சேரும் என்றார்கள்.

புள்ளியைத் தேடுதல் , முடிவிலி தாண்டும் கணக்கு இன்று புரியும்.
நிலத்திற் சமாந்தரக் கோடு வளைத்து –
அதை வானில் சமப்படுத்தி வரைந்து
பின் உருக்கிய இரும்பால் இணைத்து
சமாந்தரக் கோட்டு வெளியைக் காட்டும் ‘ரிச்சர்ட் செரா’ கலைஞனாம்.

அவன் கலைக்குள் நுழைந்து
வெளிக்குள் வருபவர்கள் திசைமாறிச் செல்லலாம் என்ற எச்சரிப்பு வேறு!

திசை தெரிந்தோருக்கு எடுபடும் அந்தக்கதை.
உனக்கும் எனக்கும் எட்டாது அது.
திமிறும் வாழ்தடம் சமாந்தரத்தில் ஓடி சுழல்வது அறியாத விசரன் அவன்.
கலைக்காக அழுதல் அறியாத மடையன்.
நீ பல புள்ளிகளைக் கண்டுபிடித்தாய்.
இணைத்து ஒட்டச் சாத்தியமற்று
ஓடிவிளையாடும் மின்மினிகளவை.
அவன் கிடந்தான் மடக்கலைஞன்.
கலை இணைக்கும் – ‘உன்னாலும்தான்’ – மறந்துவிடாதே ஒரு போதும்.

வல்லினம் : இதழ் 10 , அக்டோபர் 2009

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *