எரியும் மத்திய கிழக்கும் வடஆபிரிக்காவும்
-புரட்சியும் -மார்க்சியரும்-
05-02-2011 அன்று “விக்கஸ், மார்க்சியர் மற்றும் எகிப்திய விளைவு” என்ற தலைப்பில் உலகின் முன்னணி வலதுசாரியப் பத்திரிகையான பினான்சியல் டைம்ஸில் (Financial Times) எட்வர்ட் கடாஸ் (Edward Hadas) என்பவர் ஒரு சிறு கட்டுரை எழுதியிருந்தார். ஒரு சதத்துக்கும் உதவாத அக்கட்டுரை வலதுசாரிய சிந்தனைப்போக்கின் -அதாவது அதிகார மையத்தின் பார்வையில் -ஏற்பட்டுவரும் மாற்றங்கள் பற்றிய எடுத்துக் காட்டுக்கு ஒரு சிறு உதாரணம். இக்கட்டுரை சமூகத்தைப் புரிந்து கொள்ள அவர்கள் எதிர்கொள்ளும் குழப்பத்தை மிக்க குழப்பத்துடன் முன்வைக்கிறது. சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களைப் புரிந்து கொள்ள இருக்கும் வழிகளில் மார்க்சியம் மிக முக்கியமான வழிமுறைகளை முன்வைக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ளும் இக்கட்டுரையாசிரியர் தனக்கு விருப்பமான முறையாக ஒரு முறையை முன்வைக்கிறார். ‘திறந்த பொருளாதாரம் வளரலாம் அல்லது வளராமலும் விடலாம்- அதை அங்கு சம்மந்தப்பட்ட நாட்டுக்குள் போய்த்தான் பார்க்கவேண்டும்’ என்ற அடிப்படையில் அவர் ‘முறை’ விரிகிறது. திறந்த பொருளாதாரத்தை முன்வைத்து அதன் வளர்ச்சியை ஒட்டி வரலாற்றைப் புரிந்து கொண்டு-அது சார்ந்து வரலாற்றை இயக்க வேண்டும் என்ற அடிப்படை நோக்கில் அவர் வாதம் விரிவடைவதை ஊகித்துக்கொள்வது சிரமமல்ல- அதாவது அதிகாரத்தின் பொருளாதார நலனுக்காக தாம் எதுவும் செய்யலாம் என்பதைச் சாரம்சமாகக் கொண்டதாக அவரது ‘முறை’ சுருங்குகிறது. சமகால வரலாற்று நிகழ்வுகளை விளக்க இவர்களிடம் எந்த ‘முறை’களும் இல்லை என்பதைச் சொல்லி அதற்காக மார்க்சியத்தைத் துணைக்கழைத்து, பின் அதைத் திட்டித் தீர்க்கும் இவர்களது போக்கு மிக வேடிக்கையானது. ஒடுக்கப்பட்ட மக்களின் எதிரிகள் கூட இன்று போராட்டத்தின் தத்துவமான மார்க்சியத்தைப் பற்றிப் பரவலாகப் பேசத் தொடங்கியிருப்பது நாம் ஒரு புதிய போராட்ட சகாப்தத்தில் நுழைந்திருப்பதை மீண்டும் சுட்டி நிற்கிறது.
பாடசாலைகளில் இருந்து பல்கலைக்கழகங்கள் வரை செல்லாக்காசுத் தத்துவம் என்று முதலாளித்துவ வாத்திமார்களால் தூக்கி எறியப்பட்ட மார்க்சியத்தைப் பலரும் ஓடி ஓடிப் படிக்கவேண்டிய நிலை இன்று உருவாகியுள்ளது. சமீபத்திய உலக பொருளாதாரச் சரிவைத் தொடர்ந்து மார்க்ஸ் எழுதிய முக்கிய நூலான மூலதனம் எக்கச்சக்கமாக விற்றுத் தள்ளப்பட்டுக் கொண்டிருப்பது பலரும் அறிந்ததே. அதேபோல் தற்போது வட ஆபிரிக்காவிலும் மத்திய-கிழக்கிலும் ஏற்பட்ட மாற்றங்கள் உலகை ஒரு குலுக்குக் குலுக்கி விளக்கம் தேடி நிற்கின்றன. மார்க்சியத்தை தவிர இதற்கான சரியான சமூக விஞ்ஞான விளக்கத்தை தரவல்ல வேறு எந்தத்தத்துவமும் இன்றில்லை என்பதை பல்வேறு ‘பின்’ மார்க்சியமறுப்பு சிந்தனையாளர்கள்கூட மறுக்க முடியாமலுள்ளது.
இருப்பினும் மார்க்சியம் ‘நெருப்பு’ என்ற பயத்துடன் இன்றும் தொடாமல் சற்றுத் தள்ளி நின்றே பேசுகின்றனர். மேற்சொன்ன கட்டுரையாளர் உட்பட பலரும் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் வர்க்கத்தின் முடிவை அறிவிக்கும் மார்க்சியத்தை ஏதாவது ஒரு ‘மொக்குக்கதை சொல்லி’ புறக்கணித்துவிடவே துடிக்கின்றனர்.
இயங்கியல் வரலாற்றுப் பொருள்முதல் வாதத்தின் அடிப்படையில் வரலாற்று நீரோட்டங்களை ஆய்வுசெய்யும் மார்க்சியர் அண்மைய பொருளாதாரச் சரிவு உட்பட பல்வேறு சமூக மாற்றங்களை நுணுக்கமாகக் கணித்துள்ளனர்.
உதாரணத்துக்கு சமீபத்திய எகிப்திய மக்களின் எழுச்சியை எடுத்துக் கொள்வோம். இது நடக்கும் என்று யார் எதிர்பார்த்தார்கள் என்றும், இது ஒரு தன்னிச்சையான செயல் என்றும் இந்நிகழ்வை வானத்தில் இருந்து குதித்த சம்பவமாகத் –திடீர் நிகழ்வாகச் சில அதிகாரம் சார் ஆசிரியர்கள் எழுதுகிறார்கள். இந்த வரலாற்று நிகழ்வு ஒருவிதத்தில் தவிர்க்க முடியாததாக இருந்தது என்பதை அதன் மூலம் அவர்கள் மூடி மறைக்க முயற்சிக்கிறார்கள்.
கடந்த முப்பது ஆண்டு காலமாக எகிப்திய மக்கள் சர்வாதிகாரி காஸ்னி முபாராக்கின்(Hosni Mubarak) சர்வாதிகார ஆட்சியின் கீழ் கொடுமைப்பட்டு வந்தது –பல சனநாயக உரிமைகள் அவர்களுக்கு மறுக்கப்பட்டு வந்தது – கடந்த ஆண்டு ஏராளமான வேலை நிறுத்தப்போராட்டங்கள் நிகழ்ந்தது – ஏகாதிபத்திய சுரண்டலால் அவர்தம் வளங்கள் சூறையாடப்பட்டுக்கொண்டிருந்தது – என்று பல்வேறு காரணிகள் எகிப்திய மக்களின் எழுச்சியின் பின்னணியாக இருந்ததை மார்க்சியர் சுட்டிக்காட்டுவர். சர்வதேச மார்க்சிய அமைப்பான தொழிலாளர் அகிலத்துக்கான அமைப்பு (CWI) தமது பத்தாவது உலக மாநாட்டை ஒட்டி ஒரு ஆய்வறிக்கையை விவாதத்துக்காகவும் கலந்துரையாடலுக்காகவும் வெளியிட்டிருந்தது. கடந்த ஆண்டு நவம்பரில் வெளியான அவ்வாய்வில் பின்வரும் புள்ளிகள் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.
-“ மத்திய-கிழக்கில் இன்றய பொருளாதார நிலைமையானது முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரும் சமூக-அரசியல் மாற்றத்தைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறது. முப்பது வருடகால முபாராக் சர்வாதிகாரம் முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது…ஒரு மக்கள் எழுச்சி முபாராக் அரசை தூக்கி எறியும் சாத்தியம் நிலவுகிறது.”-
மார்க்சியர் எதிர்காலத்தை ‘உய்த்தறியும்’ தீர்க்கதரிசிகள் அல்ல. நுட்பமாக எவ்வாறு சமூக மாற்றங்களை கணிக்க முடிகிறது என்பது மார்க்சியம் முன்வைக்கும் சமூகத்தை அறியும் விஞ்ஞானம் பற்றிய கேள்வி. இதுபற்றிய விரிவான தத்துவார்த்த விளக்கங்களைப் பற்றிப் பேச இங்கு இடமில்லை. இருப்பினும் வரலாற்றைத் துண்டு துண்டாகப் பார்க்காமல் வர்க்க முரண்கள் நிறைந்த இயக்கமாகப் பார்க்கும் மார்க்சிய அணுகுமுறை வரலாற்றுப் போக்குகளை நுண்ணறியும் சாத்தியத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை இங்கு சுட்டுவது முக்கியமானது.
புரட்சி என்பது ‘உத்வேகமடைந்த ஒரு வரலாற்றுக் கோபம்” என்பார் மிகச்சிறந்த மார்க்சிய ஆசிரியரான லியான் ட்ராட்ஸ்கி. ‘வரலாற்றுப் போக்கில் நேரடிப் பங்கு பற்றல்’ என்றும் அதை அவர் விளக்கியிருப்பார். இதைத்தான் நாமின்று மத்திய கிழக்கிலும் வட ஆபிரிக்காவிலும் காணக்கூடியதாக இருக்கிறது.
இன்று நாம் புரட்சிகளைப்பற்றியும் தொழிலாளர் போரட்டங்களைப்பற்றியும் சர்வசாதாரணமாகக் கதைக்கும் முக்கிய காலகட்டத்திற்குள் நுழைந்துள்ளோம். இத்தருணத்தில் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை நுட்பமாக விளக்கும் மார்க்சியம் ஒரு முக்கிய பேசு பொருளாக மாறியிருப்பது ஆச்சரியமானதல்ல.
புரட்சிகர அதிர்வின் தொடக்கம் – துனிசியப் புரட்சி
துனிசியாவில் ஏறத்தாள 15 வீத மக்கள் வேலைவாய்ப்பற்ற நிலையில் பலவேறு அடக்குமுறைகளுக்கு உள்ளாகி வந்தனர். கடந்த 23 வருட காலமாக சர்வாதிகார ஆட்சியின் கீழ் இருந்த மக்களின் பொறுமை கடந்த ஆண்டு டிசம்பர் 17ல் நடந்த சம்பவத்தை தொடர்ந்து வெடித்தது -புரட்சித் தீ கிளம்பியது!
துனிசியாவின் முக்கிய நகரமான Sidi Bouzid என்னும் இடத்தில் தெருவோரம் இனிப்பு வியாபாரம் செய்து வந்த இளைஞன் மொகமட் புவாசிசி (Mohamed Bou’zizi) தொடர்ந்து தெருவில் கடை போடுவதை பொலிசார் தடுத்தனர். அவன் கெஞ்சிக் கூத்தாடிப் பார்த்தான். ஐயா நான் ஒரு பட்டதாரி எனக்கு எங்கும் வேலை கிடைக்கவில்லை. இந்த இனிப்புக்கடையும் இல்லை என்றால் என் வாழ்க்கை சரி. என்று நடுரோட்டில் நின்று கெஞ்சினான். அதற்குச் செவிசாய்க்க மறுத்தது மட்டுமின்றி அவனது பொருட்களையும் சூறையாடிச்சென்றனர் பொலிசார். பொறுக்கமுடியாத மொகமட் புவாசிசி நகர மண்டபம் முன்னால் வந்து எல்லோருக்கும் முன்னால் தன்மேல் மண்ணெண்ணையை ஊற்றிக் கொழுத்தித் தற்கொலை செய்துகொண்டான்.
ஏற்கனவே நொந்துகொண்டிருந்த எத்தனையோ நெஞ்சங்களில் இச்சம்பவம் வேல் பாச்சியது. பொறுத்தது போதும் என்ற முடிவுடன் பல இளையோர் போராட்டக்களத்தில் குதித்தனர். துனிசியாவை 23 வருடகாலமாக ஆட்டிப்படைத்த சர்வாதிகாரி பென் அலியின் (Ben Ali)) மீது அவர்கள் ஆத்திரம் திரும்பியது.
‘பை பை பென் அலி’ – ‘பென் அலியே உன் காலம் முடிந்தது. உடனே வெளியேறு’ என்ற சுலோகங்களுடன் ஆயிரக்கணக்கான மக்கள் பென் அலியின் அராஜக அரசுக்கெதிரான தெருப் போராட்டத்தில் இறங்கினர். பொலிசார் அவர்களைத் தாக்க முற்பட்டபோதும் அவர்கள் தயங்கவில்லை. உயிரைக் கொடுத்தேனும் தமது உரிமைகளை வென்றெடுக்க துணிந்துவிட்ட அவர்களைத் தடுத்து நிறுத்த எந்த சக்தியாலும் முடியவில்லை. ‘ உங்கள் சகோதர சகோதரிகளைச் சுடாதீர்கள். தாக்காதீர்கள்.’ என்ற கோரிக்கை மூலம் கணிசமான அளவு இராணுவத்தினரையும் அவர்களால் தமது பக்கம் வென்றெடுக்க முடிந்தது.
பென் அலியே உன்னைத் துரத்தாமல் விடமாட்டோம் என்று உத்வேகத்துடன் தெருவில் நின்ற மக்களைக் கண்ட அதிகாரத்தின் கலக்கம் அவர்களுக்குள்ளும் உடைவுகளை ஏற்படுத்தியது. குறிப்பிடத்தக்க இராணுவ ஜெனரல்கள் மற்றும் முன்னய சகாக்கள் பென் அலியைக் கைவிட்டனர். போராட்டம் தொடங்கி ஒரு மாசத்துக்குள் -ஜனவரி 14ம் திகதி அன்று –சர்வாதிகாரி பென் அலி சவூதி அரேபியாவுக்கு தப்பியோடினான்.
துனிசியப் புரட்சியின் இந்த வெற்றி அப்பிரந்திய நாடுகள் எங்கும் மாபெரும் அதிர்வினைத் தோற்றுவித்தது. உலகின் பெரும்பான்மை நாடுகளில் – பெரும்பான்மை நவகாலனித்துவ நாடுகளில் – அதிகாரம் சிறுகுடும்பத்தின் அல்லது சிறு கூட்டத்தின் கையிலிருப்பது தெரிந்ததே. முக்கியமாக அரேபிய மக்கள் உள்நாட்டுச் சர்வாதிகாரிகளாலும் ஏகாதிபத்தியத்தாலும் தொடர்ந்து துன்பத்துக்குள்ளாகி வந்துள்ளார்கள். இந்த மக்களுக்கு துனிசிய புரட்சி மாபெரும் நம்பிக்கையை மீட்டெடுத்துக் கொடுத்துள்ளது.
இதைத் தொடர்ந்து யோடான், யேமன், அல்ஜீரியா, சிரியா என்று பல்வேறு நாடுகளில் மக்கள் போராட தெருவில் இறங்கியுள்ளனர். குறிப்பாக கடந்த 30 ஆண்டுகளாகச் சர்வாதிகாரி முபாராக்கின் ஆக்கினைகளை பொறுத்துவந்த எகிப்திய மக்களும் பொறுத்தது போதும் என்ற முடிவுக்கு வந்தனர்.
எகிப்திய புரட்சி
1989ல் பேர்லின் சுவர் கிழக்கு யேர்மானிய மக்களால் உடைக்கப்பட்டு கிழக்கு யேர்மனியும் மேற்கு யேர்மனியும் இணைந்ததை ஸ்டாலினிய அதிகாரத்தின் முடிவாக- நீண்டகால அமெரிக்க ரஸ்ய நிழல் யுத்தத்தின் முடிவான வரலாற்று நிகழ்வாக பொதுவாக கருதப்படுகிறது. இந்த வரலாற்று நிகழ்வைத் தொடர்ந்து சோவியத் ஒன்றியம் என்ற அடையாளத்தின் கீழ் இருந்த பல்வேறு நாடுகள் துண்டு துண்டாக உடைந்தன. அதன் கடைசித் துண்டாக அண்மையில் கொசோவா என்ற புது நாடு உருவாகியதை நாமறிவோம்.
ஆனால் அப்பரதேசத்திலிருக்கும் பல நாடுகளுக்கு இந்நிகழ்வு சுடுகிற எண்ணையில் இருந்து பாய்ந்து எரிகிற நெருப்பில் விழுந்தது போன்றதொரு நிகழ்வு. ஸ்டாலினியத்தின் இரும்புப்பிடியின் கீழ் சனநாயகம் மறுக்கப்பட்ட மக்கள் விடுதலைக்காகவும் சனநாயகத்தைத் சுவாசிக்கவும் துடித்தனர். ஸ்டாலினியத்தின் மீதிருந்த வெறுப்பு பலருக்கு மார்க்சியத்தின் மேலான வெறுப்பாகவும் மாறியிருந்தது. மேற்கத்தேய திறந்த பொருளாதாரத்தின் மேல் இம்மக்களுக்கு கனவிருந்தது. இதைச் சாதகமாகப் பயன்படுத்திய ஏகாதிபத்திய அதிகாரம் ‘அதிர்வு வைத்தியம்’ என்ற மிகக் கேவலமான பொருளாதாரக் கொள்கை மூலம் மிகப் போக்கிரித்தனமான முறையில் திறந்த பொருளாதாரத்தை அவர்கள் மேல் திணித்தது. சோவியத் ஒன்றியத்தைத் துண்டு துண்டாக உடைத்து விழுங்கியது. ஸ்டாலினிய கொடுமையில் இருந்து விடுபடத்துடித்த மக்கள் திறந்த பொருளாதார நெருப்பில் விழுந்து இன்று துடிப்பதை பார்க்கக்கூடியதாக இருக்கிறது. பல முன்னால் சோவியத் ஒன்றிய நாடுகளில் வாழ்கை தரம் ஸ்டாலினிய காலத்தில் இருந்ததை விட மோசமாக மாறியிருப்பதை இன்று அவதானிக்கலாம்.
ஸ்டாலினிய சோவியத் ஒன்றியம் அடக்குமுறை அரசியல் ஆட்சி செய்தாலும் அங்கு ‘திட்டமிட்ட பொருளாதார’ கொள்கை நடைமுறையில் இருந்தது. அதை தூக்கி எறிந்ததன் மூலம் பல மில்லியன் மக்கள் வறுமைக்குள் தள்ளப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் பசியாலும் யுத்தத்தாலும் சாகடிக்கப்பட்டனர்.
இந்த 1989 பேர்லின் சுவர் வீழ்ச்சியைத் தொடர்ந்து ‘போராட்ட அரசியலில்’ மிகப்பெரும் தொய்வு ஏற்பட்டது. இலங்கை இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இயங்கிவந்த பல போராட்டச் சக்திகள் மத்தியில் இது ஒரு மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இப்பாதிப்பு சிலரை வலதுசாரியம் நோக்கி சரித்தது. ‘முதலாளித்துவம் வெற்றி கண்டுவிட்டது. இனிமேல் சோசலிசம், கம்யூனிசம் என்ற கதைக்கிடமில்லை.’ என்று பல்வேறு முதலாளித்துவ சிந்தனாவாதிகள் கூக்குரலிடத் தொடங்கினர். ‘நாம் வென்றுவிட்டோம்’ என்று Wall Street Journal தலையங்கம் எழுதியது. ‘வரலாற்றின் முடிவு’ என்று பிரான்சிஸ் பூக்கயாமா போன்றவர்கள் புத்தகம் வெளியிட்டார்கள்.
ஏதோ ஒரு வகையில் நம்பிக்கை கொடுத்து வந்த ஸ்டாலினிய ரஷ்ய சரிவும் -முதலாளித்துவத்தின் பூரிப்புப் புலம்பலும் – பல்வேறு போராட்ட சக்திகளின் நம்பிக்கையைக் குலுக்கி எடுத்தன. இனிமேல் ஏதாவது ஒரு முதலாளித்துவ அரசுகளின் அனுசரணையின்றிப் போராட்டத்தை முன்னெடுக்க முடியாது என்ற மிகப்பிழையான முடிவுகளை நோக்கி இது அவர்களைத் தள்ளியது- வலதுசாரிய சிந்தனை நோக்கி துரத்தியது.
‘சோசலிசத் தமிழ் ஈழம்’ என்ற கோரிக்கையுடன் -கியூபாவில் நடந்த போராடும் இளையோர் மாநாட்டுக்கு ஆதரவு கேட்டு கோரிக்கை விட்டு- உலகின் எல்லா போராட்ட சக்திகளுடனும் சகோதரத்துவத்தை தெரிவித்து –தொடங்கிய இலங்கை தமிழ் பேசும் மக்களின் போராட்டமும் வலதுசாரிய பிற்போக்குத்தனம் நோக்கி சரிந்ததும் இக்காலப்பகுதியில்தான் நிகழ்ந்தது.
இதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் முதலாளித்துவம் கேட்பாரற்றுக் கூத்தாடியது. மேற்கத்தேய ஏகாதிபத்திய அரசுகள் -குறிப்பாக அமெரிக்க அரசு- தமக்கு சாதகமான அதிகாரங்களை மட்டும் நவ காலனித்துவ நாடுகளில் அனுமதித்து வந்தன. தமக்கு எதிரானவர்களை- அவர்களுக்கு எவ்வளவு மக்கள் ஆதரவு இருப்பினும் -அவர்கள் எவ்வளவு சனநாயக விரும்பிகளாக இருப்பினும் -அவர்களை வேட்டையாடியது ஏகாதிபத்தியம். இரகசியமாகவோ அல்லது நேரடியாகவோ யுத்தத்தை தூண்டி எதிரிகளை சூறையாடி வந்தனர். பல்வேறு நாடுகளில் தமக்கு சார்பான சர்வாதிகளை இருத்தி அவர்களை ஆயுத பலத்தின் மூலம் பாதுகாத்து வந்தனர்.
பெற்றோல் வளமுள்ள மத்திய கிழக்கு ஏகாதிபத்திய பொருளாதாரத்தின் உயிர்நாடியாக இருந்து வருவதால் இப்பரதேசம் அவர்களுக்கு அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இப்பிராந்திய நாட்டு மக்கள் சனநாயக உரிமைகளை நோக்கி ஒரு சொட்டும் நகர விடாமல் பொருளாதார வளங்களைச் சுரண்டுவதில் மட்டும் குறியாக இருந்தனர். எகிப்தில்- முபாராக், துனிசியாவில்- பென் அலி, சிரியாவில் -அசாத் என்று பல்வேறு நாடுகளில் சர்வாதிகாரிகளுக்கு மில்லியன் கணக்கில் பணம் வளங்கியது மட்டுமின்றி இவர்களுக்கு ‘சர்வதேச’ அரசியல் பாதுகாப்பையும் வளங்கிவந்தனர். உதாரணமாக சர்வாதிகாரி முபாராக் மத்திய கிழக்கின் ‘கதாநாயகனாக’ -இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் சமாதானத்தைப் பாதுகாக்கும் ‘சமாதானத் தூதுவனாக’ அவர்கள் படம் காட்டினர். இதை விடக் கேவலமான முறையில் ஆபிரிக்க நாடுகளிலும் சர்வாதிகாரிகளை வளர்த்தெடுத்தனர். கொங்கோ நாட்டு மொபுட்டு எத்தனை மில்லியன் சாவுகளுக்குக் காரணம் என்பதைக் கதைப்பாரில்லை. துனிசிய சர்வாதிகாரி பென் அலி தப்பி ஓடுவதற்கு ஒரு கிழமைக்கு முன்கூட பிரஞ்சு பிரதமர் சார்கோசி இராணுவ உதவி உட்பட அனைத்து உதவிகளையும் தான் வழங்கத் தயார் என்று அறிவித்தது உலகறிந்த ஒன்று.
இனிமேல் மக்களுக்கு மீட்சி இல்லையா? அனைத்து அதிகாரங்களையும் எதிர்த்து – உள்நாட்டு சர்வாதிகாரிகள்-வெளிநாட்டு ஏகாதிபத்தியங்கள்-இராணுவம் -எல்லாவற்றையும் எதிர்த்து எப்படி ஒரு போராட்டத்தைக் கட்டுவது? என்ற கேளிவிகள் இதுவரை காலமும் மிகப் பெரிய கேள்விகளாக இருந்தன. இவர்களை எதிர்க்க முடியாது என்ற சோர்விருந்தது. மார்க்சியர் ஒருபோதும் நம்பிக்கையைக் கைவிடவில்லை. ஏனெனில் இது வெறும் ‘நம்பிக்கை’ மட்டுமல்ல- வரலாற்றைச் சரியானபடி புரிந்து கொண்ட விஞ்ஞான பூர்வ அறிதல் அது. பில்லியன் கணக்கான மக்களை நூற்றுக்கணக்கான குடும்பங்கள் ஒடுக்கி ஆண்டுவருவதன் முரண் ஒரு நாள் தெறிக்கும் என்பதை உணர அடிப்படை மார்க்சிய அறிதலே போதுமானது. பொருளாதாரச் சுரண்டலின் அளவு புரட்சிகரப் பண்பாக மாற்றமடையும் என்பதை மார்க்சியர் அறிந்திருந்தனர்.
துனிசியப் புரட்சியைத் தொடர்ந்து வெடித்த எகிப்திய புரட்சி இன்று உலகெங்கும் இருக்கும் போராட்டச் சக்திகளுக்கு புதிய நம்பிக்கையைத் தோற்றுவித்துள்ளது. புதிய பாடங்களைக் கற்றுத் தந்துள்ளது. இது மத்திய கிழக்கின் 1989 என்று வர்ணிக்கப்படுகிறது. முபாராக் பேர்லின் சுவராகக் கருதப்படுகிறார். முபாராக்கின் சரிவு மேலும் புரட்சிகர இயக்கங்களைத் தூண்டுவிக்கும் என்பது தீர்க்க தரிசனமல்ல – தவிர்க்க இயலாத வரலாற்று இயல்பே.
எதிர்ப்புரட்சியை எப்படி எதிர்கொள்வது என்பதும் எகிப்திய புரட்சி புகட்டும் பாடங்களில் ஒன்று. தக்க சமயம் பார்த்து ‘முபராக் ஆதரவு’ மக்கள் என்று சொல்லிக் கொண்டு ஒரு சிறு குழு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களைத் தாக்கியது. வராவிட்டால் உங்களுக்கு சம்பளமில்லை என்று கூறி அரச ஊழியர்களை பஸ்சில் ஏற்றி வந்து சீருடையணியாத பொலிசாருடன் சேர்த்துத் தாக்குதலைச் செய்ய முயன்றனர். பின்பு புரட்சியைத் தோற்கடிப்பதற்காக அரச ஊழியர்களுக்கு 15 வீத சம்பள உயர்வு வழங்க இருப்பதாக எகிப்திய அரசு அறிவித்தது. ஒரு சிறு சம்பள உயர்வுக்குக் கூட முன்பு மக்கள் பட்டபாடு வேறு கதை. மக்கள் இந்த எலும்புத்துண்டுக்கு ஏமாந்து விடத்தயாராக இல்லை. ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் தெருவிற் குதித்தனர். கெய்ரோ, அலக்ஸ்சான்டரியா, சூயஸ் நகரங்களில் கூடிய மக்கள் எதிர்புரட்சி வாதிகளைத் துரத்தியடித்தனர். ‘புற நிகழ்வுகள்தான் பிரக்ஞையை நிர்ணயிக்கின்றனவேயன்றி பிரக்ஞை புறநிகழ்வுகளை நிர்ணயிப்பதில்லை’ என்பது இயங்கியல் பொருள்முதல்வாதத்தின் முக்கிய விதிகளில் ஒன்று. எகிப்திய மக்களின் போராட்ட பிரக்ஞை புற நிகழ்வுகளால் வேகமாக மாறிவருவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. எதிர்ப்புரட்சியாளர்களை அடித்துவிரட்டியது மட்டும் போதாது என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர். தமக்கான பாதுகாப்புக் கமிட்டிகளை உருவாக்கக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்தப் போராட்டம் நீண்ட போரட்டம் என்பதை அவர்கள் உணர்ந்தனர். உயிரைக் கொடுத்துப் போராடி வென்றெடுத்த உரிமைகளை இன்னுமொரு சர்வாதிகாரியிடமோ சுரண்டல் வர்க்கத்திடமோ கொடுத்து விட்டு வேடிக்கை பார்க்க முடியாது என்பதைப் பல்லாயிரம் தொழிலாளர்கள் உணர்ந்தனர். சனநாயக உரிமைகளைத் தெட்டத் தெளிவாக முன்வைத்து அதை எப்படியாவது வென்றுவிடவேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர்.
சனநாயகத்தின் பாதுகாவலர்களாக தங்களைத் தாங்களே அறிவித்துக் கொண்ட ஏகாதிபத்திய அரசுகள் புரட்சிகர சனநாயக கோரிக்கைகளைக் கண்டு நடுங்கிப் போயின. ‘இஸ்லாமிய அடிப்படைவாதம்’ என்ற பயம் காட்டி மக்களை மீண்டும் ஒரு ‘ஒடுக்குமுறை வலைக்குள் தள்ளுவதில்தான் அவர்கள் குறியாக இருந்தனர். அமெரிக்க சனாதிபதி ஒபாமா முதற்கொண்டு இங்கிலாந்தின் மிகமோசமான வலதுசாரிய பிரதமரான டேவிட் கமரோன் வரை எகிப்திய மக்களின் எழுச்சிக்கு ஆதரவு அளிப்பதாக போக்கு காட்டியவர்கள் – எப்படி முபாராக் அதிகாரத்தின் எச்சங்களைக் காப்பாற்றி தமது செல்வாக்கைத் தக்கவைத்துக்கொள்ளலாம் என்பதில் குறியாயினர்.
அராபிய மக்களுக்கான சனநாயகம் என்பது மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும் -சவூதி அரேபிய மாதிரி தான் இஸ்லாமிய கலாச்சார நாடுகளுக்கு பொருந்தும் என்ற அமெரிக்க நியோ கன்சவேட்டிவ் அறிதலில் இருந்து மாறிச் சிந்திப்பது இன்னும் நிகழவில்லை.
எகிப்தை இழப்பது அவர்களுக்குப் பெரும் சிக்கல்களைத் தோற்றுவிக்கவல்லது. தற்போது பாலஸ்தீனத்தின் மீது விதிக்கப்பட்டிருக்கும் தடை தகரும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது எகிப்திய புரட்சி. அதுமட்டுமின்றி பல்வெறு நாடுகளுக்கு பரவும் புரட்சி பல்வேறு எண்ணைக் கிணறுகளையும் அவர்தம் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கவல்லது. இதனால் பெற்றோல் விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இன்னொரு வகையில் சொல்வதானால் இது உலக பொருளாதாரத்தை அடுத்த கட்டச் சரிவை நோக்கி நகர்த்தி ஏகாதிபத்தியத்தை மேலும் பலவீனப்படுத்தும் சாத்தியமுள்ளது. இது மட்டுமின்றி பொருளாதாரக் கட்டுப்பாட்டுக்காக சீனாவுடன் போட்டி போட்டுக்கொண்டிருக்கும் இவர்கள் சூயஸ் கால்வாயை இழப்பதன் மூலம் மாபெரும் இராணுவத் தந்திரோபாயத் தளத்தை இழக்கும் அபாயமும் உள்ளது. இதுபோன்ற தம் நலன் சார் ‘கவலைகளை’ கரிசனையாக மாற்றிக் காட்டி ஓபாமா ஏமாற்றுவேலை செய்ய முற்படுகிறார். இந்த சனநாயகத்தின் போலி ‘பாதுகாவலர்கள்’ தமது ‘சுதந்திர’ பத்திரிகைகள் ஊடாக தற்போது புலம்பித் தள்ளுவதைப் பார்த்தால் அவர்தம் வங்கிறோத்துக் கரிசனையின் அடிப்படை தெரியவரும்.
2006ல் விட்ட பிழையின் படிப்பினை என்ன? என்று கேட்கிறார்கள்! 2006ல் நடந்த பாலஸ்தீன தேர்தலை இழுத்துத் தமக்கு ஆதரவு தேட முயற்சிக்கிறார்கள். ‘சனநாயகம்தானே பாலஸ்தீனத்தில் கமாஸ் இயக்கத்தை தேர்தலில் வெற்றியடையச் செய்தது. இதே சனநாயகம் தானே கிஸ்புல்லாவை லெபனானில் ஆட்சி பகிர வைத்துள்ளது’ என்று புலம்பி தற்போதய அராபிய சனநாயக கோரிக்கை இஸ்லாமிய அடிப்படைவாதிகளை அதிகாரத்துக்கு கொண்டு வந்து அபாயத்தை ஏற்படுத்தும் என்று அபாயச் சங்கு ஊதுகிறார்கள். ஒரு சதத்துக்கும் உதவாத ‘பொறுக்கி-பொய்யன்-அரசியல் அறிவற்ற அயோக்கியன்’ என்றெல்லாம் பிரித்தானிய மக்களால் திட்டித் தீர்க்கப்பட்டு ஒதுக்கப்பட்ட மிக மோசமான வலதுசாரியான டோனி பிளேயரை வலதுசாரிகள் மீண்டும் கண்டு பிடித்துள்ளனர். இஸ்லாம் பற்றிய பயக்கெடுதியை ஏற்படுத்துவதில் அவர் கை தேர்ந்தவர் என்பது அவர்களுக்கு நன்றாக தெரிந்த ஒன்றுதானே. பல பத்திரிகைகளில் அவரது பேச்சு மேற்கோள் காட்டப்படுகிறது.
அதேபோல் ஒபாமாவின் எகிப்துக்கான சனநாயகமும் ‘கட்டுப்பாடானதே’. அந்நாட்டு இரகசிய புலனாய்வுத்துறைத் தலைமையில் இருந்து பல சித்திரவதை மற்றும் பல்வேறு கொடுமைகளுக்குக் காரணமாக இருந்த உமார் சுலைமான் ((Omar Soliman)) தான் அமெரிக்காவின் சனநாயக விருப்பு! ‘அமெரிக்க-எகிப்திய உறவின் மிகப்பெரும் வெற்றி’ என்பதே அமெரிக்க ஏகாதிபத்தியம் உமார் பற்றி வைத்திருக்கும் கருத்து என்பதை விக்கிலீகஸ் (WikiLeaks) தெளிவாக்கியுள்ளது. முபாராக்கின் அனைத்துக் கொடுமைகளுக்கும் தோளோடு தோள்கொடுத்து நின்றவர் இந்த உமார்-ஏகாதிபத்தியத்தின் உற்ற நண்பன்-எகிப்திய மக்களின் எதிரி. இவரையும் தாண்டி அவர்கள் போகக்கூடிய தூரம் இன்னுமொரு ஏகாதிபத்தியத்தின் சகாவான முகமட் எல்பராடியுடன் (Mohamed ElBaradei) நின்றுவிடுகிறது. நிலமையைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அவர்கள் வலு அக்கறையோடு வேலை செய்தனர். மக்கள் போராடி ஒரு சர்வாதிகாரியைத் துரத்தத் தங்களுக்குச் சாதகமானவாகளை மீண்டும் அரசாட்சிக்குக் கொண்டுவந்து சுரண்டலைத் தொடரும் செயலைத்தான் தொடர்ந்து செய்து வருகின்றன ஏகாதிபத்திய அரசுகள். நிறப் புரட்சிகள் என்று சொல்லப்படும் உக்கிரேனிய ஆரஞ்சுப் புரட்சி, கிர்கிஸ்தான் துலிப் புரட்சி முதலானவையின் போது நிகழ்ந்ததும் இது தான். துனிசியப் புரட்சியையும் ஒரு நிறப்புரட்சி வரிசைக்குள் அடக்கித் தமது கட்டுப்பாட்டை நிலைநாட்டும் துடிப்புடன் அதை ஜாஸ்மின் புரட்சி என்று விழித்தனர். ஆனால் தற்போதய சகாப்தம் வித்தியாசமானது என்பது விரைவில் தெரிந்தாயிற்று. எகிப்திய புரட்சிக்கு நிறப்பெயரோ பூப்பெயரோ வைக்க அவர்களுக்கு அவகாசம் கிடைக்கவில்லை!
இஸ்லாமிய அடிப்படைவாத படங்காட்டுதலுக்காக ஏகாதிபத்தியம் பல உண்மைகளை மூடி மறைத்து வந்துகொண்டிருக்கிறது. துனிசியா மிகவும் மதச்சார்பற்ற அரபு நாடுகளில் ஒன்று. அண்மையில் முஸ்லிம் மதத் தலைவர் ஒருவர் நாடு திரும்பிய பொழுது மதம் வேண்டாம் என்று சுவரொட்டிகள் பல இடங்களில் ஒட்டப்பட்டிருந்ததும் தொடர்ந்தும் மக்கள் மதச் சார்பற்ற சுலோகங்களை வைத்து வருவதும் தெரிந்ததே. எகிப்தில் நிலமை வேறு என்பது உண்மைதான். அங்கு ‘முஸ்லிம் சகோதரர்’ என்ற அமைப்பு ஓரளவு பலமான அமைப்பாக இருந்து வந்திருக்கிறது. ஆனால் அவர்களுக்கு பெரும்பான்மை ஆதரவு கிடையாது. அவர்களுக்கு 10 வீத மக்களின் ஆதரவுகூட இல்லை என்றே சொல்லப்படுகிறது. ஆனால் இஸ்லாம் பயம்காட்டும் இதே ஏகாதிபத்திய அரசுகள் தான் ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை சனநாயகத்துக்கெதிராகத் தூண்டி வளர்த்தன-அவர்கள் உருவாக்கிய மதராசுகளில் இருந்துதான் அவர்கள் சொல்லும் ‘பயங்கரவாதிகள்’ உருவாகினர் என்பதைக் கதைப்பார் கேட்பாரில்லை.
ஓபாமாவின் சனநாயக கரிசனையைக் காட்டி அமெரிக்க ஏகாதிபத்தியத்தை ‘மார்கெட்டிங்’ செய்யும் வேலையும் நடக்கிறது. ‘விக்கிலீக்கின் ஸ்தாபகருக்கு அமெரிக்க நிர்வாகம் மெடல் கொடுக்க வேண்டும்’ என்று விரிகிறது பினான்சியல் டைம்ஸ் பத்திரிகையின் ஒரு தலையங்கம். ஒபாமாவின் வெளியுறவு கொள்கை மாற்றத்தை விக்கிலீக் எடுத்துக்காட்டுகிறது என்று வாதிக்கிறார்கள் -அதாவது முபாராக்கின் சர்வாதிகாரத்தனம் பற்றிய அறிவு ஒபாமா நிர்வாகத்துக்கு ஆச்சரியமானதில்லையாம்! என்ன புலுடா பார்த்தீர்களா. யார் சொன்னார் உங்களுக்கு தெரியாதென்று. தெரிந்துகொண்டுதான் நீங்கள் உலகெங்குமிருக்கும் சர்வாதிகாரிகளுக்கு பாதுகாப்பும் பணமும் கொடுத்து வருகிறீர்கள் -ஊடகங்கள் எங்கும் திரும்பத் திரும்ப வந்த பழைய கதைகள் தானே அவை. இந்த கட்டுரையைப் படிக்கும் பொறுப்புள்ள யாருக்குமே கோபம் பொங்கி வரும். மத்திய கிழக்கு அரசியல் பற்றிய நுண்ணறிவாளராகக் கருதப்படும் நோம் சோம்ஸ்கியும் (Noam Chomsky) பொங்கிப்போய் இங்கிலாந்து கார்டியனில் ஒரு மறுப்புக் கட்டுரை எழுதியிருந்தார். புகழ்பெற்ற ஸலோவினிய இடதுசாரி புத்திஜீவியான சிசேக்கும் (Slavoj ZiZek ) அவர்கள் வங்குறோத்தை இன்னுமொரு கட்டுரையில் கிழித்திருந்தார். யாருக்குத்தான் வராது கோபம். உங்களுக்குச் சர்வாதிகார கொடுமை பற்றி ஏற்கனவே தெரியுமென்றால் ஏன் துனிசிய சர்வாதிகாரத்துக்கு 12 மில்லியன் டாலர் நிதி உதவி செய்தீர்கள்? எகிப்து, யோடான் மற்றும் கொலம்பியா என்று எத்தனையோ சர்வாதிகாரங்கள் ஏன் இன்னும் உங்கள் நிதி உதவிப் பட்டியலில் இருக்கிறார்கள் என்று நோம் சோம்ஸ்கி சாதாரணக் கேள்விகளைக் கேட்டிருந்தார். இதற்கவர் மூளையைப் பிழிய வேண்டியிருக்கவில்லை.
ஈரான் அணுஆயுதத்தை வைத்திருப்பது அப்பிராந்தியத்துக்கு ஆபத்தானது என்ற அமெரிக்க கொள்கையுடன் உடன்படுபவர்களை சனநாயகவாதிகளாக சித்தரிக்கும் அமெரிக்க அதிகாரத்தின் மொக்குத்தனத்தையும் என்ன செய்வது. அரேபிய சனநாயம் மத்திய கிழக்கின் ‘அமைதிக்கு’ முடிவு கொண்டுவரலாம் எனவும் அவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள். இஸ்ரேலுக்கெதிரான இஸ்லாமிய அடிப்படைவாத பயம்காட்டி இந்த நியாயத்தைத் தெண்டுகிறார்கள். ஆனால் இஸ்ரேலிய மக்களும் தமது அதிகார வர்க்கத்தின்மேல் கோபமும் வெறுப்பும் கொண்டிருப்பதை அவர்கள் அவதானிக்க மறுக்கிறார்கள். இரண்டு சிறு இஸ்ரேலிய தொழிற்சங்கங்கள் எகிப்திய புரட்சிக்கு ஆதரவு தெரிவித்திருப்பது அவர்களுக்கு அசௌகரியத்தை கொடுக்கிறது.
கெய்ரோவில் -டகிர் சதுக்கத்தில் – (இன்று விடுதலை சதுக்கம் என மக்களால் அழைக்கப்படுகிறது)- முஸ்லிம்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தபொழுது அவர்களைச்சுற்றி கைகோத்து நின்று எதிர்புரட்சிக்காரர்களிடமிருந்து அவர்களைக் காப்பாற்றிய ‘கிறிஸ்தவ’ எகிப்திய மக்களை நோக்கி முஸ்லிம் மக்களுக்குச் சகோதர வாஞ்சை ஏற்படுவதில் இவர்களுக்கென்ன வையிற்றெரிச்சல்?
போராட்டம் தொடங்கி 16ம் (09-02-11) நாள் எகிப்திய தொழிலாள வர்க்கமும் போராட்டத்தில் இணைந்து கொண்டமை மிக முக்கியமான திருப்புமுனை. நாடெங்கும் வேலை நிறுத்தங்கள் பரவத்தொடங்கின. அரச காரியாலங்கள் எல்லாம் அடித்து மூடப்பட்டன. ஆளும்கட்சி ஆதரவாளர்களைத் துரத்தித் தொழிலாளர் நலன்சார் தொழிற்சங்கங்களை உருவாக்கும் முயற்சிகளை பார்க்கக் கூடியதாக இருந்ததது.