வட்டுக்கோட்டைத் தீர்மானமும் ‘சோசலிசத் தமிழீழத்துக்கான’ கோரிக்கையும்-1

பகுதி 1

அண்மையில் வெளிநாடுகளில் நிகழ்த்தப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானம் (வ.தீ) சார்பான கருத்துக் கணிப்பீட்டில் வாக்களித்தவர்களில் மிகப்பெரும்பான்மையானவர்கள் இத்தீர்மானத்துக்குச் சார்பாக வாக்களித்துள்ளார்கள். இந்தக் கருத்துக் கணிப்பீட்டை ஒழுங்குபடுத்தியவர்கள், இது 1976ம் ஆண்டு வட்டுகோட்டையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலேயே இக்கணிப்பீடு நிகழ்த்தப்படுவதாகத் தெரிவித்திருந்தாலும், இதுபற்றிய தெளிவான கலந்துரையாடல் மக்கள் மத்தியில் நிகழ்த்தப்படவில்லை. தமிழீழத்துக்கு ஆதரவா? இல்லையா? என்ற அடிப்படையில் ஆம் / இல்லை என்ற கணிப்பீடு மட்டுமே பெறப்பட்டது. வாக்களித்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழீழத்துக்குத் தமது ஆதரவை வழங்கியிருப்பது தெளிவானது. தமிழ்பேசும் மக்களின் உரிமைக்கான போராட்டம் தொடரவேண்டும் என்பதில் வெளிநாடுகளில் வாழும் பெரும்பான்மை தமிழ்மக்கள் மத்தியில் ஆதரவு உண்டு என்பதை இந்த வாக்கெடுப்பு நிலைநாட்டியுள்ளது.
இருப்பினும் இந்தச் ‘சோசலிசத் தமிழீழம்’ எவ்வாறு வென்றெடுக்கப்படப்போகிறது என்ற கேள்வி பதிலின்றியே விடப்பட்டுள்ளது. வாக்களித்த அனைவரும் வ.தீ க்கே ஆதரவாக வாக்களித்துள்ளார்கள் என்று எடுத்துக்கொண்டால் இத்தீர்மானம் பற்றிய பரந்த கலந்துரையாடல் அவசியமானது. மக்கள் இன்று யாரையும் நம்பமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இருப்பினும் ஒடுக்குமுறையை ஒட்டுமொத்தமாக இல்லாதொழிப்பதற்கு ஒன்றிணைந்த நீண்ட போராட்டத்தை நடாத்தவேண்டியதும் அவசியத் தேவையாகவுள்ளது.

தமிழ்பேசும் மக்கள் ஆளும் மற்றும் அதிகார சக்திகளால் தொடந்து ஏமாற்றப்பட்டு வந்துள்ளார்கள். யுத்தத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களின் நம்பிக்கையை நியாயமான போராட்டத்துக்கு மீண்டும் வென்றெடுப்பது கடினமான பணி.

தமிழர் விடுதலை கூட்டணியால் (த.வி.கூ) நிறைவேற்றப்பட்ட வ.தீ ஒரு வருடத்துக்குள்ளேயே அவர்களால் கைவிடப்பட்டது எமக்கு தெரியும். அடுத்த ஆண்டு 1977ல் நடந்த தேர்தலில் கூட்டணி ஐக்கிய தேசிய கட்சியுடன் (ஐ.தே.க) ஏற்படுத்திகொண்ட சமரசம் மீண்டும் மக்களின் எதிர்காலத்தைச் சூதாடியதை அறிவோம். கூட்டணி ஆதரவு வழங்கிய ஜக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்த கையுடன் தமிழ் பேசும் மக்களின் அபிலாசைகளைக் குப்பையில் எறிந்த கதை நாமறிந்ததே. இதே வரலாறு மீண்டும் அரங்கேறுவதை இன்று அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.

வரலாறு ஒருபோதும் ஒரேமாதிரித் திரும்ப நிகழ்வதில்லை. இருப்பினும் சில வரலாற்று நிகழ்வுகள் மீள நிகழ்வதுபோல் நடப்பதை நாம் அவதானிக்கலாம். தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்யும் அரசியலுக்கும் (த.தே.கூ) 1970களில் த.வி.கூட்டணி செய்த அரசியலுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதைக் காணலாம். த.தே.கூட்டமைப்பு, தமழ்பேசும் மக்களை வேட்டையாடிய ஜெனரல் பொன்சேகாவுக்கு வாக்களிக்கும்படி மக்களைக் கேட்டதும், அதை எதிர்த்த சிவாஜிலிங்கம் போன்றவர்களைப் பற்றி ஜனாதிபதியிடம் காசு வாங்கிவிட்டார்கள் என்று வதந்திகள் பரப்பியதும், மேலும் பல நயவஞ்சக உத்திகளின் மூலம் பலரை ஓரங்கட்டியதும் அனைவருக்கும் தெரியும். பொன்சேகாவுக்கு வாக்களிக்கும்படி சிங்கள மக்களைக் கேட்பதே பிழை. கேவலத்திலும் கேவலமாக இந்த ஜெனரலால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட தமிழ்பேசும் மக்களை அவருக்கு வாக்களிக்கும்படி கேட்டது போக்கிலித்தனமான அரசியல்.

எதிர்ப்பை எப்படி ஒருங்கமைப்பது என்பது பற்றிய ஒருசொட்டு அறிவுமற்ற முறையில் இயங்கிவருகின்றனர் த.தே. கூட்டமைப்பு தலைமைகள். ஆனால் உலகெங்கும் வாழும் தம்மை தாமே ‘தலைமைகளாக’ உருவகிக்க அந்தரப்படும் பலர் மத்தியிலும் இந்தத் தெளிவின்மையைக் காண முடிகிறது. இவர்களிற் சில முட்டாள்கள் அரசியல் வியாக்கியானத்தை விட்டுப்போட்டு நாட்டுக்குப்போய் மூலதனமிட்டு வியாபாரம் செய்யவேண்டும் என்று வாதிடுகின்றனர். ஏகாதிபத்திய அரசுகளுடன் ஒட்டுறவாடுவதன் மூலம் எதிர்ப்பைப் பலப்படுத்தலாம் என்று வேறு சிலர் கனவு வளர்க்கின்றனர். இலங்கையின் பெரும்பான்மை அரசியலுடன் நாம் இணங்கிப் போக வேண்டும் என்று சிலர் வாதிக்கின்றனர். பெரும்பான்மை அரசியலுடன் இணங்கி, இலங்கை ஆளும் வர்க்கத்துக்குள் ஏற்படும் பிளவுகளைப் பயன்படுத்துவதன் மூலம், நாம் தமிழ் மக்களின் உரிமைகளைச் சிறுகச் சிறுக வென்றெடுத்துவிட முடியும் என்பது அவர்களின் கணிப்பு!. இலங்கை ‘சுதந்திரம்’ அடைந்த காலந் தொட்டுத் தமிழ்த்தலைமைகள் இதைத்தான் செய்து வருகின்றன. இது இலங்கை அரசுக்கும் உவப்பான செய்தி! இலங்கை வாழ் தமிழ்ச் சிறுபான்மை உலகின் அதிகூடிய சலுகைகள் கொண்ட சிறுபான்மை என்று வாதிட்டுவரும் இலங்கை அரசுக்கு பெரும்பான்மை அரசியலுடன் ஒத்துப்போக முன்வருபவர்கள் உவப்பாயிருப்பது ஆச்சரியமானதல்ல.

தமிழ் மக்கள் சிறுபான்மையினர் என்பதை உணர்ந்து அதன்படி நடக்கவேண்டும் என்பது இலங்கை அரசின் ‘கோரிக்கை’. அதாவது பெரும்பான்மை மக்கள் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளையும் சிறுபான்மை இனம் அனுபவிப்பது சாத்தியமில்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிறார்கள். இந்தத் தர்க்கம் உலகெங்கும் ‘எடுபடக்கூடிய’ தர்க்கமே. இங்கிலாந்து, அமெரிக்கா முதலான வளர்ச்சியடைந்த நாடுகள் உட்பட உலகெங்கும் பல நாடுகளில் வாழும் சிறுபான்மையினர் (தமிழ் மற்றும் ஏனைய இலங்கையர் உட்பட) பெரும்பான்மை மக்களுக்கு நிகரான உரிமைகளை அனுபவிக்க முடிவதில்லை. அமெரிக்காவில் வீசிய கடும்புயல் கத்தறீனா அமெரிக்க கறுப்பின மக்கள் வாழும் கொடிய அலங்கோலத்தை உலகுக்குப் படம்போட்டுக் காட்டியதை நாமெல்லாம் பார்த்தோம். இங்கிலாந்தில் ஆசிய, ஆபிரிக்க மக்கள் மிக வறுமையான பிரதேசங்களில் – நவ காலனித்துவ நாடுகளுக்கு நிகரான வாழ்கைத்தரத்தில் – செறிந்து வாழ்கின்றனர். இந்த யதார்த்தத்தில் இருந்து நாம் தப்ப முடியாது. இந்த வளர்ச்சியடைந்த நாட்டு அரசுகளைப் பொறுத்த வரையில், இலங்கையில் சிறுபான்மையினர் ஏதோ ஒரு விதத்தில் ஒடுக்கப்படுவது பற்றி அக்கறை கொள்ளப் போவதில்லை. ‘இலங்கையில் குண்டு வெடிக்குது அங்க இருக்கேலாது” என்று அகதி அந்தஸ்து கோரியவர்களை நோக்கி ‘இங்கயும் தான் தீவிரவாதிகளின் குண்டு வெடிக்குது” என்று கூறி நீதிபதிகள் அகதி கோரிக்கைகளை நிராகரித்தது அகதிகளாக பிரான்சில் இருப்பவர்களுக்குத் தெரியும். நாற்பதாயிரம் மக்களைப் படுகொலை செய்துள்ளது இலங்கை அரசு என்றால் இங்கிலாந்து, அமெரிக்க நாடுகள் மில்லியன் கணக்கில் மக்களை கொன்று தள்ளியுள்ளன. இந்த யதார்த்தத்துக்கெதிராக அரசியற் தெளிவின்றி நாம் போராட முடியாது.

அரசியற் தெளிவு – எப்போதும் மக்கள் நலன்சார் நிலைப்பாடு –போராட்டத்துக்கான நீண்டகால அர்ப்பணிப்பு முதலியன இன்றி நாம் மக்கள் நலன் பற்றி கதைப்பதில் அர்த்தமில்லை. ‘டிப்ளொமசி’ விளையாட்டுகள் மூலம் நாம் உரிமைகளை இலகுவாக வென்றெடுத்துவிடலாம் என்று நம்புவது மக்களைத் தவறான முறையில் வழிப்படுத்திப் படுதோல்விக்கே இட்டுச்செல்லும். நோர்வே அரசின் ‘டிப்ளொமசி’ நல்ல உதாரணம்.
எரிக் சொல்கைம் என்ற நோர்வோ நாட்டவரின் பெயர் நோர்வேயில் வீட்டுக்குவீடு தெரியாத பெயராக இருக்கலாம் ஆனால் இந்த நோர்வே மந்திரியின் பெயர் பெரும்பான்மைத் தமிழ்பேசும் மக்கள் நன்கறிந்த பெயர். ஒருகாலத்தில் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கப்போகும் வெற்றி வீரனாகத் தன்னைக் காட்டிகொண்ட இவர், இன்று மகிந்த ராஜபக்ச மீண்டும் தேர்தலில் வென்றதை மனம்குளிரப் பாராட்டுகிறார். நோர்வே அரசு இலங்கை அரசுடன் தொடர்ந்தும் தம் நல்லுறவைப் பேணும் என்று உறுதியளிக்கிறார்.

வர்க்க அடிப்படையில் சமூகத்தைப் புரிந்துகொள்ளுபவர்களுக்கு எரிக்சொல்கைமின் நடவடிக்கைகள் ஆச்சரியமானதொன்றல்ல. முதலாளித்துவ ஆளும் வர்க்கம் சார்ந்து இயங்குபவர்கள் ஒரு போதும் ஒடுக்கப்படும் மக்களுக்கு நண்பர்களாக இருந்ததில்லை. ஆளும் வர்க்கங்களுக்கிடையில் சொத்துப் பறிக்கும் போட்டிகளும் முரண்பாடுகளும் இருக்கலாம். ஆனால் ‘லாபம் செய்தல்’ என்ற அடிப்படையில் அவர்கள் அனைவரும் செய்வது ஒடுக்கப்படும் மக்களின் வயித்திலடிக்கும் அரசியலே. இவர்கள் லாபமின்றி இயங்க மாட்டார்கள். வடக்கு, கிழக்கில் இருக்கும் சொத்துக்களைப் பணயம் வைத்து ஆசைகாட்டித் தமிழ்மக்கள் நலன்நோக்கி உலகின் சில ‘ஆளும் சக்திகளை’ திருப்பலாம் என்றும் சிலர் நம்புகிறார்கள். இது ஒரு மாபெரும் பிழை. வாடும் மக்களை வறுத்தெடுக்கும் போக்கிரித்தனமான பாதைக்கே இந்த வாதம் இட்டுச் செல்லும். ஆளும் வர்க்கம் மற்றயை ஆளுஞ் சக்திகளுடன் இணைந்தோ-அடிபணியவைத்தோ எவ்வாறு சுரண்டலைப் பெருக்கலாம் என்று இயங்குவார்களே தவிர ஒருபோதும் ஒடுக்கப்படும் மக்கள் சார்பில் நின்று அவர்கள் தமது பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுக்கப்போவதில்லை. நவ காலனித்துவ ஆளும் வர்க்கம் உடன்பட மறுக்கும் பொழுது மேற்கத்தேய ஏகாதிபத்தியம் இராணுவ பலத்தை –பொருளாதார பலத்தைக் கொண்டு தமது நலனுக்கான முன்னெடுப்பைச் செய்வதை நாம் ஈராக்,ஆப்கானிஸ்தான் முதற்கொண்டு உலகெங்கும் பல்வேறு நாடுகளிற் பார்த்துவருகிறோம். அதேபோல் மனித உரிமை, ஜனநாயகம் என்பன ‘பிரச்சார’ ஆயதங்களாக மட்டுமே ஆளும் வர்க்கம் பாவிப்பதையும் நாம் அவதானிக்க வேண்டும். இது அந்த நாடுகளில் இருக்கும் ஒடுக்கப்படும் மக்கள் நலன் என்ற போர்வையில் அந்நாட்டு வளங்களைக் கைப்பற்றும் முயற்சியே தவிர மக்கள் நலன்களை முன்னெடுப்பதற்கான முயற்சியல்ல. முரண்களுக்குள் மாட்டுப்பட்டு சாவதும் அழிவதும் சாதாரண சனங்களே.

மக்களுக்கு அழிவை மட்டுமே கொண்டுவரும் இந்த விசர்த்தனமான போக்குகள் நிறுத்தப்படவேண்டும். ஒருகாலமும் ஆளும்வர்க்கக் கட்சிகள் தலைவர்கள் ஒடுக்கப்படும் மக்கள் சார்ந்து இயங்கப்போவதில்லை என்பதை நாம் உணர்ந்தாக வேண்டும். ஆங்காங்கு நாம் அடக்கும் வர்க்கத்துக்கு எதிராக நடக்கும் போராட்டங்களுடன் இணைந்து கொள்வதன் மூலம் மட்டுமே தமிழ்பேசும் மக்களின் உரிமைக்கான போராட்டம் பலப்படுத்தப்பட முடியும். ‘தமிழ் ஒருங்கமைப்பு’ வேலைகளில் ஈடுபடுவதன் மூலம் நாம் சாதிக்க நினைப்பது இதையே.

தமது வியாபாரங்களை முதன்மைபடுத்திச் சுயநலமாக சிந்திப்பவர்கள் எம்மை கனவுலகவாதிகள் என்று தட்டிக் கழிக்கப்பார்க்கின்றார்கள். ‘அரச’ ஆதரவு இன்றி வெற்றி பெற முடியாது என்று கொக்கரிக்கிறார்கள். இவர்களைப்பற்றி அக்கறைகொள்ள முடியாது. இலங்கை ஆளும் வர்க்கத்திடமும் ‘சர்வதேச ஆளும் வர்க்கத்திடமும்’ பிச்சை எடுக்க முடியாது. ‘சர்வதேசச் சமூகம்’ என்ற சொற்றொடரை நாம் ‘சர்வதேச ஆளும் வர்க்கம்’ என்ற அர்த்தத்திலேயே பாவித்து வந்துள்ளோம். ஒருபோதும் சாதாரண மக்களைக் குறித்து நாம் இச்சொற்றொடரைக் குறிக்கவில்லை. ஆயிரக்கணக்கான மக்கள் வேட்டையாடப்பட்டபோது வேடிக்கை பார்த்துகொண்டிருந்த இந்தச் ‘சர்வதேச ஆளும் வர்க்கத்தில்’ மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்த முயற்சிப்பது – இலங்கை அடக்குமுறை அரசில் தொடர்ந்து நம்பிக்கை வைப்பது பற்றி மீண்டும் பேசப்படுவது – உயிரைப் பதகழிக்க வைக்கிறது.

ஒடுக்குமுறைகளுக்கெதிரான போராட்டத்தை ஒடுக்குபவர்களுடன் உறவாடுவதன் மூலம் முன்னெடுக்க முடியாது. எம்முடன் இணைந்து போராடத் தயாரானவர்களுடன் இணைந்து நாம் எமது போராட்டத்தை வலுப்படுத்தமுடியுமே தவிர போராட்டத்தை முன்னெடுக்க வேறு சிறந்த வழி இல்லை. இவ்வாறு பலமான போராட்டத்தை கட்டி எழுப்பக்கூடியது பலரும் நினைப்பதுபோல் சாதிக்க முடியாததல்ல. தமிழ்பேசும் மக்களைப் பாழுங் கிணற்றில் தள்ளிய அதே ஆளும் வர்க்கத்திடம் கெஞ்சிக் கூத்தாடிக் கையேந்தி உரிமை பிச்சை எடுக்கலாம் என்று சிலர் சிந்திப்பதை விளங்கிகொள்ள முடியவில்லை. பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நட்புப் பாராட்டி அவர்களிடம் கெஞ்சி கூத்தாடுவதன் மூலம் இலங்கையில் இருக்கும் தமிழ் மக்களினது உரிமைகளையோ அல்லது வெளிநாடுகளில் அல்லற்படும் தமிழ்பேசும் மக்களின் எந்த உரிமைகளையோ யாருமே வென்றுவிட முடியாது. இந்த அரசியற் குருட்டுத்தனத்தை முன்னெடுப்பவர்கள் நேர்மையற்ற சுயநலவாதிகளே என்று சொல்வது மிகையில்லை.

இங்கிலாந்தில் நடக்கும் சில நடவடிக்கைகள் இந்தக் குருட்டுத்தனத்துக்கு நல்ல உதாரணங்கள். இங்கிலாந்து கன்சவேட்டிவ் கட்சி, இலங்கை அரசுக்குத் தனது முழு ஆதரவையும் வழங்குவது பற்றி ஒருபோதும் ஒழித்து மறைத்து வந்ததில்லை. தமிழ்பேசும் மக்கள் உட்பட அனைத்துச் சிறுபான்மையினர் மீதும் யுத்தப் பிரகடனம் செய்யும் அடக்குமுறை அரசியற் கேட்பாடுகளை கொண்ட இக்கட்சி ராஜபக்ச அரசுக்கு ஆதரவழிப்பது நமக்கோ தெருத்தெருவாய் நின்று போராடும் தமிழ், முஸ்லிம், கறுப்பின ஆசிய இளைஞர்களுக்கோ ஆச்சரியமான விடயமில்லை. அதேபோல் புதிய லேபர் கட்சியினரும் ‘மனித உரிமைகள் மதிக்கப்படவேண்டும்’ என்பதுபோன்ற போக்கிலிப் பொய்க் கரிசனைக்கு அப்பால் எதுக்கும் வக்கத்தவர்கள் என்பது நாமறிவோம்.

லேபர் மற்றும் லிபரல் கட்சிகளில் இருக்கும் ஒருசிலர் ஒடுக்கப்படும் மக்கள் சார்பில் சொல்லளவிலாவது நிற்பதுண்டு. ஜோன் மக்டொனால்ட் போன்றவர்களின் அரசியல் வாழ்வு மதிப்புக்குரியதே. இருப்பினும் இக்கட்சிகள் தமிழ்பேசும் மக்களுக்காகவோ அல்லது உலகெங்கும் நொருக்கி ஒடுக்கப்படும் மக்களுக்காகவோ குரல்கொடுக்கப்போவதில்லை என்பது திண்ணம். இவர்களுக்கு ‘அழுத்தம்’ கொடுக்கும் போராட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் தவறில்லை. ஆனால் இவர்களுடன் நாம் சேர்ந்து அவர்களுக்காக வேலை செய்து அவர்களுக்கு காசு சேர்த்து கொடுக்க அவர்கள் இலங்கை அரசுடன் ஒட்டி உறவாடுவார்கள் என்பதுதான் உண்மை.

நாமெடுக்கும் அரசியல் முடிவுகள் இலங்கை மக்களைப் பொறுத்தவரையில் அவர்தம் உயிர்வாழ்தலை நிர்ணயிக்கும் முடிவுகள். இதனால் நாம் எமது முடிவுகளை நன்காராய்ந்து மக்கள் சார்ந்து எடுக்கவேண்டும். ‘வெற்றி’ பெறக்கூடிய கட்சிகளுக்கு வேட்பாளர்களுக்கு மட்டுமே ‘ஆதரவு’ என்பதுபோன்ற பிழையான கருத்துகள் முடிவுக்கு வரவேண்டும். இந்தப் போக்குகள் ஆளும் வர்க்க நலன் சார்ந்தே இயங்கும். ஒடுக்கப்படும் மக்களை ஒன்றிணைத்த போராட்ட சக்தியைக் கட்டியமைப்பது சாதாரண வேலையல்ல. ஆனால் அதை தவிர வேறு வழியில்லை.

தெற்காசிய அல்லது உலகளாவிய சோசலிசச் சம்மேளனத்தின் பகுதியாக சோசலிசத் தமிழீழத்துக்கான போராட்டம் தொடரப்படவேண்டியதே. இதுதான் எமது போராட்ட நோக்கம் என்றால் அதற்காகப் போராடிக்கொண்டிருக்கும் சக்திகளை புறக்கணிப்பது மாபெரும் தவறு. உதாரணமாக ஐக்கிய சோசலிசக் கட்சி தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக நீண்டகாலமாகப் போராடி வருகிறது. இதைப் புறக்கணித்துத் தமிழ்பேசும் மக்களின் போராட்டம் நகர முடியாது.

வெளிநாடுகளில் வாழும் தமிழ் பேசும் மக்களும் ‘அட்டகாசமான’ வாழ்க்கை வாழவில்லை. ஒடுக்கும் மேற்கத்தேய ஆளும் வர்க்க அரசியலால் பல்வேறு விதத்திலும் பாதிக்கப்பட்டுக் கடின வாழ்க்கையையே அவர்கள் வாழ்கிறார்கள். அதனால் ஒடுக்கப்படும் மக்களுக்கான போராட்டம் என்பது அனைத்து விதமான ஒடுக்கும் சக்திகளுக்கும் எதிரான போராட்டமே. முதலாளித்துவ அரசுகளுக்கு ஆதரவளிப்பதற்கும் ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டத்திற்கும் எவ்வித சம்மந்தமும் கிடையாது. ஆளும் வர்க்கச் சுரண்டலில் எஞ்சும் சிதிலங்களைப் பிச்சையெடுத்துப் பணம் சேர்ப்பதைப் ‘போராட்டமாக’ புலம்புபவர்களுக்கும் உண்மையில் நியாயமான மக்கள் போராட்டத்தை கட்டமைக்க முயலுபவர்களுக்கும் இடையில் ஒற்றுமை இருக்கமுடியாது. இந்தப் புரிதலுடனேயே நாம் வட்டுகோட்டைத் தீர்மானத்தை அணுக வேண்டும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *