ஒடுக்கப்படுபவரின் எதிர்ப்பை ஒழுங்கமைப்பது எப்படி?
* 20ம் நூற்றாண்டில் 160 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் யுத்தத்துக்குப் பலியாகியுள்ளனர். இந்த நூற்றாண்டு தொடங்கியதில் இருந்து 4 மில்லியனுக்கும் மேற்பட்ட உயிர்கள் அநாவசியமாக அழிக்கப்பட்டுள்ளன. கொங்கோவில் 2 மில்லியன் ஈராக்கில் ஒரு மில்லியன் என்று விரியும் உயிரிழப்புகளில் ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழ் உயிர்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
* இந்த அக்கிரமங்கள் வெளிப்படையாகத் தெரிந்தாலும் உலகின் பெரும்பான்மை மக்கள் இந்தக் கொடூரத்துக்கு எதிராக ஒருங்கிணையவில்லை. ஒரு சிறுபான்மையினரே உலகெங்கும் இதற்கெதிரான எதிர்ப்பைச் சரியான வழியில் முன்னெடுத்து வருகிறார்கள். பெரும்பான்மை மக்கள் ‘சுயநலமானவர்கள்’ என்பதல்ல அதன் அர்த்தம். ஆளையாள் அடித்துச் சாக்காட்டிகொண்டு பெரும்பான்மை மக்களைப் பட்டினிபோட்டுச் சித்திரவதை செய்துகொண்டு – படுமோசமான பேய்க்காட்டல்களை அரசியலாகப் புலுடாவிட்டு – அடக்குமுறைகளை அநியாயங்களை ஜனநாயகமாகப் பாவனை காட்டிஇ உலகு ஒழுங்கமைக்கப்படுவது தவிர்க்கமுடியாதது என்று யாரும் நம்புவதில்லை. அடக்கும் வர்க்கத்தின் அரசியல் இந்த ஒழுங்கமைப்புக்கு வெளியே மாற்று இல்லை என்பதை நிறுவுவதன் மூலம் அடக்குவோர் ‘சுய நலன்களைத்’ தற்காத்துக் கொள்கிறது. ஒடுக்குவோர் நலன்சார் கலாச்சாரக் கட்டமைப்புக்களை அதிகாரமயப்படுத்தி-முதன்மைப்படுத்தி –அதையே நியாயமான வழியாகக் காட்டுகிறார்கள்.
* இதனாற்தான் ஒடுக்கப்படுவோர் உலக வழிமுறைகளை கடுமையாக எதிர்க்கவேண்டியுள்ளது. தற்காலக் கலாச்சார-அரசியல் கட்டமைப்புக்குப் பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பு இருந்தாலும் அந்த எதிர்ப்பு ஒழுங்கமைக்கப்படுவதில் பல்வேறு சிதறல்களைக் காணக்கூடியதாக இருக்கிறது. மக்களின் பன்முகத்தன்மை அதற்குக் காரணமல்ல. மாறாகப் பன்முக வித்தியாசங்களைக் கூர்மைப்படுத்தி எதிர்ப்பின் ஒழுங்கமைவை உடைப்பதில் அதிகாரம் கட்டமைக்கும் விழுமியங்கள் இயங்குவதை நாம் அவதானிக்க வேண்டும். அதனாற்தான் ஒடுக்குமுறைக்கு எதிராக போராட முன்வருபவர்கள் எதிர்ப்பின் வடிவங்களை சிந்திக்கவேண்டியது மிக முக்கியமானதாக இருக்கிறது.
* புனிதமான வழிமுறைகள் என்று எதுவுமில்லை. ‘சமூக விஞ்ஞானம்’ கணித முறை விதிகளுக்குள்ளால் இயங்குவதில்லை. நேர்கோட்டுச் சிந்தனை முறை சமூகத்தைப் புரிவதற்கோ எதிர்ப்பைக் கட்டமைப்பதற்கோ உகந்ததல்ல.
* நீண்டகால மனித வரலாற்றில் இருந்து நாம் கற்றுக்கொண்ட ஏராளமான அறிதல்கள் உண்டு. மனித-சமூக இயல்புகள் பற்றிப் பல அறிதல்களை நாம் வசப்படுத்தியுள்ளோம். அடக்குமுறைக்கு உட்படும் மக்கள் அதற்கெதிரான எதிர்ப்பைச் செய்வர் என்ற அடிப்படை அறிதலும் வரலாறும் எமக்குக் கற்று கொடுத்த ஒன்றே. எதிர்ப்பு பலவந்தமாக முடக்கப்பட்டாலும் அடக்குமுறைக்கு எதிராக எதிர்ப்பு இருக்கும் என்பது கேள்விக்கப்பாற்பட்டது. சில சமூக அறிதல்கள் கேள்விக்கப்பாற்பட்டது என்று குறிப்பதன் மூலம் நாம் அவற்றை பொதுமைப்படுத்தப்பட்ட சமூக நிறுவல்களாக – சமூக விஞ்ஞானமாக புரிந்து கொள்கிறோம்.
*இதுபோன்ற சமூகம் சார்ந்த பரந்த அறிதலுக்கு மார்க்சியம் மிகப்பெரும் பங்காற்றியுள்ளது. மார்க்சிய அறிதலை பயன்படுத்துபவர்கள் அடக்கு முறைக்கு எதிரான பெரும் சவாலைக் கட்டி மாற்று சமுதாயம் பற்றி சிந்திக்கிறார்கள். மார்க்சியம் போல் ஒடுக்குதலுக்கு எதிர்ப்பை பலப்படுத்திய உத்திகள் போல் பலம்வாய்ந்த உத்திகள் வரலாற்றில் இல்லை என்பதை உலக வரலாற்றை மேலோட்டமாக அறிந்தவர்களாலேயே உணர்ந்துகொள்ள முடியும். தற்போதய சமமற்ற உலகின் அதிகாரத்துக்கு பெரும் சவாலாக மக்களை திரட்டி பல்வேறு வெற்றிகளை பெற்று தந்தது மார்க்சியம்தான் என்பதை தெரிந்து கொள்வது கடினமானதல்ல.
* மார்க்சியம் வழிநடத்தும் எதிர்ப்பு வெற்றிகளை ஈட்டிதருவதாக இருப்பதால் அதிகாரம் தமது முழுபலத்தையும் கொண்டு மார்க்சியர்களை ஒடுக்குவதை நாமறிவோம். ஒடுக்குமுறைக்கு எதிரான நியாயமான எதிர்ப்பை செய்ய விரும்பும் ‘நேர்மையான’ நோக்குடையவர்கள் மார்க்சியத்தை நோக்கி நகர்வது தவிர்க்கமுடியாதது. எதிர்ப்பைச் சிதறடிக்கும் அடக்குமுறை கடந்த நூற்றாண்டில் மார்க்சிய எதிர்ப்பை முறியடிக்கும் முயற்சிகளில் வெற்றிகளை ஈட்டியுள்ளது. இருப்பினும் வர்க்கங்களுக்கிடையிலான யுத்தமாக நகர்ந்துகொண்டிருக்கும் உலகவரலாற்றில் ஒடுக்கப்படும் மக்கள் மார்க்சியத்தை மீண்டும் மீண்டும் கண்டெடுத்து எதிர்ப்பை வடிவமைப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது. அது ஒடுக்கப்படுபவர்களுக்கு தொடர்ந்தும் வெற்றிகளை ஈட்டித் தந்துகொண்டிருக்கிறது.
* வறுமைக்குள் வீழ்த்தப்பட்டு ஒடுக்கப்பட்டுகொண்டிருந்த ரஸ்ய மக்களை விடுதலை செய்த ரஸ்ய புரட்சியின் வெற்றிகளை நாம் இன்றும் அனுபவித்து வருகிறோம். இருப்பினும் ஒடுக்குமுறையில் இருந்து மனிதகுலத்தை விடுதலை செய்தல்நோக்கி ரஸ்யப் புரட்சியின் வெற்றிகள் தொடரவில்லை. அதேபோற்தான் மாபெரும் சீனப்புரட்சியும் அடிமைகளாக மிருகங்களாக மிதிக்கப்பட்டுக் கொண்டிருந்த லட்சக்கணக்கான மக்களை அடிமைத்தளையில் இருந்து மீட்டெடுத்தது. கியூபா, சிலி, ஸ்பெயின், போர்த்துக்கல், கங்கேரி, ஈரான், கானா என்று சமூகம் விடுதலை நோக்கி நகர்ந்த உதாரணங்கள் உலகெங்கும் பரவிகிடக்கின்றன. இந்த நகர்வுகள் எல்லாம் வீணாய்ப் போன நடவடிக்கைகள் என்று அதிகாரம் வெற்றிப் பெருமிதத்திற் பூரித்துப் பம்மாத்து விடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எதிர்காலத்து எதிர்ப்புகளை முறியடிக்க இறந்தகால மக்கள் எழுச்சிகளை கேவலப்படுத்துவது அவர்களுக்கு அவசியமாக இருக்கிறது. ஆனால் அந்த எழுச்சிகள் மூலம் ஊருப்பட்ட(ஏராளம்) ஜனநாயக உரிமைகளை மக்கள் வென்றெடுத்துள்ளார்கள். எழுச்சிகளைக் கிண்டலடிக்கும் அதே தருணம் வென்றெடுக்கப்பட்ட இந்த உரிமைகளை மக்களிடமிருந்து மீண்டும் பறிக்க அதிகாரம் திணறிக் கொண்டிருப்பதை நாம் பார்க்கக்கூடியதாக இருக்கிறது.
*இந்த உலகநியதியின் அடிப்படையிற்தான் சரியான எதிர்ப்பைச் சிந்திப்பவர்கள் சில தீர்க்கமான அறிதல்களை ஏற்றுகொள்கிறார்கள். வலதுசாரி அரசின் நலன்கள் ஒடுக்கப்பட்டுகொண்டிருக்கும் மக்கள் நலன்களில் இருந்து மாறுபட்டது என்பதை வரலாறு நமக்கு கற்று தந்துள்ளது. அதிகாரம் எந்த நலன்சார்ந்து இயங்குகிறது? -அது எவ்வாறு தனது நலன்களை நிலைநாட்டுகிறது? என்ற ஆழமான அறிதல் இன்றி அதிகாரத்துக்கு எதிரான எதிர்ப்பைக் கட்டுவது கடினமானது. அதிகாரத்தை அடையாளப்படுத்தி அதிகாரம்சார் நலனில் இயங்கும் நிறுவனங்களை அடையாளம் கண்டு எதிர்ப்பை வடிவமைக்காமல் எப்படிப் போராடுவது? எதிரி யார் என்று தெரியாமல் எப்படி எதிர்ப்பைச் செய்வது?
*எதிரி யார்? என்பதன் விடை சுலபமானதல்ல. அதிகாரத்தை குறிவைத்து அதன் நலன்சார் அமைப்புகளைத் தகர்ப்பதற்கு எதிர்ப்பை ஒன்றிணைக்கும் மார்க்சியம் அதிகாரத்தை எல்லாத் தளங்களிலும் எதிர்க்கும் உத்தியாகிறது. அதனாற்தான் மார்க்சியம் எப்பொழுதும் ஒடுக்கப்படுபவர் நலன்சார்ந்து சிந்திப்பதாக இருக்கிறது.
* ஒடுக்கப்படும் தமிழ் மக்கள் தமது எதிர்ப்பை பலப்படுத்துவது எவ்வாறு? ஏதோ ஒரு வகையில் ஒடுக்குமுறைகளை செய்துகொண்டிருக்கும் அதிகாரங்களுடன் நட்பை பேணுவதன் மூலம் நாம் எமது எதிர்ப்பை பலப்படுத்தலாம் என்று நினைப்பது முட்டாள்தனமானது. காஸ்மீரில் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஒடுக்கும் இந்திய வலதுசாரி அரசு இலங்கை தமிழரின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் என்று எதிர்பார்ப்பது சரியா? தமிழரின் சுய நிர்ணய உரிமை வழங்கப்படுவதன் மூலம் இந்திய அதிகாரத்தின் பல்வேறு நலன்கள் திருப்திப்படுத்தப்படும் என்று காட்டுவதன் மூலம் இந்திய அதிகாரத்தை வென்றெடுக்க முடியும் என்று சிலர் வாதிடுகிறார்கள். இந்திய அதிகாரத்தின் நலம் என்று நாம் எதைச் சொல்கிறோம்?. இந்தியாவில் பெரும்பான்மை மக்களை வறுமைக்குள் புரட்டி சுரண்டித் தள்ளிக்கொண்டிருக்கும் இந்திய அரசுக்கு இலங்கையின் வடக்கு –கிழக்கை மேலதிக சுரண்டலுக்காக நாம் திறந்து விடுவதன் மூலம் மக்களுக்கு விடிவு வரும் என்று நினைப்பது முட்டாள்தனமானதல்லவா? அடிமைச் சங்கிலியை உடைப்பதற்கு பதிலாக எந்த சங்கிலியால் அடிமைப்படுத்தப்படுகிறோம் என்று நாமாகத் தீர்மானிக்கும் உரிமை போதும் என்று சொல்வது போன்ற முட்டாள்தனமது.
*சில உரிமைகளை விட்டுக் கொடுத்துச் சில உரிமைகளை வெல்லும் உலகில் நாம் இல்லை. விட்டுகொடுக்கும் உரிமைகளை நாம் மீண்டும் பெற நாம் மீண்டும் பெரும்போர் செய்யவேண்டியிருக்கும். வென்றெடுக்கப்பட்ட எந்த உரிமைகளையும் நாமாக விட்டுகொடுக்க நாம் ஒருபோதும் முன்வரக்கூடாது.
*ஒடுக்கப்படுபவர்கள் ஒன்றுபடுவதுதான் அதிகாரத்துக்குக் கிலி உண்டாக்கும் விடயம். காஸ்மீரில் மற்றும் உலகெங்கும் ஒடுக்கப்படுபவர்கள் இணைவதுதான் எதிர்ப்பைப் பலப்படுத்த சிறந்த வழி. அதிகாரம் எம்மைவிட பலமாக இருக்கிறது என்பதற்காக நாம் அதிகாரத்துக்கு அடிபணிய வேண்டும் என்ற அவசியமில்லை. எதிர்ப்பு ஏதாவது ஒரு அதிகாரத்தின் உதவியுடன் தான் நிகழவேண்டும் என்று நினைப்பது மடத்தனமானது.