மேலும் சில விளக்கங்கள் – ஹரி இராசலெட்சுமிக்கு
சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு தொடர்பான முகப்புத்தக உரையாடலின்ஒரு பகுதி இங்கு பதிவு செய்யப்படுகிறது.
அன்புள்ள ஹரி இராசலெட்சுமி,
பொறுப்பான-நிதானமான பதிலுக்கு நன்றி. தமிழ் இலக்கியவாதிகளிடம் அரிதாகக் காணக் கிடைக்கும் பண்பு இது. முதலில் உங்களுடன் உடன்படும் விசயங்களைச் சுட்ட விரும்புகிறேன்.
இலங்கையில் இருக்கும் மக்கள், கூட்டம் போடுவதற்கும்-கொண்டாட்டங்களை செய்வதற்கும் -ஏன் நல்லூர் கோயிலுக்குப் போவதற்கும் இருக்கும் அவர்கள் உரிமையை நாம் மறுக்கவில்லை. அதேபோல் இம்மாநாட்டுக்கு பின்னால் இலங்கை அரசு இருந்து இயக்குகிறது-அரசின் காசு வேலை செய்கிறது என்ற எஸ்.பொ வின் குற்றச்சாட்டுக்கு இன்றுவரை எந்த ஆதாரங்களுமில்லை. ஆதாரங்களற்ற ‘ஊகம்’ –அது சரியோ பிழையோ – சக எழுத்தாளர்கள்மேல் அநாவசியமாக சேறடிக்கவே பயன்படும் என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.
இனி நான் முரண்படும் புள்ளிகளைச் சுட்டுவோம். இந்த ‘ஊக’ அரசியலின் கதாநாயகன் எஸ்.பொ. மாநாட்டுக்கு ஆதரவு கொடுக்க மறுக்கும் ஏராளமான எழுத்தாளர்கள் எல்லாரும் எஸ்.பொ வின் ஊகத்தை ஆதாரமாக கொண்டவர்கள் என்று தப்புக்கணக்கு போடக்கூடாது. எஸ்.பொ. வின் அரசியல் அனைவரும் அறிந்த ஒன்றே. எஸ்.பொ. வை முன்வைத்து அனைத்து எழுத்தாளர்களையும் தாக்கி மாநாட்டுக்கு ஆதரவு தருவோர் அறிக்கை ஆரம்பிப்பது தவறல்லவா? தவிர அறிக்கையில் பாவிக்கப்பட்டிருக்கும் சில சொல்லாடல்களை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.
‘மாநாடு செய்பவர்கள் எமக்குப்பிடித்த அரசியலை அறத்தை தேர்ந்து கொள்ளவேண்டும் என்று வற்புறுத்த முடியாது’ என்று சொல்கிறீர்கள். கவிஞர் தர்மினி போன்றவர்களும் இந்தக் கருத்துடன் உடன்படக்கூடியவர்கள் என்றே நினைக்கிறேன். அதிகாரம் சார்ந்த அரசியல் -கலாச்சார –மொழி – மற்றும் இனவாத மேலாதிக்க குறியீடுகளை முதன்மைப்படுத்துவதில் அல்லது அதுசார் விழுமியங்களைப் பாதுகாக்கும் எந்த நடவடிக்கைகளிலும் நமக்கு உடன்பாடில்லை. அந்த அர்த்தத்தில் இம்மாநாடு எங்கு நடந்தாலும் எதிர்க்க வேண்டியிருந்திருக்கும் என்று நினைக்கிறேன். இதே காரணத்துக்காகத்தான் தமிழகத்தில் நடந்த மாநாட்டுக்கும் எம்மால் ஆதரவு வழங்க முடியவில்லை. ஆனால் அதற்காக மாநாடு நடத்தும் உரிமையைப் பறிக்கும் அடாவடித்தனம் நம்மிடமில்லை. அதேபோல் எல்லா மாநாடுகளும் ‘மார்க்சிய’ பார்வை கொண்ட மாநாடுகளாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கும் முட்டாள்தனமும் எமக்கில்லை.
எமது அரசியல், அனைத்து அதிகாரங்களையும் எதிர்க்கும் அரசியல். அந்த அடிப்படையில் இருந்துதான் எமது எதிர்ப்புகள் உருவாகிறது. இவ்வாறு தாமும் எல்லா அதிகாரங்களையும் எதிர்க்கிறோம் -விளிம்பு மனிதருக்காக கதைக்கிறோம் என்று சொல்லும் விரல் விட்டு எண்ணக்கூடிய சில எழுத்தாளர்களும் அதிகாரம் சார்ந்து சாயும்போது அந்த சாயல் நம்மில் தேயும் சாத்தியமில்லை என்பதை உரத்துக் கத்திச் சொல்லும் உரிமை எமக்குண்டு. ஏனெனில் அவர்கள் பிழைகளும் எமது பிழைகளாகப் பார்க்கப்படும் அபாயமுண்டு. ஒடுக்கப்படும் மக்கள் அனைத்து ‘மீட்பர்களாலும்’ தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வந்துள்ளார்கள். அதனால்தான் அவர்களுக்கு எந்த தத்துவத்தின் மேலும் -அனைத்து அரசியல் வாதிகளின் மேலும் நம்பிக்கையில்லை. ஒடுக்கப்படும் மக்களோடு எதிர்ப்பை கட்டும் முயற்சி அதிமுக்கியம் என்று கருதும் நாமும் அந்த தவறை செய்வது பிழைதானே. இந்த அடிப்படையில் ‘டக்ளஸ் கலந்துகொண்டாலும்சரி பிரபாகரன் கலந்து கொள்வதானாலும் சரி மகிந்த கலந்து கொள்வதானாலும் சரி இந்த மாநாடுக்கு என் ஆதரவு அப்போதும் இருந்திருக்கும்’ என்று நீங்கள் சொல்வதை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. என்னைப் பொறுத்தவரை மகிந்த ஒரு போர்க்குற்றவாளி. ஆயிரக்கணக்கான கொலைகளுக்கு பொறுப்பானவர். இலங்கையில் ஒடுக்கப்படும் மக்களின் உரிமைகளைச் சூறையாடி வருபவர். அவர் பங்குபற்றும் மாநாட்டு வாசலுக்கு எதிர்ப்புச் செய்யப் போவேனேயன்றி உள்ளே போய் பங்குபற்ற மாட்டேன். ஆக்ஸ்போர்ட் யூனியனில் அவரது பேச்சு ரத்துச்செய்யப்பட்டது நமக்கு சந்தோசமான விடயமே. துவேசி நிக் கிரிபின் அங்கு பேச அழைக்கப்பட்டபோதுகூட நாம் கடும் எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால் அப்போது நிகழ்வை ரத்து செய்ய முடியவில்லை. இது பேச்சு சுதந்திரத்தை மறுக்கும் செயலாக நாம் பார்க்கவில்லை. அதிகாரம் சார்ந்தவர்களுக்கு மட்டும்தானா பேச்சு சுதந்திரம் சனநாயகம் மீடியா கவரேஜ்? ஒடுக்கப்படும் மக்களுக்கில்லையா? ஒடுக்கப்படுவோர் பேச்சுரிமை பெற அதிகாரம் முழப் போச்சுரிமை பெற்றிருக்க வேண்டும் என்ற கட்டாயம் போட மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். தவிர இதே ஆதரவு அறிக்கையில் கையெழுத்திட்டவர்கள் பலர் ஊடக சுதந்திரத்துக்கு எதிராக முன்பு அறிக்கைவிட்டவர்கள் என்பதையும் உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். (தேசம்நெற்றில் நான் ஆசிரியராக இருந்தபோது முதன்முதலாக நாம் புலம்பெயர்ந்தோர் மத்தியில் -இனையத்தில் ஏற்படுத்திய சுதந்திர உரையாடலுக்கு பெரும் எதிர்ப்பைத் தெரிவித்தவர்கள் இவர்கள்).
தவிர இக்கூட்டம் சுதந்திர சிந்தனைக்கு வலுச்சேர்க்கும் என்று நம்புவது நமக்கு கஸ்டமாக இருக்கிறது. கலாச்சார ஒருங்கிணைதல் நீங்கள் சொல்வதுபோல் ஏற்கனவே நடக்கத் தொடங்கியுள்ளது. கோயிற் திருவிழாக்கள் மற்றும் மாலை போட்டு பொன்னாடை போர்த்தும் விளையாட்டுக்கள் என்று பல ‘விசேசங்கள்’ நடக்கிறது. மீண்டும் யாழ் மேலாதிக்கம் தன்னைச்சுற்றிக் கலாச்சார ஒருங்கிணைதலை செய்கிறது. இதன் தொடர்ச்சியாகத்தான் இந்த மாநாட்டை பார்க்க வேண்டியுள்ளது. இது வரவேற்கப்படவேண்டிய விசயமில்லை.
மாநாட்டு ஆதரவு அறிக்கை இம்மாநாட்டை ‘ஆக்கபூர்வமான’ மாநாடு என்று சுட்டுவது மட்டுமின்றி இம்மாநாடு இனங்களுக்கிடையிலான –பல அரசியல் போக்குகளுக்கிடையிலான ‘ஆரோக்கியமான’ உரையாடலை ஏற்படுத்தும் என்றும் கருதுகிறது. தற்போது மாநாடு நடந்து முடிந்துவிட்ட நிலையில் இம்மாடு சாதித்தவைகளை சற்று அறியத்தர முடியுமா?
தவிர இன்னுமொரு முக்கியமான புள்ளியை உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். நாம் இன்று இலங்கை பற்றி பேசும் போது உலகின் தலையாய பேச்சுரிமை- ஊடக உரிமை மறுக்கும் நாடு பற்றி பேசுகிறோம் என்பதை உணரவேண்டும். இதைத்தான் மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிப்போர் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. அவர்கள் முன்வைத்துள்ள இலங்கை அரசு தொடர்பான விவரனம் இன்று கேள்விக்கப்பாற்பட்டது. இதை நீங்களும் உங்கள் குறிப்பில் ஏற்றுக்கொள்கிறீர்கள். இந்த பின்னணியில் ‘சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் கலைஞர்கள் என்ற பெயரில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையை நாங்கள் முற்றுமுழுவதுமாக நிராகரிக்கிறோம்’ என்று தங்கள் அறிக்கை சொல்வதை விளக்கமுடியுமா? மேற்கண்ட வசனத்தில் வரும் ‘பெயரில்’ என்ற கிண்டலையும் முற்றுமுழுதாக என்ற அழுத்தத்தையும் உங்கள் மேலதிக கவனத்துக்;கு கொண்டுவர விரும்புகிறேன்.
மாநாட்டு அறிக்கை எந்த ‘ஊகத்தை’ முன் வைக்கிறது? அவர்கள் தமது எதிர்ப்புக்கான நிலைப்பாட்டை கடைசி இரண்டு பந்திகளிலும் தெளிவாக வைத்துள்ளார்கள் என்றே நம்புகிறேன். இதோ அந்தப்பந்திகள்.
‘இன்னும் உலர்ந்துவிடாத எமது மக்களின் குருதிச் சுவடுகளின் மீதும், எமது பெண்களதும் எமது பச்சிளம் குழந்தைகளினதும், முதியவர்களினதும் மரணித்த, எரியூட்டப்பட்ட உடலங்களின் மீதும் நடத்தப்படும் சிறிலங்கா அரசின் அரசியல் நாடகத்திற்கு துணைபோகக் கூடிய வகையில், நடைபெற்ற மனிதப் பேரழிவுக்குக் காரணமான சிறிலங்கா கொடுங்கோல் அரசு குறித்த எந்த நிலைப்பாட்டையும் முன்வைக்காத, இந்தச் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை எல்லா வகையிலும் புறக்கணிப்பதே மனச்சாட்சியுள்ள படைப்பாளிகளாக, கலைஞர்களாக உள்ளவர்களது வரலாற்றுக் கடமையாகும் என நாங்கள் கருதுகிறோம்.’
‘நீதியின்மேல் பசி தாகம் உடைய படைப்பாளிகள், கலைஞர்கள் தார்மீக நிலையில் மனிதகுல மனச்சாட்சியாகவே இருப்பவர்கள். அநீதிகளை,சிறுமைகளைக் கண்டு பொங்குபவர்கள். நொந்துபோன மக்கள் வலியின் குரலை ஓங்கி ஒலிப்பவர்கள். நீதிக்காக அதிகாரத்தை எதிர்ப்பவர்கள். வரலாறு நெடுகிலும் நிமிர்ந்து நிற்கும் இந்தத் தார்மீக அடிப்படைகளில் நின்று எழுத்தாளர்களாகவும் கலைஞர்களாகவும் நாங்கள் கொழும்பில் நடைபெறவிருக்கும் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நிராகரிக்கிறோம்.’
இதில் என்ன தவறு உள்ளது. இலங்கை அரசுபற்றி கண்டித்து நாம் மாநாடு நடத்தமுடியாத நிலையில் அரசியல் நீக்கம் செய்யப்பட்ட மாநாடு செய்கிறோம் என்று வாதாடுவது சின்னத்தனமில்லையா? நடந்து முடிந்த கொடுமைகளை –நடந்துகொண்டிருக்கும் உரிமை மீறல்களை –பேச்சுரிமை மறுப்பை கண்டிக்காமல் எந்த உருப்படியான எழுத்தாளனும் இலங்கையில் கூட்டம்போட மாட்டான் என்று சொன்னால் அதை மறுப்பீர்களோ?
‘2011 ஜனவரியில் கொழும்பு சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்துவதற்கான அதனது ஏற்பாட்டாளர்களின் ஜனநாயக உரிமையைஇ மனித உரிமைகளில் நம்பிக்கையுள்ள எழுத்தாளர்கள் கலைஞர்கள் எனும் வகையில் நாங்கள் மதிக்கிறோம் என்றாலும்இ இன்றைய நிலையில் சிறிலங்கா பயங்கரவாத அரசினால்இ தன் நலன் சார்ந்து உருட்டப்படும் சதுரங்கக் காய்களாகவே இந்த எழுத்தாளர்கள் ஆகிப்போவார்கள் என்பதற்கும் அப்பால் வேறெதுவும் நிகழப்போவது இல்லை என்றும் நாங்கள் கருதுகிறோம்.’
என்று எதிர்ப்பாளர் அறிக்கை சுட்டியதையும் உங்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.
யுத்தப்பின்னணி இலங்கை பற்றிய சித்தரிப்பில் இம்மாநாடு மாற்றம் கொண்டுவரும் என்பது உண்மைதான் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள். அதைத்தான் ஆதரவு அறிக்கையும் சுட்டுகிறது. ஆனால் அதை எதிர்கொள்ள எம்மிடம் ஊடகபலமுண்டு என்று நம்பிக்கை தெரிவிக்கிறீர்கள். அந்த உறுதியில் உங்களோடு சேர்வதில் சந்தோசமே. இருப்பினும் நமது ஊடக பலம் இலங்கை அரசின் பலத்துக்கு நிகரானதல்ல. அவர்களை மீறி எதுவும் பதிப்பிக்க முடியுமா? புலம்பெயர் மக்கள் மத்தியில் அத்தகய இரும்புப் பிடியை அவர்கள் செய்ய முடியாத நிலையில் தமது பணப்பலம் – செல்வாக்கு முதலிய பாவித்து தமது பிடியை இறுக்க முயற்சிக்கிறார்கள் அவர்கள். அந்த வசதி நமக்குண்டா? இலங்கை அரசு புலத்தில் தனது செல்வாக்கை பெருக்க முயல்கிறது என்பது ஊகமல்ல அது அனைவரும் அறிந்த ஒன்றே. எனது அனுபவத்தை உங்களுக்கு உதாரனமாக –ஆதாரமாக காட்டலாம். எனது கைத்தொலைபேசியில் என்னை தொடர்புகொண்ட இங்கிலாந்திலிருக்கும் இலங்கைத் தூதரகம் எனக்கான விலைபேசியதை இத்தால் அனைவருக்கும் பகிரங்கப்படுத்துகிறேன். அதேபோல் இலங்கை பிரதிநிதிகள் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் செய்த சில விவாதங்களையும் தேவையானால் சொல்ல முடியும். நாம் விலைபோபவர்கள் அல்ல என்பதுதான் எமது பிரச்சினையோ என்னவோ.