யுத்தத்தை எதிர்க்காத – புலம்பெயர் புலி எதிர்ப்பு மையம்
சிறு பத்திரிகை சூழலில் தனிக்காட்டு ராஜாக்களும் குழுவாத போக்குகளும் மலிந்திருப்பது தமிழுக்கு புதிதில்லை. இருப்பினும் இவர்கள் இடதுசாரியம் சார்ந்த அடக்குமுறைகளுக்கு! அதிகாரத்துக்கு எதிரான போக்குகளை கொண்டவர்களாக இருந்ததுண்டு. அந்தக்காலம் மலை ஏறிக்கொண்டிருப்பதை தற்போது அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.
தற்போது ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் அழிவை எதிர்கொண்டுள்ள மிகமோசமான சூழலில் புலம்பெயர்ந்த அரசியல் / இலக்கிய பிதாமக்களின் பிற்போக்குத்தனங்கள் மேல் ஆயிரம் சூரியன் வெளிச்சம் விழுந்துள்ளது. தம்மை இடதுசாரியம் சார்ந்தவர்களாக காட்டிக்கொள்பவர்களாகவும் ஒடுக்கப்படும் விளிம்பு மக்களுக்காக கதைப்பவர்களாயும் பினாத்தித் திரியும் பலர் இன்று என்ன செய்கிறார்கள்? பேசுகிறார்கள்? என்பதை உற்று கவனியுங்கள். இவர்கள் தமக்கு மீறிய முற்போக்கு / அரசியல் இலக்கிய போக்குகள் எதுவும் புலத்தில் தலையிடாமல் பார்த்துக் கொள்வதில் இதுவரை மிக கவனமாக இருந்து வந்துள்ளார்கள்.
தொண்ணூறுகளுக்கு முந்திய போராட்ட இரகசியத்தை, குசுகுசுத்து மையங்கள் எழுப்பினரே அன்றி இவர்கள் ‘மாற்றை’ உருவாக்கவில்லை. இவர்கள் ‘போராட்ட இரகசியம்’ வெறும் கழிவிரக்கம் கொண்டவையாகவும் சுயபுலம்பல்களாகவும் இன்றுவரை இருந்துவருகிறது. இவர்கள் கட்டமைத்தவை யாவும் புலி எதிர்ப்பு மையவாதத்தை சார்ந்தவையே. பழைய இயக்க சகவாசம், மக்கள் விடுதலை பற்றிய தெளிவற்ற போக்கு, மார்க்சிய எதிர்ப்பு என்று எல்லாம் பின்னிப் பிணைந்ததுடன் புலி எதிர்ப்பு மையம் சுழல்கிறது.
இலக்கியம் என்று பார்த்தாலும் இதுவரை வந்தவைகளில் பெரும்பாலானவை வெறும் குப்பைகளே. உருப்படியாக எழுதுபவர்களும் புலிஎதிர்ப்பு மையத்துக்குள் வலிந்து இழக்கப்படுகிறார்கள். தொண்ணூறுகளுக்கு பிந்திய கொடுமைகள் – மக்கள் பல கோணங்களில் எதிர்கொண்ட கடும் இன்னல்கள் இவர்தம் இலக்கியங்களில் பார்க்க முடியாது.
சொந்த நாட்டிலேயே அகதி வாழ்வு, முஸ்லிம் மக்கள் பிரச்சினை, சிங்கள பேரினவாதமும் தமிழ் தேசியவாதமும் இன்று கண்டுள்ள புதிய எல்லைகள், மலையக மக்கள் பிரச்சினைகள் எதுவுமே இவர்கள் இலக்கியங்களில் பார்க்க முடியாது. இன்றும் முஸ்லிம் பிரச்சினைகளை முஸ்லிம்களும், மலையக மக்கள் பிரச்சினைகளை மலையக மக்களும் மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறார்கள். முஸ்லிம் மக்கள் வெளியேற்றம் பற்றி அண்மையில் கவிஞர் இளைய அப்துல்லா ஒரு கவிதை சி.டி. வெளியிட்டுள்ளது இவர்களில் பலருக்குத் தெரியாது. யாரும் அதை கண்டுகொள்ளவில்லை. ஆனால் மிகமோசமாக எழுதும் பலரது ‘புலி எதிர்ப்பு’ கவிதைகள் முக்கியத்துவம் பெறுவதை நாம் அவதானிக்க முடியும்.
அத்துடன் புலம்பெயர்ந்திருக்கும் நாடுகளில் சுற்றிவர நிகழும் ஒடுக்குமுறைகள் சுத்தமாக கவனிக்கப்படுவதில்லை. அமெரிக்க ஐரோப்பிய கண்டங்களில் நிகழும் பூகம்பங்களும், ஒடுக்கப்படும் மக்கள் சார்ந்த போராட்டங்கள் எதுவும் இவர்கள் கவனத்தை ஈர்த்ததில்லை. ‘புலி எதிர்ப்புத் தமிழர்’ என்ற குறுகிய பண்பாட்டு வலையத்துக்குள் இவர்களின் கற்பனைகள் சுழல்கின்றன. புலம்பெயர் இலக்கியம் வெறும் புலம் ஏங்கும் இலக்கியம் மட்டுமே. புலம்பல் இலக்கியம் என்றும் சொல்லலாம். 83க்கு முந்திய – சிலசமயம் 90களுக்கு முந்திய – பழைய குட்டைகளையே இன்றும் கிளறிக் கொண்டிருக்கும் இவர்கள், தற்கால தலைமுறை தமிழர்களின் உணர்வலைகளுக்கு ஒற்பனும் நெருங்கி வரமுடியாதவர்கள்.
போராட்டங்கள் நடத்தும் நாடுகளில் இருந்து சிறந்த போராட்ட இலக்கியங்கள் எழுந்துள்ளதை நாம் பார்க்க முடியும். ஆனால் இலங்கை மக்கள் மத்தியில் இதுவரை அவதானத்துக்கு உந்தி நடப்பவை எல்லாம் புலம் ஏங்கும் இலக்கியங்கள் மட்டுமே. யாரும் எழுதவில்லை என்பதல்ல அதன் அர்த்தம். புறவயக் காரணிகளின் ஆழமையான காரணியாக புலம் ஏங்குதல் இருக்கிறது என்பதுமல்ல அதன் அர்த்தம். பல ‘எழுத்துக்கள்’ கவனிக்கப்படவில்லை என்பதுதன் உண்மை.
புலிகள் வளங்கிய ‘துரோக முத்திரை’ என்ற பொதுமையத்தை நோக்கி ஆளுமைகளை விரயம் செய்யும் இவர்கள், இறுக்கமான கதையாடலில் இருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் ஒருபடம் பார்த்தால் பல படங்கள் பார்த்ததற்கு சமன் என்பது போல்தான் புலம்பெயர் இலக்கியமும் இயங்குகிறது. துரோக முத்திரை எதிர்ப்பிலக்கியத்தில் தவறில்லை. ஆனால் அதுமட்டுமே மையமாக இருக்க வேண்டும் என்று விடாப்பிடியாக இருக்கும் இவர்கள் மடத்தனம்தான் புரியவில்லை.
பல முக்கிய போராட்ட இலக்கியங்கள் அடக்குமுறையுடன் புறக்கணிக்கப்பட்டுள்ளன. அற்புதமான கவிதைகள் பல எழுதியவர்களின் உயிர்களை போராட்டம் கவ்விக்கொண்டு விட்டது. அவர்களும் அவர்தம் இலக்கியங்களும் மறக்கப்படுவது ‘அதிகாரத்துக்கான அம்புலோதி’ பாற்பட்ட சிந்தனை போராட்டத்திலேயே நிகழ்கிறது.
தற்போது இடதுசாரிகள் மேல் ‘மத்தியதர வர்க்க நக்கலை’ வளர்த்துக் கொண்டிருக்கும் இவர்கள் மக்களில் இருந்து அன்னியப்பட்ட குறுக்குழு வாதங்களில் ஈடுபடுவதையே தொழிலாக கொண்டுவருகிறார்கள். இதை தமிழ்நாட்டுக்கும் கடத்தி தம் சுயவிலாசத்தை நீட்டப் பார்க்கிறார்கள். இன்றும் இவர்கள் பல முட்டுக்கட்டைகளை கட்டமைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். புலி எதிர்ப்பு இலக்கியம் மட்டுமே புரட்சிகர இலக்கியமாக இருக்க முடியும் என்ற தமது அறிவிலி நிலைப்பாட்டை மோட்டுத்தனமாக இலக்கியவாதிகள் மேல் திணித்துவரும் இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் பலர். குறிப்பாக சமீப காலங்களில் அகதியாக புலம்பெயர்ந்த இளவயதினர் பலர் தமக்கு சம்மந்தமே இல்லாத தனக்கு முந்திய போர் பின்பற்ற அழுத்தப்படுவது கேலிக்கிடமானது. அதேபோல் பல இளவயதினர் வலது சாரியத்துக்கு பலிகடாக்களாக்கப்படுவதன் புண்ணியமும் இவர்களையே சாரும்.
இந்த போக்கு இன்று இவர்களை ‘மக்கள் எதிர்ப்பு’ ஸ்தானத்தில் நிறுத்தியுள்ளது. யுத்தவெறி இலங்கை இராணுவத்தின் கொடுமை இவர்களையும் வெளிக்காட்டியுள்ளது. புலிகள் இராணுவ ரீதியாக பாரிய தோல்வியை காணும் இத்தருணத்தில் – தெற்கின் சிங்கள பேரினவாதம் பேயாட்டம் ஆடும் இத்தருணத்தில் – ஆயிரக்கணக்கில் மக்கள் அழிவை எதிர்கொண்டுள்ள இத்தருணத்தல், இந்த புலம் பெயர் புண்ணாக்குகள் என்ன செய்கின்றன? தமிழ்நாட்டிலும் உலகெங்கும் மக்கள் லட்சக்கணக்கில் ஒடுக்குமுறைக்கு எதிராக திரளக்கூடிய இத்தருணத்தில் இவர்கள் உல்லாசமாக இருக்கிறார்கள். புலிகள் நசுக்கப்பட்டு போர் ஓயட்டும் என்று காத்திருக்கிறார்கள். இலங்கை அரசைப்போல் போர் முடிதலுக்கு காலவரையறை கணித்து ஆடி ஆவணிக்கு பிறகு கூட்டங்கள்போட திட்டங்கள் போடுகிறார்கள்.
புலி மைய வாதத்தில் புதைந்துள்ள இவர்கள் மக்கள் போராட்ட நடவடிக்கைகளுக்கு எதிரானவர்கள். தனிநபர்கள் தெனாவட்டைக் காட்டி புகழ் சவாவி காய்கிறார்கள்.
மக்கள் போராட்டம் அவசியமான கட்டத்தில் நீங்கள் எங்கே? ஒடுக்கப்படுபவர்களுக்கான உங்கள் குரல் எங்கே? மக்களை மிரட்சியுடன் பார்த்தேன் ஒதுக்குகிறீர்கள்? சுத்தி நின்று மக்கள் இவர்கள் காதுகளில் ‘உ’ என்று கூவியும் இவர்கள் தூக்கத்தால் எழ மறுக்கிறார்கள். அவர்கள் கருனாவின் – பிள்ளையானின் அதனை வளர்க்கும் பேரின வாதத்தின் மடியில் நிம்மதியாய் தூங்குகிறார்கள். ஒரு சதத்துக்கும் உதவாத உங்களை சரித்திரம் சரிக்கும் காலம் வந்துவிட்டது.
பின்குறிப்பு : அவர்கள் / இவர்கள் என்ற பெரும் சொல்லாடலில் பல முகங்களை – பெயர்களை மைப்படுத்தியிருப்பினும் அவசியமேற்படின் அவற்றை பிரசுக்க எந்த தயக்கமும் இல்லை.
நன்றி : கீற்று (திங்கள், 25 பெப்ரவரி 2008)