முரண்பாடுகளுடனும் உடன்பாடு சாத்தியமே – இடதுசாரிய அமைப்புகளை நோக்கி
பின்வரும் இரண்டு முக்கிய கருத்துகளைச் செயற்பாட்டாளர்கள் கவனத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
1. ஆயுதம் தாங்கிய விடுதலை அமைப்புகளின் தலைமைகள் அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் சோசலிசம் – சோசலிசப் புரட்சி பற்றிப் பேசினர். ஆனால் அவர்கள் மத்தியில் அதற்கான முன்னோக்கு மற்றும் செயற்திட்டங்கள் தெளிவாக இருக்கவில்லை.
விடுதலை பேசிய குர்திஸ்தான் தலைவர்கள் அயர்லாந்து தலைவர்கள் ஆகியோர்களிடம் தெளிவிருந்தது எனச் சொல்லவில்லை. ஆனால் அவர்களிடம் இருந்த தெளிவான முற்போக்கு நிலைப்பாடு ஈழத்தில் வளரவில்லை. அது தலையெடுத்தது – வளர முதலே கிள்ளப்பட்டு விட்டது. இந்தியத் தலையீடு – தமிழ் மக்கள் மத்தியில் இடது சாரிகளின் அரசியல் மற்றும் அமைப்புப் பலவீனம் ஆகியனவும் அதற்கு முக்கிய காரணிகள்.
2. ஈழத்தில் தமிழ் மக்கள் மத்தியில் பரவிய இடதுசாரியப் பார்வைகள் மற்றும் இடதுசாரிய திட்டமிடல்களின் போதாமைகள் கடுமையாகக் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும். ஈழத்தில் தமிழ் மக்கள் மத்தியில் ஓரளவு பலமுடையதாக வளர்ந்திருந்தது மாவோயிச இடதுசாரியப் புரட்சிகர இயக்கம் மட்டுமே. முக்கியமாகச் சண்முகதாசன் தலைமையின் கீழ் இயங்கிய இயக்கம் அளவு வேறு எந்த அமைப்புகளும் பலப்படவில்லை. அந்தத் தலைமைகள் முன்வைத்த முன்னோக்கு மற்றும் அரசியற் திட்டமிடல்கள் பல மிகப் பலவீனமானதாகவே இருந்தன. சமசமாஜ கட்சியோ அல்லது கம்யூனிச கட்சியோ வடக்கு கிழக்கில் பலப்படாமற் போனதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அந்தக் கட்சிகளுக்குள் இருந்த தலைமைகளின் பலவீனத்தைப் பின்பு வரலாறு தெட்டத் தெளிவாக்கி விட்டது.
ஈழ மக்கள் மத்தியில் துரித வேகமடைந்த ஆயுதம் தாங்கிய போராட்டம் அங்கிருந்த இடதுசாரிய அமைப்புகளை ஆயுத முனையில் முடக்கியதானது அவர்களின் வரலாற்று வளர்ச்சியைத் துண்டாக்கி விட்டது. இதனால் இன்று வரலாற்றை ஆய்பவர்களுக்கு பல்வேறு சிக்கல்கள் இருக்கிறது. சண்முகதாசன் ஈழ மக்கள் மத்தியில் எதிர் கொண்டிருந்த பிரச்சினை மிக மிகக் கடினமான ஒன்று. அவர் அகில இலங்கைக்கும் பொதுவான ஒரு இடதுசாரிய அமைப்பின் தலைவராகவும் தொழிற்சங்கத் தலைவராகவும் இயங்கியவர். சிங்கள மலையக மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களைத் தவிர்த்த திட்டமிடல்களை அவர் செய்ய முடியாது. அதே சமயம் தமிழ்த் தேசியத்தால் அவர் இழுக்கப்பட்டார். அவர் தமிழராக இருந்ததால் அவ்வாறு இழுபடவேண்டும் எனச் சிலர் விரும்பினர். சிலர் அவ்வாறு இழுபட்டு விட்டார் என அவரது அடையாளத்தை சிறைப்படுத்தி எதிர்த்தனர். இதே சமயம் தமிழ் மக்கள் மத்தியில் நிலவிய படு பிற்போக்குத் தனங்களுக்கு எதிராக – குறிப்பாக சாதிய ஒடுக்குமுறைக்கும் எதிராக – இயங்கிக் கொண்டு அங்கு ஒரு கட்சியைக் கட்டி எழுப்புவது மாபெரும் சவாலாக இருந்தது.
சண்முகதாசனுடன் இயங்கிய பலர் முன்வந்து தங்கள் வரலாற்றுப் பதிவுகளை எழுத வேண்டும். இனிவரும் தலைமுறைக்கு அவை படிப்பினைகளாக இருக்கும். சங்கானைப் பிரச்சினை சார்பாகச் சில கருத்துக்களை ஒரு தோழர் எழுதி வருகிறார். அவர் சொன்ன விபரங்கள் ஆச்சரியமாக இருந்தது. ஒருவருடய பேச்சை மட்டும் வைத்துக்கொண்டு நாம் முடிவுகளுக்கு தாவி விட முடியாது. பலரும் எழுத வேண்டும்.
இருப்பினும் இடதுசாரியத் தலைமைகளின் அரசியற் பலவீனத்துக்கு அவர்களின் தத்துவார்த்த முடிவுகளும் காரணம் என்பதை நாம் மறைத்துப் பேச முடியாது. ஒரு ட்ரொட்ஸ்கிஸ்ட் என அடையாளப்படுத்திக்கொண்டு இக்கருத்தை வைக்கும் பொழுது பல பிரச்சினைகள் எழுவது தவிர்க்க முடியாததே. இடதுசாரிகள் மத்தியில் இருக்கும் பிளவுகளை மறைத்துக்கொண்டு இந்த பிரச்சினைகளை எதிர்கொண்டு விட முடியாது என்றே தோன்றுகிறது. அதனாற்தான் பின்வரும் குறிப்புகளைக் கோரிக்கையாக வைக்கவேண்டியிருக்கிறது
2
இன்றும் உலகெங்கும் உதிரிகளாக வாழும் பல பழைய தமிழ் இடதுசாரியத் தோழர்கள் தொடர்ந்தும் மாவோயிசத் தத்துவார்த்தக் கருத்துகளுடன்தான் தங்களை அடையாளப்படுத்தி வருகின்றனர். தவிர இலங்கைக்குள் – குறிப்பாகத் தமிழ் மக்கள் மத்தியில் வேலை செய்து வரும் முக்கிய இடதுசாரிய அமைப்பின் பின்னணியில் இருக்கும் தத்துவார்த்த அடிப்படையும் அதுவாகவே இருக்கிறது. அத்துடன் இவர்கள் ஸ்டாலினிய கருத்துகளுடன் பாசம் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர். கம்யூனிச கட்சிகளுடன் அமைப்பு ரீதியாக உடைத்துக்கொண்ட உடைவு சோவியத்யூனியனின் பிற்கால அரசியலுடன் தொடர்புபடுத்திய வேறுபாடாகக் குறுக்கப்பட்டதால் ஸ்டாலினிய கதாநாயகத் தன்மை தொடர்ந்து காக்கப்பட்டு வருகிறது. பழைய வரலாற்றுக்குள் போவது முடிவுக்கு வர முடியாத நீண்ட உரையாடலாகத்தான் இருக்கும். ஏனெனில் தமிழில் இந்த உரையாடல் நிகழவில்லை. இந்தத் தத்துவப் பிளவுகள் பற்றித் தமிழில் எழுதப்பட்டிருப்பவை மிகக் குறைவு. இது ஒரு புறவய உண்மை. இதைச் சொன்னதற்காக தமிழைக் குறைத்து மதிப்பதாகவும் – தமிழ்ச் செயற்பாட்டாளர்களைக் கொச்சைப்படுத்துவதாகவும் – ஈரோ கம்யூனிசம் பேசுவதாகவும் – என்னோடு தடி தூக்குவதால் எந்தப் பயனுமில்லை. உறைத்தாலும் உண்மை உண்மைதான். இத்தகைய வரலாறு சம்மந்தப்பட்ட உரையாடலில் ஒரு பாய்ச்சல் நிகழ்த்தி உலக விவாதங்களைக் கைப்பற்றிய பின்புதான் நாம் இதுபற்றிப் பேச முடியும். அதுவரை ஆளுக்காள் ஒரு கதை சொல்லிக் கொண்டிருப்பதாகவே இது முடியும்.
ஆக தத்துவார்த்த அடிப்படையில் வெவ்வேறு நிலையில் நிற்பவர்கள் மத்தியில் உரையாடல் சாத்தியமில்லையா? ட்ரொட்ஸ்கிஸ்ட் ஒரு கருத்தைச் சொன்னால் அதைப் போட்டு தாக்குவதால் மாவோயிசத்தை நிறுவி விட முடியும் என நினைப்பது – அல்லது மாவோயிஸ்டுகளைச் சும்மா எதிர்ப்பதால் மட்டும் அவர்கள் பலவீனத்தை காட்டி விடலாம் என நினைப்பது மகா தவறு. அதனாற்தான் இந்த உரையாடல் வெறுமனே நிகழ்வது அனாவசியம் எனச் சொல்ல வேண்டியிருக்கிறது. இது அமைப்புச் சார்போடு நிகழ வேண்டும். அமைப்புக் கட்டுதல் – தமிழ் மக்கள் மத்தியில் இடது சாரிய கருத்துகளைப் பலப்படுத்தல் என்ற அடிப்படை நோக்கு இல்லாவிட்டால் இது வெறும் வற்றிய உரையாடலாகச் சுருங்கிப் பயனற்றதாகத்தான் நிற்கும். எங்கள் சுய இன்பங்களுக்காக அலட்டி விட்டுப்போவதில் எந்த வெளிச்சங்களையும் ஏற்படுத்திவிட முடியாது. தத்துவத்துக்கு எனத் தனிப்பட்ட இருத்தல் எதுவும் கிடையாது. சமூக அமைப்புச் சார்ந்த அசைவின்றி தத்துவக் கருத்துகள் அர்த்தப்பட முடியுமா?
இந்த அடிப்படையில் எமது உரையாடல்களில் சில திட்டமிடல்கள் முதன்மைப் படவேண்டியிருக்கிறது. இடதுசாரிய அமைப்புகள் மிகப் பலவீனமாக இருப்பதும் – அவை தமிழ் பேசும் மக்கள் மத்தியில் கட்டப்படுவது பெரும் சவாலாக இருப்பதும் பொது உண்மை. அந்நிலையில் சில தளங்களில் ஐக்கிய முன்னணி பற்றி இயங்குதல் நோக்கி நகர்ந்து நாம் சிந்திக்க வேண்டும்.தோழர்கள் இது ஒரு மிக முக்கிய புள்ளி. தத்துவார்த்த இடைவெளி முடிவுக்கு வந்துவிடும் என்ற விசர் கதையல்ல இது. இடதுசாரிகள் மத்தியில் ஏற்பட்ட பிளவுகள் என்பது சமூகத்தை முன்னோக்கி கொண்டு செல்லும் அடிப்படை நோக்கத்தில் இருந்து எழுவது. ஆரோக்கியமானது. வலதுசாரிகள் மத்தியில் அதற்கான அவசியமில்லை. இந்த அர்த்தத்தில் பிளவுகளும் பெருமைக்குரிய விசயமே. ஆனால் இந்த பிரிவுகள் வெறும் உரையாடல்கள் மூலம் மட்டும் தீர்க்கப்பட்டு விட முடியாதவை. சமூகம் புரட்சிகர செயற்பாடு நோக்கி நகரும் பொழுது கருத்துக்களில் தெளிவுகள் பிறக்கலாம். அணி திரள்தல் அத்தருணத்தில் வேறு வகையில் குவியும். அதற்காக தற்போது உரையாடல் சாத்தியமில்லை என்பதில்லை. ஆனால் இந்த உரையாடல் மக்கள் திரட்சி மற்றும் இடதுசாரிய அமைப்புக்களைப் பலப்படுத்தும் நோக்கம் கொண்டதாக இருத்தல் வேண்டும். உதிரியாக நின்று சுழன்று சுழன்று விசுக்குவதால் என்ன லாபம் இருக்கிறது சொல்லுங்கள்?
இங்கு இன்னுமொரு விசயத்தையும் நாம் குறிப்பாக அவதானிக்க வேண்டும். பழைய ஆயுத இயக்க அமைப்புகளின் தலைவர்கள் – முக்கிய உறுப்பினர்கள் உலகெங்கும் வாழ்கின்றனர். அதே போல் பல பழைய இடதுசாரிகளும் பரந்து கிடக்கின்றனர். இவர்களின் திரட்சி ஒரு ஐக்கிய முன்னணியாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று ஒரு காலத்தில் சிலர் எதிர் பார்த்தனர். யே.வி.பி உடைந்த காலப்பகுதியில் இத்தகய எதிர்பார்ப்பு மேலோங்கியிருந்தது.அந்த அடிப்படையை முன்னோக்கு சோசலிச கட்சியும்கூட செய்து பார்த்தது தெரியும். இது சாத்தியமில்லை என்பதற்கு அப்பால் இத்தகைய திரட்சி அமைப்பு ரீதியாக பலமற்ற கோது என்பதை நாம் அவதானிக்க வேண்டும். இளையோரையும் மக்களையும் எதிர்கொள்ள திட்டமிடலை வைக்காத அமைப்பு கோதாகத்தான் இயங்க முடியும்.
மக்களை நோக்கி இடதுசாரிகள் திரும்பவேண்டும். அத்தகைய திருப்பத்தின் ஊடாக மக்கள் சார் செயற்பாடுகளில் ஒருங்கிணைதல்தான் ஐக்கிய முன்னணிக்கான சாத்தியங்களை ஏற்படுத்தும். இங்கிலாந்தில் அத்தகைய சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டமை அண்மையில் பார்க்க கூடியதாக இருக்கிறது. இது ஆரோக்கியமானது. இருப்பினும் இந்த “கலாச்சாரம்” மேலும் வளர்த்தெடுக்கப்பட வேண்டியதாக இருக்கிறது.
ஐக்கியம் என்றதும் விமர்சனங்கள் அற்ற உடன்பாடு என்று அர்த்தமில்லை. அவரவர் தத்துவ வேறு பாடுகளுடன் – அது சார் கடும் விமர்சனங்களுடன் கூட நாம் சில நடவடிக்கைகளுக்காக உடன்பட முடியும். அமைப்பு ரீதியான பலவீனமிருக்கும் நிலையில் சில காரசாரமான உரையாடல்களைத் தவிர்த்துக்கொள்வது செய்யலாம். ஆனால் அது கட்டாயமென்றில்லை. ஆனால் மக்கள் மத்தியில் பொதுவான கருத்துக்களாக பரவாத வரலாற்று சம்பவங்கள் மற்றும் தத்துவ கருத்துக்களை தூக்கி வைத்து சம்பல் அடித்துக் கொண்டிருப்பது ஆர்வமுள்ள மக்களையும் தள்ளிப் போகச் செய்துவிடும். அதற்காக நாம் எதையும் மறைத்துப் பேச வேண்டிய அவசியமில்லை. முரண்பாடுகளுடனே உடன்பாடுகளையும் ஏற்படுத்திக்கொள்ள முடியும். ஓன்றாக இணைந்து தாக்குதல் -தனித்தனியாக பேரணி செய்தல் என இத்திட்டமிடல் பற்றி சொல்லவார்கள். உரையாடல் -சேர்ந்து இயங்குதல் என்பது தனித்துவங்களை தியாகம் செய்தல் அல்ல. மாறாக சக்தியை திரட்டுதல். மக்கள் மத்தியில் இடதுசாரியம் கூர்மைப்படச் செய்தல்.
இத்தகைய செயற்பாட்டை பல பழைய செயற்பாட்டாளர்களிடம் இருந்து நாம் எதிர்பார்க்க முடியாது. அவர்கள் ஒரு போதும் மீண்டும் அமைப்பு நோக்கி நகரப் போவதில்லை. அதில் ஒரு சிலர் தொடர்ந்து கல் எறியும் வேலை செய்துகொண்டுதான் இருக்கப் போகிறார்கள். அத்தகைய சொறி வேலைகளுக்குள் இழுபடாதிருத்தல் அமைப்புச் சார்ந்து சிந்திப்பவர்களுக்கு அவசியம். ஈழத்தில் இயங்கி கொண்டிருக்கும் பல இளைஞர்கள் இது பற்றிச் சரியாக சிந்திக்கின்றனர். ஆனால் உதிரிகளின் ஆக்கினைகளை எதிர்கொள்வது எப்படி என்பது அவர்களுக்கும் எமக்கும் இருக்கும் பிரச்சினைகளில் ஒன்று. சமூக வலைத்தளங்களில் நிகழும் இழுபறிகளுக்கு பதில் சொல்வதிலேயே நேரத்தை கழித்து விட முடியாத சிக்கல் இந்த உதிரிகளுக்கு இல்லை. அதனால் அவர்கள் ஏதாவது சொறிந்துகொண்டே இருப்பர். இந்த சொறிக் கடிக்கு மருந்தில்லை. உதாரணத்துக்கு சாதிய எதிர்ப்பு பிரச்சினையை எடுத்துக்கொள்ளுங்கள். சாதியத்துக்கு எதிர்ப்பு எனச் சொல்லிக்கொள்பவர்கள் அதற்கெதிராக மக்கள் மத்தியில் என்ன வேலை செய்கிறார்கள்? வெறுமனே புலம்பிக்கொண்டிருப்பவர்கள் சாதி எதிர்ப்பு கருத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல என்ன செய்கிறார்கள்? ஆனால் அத்தகைய செயற்பாடுகளைச் செய்யும் அமைப்புக்களை மட்டும் ஓங்கி ஓங்கி அடிக்க மட்டும் இவர்கள் பின் நிற்பதில்லை. இவர்களின் உண்மையான நோக்கம் என்ன? தங்களை முன்னிலைப் படுத்துவதா? அல்லது சாதி எதிர்ப்பைக் கட்டுவதா? ஏன்ற கேள்வி எழுவது நியாயமானதே. முரண்பாடுள்ள சக்திகளும் இந்தப் போராட்டத்தில் ஒன்றிணைய வேண்டும் என நாம் பேசுவது இவர்களுக்கு விளங்குமென்று நினைக்கிறீர்களா? அவ்வளவு தூரம் நகர்வது சமூகத்துக்குள் முற்போக்குள்ள பரந்த அமைப்பை நிறுவுவது சார்ந்தது. அந்த வேலைக்கு இவர்கள் வரப்போவதில்லை. எதிர்பார்ப்புகளை விட்டு விடுங்கள்.
உதிரிக் கருத்துக்களை உதிரி எதிர்வினைகளால் மட்டும் எதிர்கொண்டு விட முடியாது. சில சமயங்களில் எதிர்ப்பை காட்டத்தான் வேண்டியிருக்கிறது. ஆனால் அமைப்பு ரீதியான பலப்படல்தான் உதிரிகளின் போதாமையை தெளிவுபடுத்தும். அந்த அடிப்படையில் ஐக்கிய முன்னணி நடவடிக்கைகள் அவசியம். இது ஒன்றுபடுதல் அல்ல. மாறாக வலதுசாரிய கருத்துக்கள் – மற்றும் அமைப்புக்கள் – தாக்குதல்களை எதிர்கொள்ள அந்தந்த தருணங்களில் ஐக்கியப் படுதல். சிதறிப் பலவீனமாக இருக்கும் நிலையில் இந்த ஐக்கியம் எமது பலத்தை சற்று பெரிது படுத்தும். இதனால் மக்கள் மத்தியில் குறிப்பிடத் தக்க செயற்பாடுகளை நாம் சாதித்துக் காட்ட முடியும். அதனால் மக்கள் மத்தியில் முற்போக்கு அமைப்பின் தேவை உணரப்படுதல் அதிகரிக்கும். அதுதான் இடதுசாரிய அமைப்புக்களைப் பலப்படுத்தும். மக்கள் எந்த அமைப்பில் இணையவேண்டும் என்ற போட்டியை வைத்துக்கொள்வோம். அது தவிர்க்க முடியாதது. ஆனால் அதற்காக சில புள்ளிகளில் ஐக்கியப் படுதல் சாத்தியமில்லை என்றில்லை.
இத்தகைய நடவடிக்கை சாத்தியப் படவேண்டும் என்றால் இந்த குறிக்கோளின் பின்னிருக்கும் திட்டமிடல் பற்றிய தெளிவும் நம்பிக்கையும் வேண்டும். தனி நபர்களுக்கிடையிலான நல்லுறவு (அல்லது எதிர்ப்பு) – அமைப்புக்களுக்கிடையிலான தத்துவார்த்த உடன்பாடுகள் – ஒப்பந்தங்கள் – ஆகியவற்றால் மட்டும் இது சாத்தியப்படப் போவதில்லை. இடது சாரிய அமைப்புக்கள் ஐக்கிய முன்னணி பற்றிய உரையாடலை தமக்குள் செய்து இத்தகைய திட்டமிடல் நோக்கி அரசியல் ரீதியாக நகர்தல் மட்டுமே இதைச் சாத்தியப் படுத்தும். ஏனெனில் இது பல்லைக் கடித்துக்கொண்டு பொறுமையாக செய்ய வேண்டிய வேலை. முரண் பாடுகளால் இழுபட்டு உணர்ச்சிவசப்படாமல் இருப்பதற்கு நாம் இயந்திரங்கள் இல்லைத்தானே.
இத்தகைய உடன்படுதல் என்பது ஒருவரை ஒருவர் பாவிக்கும் செயற்பாடல்ல. அமைப்புக்கள் இணைந்து ஒரு வேலையை செய்ய முடிவு எடுத்தால் அவர்கள் அதற்கான வேலையை செய்ய வேண்டிய தேவை உண்டு. யார் இந்தச் செயலை முன்னெடுக்கிறார்கள் என்பதற்கு அப்பால் எந்த செயலுக்கு உடன்படுகிறோம் அதற்காக எவ்வளவு பலத்தை திரட்ட இருக்கிறோம் என நாம் சிந்திக்க வேண்டும். லண்டனில் நடக்கும் இடதுசாரிய கூட்டங்களில் தம்மை “முற்போக்கு” எனச் சொல்லிக் கொள்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் கலந்து கொள்வதில்லை. இடதுசாரிகள் எனச் சொல்லிக் கொள்பவர்கள்கூட கலந்துகொள்வதில்லை. அமைப்பு ரீதியாக இயங்குபவர்கள்கூட மற்றய அமைப்புகளின் நடவடிக்கைகளிற் கலந்துகொள்வதில்லை. ஒவ்வொரு அமைப்பும் தான் ஒழுங்கமைக்கும் கூட்டத்தில் கதிரை நிரப்ப அனைவரும் வரவேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால் மற்றவர்கள் ஒழுங்கமைக்கும் கூட்டங்களுக்கு செல்வதில்லை.
கூட்டங்களுக்கு செல்லாவிட்டால் பரவாயில்லை. போராட்டங்களிலும் கலந்துகொள்வதில்லை. இடதுசாரிய அமைப்பு எனச் சொல்லிக் கொள்பவர்கள் எவ்வாறு அப்படியிருக்க முடிகிறது என விளங்கவில்லை. மக்களை போராட்ட அரசியல் நோக்கித் திரட்டுவதானால் போராட்டங்களை ஒழுங்குபடுத்தலும் அதில் பங்குபற்றலும் அவசியம் என்பது அடிப்படை அறிவு. அமைப்பு பலவீனத்தால் மட்டுமின்றி அரசி;யற் பலவீனத்தாலும் தான் இந்த பங்குபற்றாமை நிகழ்கிறது. இதில் மாற்றம் வரவேண்டும்.
சில அமைப்புக்கள் ஒரு வித “தீண்டாமை” காத்து வருகிறார்கள். இவர்களுடன் இணைந்து ஏதாவது செய்தால் “தீட்டு” பட்டுவிடும் என நினைப்பதுபோல் நடவடிக்கைகள் இருக்கின்றன. அந்தப் போராட்டத்தில் அவர்கள் வருகிறார்கள் அதனால் பங்குபற்ற முடியாது. இந்தப் போராட்டத்தில் கொடி இருக்கும் அதனால் போக முடியாது என்று சாக்குப் போக்கு சொல்வது சரியல்ல. எல்லாவித போராட்டங்களிலும் பங்குகொள்வது சாத்தியமே. அந்த பங்கு பற்றுதல் முற்று முழுதாக வலதுசாரியத்தை பலப்படுத்தும் ஒன்றாக இருப்பின் அதில் பங்கு பற்றுதல் தவிர்ப்பது அல்லது எதிர்த்து போராட்டத்தை ஒழுங்கமைப்பது நியாயமே. மற்றபடி கலந்துகொள்ளாமல் இருப்பது சரியல்ல.
அவ்வாறு ஒன்றிணைந்து பலம் காட்டும் பாரம்பரியத்தை நாம் தான் செயற்பாடுகள் மூலம் செய்து காட்டி வளர்த்தெடுக்க வேண்டியிருக்கிறது.
இது பற்றிச் சிந்திப்போம்.