ஜெரமி கோர்பினும் – தலைமைத்துவமும் பற்றி
1. ஒட்டுமொத்த அரசியல் அதிகாரமும் ஆட்டம் கண்டுள்ளது.
ஆடி வர முதலே பல அம்மிகள் பறக்கின்றன. இங்கிலாந்தில். பிரக்சிட் – ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரியும் வாக்கெடுப்பில் இருந்து எழுந்த சூறாவளி இங்கிலாந்து அரசியல் அதிகாரத்தை உலுக்கி அவர்களது அழுக்குகளைத் திறந்து காட்டியிருக்கிறது.
பழைமைவாதக் கட்சிக்குள் – கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் – தலைமைப் பதவியைப் பிடிக்கும் போட்டி அவர்களை இரண்டாகப் பிளந்து நிறுத்தியிருக்கிறது. போரிஸ் ஜோன்சன் முக்கிய போட்டியாளராகத் தன்னை அறிவித்திருக்கிறார். கட்சியின் இருபக்கத்தையும் இணைப்பதாகச் சொல்லிக்கொண்டு வாக்கெடுப்பின் போது பேசிய பேச்சுகளைத் தலைகீழாக மாற்றிப் பேசத் தொடங்கியுள்ளார். ஒன்றியத்துக்கு வழங்காமல் மிச்சம் பிடிக்கும் பணத்தை வைத்தியசாலைகளுக்கு செலவழிப்பதாகச் சொன்ன கதைகள் எல்லாம் காற்றிற் பறந்துவிட்ட நிலையில் ஐரோப்பியாவுடன் நெருங்கிய உறவு பற்றிப் பேசுகிறார் அவர். பிரக்சிட் வென்றால் மூன்றாம் உலக யுத்தம் வந்துவிடும் என்று பேசி மிரட்டிக்கொண்டிருந்த பிரதமர் தான் ஆட்டிக்கிள் 50ஐ எடுத்து பிரக்சிட்டுக்கான வேலைகளைத் தொடங்கி வைக்கப் போவதில்லை என்றும், அதைச் செய்ய பிரக்சிட் சார்ந்த புதிய பிரதமர் வரவேண்டும் என்றும் சொல்லிப் பதவிவிலகியிருக்கிறார். அடுத்த அக்டோபருக்குள் பழைமைவாதக் கட்சிக்குத் தலைவருக்கான தேர்வும்- அவர் பிரதமராகும் நடவடிக்கையும் நிறைவேற்றப்பட வேண்டியிருக்கிறது.
இந்த்த் தலைமைக்கான தேர்வு என்பது என்றும் வழமைபோல் நடக்கும் ஒரு செயல் அல்ல. கட்சி இரண்டாகப் பிளந்து கிடக்கும் நிலையில் இது நிகழ்கிறது என்பதை விட முக்கியமான விசயம் ஒன்றுண்டு. தேர்ந்தெடுக்கப்படும் தலைவர் உடனடியாகப் பிரதமராகும் வாய்ப்புண்டு என்ற நிலவரம் இந்தப் போட்டியைப் படு கூர்மையாக்கியிருக்கிறது. போரிஸ் போன்ற வலதுசாரிகளுக்கு நாம் வாக்களிக்கவில்லை. அதனால் அவர் பிரதமராக இருக்க முடியாது எனச் சொல்லி உடனடியாகப் பொதுத் தேர்தலைக் கோரும்படி இடதுசாரிகள் கோருகிறார்கள். ஆனால் அதற்குள் சிறு காலப் பகுதியிலாயினும் பிரதமராக இருக்கும் வாய்ப்பு அடுத்த கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவருக்கு உண்டு. பரக்சிட் கொடுத்த நம்பிக்கையில் அடுத்த தேர்தலைத் தாம் வென்றுவிட முடியும் என அவர்களிற் பலர் நம்புகிறார்கள். அந்த அடிப்படையில் கட்சியின் தலைவராக வருபவருக்கான முக்கியத்துவம் கூடியிருக்கிறது. இதனாற்தான் இவர்களுக்கிடையில் தலைமைக்கான போட்டி கடும் சண்டையைக் கிளப்பியுள்ளது.
இதே வகை பதவிக்கும் அதிகாரத்துக்குமான அவா தான் தொழிலாளர் கட்சியின் – லேபர் கட்சியின் – வலதுசாரியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியிலும் ஊறிக்கிடக்கின்றது. தேர்தல் வரப்போகிறது எனத் தெரிந்ததும் அவர்களுக்குள்ளும் போட்டி உச்சம் காணத் தொடங்கி விட்டது. 2020ல் நடக்கவிருந்த பொதுத் தேர்தலுக்கு முன்பு எப்படியாவது ஜெரமி கோர்பினை விழுத்திவிடலாம் என்று தமக்கு நல்ல சந்தர்ப்பத்துக்காகக் காத்துக் கொண்டிருந்த இந்த வலதுசாரிகள், வேறு வழியின்றிச் சண்டையில் இறக்கி விட்டிருக்கிறது பிரக்சிட். அடுத்த தேர்தல் சில மாதங்களில் என்றால் அதற்குள் கோர்பினை வெளியேற்ற வேண்டிய தேவை இவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
2. தொழிலாளர் கட்சியின் வலுதுசாரியச் சூழ்ச்சி
லேபர் கட்சியின் வலதுசாரிகள் செய்து கொண்டிருக்கும் தலைமைக் கவிழ்ப்புச் சூழ்ச்சி எந்த அடிப்படையில் இருந்து ஆரம்பித்தது எனத் தெரிந்து கொள்வது மிக்க அவசியம். அரசியல்வாதிகள் சொல்லும் பொய்கள் இயல்பாக இருப்பதால் அவை பொய்யல்ல என்று பார்க்கப்படுவது தவறு. சிலர் தெரிந்து திட்டமிட்டுப் பொய் சொல்கிறார்கள். சிலர் போக்கோடு போக்காகத் தமது வர்க்க நலன் –பதவி ஆசை – மற்றும் தனிப்பட்ட நலன் சார்ந்து பேசி பொதுப் பொய்க்குப் பலம் சேர்க்கிறார்கள். அவர்கள் தர்க்க ரீதியான ஏதோ ஒரு காரணத்தைச் சுட்டுவதால் மட்டும் ஒரு பொய் உண்மையாகி விட முடியாது. களத்தில் இருந்து உந்தப்படும் செயற்பாடுகள் பின்பு இந்தப் பொய்களைப் பொய்யெனப் பிளந்து காட்டும். தற்போது லேபர் கட்சியின் வலதுசாரிகள் தமது சூழ்ச்சிக் கிளர்ச்சிக்கு காரணமாகச் சொல்லும் விசயங்கள் பெரும் பொய்ப் பூசணியை ஒரு பிடி சோற்றுக்குள் புதைக்கும் நடைமுறையாகவே இருக்கிறது.
பிரக்சிட்டுக்கு எதிராக கோர்பின் முழு மனத்துடன் பிரச்சாரம் செய்யவில்லை. அதனாற்தான் இணையும் குழு தோல்வி கண்டது என்பது ஒரு குற்றச்சாட்டு. அடுத்த தேர்தலுக்குச் செல்வதற்கு ஏற்ப தலைவர் அல்ல கோர்பின் என்றும் – அவர் தலைமையிற் சென்றால் தோற்றுவிடுவோம் என்றும் – அவர் ஒரு தலைவருக்கான பண்புகள் அற்றவர் என்றும் குற்றம் சுமத்தப்படுகிறது. தவிர நிழல் வெளிநாட்டு மந்திரியான கிளாரி பென்னை வேலையில் இருந்து தூக்கியதால்தான் தாமும் இராஜினாமா செய்வதாக பலர் குறிப்பிடுகின்றனர். சில ஊடகங்களும் அவ்வாறே தவறான செய்தியை வெளியிடுகின்றன.
கோர்பின் தலமையில் தேர்தலுக்குச் செல்ல வலதுசாரிகள் தயார் இல்லை என்பதும் – அவர்கள் தமக்குக் கிடைக்கும் முதற் சந்தர்ப்பத்தில் கோர்பினை வெளியேற்றக் காத்திருக்கிறார்கள் என்பதும் அனைவரும் அறிந்த உண்மை. இதற்காக அவர்கள் தமக்குள் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தது பற்றி ஏற்கனவே ஊடகங்கள் பல செய்திகளை வெளியிட்டிருக்கின்றன. பல்வேறு தொழிலாளர் கட்சி கிளைகளில் இந்த அடிபாடுகள் நிகழ்ந்துள்ளன. லேபர் கட்சிக்குள் ஏற்பட்ட பிளவு ஒரிரு வர்க்கம் சார்ந்த பிளவு.
சேவைகள் வெட்டப்படுவதற்கு எதிராக திரண்டுகொண்டிருந்த அதிருப்தி பல்வேறு அழுத்தங்களைச் சமூகத்தில் ஏற்படுத்தியிருந்தது. தொழிலாளர் கட்சி தமது பழைய நிலைப்பாட்டில் இருந்து மாறி –டோனி பிளேயரின் புதிய லேபராக இயங்குவதால் மக்கள் அதில் இருந்து விலத்துகிறார்கள் என்ற சலசலப்பு பலப்படத் தொடங்கியிருந்த தருணத்தில்தான் அக்கட்சிக்கான தலைவர் தேர்தல் நிகழ்ந்தது. இடதுசாரிகளால் தலைமையை வெல்ல முடியாது என்றும் நாட்டில் எதிர்ப்புத் திரளுவது என்பது வெற்றுப் பேச்சு என்றும் நிரூபித்துத் தமது அதிகாரத்தைக் கட்சிக்குள் பலப்படுத்த வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டிருந்த வலதுசாரிகள் மிகப்பெரும் “தவறு” ஒன்றைச் செய்தனர். ஒரு இடதுசாரிப் போட்டியாளரையும் போட்டியிட அனுமதித்து அவர்கள் வெல்ல முடியாது என நிறுவிக்காட்ட அவர்கள் முடிவெடுத்தனர். இவ்வாறு அதிர்ஷ்டவசமாகப் போட்டியில் இறக்கப்பட்டவர்தான் கோர்பின். அதற்குப் பிறகுதான் அவர்களுக்குத் தெரிந்தது தாங்கள் விட்ட பிழை. வரலாறுகாணாத அளவு அதிக வாக்குகளுடன் அவர் தலைமைப் பதவியைப் பிடித்தார். இங்கிலாந்தில் எந்த ஒரு கட்சித் தலைவருக்கும் இவ்வளவு வாக்குகள் விழுந்த வரலாறு இல்லை. அவருக்கு வாக்களிக்கவென ஏராளமான இளையோர் கட்சியில் புதிதாகச் சேர்ந்தனர். அவரை எதிர்த்துப் போட்டியிட்டவர்கள் அனைவரும் கடும் வலதுசாரிய கொள்கைகள் உள்ளவர்கள். அவர்கள் அனைவரும் சொற்ப வாக்குகள் மட்டும் பெற்றுத் தரை மட்டமாக்கப்பட்டனர். இந்த தேர்தல் முடிவை ஏற்றுக்கொண்ட பொழுதும் வலது சாரியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது இறுக்குப்பிடியை தளர்த்தவில்லை. இடதுபக்கம் சாய்ந்து நின்றவர்களை இழுத்து ஒரு நிழல் மந்திரிசபையை கோர்பின் உருவாக்கியபோதும் அவருக்குப் பாராளுமன்ற லேபர் கட்சிக்குள் முழு ஆதரவு இருக்கவில்லை என்பதே உண்மை. முடிவு தெரிந்த கையுடன் – கோர்பின் லேபர் கட்சி தலைமைக்கு வந்த நிமிடத்தில் இருந்தே அவரைப் பதவி இறக்கம் செய்யும் சூழ்ச்சிகளும் உரையாடல்களும் ஆரம்பித்து விட்டன.
அப்படி என்னதான் கோபம் இவர்களுக்கு ? கோர்பின் மேல் ஏன் இத்தனை வெறுப்பு இவர்களுக்கு? பாராளுமன்றத்தில் கோர்பின் வாக்களித்திருக்கும் வரலாற்றைப் பார்ப்பவர்களுக்கு ஒரு உண்மை தெரியும். அவர் தொடர்ந்து அனைத்து யுத்தங்களுக்கும் எதிராக வாக்களித்திருக்கிறார். கல்விச் சேவைகள் வெட்டப்படுவதற்கு எதிராக – வைத்திய சேவைகளுக்கு ஆதரவாக என ஏராளமான முற்போக்கு கொள்கைகளின் பக்கம் அவர் நிற்கிறார். தொழிற் சங்கங்களுக்கு எதிரான ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து தொழிலாளர்களின் உரிமைகளை தாக்க பழைமைவாதக் கட்சி எடுத்த முயற்சிக்கு எதிராகக்கடுமையான எதிர்ப்பை அவர் வைத்தார். அவருடன் நெருக்கமாக வேலை செய்யும் இடதுசாரியான ஜோன் மக்டொனாலும் இணைந்து அந்த எதிர்ப்பைச் செய்தனர். உங்களின் வாந்திகளுக்குள்ளால் நீந்திச் சென்றாலும் செல்வேனே தவிர இந்தக் கேவலமான சட்டத்தைக் கொண்டுவர வாக்களிக்க மாட்டேன் எனத் தற்போது நிழல் சான்சிலராக இருக்கும் ஜோன் மக்டொனால்ட் குறிப்பிட்டிருந்தது அறிந்திருப்பீர்கள். சாதிய ஒடுக்குதலுக்கு எதிரான சட்டத்தைக் கொண்டு வரும் முயற்சி – துவேசங்களுக்கு எதிரான சட்டங்களை இறுக்கும் நடவடிக்கை எனப் பல விசயங்களில் ஜெரமி முன்னின்று செயற்பட்டிருக்கிறார். தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமை உட்பட பல்வேறு ஒடுக்கப்படும் தேசியங்கள் – மக்கள் பக்கம் நின்று கடுமையாகப் பேசியிருக்கிறார். 2009ம் ஆண்டு ஆயிரக்கணக்கான தமிழ் பேசும் மக்கள் பேரணியில் ஈடுபட்டிருந்த பொழுது அவர்களுடன் முழுமையாகத் தன்னை இணைத்திருந்தவர் அவர். தமிழ் சொலிடாரிற்றி அமைப்பிற்கு அதன் ஆரம்பத்தில் இருந்தே முழுமையான ஆதரவை வழங்கி வந்தவர். ஜோன் மக்டொனால்ட் தமிழ் சொலிடாறிற்றியின் சேர்மனாகக்கூட இருந்திருக்கிறார்.
இவைதான் ஜெரமியின் கிறிமினற் குற்றங்கள். பெரும் லாபமீட்டும் நலன்களுடன் சமரசம் செய்ய அவர் தயங்குவதுதான் அவரது குற்றம். வியாபார நலனுக்காக ஈராக் மேல் தொடுக்கப்பட்ட யுத்தத்துக்கு எதிராக மில்லியன் மக்கள் தெருவில் நின்றார்கள். அதைப் புறக்கணித்த யுத்தத்துச் சென்று மில்லயன் மக்களின் சாவுக்கு காரணமான பிளேயரும் அவர் கூட்டாளிகளும் ஜெரமியைத் தமது அடிவயிற்றில் இருந்து வெறுக்கிறார்கள். அத்தருணம் உருவான யுத்த எதிர்ப்பு கமிட்டியின் முக்கிய உறுப்பினராக இருந்த டோனி பிளேயர் போர் குற்ற விசாரனையை எதிர்கொள்ள வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை வைக்கிறார்.
ஒரு பக்கம் இடதுசாரிய – முற்போக்கு – மக்கள் சார் கொள்கைகள். மறு பக்கம் பெரும் லாபம் சார் – சுயநல – பதவி ஆசைக் கொள்கைகள். இந்த முரண் தான் லேபர் கட்சிக்குள் எழுந்துள்ள பிளவின் அடிப்படை. ஜெரமியின் கொள்கைகளை நேரடியாக எதிர்த்துப் பேசினால் தமக்கு இருக்கும் ஆதரவும் போய்விடும் என்ற பயத்தில் பொய்கள் மூலமும் – சூழ்ச்சி மூலமும் அவரைத் துரத்தி விட முயல்கிறார்கள் வலதுசாரிகள்.
பிரக்சிட் முடிவு வெளிவந்த அன்று – கடந்த வெள்ளிக்கிழமை நிழல் காபினட் சந்தித்துக்கொண்டது. அத்தருணம் யாரும் எதுவும் பேசவில்லை. யாரும் தமது எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை. ஆனால் அந்த கூட்டம் முடிந்த கையோடு வலதுசாரிய இரகசியச் சூழ்ச்சி கோர்பினைச் சுட்டிக் கட்டப்பட்டுக்கொண்டிருப்பது தெரிய வந்தது. இதனை முன்னின்று நடத்திக்கொண்டிருந்தவர் கிளாரி பென். ஐரோப்பிய ஒன்றியத்தையும் யுத்தத்தையும் கடுமையாக எதிர்த்த புகழ்பெற்ற இடதுசாரியான டோனி பென்னின் மகனான இவர் கடும் வலதுசாரியத்தை முன்னெடுப்பவராக இருக்கிறார். சிரியாவில் குண்டு போடுவது பற்றிய பாராளுமன்ற விவாதத்தின்போது கோர்பினுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த இவர் தனது பேச்சில் கோர்பினைக் கடுமையாக தாக்கிப் பேசியிருந்தார். அப்பொழுதே இவரை வைத்து கோர்பினை உடைக்கும் சூழ்ச்சிகள் தொடங்கியிருந்தது தெரிந்திருந்தது. அவரது பேச்சை அற்புதமான பேச்சாக அனைத்து வலதுசாரியக் கட்சிகளும் பிரச்சாரித்தன. தற்போது அந்தப் பேச்சைப் பார்பவர்களுக்கு தெரியும் அது எவ்வளவு கேவலமான யுத்த ஆதரவுப் பேச்சு என்று. இவர்களுக்கிடையில் இருந்த முரண் அனைவருக்கும் தெரிந்திருந்ததே. லண்டனில் நடந்த தமிழ் கூட்டமொன்றிலும் இந்த முரண் வெளிப்படையாக வெளியாகியிருந்தது. தமிழ் பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமையை ஆதரித்தும் – யுத்தக் குற்றத்துக்கு எதிராகவும் கடுமையாகப் கோர்பின் பேசியிருந்தார். அதே கூட்டத்தில் அவர் கிளாரி பென்னை எதிர்த்துப் பேசவேண்டியிருந்தது. மக்கள் நீதி கிடைப்பதற்காக காத்திருக்க வேண்டும் எனவும் இதற்கு பத்து இருபது வருசங்களுக்கு மேல் எடுக்கும் என்ற பாவனையிலும் பேசியிருந்தார் பென்.
வலது சாரியச் சூழ்ச்சி பென் தலைமையில் முன்னெடுக்கப்படுவது தெரிந்ததும் அவர் உடனடியாக நிழல் காபினெட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து சூழ்ச்சியில் ஈடுபட்டிருந்த வலதுசாரிகள் ஒவ்வொருவராகப் பதவிவிலகத் தொடங்கியிருக்கின்றனர். இது நிதானமான ஒழுங்குபடுத்தப்பட்ட சூழ்ச்சி என்றும் அவர்கள் கோர்பினை விழுத்த முடிவோடு இயங்குவது பற்றியும் வலதுசாரி ஊடகங்கள்கூடச் செய்தி வெளியிட்டிருக்கின்றன. இதே சமயம் கோர்பினுக்கு வாக்களித்த சாதாரண கட்சி உறுப்பினர்கள் கோர்பின் தொடர்ந்து தலைவராக இருக்க வேண்டும் எனக் கிளர்ந்தெழும்பியிருக்கின்றனர். அதற்கான பெட்டிசனில் ஏற்கனவே இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டிருக்கின்றனர். லேபர் கட்சி அலுவலகங்களுக்கு முன்னால் மக்கள் திரண்டு கூக்குரல் எழுப்பும் செயல்களும் நடக்கத் தொடங்கியிருக்கிறது.
கோர்பினுக்கு மக்கள் மத்தியில் – கட்சி உறுப்பினர் மத்தியில் – குறிப்பாக இளையோர் மத்தியில் ஆதரவு இருக்கிறது என்பது கேள்விக்கிடமற்றது. இப்படியிருந்தும் கோர்பினை வெளியேற்றும் கேவலமான சூழ்ச்சியில் ஈடுபட்டு வரும் வலதுசாரிகள் முதன்மைப்படுத்தும் முக்கிய விசயம் அவர் தலைமைப் பண்பற்றவர் என்பதாக இருக்கிறது. இது ஒரு நகைப்புக்கிடமான விசயம்.
3. தலைமைத்துவம்
யானைகள் கூட்டங் கூட்டமாக வாழ்பவை. ஒவ்வொரு கூட்டத்துக்கும் அனுபவம் மிக்க ஒரு தலைமை யானை இருக்கும். இந்தக் கூட்டங்கள் சில இடங்களில் ஒன்றுகூடுவதும் உண்டு. அத்தருணத்தில் பெண்யானைகளுடன் புணர்வதற்கான கடும் யுத்தத்தை ஆண் யானைகள் செய்யும். இந்த அல்பா ஆண் செயற்பாடுகளை கூட்டாக வாழும் மிருகங்கள் மத்தியிற் காணலாம். அல்பாவைத் தேர்ந்தெடுத்தல் மூலமாகப் பலமான ஜீன் தெரிவாகி அதன் மூலம் அந்தக் கூட்டம் வாழ்தலுக்கான கூடுதல் சாத்தியம் ஏற்படுத்தப்படுகிறது என்ற விவாதமும் வைக்கப்படுகிறது. இவ்வாறுதான் மனிதர்கள் மத்தியிலும் அதி உயர் அல்பா ஒன்றுதான் தலைமை வகிக்கும் நிலையில் இருக்கலாம் என வாதிடுவோரும் உண்டு. இந்த அடிப்படையான வாதத்தைத்தான் லேபர் வலதுசாரிகள் முன்வைத்து வருகின்றனர். இத்தகைய வாதம் படு கீழ்த்தரமான வாதம். இதில் எந்தவித விஞ்ஞான புரிதலும் இல்லை. இது துவேசம் நிரம்பிய – சாதி வெறி நிரம்பிய-பெண்களுக்கு எதிரான – விவாதங்களின் அடிப்படையாக இருக்கும் விசயம். மிருகங்கள் கூட்டாக வரும்பொழுது தோன்றும் அடிப்படைப் பண்புகளுக்கும் – அது ஒரு சமூகமாக மாறும்பொழுது எழும் பண்புகளுக்கும் ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன. சிக்கலான சமூக அமைப்பில் வாழும் மனித விலங்கும் அடிப்படை விலங்காக இயங்குகிறது என்ற பாவனையில் இயங்கும் இவர்கள்தான் மிருகத்தனமான நடவடிக்கைகளை முன்னெடுக்கிறார்கள்.
கோர்பின் லேபர் கட்சி தலைவரான கையுடனேயே இந்த பேச்சு ஆரம்பித்துவிடட்டது. அவருக்கு ரை கட்டத் தெரியாது எனக் கிண்டல் செய்தார்கள். “கோர்டைப் போடும் – விறைப்புடன் நின்றபடி தேசிய கீதத்தைப் பாடும்” எனப் பல்வேறு திட்டல்களை அவர் நோக்கி வைத்தார்கள். இந்த “அல்பா ஆண்களின்” அந்தரப்பட்ட கதைகளுக்குப் பின்னால் இங்கிலாந்து அரசியற் தலைமைகள் பற்றிய பண்பு ஒன்று மறைந்து நிற்பதை நாம் அவதானிக்க வேண்டும்.
எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் இருப்பதுபோலவே பிரித்தானிய அரசியல் வாதிகளும் வசதியான சிறுபான்மையில் இருந்தே உருவாகிறார்கள். இது ஒருவகை “சாதிய” முறைபோல் நடைமுறையில் இருக்கிறது. அரசியல் ஈடுபாடுள்ள செல்வந்தக் குடும்பங்களின் குழந்தைகள் பெரும் பணம் செலுத்திப் படிக்கும் தனியார் பாடசாலைகளுக்கு அனுப்பப்படுகிறார்கள். அங்கிருந்து நேரடியாக அக்ஸ்பிரிட்ஸ் எனச் “செல்லமாக” சேர்த்து அழைக்கப்படும் ஆக்ஸ்போர்ட், கேம்பிரிட்சுக்கு செல்கிறார்கள். குறிப்பாக பெரும் செருக்குள்ள கல்லூரியான ஈட்டனுக்குச் செல்கிறார்கள். இந்தக் காலங்களில் இவர்களுக்கும் சமூகத்துக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதில்லை. சமூக எதிர்ப்பு நடவடிக்கைகளைச் செய்யும் கூத்தாடிகளாகத்தான் இவர்களது படிப்புக்காலம் நகர்கிறது. நாசிகளாக உடுப்புப் போட்டு கேளிக்கை செய்வது- பெண்களைக் கீழ்த்தரமாகக் கொடுமை செய்யும் கேளிக்கை விருந்துகளை நடத்துவது என இவர்களின் காலம் கழிகிறது. இவ்வாறு படித்த காலத்தில்தான் இறந்த பன்றி ஒன்றுடன் புணர்ச்சி வைத்துக்கொண்டார் பிரதர் டேவிட் கமரோன் எனச் செய்திகள் அன்மையில் வெளியாகியிருந்தன. எந்த அடிப்படையும் அற்ற முறையில் விவாதங்களைச் செய்யும் “விவாத்த் திறன்களை” இந்தக் கல்லூரிகள் இவர்களுக்குப் படிப்பிக்கின்றது. இடதுசாரிகளைத் தாக்குவதும் அவர்கள் கூட்டங்களுக்குச் சென்று குழப்பும் வேலைகளைச் செய்வதையும் இவர்கள் பொழுது போக்குக்காகச் செய்து வந்திருக்கிறார்கள். டேவிட் கமரோன் அவ்வாறு அக்காலத்தில் மிலிட்டன் என்று அறியப்பட்ட தற்போதய சோசலிச கட்சிக் கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார் என முன்பு டெய்லி மெயில் செய்தி வெளியிட்டிருந்தது. இதே மிலிட்டன் உறுப்பினர் ஒருவரை மதுபானக் கடையில் வைத்துக் குத்தி அவரது மூஞ்சியை உடைத்துத்தான் கோல்டன் பிரவுன் தனது அரசியற் பயணத்தை தொடங்கினார். இது பற்றி கார்டியன் பத்திரிகை விபரமாக முன்பு எழுதியிருக்கிறது.
இவ்வாறு இருக்கும் இவர்கள் தமது படிப்பை முடித்த பிறகு “பாதுகாப்பான சீட் எனச் சொல்லப்படும் தேர்தல் தொகுதிகளில் போட்டியிடத் தெரிவு செய்யப்படுகிறார்கள். சேவ் சீட் – பாதுகாப்பான சீட் என்றால் அங்கு அக்கட்சி தோற்பதற்கு வாய்புக்கள் மிகக் குறைவு என்று அர்த்தம். மிக வலதுசாரிய இடங்களில் கன்சர்வேட்டிவ் கட்சிதான் தொடர்ந்து வென்று வருகிறது. அதே போல் தொழிலாளர்கள் மற்றும் வெளிநாட்டார் செறிந்திருக்கும் பகுதிகளில் தொழிலாளர் கட்சிதான் தொடர்ந்து வென்று வருகிறது. இப்பிரதேசங்கள் அக்கட்சிகளுக்குப் பாதுகாப்பான பகுதிகளாக இருக்கின்றன. கட்சி சார்பாக நாய்க்குட்டியை நிற்பாட்டினாலும் அது வென்றுவிடும் எனச் சொல்லப்படும் வகையில் இந்த இடங்கள் இருக்கின்றன. இத்தகைய இடங்களில் தேர்தலில் நிற்பவர்கள் அக்கட்சி சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் ஆவது நிச்சயம். அதனால் இத்தகைய இடங்கள் அரசியற் செல்வாக்குள்ளவர்களால் – கட்சிக்குள் செல்வாக்கு உள்ளவர்களால் கைப்பற்றப்படுகிறது. மேற்சொன்ன செல்வந்தக் குழந்தைகள் இத்தகைய இடங்களில் போட்டியிட்டுத்தான் பாராளுமன்றம் செல்கின்றன. பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகுதான் அவர்களை மக்களுக்குத் தெரிய வருகிறது. அதற்கு முன் அவர்களை யாரும் தெரிந்திருப்பதில்லை. ஏனெனில் அவர்கள் மக்கள் மத்தியில் வேலை செய்து அரசியல்வாதியாகினவர்கள் கிடையாது. சிறப்புச் சலுகைககள் மூலம் முன்னுக்கு வந்தவர்கள். அதே சமயம் இவர்களுடன் கூடப்படித்தவர்கள்தான் பல வலதுசாரிய ஊடகங்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு வேலைக்குச் செல்கிறார்கள். அவர்களும் திட்டமிட்டு ஆளையாள் மேம்படுத்திக்கொள்கிறார்கள்.
சட்டன் டிரஸ்ட் என்ற அமைப்பு இது பற்றி சிறு ஆய்வு ஒன்றைச் செய்திருந்தது. தனியார் பாடசாலைகளுக்குச் செல்லும் 7 வீதத்தினர் மத்தியில் இருந்துதான் 31 வீதமான பாராளுமன்ற உறுப்பினர்கள் உருவாகுவதை அந்த ஆய்வு சுட்டியிருந்தது. 19 வீதத்தினர் அக்பிரிட்ஜில் இருந்து வருபவர்களாக இருக்கிறார்கள் (1 வீததத்துக்கும் குறைவானவர்களே அத்தகைய கல்லூரிகளுக்குச் செல்கிறார்கள்). 50 வீதத்துக்கும் மேற்பட்ட தற்போதைய பா.உறுப்பினர்கள் இவ்வாறு தனியார் கல்விகளுக்குள்ளால் வந்த செல்வந்தர்களின் குழந்தைகளாக இருக்கிறார்கள். தற்போதைய மந்திரிசபையில் இருப்பவர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் (59 வீதம்) அக்ஸ்பிரிட்சுக்குள்ளால் வந்தவர்களாக இருக்கிறார்கள். தற்போதைய மந்திரி சபையில் இருக்கும் 29 பேரில் 23 பேர் மில்லியனர்கள். பாராளுமன்றத்தில் இருக்கும் ஏராளமான உறுப்பினர்கள் மில்லியனர்களாகவும் தமக்கெனப் பல்வேறு வியாபாரங்களை வைத்திருப்பவர்களாகவும் இருக்கின்றனர். டேவிட் கமரோனின் குடும்பம் பனாமாவில் காசு பதுக்கி வைத்திருந்ததும் இங்கு அவர்கள் வரி செலுத்தாமல் இருந்ததும் அண்மையில் வெளியான செய்திகள். இது தவிரத் தமது சம்பளத்தையும் தாமாகவே தொடர்ந்து உயர்த்தி வருபவர்களாகவும் இருக்கின்றனர். அவர்கள் எடுக்கும் £75 000 சம்பளத்தில் தொட வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை. ஏனெனில் அவர்களுக்கான வீட்டு வசதி உட்படப் பல்வேறு செலவினங்களுக்கும் பாராளுமன்றம் தனியாகக் காசு கொடுத்து வருகிறது. கண்ட கண்ட செலவுக்கெல்லாம் மக்களின் வரிப்பணத்தை அவர்கள் எடுத்திருந்தது பற்றிய செய்தியைப் பத்திரிகைகள் வெளிக்கொண்டு வந்திருக்கின்றன.
இந்த வலதுசாரியக் குழந்தைகள்தான் இன்று அரசியல் பற்றிப் பாடம் எடுக்கின்றன. தமது சைசுக்கு அளந்து தயாரிக்கப்பட்ட கோர்ட்டை இறுக்கிப் போட்டபடி – அதி விலைகூடிய சிவப்பு ரையுடன் அல்பா ஓநாய் போல் உற்று நோக்கிப் பேசிக்கொண்டிருக்கும் ஸ்டீபன் கின்னக் போன்றவர்கள் சொல்கிறார்கள் ஜெரமிக்கு தலைவராக இருக்கும் தகுதிகள் இல்லை. இவர் தனது தகப்பனின் செல்வாக்கால் அரசியலில் இடம் பிடித்தவர். முன்பு கட்சித் தலைவராக இருந்த கின்னக்தான் கட்சிக்குள் இருந்த இடதுசாரிகளைக் களையாடி பிளேயரிசம் வளர வழியேற்படுத்திக் கொடுத்தவர். புரட்டிப் புரட்டி தந்திரமாகப் பேசுவது – விலைகூடிய உடை உடுத்துவது – பெரும் வியாபாரங்களையும் லாபங்களையும் பாதுகாக்கும் கொள்கைகளை முன்வைப்பது – இவைதான் இவர்கள் சொல்லும் தலைமைக்கான தகுதிகளாக இருக்கிறது. இதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட அரசியலில் இருந்து வருபவர் கோர்பின்.
பாராளுமன்றத்துக்குச் சைக்கிளில் சென்று வந்து கொண்டிருந்தவர் கோர்பின். தனது தொகுதியில் தீவிரமாக இயங்கி மக்களின் ஆதரவைப் பெற்றவர் அவர். தனது தொகுதி மக்களிற் பலரை அவருக்குத் தனிப்பட்ட முறையிற் தெரியும். ரோட்டில் அவரைப் பார்த்துப் பேசுவது மிகச் சாதாராணமாக இருந்த ஒரு விசயம். அனைத்துத் தொழிற் சங்க நடவடிக்கைகளையும் ஆதரித்து வந்திருக்கிறார். தமிழ் சொலிடாறிற்றி கூட்டம் உட்படப் பெரும்பான்மை முற்போக்குக் கூட்டங்களுக்கு தொடர்ந்து அழைக்கப்பட்டுக்கொண்டிருந்தவர் அவர். சாதாரண மக்களைப் போல் உடை உடுத்துபவர் இதனாற்தான் ஏராளமான மக்களால் நேசிக்கப்படுபவராக இருக்கிறாரவர். “அவர் நல்லவர். ஆனால் தலைவரில்லை” என இவர்கள் தட்டிக்கழிக்கும் போக்கு கேவலமானது. மக்களின் நலன்சார்ந்த நல்லவராக இருப்பதும் – மக்களின் தலைவராக இருப்பதும் ஒன்றில் ஒன்று பின்னிப் பிணைந்த விசயங்கள்.
தலைமை என்பது மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக இருக்கவேண்டும். மக்களின் நலன்களை முதன்மைப்படுத்தி இயங்குவதாக இருக்கவேண்டும். அல்பா மேல் அல்ல தலைமை. ஓநாயும் யானையும் புணர்ச்சி செய்வதற்கு மட்டுமே அத்தகைய தலைமைத் தேர்வு உதவும். சமூகத்தை முன்னோக்கி நகர்த்த ஒரு சதத்துக்கும் அது உதவப் போவதில்லை.
இது தவிர இவர்கள் நினைப்பதுபோல் நிலவரங்கள் கட்சிக்குள்ளும் வெளியிலும் இல்லை. இவர்கள் உடைத்துக்கொண்டதால் 250 பேருள்ள பாராளுமன்றத்தினர் தனிக்கட்சியாகவும் 250 000 பேர் உள்ள கட்சி இன்னுமொரு கட்சியாகவும் நிற்கும் வாய்ப்புத்தான் இருக்கு என ஜோர்ஜ் கலோவே நகைப்புச் செய்த நிலைதான் இருக்கிறது. கோர்பின் ஒன்றியத்தின் இணைவுக்காகப் பேசியது போதாது என அழும் உறுப்பினர்கள் பலரது இடங்களில் – குறிப்பாகத் தொழிலாளர் செறிந்த இடங்களில் பிரிவுக்கான வாக்குத்தான் அதிகமாக விழுந்துள்ளது. தமது தொகுதியினரை நம்பச் செய்ய முடியாத மார்கிரட் கொட்ஜ் போன்றவர்கள் கோர்பினைக் கேள்வி கேட்க வந்து விட்டார்கள் என டயான் அபோர்ட் நகைப்பது சரியே.
கோர்பின் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டால் கட்சிக்குள் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் வெளியேறுவர் என்பதில் சந்தேகமேயில்லை. கட்சிக்கு வெளியிலும் இளையோர் பொங்குவர். ஒரு யூனியன்கூட கொர்பினை வெளியேற்றுபவர்களுக்கு ஆதரவாக வரப்போவதில்லை. மாறாக மிலிட்டன் யூனியன்களும் உடனடியாக கட்சியை விட்டு வெளியேறும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அது பற்றிய சூழ்ச்சியில் ஈடுபட்டிருக்கும் வலதுசாரிகளுக்குக் கவலையில்லை. அவர்கள் கட்சி வெற்றுக் கோதாக இருந்தாலும் பரவாயில்லை – கோர்பின் வேண்டாம் என்ற நிலையில் நிற்கிறார்கள். வெற்றுக்கோதுக் கட்சியைத் தமக்குரிய கிளப்பாக மாற்றி சிறு செல்வந்தக் குழுவுக்குள் அரசியலை முடக்குவதில் குறியாக இருக்கிறார்கள். தங்களைத் தவிர மக்களுக்கு வேறு தேர்வு இல்லை என்ற தெனாவட்டில் இருந்து பிறக்கிறது இத்துணிவு. புதிய தேர்வுகள் எழுவதும் -புதிய கட்சிகள் தோன்றிக்கொண்டிருப்பதும் நமது சமகால வரலாறாக இருக்கும் நிலவரம் இவர்களுக்கு விளங்கப் போவதில்லை.
தொழிலாளர்களின் பெரும் உறுமலைத்தான் கடந்த பொது வாக்கெடுப்பில் பார்த்தோம். இந்த முதல் உறுமலின் அதிர்விலேயே இத்தனை ஆட்டம் கண்டிருக்கும் அதிகாரக் குழுக்கள் அவர்களைச் சீண்டிப் பார்ப்பதில் இருக்கும் அபாயத்தை நன்கறிந்தவர்கள். இந்த யுத்தத்தின் பல கட்டங்கள் இனிமேற்தான் வர இருக்கின்றன.